9. பேசா வாய் கேளாச் செவி

திருவில்லிபுத்தூராகிய ஆயர்ப்பாடியில் மிகவும் செழித்த வீடு அது. அங்கும் ஒரு தோழி. வேய்த்தோளி என்று பெயர். அவளும் இன்னும் எழுந்திரிக்கவில்லை. அவள் உறங்கிக் கொண்டிருக்கும் மாடமானது தூய மணிகள் பதிக்கப்பட்ட அழகிய மாடம். அந்த மாடத்தில் விளக்குகள் சுற்றியும் எரிந்து கொண்டிருந்தன. அறையெங்கும் தூபக்கால்கள் இட்டு நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. அந்த சொகுசோடு கட்டிலில் பஞ்சணை மேல் துயில் கொண்டிருந்தாள் அவள். அவளை உறவு சொல்லி அழைத்து எழுப்புகிறாள்.

Keshav-9

Thanks to Keshav!

”மாமன் மகளே வேய்த்தோளி, மணிக்கதவை திற.”

ஆனாலும் அவள் எழுந்திருக்கவில்லை. அதற்குள் கோதையரின் அழைப்பைக் கேட்டு வருகிறார் வேய்த்தோளியின் தாய். அவரையே எழுப்பச் சொல்கிறாள் ஆண்டாள்.

”மாமி, உங்கள் மகளை எழுப்புங்கள். இன்னும் உறங்குகிறாளே.”

“நானும் அப்பொழுதிலிருந்து எழுப்புகிறேன், கோதை. கொஞ்சமும் தூக்கம் கலையாமல் கிடக்கிறாள் அவள்.”

“ஒருவேளை எழுந்திருந்தாலும் மறுமொழி தராமல் ஊமையைப் போல் இருக்கிறாளோ? அல்லது நாங்கள் அழைப்பது கேட்காதது போல செவிடாக நடிக்கிறாளோ? அல்லது சோம்பேறியானாளோ? இன்பமான பெருந்தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டாளோ?”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லையம்மா. நீங்கள் திருமாலின் திருப்பெயர்களைச் சொன்னால் அவள் தானாக எழுந்து வருவாள்.”

மாமி சொன்ன யோசனையை உடனே செயல்படுத்தினாள்.

“அடி தோழி வேய்த்தோளி, மாமாயன் மாயவன் வைகுந்தன் என்று இறைவனின் பலப்பல பெயர்களை நான் சொல்வதை நீ கேட்டு கருத்தில் வைப்பாய் எம் பாவையே!”

வேய்த்தோளியும் நொடியில் கண்விழித்துப் புறப்பட்டு, படியில் கால் வைத்து வெளியே வந்து கோதையோடு சேருகிறாள்.

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாயவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத் – தூய மணிகள் பதிக்கப்பட்ட மாடத்தில் நல்ல விளக்குகள் நின்று எரிய

தூபம் கமழத் – தூபக்கால்களில் அகில் போன்ற நறுமணப்புகை கமழ

துயிலணை மேல் கண் வளரும் மாமன் மகளே – கட்டிலின் மேல் பஞ்சணையில் உறங்கும் மாமன் மகளே

மணிக்கதவம் தாழ் திறவாய் – வீட்டின் மணிக்கதவின் தாழ் திறந்து வா

அடுத்த வரிகளுக்குப் போகும் முன் இரண்டு கருத்துகளைச் சொல்லிவிடுகிறேன்.

தூபம் கமழ என்பதற்கு நறுமணம் கமழ என்றே எல்லா உரைகளிலும் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்கு நான் சற்று வேறுவிதமாகவும் யோசித்தேன். காலை வேளையில் நறுமணம் கமழத் தூங்குவார்களா என்ன? அதுவும் விளக்கு எரிய விட்டுக் கொண்டு?

மின்சாரம் இல்லாத அந்தக் காலத்தில் night lamp ஏது? இரவில் எழுந்தால் தட்டுத் தடுமாற வேண்டியதுதானா? இல்லை. அதற்குத்தான் மாடக்குழிகளை வீடுகளில் வைத்திருப்பார்கள். இன்றைக்கும் பழைய வீடுகளில் மாடக்குழிகளைக் காணலாம். அந்த மாடக்குழிகளில் விளக்கு வைத்துக் கெட்டியான விளக்கெண்ணெய் அல்லது இலுப்பையெண்ணெய் ஊற்றி விளக்கேற்றுவார்கள். அதுவும் மெல்லிதாக எரியும்படி திரியை எண்ணெய்க்குள் முழுக்கி வைப்பார்கள். இரவெல்லாம் எரிந்து காலையில் எண்ணெய் தீர்ந்து விடும். அப்போது எழுகின்றவர்கள் விளக்கை அணைத்து விடுவார்கள். அப்படி அணைக்காவிட்டால் திரி முழுவதும் எரிந்து கருகி புகை எழும். அந்தப் புகையின் நெடி பரவும். அப்போதும் தூங்குகின்ற தோழியே என்றும் எனக்குப் பொருள் கொள்ளத் தோன்றியது.

இன்னொன்று கண் வளர்வது. அத்தைமடி மெத்தையடி பாடலில் “அல்லிவிழி மூடம்மா” என்று எழுதியது ஒருவகையில் தவறு. கண் மூடுவது என்பதற்குப் பொருள் வேறு. அதனால்தான் உறங்குவதற்கு கண் வளர்தல் என்று வழங்கப்படுகிறது. அதையே கோதையும் இங்கு பயன்படுத்துகிறாள்.

மாமீர் அவளை எழுப்பீரோ – மாமி, அவளை எழுப்புங்கள்

உன் மகள்தான் ஊமையோ – உங்கள் மகள் என்ன ஊமையா? (நாங்கள் அழைத்தால் பதில் பேசாமல் இருக்கிறாளே)
அன்றி செவிடோ – அல்லது செவிடா? (நாங்கள் அழைப்பது கேட்காதது போல் நடிக்கிறாளோ?)
அனந்தலோ – சோம்பேறியோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ – இன்பமாகப் பெருந்தூக்கத்தில் வீழ்ந்தாளோ? (ஏமப் பெருந்துயில் என்றால் coma. பெருந்துயில் நீண்ட தூக்கம். ஏமம் என்றால் இன்பம்.)

மாமாயன் மாயவன் வைகுந்தன் என்றென்று – பெரிய மாயனென்றும் மாயவன் என்றும் வைகுந்தன் என்றும்
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய் – பெயர்கள் பலவற்றையும் நான் சொல்லச் சொல்லக் கேட்டு நெஞ்சில் நிறுத்திக் கொள்வாய் எம் பாவையே!

மாமாயன் என்ற பெயரைச் சில இடங்களில் மா + ஆயன் என்று பிரித்திருந்தார்கள். இலக்கணப்படி அப்படிப் பிரிக்க முடியாது. ஆக மாமாயன் என்பது பெரிய மாயங்களைச் செய்கின்றவன் என்ற பொருளில் வரும். அடுத்த பெயரைப் பாருங்கள். மாயவன். மாயம் அவன். மாயங்களைச் செய்கின்றவனே அந்த மாயங்களாகவும் இருக்கின்றான். அந்த மாயத்தில் நாமும் ஆழ்ந்தால் என்ன கிடைக்கும்? வைகுந்தம். அதனால்தான் கடைசியாக வைகுந்தன் என்ற பெயரைச் சொல்கிறாள் ஆண்டாள்.Paavai-09
************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
தூமணி – தூய + மணி
துயிலணை – துயில் + அணை – படுக்கை
அனந்தல் – சோம்பேறி
ஏமம் – இன்பம்
மாமாயன் – மா + மாயன் – பெரிய மாயன்
நவின்றேலோர் – நவின்று + ஏல்(கேட்டு) + ஓர்(நினைவில் வை)
************************************************************************************************************************
இந்தப் பாடலில் திருமழிசையாழ்வாரைத் துயிலெழுப்பப்படுவதாக சம்பிரதாய விளக்கம் சொல்கிறது.

திருமகள் பிருகு குலத்தில் தோன்றியவள். திருமழிசையாழ்வார் பிருகு குலத்தில் பிறந்திருப்பார் என்று கருதப்படுகின்றவர். ஆகையால் அவர்களுக்குள் உறவுமுறை இருப்பதால் “மாமன் மகளே” என்று திருமகளின் அம்சமான ஆண்டாள் இந்தப் பாடலில் சொல்லியிருக்கிறாள்.
இந்தக் கருத்தைப் படிக்கும் போது வேறொரு நயம் தோன்றியது. திருமழிசைப்பிரான் பிருகு குலத்தில் பிறந்தார் என்று கருதப்பட்டாலும் அவர் கண்டெடுக்கப்பட்ட குழந்தை. ஆண்டாளும் கண்டெடுக்கப்பட்ட குழந்தை. இல்லாதவருக்கு இல்லாதவரே உறவு என்பது போல நினைத்தும் ஆண்டாள் உறவு சொல்லியிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

பட்டை தீட்டாத மாணிக்கம் கரடுமுரடாக இருக்கும். அப்படி இருந்து “உட்கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே” என்று திருமழிசையாழ்வார் வேண்டிக்கொண்டதால் தூயமாணிக்கமாக ஆனார் என்று சொல்வார்கள். அதனால்தான் அதைக் குறிக்கும் வகையில் ஆண்டாள் தூமணி என்று தொடங்குவதாகவும் கருத்து.

அதேபோல் பலசமயக் கருத்துகளையும் கற்றவர் திருமழிசையாழ்வார். பௌத்தம் சமணம் சைவம் ஆகிய சமயநூல்களைக் கற்றவர். சைவராக இருந்த இவர் மயிலையில் இருந்த பேயாழ்வாரின் பழக்கத்தால் வைணவம் புகுந்தார். அதையொட்டி ”சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் சங்கரனார் ஆக்கிய ஆகமநூல் அறிந்தோம்” என்று திருமழிசைப்பிரானே சொல்வதால் பல கற்றுத் தேர்ந்த அவரது அறிவுச் சுடரைக் குறிப்பிட ஆண்டாள் “சுற்றும் விளக்கெரிய” என்று கூறியதாகவும் கருத்துண்டு. சைவராக இருந்த பொழுது சிவனருளால் பக்திசாரர் என்ற பெயர் இவருக்கு இருந்ததாகவும் கூறுவர்.

சயனத்திருப்பதிகளையே கோர்வையாக இவர் எடுத்துப் பாடியதால்தான் இந்தப் பாடலில் ஆண்டாள் உறக்கத்தைப் பற்றி அழுத்திச் சொல்வதாகவும் கருத்துண்டு.

வேதம் ஓதும் போது அந்தணர்கள் இவரைக் கீழாக நினைத்து காதில் படக்கூடாது என்று நினைத்து ஒதுக்கினர். ஆனால் அவர்களுக்கு விட்ட இடம் மறந்து போக, வாய் பேசாமல் சைகையால் எடுத்துக் கொடுத்ததைக் குறிப்பிட “ஊமையோ” என்றாளாம் ஆண்டாள்.

இன்னொரு வேள்வியில் அந்தணர்கள் இவரைத் தாழ்த்த, அதைக் கேட்காதது போல் இருந்ததைக் குறிப்பிட “செவிடோ” என்றாளாம் ஆண்டாள்.

மாயன் என்ற பெயரை அவர் நிறைய பயன்படுத்தியிருப்பதாலும் ஆண்டாள் இந்தப் பாடலிலும் மாமாயன் மாயவன் என்றெல்லாம் சொல்வதாகவும் கருத்துண்டு.
************************************************************************************************************************
அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

5 Responses to 9. பேசா வாய் கேளாச் செவி

 1. amas32 says:

  அருமை ஜிரா! கேசவ்வின் ஓவியம் பாசுரத்தை அப்படியே விளக்கிவிடுகிறது. உங்கள் பதிவுக்கு ஒரு கிரீடம் அவர் ஓவியம்!

  amas32

  • GiRa ஜிரா says:

   நன்றி மா. கேசவ்வின் ஓவியங்கள் பாசுரங்களை உள்வாங்கிக் கொண்டு வரையப்பட்டது. அவ்வளவு அருமை. நானும் ஒவ்வொருநாளும் ரசிக்கிறேன் 🙂

 2. ‘மாமாயன் மாதவன் வைகுந்தன்,’ அருள் அனைவருக்கும் கிடைப்பதாக.

 3. நன்று, 2 கருத்துகள் மட்டுமே.

  1. தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
  தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும் – வீட்டில் அனைவரும் எழுந்து விட்டனர், வழிபாட்டுக்கு விளக்குகளும் , நறும்புகை பத்திகளும் ஏற்றப்பட்டு விட்ட நிலையில், அந்த ஆரவாரத்திலும்அந்த பாகவதை உறங்குவதை ஆண்டாள் சுட்டுவதாகவும் பொருள் கொள்ளலாம். ஆனால், அவள் உறக்கத்தில் இல்லை, உன்னத கிருஷ்ண பக்தி மயக்கத்தில் திளைத்திருக்கிறாள்.

  2. மாமாயன் மாதவன் வைகுந்தன் – மாயத்தில் ஆழ்ந்தால், பரமபதம் தான், நன்று. நடுவில் வரும் மாதவனையும் சற்றே நோக்க வேண்டும்.
  மாதவன் = மா + தவன் = திருமகளின் மணாளன்.
  அதாவது, மாயத்தில் ஆழ்ந்தாலும், பிராட்டியின் அருள் வேண்டும், அவன் திருவடி நிழல் சாசுவதமாக அமைய! இத்தகைய பிராட்டியின் பரிந்துரையை வைணவத்தில் “புருஷகாரம்” என்பார்கள்.

  அன்புடன்
  பாலா

  • GiRa ஜிரா says:

   மாதவன் நடுவில் வருவதற்குச் சொன்ன விளக்கம் அருமை. மாயம் -> தவம் -> வைகுந்தம். மிகப் பொருத்தம்.

   தூப விளக்கமும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. நீங்க சொன்ன விளக்கத்தை வேறு எங்கும் படிக்கவில்லை. இது நான் சொன்னதை விடவும் மிகப் பொருத்தம்.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s