நிறைமதி முகம்

Muruganபொதுவா அருணகிரிநாதர் திருப்புகழ்ல விலைமாதர்களைத் தாழ்த்திச் சொல்லியிருப்பாருன்னு ஒரு கருத்து உண்டு. ஒருவகைல அது உண்மைதான்னாலும், அது விலைமாதர்கள் மேல ஆசை உண்டாகாம இருக்கனும்னு வேண்டிக்கிறதாத்தான் இருக்கும். அவர் பட்டுத் தெளிஞ்சவர். அதுனால அதை வெளிப்படையாச் சொல்ல முடிஞ்சது.

இப்போ பாக்கப் போற திருப்புகழிலும் அந்தக் கருத்து வருது. இது சின்ன திருப்புகழ்தான். சுவாமிமலை திருப்புகழ். இந்தத் திருப்புகழ்ல சுவாமிமலைன்னு வெளிப்படையா குறிப்பிடப்படவில்லை. ஆனா குருமலைன்னு சொல்லப்படுது. கோவில்பட்டி பக்கத்துல குருமலைன்னு ஒரு ஊர் இருக்கு. அதுவும் மயிலும் பாம்பும் மானும் நிறைய இருக்கும் பகுதிதான். அத வெச்சு அந்த ஊர்தான் இந்தத் திருப்புகழ்ல சொல்லப்பட்டிருக்கான்னு உறுதியாச் சொல்ல முடியாது. முருகன் குருவாக இருந்து ஈசனுக்கு உபதேசம் செய்த மலைன்னு குருமலைக்கு விளக்கம் எடுத்துக்கிட்டா சுவாமிமலைக்குப் பொருந்தி வருது. சுவாமிமலை அறுபடை வீடுகள்ள வருமாங்குறது இன்னொரு பெரிய கேள்வி. அத வேறொரு சமயத்துல பார்ப்போம்.

இப்ப திருப்புகழுக்கு வருவோம்.

எல்லாருக்கும் எதாவது ஒரு பலவீனம் இருக்கும். அதுல அடிச்சா சாய்ச்சிறலாம். அருணகிரிநாதரோட பலவீனமா பெண்ணாசை இருந்தது. விலைமாதர்கள் பழக்கமா அது இருந்துச்சு.

அந்த விலைமாதர்கள் ஆண்களை எப்படி ஈர்ப்பாங்க? அருணகிரியும் ஒருகாலத்துல ஈர்க்கப்பட்டவர்தானே. அவர் என்ன சொல்றாருன்னே பாக்கலாம்.

பாத்தா மொகம் பளிச்சுன்னு ஒப்பனையோட இருக்கும். அந்த மொகத்தைப் பாக்கும் போதே கண் ஆயிரம் ஜாடை காட்டி இழுக்கும். அந்த இழுப்பே கிட்டத்தட்ட ஒரு போர்க்களம் தான். கடைசியில் பணம் கைமாறிய பிறகு அதே முகம்.. அதே விழிக்கணை.. ஆனால் வேறொருவரோடு. இப்படியான வழியிலா ஒரு உறவு வரவேண்டும்?

வேண்டாம் என்கிறார் அருணகிரி. அதுதான் திருப்புகழோட முதல் பகுதி.

நிறைமதி முகமெனு மொளியாலே
……நெறிவிழி கணையெனு நிகராலே
உறவுகொள் மடவர்க ளுறவாமோ

சீர் பிரிச்சுக் கொடுக்குறேன். இன்னும் எளிமையாப் புரியும்.

நிறைமதி முகம் எனும் ஒளியாலே
……நெறி விழி கணையெனும் நிகராலே
உறவு கொள் மடவர்கள் உறவாமோ

வட்ட நிலா போல ஒளி நிரம்பிய முகம். வருகின்றவர் வரும் வழியிலேயே விழி என்னும் கணையை வீசிப் போரிட்டு உறவுக்கு அழைக்கின்ற விலைமாதர்களுடனான உறவெல்லாம் தேவையா!!!!

சரி. வேண்டாம். வேறென்ன வேணும்?

உனதிரு வடியினி யருள்வாயே (உனது இரு அடி இனி அருள்வாயே)

உன்னுடைய இரண்டு திருவடிகளை மட்டும் இனிமேல் அருள வேண்டும் முருகா!

ஒரு கேள்வி. இரு அடின்னு சொல்றது சரியா? இரு அடிகள்னு சொல்றது சரியா? பொதுவா ஜோடியா ஜோடியா இருக்குறதப் பிரிக்கக் கூடாது. ஜோடியா இருந்தாலும் ரெண்டும் ஒன்னுதான். அதுனால இரு அடின்னு சொல்றதும் இருவிழின்னு சொல்றதும் இலக்கணப்படியும் சரிதான். அப்போ இருவிழிகள்னு எழுதுனா தப்பா? இல்ல. அதுவும் சரிதான். சரி. இலக்கணத்த இங்கயே விட்டுட்டு திருப்புகழோட அடுத்த வரிக்குப் போகலாம்.

அடுத்த ரெண்டு வரிகளுமே முருகனைப் புகழ்ந்து வர்ர வரிகள்தான். ஒவ்வொன்னாப் பாப்போம்.

மறைபயி லரிதிரு மருகோனே (மறை பயில் அரி திரு மருகோனே)
……மருவல ரசுரர்கள் குலகாலா (மருவலர் அசுரர் குலகாலா)

மறைகளில் சொல்லப் படக்கூடிய ஹரி இலக்குமி ஆகியோரின் மருமகனே! திரு என்றால் திருமகள்.

மருவலர்னா பகைவர்கள். பகைவர்களாகிய அசுரர்களின் குலத்தை அழித்தவனே!

கந்த சஷ்டிக்கவசத்துல அசுரர் குடிகெடுத்த ஐயான்னு ஒரு வரி வரும். ஐயோ.. முருகனைக் குடிகேடின்னு சொல்லிட்டாங்களேன்னு சிலர் பொங்கி வருத்தப்பட்டாங்க. ஆழ்வார்களின் ஈரத்தமிழிலும் “அண்டக் குலத்துக்கு அதிபதியாகி அசுரர் இராக்கதரை இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன்”ங்குற வரிகள் உண்டு. பெரியாழ்வாரின் பல்லாண்டு வரிகளைச் சொல்கிறேன். ஆழ்வாரோ நாயன்மாரோ அருணகிரியோ.. அசுரர்களை அழித்தன்னு பாடியதை அசுரர்களாகிய கெட்டவர்களை அழித்துன்னு பொருள் கொள்ளலாம். இல்ல.. நெருடலாத்தான் இருக்குன்னா அந்த வரிகளை விட்டுட்டுப் படிக்கலாம்.

பெரியாழ்வார் இருடீகேசன்னு யாரைச் சொல்றாருன்னு தெரியுதா? ரிஷிகேஷனைத்தான். தமிழ்ல ர என்னும் எழுத்து சொல்லின் முதலெழுத்தா வரக்கூடாது. ஷன்னு ஒரு எழுத்தே கெடையாது. அப்ப என்ன செய்றது? வடமொழிப் பெயரை இலக்கணப்படி தமிழாக்கிட்டார் பெரியாழ்வார். ஆழ்வார் நாயன்மார்கள் எல்லாரும் இப்படித்தான் எழுதியிருக்காங்க. சரியான தமிழ்ல நாம எழுதாட்டியும் எழுதுறவங்களைப் பாராட்டலாம். பாராட்டாட்டியும் எதிர்க்காம இருக்கலாங்குறது என் கருத்து.

ரொம்பப் பேசிட்டோம். இப்ப திருப்புகழோட கடைசி வரிக்கு வருவோம்.

குறமகள் தனைமண மருள்வோனே (குறமகள் தனை மணம் அருள்வோனே)
……குருமலை மருவிய பெருமாளே (குருமலை மருவிய பெருமானே)

இந்த வரிக்கு நான் சொல்லாமலே உங்களுக்கெல்லாம் விளக்கம் புரிஞ்சிருக்கும்.

குறமகளாகிய வள்ளியை திருமணம் செய்து கொண்டவனே! குருமலையில் வீற்றிருக்கும் பெருமாளே!

எளிமையான திருப்புகழா இருக்குல்ல? பாட்டு முழுக்க படிச்சுப் பாருங்க.

நிறைமதி முகமெனு மொளியாலே
……நெறிவிழி கணையெனு நிகராலே
உறவுகொள் மடவர்க ளுறவாமோ
……உனதிரு வடியினி யருள்வாயே
மறைபயி லரிதிரு மருகோனே
……மருவல ரசுரர்கள் குலகாலா
குறமகள் தனைமண மருள்வோனே
……குருமலை மருவிய பெருமாளே!

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, தமிழ், திருப்புகழ், பக்தி, முருகன் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to நிறைமதி முகம்

 1. அடடா, வர்ணனையில் வந்து விழும் சொல்லலங்காரம் இருக்கிறதே, என்ன தமிழ் என வியக்கிறேன். திருப்புகழை முழுதும் ஓதினால் முருகன் தானே வந்து அருள் செய்வான்.

  • GiRa ஜிரா says:

   ஆம் அம்மா. சந்தக் கவியாயிற்றே. ஓசையெல்லாம் எழுத்தாகி.. அந்த எழுத்துகள் சொல்லாகி… சொற்களை மாலையாக்கிப் பாடிய திருப்புகழாயிற்றே!

 2. அருமையான விளக்கம். நன்றி.
  ஒரு டவுட்டு. பல பல வருடங்களாயிற்று சுவாமிமலைக்கு போய். அங்கே முருகன் தம்பதி சமேதரா காட்சியளிக்கின்றாரா? பாலகனாய் சிவனின் மடியில் உட்கார்ந்து குருவாய் உபதேசித்த ஸ்தலமாச்சே ! எப்படி நீங்கள் “குறமகளாகிய வள்ளியை திருமணம் செய்து கொண்டவனே! குருமலையில் வீற்றிருக்கும் பெருமாளே!” ன்னு சொல்றீங்க பாஸ். ஏன் அந்த கோவில்ப்பட்டி குருமலையா இருக்கக்கூடாது ? ஒரு டவுட்டு வந்துச்சு அதனால கேட்டுட்டேன். மன்னிச்சு

  • GiRa ஜிரா says:

   தாராளமா இருக்கலாம். ஆனா அதுதான்னு நிரூபிக்க இன்னும் ஆதாரம் வேணும். ஆராய்ச்சி வேணும். இலக்கண ஆராய்ச்சி மட்டுமல்ல.. ஊர்களுக்குப் போய் அங்கிருக்கும் ஆதாரங்களையும் தேட வேண்டியிருக்கும். 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s