0ஆ. Introduction to ஆண்டாள்

ஆண்டாள்..

இவளைப் பற்றி என்ன சொல்வது?

பூமாலை சூடிக் கொடுத்தவள்
திருப்பாவை பாடிக் கொடுத்தவள்
நாச்சியார் திருமொழி கூறியவள்
கண்ணனின் காதலி
ஆழ்வார்களில் ஒரேயொரு பெண்
ஆடிப்பூரத்தில் பிறந்தவள்
திருவில்லிபுத்தூர் சொந்த ஊர்
பெரியாழ்வாரின் மகள்
இராமானுசருக்கு மானச சகோதரி

இப்படி நிறையவே சொல்ல முடியும் என்றாலும்….

Aandaal3ஆண்டாள் கண்டெடுக்கப்பட்ட குழந்தை. ஆம். தாய் தந்தை குலம் எதுவும் தெரியாதவள். மலர்ச்சோலையில் விஷ்ணுசித்தன் என்ற பெரியாழ்வாரால் அவள் குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்ட நாளே ஆடிப்பூரம். எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவள் என்பது அறிஞர் கருத்து. பாவை நோன்பின் பரிணாமத்தை வைத்துப் பார்க்கும் போதும் அது பொருத்தமாகவே இருக்கிறது.

தான் தாய் தந்தை அறியாதவள் என்ற எண்ணம் ஆண்டாளுக்கு வளர்ந்த பிறகும் இருந்திருக்கக் கூடும். எடுத்து வளர்த்த பெரியாழ்வாரின் மேல் பாசமும் நன்றியும் அளவில்லாமல் இருந்திருக்கவும் வேண்டும். அதனால்தானோ என்னவோ திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த பெரியாழ்வாரின் கோதை என்று பொருள்படும்படி ஊர்ப் பெயரையும் அவர் பெயரையும் திருப்பாவையிலும் நாச்சியார் திருமொழியிலும் சேர்த்து வைத்துப் பாடியிருக்கிறாள். தனக்கும் முன்னெழுத்து(Initial) உண்டு என்று எப்படியாவது பதிவு செய்ய விரும்பியிருக்கிறாள் என்றே தோன்றுகிறது.

பட்டர் பிரான் கோதை சொன்ன (திருப்பாவை, வங்கக் கடல் கடைந்த)
விட்டுசித்தன் கோதை இன்னிசையால் சொன்ன (நாச்சியார் திருமொழி, மன்னு மதுரை தொடக்கமாக)
வில்லிபுதுவைநகர் நம்பி விட்டுசித்தன் வியன்கோதை (நாச்சியார் திருமொழி, அல்லல் விளைத்த பெருமானை)
புகழ்ப் பட்டர்பிரான் கோதைத் தமிழ் ஈரைந்து (நாச்சியார் திருமொழி, பாஞ்சசன்னியத்தை பற்பநாப)
போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதைதமிழ் (நாச்சியார் திருமொழி, நாகத்தின் அணையானை)
விருந்தாவனத்தே கண்டமை விட்டுசித்தன் கோதை சொல் (நாச்சியார் திருமொழி, பருந்தாட் களிற்றுக்கு அருள்)

ஊரும் பேரும் தெரியாதவன்/ள் என்பது தமிழில் வசை. அந்த வசையை நிறையக் கேட்டதாலோ.. அல்லது தான் ஊரும் பேரும் உள்ளவள் தான் என்பதைச் சொல்வதற்காகவோ வளர்த்த தந்தையோடு வளர்ந்த ஊரையும் அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறாள் ஆண்டாள்.  எங்கெல்லாம் பெரியாழ்வாரைத் தந்தை என்று குறிப்பிடுகிறாளோ அங்கெல்லாம் ஊர்ப் பெயரையும் சேர்த்தே குறிப்பிடுவது இந்த எண்ணத்தை உறுதிப்படுத்துகிறது.

மேலே நான் குறிப்பிட்டிருக்கும் பாசுரங்கள் அனைத்தையும் படித்துப் பார்த்தால் கோதை தன் “ஊரும் பேரும்” சொல்லியிருப்பது விளங்கும்.

வில்லிபுத்தூர் அவளது ஊர். புத்தூர் என்பதைப் புதுவை என்றே பல இடங்களில் குறிப்பிடுகிறாள் கோதை. இரண்டு இடங்களில் வில்லிபுதுவை என்றும் விளித்திருக்கிறாள்.

ஆண்டாள் கண்ணனைக் காதலித்து திருவரங்கத்தில் அரங்கனோடு திருமணம் செய்துகொண்டாள் என்பதே பக்தியியல் நம்பிக்கை. அது நடந்ததா நடக்கவில்லையா என்பதை அவரவர் நம்பிக்கையின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

ஆனால் ஒன்று.. ஆண்டாளின் காதல் தீவிரத்தையும் அவளுடை தீராத ஏக்கங்களையும் அவள் எழுதிய பாசுரங்களிலேயே அழகாகப் புரிந்துகொள்ளலாம். அவள் பெண் என்பதால் நாயகி பாவத்துக்கு மெனக்கெடத் தேவையேயிருக்கவில்லை. அது இயல்பாகவும் அழகாகவும் பாடல்களில் வழிந்தோடுகிறது.

ஒரு பெண் ஆணை எப்படியெல்லாம் இரசிப்பாள் என்பதை நாச்சியார் திருமொழியில் இப்படிச் சொல்கிறாள் கோதை.

என் அரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் எழுகமலப் பூவழகர்!

தலையிலிருந்து வரிசையாக ரசித்துச் சொன்னவள் வயிற்றோடு நிறுத்திவிட்டாள். ஏன்? வெட்கமா? இலக்கியத்தில் எழுதக் கூச்சமா? இல்லை. காணாததை எப்படிப் பாடுவாள்? அரங்கனோ இடையில் பீதாம்பரம் உடுத்தியிருக்கிறானே!

நான் இரசித்த இன்னொரு பாசுரத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். காதல் வந்துவிட்டது. அந்தக் காதலைச் சொல்ல வேண்டும். சொன்னால் என்ன ஆகும் என்றொரு அச்சம். ஒருவேளை துணிச்சல் வந்து சொல்லிவிட்டாலும் கேட்டவருக்கு அது துன்பமாக இருந்து விட்டால்? சேச்சே! இதற்குச் சொல்லாமலே இருந்துவிடலாம்.

பெய்யும் மாமுகில் போல் வண்ணா, உன்றன் பேச்சும் செய்கையும் எங்களை
மையலேற்றி மயக்க உன் முகம் மாயமந்திரந்தான் கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்யதாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே!

Keshav-0

Thanks to Keshav!

பொழிகின்ற மாமழை முகில் போல் கரியவனே
உன்னுடைய பேச்சும் செய்கையும்
எனக்கு மையலும் மயக்கமும் தருகிறதே!
அப்படி என்னை மயங்கும் உன் முகம் என்ன மாயமந்திரச் சொக்குப்பொடியா!
என் காதலை ஏன் உன்னிடம் சொல்லவில்லை தெரியுமா?
அற்பச் சிறுமி என்று நீ என்னை நினைத்துவிட்டால்?
அதனால்தான் உன்னுடைய மனம் நோகும்படி என் காதலைச் சொல்லவில்லை!
அழகிய தாமரைக் கண்ணனே…. அதற்காகவாவது
மனதுக்குள் நான் கட்டி வைத்திருக்கும் காதல் மணற்கோட்டைகளையாவது உடைத்துவிடாதே!

கடவுளைத் தாயாகவும் தந்தையாகவும் குழந்தையாகவும் தோழனாகவும் பார்த்தவர்கள் பார்த்திருக்க, காதலனாகப் பார்த்த ஆண்டாளின் காதலும் பக்தியும் ஒப்புக்கொள்ளத் தக்கதுதான். ஆனால் நேரில் நமக்குத் தெரிந்தவர் அப்படிச் சொன்னால் அதை நாம் எப்படி எடுத்துக் கொள்வோம் என்று யோசனையாகத்தான் இருக்கிறது. ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் தன் காதலைச் சொல்லாமல் எப்படியெல்லாம் தவித்தாளோ! அல்லது வெளியே சொல்லி எப்படியெல்லாம் பேச்சுப்பட்டாளோ! அவளும் அவனும் மட்டுமே அறிவார்கள்!

Aandaal2கடைசியாக ஒன்று சொல்லி ஆண்டாள் பற்றிய இந்தப் பதிவை நிறைவு செய்ய விரும்புகிறேன். ஆம். அது “பறை” குறித்து.

திருப்பாவையில் பதினோரு இடங்களில் “பறை” என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறாள் ஆண்டாள். இது எந்த ஆழ்வாரும் நாயன்மாரும் சமணரும் பௌத்தரும் தமிழில் பயன்படுத்தாத சொல்.

முதன்முதலில் திருப்பாவை படித்த போது என்னை மிகவும் யோசிக்க வைத்த சொல். இப்போதும் திருப்பாவைக்கு இருக்கும் சம்பிரதாய விளக்கங்களைப் பார்த்தால் பறை என்பதற்கு மோட்சம் என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். பல இடங்களில் பறை என்றே குறிப்பிட்டு அதற்குத் தனிவிளக்கம் இல்லாமலும் விட்டிருக்கிறார்கள். அதனால் சிந்தித்து என் அறிவுக்கும் மனதுக்கும் எட்டிய பொருளை இங்கு தருகிறேன்.

பறை என்ற சொல்லுக்கு இசைக்கருவி என்றும் சொல் என்றும் இரண்டு விதமான பொருளுண்டு. இன்றைக்கும் மலையாளத்தில் புழங்கும் சொல். ஆனால் தமிழிலோ சாதீயமாகக் குறுக்கப்பட்ட சொல்.

பறை என்றால் வெறுமனே சொல்வது அல்ல. அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் திட்டவட்டமாகச் சொல்வது. பறை அறைந்து அரச கட்டளைகள் நாடு முழுவதும் பரப்பப்படும். கோட்டை இருக்கும் இடங்களில் முரசு அறைந்து அறிவிப்பார்கள். கோட்டை இல்லாத இடங்களில்?  பறை அடித்து அறிவிப்பார்கள்.

கோதை ஆண்டாள் தன்னுடைய பாடல்களில் கண்ணனை எப்படிப் பார்க்கிறாள்?

காதலனாக.

காதலனான அந்தக் கண்ணனிடம் என்ன வேண்டுகிறாள்?

காதலை.

அந்தக் காதல் அவள் மனதில் நிறைய இருக்கிறது. அதைப் பாடல்கள் வழியாக ஊருக்கெல்லாம் சொல்லிவிட்டாள். ஆனால் ஊர் ஏற்குமா? அதற்கு அவனும் சொல்ல வேண்டாமா? அப்படிச் சொல்லாவிட்டால் அது வெறும் ஒருதலைக்காதல் அல்லவா? அதனால்தான் அவனும் அனைவரும் அறியும் வகையில் உறுதியாகச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே “பறை” என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறாள் என்று தோன்றுகிறது.

அதனால்தான் ”பறை தருவான்” என்பதை “முக்தி தருவான்” என்று பொருள் கொள்ள என் மனம் ஒப்பவில்லை.

அவள் விரும்பிய வரம் காதல். அதை அவன் ஊரறியக் கொடுத்தால்தானே அவளும் இன்பமடைவாள்? அதனால்தால் “பறை” தருவான் என்று பாடியிருக்கிறாள்.

ஆண்டாளுக்குப் பொருத்தமான விளக்கம் நமக்குப் பொருந்துமா? நமக்கான நற்கதியை நமக்கு உறுதியாக அந்தப் பாற்கடலான் சொல்வதே நமக்கான பறை.

ஆகவே இந்த விளக்கத்தையொட்டியே பாசுரங்களில் பறை என்ற சொல்லுக்கு விளக்கம் தருகிறேன். இது சரியோ தவறோ! கோதையிடமும் அரங்கனிடமும் பொறுப்பை விட்டுவிடுகிறேன்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

3 Responses to 0ஆ. Introduction to ஆண்டாள்

 1. எ.அ.பாலா says:

  பறை விளக்கம் எளிமை, அருமை 🙂 பறைக்கு மோட்சம் என்பது உச்சப்பொருள். நன்று, இராகவனாரே, வாழி!

  இவ்வுலக வாழ்க்கையில் “இறை அருள்’” என்று கொள்வதும் தகும். அதோடு, பறை என்ற கருவி மார்கழி நோன்புப் பூஜையின் ஒரு அங்கம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  //இற்றைப்பறைகொள்வான் அன்று… காண் கோவிந்தா// பாரு கண்ணா, இப்போதைய பறை (அன்பு, அருள், நெருக்கம்) மட்டும் போதாது,
  //எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் உந்தனோடு
  உற்றோமே யாவோம்//
  எப்போதும் அது வேணும், அதாவது எல்லாப் பிறவிகளிலும், அதற்கு அப்பாலும், அப்ப பரமபதம் தானே? :-))))))

  எ.அ.பாலா

 2. amas32 says:

  பாவை நோன்பிருந்து பறையை பெறுவோம்!

  amas32

 3. எல்லோருக்கும் ‘பறை’ கிடைக்கட்டும் !!

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s