விலைமதிப்பில்லா முத்தம்

கத்திக் குமுறும் கடல்கள் சூலுடைய வலம்புரிச் சங்குகளைக் கரைகளில் தூக்கி வீசுகின்றன. அந்தச் சங்குகள் உளைந்து வேதனைப்பட்டு கரையில் தவழ்ந்து மணலில் முத்துகளைச் சொரிகின்றன.

அந்த அற்புத முத்துகளுக்கும் விலையுண்டு..

தத்தி நடக்கும் மலை போன்ற யானைக்கும் மதம் பிடிக்கும். மதம் தலைக்கேற உன்மத்தம் பிடித்து விகடக்கூத்தாய் ஆடிக் களிக்கும் அந்த யானைகளின் பிறைபோன்ற வளைந்த தந்தத்துக்குளும் முத்துகள் விளையும்.

அந்த அதிசய முத்துகளுக்கும் விலையுண்டு..

வயலில் நீருண்டு தழைத்துச் செழித்துக் கதிர்முற்றிக் கவிழ்ந்த பயிர்கள் நெல்முத்துக்களை அள்ளிக் கொடுக்கும்.

அந்த அமுத முத்துகளுக்கும் விலையுண்டு..

கடலில் நீர் குடித்து விண்ணில் கருத்திருக்கும் முகிலனங்கள் கருணையோடு உலகம் உய்ய மழை முத்துகளைப் பெய்யும்.

அந்தக் குளிர் முத்துகளுக்கும் விலையுண்டு..

ஆனால் செங்கனி வாய் கொடுக்கும் முத்த முத்துக்கு விலையே இல்லையே!

காதலியின் முத்தத்துக்கு விலையில்லைன்னு எழுதினா அது காதல் பாட்டு. ஆனா எழுதியது பகழிக்கூத்தராச்சே. அதுனால தொட்டிலில் துள்ளிக் கிடக்கும் குழந்தை முருகனின் முத்தங்களுக்கு விலையே இல்லைன்னு பாடி அம்மாவாகிறார்.

திருச்செந்தூர் பிள்ளைத் தமிழில் உள்ள அருமையான பாட்டுகள்ள இதுவும் ஒன்னு. நீங்களே படிச்சுப் பாருங்க. எளிமையா இருக்கும். சீர் பிரிச்சேக் குடுத்திருக்கேன். புரிஞ்சுக்க வசதியா அருஞ்சொற்பொருளும் கீழ கொடுத்திருக்கேன்.

கத்தும் தரங்கம் எடுத்தெறியக்
கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்
கரையில் தவழ்ந்து வாலுகத்திற்
கான்ற மணிக்கு விலையுண்டு

(தரங்கம் – கடல், சூல் – கரு, உளைந்து – வேதனைப் பட்டு, வாலுகம் – வெண்மணல் (வால் என்றால் வெண்மை நிறம்), கான்றல் – சொரிதல்)

தத்தும் கரட விகடதட
தந்திப் பிறைக்கூன் மருப்பில்விளை
தரளம் தனக்கு விலையுண்டு

(கரடம் – மதம், விகடம் – உன்மத்தம் பிடித்து பார்ப்போர் நகைக்கும் வகையில் ஆடுதல், தடம் – மலை, தந்தி – யானை, மருப்பு – கொம்பு/தந்தம், தரளம் – முத்து)

தழைத்துக் கழுத்து வளைந்தமணிக்
கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக்
குளிர்முத் தினுக்கு விலையுண்டு

(சாலி – நெற்பயிரின் வகை. சென்னையின் சாலிகிராமம் நெல்வயல்களாக இருந்ததால் அப்பெயர் பெற்றது)

கொண்டல் தகு நித்திலம் தனக்கு
கூறும் தரமுண்டு உன் கனிவாய்
முத்தம் தனக்கு விலையில்லை
முருகா முத்தம் தருகவே
முத்தம் சொரியும் கடலலைவாய்
முதல்வா முத்தம் தருகவே.

(கொண்டல் – மேகம், நித்திலம் – முத்து, முத்தம் – முத்து, கடலலைவாய் – திருச்செந்தூர்)

murugan_paghazhiதீராத வயிற்றுவலியை தீர்த்து வெச்ச திருச்செந்தூர் முருகனைக் குழந்தையா நினைச்சு திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடினார் பகழிக்கூத்தர். இவர் இப்போதைய இராமநாதபுர மாவட்டத்துல இருக்கும் சன்னாகிக் கிராமத்தில் பதினைந்தாம் நூற்றாண்டில் பிறந்தவர். தீவிர வைணவக் குடும்பத்தில் பிறந்தவர்.

அதுனால திருச்செந்தூர் கோயிலுக்குள்ள நூலை அரங்கேற்ற விடலை. அப்பல்லாம் சைவமும் வைணவமும் வெவ்வேற மதங்கள். இங்கருந்து அங்க போக முடியாது. அங்கிருந்து இங்க போக முடியாது.

ஒரு வழியா குலசேகரபட்டினத்துல இருந்த காத்த பெருமாள் மூப்பனார் என்ற செல்வந்தர் உதவியால திருச்செந்தூர் கோயில்ல பிள்ளைத்தமிழை அரங்கேற்றினார் பகழிக்க்கூத்தர். ஆனா யாரும் நூலைப் பாராட்டததால முருகனே தன்னுடைய இரத்தின மாலையைக் கழட்டிக் கொடுத்தார்னும் ஒரு நம்பிக்கையுண்டு.

பல இனிய பாடல்கள் கொண்ட பதினைந்தாம் நூற்றாண்டுத் தமிழ். அதுனால எளிமையாவே புரியும்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in இறை, இலக்கியம், திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ், முருகன் and tagged , , , , , . Bookmark the permalink.

10 Responses to விலைமதிப்பில்லா முத்தம்

 1. “முத்து முத்தாகப் பாடு” -ன்னு முருகன் சொன்னது அருணகிரிக்கு!
  இங்கு அதே முத்து = “முத்தப்” பாடலாக!
  முத்தான பிள்ளைத் தமிழ்ப் பதிவுக்கு, முத்து முத்தாக நன்றி..
  —-

  சாலிக்கிராமம்= நெல் வயல் கிராமம் தான்
  ஆனால், இன்று வயல் அழிந்து, “நகரம்” ஆகி விட்டது..

  *முல்லை/குறிஞ்சி அழித்து=மருதம் ஆக்கினார்கள்;
  *இப்போ மருதமே அழித்து = பாலை (concrete) ஆக்குகிறார்கள்;

  (முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
  பாலை என்பதோர் படிவம் கொள்ளும்)

  ஆக..
  அழியாதது நெய்தல் மட்டும் தான் போலும்!
  அதான்.. நெய்தலில் குடிகொண்டு விட்டான் போலும், குறிஞ்சியான்!
  திருச்செந்தூர் = நெய்தல் நிலம்..
  —-

  என் மனம் மிக மிக உவக்கும் இடம்= செந்தூர்..
  முருகன் கோயிலை விட..
  கடலும், அதன் வாசனையும், நம்மோடு விளையாடும் அலைகளும்..
  பனை மரங்களும், குருத்தோலைக் கருப்பட்டியும்..

  கோபுரத்தின் மேல்.. சிவ்வ்வென்று பறந்தேறும் மயில்களும்
  அப்படியே.. மணப்பாடு முதலான கிறித்துவக் கிராமங்களும்
  இன்னும் செல்லச் செல்லத், தூத்துக்குடியும்..

  செந்தூர்க் கரையோரமாகவே.. மணற் பரப்பில், தூத்துக்குடி வரை நடந்து சென்றால் என்ன? என்று கூட யோசித்ததுண்டு:)
  மணற்பாதை, அத்தனை தூரம், கூடவே வருமா? -ன்னு தெரியலை!
  —-

  செந்தூரை ஒட்டிச் சிறுசிறு கிராமங்கள் உண்டு..
  குலசேகரப் பட்டினம் அதிலொன்று!
  மிக நீண்ட திருமால் துயிலும் இடம்..
  மருகன் முருகனை, அலையில் இருந்து காக்க, கடல் தடுத்துப் படுப்பதாகக் கதை சொல்லுவார்கள்:)

  இப்படிச் சுற்றிலும் திருமால் கிராமங்கள்;
  சற்று மேல், இராமநாதபுரம் சீமையிலும்!
  அதான் போலும், பகழிக் கூத்தர்.. வைணவக் குடும்பமாயினும், ஊரின் நடுநாயகத் தலைவனான, முருகனை நோக்கி வந்தார்!
  அவன் முத்தம் பெற்று, பகழிக் கூத்தர் -> புகழிக் கூத்தர் ஆனார்..

  தமிழில், “பகழி” என்றால் என்னவோ?

 2. “முத்தம்”
  = இந்தச் சத்தமே ஒரு மயக்கம் தர வல்லது!:)

  = முத் என்றாலே வாய் குவியும்
  = தம் என்றாலே வாய் கடிக்கும்/ இழுக்கும்
  முத்தம் எப்படிக் குடுப்பது? என்று அச்சொல்லின் ஒலிப்பே சொல்லிக் குடுக்கும் தமிழ் அழகு!

  தெலுங்கிலும், “முத்து” காரே யசோதா தான்:)
  முத்து பெட்டே, நவ்வுச்சுண்டு.. குழந்தை ஓடுகிறது..

  காதலன் தரும் முத்தம்= இன்பம் தான்!
  ஆனா, அது முத்தத்தோடு நிற்காது; இன்னும் கீழ்க் கொண்டு தொடரும்:)

  ஆனால் குழந்தை முத்தம் அப்படியல்ல!
  அது முத்தத்திலேயே நிற்க வல்லது!
  அதான் போல, குழந்தை முத்தங்களுக்குத் தனி மதிப்பு!
  —–

  பாடலில் 5 முத்து-முத்தங்களைச் சொல்லும் கவிஞர்!
  1. கடல் முத்து
  2. யானைத் தந்தம் நுனி முத்து
  3. நெல் முத்து
  4. மழை முத்து
  5. முருகன் முத்து(ம்)

  முதல் மூனுக்கும், ஏதாச்சும் ஒரு விலை குடுத்துறலாம்
  மழை முத்து, சற்றே கடினம்! காசு குடுத்து மழை வர வைக்க முடியாது;
  சிலர், அதுக்கும் யாகம் பண்ணுறேன் -ன்னு காசு செலவழிக்கறாங்க!
  ஆனா, முருகன் முத்தம்?

  50 Rs, 100 Rs, 500 Rs, 100 Rs.. தரிசனம் வேணும்ன்னா காசு குடுத்து வாங்கலாம்!
  ஒன்னு தர்ம தரிசனம்; இன்னொன்னு “அதர்ம” தரிசனம்:)
  ஆனா Special Ticket வாங்கினா, “முருகன் முத்தம்” கிடைக்குமா???
  —–

  குட்டிப் பாப்பா கிட்ட முத்தம் வாங்கப் பாருங்க; லேசுல குடுத்துறாது:)
  கெஞ்சுங்க! குடுமா, குடுமா.. ஊகும்:)
  Lollypop.. அது/இது-ன்னு இலஞ்சம் குடுத்தாலும்.. அதை வாங்கிக்கும், ஆனா ஓட்டு போடாது:))

  ஆனா, அதுக்கா விருப்பப்பட்டா.. அப்போ, திடீர்ன்னு “பச்சக்” = ச் குடுத்துரும்!
  அதான், அதுக்கு மட்டும் “விலை இல்லை” என்கிறார் பகழி!

  Special Ticket வாங்கினா, “முருகன் முத்தம்” கிடைக்காது!
  எப்படிக் கிடைக்கும்?
  “உறவு” கொள்ளணும், அவனோட!
  பாவனை அதனைக் கூடில், அவனையும் கூடலாமே!

  செந்தூர்க் காதலா,
  ஒனக்கு என் ஆசைக் கருப்பட்டி முத்தங்கள்!
  உன் மேனியெங்கும் என் இதழ்-ஈரம் படும்.. ஒருநாள்; முத்தைத் தரு முத்தங்கள்!

 3. அப்பவே போத்திகள்/ திரிசுதந்திரர்கள் கிட்ட அல்லோலப் பட்டிருக்காரு போல பகழி!
  இன்னிக்கும் திருச்செந்தூரில், இவா வைச்சது தான் சட்டம்; பணம் இருந்தால், முருகனையே வீட்டுக்கு எடுத்து வரும் அதிகாரம் இவர்கட்கு உண்டு..

  மலையாள முறைப்படித் தான் பூசைகள்;
  குருவாயூர் போலவே “ஸ்ரீ வேளி”கள் முருகன் காலடியில்; இவர்களா வைத்துக் கொண்டது.
  நாம சட்டை இல்லாம போனாத் தான் முருகனைப் பாக்க முடியும்:((

  இயல்பில், கூச்ச சுபாவம் உள்ளவர்கள் கதி?

  எத்தினி முறை, கூச்சப் பட்டிருக்கேன் தெரியுமா முருகா, ஒன்னைய பாக்க?:(
  நீயும் நானும் மட்டுமிருந்தா, கூச்சம் வராது; இன்பம் வரும்!
  ஆனா ஊரே பார்க்க, சட்டையைக் கழட்டிட்டு வா-ன்னா எப்பிடி முருகா?:(

  மேல் துண்டால் ,ஒடம்பை மறைத்துக் கொண்டே, உன் தரிசனம்!
  என்று தான், கிடைக்கும்,உன் கரிசனம்?
  —–

  /கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்/

  இது மட்டும் அறிவியல் பிழை:)
  அக்காலத்தில் புலவர்கள், சிலது தாமாகக் கற்பனை செய்து கொள்வர்;
  அதிலொன்று, முத்து உருவாதல்= வயிற்றில் கரு உருவாதல் போல் பெரும் பிரசவ வேதனை என்று..

  ஆனால் அதுவல்ல!
  கடல் நத்தைகளின் சிப்பிக்குள், மண் துகளோ/ வேறு ஏதோ புகுந்து விட்டால்.. அது நத்தையின் உடம்பை அரிக்கும்!
  அந்த அரிப்பை எதிர்கொள்ள, body line of defense.. அது சுரக்கும் வெண் திரவமே, படிந்து படிந்து “முத்து” ஆகிறது!

  அதான் எல்லாச் சிப்பிக்குள்ளும் முத்து இருப்பதில்லை!
  துகள் புகுந்த சிப்பிக்குள் மட்டுமே முத்து!
  —–

  பதிவில், ஒரே திருத்தம் சொல்ல இசைவு தா, ராகவா..

  1 /தழைத்துக் “கருத்து” வளைந்தமணிக்/ = தழைத்துக் “கழுத்து” வளைந்தமணி = நெற்கதிர் கழுத்து வளைந்து நிற்கும் காட்சி
  2 /கொண்டல் “தகு” நித்திலம்/ = கொண்டல் “தரு” நித்திலம்

  மிகவும் விரும்பிப் படித்தேன், படித் தேன்..
  முருகா முத்தம் தருகவே
  முருகா முத்தம் தருகவே

  செந்தூர் முருகா சேர்த்துக்கொள்!

  • GiRa ஜிரா says:

   தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்தி விட்டேன்.

 4. subbuthatha says:

  இதே கருத்தை ஒட்டி
  இன்றைய மரபு சாரா புலவர்கள்
  எழுதினால்
  அது எப்படி இருக்கும் ?

  தெரியல்லையே…
  கவிநயா, சசிகலா, இனியா, இளமதி,
  எல்லோருமே பாடலாம்.

  சுப்பு தாத்தா.
  http://www.subbuthathacomments.blogspot.com

  • GiRa ஜிரா says:

   மரபுசாராப் புலவர்களும் அழகா எழுதலாமே. உங்களோடு நானும் ஆவலாகக் காத்திருக்கிறேன் 🙂

 5. Jagan says:

  அருமையான பாடல் … மிக அருமையான விளக்கம் … பகழிக்கூத்தர பத்தி இப்பத்தான் கேள்வி பட்றேன் … நன்றி

  • GiRa ஜிரா says:

   நன்றி ஜெகன். மொதல்ல கதை மாதிரி எழுத நினைச்சேன். சரியா வரல. அதுனால இப்படி எழுதியாச்சு 🙂

 6. மிக அருமையான பதிவு. இதைப் படித்தவுடன் நினைவுக்கு வருகிறது திருச்செந்தூர்த் திருப்புகழில் வரும் அருணகிரியின் அழகிய பாடல்.
  ”திருவரைக்கிண்கிணி கிணின்கிணின் என்று ஒலிக்கிறது.ஒளிவீசும் குண்டலங்கள் அசைகின்றன.கால்களில் சதங்கைகள் கொஞ்சுகின்றன. தண்டைகள் கலின் கலின் என, அன்னை சங்கரியின் மனமெல்லாம் குழைந்து உருக, தளர் நடையிட்டு முத்தம் தர வருகிறது சரவணக் குழந்தை!”
  ‘சங்கரி மனங் குழைந் துருக முத்
  தந்தரவருஞ் செழுந் தளர்நடை
  சந்ததி சகந் தொழும் சரவணப் பெருமாளே”
  சங்கரியின் மனம் மட்டுமா,நம்முடைய மனமும்தானே குழைகிறது?

  • GiRa ஜிரா says:

   உண்மைதானம்மா.. சங்கரியின் மனம் மட்டுமல்ல நாமும் தான் குழைந்து போகிறோம். குழந்தை முருகனிடம் குழையா மனம் வேறெங்கு குழையும்! கந்தன் காக்காவிடில் யார் காப்பார்!

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s