பஞ்சா (அ) உரிமைக்குரல் (அ) நேத்துப் பூத்தாளே ரோசாமொட்டு

ஓ……..சே
ஓ……..சே
பஞ்சாவின் சீரான ஓசைக்குத் தக்க உலக்கை உரலோடு பேசிக்கொண்டிருந்தது. ஓ….வில் நங்கென்று உரலில் குத்தும் உலக்கை சே..யில் உரலிலிருந்து எம்பி பஞ்சாவின் தலைக்கு மேல் எழும்பி அந்தரத்திலேயே கைமாறியது. பழக்கமானவர்கள் இரண்டு கைகளால் உலக்கை குத்துவதில்லை. கைமாற்றி மாற்றித்தான் குத்துவார்கள். இறக்கையில்லா உலக்கை பஞ்சாவின் கைக்குக் கை பறந்தது.

பஞ்சா ஒரு பட்டிக்காட்டுப் பதினெட்டு. குளக்கட்டாங்குறிச்சிக்காரி. தாய் குப்பி என்னும் குப்பம்மாள். தந்தை சின்னசாமித் தேவர். கஞ்சிக்கில்லாத தேவர். அதனால் சாதிக்கும் இல்லாத தேவர். ஊர் உழவுக்கும் அறுவடைக்கும் போய்த்தான் தட்டிலிருந்து கைக்கும் கையிலிருந்து வாய்க்கும் சோறு ஓடுகிறது.

மாவிடிக்கும் உலக்கையோடு பஞ்சாவின் கை மட்டுமல்லாமல் மனமும் பேசியது.
“முத்துக்கு ஒரு குத்து….. வேலுக்கு ஒரு குத்து”
“முத்துக்கு ஒரு குத்து….. வேலுக்கு ஒரு குத்து”
அவளுக்கு அவ்வளவு கோவம் முத்துவேல் மீது.

முத்துவேல் உள்ளூர் இளந்தாரி. இருபத்தாறு தாண்டியிருக்காத வயது. மீசைத்தேவர் தோட்டத்தில் எல்லாம் அவனே. மீசைத்தேவர் ஊர்ப் பெரிய கை. அவருக்குச் செல்லம் என்பதால் முத்துவேலுக்கு ஒரு திமிரு. கை நிறையக் காசு வேறு.

அவனால் பஞ்சாவுக்கு தினமும் தொல்லை. “ஒழவுமாட்டுப் பய. நல்லா பொறுக்கத் தின்னுபுட்டு தடிமாடு கணக்கா வீங்கிப் போயி.. போறவர்ர வழியெல்லாம் குறுக்க வந்து வம்பு பண்றது. உரிமைக்குரல் படத்துக்குப் போகனுமாம்ல. இவனுக்கு என்ன உரிமையும் உருத்துமிருக்குன்னு சினிமாப்படத்துக்குக் கூப்புடுறான்? புதுசு புதுசா கலர்க்கலரா சினிமா வருது. அதப் பாத்த தெய்ரியந்தான் பொம்பளப்பிள்ளைய சினிமாக்குக் கூப்புடச் சொல்லுது. எல்லாம் கொழுப்புத்தேன். ஒரு நா இருக்க ஒரு நா அந்தத் தடிமாட்டுக்கு புத்தி சொல்லனும்.” உலக்கையின் வேகத்தில் உரல் தடதடத்தது.

ஊருக்குள் புதிதாக சீதாராமு டாக்கீஸ் வந்திருக்கிறது. இனிமேல் படம் பாக்க நாகலாபுரமோ விளாத்திகுளமோ போக வேண்டியதில்லை. நாகலாபுரத்து ஈஸ்வரி டாக்கீசை விடப் புதுப்படங்களாக சீதாராமில் போடுகிறார்கள். அதனால் சுப்பலாபுரம் செவலார்பட்டி மேலப்பட்டி மெட்டில்பட்டிக்கூட்டமெல்லாம் பொழுது சாய்ந்தால் டாக்கீசில்தான். இப்போது உரிமைக்குரல் படம் போட்டு டாக்கீசில் கூட்டமோ கூட்டம். வெயில் தாழவும் டாக்கீசு குழாயில் ரெக்கார்டு போடுவார்கள். ஊரெல்லாம் விழியே கதை எழுது பைத்தியம் பிடித்திருந்தது. புதுப்படம் புதுப்பாட்டு.

இப்படித்தான் முந்தாநாள் நேத்துப் பூத்தாளே ரோஜா மொட்டு பாட்டை சேக்காளிகளோடு சேர்ந்து முத்துவேல் பாடிக் கொண்டிருந்த நேரம்தானா பஞ்சா அந்தப் பக்கம் மடி நிறைய பருத்தியைக் கட்டிக் கொண்டு போக வேண்டும்! கிண்டலுக்குதான் என்றாலும் அதைப் பார்த்து முத்துவேல் கேட்டது பஞ்சாவுக்குப் பற்றி எரிந்தது. ”என்ன பேச்சு பேசிப்புட்டான். கெரகம் புடிச்சவன். ஐயனாரு கோயில்ல கெடாவுக்கு பதிலா இவன வெட்டனும்.” உலக்கை நங்கென்று உரலில் இறங்கியது.

”பிண்டி கொட்டேத்திவா?” கேட்டுக்கொண்டே பஞ்சாவிடம் வந்தார் கெங்கம்மா.

ஊரில் திருவிழா. அம்மனுக்குப் பொங்கல். அதோடு மாவிளக்கு எடுக்கத்தான் பஞ்சாவை மாவு இடிக்கச் சொன்னார் கெங்கம்மா. பஞ்சா மேல் அவருக்கு ஒரு பிரியம். சிறுவயதில் இருந்து அவர் கண் முன்னாடி பார்த்து வளர்ந்த பெண்.

“தாம்பாளாத்துல பெட்டுமா” என்று பெரிய வெங்கலத்தாம்பாளத்தை பஞ்சாவின் அருகில் வைத்தார். பஞ்சாவின் வளர்ச்சி அவர் கண்ணில் பட்டது. பஞ்சாவின் வயசுதான் அவருடைய மூத்த மகள் ஜெயலெச்சுமிக்கும். ஜெயலெச்சுமிக்கு ஆறு மாதங்களுக்கு முன் அருப்புக்கோட்டை மாப்பிள்ளையோடு கல்யாணம் முடிந்து, ஊரிலிருந்து இப்போது நல்ல செய்தியும் வந்துவிட்டது. பஞ்சாவுக்கும் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று நினைத்தார்.

”குப்பி, பஞ்சாவுக்கு பெள்ளி எப்புடு” என்று கேட்டுக் கொண்டே அடுப்பாங்கரைக்குள் நுழைந்தார்.

“ஆமா. பெள்ளிதான் இப்ப கொறச்சலாக்கும். மாத்துச் சீலைக்கே நீங்க குடுத்தது தான். இதுல கலியாணமெல்லாம் எங்குட்டுக்கூடி? அந்த மனுசனுக்கு நெலபொலம் இருந்தா வித்தாவது வழி செய்வேன். கலியாணமுன்னா சும்மாயிருக்கா! வேட்டி சீல நீங்க தருவீக. கோயில்ல வெச்சு சிறுசா கலியாணம் முடிச்சாலும் அரப்பவுன் தாலியாச்சும் வேண்டாமா. பெழச்சுக் கெடந்தா பாப்பம்.” அரிவாள்மனையில் குப்பி நறுக்கிய பப்பாளிக்காயிலிருந்து கருப்பு விதைகள் உதிர்ந்தோடின.

கெங்கம்மாவிடம் ஒரு பழைய சங்கிலி இருந்தது. அண்ணன்மார் எப்போதோ செய்து போட்டது. மூன்று பவுன் இருக்கும். அதை பஞ்சாவுக்கென்றே எப்பவோ எடுத்து வைத்திருந்தார். அதை எடுத்து வந்து குப்பியிடம் குடுத்தார். “மொதல்ல களியாணத்துக்கு ஏற்பாடு செய்யி. மேற்கொண்டு காவாலண்ட்டா அடுகு.”

குப்பி அந்த வீட்டில் வேலைக்காரிதான். ஆனால் வேலைக்காரி அல்ல. மச்சுவீடு வரைக்கும் போகும் அனுமதி உண்டு. குப்பி என்னும் பெயருக்கு விசுவாசம் என்று பொருள். அந்த விசுவாசத்துக்கு தக்க மரியாதையும் அந்த வீட்டில் கிடைத்தது. முன்பெல்லாம் கெங்கம்மாவோ ஜெயலச்சுமியோ காரவீட்டில் ”உக்கார” வேண்டி வரும் போதெல்லாம் குப்பியின் சமையல்தான். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீடே குப்பியின் சமையலுக்கு மாறிவிட்டது.

மாவிளக்கு பிடிப்பது ஒரு கலை. பச்சிரிசியை தண்ணீரில் நனையப்போட்டு ஓட்டு வீட்டுக்குள் நிழலில் பழைய சீலையை விரித்துக் காயப்போட வேண்டும். அப்படி ஈரம் போக உலர்ந்த பச்சரிசியை இடித்து கடைசியில் மண்டவெல்லம் சேர்ந்து இடித்தால் மாவிளக்கு மாவு தயாராகிவிடும். அதில் விளக்கு போலப் பிடித்து நெய்யூற்றி திரிபோட்டு அம்மனுக்குப் மாவிளக்கேற்றுவது வழக்கம். பொதுவில் அந்தந்த வீட்டுப் பெண்களே செய்வார்கள். பஞ்சாவும் ஒருவகையில் அந்த வீட்டிலேயே வளர்ந்த பெண் என்பதால் அவளையே மாவிடிக்கச் சொல்லியிருந்தார் கெங்கம்மா.

மாவை எடுத்து தாம்பாளத்தில் வைத்து அழகாக இரண்டு விளக்குகளாகப் பிடித்தாள் பஞ்சா. பருவப் பெண்கள் விளக்கு பிடிக்கும் போதுதான் விளக்கு சரியாக வருமாம்.

தோட்டத்திலிருந்து காலையில் வந்திருந்த கத்திரி, பப்பாளிக்காய், தக்காளியை எடுத்து வீட்டுக்குக் கொண்டு போகச்சொல்லி பஞ்சாவிடம் குடுத்தார் கெங்கம்மா. அதை மடியில் கட்டிக்கொள்ள பஞ்சாவுக்குப் பயம். வழியில் அந்தப் பயல் பார்த்து ஏதாவது கேட்டு விட்டால்.

“ஒலப்பெட்டி வேணும்மா” என்று கேட்டாள்.

பப்பாளிக்காய் கறை பிடிக்கும் என்று சமாதானம் சொல்லிக் கொண்டு கெங்கம்மா ஒரு ஓலைப் பெட்டியைக் குடுத்தார். காய்கறிகளை அதில் போட்டுக் கொண்டு வீட்டுக்கு நடையைக் கட்டினாள் பஞ்சா.

அவளுடைய நேரம். மந்தையில் மீசைத்தேவர் ஆட்கள் முத்துவேல் கண்பார்வையில் சோளம் தட்டிக் கொண்டிருந்தார்கள். சிவப்பு மணிகளாக சோளம் குவிந்திருந்தது. மந்தை முழுக்க தூசி கண்ணைக் கெடுத்தது. அதையெல்லாம் பாத்தா ஆகுமா உழவும் பிழைப்பும்.

அந்தப் புழுதி மண்டலத்திலும் பஞ்சாவை கண்டு கொண்டான் முத்துவேல். “ஏ பஞ்சா! பொட்டியில என்ன? சொல்லவேயில்ல”

இவளுக்கு எரிச்சல். ஒன்றும் பேசாமல் போக வேண்டும் என்று இரண்டு எட்டு எடுத்து வைத்தாள்.

அவள் அப்படி பயந்து போவது அவனைச் சீண்டியது. “களுத, ஒராளு நின்னு பேசிக்கிட்டிருக்கேன். கண்டுக்காமப் போறா பாரு” என்று மனதுக்குள் நினைத்தவன் கிண்டலாகப் பாட்டை எடுத்து விட்டான். “மாங்கா திருடித் திங்கிற பொண்ணே மாசம் எத்தனையோ”

இவளுக்கு ஆத்திரம் சுருக்கென்று வந்தது.

“சும்மாருக்கமாட்ட? போறப்ப வர்ரப்பல்லாம் நொரநாட்டியம் பண்ற. ரொம்பத் திமுருன அம்மில வெச்சி தேங்காச்சில்லு மாதிரி நச்சுருவேன்.”

எதுவுமே பேசாதவள் மரியாதையில்லாமல் எதிர்த்துப் பேசியது அவனுக்கு தன்மானத்தை உரசிப்பார்த்தது. ”சும்மாயிரப்பா, போற பிள்ளகிட்ட வம்பு பேசிக்கிட்டு” என்று ஒரு கிழவி சொன்னது இன்னும் ஏத்தி விட்டது.

“என்னடி? பேச்சு பெருசாருக்கு? அம்மில வெச்சு நச்சுருவியா? அம்மிக்கல்லு கனம் இருப்பியா நீ? ரொம்பப் பேசுன நாக்க இழுத்து வெச்சு அருவாளால அறுத்துப்புடுவேன். எண்ட்டயா மல்லுக்கு நிக்க? எண்ட்ட மல்லுக்கெட்ட ஒரு பயலுக்கும் சத்து கெடையாது. இந்த எளவட்டக் கல்லத் தூக்குறவந்தான் கொஞ்சமாச்சும் எனக்குச் சரிக்குச்சரி நிக்க முடியும். ஒன்ன சின்னச்சாமி மாமா மகளாச்சேன்னு பாக்கேன். இல்லன்னா பஞ்சாயத்தானாலும் ஆகட்டும்னு தாவணிய உருவி ஓடவிட்டுருவேன். செருப்பாலடி களுதய.”

பொம்பள பொம்பளையாக இருப்பதும் பிசாசாக மாறுவதும் ஆம்பளை கையில். இப்போது பஞ்சா பிசாசாகத்தான் மாறிப் போனாள். பொட்டியைக் கீழே வைத்துவிட்டு மளுக்கென்று இளவட்டக் கல்லைத் தூக்கி விட்டாள். பாரம் அழுத்தவும் கீழே விட்டு விடாமல் வயிற்றோடு வைத்துக் கொண்டாள். எடை தாங்க முடியாமல் அழுத்தினாலும் அதே வேகத்தில் படீரெனத் தரையில் தூக்கியடித்தாள்.

யாரும் துடைக்காமல் தூக்காமல் மழையிலும் வெயிலிலும் சேதாரமாகிக் கீறல் விட்டிருந்த கல் வேகமாகத் தரையில் விழுந்ததும் விரிசல் பெரிதாகி உடைந்தது.

“பாத்துக்க. நீ அம்மிக்கல் கனம்னு சொன்ன பொம்பள எளவட்டக்கல்லத் தூக்கி விசிறிட்டேன். ஒனக்கு சரிக்குச்சரி பொம்பளதான். இதுல ஆம்பளைக ஒனக்குச் சரிக்குச்சரியா மல்லுக்கட்ட முடியாதாக்கும். மீசத்தேவர்ட்டயும் பெரியநாய்க்கர்ட்டயும் போயி அழுதுக்கிட்டு நிப்பேன்னு பாத்தியா. சாக்கிரத.”

பேச்சு மூச்சில்லாமல் முழித்துக் கொண்டிருந்த முத்துவேலை கண்டுகொள்ளாமல் பொட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள்.

“பொம்பளப் புள்ள எளவட்டக் கல்லத் தூக்கீட்டா. இவ்வளோ நாள் அவ கூட வாயாடுன. இனிமே அவளோட மல்லுக்கட்டு.” என்று மந்தையில் எல்லோரும் சொல்லிச் சிரித்தார்கள்.

அடுத்தநாளே பஞ்சாவின் வீட்டுக்குப் போனான் முத்துவேல். தனியாக அல்ல. தாய், தந்தை, அக்காள், மச்சான் என்று குடும்பத்தோடு. கெங்கம்மா சங்கிலி குடுத்தவேளை பஞ்சாவுக்குக் கல்யாணம் கூடியது. முதலில் கோவப்பட்டாலும் பொண்ணு கேட்டு வந்த முத்துவேலின் ”மூஞ்சியையும்” அதிலிருந்த சிரிப்பையும் கண்டவள் ஒத்துக் கொண்டாள். பிறகென்ன… அதற்குப் பிறகு முத்துவேலின் கிண்டல்களும் வம்புகளும் அவளுக்குக் தொல்லையாக இருக்கவேயில்லை.

”கல்யாண வளையோசை கொண்டு.. காற்றே நீ முன்னாடி சென்று…” சீதாராமு டாக்கீசில் பாட்டு ஓடியது.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in கதை. Bookmark the permalink.

8 Responses to பஞ்சா (அ) உரிமைக்குரல் (அ) நேத்துப் பூத்தாளே ரோசாமொட்டு

 1. amas32 says:

  மண் மணக்கும் கிராமத்தில் தான் இந்த மாதிரி எளிய கதாப்பாத்திரங்கள் உலவ முடியும். அருமையான கதை. அதைவிட அருமையான எழுத்து நடை. ரசிச்சுப் படித்தேன் 🙂 வாழ்த்துகள்.

  amas32

 2. தமிழக கிராமங்களினது மண் சார்ந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதைகளையே வாசித்துப் பழகிய எமக்கு வித்தியாசமான கதையை, வேறொரு மண் வாசனையோடு தந்த ஜிராவுக்கு நன்றி. கிராமத்து வெள்ளந்தித்தனமும், வஞ்சகமில்லாத அன்பும் எல்லா நாட்டுப்புற மண்ணிலும் ஒன்றுதான் இல்லையா?

  ‘பொம்பள பொம்பளையாக இருப்பதும் பிசாசாக மாறுவதும் ஆம்பளை கையில்’

  இது சர்வதேசத்துக்குமான உண்மை. அருமையான எழுத்து. தொடர்ந்து ஜிரா சிறுகதைகளையும் எழுத வேண்டும். வாழ்த்துக்கள் !

  • GiRa ஜிரா says:

   நன்றி ரிஷான். இன்னும் நெறைய எழுதனும். அப்புறம்.. இதுவும் தமிழக கிராமம் தான் 🙂

 3. கிராமிய மணத்துடன் கதை நல்லாத்தேன் இருக்கு. எனக்கு ஒரே ஒரு ஜந்தேகம்! அதென்ன மோதிரம் மூணு பவுன்? விரல் துண்டாகிடாது? ஒரு பவுன் மோதிரமெ கனமாக் கனக்கும். மூணு பவுன்லே ஒரு தாலிக்கொடி செஞ்சுடலாம்.

  • GiRa ஜிரா says:

   நகைகள்ள அவ்வளவு வெவரம் பத்தாது டீச்சர். குறிப்பா இந்த பவுன் கணக்கு. நீங்க சொன்னத வெச்சு மோதிரத்த சங்கிலியா மாத்தியாச்சு 🙂

 4. Vignesh Thileepan says:

  இவ ‘பஞ்சா’ இல்ல ’பாறையா’னு நிச்சயமா பயந்திருப்பான் முத்துவேல் 🙂
  நல்ல ஒரு சிறுகதை…

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s