3. நீங்காத செல்வம் நம்மோடு

”கோதை, பாவை நோன்பைப் பற்றியும் அதன் வழிமுறைகளையும் தெரிந்து கொண்டோம். இப்படியெல்லாம் செய்வதால் என்ன நடக்கும்? நமக்கும் என்ன கிடைக்கும்?”

“என்ன கிடைக்கும் என்றா கேட்கிறாய் தோழி? கிடைப்பதையெல்லாம் சொல்ல என்னால் முடியுமா? ஆனாலும் சொல்கிறேன் கேள். நெல் விதைத்தால் பயிராய் நெல் விளையும். சொல் விதைத்தால் எதிராய்ச் சொல் விளையும். ஆனால் உலகளந்த உத்தமன் பெயரை நம்முள் விதைத்தால் துயர் களையும். உயர்நிலையும் நமை அடையும்.”

”உலகளந்த உத்தமன் கதை நானறிவேன் கோதை. மாவலியிடம் மூன்றடி நிலம் கேட்டு, ஓரடியால் மண்ணும் ஈரடியால் விண்ணும் அளந்து மூவடிக்கு வகை கேட்ட கதை. வாமனனின் தாவடிக்கு மாவலி தன் தலை கொடுத்து, சேவடி அழுத்த பாதாளம் போன கதை. சரிதானே கோதை?” குறிக்கிட்டுக் கேட்டாள் இளவெயினி.

அவள் ஆர்வம் கண்டு மெலிதாகச் சிரித்தாள் கோதை. “சரிதான் வெயினி. நீ சொன்னது மிகச்சரிதான். ஆனால் என்னிடம் ஒரு கேள்வி உண்டு. அதற்கும் விடை சொல்வாயா?”

“சொல்கிறேன் கோதை.”

”படியளப்பவர் என்றால் யார்?”

“படியளப்பவர் என்றால் உணவு கொடுப்பவர். அதாவது படியால் அளந்து நெல் முதலான பொருட்களைக் கொடுப்பதால் அந்தப் பெயர் வந்தது.”

அப்படியென்றால் உலகளப்பவர் என்றால் யார்? அளந்து எடுப்பவரா? அளந்து கொடுப்பவரா?

திகைத்துப் போனாள் இளவெயினி. அவள் மட்டுமல்ல. மற்ற பாவையரும் தான்.

“உலகளப்பது என்றால்.. என்றால்… உலகைக் கொடுப்பதா?”

“ஆம். அப்படியும் பொருள் கொள்ளலாம். நமக்கெல்லாம் இந்த உலகைக் கொடுத்தவன் அந்த நாராயணன். உலகம் என்றால் அதில் அனைத்தும் அடக்கம். அப்படி எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்கும் நாராயணன் ஓங்கி உயர்ந்து பெரியதினும் பெரியவனாகத்தானே இருக்க வேண்டும்.”

Keshav-3

Thanks to Keshav!

“ஆம். கோதை. இப்படிப் பொருள் கொள்வதும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. நான் இரண்டு விதமாகவும் பொருள் எடுத்துக் கொள்கிறேன். ஆனாலும் இறைவன் அளந்து எடுப்பவன் என்பதை விட நல்லதையெல்லாம் அளந்து கொடுப்பவன் என்று பொருள் கொள்வதும் அழகாகத்தான் இருக்கிறது. சரி. தொடர்ந்து சொல்வாய் கோதை.”

”உலகளக்கும் உத்தமன் பெயரைப் பாடிப் புகழ்ந்து பாவை நோன்பு நோற்றால், நாடு முழுவதும் மாதம் மும்மழை பெய்யும். அதுவும் அளவுக்கு மீறிப் பெய்து தீமையாக முடியாமல், தேவையான அளவு முறையாகப் பெய்யும். நீர்வளம் பெருக வயல் வளம் பெருகும். செந்நெல் செழித்து வளர்ந்த வயல்களின் ஊடாக மீன்கள் துள்ளி விளையாடும். மலர்ந்திருக்கும் குவளைப்பூக்களில் வண்டுகள் மகரந்தம் உண்ணும். நம்முடைய கோவர் இனத்தவர் பசுக்களின் மடி பற்றி இழுக்க பாலமுது குடம் குடமாக நிறையும். அதன் மூலம் இதுவரை யாரும் வாங்காத செல்வம் நம்மோடு நீங்காது இருக்கும். இப்படியெல்லாம் பரமன் நமக்குக் கொடுக்கும் பலன்களைக் கேட்டுக் கொள்ளுங்கள். கேட்டு உள்ளத்தில் இருத்திக் கொள்ளுங்கள் எம் பாவையரே!”

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாமும் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி – ஓங்கி வளர்ந்தானே! உலகம் அளந்தானே! அந்த உத்தமனுக்கு எத்தனையெத்தனை பெயர்கள்! அத்தனையத்தனை பெயர்களையும் பாடி

நாமும் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் – (இறைவன் பெயர்களைப் பாடி) நீராடி பாவை நோன்பு நோற்றால் நடப்பதென்ன..(தெரியுமா?)

ஒரு செயலைச் செய்யும் பொழுது அந்தச் செயலினால் விளையும் நன்மைகளை அடுக்குவது மற்றவர்களையும் அந்தச் செயலைச் செய்யத் தூண்டும். ஆகையால்தான் பெருநோன்பு துவக்குகையில் மற்ற தோழிகளையும் ஊக்குவிப்பதற்காக பாவை நோன்பு நோற்பதன் பயன்களைப் பட்டியலிடுகிறார் ஆண்டாள்.

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து – (மூவடியில் முழுவுலகும் அளந்த அனந்தனின் புகழைப் பாடி நோன்பு நோற்றால்) நாடெங்கும் ஒவ்வொரு திங்களும் பெய்ய வேண்டிய மும்மாரி தீங்கின்றி பொழியும்.

ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயலுகளப் – (அப்படி தவறா மழை பொழியும் பொழுது) வயல்வெளிகளெங்கும் செந்நெல் விளைந்திருந்து கதிர் முற்றும் முன் பால் பிடிக்கும் பருவத்தில் அழகிய கயல் மீன்கள் பயிர்களுக்குள் புகுந்து ஊடாடும்.

பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்பத் – பூத்திருக்கின்ற குவளை மலர்களின் மத்தியில் மெத்தையில் படுத்துக்கொண்டு வண்ணப் பொறியெனப் பறக்கும் அழகிய வண்டுகள் அளவிளாத தேன் பருகிக் கண் செருகிக் கிடக்கும்.

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் – ஆயர்கள் மடியில் கை வைத்து சீர் மிகுந்து பருத்த முலைகளைப் பற்றிப் பீய்ச்சவும், அசையாது நின்றிருந்து வைத்த குடம் நிறைக்க நிறைக்கப் பால் கொடுக்கும் வள்ளல் பசுக்கள்

பசுக்கள் யாரையும் மடி தொட விடாது. தேர்ந்த நல்ல ஆயரே பசுவிடம் பால் பெற முடியும். அப்படிப் பால் கறக்கையில் பசுக்கள் வெருவிப் பதறினால் ஆயர் துணுக்குற்று விரைவாகக் கறந்து செல்ல முயல்வர். அதனால் முழுமையான பலனைப் பெற முடியாது. அதைத் தவிர்க்கவே பசுக்கள் தேங்காதே புக்கிருந்து (அசையாதே நின்றிருந்து) ஆயர் முழுமையாகப் பயன் பெறும் வகையில் பால் கொடுக்குமாம். அதனால்தான் அவைகளை வள்ளல் என்று புகழ்கிறார் ஆண்டாள். தமிழில் மாடு என்றால் செல்வம். பசு மாடுதானே. ஆகையால்தான் நீங்காத செல்வம் என்றும் புகழ்கிறார்.

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய் – (மாதம் மும்மழை, செந்நெல் செழித்து மீன் விளையாடும் வயல்கள், தேன் நிறைந்த மலர்கள், குடம் நிறைக்கும் பாற்பசுக்கள்) என்னும் என்னும் நீங்காத செல்வம் நிறைந்து மகிழவைக்கும் உத்தமன் பெருமையைக் கேளுங்கள். மனதில் பதியுங்கள் எம் பாவையரே!

நல்லவர்கள் ஒரு செயலைச் செய்யும் பொழுது அதன் பலன் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள். அனைவருக்கும் அது சேர வேண்டும் என்றே விரும்புவார்கள். “யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்பதே தமிழ் மரபு அல்லவா. அந்த மரபில் வந்த கோதையும் உலகம் முழுவதும் உய்ய வேண்டும் என்று நோன்பு கொள்வதில் வியப்பென்ன இருக்க முடியும்! நாடெல்லாம் மழை பெய்து நிலவளமும் மீன்வளமும் தேன்வளமும் பால்வளமும் செழிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தை வியக்க வேண்டாம். அது தாயுள்ளம்.03

************************************************************************************************************************

அருஞ்சொற்பொருள்
குவளைப் போதில் – குவளை மலரில்
தேங்காதே புக்கிருந்து – அசையாமல் நின்றிருந்து
நிறைந்தேலோர் – நிறைந்து + ஏல் + ஓர் – நிறைந்து கேட்டு(ஏல்) நெஞ்சில் நிறுத்தி(ஓர்)

************************************************************************************************************************

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

4 Responses to 3. நீங்காத செல்வம் நம்மோடு

 1. amas32 says:

  நாம் பெரியவர்களை வணங்கும் பொழுது இந்தப் பாசுரம் சொல்லி பலரும் வாழ்த்துவர். இப்பாசுரத்தின் மகிமை அவ்வாறு!

  உலகத்தை உண்டு உமிழ்ந்தவனும் அவனே, அளந்து எடுத்தவனும் கொடுத்தவனும் அவனே. மிக மிக அருமையான பாசுரம், அழகிய விளக்கம் + ஓவியங்கள்.

  amas32

 2. மிக நன்று பாசுர விளக்கம், குறிப்பாக, ”தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி”…. இதில் சொல்ல ஒரு கருத்து தான்:

  முதல் 2 பாசுரங்களில், பரமபத நாராயணனையும், திருப்பாற்கடல் பரமனையும் (பையத்துயின்ற பரமன்) பாடிய சூடிக்கொடுத்த நாச்சியார், 3வதில், த்ரிவிக்கிரம அவதாரத்தைப் போற்றுகிறாள். இராமன், கிருஷ்ண அவதாரங்களை விட சிறப்பு இதற்கு இருப்பதாலேயே, ”ஓங்கி உலகளந்த உத்தமன்” என்கிறாள், பெருமாளை உத்தமன் என்கிறாள், குற்றம், குறை எதுவுமே இல்லாதவனே அந்த புருஷ உத்தமன் -> புருஷோத்தமன்… ஆழ்வார் பெருமக்கள் அனைவரும் வாமன அவதாரத்தை வெகுவாகப் பாசுரங்களில் போற்றிப் பாடியுள்ளனர். மேலும், முதல் 3 ஆழ்வார்கள் (பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்) ஒன்றாகச் சந்தித்து திவ்வியப் பிரபந்தத்தின் முதல் 3 திருவந்தாதிகளைப் பாடிய புண்ணியத்தலம், பரந்தாமன் திரிவிக்ரம கோலத்தில் அருள் பாலிக்கும் திருக்கோவலூர் திவ்விய தேசமாகும்.
  எ.அ.பாலா

  • GiRa ஜிரா says:

   அழகான கருத்து. அந்த இடைக்கழி கதையைக் கேள்விப்பட்டிருக்கேன். வையமே தகழியா.. அன்பே தகழியே.. திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்..

   திருக்கோவிலூர் போனதில்ல. போய்ப் பாக்கனும்.

 3. வீபா says:

  மிக எளிமையான விளக்கம். உமது விளக்கத்தை அடிப்படையாக வைத்து இயற்றப்பட்ட வெண்பா

  பிழையிலா மாமழை பெய்யும்; கதிர்நெல்
  தழைக்கும்;பூ வில்,வண்டு தங்கும்; – முலைப்பசுவில்
  பால்மிகும், ஆகியவை பாற்கடல் துஞ்சுபவன்
  பால்கொள்ளும் நோன்பின் பலன்.

  – இருவிகற்ப நேரிசை வெண்பா

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s