பாருருவாய பிறப்பு

நல்ல தமிழ் இலக்கியப்பாடல்கள் சிறந்த இசையமைப்போடு வரும் போது எனக்கு மனசெல்லாம் சில்லுன்னு பூ பூத்துரும்.

தாரை தப்பட்டை படத்துல மாணிக்கவாசகரோட எண்ணப் பதிகத்துல இருந்து ரெண்டு பதிகங்கள் இளையராஜா இசைல வந்தா சந்தோஷப்படாம இருக்க முடியுமா என்ன? இளையராஜாவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி! அப்படியே நாலஞ்சு திருப்புகழுக்கும் இசையமைச்சா நான் இன்னும் நல்லா சந்தோஷப்பட்டுக்குவேன்! 🙂

Nataraja_and_Manikkavasakar.pngஅனேகமா இந்தப் பாட்டுகளை பாலாவுக்கு எடுத்துக் கொடுத்ததே ராஜாவாத்தான் இருக்கனும்னு நெனைக்கிறேன். இந்தப் பாட்ட பேக்ரவுண்டுல வர்ர மாதிரி பாலா பிச்சுப் பிச்சுப் போடாம முழுசாப் பயன்படுத்தனும்னு சிவபெருமானை வேண்டிக்கிறேன்.

இந்தப் பாட்டு தொடங்குனதும் ஒரு நொடி எஸ்.ஜானகி பாடுறாங்களோன்னு தோணுச்சு. அப்புறம் பாத்தா சுர்முகி. ரெண்டாவது பதிகத்தைப் பாடியிருக்காரு சத்தியப்பிரகாஷ்.

மாணிக்கவாசகர் பாடிய இந்தப் பதிகங்களுக்கு எண்ணப் பதிகங்கள்னு பேர். தில்லை எனப்படும் சிதப்பரத்துல இதைப் பாடினார். தன்னோட குறிக்கோள் என்னன்னு சிவபெருமான் கிட்ட சொல்லி அதை நிறைவேத்துன்னு வேண்டுறதுதான் இந்தப் பதிகங்களோட மையக்கருத்து. அவரோட குறிக்கோளெல்லாம் பிறப்பறுக்க வேண்டுங்குறதுதான். பின்னே நம்மள மாதிரி காசு பணம் ஆரோக்கியம் சந்தோஷம்னா கேப்பாரு?

பாருருவாய பிறப்பற வேண்டும்-னு தொடங்குற பதிகத்தையும் பத்திலனேனும் பணிந்திலனேனும்-னு தொடங்குற பதிகத்தையும் புரிஞ்சிக்க லேசா சீர் பிரிச்சுக் கொடுத்திருக்கேன். அதுக்கான விளக்கமும் சொல்லிருக்கேன்.

பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும் பத்திமையும் பெற வேண்டும்
சீர் உரு ஆய சிவபெருமானே செம் கமல மலர் போல
ஆர் உரு ஆய என் ஆர் அமுதே உன் அடியவர் தொகை நடுவே
ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டருளே

பத்து இலன் ஏனும் பணிந்திலன் ஏனும் உன் உயர்ந்த பைம் கழல் காணப்
பித்து இலன் ஏனும் பிதற்றிலன் ஏனும் பிறப்பு அறுப்பாய் எம்பெருமானே
முத்து அனையானே மணி அனையானே முதல்வனே முறையோ என்று
எத்தனையானும் யான் தொடர்ந்து உன்னை இனிப் பிரிந்து ஆற்றேனே

பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும் – உலகத்தில் தோன்றுகின்ற உருவங்களைக் கொண்டு வாழும் இந்தப் பிறப்பு விட்டுப் போகவேண்டும்
பத்திமையும் பெற வேண்டும் – (பிறப்பற்றுப் போவதற்காக) உன் மீது நீங்காத அன்பும் நான் பெற வேண்டும்
சீர் உரு ஆய சிவபெருமானே  – (உலகத்தின்) சிறப்பான உருவமாகிய சிவபெருமானே
செம் கமல மலர் போல ஆர் உரு ஆய என் ஆர் அமுதே – செந்தாமரை மலர் போன்று அரிய உருவத்தை உருடைய என்னுடைய சிறந்த அமுதே
உன் அடியவர் தொகை நடுவே ஓர் உரு ஆய – உன்னுடைய அடியவர்கள் கூட்டத்தின் நடுவில் என்னையும் ஒருவனாக மாற்ற
நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டருளே – உன்னுடைய திருவருளைக் காட்டி என்னையும் உய்வித்து அருள்க!

பிறப்பு என்பது இந்த உலகத்தின் உயிர்களில் ஏதாவது ஒன்றின் உருவத்தில் வருவது. இந்தப் பிறப்பு முடிந்தால் அடுத்தது. அது முடிந்தால் அதற்கும் அடுத்தது. இப்படிப் பிறந்து வாழ்ந்து துயர் படுவதை விட இந்தப் பிறவி தொலைந்து மீண்டும் பிறவா வரம் வேண்டும். அந்த நிலை உண்டாவதற்கு முதலில் இந்த உலகத்தின் மீதும் உலக இன்பங்கள் மீதும் பற்று அற்றுப்போக வேண்டும். உள்ள அன்பு முழுவதையும் பரம்பொருளாகிய உன் மேல் வைக்க வேண்டும்.

உலகத்தின் தோற்றமாகவே சிறப்பாக நிற்கும் சிவபெருமானே! செந்தாமரை மலர் போன்ற செழுங்கொழுந்தைப் போன்ற அரிய உருவத்தையுடைய சிறந்த அமுதமே! உன்னுடைய அடியவர் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருப்பதற்கு உன்னுடைய திருவருளைக் காட்டி என்னை உய்விக்க வேண்டும் பரம்பொருளே!

அடியவரோடு அடியவராக இருந்தால் உலக ஆசைகள் மறந்து பக்தி வரும். பக்தி வந்தால் இந்தப் பிறப்பும் இனி வரும் பிறப்பும் போகும். அதற்கு அருள வேண்டியவர் எம்பெருமானே என்பது மாணிக்கவாசகர் கருத்து.

பத்து இலன் ஏனும் பணிந்திலன் ஏனும் – நான் பக்தி இல்லாதவன் ஆனாலும் பணிவு இல்லாதவன் ஆனாலும்
உன் உயர்ந்த பைம் கழல் காணப் பித்து இலன் ஏனும் – உன்னுடைய உயர்ந்த பைங்கழகளைக் காண்பதற்கு ஆசை இல்லாதவன் ஆனாலும்
பிதற்றிலன் ஏனும் பிறப்பு அறுப்பாய் எம்பெருமானே – உன்னுடைய பெயரைச் சொல்லிப் பிதற்றாதவன் ஆனாலும் (என்னுடைய) பிறப்பை அறுப்பாய் எம்பெருமானே!
முத்து அனையானே மணி அனையானே முதல்வனே – நல்முத்தைப் போன்றவனே! சுடர்மணியைப் போன்றவனே! முழுமுதல்வனே!
முறையோ என்று – இந்தப் பிறப்பில் நான் உழன்று தவிப்பது முறையோ!
எத்தனையானும் யான் தொடர்ந்து – எப்படியாவது நான் உன்னைத் தொடர்ந்து வந்து திருவடி அடைய வேண்டும்.
உன்னை இனிப் பிரிந்து ஆற்றேனே – இனியும் உன்னைப் பிரிந்து நான் தவிக்க வேண்டாம் ஐயனே! எம்பெருமானே!

இறைவனை அடைவதற்கு எத்தனையோ வழிகள். அதில் ஒன்று கூட நமக்குத் தெரிவதில்லை. இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்கிறோமே ஒழிய, உண்மையான அன்பை இறைவன் மீது வைத்திருக்கிறோமா? அப்படிப் பட்ட பக்தி இல்லாமல் போனாலும், இறைவனைப் பணிகின்ற பண்பு இல்லாமல் போனாலும், இறைவன் திருவடிகளை அடைய வேண்டுமென்ற தீராத ஆசை இல்லாமல் போனாலும், ஆண்டவனுடைய அரும் பெயரை அன்புருகச் சொல்லாமல் போனாலும், எம்பெருமான் அருள் செய்து இந்தப் பிறப்பு என்னும் துன்பத்திலிருந்து காக்க வேண்டும்.

நல்முத்தைப் போன்றவன் பரம்பெருமான். ஒளிவீசும் மணிச்சுடரைப் போன்றவன் சிவபெருமான்.  அவருடைய திருவடிகளைச் சேராமல் இன்னும் இருப்பது முறையாகுமா? எப்படியாவது ஏதாவது ஒரு வழியில் இறைவனை அடைய வேண்டும். முழுமுதல்வனாகிய ஈசனே! இனியும் உன்னைப் பிரிந்து தவிக்கத்தான் வேண்டுமா? கருணை காட்டுவாய் இறைவா!

நாம் என்ன குறையுள்ளவராக இருந்தாலும் இறைவன் நம்மை ஏற்றுக் கொண்டு அருள் செய்ய வேண்டும் என்பது திருவாதவூராரின் கருத்து.

பாட்டோட பொருள் தெரிஞ்சிருச்சுல்ல. இப்ப பாட்டை இன்னொரு வாட்டி கேளுங்க.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in இசைஞானி, இறை, சிவண், திருவாசகம், திரையிசை, பக்தி, மாணிக்கவாசகர். Bookmark the permalink.

9 Responses to பாருருவாய பிறப்பு

 1. amas32 says:

  எல்லா பக்தி மார்கத்திலும் கடைசி இலக்கு பிறவா வரம் தான். அதை அடையவும் அவன் அருள் தான் வேண்டும். ஆம்டாளும் பெருமாளிடம் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய் என்கிறாள், மாணிக்கவாசகரும் சிவனிடம் உன் மீது நீங்காத அன்பு பெற வேண்டும் என்று கேட்கிறார்.

  நீங்கள் விளக்கம் அளித்த பிறகு பாடல் எளிமையாகிறது, நன்றி 🙂

  amas32

  • GiRa ஜிரா says:

   பிறவாத வரம் வேண்டும்
   என் பிழையாலே நான் மீண்டும் பிறந்து விட்டால்.. உன்னை மறவாத வரம் வேண்டும்.
   அடியவர்கள் இதை விட என்ன கேட்டுறப் போறாங்கம்மா 🙂

 2. S says:

  nandri nandri

 3. Logesh Aravindan says:

  சீர் பிரித்து விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி, ஐயா! எவ்வளவு அர்த்தம் பொதிந்த பாடல்!

  • GiRa ஜிரா says:

   மிக்க நன்றி. படித்து ரசித்தது மகிழ்ச்சியளிக்கிறது 🙂

 4. surendran says:

  அருமையான பதிவு வாழ்த்துக்கள்

 5. அ. ராஜ்குமார் says:

  பொருள் புரிந்து பாடலைக் கேட்கும் போது மனம் கரைகிறது.வெறும் மாவு உருண்டைகள் ஜீரா எனப்படும் சர்க்கரைப் பாகில் ஊறும் போது பூந்தி, குலாப் ஜாமூன் என்று பிரியமான தின்பண்டங்களாக மாறுவதைப் போல, பொருள் நிறைந்த பழம்பாடல்கள் ஜிராவின் எழுத்துக்களில் ஊறிவரும் போது கூடுதல் சுவை பெறுகிறது. நன்றி ஐயா! தொடரட்டும் பணி!!

  • GiRa ஜிரா says:

   படித்து இரசித்துப் பாராட்டியமைக்குக்கும் ஊக்கத்துக்கும் நன்றி 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s