7. தயிரோசை எழுப்பும் உயிரோசை

அடுத்து கோதையர்கள் சென்றது குலக்கொடியின் இல்லம். ஆனால் இன்னும் வாயில் திறக்கப்படாமல் அடைந்தே இருந்தது.

அவள் இன்னும் எழுந்திருக்காதது அனைவருக்கும் வியப்பு. காலை நேரத்தில் வழக்கமாக உண்டாகும் ஓசைகள் கேட்டும் இன்னும் எழாமல் இருக்கிறாளே என்று கோதை வாசலிலிருந்தே அவளை அழைக்கிறாள்.

Keshav-7

Thanks to Keshav!

“தோழியே, குலக்கொடியே, இன்னுமா தூக்கம்? பறவைகளிலேயே சோம்பல் மிகுந்ததாகக் கருதப்படும் ஆனைச்சாத்தன் கூட எழுந்து கீச்சு கீச்சென்று கத்துகிறது. அது உன் காதில் விழவில்லையே பேய்ப் பெண்ணே!!!!”

ஆண்டாள் அழைக்கும் போதே, ஆய்ச்சியர் அவரவர் வீட்டில் தமது வேலையைத் தொடங்குகின்றவர். அன்றும் இன்றும் ஒரு நாளில் முதல் வேலையைத் தொடங்குகின்றவர் ஆயராகத்தான் இருக்கும். அதிகாலையில் பால் கறந்தால்தான் அடுத்தடுத்து நடக்க வேண்டியவை நடக்கும். ஆயர்கள் பால் கறக்கும் ஓசையும், ஆய்ச்சியர் மத்தினால் தயிர் கடையும் ஓசையும் ஆயர்ப்பாடியை நிறைத்தது. அந்த ஓசைக்கும் எழவில்லை குலக்கொடி.

மட்கலத்தில் தயிரெடுத்து, அதில் மூழ்க மத்திட்டு, அதனோடு கயறிட்டு, முன்னும் பின்னும் கை போக இழுத்து சரீர் சரீர் என்று தயிர் கடையும் ஓசை உன் காதில் விழவில்லையா? அப்படித் தயிர் கடையும் போது ஆய்ச்சியர் அணிந்திருக்கும் தாலிக்கயிற்றிலிருக்கும் காசும் பிறப்பும் மோதி ஒலிக்கும் ஓசையும் உனக்குக் கேட்கவில்லையா?”

கோதை அழைப்பது காதில் விழுந்து குலக்கொடி விழித்துவிட்டாள். ஆனால் இன்னும் எழாமல் படுக்கையில் கிடந்தாள். அதைப் புரிந்து கொண்ட கோதை மீண்டும் அழைத்தாள்.

”அடி நாயகியே, நாராயண மூர்த்தியான அந்தக் கேசவனை நாங்கள் உன் வீட்டின் முன் நின்று பாடுவதைக் கேட்டும் கிடந்த நிலையில் இருப்பாயோ! அழகியே, கதவைத் திறந்து நான் சொல்வதைக் கேட்டு நெஞ்சில் பதித்துக் கொள்வாய் பாவையே!”

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் முர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்ட கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே – ஆனைச்சாத்தன் பறவைகள் கூட விழித்துக் கலந்து கீச்சுகீச்சென்று பேச்சு கொள்வது கேட்கலையோ! பேய்ப்பெண்ணே!

ஆனைச்சாத்தன் என்ற பறவை எது என்பது குறித்து பல கருத்துகள் நிலவுகின்றன. கருங்குயில், செம்போத்து, வலியன், கரிச்சான்குருவி, Seven Sisters என்று பலவிதப் பறவைகளைப் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆண்டாள் குறிப்பிட்டது இதுதான் என்று ஊகமாகவோ அல்லது இன்னொருவர் விளக்கத்தில் கூறியிருக்கிறார் என்பதாலோ முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதனால் நான் ஆனைச்சாத்தன் என்ற பெயரையே பயன்படுத்தியிருக்கிறேன்.

பேய்ப்பெண்ணே என்று கோதை தன் தோழியை அழைப்பதை “அழகான ராட்சசியே” என்பதைப் போலத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அது திட்டாகாது.

காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து – காசும் பிறப்பும் பெண்களின் தாலியில் இருக்கும் மங்கல நகைகள். அந்த நகைகள் கலகலவென ஒலியெழுப்பும் படி கைகளை முன்னும் பின்னும் இழுத்து…

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் – (நெய் வெண்ணெய் மோர் தயிர் முதலியவற்றின்) வாசனை நிரம்பிய நறுங்கூந்தல் ஆய்ச்சியர் மத்தைக் கொண்டு

ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ – ஓசை எழுப்பும்படி தயிர் கடைவது உனக்குக் கேட்கவில்லையோ?

ஆய்ச்சியர்கள் எப்பொழுதும் பாலோடும் தயிரோடும் மோரோடும் வெண்ணெய்யோடும் நெய்யோடும் புழங்குகின்றவர்கள். அந்த வாடை மிகுந்த கையை அடிக்கடி தலையில் தடவிக் கொள்வதால் அவர்கள் குழல் நறுமணம் கொண்டதாம். அந்த வாச நறுங்குழல் ஆய்ச்சியர்கள் தயிரினைப் பெரிய பானைகளில் ஊற்றி, அந்தப் பானைகளில் மரத்தாலான பெரிய மத்துகளை ஆழ்த்திக் கயிற்றை பிடித்துக் கொண்டு முன்னும் பின்னும் இழுத்துச் சளசளவென்று கடையும் பொழுது அவர்கள் கையணியும் காசுகளைக் கோர்த்த கழுத்தணியும் கலகலவென ஓசைப் படுத்துகின்றனவே! அந்த பேரரவம் கூட கேட்கவில்லையா என்று தோழியைக் கேட்கிறாள் கோதை.

நாயகப் பெண் பிள்ளாய் – நாயகியே

நாராயணன் முர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்ட கிடத்தியோ – நாராயணமூர்த்தியான அந்தக் கேசவனின் புகழை நான் பாடுவதைக் கேட்டும் இன்னும் படுக்கையில் கிடப்பாயோ!

தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய் – ஒளி பொருந்திய முகத்தை உடையவளே! கதவைத் திற. நான் சொல்வதைக் கேட்டு நெஞ்சில் நிறுத்திக் கொள்வாய் என் பாவையே!

இந்தப் பாடலில் தோழியை ஐந்து ஓசைகளைக் குறிப்பிட்டு எழுப்புகிறாள். ஐந்தும் செவிக்கும் மனதுக்கும் இனியவை.
கீச்சு கீச்சு என்று ஆனைச்சாத்தன்கள் பேசும் ஒலி
ஆய்ச்சியரின் கழுத்தணி எழுப்பும் ஓசை
ஆய்ச்சியரின் கையணிகள் கலகலக்கும் ஓசை
மத்தால் தயிர் கடையும் ஒலி
திருமாலைப் போற்றிப் பாடும் ஒலி

இவற்றில் சிலவற்றை ஓசையென்றும் சிலவற்றை ஒலியென்றும் குறிப்பிட்டுள்ளேன். ஏன்? பொதுவாக ஓசை என்பது எல்லாவித ஓசைகளையும் ஒலி என்பது குரலால் எழுப்பப்படுவதையும் குறிக்கும். அதனால்தான் பறவைகளின் ஒலி என்றும் இறைவனைப் பாடும் ஒலி என்றும் குறிப்பிட்டேன்.

இந்தப் பாடலில் வரும் காசு பிறப்பு என்பன ஆயச்சியர் தாலியில் இருக்கும் மங்கல நகைகள் என்று குறிப்பிட்டேன். அதற்கு இன்னொரு பொருளும் உண்டு. காசும் பிறப்பும் வெண்பாவின் கடைசிச் சீராகப் பயின்று வரும். நாள் மலர் காசு பிறப்பு என்று வெண்பா இலக்கணப்படி மொத்தம் நான்கு சீர்கள். இந்த நான்கில் இறுதிச் சீராக காசும் பிறப்பும் வரும் போது, அந்த வெண்பா ஏந்திசைச் செப்பலோசை தரும். இல்லையென்றால் தூங்கிசைச் செப்பலோசையாகவோ ஒழுகிசைச் செப்பலோசையாகவோ மாறிவிடும்.

தோழியை எழுப்பும் போது ஏந்திசையாகச் சொல்லி எழுப்புவதால், ஆண்டாள் காசு பிறப்பு என்று சொல்லியிருப்பதாகவும் கருதலாம்.Paavai-07************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
பேச்சரவம் – பேச்சு + அரவம்(ஒலி)
தேசமுடையாய் – தேசம்(தேஜஸ்) + உடையாய் – ஒளி பொருந்திய முகமுடையவளே
************************************************************************************************************************

சரி. இந்தப் பாடல் எந்த ஆழ்வாரை எழுப்புவதாகக் கருதப்படுகிறது? குலசேகர ஆழ்வார். ஏன்?

பேய்ப் பெண்ணே என்று வருவதால். அதாவது பாசுரங்களில் தன்னைப் பேயன் என்று குலசேகராழ்வார் குறிப்பிட்டுக் கொண்டதால். ”பேயரே எனக்கியாவரும் யானுமோர் பேயனே எவர்க்கும்” என்று குலசேகராழ்வார் பாடியிருக்கிறார்.

கொல்லி காவலன் கூடல் நாயகன்” என்று குலசேகராழ்வார் பலமுறை தன்னையே பாசுரங்களில் அழைத்துக்கொண்ட காரணத்தால் “நாயகப் பெண்பிள்ளாய்” என்று இந்தப் பாவைப்பாசுரத்தில் குறிப்பிடப்படுகிறார்.

அதோடு பதக்கங்களில் நடுவில் இருக்கும் கல்லை நாயகக்கல் என்பது வழக்கம். ஆழ்வார்களில் நடுநாயகமாக இருப்பதாலும் “நாயகப் பெண்பிள்ளாய்” என்று குறிப்பிடப்படுகிறார். பொய்கையார் பூதத்தார் பேயார் மழிசையர் மாறன் என்று முன்னே ஐவர். பெரியாழ்வார் ஆண்டாள் தொண்டரடிப்பொடிகள் பாணர் திருமங்கை என்று பின்னே ஐவர். மதுரகவியாழ்வாரை நம்மாழ்வாரோடே சேர்த்துப் பார்ப்பதால் அவரை இந்த வரிசையில் தனியாகக் குறிப்பிட வேண்டியதில்லை.

தேசமுடையாய் என்று வருவதால். அதாவது தேஜஸ் என்பது சத்திரிய அடையாளமாகக் கருதப் படுவதால். குலசேகராழ்வார் சேர மன்னர் வழி வந்தவர்.

குலசேகராழ்வார் இராமாயணம் கேட்பதில் மிகுந்த இன்பமுள்ளவர். அதனைக் குறிப்பிடவே “கேட்டே கிடத்தியோ” என்று இந்தப் பாடலில் வருகிறது.
************************************************************************************************************************

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

4 Responses to 7. தயிரோசை எழுப்பும் உயிரோசை

 1. amas32 says:

  அற்புதம் ஜிரா! ஆண்டாளே உங்களுள் புகுந்து எழுதுகிறாளோ என்கிற ஐயம் வருகிறது எனக்கு! ஆண்டாள் திருவடிகளே சரணம், குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்.

  amas32

  • GiRa ஜிரா says:

   நன்றிமா. பொதுவா “யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்”னு சொல்வேன். திருப்பாவை விளக்கம் எழுதத் தொடங்கிய பிறகு.. எனக்குச் சந்தேகம் வரும்போதெல்லாம் எதாவது ஒரு வழியில ஆண்டாள் அதைப் புரிய வைக்கிறாள். ஆகையால இதுல நான் எழுதுனதுன்னு எதுவுமே இல்லை. 🙂

 2. தோழியை எழுப்பும் போது ஏந்திசையாகச் சொல்லி எழுப்புவதால், ஆண்டாள் காசு பிறப்பு என்று சொல்லியிருப்பதாகவும் கருதலாம். — மிக அழகான விளக்கம்.

  பேய்ப்பெண்ணே என்று விளித்தது, இத்தனை ஆரவாரத்திலும் எழுந்திருக்க மறுக்கிறாளே என்ற ஆதங்கத்தில், இவளை விட்டு விட்டு கண்ணனைப் பார்க்கப் போய் விடலாமே என்றால், போக முடியாது, ஏன்? ஆண்டாள் (6வது முதல் 10வது பாசுரம் வரை) எழுப்பும் கோபியர் அனைவரும் பரம பாகவதைகள், கண்ணனுக்கு உகந்தவர்கள், அதனால் தான், “நாயகப் பெண்பிள்ளாய்” பின்னாலேயே வருகிறது 🙂

  எ.அ.பாலா

  • GiRa ஜிரா says:

   நன்றி பாலா.

   உண்மை. பாகவதிகளை விட்டுவிட்டு இன்னொரு பாகவதி போகமுடியுமா என்ன? 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s