1. நீராட நேரம் நல்ல நேரம்

பனிப்போர்வை போர்த்திய மார்கழி அதிகாலை. முதலில் அகம் விழித்து பின்னர் முகம் விழிக்கிறாள் கோதை. அகத்தில் இருப்பவன் அவனல்லவா. உள்ளத்தில் என்னென்னவோ எண்ணங்கள். புத்தம் புதிதாய் ஒரு நோன்பு தொடங்கப் போகும் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியோடு எழுந்து கிணற்றில் இறைத்து நீராடுகிறாள்.

குளித்து முடித்துப் புறப்பட்டு இல்லத்தின் கதவைத் திறந்து வெளியே வருகிறாள். முன்பே சொல்லி வைத்தபடி தோழி அம்மங்கையும் புறப்பட்டுக் காத்திருக்கிறாள். கோதை சொல்லிக் கொடுக்கப் போகும் புதிய நோன்பு என்னவாக இருக்கும் என்று அவளுக்கும் ஒரு ஆர்வம்.

“கோதை, அடுத்து என்ன செய்ய வேண்டும்?”

“முதலில் நம்முடைய தோழிகள் அனைவரையும் துயில் எழுப்ப வேண்டும். பிறகு அவர்களை நீராடச் சொல்ல வேண்டும்.”

“ஏன் என்று கேட்பார்களே. அதுவும் இருள் விடியாத இந்தக் குளிர்காலையில்..”

”அதற்கு அவர்கள் ஆசையைத் தூண்டுவோம். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒன்று வேண்டியிருக்கும். இன்னும் கிடைக்காமல் இருக்கும் அந்த வரத்தைக் கொடுக்க வல்லவன் நாராயணனே என்று எடுத்துரைப்போம். நம்முடைய மகிழ்ச்சி நிலைத்திருக்க உறுதி சொல்லக் கூடிய கார்மேனியனை செங்கண்ணனை நிலவுமுகத்தானைப் பற்றி நான் சொல்வதைக் கேட்டு அவர்களையும் நினைவில் நிறுத்திப் புகழச்சொல்வோம். கேட்டது கிடைக்குமென்றால் பாட்டது பிறக்குமடி.”

“உண்மைதான். அவர்களும் குளித்து முடித்து எல்லோருமாகச் சேர்ந்து  கோயிலுக்குச் சென்று வழிபட்டால் போதுமா?”

“போதாது அம்மங்கை. அதைத்தான் ஒவ்வொரு நாளும் செய்கிறோமே. உள்ளமும் உணர்வும் ஒன்றுபட அந்தக் கண்ணழகனை நினைத்து உருக வேண்டும். அதுதான் சரியான வழிபாடு.”

“அது எப்படியடி நினைத்து உருகுவது? விளக்கமாகச் சொல் கோதை.”

”சொல்கிறேன். அதற்கு முன் என் கேள்விக்கு விடை சொல். நம்முடைய ஊர் எது?”

“வில்லிபுத்தூர்”

“தவறு. போகட்டும். நாமெல்லாம் யார்?”

“இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த சிறுமிகள்.”

“இதுவும் தவறு அம்மங்கை”

Keshav-1

Thanks to Keshav for sharing his painting.

”என் மூளையைக் குழப்பாதே கோதை. ஏற்கனவே உச்சந்தலையில் பனி இறங்கிக்கொண்டிருக்கிறது.”

“விளங்கச் சொல்கிறேன். நன்றாகக் கேளடி. நாம் எதுவாக விரும்புகிறோமோ அதுவாகவே நினைத்துக் கொள்ள வேண்டும்.  அப்போதுதான் நினைத்த காரியம் வெற்றியடையும். பாற்கடலில் தூங்கும் நாராயணன் மண்ணில் ஆயனாக அவதரித்து கரியவனாக சிறியவனாக விளையாடித் திரிந்தது எங்கென்று சொல்லேன்?”

“யமுனைக் கரையில் உள்ள ஆயர்ப்பாடி”

“ஆம். அந்த ஆயர்ப்பாடிதான் நம்மூர். நாமெல்லாம் ஆய்க்குலத்துச் சிறுமிகள். அப்படி உறுதியாக நம்பினால் அந்த ஆயன் மாயன் நம்மோடும் ஆடுவான். பாடுவான். நம் உறவை அவனும் நாடுவான். புதுவையை மற. யமுனையை நினை. என் கையைப் பிடித்துக் கொள். நாம் ஆயர்ப்பாடி சென்று நம் தோழிகளை எழுப்பி நீராடச் சொல்லலாம்.”

அம்மங்கையும் கோதையின் கைகளைப் பிடித்துக்கொள்ள.. இருவரும் ஆயர்ப்பாடிக்குள் நுழைகிறார்கள். கோதை பாடத் தொடங்குகிறாள்.

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் – மார்கழித் திங்கள் முழுநிலவுநாள். மிகவும் நல்ல நாள்!

சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் – சீர் மிகுந்து செழிக்கும் திருவாய்ப்பாடியைச் சேர்ந்த செல்வச் சிறுமிகளே! அழகு மிகுந்த அணிகலன்களைப் பூட்டிக் கொண்டுள்ள தோழிகளே!
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் – உடனே எழுந்து நீராடச் செல்லுங்கள். அப்படி நீராடி நமது பாவை நோன்பைத் துவக்கலாமா!

புறத்தூய்மை நீரால் அமையும்” என்று வள்ளுவர் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.  ஆகையால் காலை எழுந்து நீராடி அழுக்கு நீக்க வேண்டும். விடியலில் நீராடுவது மிகவும் நன்று. அது உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

இரவில் மனம் தன்வசமில்லாத பொழுது பல இடங்களுக்குச் செல்லும். அந்த நினைவுகள் காலை எழுகையில் இருந்தாலும் ஆண்டவனைத் தொழுகையில் இருக்கலாமா? அதனால்தான் விடியற்காலை நீராடல். தண்ணீர் தலை பட்டு மேல் திரண்டுக் கால் சேரும் பொழுது உடலும் உள்ளமும் உயிரும் குளிர்ந்து விழிப்படைகிறது. அப்படி நமது உயிரினை விழித்துக் கொண்டு தோழியரை விளித்துக் கொண்டு ஊரார் எல்லாம் நம்மைப் பெருமித்துப் புகழும் படியாகக் கண்ணனைப் படிந்து பாவை நோன்பைத் துவக்கச் சொல்கிறாள் கோதை!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் – நந்தகோபனை நீங்கள் அறிவீர்கள். ஆயர் தலைவன் அவன். கூரிய வேலைக் கையில் கொண்டு பாலூறிய பசுக்களைத் துன்புறுத்துவோரைத் துன்புறுத்துகின்ற அந்த நந்தகோபனின் இளங்குமரனே கண்ணன்.

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் – அழகிய நீள்விழி யசோதை இருக்கிறாளே, அவளுடைய சிங்கம் போன்ற இளைய மைந்தனே கண்ணன்.

கார்மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் – அந்தக் கண்ணன் கருத்த மேனியந்தான். சிவந்த கண்ணுடையவந்தான். ஆனாலும் குளிர்ந்து ஒளிர்ந்து மிளிர்ந்திடும் நிலவு முகமுடையான்.

நாராயணனே நமக்கே பறை தருவான் – அப்படிப் பட்ட அழகுக் கண்ணனே ஆதிமூலமான நாரணன். அவனே பரந்தாமன். நமக்கு வேண்டிய நன்மைகளுக்கெல்லாம் உறுதிமொழி தர வல்லான் அவனே.

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் – அந்த நாரணனின் புகழைச் சொல்கிறேன். ஊரும் உலகும் மெச்சும்படி நீங்களும் கேட்டு நெஞ்சத்தில் நிறுத்திப் பாடுங்களேன் எம்பாவாய்!

01
************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
போதுமினோ – விருப்பமுடையவர்கள்
மல்கும் – நிறைந்த
ஏரார்ந்த – ஏர் + ஆர்ந்த – அழகு நிறைந்த
படிந்தேலோர் – படிந்து + ஏல் + ஓர் – வணங்கிக் கேட்டு நினைவில் நிறுத்தி (ஏல் – கேள், ஓர் – நினைவு)
************************************************************************************************************************

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

5 Responses to 1. நீராட நேரம் நல்ல நேரம்

 1. pradeepkt says:

  கந்தர் அனுபூதி போல அடுத்து திருப்பாவையா? அருமை அருமை…

 2. அந்த ஆயர்ப்பாடிதான் நம்மூர். நாமெல்லாம் ஆய்க்குலத்துச் சிறுமிகள். அப்படி உறுதியாக நம்பினால் அந்த ஆயன் மாயன் நம்மோடும் ஆடுவான். பாடுவான். நம் உறவை அவனும் நாடுவான் — அவ்வளவு தான் மேட்டர் :-)))
  ஏரார்ந்த – ஏர் + ஆர்ந்த – அழகு நிறைந்த –> இங்கு ”ஆர்ந்த” என்ற சொல்லே அழகு, எம் தமிழுக்கு இணை உண்டோ, ஜிரா?

 3. amas32 says:

  தாமச குணம் தூக்கம். அது கழியத் தான் சில் என்று குளியல் என்று நினைக்கிறேன் :-} நம் மனத்தில் இருக்கும் தாமசத்தை விலக்கி சாத்விக குணத்தை ஏற்படுத்த கண்ணனை நினை மனமே என்கிறாள் நப்பின்னை!

  பிரமாதமாக உள்ளது பாடல் விளக்கமும், அதற்குத் தகுந்த கேஷவ் அவர்களின் கண்ணனின் வண்ண ஓவியமும்!

  amas32

 4. Saba-Thambi says:

  Your post is apt for this number

 5. வீரு says:

  அருமையான பதிவு. திரும்பத் திரும்பப் படித்து ரசித்தேன். ஒரு ஆவலில், இப்பாடலை மைய்யமாக வைத்து ஓரூ வெண்பா முயற்சித்தேன்.

  மாதமின்று மார்கழி, வானிலுண்டு பௌர்ணமி.
  காதலுடன் கோதைமகள், கண்ணன்மேல் கீதங்கள்
  பாட, துயில்கின்ற பாங்கியரை ஆற்றில்நீர்
  ஆட அழைத்தாள் அவள்.

  – இரு விகற்ப நேரிசை வெண்பா

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s