8. கொக்கு அறு கோ

நம்பிள்ளை என்றொரு தோழி. கண்ணனைக் கொண்டாடும் கோபிகை போன்றவள். அவன் பெயரை யாராவது சொன்னாலே உருகும் உள்ளம் அவளுக்கு. ஆனால் அவளுக்கு நல்ல தூக்கம். அவளை விட்டுவிட்டுப் போக கோதையின் உள்ளம் விரும்பவில்லை. அதனால் அவள் வீட்டுக் கதவையும் தட்டுகிறாள்.

“அடி நம்பிள்ளை, எழுந்திருப்பாய். பாவை நோன்பில் கலந்துகொள்ள வா.”

“இன்னும் விடியவில்லை. அதற்குள் என்னை எழுப்புகிறீர்களே? விடிந்த பிறகு வாருங்கள்.”

“நம்பிள்ளை, வெளியே வந்து பார். விடிந்து கீழ்வானமும் வெளுத்துவிட்டது.”

“உங்களுடைய அறியாமையை என்னவென்று சொல்வது? எப்போது விடியும் என்று எப்போதும் நீங்கள் கீழ்த்திசையையே பார்த்துக் கொண்டிருந்ததால் உங்களுக்கு இருட்டு பழகிவிட்டது. அதனால் விடிந்துவிட்டதென்று ஏமாந்துவிட்டீர்களடி.”

”அடி தோழியே! நாங்களா ஏமாந்தோம்? எழுந்து வந்து பார். சோம்பல் மிகுந்த எருமைகள் கூட எழுந்து கழுத்து மணி அசைய நடந்து மேய்ச்சலுக்குப் போய்விட்டன. நம்முடைய தோழிகள் எல்லாம் நீராடி பாவை நோன்பில் கலந்துகொள்ளச் செல்கின்றார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறேன். உன்னையும் அழைத்துக்கொண்டு போவதற்காக காத்திருக்கிறோம். நாங்கள் கூவி எழுப்புவது கேட்கவில்லையா?”

“உங்களுக்கெல்லாம் எதோ ஆகிவிட்டது. இருட்டைப் பார்த்து எருமைகள் என்று எண்ணிக்கொண்டீர்கள். அதைச் சொல்லி என்னையும் வேறு எழுப்புகிறீர்களே!”

Keshav-8

Thanks to Keshav

கண்ணன் பெயரைச் சொன்னால்தான் நம்பிள்ளை எழுந்து வருவாள் என்று கோதைக்குத் தெரியும். அதனால் அந்தத் தூண்டிலையும் போடுகிறாள்.

“கண்ணன் என்று சொன்னாலே குதூகலிக்கும் உள்ளம் கொண்டவளே எழுந்திருப்பாய். உனக்குக் கண்ணன் கதை சொல்கிறேன் கேள். அவன் ஆயர்ப்பாடியில் நந்தகோபன் வீட்டில் வளர்ந்து வருகையில் பலப்பல அசுரர்களை அனுப்பினான் கம்சன். அப்படி வந்த அசுரர்களில் ஒருவன் கேசி. அவன் குதிரை வடிவெடுத்து வந்தான். யாரும் நெருங்க முடியாத அந்தக் குதிரையை நெருங்கி அடக்கி, அதன் வாயைப் பிளந்து கொன்றான் கோகுலச் சிறுவன்.”

கண்ணன் கதை என்றதும் நம்பிள்ளை எழுந்தாள். இன்னும் ஒரு கதை சொன்னால் அவளும் புறப்படுவாள் என்று தெரிந்து கோதையும் இன்னொரு கதை சொன்னாள்.

“கண்ணனை வஞ்சகமாக மதுராவுக்கு அழைத்துக் கொல்லத் திட்டமிட்டான் கஞ்சன். அனைத்தும் அறிந்த மாயனும் அழைப்பை ஏற்றுச் சென்றான். தோல்வி அறியாத தோள்வலி கொண்ட இரு மல்லரை ஏவினான் கஞ்சன். இளம் பருவத்திலேயே மல்லரைப் பொருது அவர்களைக் கைப்பிடியில் மாட்டி ஓட்டியவன் நமது தூயவன்.

அந்த ஆயவனை தேவாதிதேவனை பறை தட்டிக் கொண்டு பாடிப் புகழ்ந்தால், அவன் திருக்கோயிலுக்குச் சென்று சேவித்தால், நம்முடைய தேவைகளை ஆராய்ந்து சிறந்த முறையில் அருள்வான். இதை நான் சொல்ல நீ கேட்டுப் புரிந்துகொள்வாய் எம் பாவையே!”

இன்னுமா தூங்குவாள் நம்பிள்ளை? உடனே தோழியரோடு வந்து சேர்ந்துகொண்டாள்.

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

கீழ்வானம் வெள்ளென்று – கீழ்வானம் விடியலில் வெளுத்தது

எருமை சிறு வீடு மேய்வான் பரந்தன காண் – எருமைகள் கூட எழுந்து அதிகாலைப் பனிப்புல் மேயச் சென்று திரிவதைக் காண்பாயாக

மாடுகளில் பொறுமையில் அருமையானது கருமையான எருமை. பசுக்கள் விடியலில் எழுந்து பால் தந்ததால் அவற்றை மூன்றாவது பாடலிலேயே புகழ்ந்தாகி விட்டது. அதற்குப் பிறகு புள்ளினங்களைச் சொல்லியாகி விட்டது. பிறகு பறவைகளிலேயே காலந்தாழ்ந்து எழும் ஆனைச்சாத்தானையும் குறிப்பிட்டாகி விட்டது. இன்னும் தூக்கமா? எருமைகள் கூட எழுந்தனவே. அத்தோடு முடிந்ததா? எழுந்த எருமைகள் மெள்ள ஆடியசைந்து திரிந்து மேயவும் தொடங்கின. இன்னும் தூங்கலாமா என்று தோழியைக் கேட்கிறார்.

மிக்குள்ள பிள்ளைகளும் போவான் – (நம்முடைய) மற்ற தோழியரும் பாவை நோன்புக்காகச் செல்கிறார்கள்

போகின்றாரைப் போகாமல் காத்து – அப்படிப் போகின்றவர்களைப் போகவிடாமல் தடுத்து

உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் – உன்னைக் கூவி எழுப்ப வந்து நிற்கின்றோம்

கோதுகலம் உடைய பாவாய் எழுந்திராய் – (மாயன் பெயர் சொன்னாலே) குதூகலிக்கின்ற பாவையே எழுந்திரு

பாடிப் பறை கொண்டு – பறை தட்டிப் பாடிக் கொண்டு

மாவாய் பிளந்தானை – (அடங்காத) குதிரையின் வாயைப் பிளந்து கொன்றவனை

மல்லரை மாட்டிய – எதிர்த்த மல்லர்களை புரட்டியடித்து வென்றவனை

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் – தேவர்களுக்கெல்லாம் தேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய் – மிகுந்த ஆவலோடு நமக்கு வேண்டியதையெல்லாம் ஆராய்ந்து பொருத்தமானதையெல்லாம் அருள்வான் எம் பாவையே!

கேட்டதெல்லாம் கொடுப்பவனா இறைவன்? நாம் கேட்பதில் நமக்குச் சிறந்தது எதுவென்று அவன் அறிவான். அதை எப்பொழுது தரவேண்டும் என்றும் அவன் அறிவான். இறைவனை நம்புங்கள். நமக்கு அதனால் நன்மையன்றி ஒன்றில்லை.

சிறுவீடு மேய்வது அல்லது சிறைவீடு மேய்வது என்பது மாடுகள் வெளியில் சென்று மேய்வதைக் குறிப்பிடாது. பால் கறப்பதற்கு முன்பே தொழுவம் இருக்கும் தோட்டத்திலேயே மேய்வது. பால் கறப்பதற்கு முன்பு சிறுதீனி போல மேய்வது. பாலைக் கறந்த பிறகுதான் பசுக்களையும் எருமைகளையும் ஆயர்கள் காட்டுக்குள் ஓட்டிச் செல்வர்.Paavai-08************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
மாவாய் – மா(விலங்கு) + வாய்
அருளேலோர் – அருள் + ஏல்(கேட்டு) + ஓர்(நினைவில் வை)

************************************************************************************************************************
இந்தப் பாடலில் ஆண்டாள் நம்மாழ்வாரைத் துயிலெழுப்புகிறாள் என்று பக்தியியல் கூறுகிறது.

கிருஷ்ணபக்தியில் தன்னைப் பாவையாக எண்ணிக்கொண்டு திருவாழ்மொழியில் நம்மாழ்வார் பாடியிருக்கிற காரணத்தால் ”கோதுகலமுடைய பாவாய்” என்றழைப்பது நம்மாழ்வாரைக் குறிக்கிறது.

திருக்கோயிலில் ஆழ்வார்களின் சிலையை வடித்து வைக்கும் பொழுது நம்மாழ்வாரின் உருவம் அமர்ந்த நிலையிலேயே நிறுவப்படுகிறது. அவர் உட்கார்ந்து கொண்டிருப்பதால் கோதை அவரை “எழுந்திராய்” என்று பாடலில் குறிப்பிடுகிறாள்.

வீற்றிருந்தேழுலகு” என்ற திருவாய்மொழியில் நம்மாழ்வார் மாவாய் பிளந்ததைப் பாடியிருப்பதால் ஆண்டாளும் ”மாவாய் பிளந்த” கதையை இந்தப் பாட்டில் குறிப்பிட்டிருக்கிறாள்.

கூவிக்கொள்ளும் காலமின்னங் குறுகாதோ, என்னைக் கூவியருளாய் கண்ணனே, கூவிக்கொள்ளாய் வந்தந்தோ, விரும்பினபடியே கூவுவான் வந்து என்றெல்லாம் நம்மாழ்வாரும் முன்னம் பாடியிருப்பதால் அதைக் குறிக்கும் வகையில் ”உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்” என்று இந்தப் பாட்டில் வருகிறது.

அதே போல ஆவாவென்று என்ற பதமும் ஆராய்ந்து அருள் என்ற பதமும் நம்மாழ்வாரால் பயன்படுத்தப்பட்டிருப்பதாலும் இப்பாடல் நம்மாழ்வாரைத் துயிலெழுப்புதாகக் கருதப்படுகிறது. “ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்” என்பது இந்தத் திருப்பாவையின் கடைசி வரி.
************************************************************************************************************************
அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

5 Responses to 8. கொக்கு அறு கோ

 1. அருமையான எளிமையான நற்தமிழ் விளக்கம் ஜிரா
  எருமை சிறு வீடு மேய்வான் பரந்தன – நீங்க சொன்ன அர்த்தம் சரியே, ஒரு விஷயம், இந்த பனியில் நனைந்த புல்லின் நுனி எருமைகளுக்கு ருசியாக இருக்கு என்பர்.

  போகின்றாரைப் போகாமல் காத்து – ஏன்? ஆண்டாள் எல்லாரையும் எழுப்பிக் கூட்டிசெல்ல வேண்டும் என்பதே வைணவ தத்துவம், ததீதயரோடு (சுற்றம்) கோஷ்டியாகச் சென்று பரமனைப் பற்றுவதே வைணவ வழி, அதுவே போற்றத்தக்கது…… யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ….. அனைவருக்கு அவனருள் கிட்ட வேண்டும் …. மிக முக்கியக் கோட்பாடு

  ஆவாவென்று ஆராய்ந்து — ஆவல் மட்டுமில்லை, “ஆஹா:வுக்கு பல பொருள்கள், அகமகிழ்ந்து, விரைவாக, பாராட்டி,

  எ.அ.பாலா

  • GiRa ஜிரா says:

   பனியில் நனைஞ்ச புல், அப்ப பிரெஷ்ஷா பறிச்ச கேரட்டை நல்லாக் கழுவி அப்படியே சாப்புடுறமாதிரி இருக்கும் போல 🙂

 2. ”ஆஹா”வுக்கு இன்னும் 2 பொருள்கள் —- கருணையுடன், ஆச்சரியத்துடன் …போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா ? :-))))

  • GiRa ஜிரா says:

   போதும்னு எப்படிச் சொல்ல முடியும் பாலா? நீங்க சொல்லுங்க தெரிஞ்சிக்கிறேன் 🙂

 3. amas32 says:

  நம்மாழ்வார் விளக்கம் அருமை.

  amas32

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s