0அ. பாவை நோன்பு for Dummies

PavaiNonbu1வணக்கம் நண்பர்களே.

மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடல்களுக்கு எளிய தமிழில் விளக்கம் எழுதலாம் என்று எண்ணம். அதற்கு முன் பாவை நோன்பைப் பற்றியும் அதன் வரலாற்றுப் பரிணாமங்களைப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன்.

பாவையர் கூடிச் செய்யும் நோன்பே பாவை நோன்பு. அவ்வளவுதான்.

பாவை நோன்பு என்ற பெயர் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்காது. சங்ககாலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட ”தை நீராடல்” ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் சமயம் கலந்து பாவை நோன்பாக மாறியது.

சங்க இலக்கியங்களில் அதிகம் பாடப்பவை எவையெவை என்று தெரிந்து கொள்வது தமிழ்ப்பண்பாட்டை ஓரளவு புரிந்து கொள்ள உதவும். அந்த வகையில் பெரிதும் கொண்டாடப்பட்ட ஆறு வையை. பெரிதும் கொண்டாடப்பட்ட மாதம் தை.

அகநானூறு புறநானூறு நற்றினை  ஐங்குறுநூறு  கலித்தொகை என்று பல நூல்களில் தைந்நீராடல் குறிப்பிடப்பட்டுள்ளது. கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட பரிபாடலில் தை நீராடல் பற்றி மிக விரிவாகவே தெரிந்து கொள்ளலாம்.

எத்தனையோ மாதங்கள் இருக்க தை மாதத்தில் ஏன் நீராட வேண்டும்? அதற்கும் விடை சொல்கிறது பரிபாடல்.

நீரில்லாமல் உலகத்தில் உயிர்கள் இல்லை. அந்த நீரைக் கொடுப்பது மழை. அப்படிப்பட்ட மழையையும் மழைநீர் பெருகிவரும் ஆற்றையும் கொண்டாடுவதுதான் தை நீராடல் அல்லது தைந்நீராடல்.

அடைமழை பெய்வது கார் காலத்தில். அந்தக் கார்(காலம்) திகைவது கார்த்திகை. திகைதல் என்றால் அடங்குதல். அடைமழை அடங்கத் தொடங்குவது கார்த்திகையில். நன்றாகக் கவனிக்கவும். நின்றுவிடுவதல்ல… சிறிது சிறிதாக அடங்குவது.

ஆற்றின் நீரோட்டம் ஆண்டு முழுவதும் ஒரேவிதமாக இருக்குமா? இருக்காது. கார்காலத்தில் பொங்கியும் கோடையில் குறுகியும் ஓடும்.

கார் ஒவ்வா வேனில் கலங்கித் தெளிவரல்
நீர் ஒவ்வா வையை (பரிபாடல்/வையை/நல்லந்துவனார்)

கார்காலத்தில் கலங்கியும் வேனிற்காலத்தில் தெளிந்தும் வையை ஆற்றின் நீர்மை எப்போதும் ஒரே விதமாக இருப்பதில்லை. இதுதான் அந்த வரியின் பொருள்.

மழை கடுமையாகப் பெய்யும் பொழுது ஆற்றில் நீராட முடியாது. வெள்ளம் அடித்துக் கொண்டு போகும். கோடையில் நீரோட்டம் குறைவாக இருப்பதால் அதுவும் சுகமாக இருக்காது. வேனிற்காலத்திலோ நீர் தெளிந்து அமைதியாக இருக்கும். அந்த அமைதியில் குளிக்கலாம். ஆனால் எப்படிக் கொண்டாடுவது?

சரி. மழையையும் ஆற்றையும் நீராடிக் கொண்டாட எதுதான் நல்ல காலம்?

கனைக்கும் அதிர்குரல் கார் வானம் நீங்க
பனிப்படு பைதல் விதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பின் குளத்து (பரிபாடல்/வையை/நல்லந்துவனார்)

கனைக்கின்ற அதிர்குரல் கொண்ட கார் மேகங்கள் பெருமழை பெய்து நீங்கிய பின்
பனி மிகுந்ததால் நடுங்கச் செய்கின்ற குளிர்(பைதல்) நிறைந்த முன்பனிக் காலத்தில்
கதிரவனும் சுடாமல் அவ்வப்போது இறுதிமழையும் பெய்கின்ற பிற்பகுதில்…

இப்போது புரிந்திருக்குமே. சூரியனும் சுடாது. அவ்வப்போது சின்னச் சின்னத் தூறல்கள். கலங்கியடித்து ஓடி வந்த பெருவெள்ளம் சற்று வேகம் குறைந்து ஓடிக்கொண்டிருக்கும். கொண்டாட இதைவிட இனிய பருவம் வேண்டுமா? குற்றாலம் போகின்றவர்கள் சாரல் விழும்போதுதானே போகிறார்கள். அது போலத்தான் வையை ஆற்றில் தை நீராடுவதும்.

இப்படி நீராடுவதைப் பெருமையாக் கருதினார்கள். அதுவும் எவ்வளவு பெருமையாத் தெரியுமா?

மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவரவர்
தீ எரிப்பாலும் செறி தவம் முன் பற்றியோ
தாய் அருகா நின்று தவத் தைந்நீராடுதல்
நீ உரைத்தி வையை நதி! (பரிபாடல்/வையை/நல்லந்துவனார்)

மையோலை பிடித்த புலவர் (காதல்)விளையாட்டுக்கு மாறுபட்டு எழுந்து
காமத்தின் சுவடு இல்லாமல் விளையாடுகின்ற பாவையர் கூட்டம்
அவரவர் தாயோடு நின்று தைந்நீராடுகின்ற பெரும் பேறு எப்படிப் பெற்றனர்?
தீ வளர்த்து வேள்வி செய்ததாலா? புலன்களை அடக்கித் தவம் செய்ததாலா?
நீயே கூறுவாய் வையை நதியே!

காதல் கவிதை எழுதி மயக்கும் காதலனைக் கூட நினைக்காமல் தூய்மையான உள்ளத்தோடு அவரவர் தாய் பக்கத்தில் இருக்க பாவையர் தைந்நீராடினார்களாம்.

PavaiNonbu5இந்தத் தைந்நீராடல் நடந்த நளிமாரிப் பின்குளம் என்று பரிபாடல் குறிப்பிடும் பருவம் மார்கழி மாதத்தின் பிற்பகுதி. சரி. அது தொடங்குவது எப்போது?

மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை” நாளில் இந்தத் தை நீராடல் தொடங்குகிறது. அதாவது நிலவானது முழுதாக வளர்ந்து அதன் களங்கம்(மறு) தெளிவாகத் தெரிகின்ற ஆதிரை நாளில் தொடங்கும். மொத்தம் முப்பது நாட்கள் நடக்கும் இந்த நீராடல். மார்கழி பாதியில் தொடங்கி தை பாதியில் முடிகின்றதால் இதற்குப் பெயர் தைந்நீராடல் என்று வந்தது.

இதுதான் பாவை நோன்பின் முன்னோடி.

பரிபாடல் சங்க இலக்கியங்களில் கடைசியாக எழுதப்பட்டது என்று சொல்லலாம். புராணங்களின் கலப்பு பரிபாடல்களில் நிறையவே தெரியும். அதை வைத்து சங்ககாலத்தில் இப்படித்தான் இருந்ததென்று முடிவுக்கு வரக்கூடாது. சங்ககாலம் என்பதே சில நூற்றாண்டுகள்.

மேலே குறிப்பிட்ட நல்லந்துவனாரின் பாடலில் புரிநூல் அந்தணர்கள் திருவாதிரை நாளில் வேள்வி செய்ததையும் அவர்தம் பெண்டிர் அம்பாநீராடல் என்னும் சடங்கு செய்து தங்கள் துணிகளை வேள்வித் தீயில் உலர்த்திக் கொண்டதும் கூறப்படும். ஆனால் அதற்கு முந்தைய சங்கப்பாடல்களில் ஆதிரையும் அம்பாநீராடலும் வராது. முழுநிலவு நாளில் தைந்நீராடல் மட்டுமே உண்டு.

PavaiNonbu2.jpgஇப்படியாக வாழ்வியலோடு கலந்திருந்த தைந்நீராடல் பக்தி இலக்கியக் காலகட்டத்தில் சமயம் சார்ந்த சடங்காக மாறியது. அவரவரர் சமயத்திற்கு ஏற்ப கடவுள் வழிபாடு செய்யும் பாவை நோன்பு பிறந்தது இப்படித்தான். சைவம் சார்ந்து மாணிக்கவாசகர் எழுதிய திருவெம்பாவையும் வைணவம் சார்ந்து ஆண்டாள் எழுதிய திருப்பாவையும் அப்படி எழுதப்பட்டவைதான். சமணம் சார்ந்த பாவை நூலும் உண்டு. அதற்குப் பெயர் பாவைப் பாட்டு. அதில் ஒரேயொரு பாட்டு மட்டும் தான் இப்பொழுது இருக்கிறது. அதுகூட யாப்பருங்கலக் காரிகை என்னும் நூலில் மேற்கோள் காட்டப்பட்டதால் கிடைத்தது.

சைவர்கள் கொண்டாடிய தைந்நீராடல்/பாவை நோன்பு திருவாதிரையில் தொடங்கி தைப்பூசத்தில் முடியும். கிட்டத்தட்ட தைந்நீராடல் காலகட்டம். அதாவது பாதி மார்கழியும் பாதி தையும். இன்று கேரளாவில் சிவனைக் கொண்டாடும் திருவாதிரை நாளில் பெண்கள் கூடி திருவாதிரைக்களி ஆடும் பண்டிகையாகவே இருப்பதும் பாவை நோன்பின் தொடர்ச்சியே என அறியலாம்.

ஆண்டாள் கொண்டாடிய பாவை நோன்பும் மார்கழி முழுநிலவு நாளில்தான் தொடங்குகிறது. அதை “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்” என்ற திருப்பாவையின் முதல் வரியால் அறியலாம். ஆனால் இப்போது சைவர்களும் வைணவர்களும் முழுக்க முழுக்க மார்கழியிலேயே பாவைநோன்பு கொண்டாடுகிறார்கள். இது எந்தக் காலத்தில் மாறியது என்று என்னால் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. இவை இப்படியிருக்க சமணப்பாவை நோன்பு முற்றிலும் அழிந்து போனது.

வாழ்வியல் கொண்டாட்டமாக இருந்து பக்தி கலந்த வழிபாடாக மாறிய பாவை நோன்பின் வரலாற்றுப் பரிணாமம் இதுதான்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, திருப்பாவை, பரிபாடல், விஷ்ணு and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

12 Responses to 0அ. பாவை நோன்பு for Dummies

 1. எ.அ.பாலா says:

  ராகவன்,
  அருமை, தெரியாத தகவல்கள் பல, வாசித்துத் தெளிந்தேன். இப்படி ஒரு கருத்துண்டு:
  மார்கழி, -> ‘மாரி’ என்ற வார்த்தையிலிருந்து உண்டானது ‘மார்’ என்பது. ‘மாரி’ என்றால் மழை என்று பொருள். ‘கழி’ என்றால் ‘கழிந்த’ அல்லது ‘பின்னர்’ என்று அர்த்தம். எனவே, மழைகாலம் முடிந்த பின்னர் ஆரம்பிக்கும் மாதம் மார்கழி 🙂

  “மழையளவு குறைந்த மாதம்” மார்கழி என்பதும் சரியானதே. மார்கழியில் மும்மாரிப் பொழியாது 🙂 தை நீராடலுக்கும் பாவை நோன்புக்குக்கும் தொடர்புள்ளது, ஐயமில்லை

  • GiRa ஜிரா says:

   மிக்க நன்றி. நீங்க சொன்னது சரிதான். மாரி கழிவது மார்கழி. 🙂

 2. amas32 says:

  கலக்குங்க ஜிரா! ஆரம்பமே கன ஜோர் :-}}

  amas32

 3. அருமை. பள்ளி, கல்லூரிகளில் தமிழர் பண்பாட்டை அறிய தவற விட்டவர்களும், இளைய சமுதாயத்தார்களும் இதை கட்டாயம் படித்து உணரவேண்டும் என்பது என் அவா. வாழ்த்துகள் 🙂

 4. எளிய எழுத்து நடையில் அரிய தகவல்கள்!!

 5. வணக்கம்..
  இந் நன் முயற்சிக்கு, முருகு திகழ் வாழ்த்துக்கள்!

  கோதையின், கடைக்கோடித் தோழியாய்,
  அவள் எல்லாரையும் எழுப்பிக் கொண்டு போனபின்.. பின் எவரும் ஒளிந்துளரா? என்று பார்த்து வரும் பாங்கியாய்..
  “பின்னிருந்து” பின்னூட்டம் எழுதுகிறேன்! மன்னிக்க! அன்றன்றே காத்திருந்து வாசித்து விட்டாலும் ,சிற்சில சொல்ல ஆசை:) அதான்!

  “பாவை நோன்பு for Dummies” என்ற தலைப்பு கண்டவுடன்,
  என்னையும் அறியாமல், முகம் பூத்தது:)
  தொடாமலேயே பூக்கும் சில தடாகத் தாமரைகள்!
  —–

  முக்கியக் குறிப்புக்கள்:

  1. பாவை நோன்பு= (காத்யாயினி தேவி எனும்) பாவையை வைத்துப் பூஜிக்கும் நோன்பு ஆனது.. பின்னாளில் தான்!

  ஆதித் தமிழில்..
  பாவையர்கள் சேர்ந்து கொண்டாடும் “இயற்கை நீராட்டமே” என்று
  “மதம் கலவாது” சொன்னமை, நன்று, நன்றி!

  2. “அம்பா ஆடல்”= தமிழே!
  அது அம்பாள் அல்ல:)
  அம்பு/அப்பு= நீர்; அம்பா ஆடல்= நீராடல்

  (ஆற்றின் புது/அடங்கிய வெள்ளத்தில்)
  அம்+பா+ஆடல்= அழகுடன், பரவி, நீராடல் என்றும் பிரித்துப் பொருள் கொள்ளலாம்

  3. /அதற்குப் பெயர் பாவைப் பாட்டு
  சமணப் பாவை நோன்பு முற்றிலும் அழிந்து போனது/

  அல்ல!:) அதன் பெயர்: “சமணத் திருவெம்பாவை”
  அவிரோதி ஆழ்வார் எழுதியது

  யாப்பருங்கல விருத்தி மேற்கோள் செய்யுளைக் கடந்து,
  இன்று பல பாக்கள் மீட்டு எடுத்தாகி விட்டது, ஓலைகளில் இருந்து!

 6. 4. /இப்போது சைவர்களும் வைணவர்களும் முழுக்க முழுக்க மார்கழியிலேயே பாவைநோன்பு கொண்டாடுகிறார்கள்.
  இது எந்தக் காலத்தில் மாறியது என்று என்னால் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை/

  இது வடநெறி/ வேதமதம், தமிழில் ஆக்ரமித்த பின்..
  புரோகிதம் பரவி..
  Tamizh Monthly Calendar, சந்திரமான முறைக்கு மாறியதால் வந்த விளைவு!:(((
  —–

  *மார்கழி நீராடல், தைந் நீராடல் மட்டுமல்ல!
  *மாசி நீராடல் கூடஉண்டு!
  இன்று, மாசி மகத்தின் போது பார்க்கலாம்! தீர்த்தவாரி எ. சடங்காக்கி விட்டார்கள்:(

  ஆண்டாளும், மார்கழி பாடியதோடு நில்லாமல், “தையொரு திங்களும் தரை விளக்கி” என்று அடுத்து, தொடர்ச்சியாகப் பாடுகிறாள்!

  இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த சங்கத் தமிழ்! = பூஜா/புனஸ்கார தீர்த்தவாரி ஆக்காது, “புது வெள்ளம்” கொண்டாடியது!
  அதுவும் கூட்டமாக/சமூகமாக, அனைவரும் சேர்ந்து, ஆற்றின் புது வெள்ளம் குளித்தல்! = தைந் நீராடல்!

  கார்கால மழை அடங்கி, கார் திகைந்து,
  ஆற்றில் புதுமண் அடித்துக் கொண்டு வந்த நீரெல்லாம் “தெளிந்து”
  தை மாதத்தில்.. தூய்மையான வெள்ளம்!
  அதில், மக்கள் படிவது= தைந் நீராடல்!

  *தைஇத் திங்கள் தண்கயம் படியும் – நற்றிணை
  *பனிச் சுனைத் “தெள் நீர்” தைஇத் திங்கள் தண்ணிய தரினும் – குறுந்தொகை
  *தைஇத் திங்கள் தண்கயம் போல – புற400

  எங்கு பார்த்தாலும், “தைஇத் திங்கள், தைஇத் திங்கள்” என்றே பேச்சு!
  *மார்கழி நீராடல், மாசி நீராடல்
  *இரண்டுக்கும் இடையே, நடுநாயகமாய்.. தைந் நீராடல்!
  ——

  தமிழ் நாட்காட்டு= Very Close to Scientific Approximations
  *கதிர்வழி= சூரியமானம்
  *மதிவழி= சந்திரமானம்
  தமிழ் இரண்டுமே கொண்டது! Using mutually, to adjust monthly rotation & yearly rotation!

  இசுலாமிய நாட்காட்டி= மதிவழி என்பதால் தான்..(நிலவுக்கு மட்டுமே முக்கியத்துவம்)
  அவர்களின் ஒவ்வொரு புத்தாண்டும் 11 நாள் தள்ளிப் போயிக்கிட்டே இருக்கும்! நிலைத்து நில்லாது! Yearly!

  இங்கும், தமிழ் நிலத்தில், வேதமதம் பரவிய போது, அவா புரோகிதாள்.. சந்திரமான அடிப்படையில் மட்டும் நாட்காட்டு அமைத்தார்கள்
  But for Monthly! அந்த மாதத்தின் முழுநிலவு/ பெளர்ணமி.. எந்த நட்சத்திரத்தில் வருதோ.. அதான் மாதப் பெயர்!

  *சித்ரா நட்சத்திரப் பெளர்ணமி= சைத்ர மாதம் (சித்திரை)
  *விசாக நட்சத்திரப் பெளர்ணமி= விசாக மாதம் (வைகாசி)
  *அனுஷம்/கேட்டை நட்சத்திரப் பெளர்ணமி= ஜேஷ்டா மாதம் (ஆனி) etc etc..

  On a side note..
  சித்திரை, வைகாசி.. கார்த்திகை, மார்கழி.. 12உம் தமிழ்ப் பெயர்களே!

  சைத்ர = சித்திரை, பார்க்க ஒன்னு போல இருக்கும்! ஆனா, வேர்ச் சொல் வேறு!
  *கந்தன் -> ஸ்கந்த
  *அமிழ்தம் -> அ+மிருத்யு போல.. வெவ்வேறு வேர்ச்சொற்கள்!
  ஆனி, ஆடி-க்குல்லாம், இப்படிச் சம்ஸ்கிருதத்தை, தமிழோடு “ஒட்ட வைக்க” முடியாது:))
  —–

  இவர்கள் வந்து, சம்ஸ்கிருதக் குட்டையைக் குழப்பும் முன்..

  தமிழில், மதிவழி என்பதால் தான், மதி->”மாதம்” என்று பேர் பெற்றது; “திங்கள்” என்றும் நிலவை ஒட்டிக் குறித்தனர் தமிழர்!
  ஆனால், வெறுமனே நிலவை மட்டும் கொள்ளாது, சூரியனையும் கொண்டு, சுழற்சியைத் திருத்திக் கொண்டனர்; மாதத் தொகுப்பே->ஆண்டு அல்லவா!

  சூரியத் திருத்தங்களைக் கொள்ளாது..
  27 நட்சத்திரங்கள்/ 30 திதிகள் என்று இவா பிரித்தபடி, வைத்தால்..
  (14 சுக்ல பட்சம்/ 14 கிருஷ்ண பட்சம்/ 1.5= அமாவாசை/பெளர்ணமி)
  29.5*12 = 354.14 days தான் கிடைக்கும், ஓர் ஆண்டுக்கு:))

  ஆனால், 1 solar year = 365.25 days அல்லவா?
  365 minus 354
  அதான் அந்த 11 நாள் தள்ளிப் போனது; இத்துணைக் குழப்பங்களும்..
  மார்கழி நீராடலா? தைந் நீராடலா? என்றெல்லாம் பேச்சும் வந்தது!
  —–

  தமிழில், நிலவு மட்டுமே அல்லாது, “கதிர்வழி” மாதங்கள் உண்டு!
  மிகச் சரியாக 365.25 வந்து விடும், குழப்பங்கள் இராது!

  மேழம், விடை, ஆடவை, கடகம், சிங்கம், கன்னி
  துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம்

  என்று தமிழ்ப் பெயர்கள், சூரிய மாதங்களுக்கு! = இன்றும் மலையாளத்தில் இப்படித் தான் ஆண்டு உருட்டுகிறார்கள்;
  Chingam என்று கார் தொடங்கும் ஆடி-ஆவணியே, அவர்கள் புத்தாண்டு நாள்;

  நச்சினார்க்கினியர், தொல்காப்பிய உரையிலும் இப்படியே சொல்வார்..
  /ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை (ஆவணி) முதலாக, தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை (ஆடி) ஈறாக.. வந்து முடியுந் துணை ஓர் ஆண்டாம்/

  தெலுங்கு, மலையாளம் போல் அல்ல! சந்திரமானம்..
  அதான், மாத ஆரம்பம் 15/16th க்கு முன்பே வந்து விடும்! யுகாதியும்.. ஆண்டுக்கு ஆண்டு மாறிக்கிட்டே இருக்கும்!
  2014= Mar 31st
  2015= Mar 21st
  2016= Apr 8th
  —–

  ஆனா, இங்கு மட்டும் புரோஹிதாள்.. சந்திரமானத்தின் மேலேயே சூர்யமானத்தையும் “கலந்ததால்” வந்தது வினை:(

  தனித்தனி Monitoring என்று வைத்திருந்தால் கூட, இப்படிக் குழப்பங்கள் வாராது; ஆனா, தமிழ் மக்களின் ஆதரவு வேண்டி,
  “பாருங்கோ, உங்களது/எங்களது எல்லாம் ஒன்னு தான்” என்ற “தந்திரக் கலப்பால்”, இருந்ததன் மேலேயே, இவா Systemஉம் ஏற்றல்!:(

  முருகன் மேல் ஸூப்ரமண்யன்
  திருமால் மேல் விஷ்ணு
  கொற்றவை மேல் அம்பாள் என்பது போல:(
  கதிர்வழியின் மேல் இவா சந்திரமானமும், ஏறிக் கலப்பு!

  *சித்ரா மாஸப் பெளர்ணமியில்= மாதப் பேரை வைத்து (சந்திரமானம்)
  *ஆனா மாஸ ஆரம்ப நாளை மட்டும்= மேழ ஞாயிற்றுக்குத் தள்ளி (சூர்யமானம்)
  ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால்.. கணக்கா புரோஹிதங்கள்!:)
  —–

  இப்படியான சந்திரமானப் பெயர்க் குழப்பத்தால்..
  *மாத நாட்கள் சரியாக இருப்பினும்
  *ஆண்டு நாட்கள், 11 நாள் தள்ளிப் போய்..
  பாவை நோன்பு, குழம்பிப் போனது:)
  அன்று பெளர்ணமி இருக்கோ இல்லையோ.. மார்கழி 01 அன்றே பாவை நோன்பு கொண்டாடத் தொடங்கி… 30 என்று கணக்கு காட்டினார்கள்:)

  *மாத உருட்டுக்கு= மதிவழி
  *ஆண்டு உருட்டுக்கு= கதிர்வழி
  தனித்தனியாக/ சரியாகவே வைத்திருந்த தமிழ்!

  ஆனா, பின்னாளில், மதம் மூலமாய்ச் சம்ஸ்கிருத Parasite உறிஞ்சப்பட்டு, ஒன்றின் மேலேயே இன்னொன்றும் கலந்து, புரோஹிதக் குழப்பம், இப்படி ஆகிப் போனது:(

 7. Pingback: 26. ஆள் பார்த்துக் கொடுக்கும் பெரும் ஆள் | மாணிக்க மாதுளை முத்துகள்

 8. பாவை நோன்பு
  ===============
  சந்திர நாள்காட்டியில், மார்கழித் திங்கள் முதல் நாளான முழுமதி நன்னாளில், சூரிய நாள்காட்டியில் நளி(விருச்சிக) ஞாயிறு, 28ஆம் நாளில் (திசம்பர் 13) பாவை நோன்பு தொடங்குகிறது.

  பண்டைய தமிழர் திங்கள் ஒவ்வொன்றும் முழுமதியிலேயே தொடங்கியது என்பதனைக் கண்டோம். அதன்படி, முதல் திங்களான கார்த்திகை திங்கள், முழுமதியில் தொடங்கி, அந்த திங்கள் முழுவதும் விளக்கேற்றி, அறம் செய்துக்கொண்டிருக்கிறோம்..

  அடுத்து இரண்டாம் திங்களான மார்கழித் திங்களில் பாவை நோன்பு இருக்க வேண்டும்.

  மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
  நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! – திருப்பாவை

  போற்றியாம் உய்ய ஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
  போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய் – திருவெம்பாவை

  மார்கழி திங்கள் முதல் நாளில், மதி நிறைந்த நன்னாளில் குளத்தில் நீராட செல்ல வேண்டும். சரி, நீராடிவிட்டு நோன்பை எப்படி கடைப்பிடிப்பது??

  வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
  செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
  பையத் துயின்ற பரமன் அடிபாடி,
  நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
  மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
  செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;
  ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
  உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.— திருப்பாவை

  ஈரமண்ணால் செய்யப்பட்ட பாவையை வழிப்பட வேண்டும். ஒரு திங்கள் உணவில் நெய், பால் ஆகியவற்றை சேர்ந்துக்கொள்ளக்கூடாது. அலங்கரித்துக்கொள்ளாமல், புரளி பேசாசமல், தான தருமங்கள் செய்து நோன்பை கடைப்பிடிக்க வேண்டும்.

  உலக நன்மைக்காக செய்யப்படும் பாவை நோன்பு
  ================================================
  இந்த பாவை நோன்பு எதற்காக செய்யப்படுகிறது??

  நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,
  தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
  ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகள– திருப்பவை

  செந்தமிழ் நாட்டில் முன்பு பாவை நோன்பு மேற்க்கொள்ளப்பட்ட வரை திங்கள் மும்மாரி பெய்தது… ஆனால் தற்போது ஆண்டுக்கே மும்மாரி பெய்வதில்லை… மரபை மறந்ததால் அல்லல் படுகிறோம்.

  ஒருத்திங்கள் நோன்பு நோற்றாகிவிட்டது.. அடுத்து என்ன???? தைந்நீராடல், தைப்பூசம், பண்டைய தைப்பொங்கல்………. காத்திருங்கள்

 9. இப்போது சைவர்களும் வைணவர்களும் முழுக்க முழுக்க மார்கழியிலேயே பாவைநோன்பு கொண்டாடுகிறார்கள்.
  இது எந்தக் காலத்தில் மாறியது என்று என்னால் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை///////////////// இது மாறியது கிபி 10 ஆம் நூற்றாண்டுக்கு பின்னரே….. அதுவரை ஒவ்வொரு திங்களும் முழுமதியிலேயே தொடங்கும்… கார்த்திகை திங்கள் முழுமதியே பண்டைய சந்திர புத்தாண்டு… (கார்நாற்பது)… புத்தாண்டை மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்…

  இரண்டாவது திங்கள் மார்கழி திங்கள், முழுமதியில் தொடங்கும்… பாவை நோன்பு தொடக்கம்….

  அடுத்து தைப்பூசத்தில் தைப்பொங்கல்…. தைத்திங்கள் முழுவதும் வண்ண கோலங்கள்…. மாசியில் முழுமதியில் கடலாட்டு விழா…. பங்குனியில் காமன் விழா….. சித்திரை முழுநிலவில் இந்திர விழா(ஒருதிங்கள் நடைப்பெற்றதாக மணிமேகலை கூறுகிறது)

 10. பிற்கால சோழர்களின் ஆட்சியில், சந்திர நாள்காட்டி கைவிடப்பட்டு, சூரிய நாள்காட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது….. சித்திரை திங்கள், வைகாசி திங்கள் என்பன, மேஷ ஞாயிறு, இடப ஞாயிறு என்று ஆயின….. ஒவ்வொரு முழுமதியிலும் தொடங்கிய மாதங்கள், ஒவ்வொரு சங்கராந்த்தியிலும் தொடங்கின….. பிறகு சோழர் வீழ்ச்சியின் பின், ஜோதிடர்களை கையில் வந்தது நாள்காட்டி…. சூரிய நாள்காட்டிக்கு, சித்திரை, வைகாசி என்ற சந்திர மாதப்பெயர்களையே வைத்தனர்… இன்று வரை அது தொடர்கிறது….

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s