0இ. திருப்பாவை Basics

திருப்பாவைக்கு அறிமுகமே தேவையில்லை. அத்துணைப் புகழ் பெற்ற நூல்.

தென்பாண்டி நாட்டில் தோன்றிய அமுதநூல்.
ஆண்டாள் என்று அன்போடு அழைக்கப்படும் கோதை நாச்சியார் அருளிய அருள் நூல்.
என்றென்றும் மாறாத அரும் பெருமை மிகு நூல்.
மார்கழித் திங்கள் தோறும் பாவையர் பாடி வாழ்த்தும் நூல்.

thiruppavai3கண்ணனையே தனது மன்னனாக எண்ணி இன்புற்று அந்த இன்பம் தமிழோடு கலந்து பொங்கிப் பெருகி வழிந்த திருப்பாக்களே திருப்பாவை என்று புகழப்படுகின்றன. ஒரு பெண்ணின் மனநிலையில் எழுந்த உயர்ந்த அகத்திணைப் பக்தி நூல்.

கோதையார் தென்பாண்டி நாட்டார். திருவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். ஆகையால் அவருடைய பாக்களில் தென்னாட்டுத் தமிழ்ச் சொற்கள் நிறையவே கலந்து மேலும் சுவைக்கும்.

மொத்தம் முப்பது பாக்கள். கண்ணன் மேல் காதல் கொண்டு ஆண்டாள் தொடுத்த தமிழ்ப் பூக்கள்.

காதலும் பக்தியும் கலந்து சிறந்து ஆண்டாள் தான் உய்யக் கொண்ட வகையில் பாடிய இந்த நூலுக்கு தனியன் எனப்படும் வாழ்த்துப்பாவை பின்னாளில் உய்யக்கொண்டான் எழுதியிருக்கிறார்.

அன்னவயற் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம்
இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை
பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

சூடிக் கொடுத்த சுடர் கொடியே
பாடி அருளவல்ல பல்வளையாய்
நாடி நீ வேங்கடவற்கு நம்மை விதி ஒன்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு

அன்னவயற் புதுவை ஆண்டாள் – நெல் விளையும் வயல்வெளிகளைக் கொண்ட திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஆண்டாள்
அரங்கற்குப் பன்னு திருப்பாவை – அரங்கனைப் புகழ்ந்து பாடும் இந்த திருப்பாவை
பல்பதியம் இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை – பதியம் என்றால் ஒன்றிருந்து ஒன்று உண்டாக்குவது. அப்படி ஒவ்வொரு செய்யுளாக உண்டாகப் பட்ட இந்தப் பல பாக்களைப் பாடிக் கொடுத்தாள்.

திருப்பாவையை ஆண்டாள் எப்படிக் கொடுத்தாராம்? ஏட்டில் எழுதியா? கல்லில் செதுக்கியா? இல்லை. சொல்லில் இழைத்துப் பாட்டாகக் கொடுத்தாராம். இறைவனை வழிபடச் சிறந்த வழிகளில் ஒன்று இறைவன் புகழைப் பாடுவது. ஆகையால்தான் ஆண்டாள் திருப்பாவையைப் பாட்டாகப் பாடினார்.

பூமாலைச் சூடிக் கொடுத்தாளைச் சொல்லு – அப்படி திருப்பாவையைப் படிக்கும் பொழுது ஒவ்வொரு நாளும் பூமாலையைக் கட்டிக் கட்டி தனது தோளிலிட்டு அழகு பார்த்து விட்டு பிறகு மாதவனுக்குச் சூடிய ஆண்டாளை நினைத்துக் கொள்ளுங்கள். இறைவன் பெயரைச் சொல்லும் பொழுதெல்லாம் அதனோடு சேர்த்து ஆண்டாளையும் சொல்வதிலொரு இன்பம்.

சூடிக் கொடுத்த சுடர் கொடியே – கேசவனுக்குப் பூமாலை சூடிக் கொடுத்த சுடர் கொடியே
பாடி அருளவல்ல பல்வளையாய் – அருமையாக பாட வல்லவளும் பலவித வளையல்களை கைகளில் அணிந்து கொண்டவளுமாகிய ஆண்டாளே
நாடி நீ வேங்கடவற்கு எம்மை விதி ஒன்ற இம்மாற்றம் நாங்கடவா வண்ணமே நல்கு – பாடியும் நாடியும் வேங்கடவனோடு நாங்கள் ஒன்று பட்ட விதியை என்றும் மாறாமல் இருக்கச் செய்வாய்.

பாடியும் நாடியும் வேங்கடவனை நாடியாயிற்று. உணர்வும் உயிரும் அவனோடு கலந்து ஒன்றாயிற்று. இந்த உணர்வு நிலையோடு நாளை முதல் ஒவ்வொரு திருப்பாவைப் பாடலாகப் பார்க்கலாம். அதற்குமுன் ஒருவரைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். அவர்தான் நாதமுனிகள்.

யாரிந்த நாதமுனிகள்? அவரைப்பற்றி ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?

ஆழ்வார்கள் அனைவரும் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இடங்களில் வாழ்ந்தவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் நமக்குக் கொடுத்த பாடல்கள் கால வெள்ளத்தில் எங்கெங்கோ போயின. அப்படிப் போன பாசுரங்களைத் தேடியெடுத்துத் தொகுத்த பெருமைக்குரியவர் நாதமுனிகள். அவர் இல்லையென்றால் திருப்பாவை இன்று நம்மோடு இல்லை.

காட்டுமன்னர்கோயிலில் இவர் பிறந்து வாழ்ந்திருந்த காலத்தில் ஆழ்வார்கள் அருளிய பாசுரங்கள் எங்கென்று தெரியாமல் மறைந்திருந்தன. ஒருநாள் காட்டுமன்னார்கோயிலில் நம்மாழ்வாரின் பாசுரங்களை யாரோ பாட, அதைக்கேட்டு நம்மாழ்வாரின் பாசுரங்களைத் தொகுக்க வேண்டும் என்று ஆசை கொண்டார் நாதமுனிகள். அந்தப் பாடலில் குருகூர் சடகோபன் என்று வந்ததால் திருக்குருகூர் சென்று எதாவது கிடைக்குமா என்று தேடிப்பார்த்திருக்கிறார். ஒன்றும் கிடைக்கவில்லை.

ஒரு வழி மூட மறுவழி திறப்பதுதானே கோவிந்தன் செயல். மதுரகவியாழ்வாரின் சீடனாக இருந்த பராங்குசதாரைச் சந்திக்கிறார் நாதமுனிகள். அவரிடமும் நம்மாழ்வார் பாசுரங்கள் இல்லை. மதுரகவியாழ்வார் அருளிய பிரபந்தங்களும் இல்லை. ஆனால் மதுரகவியாழ்வார் பராங்குசதாசருக்குக் கொடுத்த “கண்ணிநுண்சிறுத்தாம்பு” என்ற பிரபந்தம் மட்டும் அவரிடம் இருந்தது. அதை பன்னிரண்டாயிரம் முறை ஓதினால் நம்மாழ்வார் தோன்றி வேண்டியதைக் கொடுப்பார் என்றொரு நம்பிக்கை.

இந்த ஒருவழி பிரபந்தங்கள் வருவழியாக இருந்தால் நன்று என்று நினைத்து கண்ணிநுண்சிறுத்தாம்பு பாடல்களை பராங்குசதாசரிடம் உபதேசம் பெற்று, பன்னிரண்டாயிரம் முறை ஓதினார்.

Nathamunigalநம்பிக் கை வைத்தால் நம்பி நாராயணன் கைவிடுவானா? நம்மாழ்வாரும் வந்தார். பன்னிரு ஆழ்வார்கள் அருளிச் செய்த 3776 பாசுரங்களையும் தந்தார். நம்மாழ்வார் அருளிய பாசுர உபதேசம் நாதமுனிகளை பரமானந்த யோகத்தில் ஆழ்த்தியது. அவர் யோகத்திலேயே இருந்துவிட்டால் பாசுரங்கள் எப்படி மக்களைச் சேர்வது? வீரநாராயணபுரத்துக் காட்டுமன்னார் பெருமாள் நாதமுனிகளை அழைத்தார்.

அவரும் மீண்டும் காட்டுமன்னார்கோயிலுக்கு வந்து பிரபந்தங்களுக்கு இராகமும் தாளமும் இட்டு அதற்கேற்ப அபிநயமும் இட்டு எம்பெருமான் முன் ஆடினார். இப்படித் தொடங்கியதுதான் அரையர் சேவை. இவரால்தான் ஆழ்வார்களின் பாசுரங்கள் இன்றும் நம்மோடு இருக்கின்றன.

இந்த நாதமுனிகளின் பெயரனான ஆளவந்தாரின் பெயர்த்தியின் பிள்ளையாக வந்தவர்தான் ஸ்ரீவைஷ்ணவம் தழைக்கச் செய்த இராமானுசர் என்கிறது குருபரம்பரை.

இராமானுசரின் திருப்பாவைக் காதலை ஊரும் உலகமும் அறியும். திருப்பாவை ஜீயர் என்றே பெயர் வாங்கியவர் ஆயிற்றே.

ஒரு பாசுரத்தில் ஆண்டாள் திருமாலிருஞ்சோலையில் இருக்கும் அழகருக்கு நூறு தடாக்களில் அக்காரவடிசிலும் வெண்ணெய்யும் தருவதாக நேர்ந்து கொண்டாள்.

நாறுநறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கொலோ!

வாய் விட்டு பா இட்டுச் சொன்ன நேர்த்திக்கடனை தாய் இட்டு முடித்தாளோ என்று உடையவருக்கு ஒரு ஐயம். ஆண்டாளுக்காக தானே அந்த நேர்த்திக்கடனை முடிக்கிறார் அவர். திருமாலிருஞ்சோலை முழுதும் அன்று நிறைந்தது நெய் வாசம். சீனிவாசன் நாசியிலும் ஏறியது திகட்டா வெல்லச் சீனி வாசம்.

தான் நினைத்த கடனை தாம் முடித்த உடையவரை மதிக்க விரும்பிய ஆண்டாள், அவர் திருவில்லிபுத்தூர் வரும் பொழுது இன்னா கூறாத தன் நா எழுந்து “அண்ணா” என்று அழைத்தாளாம்.

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

5 Responses to 0இ. திருப்பாவை Basics

 1. Rajan says:

  Hi, can I share your posts via WhatsApp to our Friends?

 2. amas32 says:

  கதையாகச் சொல்கிறீர்கள் ஜிரா. அவ்வளவு சுவாரசியமாக உள்ளது. இதுவரை இத்தனை விரிவாகத் திருப்பாவை தொடக்கம் பற்றி படித்ததில்லை. படிப்பவர் மனத்தைப் பதப்படுத்தி திருப்பாவை சேவிக்க அடியவர்களை தயார் செய்கிறீர்கள்.
  ஜீராவில் ஊறிய குலோப்ஜாமுனாக ஒவ்வொரு திருப்பாவை விளக்கமும் இருக்கப் போகிறது. ஆவலுடன் காத்திருக்கிறோம்!

  amas32

  • GiRa ஜிரா says:

   நன்றிமா. தேடிப் படித்ததை உங்கள் எல்லாரோடும் பகிர்வதில் எனக்கும் மகிழ்ச்சி 🙂

 3. நன்று, ஜிரா, வாசித்து மகிழ்ந்தேன். 2 பாயிண்ட்ஸ்:

  1. நாடி நீ “”வேங்டவற்கு என்னை விதி”” என்ற இம்மாற்றம்
  நாங் கடவா வண்ணமே நல்கு — ஆண்டாள் மன்மதனிடம் தன்னை வேங்கடவனான கண்ணனுடன் சேர்ப்பிக்க வேணும் என வேண்டிக் கொள்வதாக நாச்சியார் திருமொழிப் பாசுரங்களில் வரும் –> தையொரு திங்களும்….வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே!
  ஆக, இதன் பொருள் இப்படியாகவும் சொல்லலாம்: (சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே!) நீ (காமனை) நாடி “என் வாழ்வை வேங்கடகிருஷ்ணனுடன் ஆவதாகச் செய்” என்பதாகச் சொன்ன இச்சொல்லை (இம்மாற்றத்தை), நாங்களும் பிறழாமல் பின்பற்றும் வகையில் (நாங்கடவா வண்ணமே) அருள்வாயாக (நல்கு)!
  2. //மதுரகவியாழ்வார் அருளிய பிரபந்தங்களும் இல்லை// அன்னார் அருளியது ஒரே ஒரு பிரபந்தமே, கண்ணி நுண் சிறுத்தாம்பு (11 பாசுரங்கள், நம்மாழ்வார் புகழ் பாடி). நாலாயிரத்தில், பரந்தாமன் மீது பாடப்படாதவை, இதுவும், ராமானுச நூத்தந்தாதியும் ஆகும்.

  கொசுறு: //ஒரு வழி மூட மறுவழி திறப்பதுதானே கோவிந்தன் செயல்// ஆமாம், வாலியே அன்று சொன்னார், “ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்” என்று :-))))))))

  அன்புடன்
  பாலா

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s