4. அழகிய மேகங்கள் வானத்தில்

“கோதை, நாராயணனின் கருணையை நாங்கள் முன்பே அறிவோம் என்றாலும், நீ எடுத்துச் சொல்லும் பொழுது இன்னும் இனிமையாக இருக்கிறது. இப்படி செவியால் கேட்டு நம்மைப் போல் உள்ளத்தால் நச்சினார்க்கு இனியானைப் பார்த்தவர் யாரும் உண்டோ? நீ கண்டதுண்டா? நாங்களும் காண முடியுமா?” ஆவலைச் சொன்னாள் அலர்வல்லி.

“அடி வல்லி, கண்டவர் பலருண்டு. ஆனால் கண்டதை உணர்ந்தவர் சிலரே.  நானும் பார்த்திருக்கிறேன். நீயும் பார்த்திருக்கிறாய்.”

“நானா? அது எப்பொழுது?”

”சொல்கிறேன். அதற்கு முன்பு பரமனின் அடையாளங்கள் என்று நான் சொன்னவற்றை சற்று நினைவுபடுத்து.”

“ம்ம்.. திருமுடி முதல் திருவடி வரை கார்மேனி என்று நீ சொன்னது முதலில் நினைவுக்கு வருகிறது. விரிந்த அழகான தோள். சுழலும் சக்கரப்படை, வலம்புரிச் சங்கம், சார்ங்கம் என்னும் வில்…

Keshav-4

Thanks to Keshav!

“நன்று. மழைக்காலத்தில் கடலிலுள்ள நீரையெல்லாம் முகந்து கொண்டு வெண்மேகங்கள் கருக்கும். அந்தக் கார்மேகங்கள் தான் நம் முதல்வனின் கார்மேனி. அதை நீ கண்களால் கண்டாய்.

அந்த கார்மேகங்கள் உரசும் போது மின்னல் தெறிக்கும். அந்த மின்னலைப் போல் ஒளிர்வதுதான் அவன் கையிலிருக்கும் சக்கரப்படை. அதையும் நீ கண்டாய்.

மின்னலுக்குப் பின் வருவது அதிரும் இடி. அதுதான் நாரணன் கையிலிருக்கும் வலம்புரிச் சங்கின் ஒலி. அதை நீ செவியால் கேட்டாய்.

அதைச் தொடர்ந்து சிதறி விழும் மழைத்துளிகளே திருமாலின் சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் சரங்கள். மழையில் நனையும் போது அதை நீ தீண்டினாய்.

அந்த மழை மண்ணைச் சேரும் போது எழும் மண்வாசனையை உன் நாசியால் நுகர்ந்தாய்.

இப்படி ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் நம் வாழ்க்கைக்குத் தேவையான வேளாண்மைத் தொழில் சிறக்கும். அதுதான் அவன் கருணை. அதை எப்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறாய் என்பது இப்போது புரிந்ததா தோழி?”

”அலர்வல்லிக்கு மட்டுமல்ல எங்களுக்கும் நன்றாகப் புரிந்தது கோதை. அதோடு அந்தக் கருணை மழை தவறாமல் பெய்வதால்தான் நாமும் பாவை நோன்புக்காக மார்கழி நீராட முடிகிறது” என்றாள் அம்மங்கை.

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழி உள்புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிந்தேலோர் எம்பாவாய்

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் – ஆழி மழைக் கண்ணா, நீ எதையும் ஒளித்து எங்களுக்குக் குறை வைக்காதே

ஆழி உள்புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி – ஆழமான ஆழியில் (நிறைந்து ததும்பும் உப்புதல் கொண்ட) நீரை முகந்து உப்புதல் கொண்டு ஆர்ப்பரித்து விண்ணில் ஏறிடும் மேகங்கள்

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்துப் – (அப்படி விண்ணில் ஏறிடும் மேகங்கள்) ஊழி முதல்வனான உந்தன் மேனியைப் போலவே கருத்து விண்ணை மறைத்து நிற்கும்

பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில் – விரிந்த அழகான தோள்களை உடைய பத்மனாபன் ஆகிய உனது கையில் இருக்கும்..

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து – உனது சக்கரப் படையைப் போல மின்னிடும் அந்த மேகங்கள். மங்கலமாய் ஒலிக்கும் உனது வலம்புரிச் சங்கைப் போல அதிர்ந்து இடி இடிக்கும்.

தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் – மின்னலோடும் இடியோடும் நின்று விடாமலும் காலம் தாழ்த்தாமலும், உனது கையிலிருக்கும் சார்ங்கம் என்ற வில்லிலிருந்து பொழியப்படும் இடைவிடாத அம்புகளைப் போல சரஞ்சரமாய் மழை பெய்து

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் – இந்த உலகத்தில் நாங்கள் அனைவரும் வாழ்ந்திடும் வகையில் மழையாகப் பொழிய வேண்டும்

மார்கழி நீராட மகிந்தேலோர் எம்பாவாய் – அப்பொழுதுதான் நீர்வளம் பெருகி இந்த மார்கழி மாதத்தில் நாங்கள் நீராடித் தூய்மையாவோம். இதை மகிழ்ச்சியோடு கேட்டு உணர்வில் உறைய வைத்துக்கொள்ளுங்கள் எம்பாவையரே!

கண்ணனே! கடலுக்கும் மழைக்கும் மன்னனே! நீ எங்களுக்கு வேண்டிய எதையும் ஒளித்து வைக்காமல் அருள் புரிவாய். நாங்கள் நோன்பு துவக்குகிறோம். உன்னருளின்றி ஒன்றும் ஆகாது. துவங்கும் நோன்பும் தூய்மையாகத் துவங்க வேண்டும். உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதும் நீர். உடலைத் தூய்மைப்படுத்துவதும் நீர். எங்களைக் காக்க நீரே வரவேண்டும். நீராகவும் வரவேண்டும்.

இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பும் உண்டு. நோக்குமிடமெங்கும் இறைவனைக் கண்டவள், கேட்கும் ஒலியெல்லாம் இறைவனைக் கேட்டாள். இறைவன் புலன்களுக்கு எட்டாதவன் என எப்படிச் ஒப்புக்கொள்வது? பார்க்கும் பார்வை. கேட்கும் ஒலி. நுகரும் நாற்றம். உணரும் தீண்டல். பேசும் மொழி என்று ஐந்து புலன்களின் வழியாகவும் நாம் உணர்ந்து கொண்டிருப்பது இறைவன் கருணையல்லவா. ஆகையால்தான் மழை மேகங்களைப் பார்த்ததும் இடியிடித்து மின்னியதும் கண்ணன் நினைவில் ஆழ்கின்றாள் ஆண்டாள். அதனால்தான் வைணவ அடியவர்களை ஆழ்வார் என்பர்.04

************************************************************************************************************************

அருஞ்சொற்பொருள்
ஆழி – கடல்
கைகரவேல் – கையால் மறைத்தல்(ஒளித்து வைத்தல்)
பாழியம் தோளுடை – பாழி + அம் + தோள் + உடைய – விரிந்த அழகிய தோள் உடைய
பற்பநாபன் – பத்மநாபன் – பத்மம் + நாபன் – தொப்புளில் தாமரைப்பூ மலர்ந்தவன்
ஆழி – சக்கரம்
தாழாதே – ஓயாமல்

************************************************************************************************************************

என் குறிப்பு
இந்தப் பாடலில் வரும் “ஆழிமழைக் கண்ணா” என்பதில் வரும் கண்ணன் என்பது வருணனைக் குறிக்கும் என்று சில விளக்கங்களில் படித்தேன். மழை பொழிவது என்பது ஐம்பூதங்களும் இணைந்து நிகழும் ஒரு அற்புத நிகழ்வு. மண்ணில் இருக்கும் நீர் வெப்பத்தால் ஆவியாகி விண்ணேகி, அங்கிருந்து காற்றால் குளிர்ந்து மீண்டும் மண்ணுக்கே வரும் நிகழ்வு. ஆக ஐந்து பூதங்களுக்குமான தலைவன் இறைவனே என்பதால் ஆழிமழைக் கண்ணா என்று ஆண்டாள் திருமாலையே அழைப்பதாக நான் பொருள் கொண்டேன்.

இன்னொரு விளக்கத்தில் “ஆழிமழைக் கண்ணா” என்பது “ஆழி மழைக்கு அண்ணா” என்று பிரிக்கப்பட்டு நான் மேலே சொல்லிய விளக்கமே கொடுக்கப்பட்டிருந்தது. என்னறிவுக்கு எட்டிய வகையில் அப்படியெல்லாம் பிரிக்காமலே மேற்சொன்ன பொருள் வருவதால் அதைப் பதிவில் குறிப்பிடாமல், இங்கு தனியாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

************************************************************************************************************************

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, திருப்பாவை, விஷ்ணு and tagged , . Bookmark the permalink.

5 Responses to 4. அழகிய மேகங்கள் வானத்தில்

 1. Kamala says:

  ஆழ்வார் என்ற பெயருக்கு விளக்கம் அழகு. நீங்களே கோதையாகிப் பேசுகிறீர்கள்.

 2. amas32 says:

  ஐம்பொறிகளின் மூலம் ஐம்பூதங்களினால் வரும் இடி மின்னல் மழையை உணர்கிறோம். எல்லாம் அவன் செயல். கொடுப்பதும் அவனே, அனுபவிக்க வைப்பதும் அவனே. உபநிஷத்களில், கீதையில் சொல்லப்படுகின்ற கடினமான ஆன்மிக விளக்கங்களை திருப்பாவையில் எளிய தமிழில் சொல்கிறாள் கோதை. அதற்காக நாம் அவளுக்கு என்றென்றும் கடமை பட்டிருக்க வேண்டும்.

  amas32

 3. nomystery says:

  Can you translate to … ?

 4. ஆஹா, ஐம்புலன்களுக்கும் மழையானது நல்லின்பம் சேர்ப்பதை அழகாகக் கூறியுள்ளீர்கள், ஜிரா.. கண்ணுக்குக் கருமேகம்(காளமேகனின் திருவுரு), மின்னல்(சக்கரம்), காதுக்கு இடியொலி(சங்கு), நாசிக்கு மண் வாசனை(பரமனின் துளசி வாசனை போலவே), தீண்டலுக்கு மழைத்துளி (அவன் அரவணைப்பு), மழைப்பயனாக, நெற்பயிர்களும், காய், பழங்களும் மண்ணில் செழித்து வர, அவற்றை உண்பதால், நாவுக்கும் இன்பம், உடலுக்குத் தேவையான சக்தி (ஆக, இதுவே பூவுலக மக்களைக் காத்தல்) 🙂 இன்னும் ஒரு பாயிண்ட்…

  தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் – ஸ்ரீராம அண்ணலின் வில் சார்ங்கம். ஏகபத்தினிக்காரன் என்பதாலேயே இராமன் ”மனத்துக்கினியவன்” (மனத்துக்கினியானை பாடவும் நீ வாய் திறவாய் என்று இன்னொரு பாசுரத்தில் வருகிறது அல்லவா?) அதனால் தான் அவ்வில்லின் அம்புகளுக்கு ஒப்புமையாக பூமிக்கு பெருங்கொடையான “தாழாமல்” பெய்யும் மழைநீரைச் சொல்கிறாள் கோதை நாச்சியார்.
  அதே போல ….“வாழ” உலகினில் பெய்திடாய் …..என்கிறாள், இதிலும் நயம் உள்ளது. அனைத்து ஜீவராசிகளும் சிறப்பாக வாழ்வதற்கு மழை வேண்டும், ஆனால் அளவாகப் பெய்யும் மழையே காக்கும் தன்மை கொண்டது. “மழையே, நாங்கள் வாழப் பெய்தல் வேண்டும், தாழ அல்ல” என்று வேண்டுகிறாள் ஆண்டாள். அதாவது, இப்போது சென்னையில் பெய்த பெருமழை போல் பெய்தால், அது அழிவையே ஏற்படுத்தும், இல்லையா?

  அன்புடன் பாலா

  • GiRa ஜிரா says:

   இப்படியெல்லாம் எடுத்து எழுதுனா நான் படிச்சிக்கிட்டே இருப்பேன். 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s