11. முற்றத்தில் முற்றும் பக்தி

Keshav-11

Thanks to Keshav!

இன்னொரு ஆயர் வீடு. அங்கு கௌமோதகி என்றொரு தோழி. அவளையும் விட்டுச் செல்ல முடியவில்லை. நல்லவேளையாக அவள் வீட்டுக் கதவு திறந்திருக்கிறது. வீட்டிலுள்ள மற்றவர்கள் எல்லாம் எழுந்துவிட்டார்கள். அதனால் வீட்டின் முற்றத்துக்கே வந்து அழைத்தாள் கோதை.

“தோழியே, உன்னுடைய இல்லத்தில் கன்று ஈன்ற மாடுகள் எண்ண முடியாத அளவுக்குக் கூட்டங்கூட்டமாக உள்ளன. அந்தக் கறவைகளின் பாலைக் கறக்கும் உன் வீட்டு ஆயர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? எதிரிகள் என்று யார் வந்தாலும் அவர்கள் திறமை அழியும்படி போர் செய்ய வல்லவர்கள். அந்தக் குற்றம் இல்லாத ஆயர்கள் வீட்டில் பிறந்த பொற்கொடியே எழுந்திரு.

புற்றில் உள்ள பாம்பினைப் போல் நெளியும் இடை கொண்டவளே! மயிலின் அழகிய சாயல் கொண்டவளே! எழுந்திரு.

உன் வீட்டின் முற்றம் வரை வந்து நானும் நமது தோழியரும் கருமுகில் வண்ணனான கண்ணன் பேரைப் பாடிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீ சிறிதும் அசையாமல் பேசாமல் உறங்குகிறாயே செல்லப் பெண்ணே!

நீ இப்படி உறங்குவது எதற்காகவோ! நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்து எழுந்து வா எம் பாவையே”

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து – கன்று ஈன்ற மாடுகளின் பெருங்கூட்டத்தைப் பால் கறந்து

கற்று என்பது கன்று என்பதைக் குறிக்கும். கற்றுக் கறவை என்றால் கன்றுக் கறவை. அதாவது கன்று ஈன்ற கறவை மாடுகள்.

சில விளக்கங்களின் கறவைகளோடு கன்றுகளும் கறந்தன என்று கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ”கற்றுக் கறவைக் கணங்கள்” என்பதற்கு அது பொருத்தமான விளக்கமாக எனக்குத் தோன்றவில்லை. சம்பிரதாய விளக்கத்தில் கன்றும் பால் கறந்தது என்பது இளம் வயதிலேயே ஞானம் பெற்றவர்களைக் குறிப்பதாகும். கண்ணன் வாழும் கோகுலத்தில் கன்றும் கறந்து சிறுவரும் ஞானியர் ஆயினர் என்பது மறைபொருள்.

செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும் குற்றம் ஒன்றில்லாத – பகைவர்களின் திறமை அழியும்படி போர் புரியும் குற்றமில்லாத ஆயர்கள்

இதில் கவனிக்க வேண்டியது “செற்றார் திறலழிய” என்று சொல்லியிருப்பது. பகைவர்களை அழிப்பது இல்லையாம். பகைவர்களின் போரிடும் திறமையை மட்டும் அழிப்பதாம். அதனால்தான் குற்றம் ஒன்றுமில்லாதவர்கள் என்கிறாள் ஆண்டாள்.

கோவலர் தம் பொற்கொடியே – (குற்றம் எதுவுமில்லாத) ஆயர்களின் பொற்கொடியே

புற்று அரவு அல்குல் – புற்றில் இருக்கும் பாம்பைப் போன்று நெளியும் இடை கொண்டவளே

புனமயிலே போதராய் – பசுமையான புனங்களில் திரியும் மயிலின் சாயலை உடையவளே எழுந்து வருக

பாம்புக்கு எதிரி மயில். விடத்துப் பாம்பைக் கண்ட விடத்துக் கொத்தித் தின்பது மயில். இந்த இரண்டிலும் உள்ள நல்ல பண்புகளை ஒன்றாகக் கொண்டவளே என்று தோழியைப் பாராட்டுகிறார். எதிரெதிர்த் துருவங்களாக இருந்தாலும் நல்லது எங்கிருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கொள்க.

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் புகுந்து – நானும் மற்ற தோழியர் அனைவரும் வந்து உன்னுடைய வீட்டு முற்றத்தில்

முகில் வண்ணன் பேர் பாட – முகில் வண்ணனாகிய கண்ணனின் பெயர்களைச் சொல்லிப் பாடும் பொழுது

சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ – செல்லப் பெண்ணாகிய நீ சிறிதும் சிதறாமல்(அசையாமல்) ஒன்றும் பேசாமல்

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய் – எதற்காக உறங்குகிறாய் என்பதன் பொருள் புரியவில்லையே!

இந்தப் பாடலில் ஒரு கருத்து மிகவும் ஊன்றிப் பார்க்கத் தக்கது. குற்றமற்றவர்கள் இறைவனின் அன்புக்குப் பாத்திரமானவர்கள். அப்படிப் பாத்திரமாவதற்காக கோதையும் மற்றைய தோழிப் பெண்டிரும் நோன்பு நோற்க வேண்டியிருக்கிறது. ஆனால் அதையெதுவும் செய்யாமலே அந்த ஆயர்கள் குற்றமற்றவர்களாக இருந்து இறைவனின் உள்ளத்தன்புக்கு உரியவராகி இறைவனையே உள்ளம் புகக் கொண்டனர்.

அது எப்படி?

அவரவர்க்கு வாய்த்த கடமையைக் குறைவின்றி மகிழ்வோடு நிறைவாகச் செய்து வருவதாலே அந்தப் பெருமை அவர்களுக்குக் கிடைத்தது. “வாய்த்த கடமைகள்” என்று இங்கு குறிப்பிடுவது பிறப்பினால் வாய்த்தவை அல்ல. அவரவர் விதிப்படி அவரவர்க்குக் கிடைத்த கடமைகள். செய்வதைத் திருந்தச் செய் என்று சொல்வதும் இதை ஒட்டியே. பக்தி ஒன்று மட்டுமே இறைவனை அடையும் வழி அல்ல என்று நான் பொருள் கொள்கிறேன்.

இன்னொரு தகவலும் அருமையானது. ஆயர்கள் வீட்டில் பால் கறப்பதற்கும் விவசாயிகள் வீட்டில் பால் கறப்பதற்கும் வேறுபாடு உண்டு. ஆயர்கள் இருக்கும் எல்லாக் கறவைகளிலும் கறப்பார்கள். கன்றுக்கும் விடுவார்கள். இதைத்தான் “கணங்கள் பல கறந்து” என்கிறாள் கோதை. ஆனால் விவசாயிகள் வீட்டில் அப்படி அல்ல. தொழுவத்தில் நிறைய கறவைகள் இருந்தாலும் வீட்டுக்குத் தேவையான ஒன்றிரண்டு மாடுகளில்தான் கறப்பார்கள். மற்ற மாடுகளின் பாலைக் கன்றுக்குட்டிகள்தான் குடிக்கும். ஏனென்றால் காளையும் பசுவும் விவசாயிக்கு மிகவும் தேவையானவை. அவை சிறப்பாக வளர அந்தப் பால் அவசியம்.

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்” என்ற வரிக்கு எதிரிகளின் திறமையை அழிக்கும்படி போர் செய்கின்ற ஆயர்கள் என்பது பொருள். ஆனால் இதற்கு ஒரு உட்பொருளும் உண்டு. கடவுள் சமயம் மறைகள் என்பதைப் பற்றியெல்லாம் சரியாகப் புரிதல் இல்லாதவர்கள் அழைக்கும் வாதங்களில் கலந்துகொண்டு, அவர்களின் தவறான கருத்துகளை மாற்றி நல்வழிப்படுத்துவதையும் இந்த வரி குறிக்கும். இது வைணவ ஆச்சார்யார்களை உள்ளுறையாக உணர்த்துவது.

அந்த ஆச்சார்யர்களோடு எப்போதும் இருக்கும் சீடர்களைக் குறிப்பிடத்தான் “கற்றுக் கறவை கணங்கள்” என்ற வரி. ஆச்சாரியார் ஆயர் என்றால் சீடர்கள் கறவைகள்தானே.

Paavai-11************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
கற்று – கன்று
கறவை – கறவை மாடுகள்
செற்றார் – பகைவர்
செரு – போர்(க்களம்)
அரவு – பாம்பு
அல்குல் – இடை
சிற்றாதே – சிற்றல் செய்யாமல். சிற்றல் என்பது சிதறுதல். இந்த இடத்தில் அசையாமல் என்று பொருள்.
எற்றுக்கு – எதற்காக

************************************************************************************************************************
இந்தப் பாடல் பூதத்தாழ்வாரைத் துயிலெழுப்புகிறது.

குற்றம் இல்லாத என்பது கருவடைந்து பிறக்காத பூதத்தாழ்வாரின் பெருமையைக் குறிக்கிறது. மலரில் தோன்றியதாகக் கருதப்படுபவர் அவர். முதலாழ்வார்கள் மூவருமே அயோநிஜர்கள். அதாவது தாய் வயிற்றில் கருவாகி உருவாகிப் பிறக்காதவர்கள்.

கோல் தேடியோடும் கொழுந்தே போன்றதே மால் தேடி ஓடும் மனம்” என்று பேயாழ்வார் தன்னைக் கொடியாகப் பாவித்துக் கொண்டு பாடியதால் “பொற்கொடியே” என்று இந்தப் பாட்டில் குறிப்பிடப்படுகிறார்.

பல இடங்களுக்கும் சென்று சமய வாதம் புரிந்து வென்றவர் பூதத்தாழ்வார். அதைத்தான் “செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்” என்று இந்தப் பாடலில் பூதத்தாழ்வாரைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

அல்குல் என்பது இடையைக் குறிக்கும். முதலாழ்வார்களில் பொய்கையாழ்வாருக்கும் பேயாழ்வாருக்கும் இடையில் உள்ளவர் பூதத்தாழ்வார். அதுமட்டுமல்ல, மெய்ஞானம் அடையும் வழியில் படிகள் மூன்று. ஞானம் பக்தி விரக்தி என்பன அவை.

விரக்தி – முதற்படி – இறைவனை உலகத்தில் எங்கெங்கும் தேடுவது. அதனால்தான் திருக்கோவிலூரில் “வையமே தகழியா” என்று பாடினார் பொய்கையார்.
பக்தி – இரண்டாம் படி – தேடலில் விரக்தி மறைந்து இறைவனை அன்பு செய்யும் பக்திவழியில் நாடுவது. அதனால்தான் “அன்பே தகழியா” என்று பாடினார் பூதத்தாழ்வார்.
ஞானம் – மூன்றாம் படி – பக்தியின் பல நிலைகளைக் கடந்து பரம்பொருளின் அருளால் மெய்ஞானம் அடைவது. அதைத்தான் “திருக்கண்டேன்” என்று பாடினார் பேயாழ்வார்.

இந்த மூன்றில் இடையில் இருப்பது பக்தி நிலை. அல்குல் என்பது இடையைக் குறிக்குமென்பதால் இடைநிலையாகிய பக்தி நிலையில் பாடிய பூதத்தாழ்வாரைத் துயிலெழுப்புவதாகக் கருதுவதும் பொருத்தமே.

உற்று வணங்கித் தொழுமின் என்ற பாசுரத்தில் முதன் முதலாக முகில் வண்ணம் பற்றிப் பாடிய ஆழ்வார் இவரே.  அதைக் குறிக்கும் வகையிலேயே “முகில் வண்ணன் பேர் பாடி” என்று இந்தப் பாட்டில் வருகிறது.

இறுதியாக ஒன்று. பூதத்தாழ்வார் என்று அவர் குறிக்கப்பட்டாலும் அவர் பெயரை போதத்தாழ்வார் என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். மைசூரில் உள்ள ஒரு கோயிலில் போதத்து ஆழ்வார் என்று எழுதிப் பார்த்திருக்கிறேன். போதம் என்றால் அறிவு/ஞானம். மெய்யறிவாகிய ஞானத்தில் ஆழ்வார் என்பதால் அந்தப் பெயர் வந்திருக்கலாம்.

************************************************************************************************************************
அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

6 Responses to 11. முற்றத்தில் முற்றும் பக்தி

 1. ‘Perfection in whatever we do’, திருந்தச் செய்தல் தனிப்பட்ட மனிதனின் முன்னேற்றத்தின் முதல்படி!பக்தி மட்டுமே இறைவனை அடையும் வழி அல்ல! -நல்ல கருத்துகள்.

  • GiRa ஜிரா says:

   உண்மை மா. தொண்டு செய்து பழுத்த பழங்களும் உண்டல்லவா.

 2. இதுவரை எழுதிய பாசுர இடுகைகளில் இது தான் மிகச் சிறப்பு, வாழ்க! அழகான பொருள் நய விளக்கங்கள் என்னைச் செழுமைப்படுத்தின, நன்றி.

  நீங்கள் கூறியபடி பக்தி மட்டுமே, முக்திக்கான பாதை அல்ல, ஞானமும், கர்மமும் கூடத் தான். ஆனால், ஞானம் எளிதில் வாய்ப்பதில்லை, உடல் சார்ந்த கடும்பணியும் சிலபலருக்கு இயலாமல் போகலாம். ஆனால், பக்தியை எளிதில் பற்றலாம். உள்ளத்தால் இறைவன் பால் தூய அன்பு செய்து, போற்றுவதற்கு வழி செலுத்த நன்மக்கள் கூட இருந்தாலே போதுமானது.

  அதோடு, இப்பாசுரத்தில் சுட்டப்பட்டுள்ள கோவலன் கர்மயோகத்தில் மிகச் சிறந்தவன், ஆயிரக்கணக்கான கறவைகளை பராமரிப்பதோடு, சோம்பல் இன்றி தினம் அவனே பால் கறக்கிறான் என்று எடுத்துக் கொள்ளலாம்.
  அன்புடன்
  பாலா

  • GiRa ஜிரா says:

   எல்லாப் புகழும் செகம் துதிக்கும் திருவாடிப்பூரத்து செகத்துதித்தாளுக்கே 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s