இசை உன்னிடம் உருவாகும்..

மெல்லிசை மன்னரே, உங்களுக்கு ஆயிரம் வணக்கங்கள்.

எப்போது உங்கள் இரசிகனானேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். அதை எவ்வளவு யோசித்தாலும்ம் சரியாக நினைவுக்கு வருவதில்லை.

சிறுவயதில் பிற இசையமைப்பாளர்கள் இசையமைத்தது என்று நம்பி நான் இரசித்ததெல்லாம் பின்னாளில் உங்கள் இசை என்று புரிந்து உள்ளம் உவந்த போதுதான் உங்கள் இசை எனக்காகவே இறைவன் உண்டாக்கியது என்பதைப் புரிந்து கொண்டேன்.

M.S.Viswanathanஎங்கள் வீட்டில் இருக்கும் பாடல்களை இரசித்தாலும் பக்கத்து வீட்டிற்குப் போய் திரும்பத் திரும்பக் கேட்ட பாட்டு “தங்கங்களே நாளைத் தலைவர்களே” என்ற பாட்டு. இப்படியான பாடல்கள் ஏன் எங்கள் வீட்டில் ஒலிப்பதில்லை என்று நிறைய சிந்தித்திருக்கிறேன். ஒருவேளை அது புதிதாக வந்த படமாக இருக்குமோ என்றும் ஐயப்பட்டிருக்கிறேன். அந்த வயதில் அவ்வளவுதான் யோசித்திருக்கிறது.

இரகுமானின் தீவிர விசிறியாகிவிட்ட பிற்பதின்ம வயதில், திரைப்படத்தின் பெயரோ இசையமைப்பாளரின் பெயரோ இல்லாமல் வெறும் பாடல்களாகப் பதிவு செய்யப்பட்டு என் தாய்மாமா கொடுத்த கேசட்டில் இருந்த பாடல்களுக்கு இசை இளையராஜா என்றே நினைத்திருந்தேன். கேபிள் டிவியில் தற்செயலாக ஒளிபரப்பப்பட்ட சிம்லா ஸ்பெஷல் திரைப்படம் என் எண்ணத்தைத் திருத்தியது.

மெல்லிசை மன்னரே, உங்கள் இரசிகனாய் இருப்பதால் தான் என்னால் இராஜா இரசிகனாகவும் இரகுமான் இரசிகனாகவும் இருக்க முடிகிறது. அவர்கள் இசையை என் உள்ளம் ருசிக்கும் வேளையில் உங்கள் இசையை என் உயிர் புசிப்பதை நான் உணரத் தொடங்கினேன்.

உங்கள் பாடல்களை எல்லாம் தேடித்தான் கேட்டேன். உங்கள் படம் வெளிவந்து அதைத் திரையரங்கில் பார்க்க வேண்டுமென்று எவ்வளவு ஏங்கியிருப்பேன் தெரியுமா? என் ஏக்கத்தை யார் உணர்ந்து யாரிடம் சொன்னார்களோ, கர்ணன் திரைப்படம் மறுபடியும் வெளியிடப்பட்டது. சென்னையில் நிறைந்து வழிந்த சத்யம் திரையரங்கில் கர்ணன் திரைப்படத்தைப் பார்த்துச் சிலிர்த்த அனுபவம் தெய்வீகம். உங்களுக்காகத்தான் தில்லு முல்லு-2 என்ற மொக்கைப் படத்தை சங்கம் திரையரங்கத்தில் பார்த்தேன்.

உங்களை ஒரு முறை சந்தித்திருக்கிறேன். அப்போது நான் உங்கள் இரசிகனாக என்னை உயிர்த்துக் கொள்ளாத பொழுது. கோடை விடுமுறையில் சென்னைக்கு வந்திருந்த போது தற்செயலாக வீட்டில் எல்லோரும் பார்த்த சிவகாமியின் செல்வன் திரைப்படத்துக்கு இசையமைத்தவர் யார் என்று கேட்டுத் தெரிந்து, உங்களை நேரில் வந்து பார்த்தேன். அப்போது எடுத்த புகைப்படம் கண்ணில் நிலைத்த அளவுக்கு கையில் நிலைக்கவில்லை. அந்தப் புகைப்படத்தின் மதிப்பறியாமல் தொலைத்துவிட்டேன்.

ஆனால் உங்கள் பாடல்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன். தமிழில் மட்டும் 490 படங்களுக்கான பாடல்களைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டேன். மலையாளம் தெலுங்கு கன்னட மொழிகளில் 120 படங்களின் பாடல்களைச் சேகரித்திருக்கிறேன். இன்னும் நூற்றுக்கணக்கான படங்கள் இருக்கின்றன. தேடுவேன். தேடுவேன். எவ்வளவு முடியுமோ அவ்வளவு தேடுவேன்.

தேடினேன் வந்தது என்று சொல்லும் படியாகத்தான் தேடித் தேடி உங்கள் பாடல்கள் என்னிடம் வந்தது.

உங்களது இரண்டு பின்னணி இசைத்துணுக்குகளை மட்டும் பகிர்ந்து கொண்டு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.

இளம் வயதில் வயதானவருக்கு மனைவியான பெண் சந்தர்ப்பவசத்தால் தவறு செய்ய நேர்கிறது. தவறு செய்துவிட்டோம் என்று தவறுக்குப் பிறகு அவள் உள்ளம் வேதனைப்படுகிறது. இதுதான் காட்சி. அந்தப் பின்னணி இசையை இப்போது கேளுங்கள்.

நீங்கள் கேட்ட பின்னணி இசை சாவித்திரி என்ற படத்துக்காக 1980லேயே கொடுத்த இசை. அப்போதே…

இன்னொரு படத்திலிருந்து இன்னொரு இசை. மெல்லிசை மன்னரின் இஷ்ட தெய்வமான முருகனுக்கு அவர் இசையமைத்த வீணையிசை இது. இது திசைமாறிய பறவைகள் திரைப்படத்துக்காக இசையமைக்கப்படது. அதுவும் 1979லேயே.

ஏழாம் கடலும் வானும் நிலவும் என்னுடன் விளையாடும் இசை உன்னிடம் உருவாகும்!

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in எம்.எஸ்.விசுவநாதன், திரையிசை. Bookmark the permalink.

14 Responses to இசை உன்னிடம் உருவாகும்..

 1. tcsprasan says:

  காலையில் இந்த அதிர்ச்சியான செய்தியைக் கேட்டதும் உங்கள் நினைவுதான் வந்தது. அந்த அளவுக்கு மெல்லிசை மன்னரின் ரசிகராக நீங்கள் எங்களுக்கு தெரிந்திருக்கிறீர்கள். இறப்பு அவரது உடலுக்குதானே தவிர அவரின் இசைக்கு இல்லை. இன்றும் என்றும் என்றென்றும் அவரின் இசை நிலைத்து நிற்கும்.

  • GiRa ஜிரா says:

   உண்மை. அவரே அடிக்கடி சொல்லும் வரிதான். இறக்கும் மனிதர்கள். இறவாப் பாடல்கள். அந்தப் பாடல்கள் இருக்கும் வரை அவரும் இருப்பார். தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும் வரை அவரும் இருப்பார்.

 2. amas32 says:

  அருமையான அஞ்சலி ஜிரா. அவரைப் பற்றி யார் பேசினாலும் அவர் பண்பு நலன்களை சிலாகித்துப் பேசி, பின் அவரின் இசை ஞானத்தை வானுயரப் புகழக் கேட்கிறோம். ஒரு மனிதன் வாழ்ந்த வாழ்க்கைக்கு இதை விட பெரிய அங்கீகாரம் கிடைக்க முடியாது. அனைத்துத் தரப்பினரின் அன்பையும் பெற்று இருப்பதில் இருந்தே அவரின் கள்ளம் இல்லா உள்ளம் வெளிப்படுகிறது.

  ஜாம்பவான்களான எம்ஜியாரும் சிவாஜியும் இரு துருவங்களாக இருந்த சமயத்திலும் அவர்கள் இருவருக்கும் இவர் இசை அமைத்திருக்கிறார் என்றால் இவரின் பெருமையைச் சொல்ல வேறு உதாரணம் தேவையா?

  இம்மாதிரி மக்களை இனிக் காண்பதும் அரிது. அது தான் மனத்தை மிகவும் வருத்துகிறது.

  amas32

 3. அருமை! எங்கள் அஞ்சலிகளும் இத்துடன்.

 4. உனக்கென்ன குறைச்சல் – விஸ்வநாதா, நீயொரு ராஜா..
  வந்தால் வரட்டும் மரணம்
  வராது போகட்டும் விருது
  தனக்குத் தானே துணையென நினைத்தால்
  உலகத்தில் ஏது தனிமை?

  கடந்த காலமோ திரும்புவதில்லை..
  நிகழ்காலமோ விரும்புவதில்லை..
  எதிர்காலமோ அரும்புவதில்லை..
  இது தானே – நீ எம்முடன், இல்லாது போன நிலைமை:(

  எதையோ தேடும் இதயம் – உன்
  இசை தானே ஒரு பாலம்
  அந்த நினைவே இன்று போதும்
  என் தனிமை யாவும் தீரும்

  உன் இசையால், என் தனிமை யாவும் தீரும்..

  அமர ஜீவிதம் – MSV – அமுத வாசகம்!!!
  முருகா..

  *Various Murugan Songs of MSV
  = http://muruganarul.blogspot.com/search/label/MSV?m=1

  *Various Kannan songs of MSV
  = http://kannansongs.blogspot.com/search/label/MSV?m=1

 5. உனக்கென்ன குறைச்சல் – விஸ்வநாதா, நீயொரு ராஜா..
  வந்தால் வரட்டும் மரணம்
  வராது போகட்டும் விருது
  தனக்குத் தானே துணையென நினைத்தால்
  உலகத்தில் ஏது தனிமை?

  கடந்த காலமோ திரும்புவதில்லை..
  நிகழ்காலமோ விரும்புவதில்லை..
  எதிர்காலமோ அரும்புவதில்லை..
  இது தானே – நீ எம்முடன், இல்லாது போன நிலைமை:(

  எதையோ தேடும் இதயம் – உன்
  இசை தானே ஒரு பாலம்
  அந்த நினைவே இன்று போதும்
  என் தனிமை யாவும் தீரும்

  உன் இசையால், என் தனிமை யாவும் தீரும்..

  அமர ஜீவிதம் – MSV – அமுத வாசகம்!!!
  முருகா..

 6. சங்கத் தமிழில், “பாணர்/ கவிஞர்” -ன்னு இரு வகைக் கலைஞர்கள் இருப்பார்கள்..
  *கவிஞர் = இயல் தமிழ் (வரிகள்)
  *பாணர் = இசைத் தமிழ் (இசை)

  இரண்டு பேரின் பெயர்களுமே குறிக்கப்பட்டு இருக்கும், கலித்தொகை/ பரிபாடல் போன்ற தொல்-நூல்களில்!
  ஏன்னா, ஒன்றின்றி மற்றொன்று இல்லை! அத்துணை இயைபு..

  ஒரு பாட்டை வாழ வைப்பது= வரியா? இசையா? -ன்னு MSVயைக் கேட்டால்..

  கொஞ்சமும் தயங்காமல், இயல் தமிழே-ன்னு பட்டு-ன்னு சொல்லீருவாரு..
  இசை மேதையான MSV ஒருவரால் மட்டுமே, இப்படிச் சொல்ல முடியும், கொஞ்சமும் “வித்யா கர்வம்” இன்றி..

  இத்தனைக்கும் பாடல் வரிகள் முழுசும் நமக்கு மனப்பாடம் ஆவதில்லை; துவக்க வரிகள் மற்றும் ஆங்காங்கே “நச்” வரிகள் மட்டும் தான் மனசுல நிக்கும்!
  ஆனா இசை (அ) மெட்டு அப்படியல்ல, மனசு முழுக்க ஓடும்; முத்துக்களோ கண்கள்… ரெண்டாம் பத்தி சொல்லுங்க; தெரியாது:) ஆனா பாட்டை Hum பண்ணியே முடிச்சீருவோம்:)

  உடலை (வரி) விட உயிர் (இசை) தான் சிறப்பு;
  இருப்பினும் அந்த உயிருக்கு வடிவம் கொடுத்து, இயங்க வைப்பது= உடல் தானே?
  உடல் இல்லாமல், உயிரின் அற்புதம், வெளியில் தெரியாதே?
  அவ்வகையில், MSV -யின் கருத்து, நினைக்கும் போதெல்லாம், மனசை என்னமோ பண்ணும்!

  தன்னைப் “பின் நிறுத்திக்” கொண்டு
  தமிழை “முன் நிறுத்தும்” குணம்!

  தன் சுயப் பிடித்தத்துக்காக, தமிழை மாற்றாத குணம்!
  அதனால், தன் மேதைமையைக் கூடப் பின்னுக்குத் தள்ளும் குணம்!
  அந்த குணம் குடி கொண்ட கோயில் தான் = MSV

  ஆனா, வரிகளைத் தாண்டி.. துவக்க இசை (Title Music), பின்னணி இசை (BGM) என்ற பலவற்றில்.. வரியில்லா இசைப் பலத்தை, வெளிக்காட்டீருவாரு MSV..
  இந்தப் “பின்னணி” நுட்பம், தமிழ்ச் சினிமாவில் பாதை போட்டுக் குடுத்தது= MSV தான்! பின்பு இளையராஜா காலத்தில், பின்னணி சிம்மாசனமே ஏறிக் கொண்டது!

  காசே தான் கடவுளடா = அந்த ஒரு படம் போதும், MSVயின் BGM புகழ் பாட!
  நினைச்சாலே போதும், காதுல தானா ஒலிக்கும்.. அந்த Husky Music

  அதே போல், யாமிருக்கப் பயம் ஏன்? -ன்னு ஒரு படம்; அதுல வெளிநாட்டுப் பயணத்துக்குன்னே ஒரு BGM போட்டிருப்பாரு..

  மலேசியா, சிங்கப்பூர் தான் படத்தில் காட்டுவாங்க; ஆனா பிரேசில், ஆம்ஸ்டர்டாம் -ன்னு நான் அலுவலாப் போகும் போது கூட, அந்த இசை, தானா என் காதுல ஒலிக்கும், விமான நிலையத்தில் எறங்கியவுடனேயே..

  MSV யின் இன்னொரு “தனித்த பரிமாணம்” = Echo Music / எதிரொலியைப் பாட்டில் வைப்பது..

  இவரளவுக்கு, வேறு யாரும் “பாட்டுல எதிரொலி” வச்சிருக்காங்களா? -ன்னு என் சிற்றறிவுக்குத் தெரியலை..

  *ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே..
  *என் கேள்விக்கு என்ன பதில்
  *கல்யாணப் பந்தல் அலங்காரம்
  *என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
  *பொட்டு வைத்த முகமோ..

  MSV -யின் Echo பாடல்களுக்கென்றே, யாரேனும் தனித் திரட்டல்/ Quiz வச்சிக் குடுத்தா, புண்ணியமாப் போகும்..
  Chorus Quiz போல, Echo Quiz!

 7. அதே போல், Humming… = MSV Forte

  இப்பல்லாம், Humming என்பதே சென்னையில் குருவி பாக்குறாப் போல ஆயிருச்சி:(

  எத்துணை நெஞ்சுல பாரம் இருந்தாலும், பாடல் வரிகளைத் தாண்டிய Humming.. = மனசை ரொம்ப வருடிக் குடுக்க வல்லது.. என் தனிப்பட்ட வாழ்விலேயே கூட அனுபவிச்சி இருக்கேன்..

  பால் இருக்கும்.. ம்ஹூஹூம்ம்ம்ம்ம்
  பழம் இருக்கும்.. ம்ஹூஹூம்ம்ம்ம்ம்
  பசி இருக்காது
  பஞ்சணையில் காற்று வரும், தூக்கம் வராது

  இந்தப் பாட்டு, Humming க்குன்னே பொறந்த பாட்டு!

  பாடுறது சுசீலம்மா தான் எனினும்.. அவங்களையே தாண்டிப் போகும் அந்த Humming Voice!
  யாரு Humming குடுத்தா?-ன்னு தெரியலை.. எனக்கென்னவோ MSV யே தன் சொந்தக் குரலைச் சற்றே மென்மையாக்கி Humming குடுத்தாரோ? -ன்னு, மனசுக்குள்ள ஒரு கற்பிதம்..(சரியா தரவு இல்லைங்குறதுன்னால, உறுதியாச் சொல்லத் தெரியலை.. யாராச்சும் அறிந்தவர்கள் உதவுங்கள்)

  இப்படி எத்தனையோ Humming ஆறுதல்கள்.. ஒடிஞ்ச மனசுக்கு!

  பின்னாளில், சுசீலாம்மா = Humming வித்தகி -ன்னு, ஒரு பாதை போட்டுக் குடுத்ததே MSV மட்டுமே!

 8. அதே போல், இசைக் கருவிகளைக் “கட்டுடைத்த” கையும் = MSV கைகளே!

  தமிழ்ச் சினிமாவுக்கு இருக்கும் கெட்ட குணங்களிலொன்று = Stereotyping!
  நாதசுரமா? = மங்கல இசைக்கு மட்டும் தான்!
  ஷெனாயா? = சோக இசைக்கு மட்டும் தான்!

  இதையெல்லாம் பின்பு ராஜா மாற்றிக் காட்டினாலும்.. அவருக்கு முன்னமேயே, இந்த “Stereotyping கட்டுடைப்பை” ஆரம்பி வச்சவரு = MSV தான்!

  *மாலைப் பொழுதின் மயக்கத்திலே = Shenoy ஓ-ன்னு அழுவும்
  *சரவணப் பொய்கையில் நீராடி = Shenoy சிரிக்கும், குதிக்கும்!

  அதே போல், Xylophone என்ற கருவியும்!

  *வருவான் வடிவேலன் படத்தில், Joyful Singapore ..ன்னு எடுத்த எடுப்பிலேயே Xylophone மகிழ்ச்சியில் குதிக்கும்!
  *ஆனா சுமதி என் சுந்தரி படத்தில், ஓராயிரம் நாடகம் ஆடினாள் .ன்னு Jeep ஓட்டுறத்துக்கெல்லாம் Xylophone போட்டு..

  “Stereotyping கட்டுடைப்பு” செஞ்சவரு = MSV எனும் மேதை;
  பல மேதைகளின் முன்னோடி..
  ஆனால் முன்னோடி என்றே அதிகம் பேசப்படாத முன்னோடி:(

 9. “தமிழ்த் தாய் வாழ்த்து” உள்ளளவும்..
  எழாதாரும், உன் இசைக்கு எழுந்து நிற்கத் தான் வேண்டும்!

  அழிவு உன்னை அண்டாது! வாழி நீ..

  “நீர் ஆரும் கடல் உடுத்த” என்ற தமிழ்த் தாய் வாழ்த்துக்கு MSV இசை தான்!
  ஆனா, “ஜன கன மன” என்ற நாட்டுப் பண்ணுக்கும், MSV இசை உண்டு..

  ஆரம்ப கால தமிழக அரசு இசைக் கோப்பைத் தேடிப் பாருங்க; MSV இசை தான் ஒலிக்கும்!

  அது மட்டுமல்லாமல்.. “தமிழ் உணர்வு”க்கென்றே, MSV தந்தளித்த பாடல்களுக்கு, பெரிதும் நன்றிக் கடன் உண்டு, நமக்கு!
  * சங்கே முழங்கு – என்ற பாரதிதாசன் வீர இசை வரிகள்

  பாரதியாரின் பாடல்கள், தமிழ்ச் சினிமா பிரபலம் ஆக்கிற்று; ஆனால் பாரதிதாசன் பாடல்களை, அதிகம் கண்டுகொள்ளவே இல்லை:(

  தமிழுணர்வு -ன்னு விடாப்பிடி உறுதி இருந்தாலே, தங்கள் அறிவுத் துறை சார் Media பலத்தால், பரவ விடாமலேயே ஒழிச்சிக் கட்டிருவாய்ங்க போல:( மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருக்கு நேர்ந்த கதிகளைத் தான் கண்கூடாக் காண்கிறோமே..

  “சிலவே சில” பாரதிதாசன்-தமிழ்ச்சினிமாப் பாடல்கள்:
  *சங்கே முழங்கு
  *துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
  *வலியோர் சிலர் எளியோர் தமை, வதையே புரிகுவதா?
  *நீல வான ஆடைக்குள்,உடல் மறைத்து

  அவ்வகையில், MSV க்கு, என் உயிர் நன்றி;
  தலை அல்லால் கைம்மாறு இலனே!

 10. முருகனை உகந்த இசை.. MSV நல்லிசை!
  Various Murugan Songs of MSV:

  *அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
  *சரவணப் பொய்கையில் நீராடி
  *மனமே முருகனின் மயில் வாகனம்
  *கந்தனுக்கு மாலையிட்டாள்

  *காற்றின் அணுவை மூச்சாக்கி – கந்தா எனக்கு
  *உள்ளம் உருகாதா? – எந்தன் ஊனும் உருகாதா?
  *குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி

  *பத்துமலை திரு முத்துக்குமரனை
  (Galaxy of Singers in Single Song: susheelamma, lr easwari, ramani ammal, tms, seergazhi)

  * வீறு தமிழ்ப் பாலுண்டு, வெற்றிக்கு வேல்கொண்டு
  (The only song of KBS amma with MSV)

  *கண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே, முருகா முருகா முருகா!
  *திருப்பதி மாமனுக்குக் கண் இல்லையோ?

  அறுபடை வீடு-MSV:

  * “பழமுதிர்சோலை”யிலே, தோழி.. பார்த்தவன் வந்தானடி
  * “செந்தூர்” முருகன் கோவிலிலே – ஒரு சேதியை நான் கேட்டேன்!
  * வருவான் வடிவேலன், “தணிகை” வள்ளல் அவன்

  *திருப்புகழ் – MSV:
  பாதி மதி நதி, போது மணி சடை (சுவாமிமலைத் திருப்புகழ், யாமிருக்கப் பயம் ஏன் படத்தில்)
  MSV-வாரியார் புகைப்படம் தேடு தேடு-ன்னு தேடறேன்; கிடைக்கலை:( யார் கிட்டவாச்சும் இருந்தா, குடுத்து உதவுங்கள்..

  Various Murugan Songs of MSV
  = http://muruganarul.blogspot.com/search/label/MSV?m=1

 11. Various Kannan songs of MSV
  = http://kannansongs.blogspot.com/search/label/MSV?m=1

  புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
  எங்கள் MSV புகழ் பாடுங்களே!

  Wish some one collects, all the Album Songs (non cinema) of MSV, in one central website..
  அமர ஜீவிதம்!

 12. இது வரை பேசியதெல்லாம் பொதுச் செய்திகள்.. ஆனா என் சொந்த மனசு-ன்னும் ஒன்னும் இருக்கு..

  பள்ளி/ கல்லூரிக் காலம்= பசுமரத்தாணி; அதனால், இளையராஜா என்பதிலேயே என் மனசு ஊறி விட்டாலும்..
  MSV-யை ஒரு போதும், நெஞ்சம் மறப்பதில்லை; ஏன் தெரியுமா? துன்பம் வரும் போதெல்லாம் ஆறுதல் அங்கே தான்;

  “சில்க் சில்க் சில்க்” என்றொரு படம்..
  அதுல MSV இசையில் ஒரு பாட்டு: “என்னை விட்டுப் பிரிந்த காதலன் இன்னும் வீடு வந்து சேரவில்லை”
  = இந்தப் பாட்டு, என் ரகசியப் பாட்டு; என்னமோ பண்ணும்..

  இந்தப் பாட்டைப் பத்தி நினைக்கும் போதெல்லாம், இன்னொரு MSV பாட்டில் தான்,யோசனைகளும் முடிஞ்சி போகும்..

  பொன்னை விரும்பும் பூமியிலே
  என்னை விரும்பும் ஓருயிரே
  புதையல் தேடி அலையும் உலகில்
  “இதயம்” தேடும் என்னுயிரே..

  இதயம் உள்ளளவும், இப்பாடலை மறவேன், மறவேன்!

  செய்யா கூறிக் கிளத்தல்
  எய்யாதாகிற்று என் சிறு செந்நாவே..

 13. காரிகன் says:

  மன ஆழத்திலிருந்து எழுதப்பட்டது நன்றாகவே தெரிகிறது. பாராட்டுக்கள். குறிப்பாக ரசிப்பு புசிப்பு என்ற வரிகள் அற்புதம்.

  எம் எஸ் வி ஒரு இசைக் கடல். மற்றவர்கள் இசை நதிகள்.எனவே இளையராஜா, ரஹ்மான் போன்ற நதிகளில் நீந்துபவர்கள் இறுதியில் எம் எஸ் வியிடம் தான் வந்து சேர்ந்தாக வேண்டும்.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s