6. சேவல் கூவிய ஏவலில் விடிந்தது

கோதையும் தோழிகளும் ஆயர்ப்பாடியிலுள்ள(திருவில்லிபுத்தூர்) ஒவ்வொரு வீடாகச் சென்று மற்ற பெண்பிள்ளைகளையும் எழுப்புகின்றனர். சிறிது சிறிதாக விடியத் தொடங்குகிறது. இரவு முழுதும் மரத்தில் அடங்கியிருந்த பறவைகள் எழுந்து ஒலித்தன. சேவலும் கூவியது.

பெரியநாயகி என்றொரு தோழி. அவள் இன்னும் எழுந்திருக்கவில்லை.

Keshav-6

Thanks to Keshav!

சரியாக அந்நேரம் வடபத்ரசாயி திருக்கோயிலில் அதிகாலைச் சங்கம் ஒலிக்கிறது. அதனால் அவசரப்படுத்தி பெரியநாயகியை எழுப்புகிறாள் கோதை.

“அடி தோழி, விரைவாக எழுந்திருப்பாய். விடிந்துவிட்டதடி.”

“விடியும் முன்னமே எழுப்பினால் எப்படி? விடிந்த பிறகு வாருங்கள்.”

“பெரியநாயகி, விடிந்துவிட்டதடி. இல்லாவிட்டால் நாங்கள் எழுந்து வந்திருப்போமா?”

“என்ன? விடிந்துவிட்டதா? எதை வைத்து விடிந்துவிட்டது என்கிறீர்கள்?”

“அட! பறவைகள் கூட எழுந்துவிட்டன. சேவலும் கூவிவிட்டது. கருடனின் தலைவனான திருமாலின் கோயிலின் வெண்ணிறச் சங்கங்கள்  ஒலித்து நம்மையெல்லாம் அழைப்பது உன் செவியில் விழவில்லையா? எழுந்திரு பிள்ளாய்.”

பெரியநாயகிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவளுக்குப் பிடித்த பூதனை வதம் செய்யும் கதையைச் சொல்லித் தொடர்ந்து எழுப்பினாள் கோதை.

”பூதனை என்றொருத்தி. அவளும் பெண். ஆனால் பேய். பிஞ்சுக் குழந்தைக்கு முலையில் நஞ்சு தடவிப் பாலூட்டியவள். அவளிடம் பாலருந்தாமல் உயிரருந்தி உயிர் பல காத்தான் கோகுலன்.

மற்றொருநாள் சகடாசுரன் என்பவன் வண்டியாக உருமாறி வந்து கண்ணனைக் கொல்ல நினைத்தான். ஆனால் கள்ளச் சக்கரமாக உருண்டு வந்த அவனைக் கலக்கி அழியும்படி காலெடுத்து எத்தினான் மாயன்.

அந்த கோகுலன் யார் தெரியுமா? மாயன் யார் தெரியுமா? வெள்ளமாய்ப் பெருக்கெடுக்கும் பாற்கடலில் பாம்பணையில் துயில் கொண்டிருக்கிறாரே உலக வித்தான திருமால். அந்தத் திருமாலே கோகுலனும் மாயனும்.

அப்படிப்பட்ட திருமாலை தங்கள் உள்ளத்தில் இருத்தி யோகிகளும் முனிவர்களும் அரி அரி என்று துதிக்கின்ற பேரொலியைக் கேள்.

அந்தப் பேரொலி உள்ளத்தில் புகுந்து சிந்தையைக் குளிரவைப்பதை நான் சொல்லக் கேட்டு மனதில் நிறுத்தி பாவை நோன்புக்கு வாராய் என் தோழியே”

பெரியநாயகியும் எழுந்து புறப்பட்டு வந்து கோதையோடும் மற்ற தோழியரோடும் சேர்ந்துகொண்டாள்.

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

புள்ளும் சிலம்பின காண்  – (காலைப் பொழுதை வரவேற்க) பறவைகள் குரல் கொடுப்பதைக் கேள்!

புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ – கருடப் பறவை மேல் அமர்ந்த தலைவன் கோயிலில் வெண்ணிறச் சங்கமானது அனைவரையும் வாவென்றழைக்கும் பேரொலி கேட்கவில்லையா!

பிள்ளாய் எழுந்திராய் – பெண்ணே எழுந்திரு

வெறும் சங்கம் என்று சொல்லாமல் விளி சங்கின் பேரரவம் என்று கூறியிருக்கிறார். ஏன்? எல்லா ஒலிகளும் நம்மை அழைப்பதில்லை. சில ஒலிகளைக் கேட்டாலே நாம் அந்த இடத்தை விட்டே நகர விரும்புவோம். ஆனால் புள்ளரையன் கோயிலின் சங்கொலி நம்மை வரவேற்கும் விதமாக இருக்குமாம்.

பேய்முலை நஞ்சுண்டு – பூதனையில் நஞ்சு தடவிய முலையில் பாலுண்டு பூதனைக்கே நஞ்சான பிஞ்சே கண்ணன்.

கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி – கள்ளச் சக்கரமாக உருண்டு வந்த அரக்கனை கால்களால் உதைத்துக் கலக்கியழித்த சிறுவனே மாதவன்.

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை – பாற்கடலில் பாம்பணை மேல் பள்ளி கொண்டவனும் உயிர்களுக்கெல்லாம் ஆதி உயிரானவனுமான அந்த உயர்ந்தவனை

உள்ளத்துக் கொண்டு – உள்ளத்தில் இருத்திக் கொண்டு

முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம் – முனிவர்களும் தவயோகிகளும் விடியலில் மெள்ள எழுந்து அரி என்ற பெயரைப் பாசத்தோடு உச்சரிக்கும் பேரானந்த ஒலியால்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் – உள்ளத்தில் உண்டான மகிழ்ச்சியில் குளிர்வாய் என்பதை நான் சொல்லக் கேட்டு உள்ளத்தில் நிறுத்தி பாவை நோன்பைத் தொடர்வீர் எம் பாவையரே!Paavai-06************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
புள் – பறவை
சிலம்பின – மெல்லிய ஒலி
அரையன் – தலைவன்
விளி – அழை
சகடம் – சக்கரம்
வெள்ளத்தரவம் – வெள்ளத்து + அரவம்(பாம்பு)
************************************************************************************************************************
இந்தப் பாடலில் இருந்து மற்ற தோழிகளை கோதை நோன்புக்காக எழுப்புவதாக வரும். சில விளக்கங்களில் இந்தப் பாடலில் இருந்து பத்து பாடல்கள் வழியாக மதுரகவியாழ்வார் தவிர மற்ற பத்து ஆழ்வார்களை ஆண்டாள் துயிலெழுப்புவதாகவும் படித்தேன்.

பொதுவாகவே ஆழ்வார்களின் காலகட்டம் குறித்து ஆராய்ச்சிகளும் பக்தியியலும் வெவ்வேறு தகவல்களைத் தருகின்றன. சிலபல வரலாற்று ஆராய்ச்சிகளைப் பார்க்கும் போது பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் கோதையா அல்லது கோதையின் மானச தந்தை பெரியாழ்வாரா என்று ஒரு ஐயம் வருகிறது. அதுமட்டுமில்லாமல் குருபரம்பரையின் படி ஆண்டாளுக்குப் பின்னால் வந்த மூன்று ஆழ்வார்களையும் சேர்த்தே துயிலெழுப்பியிருப்பதாகவும் விளக்கம் போகிறது. அதோடு வடகலை மற்றும் தென்கலை சம்பிரதாய விளக்கங்களில் குறிப்பிடப்படும் ஆழ்வார்கள் பாடல் மாறியிருக்கின்றனர். இத்தகைய காரணங்களால் அந்த ஆராய்ச்சிக்குள் இறங்காமல் பாடல்கள் தருகின்ற நேரடிப் பொருளை மட்டுமே நான் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் நான் படித்த வரையில் எந்தப் பாடல் எந்த ஆழ்வாரைத் துயிலெழுப்புகிறது என்பதைப் பின்குறிப்பாகக் கொடுக்கிறேன்.

இந்தப் பாடலில் கோதை தனது வளர்ப்புத் தந்தையான பெரியாழ்வாரைத் துயிலெழுப்புவதாகக் கூறுகிறார்கள். அதற்குக் காரணங்கள்..

பிள்ளாய் என்று பெரியாழ்வாரை ஆண்டாள் குறிக்கிறாள். எம்பெருமானின் அனைத்துமான கல்யாணகுலங்களையெல்லாம் மறந்து பல்லாண்டுபாடி கண்ணேறு கழித்ததால், “அறியாத பிள்ளை” என்று பொருள்படும்படி பிள்ளாய் இந்தப் பாடலில் வருகிறது.
நந்தவனத்திலேயே பெரும்பொழுதை பெரியாழ்வார் களித்துக் கழித்ததால் “புள்ளும் சிலம்பின” என்று நந்தவனத்திலிருக்கும் பறவைக்கூட்டம் குறிப்பிடப்படுகிறது.
புள்ளரையன் என்று வருவதால். கருடாழ்வாரின் அம்சமாக அவதரித்தவர் பெரியாழ்வார்.
வெள்ளை விளிசங்கம்” என்று முதன்முதலில் பாடியவர் பெரியாழ்வார். “வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம் ஏந்துகையன்” என்று தொடங்கும் பாசுரம்.
கிருஷ்ணலீலையில் பெரியாழ்வாருக்கு மிகவும் பிடித்த பூதனை வதம் குறிப்பிடப்படுவதால்.
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தை உள்ளத்தில் கொண்ட முனிவர்களும் யோகிகளும் என்பது எப்போதும் விஷ்ணு சிந்தையில் இருக்கும் பெரியாழ்வாரைக் குறிப்பாலுணர்த்துவது.
************************************************************************************************************************

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

7 Responses to 6. சேவல் கூவிய ஏவலில் விடிந்தது

 1. amas32 says:

  புதிய தகவல் தெரிந்து கொண்டேன் ஜிரா. ஆண்டாள் ஆழ்வார்களை துயில் எழுப்புகிறாள், அதுவும் இப்பாடலில் தன் வளர்ப்புத் தந்தை பெரியாழ்வாரை என்பது நான் இதுவரை அறிந்திராத அழகிய விஷயம். அதற்கு இப்பாசுரத்தில் இருந்து சரியான வரிகளை மேற்கோள் காட்டியிருப்பது அருமை!

  amas32

 2. அரிய தகவல்கள், நன்று. அதோடு, பெரியாழ்வார் திருப்பள்ளியெழுச்சி என்பதற்கு வரிக்கு வரி விளக்கச்சான்று தரலாம் 🙂 இந்த ஒப்பீட்டு வியாக்கியைகள் ஒரு நயத்துக்கும், ஆழ்வார் பெருமக்களைப் போற்றுவதற்கும் வேண்டி பின்னாள் ஆச்சார்யப் பெருமக்களால் அருளப்பட்டவையாம்.

  ஆண்டாள் பாசுரத் தொடக்கத்தில், திருமாலுக்கு உகந்த கருடாழ்வாரையும், கிருஷ்ண அவதாரத்தில் அவன் கூடவே இருந்த வெண்சங்கையும் பாடி விட்டு, உடனே இரண்டு வதங்களைத் தான் குறிப்பிடுகிறாள், அதாவது, பேய்முலை நஞ்சுண்டு பூதகியை மாய்த்தது, சக்கர வடிவ அரக்கனை உதைத்து மாய்த்தது.

  கண்ணபிரானின் ஆரவார அழித்தல் கடமையை சட்டென அடுத்த வரியில் மாற்றி, அக்கண்ணனை திருப்பாற்கடலில் யோகத்துயில் கொண்ட அமைதியின் வடிவாக இப்பாசுரத்தின் முடிவில் நிறுத்தி, அக்கருணைத் திருவுருவையே, முனிவரும், யோகியரும் மனதில் நிறுத்தி தியானித்து, பின்னர் ஹரி நாராயண சங்கீர்த்தனம் செய்வதாக அற்புதமாக ஆண்டாள் திருப்பாசுரத்தை பாடி முடிக்கிறாள்.

  • GiRa ஜிரா says:

   அருமை அருமை.

   பாலா ஒரு கேள்வி. இந்த ஒப்பீட்டு வியாக்கியைகள் முதன்முதலில் யாரால் சொல்லப்பட்டது என்று தெரியுமா?

   • Anbudan bala says:

    //பாலா ஒரு கேள்வி. இந்த ஒப்பீட்டு வியாக்கியைகள் முதன்முதலில் யாரால் சொல்லப்பட்டது என்று தெரியுமா?//
    Need to check who started this as there are Multiple versions of these

 3. சரி, அது என்ன “மெள்ள எழுந்து”? 🙂

  முனிவர்களும் யோகிகளும் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டிருப்பதால், அவர்கள் துயிலெழும்போது வேகமாக எழுந்தால் பரமனின் துயில் கெட்டுவிடும். அது கெடாமல் இருப்பதற்காக “மெள்ள” எழுதல்!

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s