2. பாடுவேனடி தோழி பாடுவேனடி

கோதை பாடியழைக்கவும் இன்னும் சில தோழியர் துயிலெழுந்தார்கள். அவர்களும் நீராடி வந்து கோதையோடும் அம்மங்கையோடும் கூடினார்கள். அவர்களில் ஒருத்தி அலர்வல்லி. எல்லோர் மனதில் இருந்த கேள்வியை அவள் வாய்விட்டுக் கேட்டாள்.

”கோதை, நீ சொன்னபடி எழுந்தோம். குளித்தோம். உன்னோடு இங்கு சேர்ந்து வந்தோம். நீ சொல்லும் பாவை நோன்பை முறையாகச் செய்து முடிக்க எங்களுக்கும் விருப்பமுண்டு. ஆனால் செய்யும் வழி அறியோம். எங்களுக்கு மட்டுமல்லாமல் இந்த வையத்தில் வாழ்கின்ற அனைவருக்கும் புரியுமாறு பாவை நோன்பு கொள்ளும் முறைகளை விளக்கு.”

”கேளடி அலர்வல்லி. உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன். நீர்க்கடல் நிறைந்த உலகத்திலே பாற்கடலென்றும் ஒன்று உண்டு. அந்தக் கடலில் பாம்பணை மேல் உறங்குகிறான் பரமன். அவனுடைய திருவடிகளைப் போற்றி நாம் பாட வேண்டும்.”

“ஆகா. உள்ளம் குளிரக் குளிர மாயனைப் பாடுவோமடி தோழி. பாடுவோமடி.”

“நன்று. வனத்தில் மேயும் மாடு காக்கும் ஆயர் சிறுமியர் வாயும் பாடும் என்று காட்டுவோம். ஆனால் பாடுவதோடு முடிந்துவிடுவதில்லை நம் நோன்பு. இன்னும் சில கட்டுப்பாடுகளும் உண்டு.”

Keshav-2

Thanks to Keshav!

“அவை எவை என்று சொல் கோதை.”

”உண்ணும் உணவைச் சுவையாக்கும் நெய்யைத் தவிர்க்க வேண்டும். வாய் இனிக்கப் பருகும் பாலைத் தவிர்க்க வேண்டும். நாச்சுவையில் நாட்டம் குறைத்து ஆயவனைப் புகழும் பாச்சுவையில் திளைக்க வேண்டும்.”

”நல்லது. வேறென்ன செய்ய வேண்டும்.”

“நம் உடலழகு மேல் நமக்கிருக்கும் பெருமை மறைய வேண்டும். கண்ணில் மையெழுதாமலும் குழலில் மலர் சூடாமலும் இருக்க வேண்டும்.”

“புரிகிறது. அன்பு பழக வேண்டிய ஆண்டவனிடம் அழகு செல்லாது. நன்று. வேறு எதுவும்?”

“இன்னும் உண்டு. எப்போதும் செய்யக் கூடாதென்று மேலோர் சொன்னதையெல்லாம் மறந்தும் இப்போது செய்யக்கூடாது. குறிப்பாக கோள் சொல்லக் கூடாது. அது மிகவும் கொடியது.”

“கோதை, நீ சொன்னது அனைத்தையும் ஒப்புக் கொள்கிறோம். செய்யக் கூடாது என்று இத்தனை சொன்னாய். செய்ய வேண்டும் என்று ஏதும் உண்டா?”

“நல்ல கேள்வி கேட்டாய் அலர்வல்லி. சிறிதும் வழுவாமல் செய்ய வேண்டிய கடமைகளும் உண்டு. உதவியோ உணவோ நாடி வந்தவர்களுக்குக் கொடுக்க வேண்டும். நாடி வந்தவர்களுக்கு மட்டுமல்ல… நம்மை நாடி வர வழி இல்லாதவர்களைத் தேடிச் சென்றும் உதவ வேண்டும். அதுவும் இன்று மட்டுமல்ல என்றும் செய்ய வேண்டும். இப்படி பிச்சையும் ஐயமும் இடுவதோடு, ஆய்க்குலம் மேய்ப்பவனைப் பாடுவதே நாம் உய்வதற்கு உண்டான வழி என்பதை உணர்ந்து உவந்து கேட்டுக் கொள்ளுங்கள் தோழியரே! கேட்டதோடு நெஞ்சிலும் நிறுத்திக் கொள்ளுங்கள் பாவையரே!”

ஆண்டாள் விளக்கிச் சொல்லச் சொல்ல எல்லோருக்கும் பாவை நோன்பின் வழிமுறைகள் தெரிந்தன.

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ – ஆய்ப்பாடித் தோழிகளே! வாழ்வாங்கு இந்த உலகத்தில் வாழப் போகும் சிறுமிகளே! நாம் துவக்கிய இந்தத் தூய நோன்பைச் செய்யயும் வழிமுறைகளைகச் சொல்கிறேன் கேளுங்கள்.

பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி – பாற்கடலில் மெல்லத் துயில் கொண்ட அந்தப் பரமன் அடியைப் பாடுவோம்.

பைய என்பது தெற்கத்தித் தமிழ். இன்றும் பையப் போ என்பார்கள். பைய என்பது மெதுவாக என்று பொருள்படும். உறங்குவது போலும் சாக்காடு. உறங்கி விழிப்பது போலப் பிறப்பு என்கிறது திருக்குறள். இப்படி பையத் துயில்தல் என்பது உறங்கியும் உறங்காமலும் இருக்கும் பிறப்பு இறப்பு இல்லாத நிலையோ என்று எனக்குத் தோன்றுகிறது.

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் – நெய் உண்ண மாட்டோம். பாலருந்த மாட்டோம்

ஏன் நெய்யுண்ணோம்? நெய் சூடு. உடல் சூடானால் உள்ளமும் சூடாகும். மேலும் குளிர்காலத்தில் கொழுப்புச் சத்துகள் நிறைந்த உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அது உடலுக்கு நன்று. ஏன் பாலுண்ணோம்? பாலினும் சுவையான தமிழ்ப் பாவினைப் பாடுகையில் பாலும் சுவையாகுமா? இல்லை சுவைக்கத்தான் ஆகுமா?

நாட்காலே நீராடி – நாள்தோறும் விடியலில் நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் – கண்களில் மை தீட்ட மாட்டோம். கூந்தலில் மலர் சூடிக்கொள்ள மாட்டோம்.

கண்களுக்கு அஞ்சனம் தீட்டோம். ஏன் தெரியுமா? அந்த அஞ்சனத் திரட்டுகளால் இளைஞர்களின் உள்ளங்களைத் திரட்டுங்கள் என்று எங்கள் உள்ளம் நினையாமல் இருக்கத்தான் அப்படி. மலரிட்டும் முடியோம். வாடைக் காலத்தில் தூது செலுத்த வாடைப் பூவையா சூட்டுவோம்! ஒரு மலராயினும் அது நறுமலராயின் அதில் சுகம் பெறுமலராகக் கருதிச் சூடோம். பாருங்கள்…சூடிக் கொடுத்தவளே சூட மாட்டோம் என்கிறாள்.

செய்யாதன செய்யோம் – சான்றோர் பழிக்கும் செயல்கள் எதுவும் செய்ய மாட்டோம்
தீக்குறளைச் சென்றோதோம் – தீமையை உண்டாக்கும்படி யாரிடமும் சென்று கோள் சொல்ல மாட்டோம்

தீக்குறளைச் சென்றோதோம் என்பதைப் பலர் திருக்குறள் என்று தவறாகப் பொருள் கொள்கின்றனர். குறளி சொல்வது என்பது தெற்கு வழக்கு. இன்றைக்குள்ள வழக்கில் அது கோள் சொல்வது. கோள்மூட்டுவது மிகக் கொடிய பாவம். அதை என்றைக்கும் செய்யக்கூடாது.

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி – நாடி வந்தவருக்கும் நம்மை நாடி வர இயலாதவர்களைத் தேடிச் சென்றும் உதவ வேண்டும்.

பிச்சை என்றால் நம்மைத் தேடி வருகின்றவர்களுக்கு இடுவது. ஐயம் என்பது நம்மை நாடி வரவும் முடியாமல் இருக்கின்றவர்களை நாமாகத் தேடிச் சென்று உதவுவது. அதைத்தான் ”ஐயமிட்டு உண்” என்றாள் பிற்காலத்து ஔவை ஒருவள்.

உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய் – (அந்த ஆயர் தலைவனைப் பாடிப் பணியும் வழியே) நாம் உய்யும் வழி என்பதை மகிழ்வோடு கேட்டு நினைவில் நிறுத்திக் கொண்டு நோன்பைத் தொடர்வாய் எம்பாவாய்!02

************************************************************************************************************************

அருஞ்சொற்பொருள்
வையம் – உலகம்
கிரிசை – வழிமுறைகள்
பைய – மெதுவாக (அல்லது அரைகுறையாக)
தீக்குறள் – தீய குறளி (கோள் சொல்வது)
ஐயம் – தேடிச் சென்று செய்யும் உதவி
பிச்சை – நாடி வந்தவருக்குச் செய்யும் உதவி
ஆந்தனையும் – ஆம் + தனையும் – இந்த எடத்தில் எப்போதும் என்று பொருள் கொள்ளலாம்
உகந்தேலோர் – உகந்து + ஏல் + ஓர் – மகிழ்வோடு கேட்டு(ஏல்) நினைவில் நிறுத்தி(ஓர்)

************************************************************************************************************************

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

7 Responses to 2. பாடுவேனடி தோழி பாடுவேனடி

 1. குறள் என்ற வார்த்தைக்கு “சொல்” என்று அர்த்தமோ? “திருக்குறள்” – மேன்மை நிரம்பிய சொல் (சொற்கள்) “தீக்குறள்” – தீய சொற்கள். என் புரிதல் சரியா?

 2. ஜனரஞ்சகமாக சொல்லியுள்ளீர்கள், நன்று….

  //பிச்சை என்றால் நம்மைத் தேடி வருகின்றவர்களுக்கு இடுவது. ஐயம் என்பது நம்மை நாடி வரவும் முடியாமல் இருக்கின்றவர்களை நாமாகத் தேடிச் சென்று உதவுவது. அதைத்தான் ”ஐயமிட்டு உண்” என்றாள் பிற்காலத்து ஔவை ஒருவள்.//

  அருமையான விளக்கம், வாழ்க.

  பையத் துயில்தல் – மென்மையான உறக்கம், ரொம்பவும் கண்ணயராமல், அதே நேரம் இளைப்பாறிக் கொண்டே எல்லாவற்றையும் கண்காணிப்பது, முக்கியமாக அடியவரையும், (அல்லாதாரையும் கூட …… ஏன்? கூடாரையும் வெல்லும் கோவிந்தன் அவன்!) “காத்தல்” …. அவன் பணி … இதுவே யோக நித்திரை !

  நெய்யுண்ணோம் பாலுண்ணோம் – இன்னொரு சுவையும் உண்டு. ஆயனும், மாயனும் ஆன கண்ணனுக்கு மிக மிக உகந்த விஷயங்கள் 3, நெய், பால், தயிர்…. இந்த ஆய்ச்சியர் அதையே நோன்பின்போது துறக்கின்றனர்.

  உய்யுமாறு எண்ணி — (பரமபதத்துக்கான) உய்யும் வழியை ”முதலில்” நினைக்க வேண்டும், (என்ன நினைக்கணும்? அதுவே, நிலையானது, மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து சிற்றின்பத்தில் திளைப்பது அன்று!!! ஆக, அதுவே என் குறிக்கோள் என்பதை உறுதியாக மனதில் பற்ற வேண்டும்)
  அப்றம் தான் அதற்கான செயல்பாடு –> நோன்பு வழி பூரண சரணாகதி

  குறள் – கோள் மட்டுமல்ல, பொய், தீய சொற்களும் கூட

  அன்புடன்
  பாலா

 3. amas32 says:

  நீங்கள் கொடுக்கும் தலைப்பே அலாதி ஜிரா 🙂 நாம் மௌன விரதம் இருக்கும்போது பேசுவதை மட்டும் கட்டுப்படுத்தினால் போதாது, நாவல் சுவைப்பதும் கூடாது. அதாவது உண்ணா நோன்பும் அதில் அடக்கம்! இந்தப் பாவை நோன்புக்கும் முதல் தேவை இவ்விரு வகையான நாவடக்கமமுமே!

  பெண்களுக்கே உள்ள பிறவி குணம் நிறைய பேசுவது, அதோடு இன்னொருவரைப் பற்றி கதை பேசுவதில் ஆர்வம் அதிகம். அதை முக்கியமாகச் செய்யாதே என்கிறாள் ஆண்டாள். ஏனென்றால் பேச ஆரம்பித்து விட்டால் பேச்சு இன்னதென்று இல்லாமல் பிறரை குறை கூறுவதில் போய் முடியும்!

  இவ்வாறான உள்ளக் கட்டுப்பாடு மனத்தைத் தூய்மையாக்கும், இயல்பாகவே அங்கு கண்ணன் வந்து குடி கொள்வான்.
  ஆண்டாள் திருவடிகளே சரணம்.

 4. வீரு says:

  மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன். ஆண்டாளின் தோழிகள் பெயர்கள் எல்லாம் ரசனையோடு வைத்திருக்கிறீர்கள். இப்பாடலைப் படித்து இதன் பாதிப்பில் அடியேன் எழுதிய ஒரு வெண்பா.

  நெய்,பால்,உண் ணாதிருந்து, நேரத்தே நீராடி
  மெய்,மேல்,மை பூசூடா(து), ஐயமிட்டு – பொய்புரளி
  போற்றாது, ஆயன் புகழ்பாடி, பக்தியுடன்
  நோற்போமே பாவையர் நோன்பு.

  – இரு விகற்ப நேரிசை வெண்பா

  • GiRa ஜிரா says:

   நன்றி வீரு. தோழிகளுக்கு வைத்திருக்கும் பேருக்கும் பாசுரங்களும் தொடர்பு இருக்கும். குறிப்பாக ஆறாம் பாசுரம் தொடங்கி பத்து பாசுரங்களில். 🙂

  • GiRa ஜிரா says:

   அழகான வெண்பா. இது போல நிறைய எழுதவும்.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s