10. சொர்க்கம் பக்கத்தில்

ஒவ்வொரு தோழியாக எழுப்பிக் கொண்டு வருகையில் நந்தகி என்ற தோழியின் வீடு அடுத்து வருகிறது. அவளும் உள்ளே உறங்கிக்கொண்டிருக்கிறாள். அத்தோடு கதவும் அடைத்திருக்கிறது. அவளை வெளியிலிருந்தே அழைக்கின்றாள் ஆண்டாள்.

Keshav-10

Thanks to Keshav!

“பாவை நோன்பு நோற்று சுவர்க்கம் போகும் பெண்ணே… தூக்கம் கலைந்து எழுவாய்.”

நந்தகியிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. ஆனால் இளவெயினி ஒரு கேள்வி கேட்டாள்.

“கோதை, சுவர்க்கம் என்றால் என்ன?”

”வெயினி, சுவர்க்கம் அல்லது சொர்க்கம் என்பதற்குப் பொருள் நல்ல சுற்றம். அதாவது நல்லவர்களே நம்மைச் சுற்றியிருக்கும் நிலை. அது இறப்புக்குப் பின் கிடைக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்று அறியமாட்டார்கள். நான் செய்யும் நோன்புகளின் பலன் இன்பம். நோன்புகள் மட்டுமல்ல நாம் செய்யும் சேவைகளின் பலனும் இன்பம். அந்த இன்பநிலையை எய்தினால் நாம் இருக்கும் இடமே சுவர்க்கமாகும்.”

இவர்கள் இவ்வளவு பேசிக்கொண்டிருக்க, நந்தகி இன்னமும் கதவைத் திறந்து வரவில்லை.

”உன்னை நாங்கள் குரல் கொடுத்து அழைக்கிறோம். ஆனால் எந்த மறுமொழியும் தராமல் கதவையும் மூடிக் கொண்டிருக்கிறாயே! எழுந்து வா. நாம் வேண்டிய வரங்களை நமக்கு உறுதி சொல்ல வல்லவன் நறுமணத் துளசிமாலை அணிந்த நாராயணே! அவனைப் போற்றிப் பாடலாம். வா.”

இந்த அழைப்புக்கும் நந்தகியிடமிருந்து பதிலில்லை. கும்பகருணனின் நினைவு வருகிறது கோதைக்கு.

“அடிப் பெண்ணே… முன்பொருநாள் இலங்கை நகரினிலே இரகுகுல இராமன் போரிடச் சென்ற போது மாண்டானே கும்பகருணன். அவன் தன்னுடைய பெருந்தூக்கத்தை உனக்குக் கொடுத்துவிட்டானா? தீராத சோம்பல் உடையவளே! பொற்கலம் போல் ஒளிர்கின்றவளே! எழுவாய் முன்னிலை. இல்லை பயனிலை. எழுந்து தெளிவுடன் வந்து கதவைத் திறந்து நான் சொல்வதைக் கேட்டு நினைவில் நிறுத்துவாய் எம் பாவையே”

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் – நோன்பு நோற்று சுவர்க்கம் செல்லப் போகும் பெண்ணே

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் – (எங்கள் அழைப்புக்கு) மாறாக மறுமொழியும் தரமாட்டாயா? வாசலும் திறக்க மாட்டாயா?

நாற்றத் துழாய் முடி நாராயணன் – மணம் நிறைந்த துளசி சூடிக்கொண்ட நாராயணனே

நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் – நம்முடைய விருப்பங்களுக்கு உறுதி சொல்ல வல்ல இராமன். அந்த இரகுகுல நாயகனால்..

பண்டொரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும் – (இராமனால்) முன்பொருநாள் இலங்கையில் மாண்ட கும்பகருணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ – கும்பகருணன் தானும் தோற்கும் படி பெருந்துயிலை உனக்குத் தந்தானோ

ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே – அளவில்லாத சோம்பல் கொண்டவளே! துடைத்து வைத்த தங்கப் பாத்திரம் போல வனப்புடையவளே!

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய் – தெளிவோடு வந்து கதவைத் திறந்து நான் சொல்வதைக் கேட்டுக் கருத்தில் வைப்பாய் எம் பாவையே!

எழுந்ததும் முதலிலேயே முழுவுணர்ச்சி திரும்பாது. ஒவ்வொரு உணர்வாக விழித்துதான் கடைசியில் மொத்த விழிப்பு ஏற்படும். அப்படி மொத்த விழிப்பு ஏற்படும் முன்னால் நாம் எழுந்து நடக்க முற்பட்டால் தட்டுத் தடுமாற வேண்டியதுதான். தூக்கத்தில் யாரேனும் கதவைத் தட்டினால் பதறி எழுந்து விழுந்து எழுந்து இடித்துக் கொண்டு செல்வோம் அல்லவா. அப்படியெல்லாம் தட்டுத் தடுமாறி வராமல் முழு விழிப்புடன் வரவேண்டும் என்பதைத்தான் தமிழில் சுருக்கமாக தேற்றமாய் வந்து என்று சொல்லியிருக்கின்றார். அருமையான தமிழ்ச்சொல் தேற்றம் என்பது.

Paavai-10************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
சுவர்க்கம் – சு + வர்க்கம் – நல்ல சுற்றம்
துழாய் – துளசி
கூற்றம் – எமன், இறப்பு
அனந்தல் – சோம்பல்
தேற்றம் – தெளிவு

************************************************************************************************************************
இந்தப் பாடலில் ஆண்டாள் பேயாழ்வாரைத் துயிலெழுப்புவதாகக் கருதப்படுகிறது.

ஆழ்வார்களை அறிமுகப்படுத்தும் போது சொல்லப்படும் பிரபலமான கதை இது. திருக்கோவிலூரில் இடியுடன் மழை கூடிய இருட்டு வேளையில்  நனையாமல் இருப்பதற்காக ஒரு வீட்டின் இடைக்கழியில் ஒதுங்குகிறார் பொய்கையார். மழைநீர் தெறிக்காமல் இருக்க கதவையும் மூடிக் கொள்கிறார். அதே வீட்டின் கதவைத் தட்டி ஒதுங்குகிறார் பூதத்தார். மறுபடியும் கதவு தட்டப்படுகிறது. இப்போது பேயார். திடீரென அறையில் நெருக்கல். நான்காவதாக யாரோ இருப்பது தெரிகிறது.

இருட்டில் ஆள் தெரியவில்லை. ”வையமே தகளியா” என்று தொடங்கி நூறு பாசுரங்களில் முன்விளக்கு ஏற்றுகிறார் பொய்கையார். “அன்பே தகழியா” என்று நூறு பாடல்களில் பின்விளக்கு ஏற்றுகிறார் பூதத்தார். இவர்கள் இருவர் ஏற்றிய விளக்கின் சுடரிலேயே ஞானம் கிடைக்கிறது பேயாருக்கு. பேயார் பேயாழ்வாராக மாறி “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று நான்காவது ஆளான நாராயணனைக் கண்டு கொள்கிறார். முதல் இருவர் விளக்கு ஏற்றுவதை (நோன்பு) எனக்கொண்டால் பேயாழ்வார் தனியாக விளக்கு ஏற்றாமலே நாராயண ஞானம் உணர்ந்ததைக் குறிக்கும் வகையில் ஆண்டாள் “சுவர்க்கம் புகுகின்ற” என்று குறிப்பிடுகிறாள்.

முதல் இருவரும் இன்னொருவருக்காக கதவு திறக்க வேண்டியிருந்தது. ஆனால் பேயாழ்வார் கதவு திறக்கத் தேவையில்லாமலே நாராயணன் அங்கு வந்தான். அதைக் குறிப்பிட்டு “வாசல் திறவாதார்” என்று அழைத்து பேயாழ்வாரைக் குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.

தன்னுடைய பல பாசுரங்களில் திருத்துழாயைப் பெருங்காதலோடு பல இடங்களில் பாடியிருப்பதால் “நாற்ற நறுந்துழாய்” என்று பேயாழ்வாரைக் குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.

அதேபோல் “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று பேயாழ்வார் பாடியதைக் குறிக்கும் வகையில் “அருங்கலமே” என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தூமணி மாடத்து” என்ற திருப்பாவையில் அனந்தலோ என்று திருமழிசையாழ்வாரைக் குறிப்பிடும் ஆண்டாள், இந்தப் பாடலில் “ஆற்றா அனந்தலோ” என்று திருமழிசையாழ்வாரின் ஆசிரியரான பேயாழ்வாரைக் குறிப்பிடுகிறாள்.

சைவராக இருந்து வைணவராக மாறிய திருமழிசையாழ்வாரைச் சீடனாகக் கொண்டதால் பேயாழ்வாரும் சீடனைப் போலவே சைவக் கசப்பில்லாமல் இருந்திருக்கிறார். “தாழ்சடையும் நீள்முடியும் ஒண் மழுவும் சக்கரமும்” என்று பாடியதிலிருந்து இதை நாமும் உணரலாம்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

4 Responses to 10. சொர்க்கம் பக்கத்தில்

 1. amas32 says:

  நீங்கள் எழுதிய முதல் பகுதியை படித்த பின், எந்த ஆழ்வாரை இந்தப் பாடலில் குறிப்பிடுகிறாள் ஆண்டாள் என்று ஊகிக்க முயற்சி செய்வேன். இது ஒரு விளையாட்டு எனக்கு. இதுவரை நீங்கள் தான் அதிக மதிப்பெண், நான் o ;-} நேற்றைக்கு முந்தின தினம் பாசுரத்தில் குலசேகர ஆழ்வார் வந்து விட்டார், இல்லையெனில் இன்றைய பாடலுக்குப் பொருத்தமாக இருந்திருப்பார்.

  அருமையான விளக்கம், நன்றி :-}

  amas32

  • GiRa ஜிரா says:

   அம்மா.. ஒவ்வொரு வியாக்கியானத்திலும் ஒவ்வொரு ஆழ்வார் கூறப்பட்டிருக்கிறார். நீங்கள் நினைப்பதும் பொருத்தமாகவே இருக்கும். அதையும் குறிப்பிடுங்கள். நாங்களும் தெரிந்து கொள்கிறோம். அதில் சரி தவறு என்று எதுவுமே இல்லை. எல்லாம் சரிதான் 🙂

 2. அன்பின் ஜிரா,
  எளிமை தான் உங்கள் பலம். அருமையான பொருள் விளக்கம்.

  சுவர்க்கம் – நற்சுற்றம் என்று கொள்வது மிகத் தகும், ஏனெனில், நான் ஏற்கனவே ஒரு பின்னூட்டத்தில் சொன்னபடி, அடியவர் கூட்டத்துடன் பரமனைப் பற்றுவதே வைணவக் கோட்பாடு. அதற்குக் காரணமும் உள்ளது. ஒரு மிக நல்ல சுற்றத்துடன் பரந்தாமனை அடையும்போது, நமது குற்றம் குறைகளை அவன் அத்தனை கண்டு கொள்ளாமல், மன்னித்து திருவடி நிழல் அளிப்பானாம் …. தீவினை அகற்ற இதுவும் ஒரு வழி …. சொல்லலாம் இல்லையா?

  தேற்றம் – தேஜஸ் — வெறும் வனப்பு அல்ல, (பக்தி ஒளியுடன் ஆன) வனப்பு… அந்தப் பேரடியாளின் தேற்றத்தைப் பார்த்தாலேயே அவளை எழுப்ப வந்திருக்கும் பாகவதைகளுக்கு பக்தி மிகும்.

  அன்புடன்
  பாலா

  • GiRa ஜிரா says:

   நன்றி பாலா. எதை எழுதினாலும் என் மரமண்டைக்கு விளக்கிச் சொல்வது போல எழுதுவேன். அதனால் அந்த எளிமை வருகிறது போல 🙂

   தீவினை அகற்ற இதுவும் ஒரு வழி… தாராளமாகச் சொல்லலாம். பொருத்தமாகவும் இருக்கிறது. (இதெல்லாம் குறிச்சு வெச்சுக்கிட்டு வேற எங்கயாவது பயன்படுத்திக்கனும்) 🙂

   தேற்றம் – பக்தி ஒளியுடன் கூடிய வனப்பு. ஒப்புக்கொள்கிறேன்.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s