12. நினைத்தால் இனிப்பான்

அடுத்தது அம்பொய்கையின் வீடு. நிறைய எருமைக்கூட்டங்கள் கொண்ட வீடு. வீட்டைச் சுற்றிலும் சகதி. நீர்ச்சகதி அல்ல. பாற் சகதி. எங்கிருந்து வந்தது அந்தப் பால்? அதைத் சொல்லித்தான் அம்பொய்கையை எழுப்புகிறாள் கோதை.

Keshav-12

Thanks to Keshav!

“மடி நிறைய பாலின் சுமை அழுத்த, அதைத் தாங்காமல் கனைத்து, எருமைகள் தங்கள் கன்றுகளை நினைத்ததும் மடியில் தானாகப் பால் சுரந்து நிலத்தில் விழும். அந்தப் பால் அளவில்லாமல் நிறைந்து அந்த இடத்தையே சேறாக்கும்.

அப்படிப்பட்ட இல்லத்தின் உரிமையாளரான நற்செல்வனுடைய தங்கையே எழுந்திரு! தலையில் பனி கொட்டும் படி எவ்வளவு நேரம் உன் வீட்டு வாசலில் நின்று உன்னை எழுப்புவது?”

எருமை கனைக்கும் ஒலி கேட்டதே தவிர அம்பொய்கையின் குரல் கேட்கவில்லை. கோதையும் அழைப்பைத் தொடர்ந்தாள்.

”சீதையைச் சிறையெடுத்ததால் சினம் கொண்டு தென்னிலங்கை மன்னனை அழித்தான் அந்த சூரிய வம்சத்து இராமன். நினைத்தாலே இனிக்கின்ற அந்த மனதுக்கு இனிய இராகவேந்திரன் பெயரைப் பாடுவதற்காகவது உன் வாயைத் திற. ”

அவள் எழவில்லையே தவிர கோதை பாடுவதைக் கேட்டு மற்ற வீட்டுக்காரர்கள் என்னவென்று எட்டிப் பார்க்கிறார்கள். அம்பொய்கை இன்னும் தூங்குவது அவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது.

”தோழியே! இப்பொழுதாவது எழுந்திரு. இது என்ன இப்படியொரு ஆழ்ந்த உறக்கம்? அருகிலுள்ள அனைத்து இல்லத்தாரும் நீ இன்னும் தூங்குவதை அறிந்தனர். விரைந்து எழுந்து வந்து நோன்பில் கலந்து கொள்.”

ஒருவழியாக அம்பொய்கையும் எழுந்து நீராடிப் புறப்பட்டு தோழியரோடு சேர்ந்துகொண்டாள்.

கனைத்து இளம் கற்றெருமைக் கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்

கனைத்து இளம் கற்றெருமைக் – (மடியில் பால் நிறைந்து அழுத்த) கனைக்கின்ற கன்று ஈன்ற எருமைகள்

கன்றுக்கு இரங்கி நினைத்து முலை வழியே நின்று பால் சோர – கன்றுகளின் பசியை நினைத்து இரக்கத்தோடு நினைத்ததும் முலைகளிலிருந்து தானாகப் பால் சுரந்து

நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் – (சுரந்த பால்) நிலத்தில் விழுந்து நனைத்துச் சேறாகிய செல்வச் செழிப்பான இல்லத்தை உடைய நற்செல்வனுடைய தங்கையே

பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச் – தலையில் பனிவிழுந்தாலும் பொருட்படுத்தாது உன் வீட்டு வாசலில் நிற்கின்றோம்

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற – (சீதையைக் கவர்ந்ததால்) சினம் கொண்டு தென்னிலங்கை மன்னனை அழித்த

மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் – மனதுக்கு இனிய அந்த இரகுநாயகன் பெயர் சொல்லிப் பாடுவதற்காகவாவது வாய் திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம் – இனியாவது எழுந்திரு. இது என்ன பெருந்தூக்கம்?

அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய் – அனைத்து இல்லத்தாரும் (உன் பெருந்தூக்கத்தை) அறிந்து கொண்டனர். எழுந்து வந்து நோன்பில் கலப்பாய் எம் பாவையே!

எருமையிடம் பால் நிறைய இருக்கிறது. அந்தப் பாலால் எருமைக்குப் பயன் இல்லை. ஆனால் கன்றுகள் பலனடையும். கன்றுகள் பருகாமல் இருந்தாலும் கன்றை நினைத்து எருமைகள் பாலைச் சுரந்துவிடுகின்றன.

இறைவனுடைய கருணையும் அன்பும் அப்படித்தான். நிறைய இருக்கிறது. ஆனால் அது இறைவனுக்குத் தேவையில்லை. அந்தக் கருணையும் அன்பும் நமக்கானவை. நாம் அவற்றை விரும்பிச் சென்றாலும் செல்லாவிட்டாலும் கருணை பொழிவது என்பது இறைவனுடைய பண்பு. நம்முடைய நன்மையையே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றான் பரவாசுதேவன் என்பது இதன் உட்பொருள்.

சில விளக்கங்களில் எருமைகள் கறக்கப்படாமல் இருப்பதற்குக் காரணம் சொல்லப்படுகிறது. நற்செல்வன் என்று அழைக்கப்படவன் தன்னுடைய கடமையை மறந்து கண்ணனை நினைத்துக் கொண்டிருப்பதாலோ அல்லது கண்ணனோடு கூடித் திரிவதனாலோ பால் கறக்கப்படாமல் எருமைகள் கனைத்தனவாம்.

பசுக்களை விட எருமைகளே தமிழ் இலக்கியத்தில் வளமையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிறைய எடுத்துக்காட்டுகள் சொல்லலாம். ஒன்றேயொன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். கிட்டத்தட்ட இந்தப் பாடலின் கருத்தேதான் அதிலும் வரும்.

பகழிக்கூத்தர் என்னும் வைணவர் முருகன் மேல் பாடிய நூல் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ். அதில் திருச்செந்தூரைப் பற்றிச் சொல்லும் போது இந்த வரிகள் வருகின்றன.

பூம்பா சடைப் பங்கயத் தடத்திற்
புனிற்றுக் கவரி முலை நெரித்துப்
பொழியும் அமுதம்

தாமரை மலர்கள் நிரம்பிய குளத்திலே கன்று ஈன்ற எருமை இறங்கியது. அதன் பால் நிரம்பிய மடியைத் தாமரைத் தண்டு இடித்ததோ! குளத்து மீன் இடித்ததோ! ஏதோவொரு உணர்வில் தன்னுடைய கன்றை நினைத்து பால் முழுவதையும் அந்த ஆற்றில் சுரந்துவிட்டதாம் எருமை. அந்தப் பாலை நீரிலிருந்து பிரித்து உண்டதாம் அந்தக் குளத்து அன்னப்பேடு.

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற” என்ற பாடலில் இராமனைப் புண்ணியன் என்று சொன்ன கோதை, இந்தப் பாடலில் மனத்துக்கு இனியான் என்று பாராட்டுகிறாள். Sweet Heart என்று ஆங்கிலத்தில் சொல்வதற்கு அன்றே தமிழில் மனத்துக்கினியான் என்று சொல்லி வைத்தாள் ஆண்டாள்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி. இராமபிரானை மனத்துக்கு இனியான் என்று சொன்னவள், கண்ணனை ஏன் அப்படிச் சொல்லவில்லை?

அதற்கான காரணத்தை நாச்சியார் திருமொழியில் கூறியிருக்கிறாள் ஆண்டாள்.

கண்ணன் மனத்துக்கு இனியான் இல்லையாம். கடிக்கக் கசக்கும் வேப்பங்காயாம். வேப்பங்காயாவது கடித்தால்தான் கசக்கும். கண்ணனை நினைத்தாலே கசக்குமாம்.

ஆண்டாள் அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டாள் என்று தோன்றுகிறதா? இதோ நாச்சியார் திருமொழியிலிருந்து தரவு காட்டுகிறேன்.

வெற்றிக் கருள கொடியான்றன் மீமீ தாடா வுலகத்து
வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பே யாக வளர்த்தாளே
குற்ற மற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு
அற்ற குற்ற மவைதீர அணைய வமுக்கிக் கட்டீரே

இந்தப் பாடலில் “வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பே ஆக வளர்த்தாளே” என்ற வரிக்குப் பொருள் பார்த்தால் புரிந்துவிடும்.

வெற்ற வெறிதே என்றால் ஒருவருக்கும் பயனில்லாமல் என்று பொருள். கண்ணன் மேல் காதல் கொண்டுருகும் ஆண்டாள் போன்ற அடியவர்கள் எவருக்கும் பயனில்லாமல் வேப்பங்காயாக அவனைப் பெற்றதாய் யசோதை வளர்த்துவிட்டாளாம்.

இப்போது சொல்லுங்கள். கண்ணன் வேப்பங்காய்தானே? வேம்பைப் போலொரு மருந்துண்டோ? உள்ளத்தில் இருக்கும் அறியாமை என்னும் நோய் நீக்கும் மருந்தாகிய கண்ணனும் நமக்கு வேம்பே!

இறைவனுடைய பெயரை மனத்தினால் நினைப்பது இன்னும் நெருங்கத்தைக் கூட்டும். அதனால்தான் “மாயனை மன்னு வடமதுரை” பாடலில் “வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க” என்று கூறுகிறாள். இறைவனுடைய திருப்பெயர்களை நினைத்தாலே இனிக்கும்.

ஒரு நல்லது செய்ய வேண்டுமென்றால் பலர் கூடி வேடிக்கை பார்த்தாலும் விடாமல் செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிடுவதுதான் “அனைத்து இல்லத்தாரும் அறிந்து” என்று சொல்வது. அந்தத் தோழியை எப்பாடுபட்டாவது அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக நான்கு பேர் பார்த்தாலும் பொருட்படுத்தாமல் கூவுகிறாள் கோதைக் குயில்.

Paavai-12************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
செற்ற – வென்ற/அழித்த

************************************************************************************************************************
இந்தப் பாடலில் பொய்கையார் துயிலெழுப்பப்படுகிறார்.

காஞ்சிபுரத்தில் சொல்லிய வண்ணம் செய்த பெருமாள் கோயிலின் குளத்தில் தாமரை மலரில் தோன்றியவர் பொய்கையார். தாமரை மலரில் தோன்றியதால் திருமகளின் தங்கை என்ற உறவு பெறுகிறார். அதையே “நற்செல்வன் தங்காய்” என்ற குறிப்பு உணர்த்துகிறது.

பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சி அழுதேன்” என்று பொய்கையார் தன்னுடையை நிலையை வருந்திப் பாடியிருக்கிறார். அப்படி அழுது அழுது பொய்கையாரின் இல்லம் சேறானது போல இந்தப் பாடலிலும் “நனைந்து இல்லம் சேறாக்கும்” என்ற குறிப்பு வருகிறது.

முதன்முதலாகப் பேசத் தொடங்கும் போது கனைப்பது இயல்பு. முதலாழ்வார்களான மூவரில் பொய்கையாரே முதலில் “வையமே தகழியா” என்று மெய்ஞானம் பேசினார். அதைத்தான் “கனைத்து” என்ற பாடலின் முதற்சொல் குறிப்பிடுகிறது.

நற்செல்வன் தங்காய் என்பதை நற்செல்வன் தன் கை எனப் பிரித்து, நற்செல்வன் என்பது நம்மாழ்வாரையும், அவர் சொல்லச் சொல்ல எழுதிய மதுரகவியாழ்வாரை ”தன் கை” என்பதும் குறிப்பதாகவும் கருத்து உண்டு. எனக்குத் தெரிந்து தங்காய் என்பதை இலக்கணப்படி தன்+கை என்று பிரிக்க முடியாது என்றாலும் அனைவரும் அறிய இங்கு கொடுத்திருக்கிறேன்.

************************************************************************************************************************
அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

3 Responses to 12. நினைத்தால் இனிப்பான்

 1. ///இறைவனுடைய கருணையும் அன்பும் அப்படித்தான். நிறைய இருக்கிறது. ஆனால் அது இறைவனுக்குத் தேவையில்லை. அந்தக் கருணையும் அன்பும் நமக்கானவை. நாம் அவற்றை விரும்பிச் சென்றாலும் செல்லாவிட்டாலும் கருணை பொழிவது என்பது இறைவனுடைய பண்பு.///
  எச்சமயமாய் (Any time, Any religion) இருந்தாலும் இறையின் சாராம்சம் இது தான், அற்புதமாக அருளினீர்கள், ஜிரா அவர்களே 🙂

  //நற்செல்வன் என்று அழைக்கப்படவன் தன்னுடைய கடமையை மறந்து கண்ணனை நினைத்துக் கொண்டிருப்பதாலோ அல்லது கண்ணனோடு கூடித் திரிவதனாலோ //
  சரி தான், அதில் தவறும் இல்லை. தினச்சேவையை விட இறைசேவை முக்கியமானது என்பதால், அது குற்றமில்லை, அந்தச் சேவை என்பது கண்ணனுடன் சும்மா ஊர் சுற்றுவதாக இருந்தாலும் :-))) அதாவது சாதாரணம் vs அசாதாரணம்

  //இலக்குமணன், தன் தாய் சுமித்திரையின் கட்டளையை ஏற்று, ராமபிரான், சீதையுடன் வனம் சென்று, அவர்களுக்குத் தொண்டாற்றிய படியால், தன் குடும்ப வாழ்வின் கடமையை செய்யத் தவறியது போல தோன்றினாலும், அவன் குற்றம் புரிந்தவன் ஆக மாட்டான்.//
  இது என்னுடைய இடுகையில் உள்ளது. இராமபிரான் பற்றிப் பாசுரம் பேசுவதால், அவன் தம்பியைச் சுட்டுவது பொருத்தமானது தானே?

  பூம்பா சடைப் பங்கயத் தடத்திற்
  புனிற்றுக் கவரி முலை நெரித்துப்
  பொழியும் அமுதம் ——————–
  திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் வரிகளை உவமைக்கு எடுத்தாண்ட விதம் மிக நன்று.

  //இப்போது சொல்லுங்கள். கண்ணன் வேப்பங்காய்தானே? வேம்பைப் போலொரு மருந்துண்டோ? உள்ளத்தில் இருக்கும் அறியாமை என்னும் நோய் நீக்கும் மருந்தாகிய கண்ணனும் நமக்கு வேம்பே!//
  ஆஹா, என்ன நயம்….. 100% ஒப்புக் கொள்கிறேன் 🙂

  மனத்துக்கினியான் என்றால், ஸ்வீட் ஹார்ட்டா ? ஆண்பால், பெண்பால் இரண்டுக்கும் பொருந்தும் போல 😉

  ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை (’தில்லுமுல்லு’ அல்ல!) குறிக்க இராகவேந்திரன் என்ற சொல்லை பயன்படுத்தியதும் நன்று 🙂
  இராகவேந்திரன் = இராகவ + இந்திரன் … அதாவது ரகு(சூரிய) குலத்தில் உதித்த தலைவன்

  அன்புடன்
  பாலா

  • GiRa ஜிரா says:

   // தினச்சேவையை விட இறைசேவை முக்கியமானது என்பதால், அது குற்றமில்லை…. இராமபிரான் பற்றிப் பாசுரம் பேசுவதால், அவன் தம்பியைச் சுட்டுவது பொருத்தமானது தானே? //

   அப்பாடி. இப்போது புரிந்தது. தன் கடமையை விட்டுவிட்டு கண்ணனோடு சுற்றுவதை எப்படிச் சரியென்று சொல்வது என்று குழம்பிக்கொண்டிருந்தேன். இலக்குவன் இராமனோடு சேர்ந்து சுற்றியதைச் சொல்லிப் புரியவைத்துவிட்டீர்கள். அருமையான எடுத்துக்காட்டு.

   இராகவன்.. இராகவேந்திரன் வேறுபாடு வால்மிகி கற்றுக்கொடுத்தது. தயரததும் பரதனும் இலக்குவனும் கூட இராகவன் கேட்டகிரிக்குள் அடங்க முடியும். ஆனால் இராகவேந்திரன் என்பவன் இராமன் என்பதால் அந்தப் பெயரைப் பயன்படுத்தினேன்.

   தில்லுமுல்லு ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியை மறக்க முடியுமா.. 🙂

 2. amas32 says:

  இடுகை பிரமாதம்! பின்னூட்டம், அதற்குப் பதில் என்னும் இணைய சத்சங்கத்தில் திளைத்து மகிழ வாய்ப்பளித்த அந்த கோதைக்கு என் மனமார்ந்த நன்றி :-}

  amas32

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s