5. மண்ணை உண்ட மன்னன்

”பாவையரே, பரவாசுதேவனின் கருணையைப் பெற்று நாம் வாழ்கிறோம். ஆனாலும்  எத்தனையெத்தனை தவறுகள் செய்கிறோம். அந்தப் பாவத்தையெல்லாம் தொலைக்க வேண்டாமா? செய்த பாவத்தையெல்லாம் மூட்டை கட்டிக் கொண்டா அவனிடம் போவது?

“கூடவே கூடாது கோதை. இறைவனுக்குக் கொடுக்கும் மலரும் நறுமலராக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நாம் குறுமனத்தோடு செல்லாமல் நறுமனத்தோடுதான் அவனிடம் செல்ல வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமென்று நீயே சொல்லிவிடு கோதை.”

Keshav-5

Thanks to Keshav!

“சொல்கிறேன் வெயினி. இதுவரை செய்த பாவங்கள் முதலில் போக வேண்டும். பழைய பாவக் கடன்களை அடைத்தால் மட்டும் போதாது. புதிய கடன்களும் வாங்காத நிலை வேண்டும். நம்முடைய தீவினைகள் மட்டுமல்ல நல்வினைகளும் நம்மை இறைவனை விட்டு தள்ளி நிறுத்தும்.

இந்த உலகத்தைப் படைத்து, அதில் நம்மையும் படைத்து, அனைத்து மாயங்களையும் நடத்தி வைப்பவன் அந்த மாயன். அவனே ஊர்களில் சிறந்த மதுராபுரியில் கண்ணனாகப் பிறந்தவன். மன்னனாகப் பிறந்தவன் வளர்ந்ததென்னவோ நீர் பெருக்கெடுத்து ஓடும் தூய யமுனைத் துறையில் வாழும் ஆயர் குலத்தில். அவனைப் பெற்ற வயிறு மணிவயிறு. அந்த வயிறு சிறப்பதற்காகவே வந்து பிறந்தான் தாமோதரன்.

மண்ணைப் படைத்த அந்த ஆயர்குல அணிவிளக்கு மண்ணை உண்ணவும் ஆசை கொண்டது. அதைப் பார்த்துவிட்டாள் அசோதை. அவன் குறும்பை அடக்க முடியாமல் அவன் இடுப்பிலொரு கயிற்றைக் கட்டி உரலோடு சேர்த்துக் கட்டிவிட்டாள். அதனால் அவனுக்கு இடுப்பில் கயிறு கட்டப்பட்டவன் என்னும் பொருள் வரும்படி தாம உதரன் (தாமோதரன்) என்று பெயர் வந்தது.

நாம் உடல் தூய்மையோடும் உள்ளத் தூய்மையோடும் தூய மலர்களைத் தூவி அந்தத் தாமோதரன் புகழை வாயினால் பாடுவதோடு மனத்தாலும் சிந்தித்தால், இதுவரை செய்த பாவங்களும், அவனைச் சரணடைந்த பின்னும் அறியாமையால் செய்யும் பாவங்களும் தீயில் விழுந்த தூசியைப் போல் மறையும்.

இதை நான் சொல்ல நீங்கள் கேட்டு கருத்தில் பதிய வைத்துக் கொள்ளுங்கள் பாவையரே”

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் – மாயனை, புகழ் மிக்க வடமதுரையில் பிறந்தவனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை – நீர் பெருகியோடும் தூய யமுனை ஆற்றங்கரையில் வளர்ந்தவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் – (யமுனைத் துறை ஆய்ப்பாடியின்) ஆயர்குலத்தில் வளர்ந்த அந்த அணிவிளக்கை

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் – பெற்ற தாய் வயிறு பெருமையடையும் படிப் பிறந்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது – தூய்மையோடு வந்து நறுமலரைத் தூவித் தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் – அந்த ஆயவன் புகழை வாயினால் பாடுவதோடு நிற்காமல் மனத்தினாலும் சிந்தித்தால்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும் – இதுவரை செய்த பாவங்களும், இனிமேல் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் பாவங்களும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் – தீயில் விழுந்த தூசைப் போல் மறையுமென்று நான் சொல்லக் கேட்டு சிந்தையில் பதியுங்கள் பாவையரே!

இந்தப் பாடலில் ஒரு கருத்து சிந்திக்க வேண்டிய கருத்து. இதுவரை செய்த பாவங்கள் நீங்க வேண்டுமென்றுதான் இறைவனை நாடுகிறோம். சரணடைகிறோம். அப்படிச் சரணடைந்த பின்னர் புதிதாக பாவங்கள் செய்ய முடியுமா? அப்படிச் செய்கின்றோம் என்றால் நாம் உண்மையிலே சரணடைந்தோமா?

இந்தக் கேள்விகளுக்கு இரண்டு விளக்கங்கள் உண்டு.

முதல் விளக்கம் – இறைவனைச் சரண் புகுந்த பின்னர் நாம் அறியாமல் செய்யும் பாவங்களைக் குறிக்கிறாள் ஆண்டாள்
இரண்டாம் விளக்கம் – தீவினை மட்டுமல்ல நல்வினையும் நம்மை இறைவனை விட்டு தள்ளி வைக்குமாம். தீவினை இரும்பு விலங்கென்றால் நல்வினை பொன்விலங்கு. தீவினைக்கு துன்பத்தோடு இருந்து அனுபவிக்க வேண்டும். நல்வினைக்கு இன்பத்தோடு விருந்து அனுபவிக்க வேண்டும். மொத்தத்தில் இரண்டுமே இந்த உலகத்தோடு ஒவ்வொரு வகையில் நம்மைக் கட்டிவைக்கும். அந்த நல்வினையும் தீர்ந்தால்தான் இறைவன் திருவடியை உண்மையாக அடைய முடியும். அதனால்தான் ஆண்டாள் அப்படிக் குறிப்பிடுகிறாள்.

இரண்டு விளக்கங்களுமே எனக்குப் பொருத்தமாகத் தெரிந்ததால், இரண்டையும் கொடுத்திருக்கிறேன்.

 

Paavai-05************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
மன்னு – தலைமையான
தாமோதரன் – தாம(கயிறு) + உதரன்(இடுப்பன்) – கயிறு கட்டப்பட்ட இடுப்பு கொண்டவன்
************************************************************************************************************************
அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

5 Responses to 5. மண்ணை உண்ட மன்னன்

 1. //நல்வினைகளும் நம்மை இறைவனை விட்டு தள்ளி நிறுத்தும்// இதற்கு விளக்கம் சொல்லலம் என்று வந்தால், இறுதியில் நீங்களே சொல்லி விட்டீர்கள் 🙂

  ஒரு கருத்து: சரண் புகுந்த பின்னரும், சிலபல சமயங்களில் சிற்றின்ப ஆசைகள் மனதில் வந்து போவதை (பக்குவம் சற்றே குறைந்த) மாந்தர் நம்மால் தடுக்க இயலாது இல்லையா? அதனால், தன் பக்தன் ஆசைப்பட்டு விட்டானே என்று அந்த நிலையற்ற உலக சுகங்களையும் கண்ணன் அருளத் தான் செய்கிறான். பரம தயாளன் இல்லையா அவன் 🙂 நல்வினைப் பயன் தான். ஆனால், பேரின்பம் எனும் பரமபதம் தள்ளிப் போகிறது…. சொல்லலாம் தானே?

  கண்ணனை நினைக்கையில் யமுனையை நினைத்தே ஆக வேண்டும். பிறந்ததிலிருந்து அவன் பூலோக வாழ்வில் பின்னிப் பிணைந்த நதி அது. அதனால் தான் ஆண்டாள் அதை ”தூயப்பெருநீர்” என்பதோடு, கண்ணனை யமுனைத்துறைவன் என்று அடையாளப்படுத்துகிறாள். பிரபந்தத்தை மீட்டெடுத்த ஸ்ரீமன் நாதமுனிகளின் பேரனான, இராமானுசரின் முதன்மை குருவான, ஆளவந்தாருக்கு யமுனைத்துறைவன் என்ற திருப்பெயருண்டு, அதைச்சூட்டியவர் குருபரம்பரையில் அவரது குருவாக விளங்கிய மணக்கால் நம்பிகள்!

  ”யமுனையாற்றிலே, ஈரக்காற்றிலே கண்ணனோடு தான் ஆட, பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட” …. இன்றும் யமுனை தான், இராகவனாரே ;-))))

 2. பரிபூரணச்சரணாகதியை அவனருள் இருந்தால்தான் செய்யமுடியும்.அவனருள் எப்போது கிடைக்கும்! வாழ்க்கையைப் பற்றி நிற்கும் கையை விடவேண்டுமல்லவா? அதற்காக வாயினால் பாடி மனதினால் சிந்தியுங்கள், என்கிறாளோ கோதை?

  • GiRa ஜிரா says:

   வாழ்க்கையைப் பற்றி நிற்கும் கையைத்தான் விடமுடியலையே அம்மா. அவனாகப் பார்த்து கைப்பிடித்து கூட்டிச் சென்றால்தான் உண்டு போல.

 3. amas32 says:

  Debit and credit இல்லாமல் nil balance ஏ சிறந்தது என்கிறாள் ஆண்டாள்! எல்லாமே அவன் செயல் என்றிருந்து விட்டால் பாவ புண்ணியம் அவனையே சாரும், நம்மை அணுகாது.

  amas32

  • GiRa ஜிரா says:

   சரியாச் சொன்னீங்க. இதத்தான் பட்டினத்தாரும் “என் செயலாவது ஒன்றுமில்லை”ன்னு பாடினார் போல.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s