நெய்யெடை நல்லதோர் சோறும்

anragaஆழ்வார்ப் பாசுரங்கள்ள எனக்குத் தெரிஞ்சது ரொம்பக் கொஞ்சம். தெரிஞ்சிக்கக் கூடாதுன்னு இல்ல. ஆனா ரொம்ப எறங்கிப் பாத்ததில்ல.

அதான் கொஞ்சம் தான் தெரியும்னு மொதல்லயே உண்மையைச் சொல்லிட்டேன். ஆனா ஆண்டாளோட திருப்பாவையும் ரொம்பப் பிரபலமான பாசுரங்கள் ஓரளவு தெரியும். அதுல ஒன்னு பெரியாழ்வாரோட திருப்பல்லாண்டு.

பல்லாண்டு பாடுறது என்ன பண்/இராகம்னு தெரியல. ஆனா கேக்குறதுக்கே அவ்வளவு சுகமாயிருக்கும். பெரியாழ்வார் பாடிய பல்லாண்டுல ஒரு பாடலை ரசிச்சிட்டிருந்தப்போ பதிவெழுதலாம்னு தோணுச்சு. எனக்குத் தெரிஞ்ச தமிழ வெச்சுச் சொல்லியிருக்கேன். வைணவ சம்பிரதாயத்துக்கு மாறுபட்டு எதுவும் சொல்லியிருந்தா சுட்டிக்காட்டுங்க. தெரிஞ்சிக்கிறேன்.

பொதுவா நம்ம கடவுளை எப்போ நினைப்போம்?

இதென்ன கேள்வி? கஷ்டம் வரும் போதுதான். இல்ல.. எதாவது தேவைப்படும் போதுதான். அதுதான் பொதுவான மனித இயல்பு.

ஆனா எப்ப நினைக்கனும்?

தவம் பண்றவங்க எப்பவும் நினைச்சுக்கிட்டே இருப்பாங்க. நம்ம என்ன தவமா பண்றோம்? உலக வாழ்க்கைதானே வாழ்றோம்.

கோடிக் கோடியா வசதியும் செல்வமும் இருந்து, சொன்னதெல்லாம் செஞ்சு முடிக்க ஆட்களும் பேரும் இருக்க, மூனு வேளையும் நல்லா மூக்குப்பிடிக்கச் சாப்பிட்டு, வெத்தலை போட்டுக் குதப்பிக்கிட்டிருக்குறப்போ என்ன நினைவு வரும்?

எனக்கெல்லாம் தூக்கம் வரும். ஆனா பெரியாழ்வார் அப்ப வர்ர கடவுள் நினைப்பு சிறந்ததுன்னு சொல்றாரு. மகிழ்ச்சியா இருக்கும் போது கடவுளை நினைக்கனும். துன்பத்தில் கடவுள் நினைப்பு வர்ரது பெருசில்ல. அது தப்பும் இல்ல. ஆனா எல்லாம் இருந்து நிம்மதியா மகிழ்ச்சியா இருக்குறப்போ வரும் கடவுள் நினைவு சிறப்பானது. சரி. அதை எப்படிச் சொல்றாருன்னு பாசுரத்துல பாப்போம்.

நெய்யெடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே

நெய்யெடை நல்லதோர் சோறும் (நெய் எடை நல்லதோர் சோறும்)
நல்ல நெய். அந்த நெய் எவ்வளவு ஊத்தனும்? சோறு எவ்வளவு இருக்கோ அந்த எடைக்கு எடை நெய். கலிகாலம் முடிஞ்சு இப்ப நடக்குற இந்தக் கலோரி காலத்துல இப்படியெல்லாம் சாப்பிட்டா என்ன ஆகுறது? பேலியோ டயட்ல இருக்குறவங்க கூட ஒத்துக்க மாட்டாங்க. ஆனா உடல் உழைப்பு மிகுந்த ஆழ்வார் காலத்துக்கு இது சரிதான்.

இந்த வரிக்கு நெய்யிடை நல்லதோர் சோறும்னு பாடபேதமும் சில தளங்கள்ள இருக்கு. நெய்க்கு இடைல அங்கங்க சோறாம். நெய்யெடை நல்லதோர் சோறு வேணுமா நெய்யிடை நல்லதோர் சோறு வேணுமான்னு உங்க விருப்பத்துக்கே விட்டுர்ரேன். 😉

நியதமும் அத்தாணிச் சேவகமும்
நியதம் என்றால் நிதம்/நித்தம். நித்தம் நித்தம் நெல்லுச்சோறு. அதே நித்தம். ஒவ்வொரு நாளும் செய்யும் அத்தாணிச் சேவகமும்.

அத்தாணிச் சேவகம் என்பதற்கு அத்தாணி மண்டபத்தில் இறைவனுக்குச் செய்யும் கைங்கரியத்தைக் குறிக்கிறதுன்னு எல்லா விளக்கங்கள்ளயும் படிச்சேன். பெரியாழ்வாரால் இறைவனுக்கு அத்தாணி மண்டபத்துச் சேவையை நிதமும் செய்ய முடியும். அதுனால அது பொருத்தமான விளக்கம்தான்.

எனக்குக் கொஞ்சம் வேற மாதிரி யோசிக்கத் தோணுது. எல்லா மனிதர்களாலும் அத்தாணி மண்டபத்தில் இறைவனுக்குச் சேவை செய்ய முடிவதில்லை. கோடிக் கோடியாய் அள்ளிக் கொட்டி வைத்திருந்தாலும் எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிட்டாது. அதனால் நித்தமும் அத்தாணி மண்டபத்தில் நாம் வீற்றிருக்க சேவகர்கள் நமக்குச் சேவகம் செய்யும் போது என்று பொருள் எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது.

இந்தப் பொருளை எடுத்துக்கொள்ள எனக்குத் தோன்றும் இன்னொரு காரணம்.. நெய்ச்சோறு சாப்பிடுவதற்கும் வெற்றிலை போடுவதற்கும் நடுவில் ”நியதமும் அத்தாணிச் சேவகம்” வருவதும் தான். அதற்குப் பிறகுதான் நகைபூணலும் திருமண் இடுவதும் வருகிறது.

உங்களுக்கு எது பொருத்தமாத் தெரியுதோ.. அதையே எடுத்துக்கோங்க. 🙂

கையடைக் காயும் ( கை அடைக்காயும்)
அடைக்காய்னா பாக்கு. இந்த எடத்துல தாம்பூலம். அதாவது வெற்றிலையும் பாக்கும். சாப்டாச்சுன்னா வெத்தல பாக்குதானே. அதுவும் வேண்டியவங்க மடிச்சுக் கொடுத்தா வாயும் மனசும் ஒன்னாச் சிவக்குமே. (வெற்றிலை மடிச்சுக் கொடுக்குறவங்களுக்கு அடைப்பைக்காரன் என்று பெயருண்டு)

கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
இதுக்கு நாள் விளக்கம் சொல்லாமலே புரிஞ்சிருக்குமே. கழுத்து நெறைய நகை. கர்ணனுக்குப் போட்டியா காதுல குண்டலம் வேற.

மெய்யிட நல்லதோர் சாந்தமும்
சாந்தம்னா சாந்துன்னு சொல்றோமே அது. மெய்யிட.. அதாவது மெய்யில் இட்டுக்கொள்ளும் சாந்து. அதென்ன சாந்து. வைணவர்கள் உடம்பில் இட்டுக் கொள்ளும் பன்னிரண்டு திருமண். நாமம்னு சொல்றோமே.

சாந்து சந்தனத்தையும் குறிக்கும். எல்லாரும் உடல் முழுக்கப் பூசிக்கிற சாந்து அதுதானே.

தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல (தந்து என்னை வெள்+உயிர் ஆக்கவல்ல)
நெய்சோறு, வெற்றிலைபாக்கு, சேவகம்,  நகைகள், திருமண் எல்லாம் தந்து.. என்னை(பெரியாழ்வாரைன்னும் சொல்லலாம், நம்மையும் சொல்லிக்கலாம்) வெள்ளுயிர் ஆக்கவல்லவனே!

அதென்ன வெள்ளுயிர்? வெண்மை + உயிர் = வெள்ளுயிர். தூய்மையான உயிர் என்று இங்க பொருள். எல்லா வசதியும் வாய்ப்பும் இருந்து உலக இன்பங்களை அனுபவிக்கிறப்போ குற்றங்குறை இல்லாத தூய்மையான உயிராக இருக்க வேண்டும். அப்படி ஆக்கவல்லவன் பரந்தாமனே!

பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே
பை உடை(ய) நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே
நச்சுப்பை உடைய நாகப் பாம்பின் பகையாளியான கருடனைக் கொடியில் கொண்ட திருமாலே, உனக்கு நான் பல்லாண்டு கூறுவனே!

நாச்சுவை ததும்ப  உணவுண்டு
அச்சுவை மறக்கும் தாம்பூலம் தரித்து
பொன்மணிச் சரங்கள் மெய்யெங்கும் பூண்டு
மேனியெங்கும் பன்னிரு திருமண் சார்த்தி
நித்தம் நித்தம் அரங்கனுக்குச் செய்யும் சேவையும் தந்து
என்னைத் தூயவனாய் ஆக்கும் மாயவனே
உவணக்கொடி கொண்ட திருமாலே
தமிழ்ச் சொல்லாண்டு உனக்கே பாடுவேன் பல்லாண்டு!

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, இலக்கியம், விஷ்ணு and tagged , , . Bookmark the permalink.

10 Responses to நெய்யெடை நல்லதோர் சோறும்

 1. amas32 says:

  அருமையா எழுதியிருக்கீங்க ஜிரா 🙂 திருப்புகழ் எழுதும்போது இருக்கும் அதே இனிமை இப்பாசுர விளக்கத்திலும் உள்ளது. எனக்கு இந்தப் பாசுரத்தில் மிகவும் பிடித்த சொற்றொடர் ‘அத்தாணி சேவகம்’. பெரியாழ்வாருக்கு அவருக்கான சேவகம் அத்தாணி சேவகம். நம்மை தினப்படி வாழ்வில் அவ்வாறு யோசிக்கும்போது நமக்கு உகந்த சேவகத்தைத் தவறாம பண்ணனும்னு நான் நினைப்பேன். ஒவ்வொரு வரிக்கும் அழகான விளக்கத்தைக் கொடுத்திருக்கீங்க ஜிரா, நன்றி 🙂

  amas32

  • GiRa ஜிரா says:

   நன்றிமா. அத்தாணிச் சேவகம் – நீங்க சொல்றதும் நல்ல கருத்துமா. தொடர்ந்த எழுதத் தூண்டுது உங்க பின்னூட்டம் 🙂

 2. நல்ல பதிவு. ஒரிரு எண்ணங்கள்:

  1. “அத்தாணிச் சேவகமும்” – இங்கு நீங்கள் இரண்டாவது சொன்னதுதான் இன்னும் பொருந்தும். அனைவருக்கும் வேண்டியது மூன்று விஷயங்கள் என்பர் – தாரகம், போஷகம், போக்யம் – support, nourishment, luxury. இப்பாசுரத்தில் ஆழ்வார் மூன்றைப் பற்றியும் பாடுகிறார். சோறு – தாரகம்; நெய் – போஷகம்; தாம்பூலம், சந்தனம் போன்றவை – போக்யம்.
  இம்மூன்றையும் ஓரளவுதான் துய்க்க முடியும். பிறகு அலுத்துவிடும். ஆனால் அலுக்காதது பரம்பொருள் மீது செலுத்தும் பக்தி.

  2. “சாந்து” என்பதற்கு இங்கு சந்தனம் என்று பொருள் கூறுவது இன்னும் சிறந்தது (மேலே கூறியவற்றிற்கிணங்க).

  • எ.அ.பாலா says:

   1. தாரகம், போஷகம், போக்யம் — மூன்றும் கவர் ஆயாச்சு, உங்க லாஜிக் படியே, “அத்தாணிச் சேவகம்” ஆழ்வார் அனுபவிக்க அல்ல, நீங்க சொன்ன ”பரமபக்தி”யின் விளைவால் ஆழ்வார்க்கு அனுபவிக்கக் கிட்டிய பெரும்பாக்கியம், திருத்தொண்டுக்கான நற்பேறு
   2. சாந்து — சந்தனமே பொருத்தம், எப்படி? குளிர்ச்சியானது, உடல் குளிர்ச்சியும் உள்ளக் குளிர்ச்சிக்கு (வெள்ளுயிர்) உதவவே செய்யும் 🙂 திருமண்ணும் குளிர்ச்சி தான், ஆனால், சந்தனத்துக்கு குளிர்ச்சி தரும் ஆற்றலுடன், நல்ல மணமும் உண்டு

   மற்ற விஷயங்களை இராகவனார் சூப்பரா கவர் பண்ணிட்டார்,

   • GiRa ஜிரா says:

    ரெண்டு பேருமே சாந்துன்னா சந்தனம்னு சொல்லிட்டிங்க. பதிவுலயும் சேத்துட்டேன். நன்றி 🙂

 3. அருமையான விளக்கம்.

 4. ஹைய்யோ!!! அருமையான விளக்கம்! அந்த சாந்து…. சந்தனக்காப்புதான்.

  நம்ம பக்கம் வந்துருக்கீங்க! இனிய வாழ்த்து(க்)கள்! நலம் உண்டாகட்டும்!

  • GiRa ஜிரா says:

   நன்றி டீச்சர். எல்லாப் பக்கமும் ஒரு பக்கம் தானே. அதான் உங்க பக்கமும் வந்தாச்சு 🙂

 5. Pingback: 27. வெல்லம் கொண்ட உள்ளம் வெல்லும் | மாணிக்க மாதுளை முத்துகள்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s