13. இரண்டும் ஒன்றல்லவோ

நாராயணி என்ற தோழியும் இன்னும் வரவில்லை. அவள் தூக்கத்தில் இல்லை. ஆனால் பெயருக்கேற்றவாறு அந்தக் கண்ணனை மனதில் நினைத்துக் கொண்டேயிருக்கிறாள். அந்த மோனத் தவநிலையில் விடிந்ததும் அவளுக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்டவளை அழைக்காமல் இருப்பாளா கோதை?

Keshav-13

Thanks to Keshav!

”வெண்மலரும் கருவண்டும் சேர்ந்தது போன்ற அழகிய கண்களை உடையவளே! பறவைகளும் சிலம்புகின்றன. வானில் விடிவெள்ளி முளைத்த வெளிச்சத்தில் வியாழனும் மங்கிப் போனது.”

ஆனாலும் நாராயணி எழுந்திருக்கவில்லை. ஆயர்ப்பாடியில் இருந்துகொண்டு..கண்ணனையே நினைத்துக் கொண்டு..அவனோடு விளையாட விருப்பம் கொண்டு..அவனைச் சேரவும் நோன்பு நோற்றுக் கொண்டிருக்கும் வேளையில் “மனத்துக்கு இனியான்” என்று இராமனைப் பாடுகிறாளே கோதை என்று அவளுக்கு ஒரு வருத்தம். கிருஷ்ணானந்ததில் இருப்பவளுக்கு கோதையின் போக்கில் சிறிய மனத்துணுக்கம்.

”அடி கோதை. நீங்களே அந்த ஏகபத்தினி விரதனைக் கொண்டாடிக் கொண்டு நோன்புக்குச் செல்லுங்கள். நான் கண்ணன் காதலி. கண்ணன் உள்ளத்தைக் கன்னம் இட்ட நான் வேறொருவரைத் தேடேன். பாடேன். நாடேன். கூடேன்.

நாராயணியின் எண்ணம் புரிந்தது கோதைக்கு.

“அன்பானவளே! இரகுகுல இராமனும் யதுகுலக் கண்ணனும் பொதுக்குல மாலவன் என்பது உனக்குப் புரியவில்லையா? இருவிழியின் ஒரு காட்சி அந்தப் பரந்தாமன் அல்லவா! வைகுந்தனை மறக்க உன் உள்ளம் குந்தம்(குருடு) ஆனாதா! இதோ கண்ணன் பெருமைகளைச் சொல்கிறேன் கேள்.

முன்பொரு நாள் ஆயர்ப்பாடிக்கு கொக்கின் உருவிலே ஒர் அரக்கன் வந்தான். வந்தவனும் நொந்தான். ஏன் தெரியுமா? அந்தக் கொக்கின் பெரிய நீண்ட அலகுகளைப் பற்றி அதன் வாயைப் பிளந்து எறிந்தான் கண்ணன். அந்தக் கண்ணன் தான் முன்பு இலங்கையில் சமருக்கு வந்த பொல்லாத இராவணன் தலைகளைக் கிள்ளிக் களைந்தான்.

அந்தக் கண்ணனைப் பாடி நம்முடைய தோழிகள் அனைவரும் நோன்புக்கு வந்தனர். நீயும் வருக.

கண்ணனை நினைத்து நாம் சொன்னதெல்லாம் பலிக்கப் போகும் இந்த நல்ல நாளில், குளிரக் குளிர நீராடாமல் இன்னுமா படுக்கையில் கிடப்பது?

தன்னந்தனியாய் கிருஷ்ணனை நினைத்துக் கொண்டிருக்கும் கள்ளத்தனத்தை விடுத்து எங்களோடு வந்து கலந்து கொண்டாடி மகிழ்வாய் எம் பாவையே”

இன்னுமா மறுப்பாள் நாராயணி? எழுந்து வந்து தோழியரோடு சேர்ந்து நோன்பில் கலந்தாள்.

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நந்நாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்

புள்ளின் வாய் கீண்டானைப் – கொக்கின்(அசுரனின்) வாயைப் பிளந்து கொன்ற கிருஷ்ணனை

பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் – பொல்லாத இராவணனின் தலைகளைக் கிள்ளி எடுத்த இராமனை

கீர்த்திமை பாடிப் போய்ப் – (கிருஷ்ணனின் இராமனின்) பெருமைகளை எல்லாம் பாடிக் கொண்டு

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் – நம்முடைய தோழிகள் அனைவரும் பாவை நோன்பில் கலந்து கொண்டனர்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று – விடிவெள்ளி வானத்தில் ஒளிர்ந்ததால் பின்னிரவில் தெரியும் வியாழனும் மங்கியது

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் – பறவைகளும் ஒலிக்கின்றன கேள். வெண்மலரும் கருவண்டும் போன்ற அழகிய கண்களை உடையவளே

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே – குளிரக் குளிர நீராடாமல்

பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நந்நாளால் – இந்த நல்ல நாளில் இன்னும் படுக்கையில் கிடப்பாயோ பாவையே

கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய் – கள்ளத்தனத்தை விட்டு எங்களோடு கலந்து இறைவன் பெருமையைக் கேட்டு நெஞ்சில் நிலைத்துக் கொள் எம் பாவையே!

பொல்லா அரக்கனை” என்பது இராவணனைக் குறிக்கும் என்று பல விளக்கங்களில் பார்த்தேன். பொல்லாதவர் தலையைக் கிள்ளிக் களைந்தான் என்பதற்கு வேறுவிதமாகவும் பொருள் கொள்ளலாம். பொல்லாத்தன்மை தலையில் விளைவதுதானே. இறைவன் அந்தத் தலைக்கனத்தைக் கிள்ளிக் களைந்தான் என்றும் கொள்ளலாம். நமக்கு நல்லறிவு தரவேண்டிய கடமை இறைவனுக்கு உள்ளது அல்லவா!

போதரி என்பதைப் போது+அரி என்று பிரிக்க வேண்டும். அரி என்றால் வண்டு. போது என்றால் மலரின் பருவம். காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் மலர் என்ற வழக்கும் உண்டல்லவா. அரும்பு முழுதும் மூடியிருப்பது. மலர் முழுதும் விரிந்திருப்பது. போது என்பது பாதி மூடியும் திறந்தும் இருப்பது. அப்படியிருக்கின்ற போதில் ஒரு கருவண்டு நுழைந்தது. வெண்ணிறப் போதினுள் கருநிற வண்டு இருப்பது போன்ற அழகிய கண்களை உடைய தோழியைப் பாடி அழைக்கின்றார் ஆண்டாள்.

அவள் ஏன் அப்படிக் கண்களை மூடியிருக்கிறாள்? அவள் தூங்கவில்லை. கண்ணனை நினைத்து மோனத்தில் இருப்பதால் அந்த இன்ப அனுபவத்தில் கண்கள் லேசாகச் செருகியிருக்கின்றனவாம்.

அப்படித் தனியாக மோனத்தில் இருப்பதால்தான், அந்தக் கள்ளத்தனத்தை விட்டு எல்லோரோடும் சேர்ந்து கிருஷ்ணானுபவத்தில் கலக்கச் சொல்கிறாள் கோதை.

Paavai-13************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
புள் – பறவை
கீண்டானை – கிழித்தவனை/பிளந்தவனை
சிலம்பு – ஒலியெழுப்புதல்
போதரி – போது + அரி – மலர் + வண்டு
பள்ளி – படுக்கை

************************************************************************************************************************
இந்தப் பாடலில் தொண்டரடிப்பொடியாழ்வார் துயிலெழுப்பப்படுகிறார்.

நந்தவனம் அமைத்து திருமாலுக்கு மலர்த்தொண்டு செய்தவர் தொண்டரடிப்பொடியாழ்வார். “போதரிக் கண்ணினாய்” என்று ஆண்டாள் சொன்னது அதைக் குறிப்பிடத்தான்.

முதல் பாசுரத்தில் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் வருகிறது. இந்தப் பாடலிலும் நன்னாளால் என்று வருகிறது. அது தொண்டரடிப்பொடியாழ்வார் பிறந்த மார்கழி மாதத்தைக் குறிப்பதாகும்.

தொண்டரடிப்பொடியாழ்வார் பொன் வட்டிலைக் களவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர். அதனால் இந்தப் பாடலிலும் “கள்ளம் தவிர்த்து” என்று வருகிறது.

இவர் மலர்ச் சோலையில் வசித்தபடியால் அங்கு பறவைகள் நிறைய இருக்கும். அதைத்தான் ”புள்ளும் சிலம்பின காண்” என்று ஆண்டாள் குறிப்பிடுகிறாள்.

பாவாய் என்று அழைப்பதும் இவருக்குப் பொருந்தும். பாவாய் என்பது இந்தப் பாசுரத்தில் பதிவிரதத்தன்மையைக் குறிக்கும். அரங்கனைத் தவிர வேறு எந்தத் திருப்பதிப் பெருமானையும் நெஞ்சத்தால் நினையாதவர் தொண்டரடிப்பொடியாழ்வார். அதுவே அவரது பதிவிரதத்தன்மை.

************************************************************************************************************************
அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

5 Responses to 13. இரண்டும் ஒன்றல்லவோ

 1. அருமையான விளக்கம் ஜிரா. இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் சிலம்புதல் என்ற சொல்லாடல் உரைநடைத் தமிழில் அவ்வளவாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும், எங்களூர் பக்கம் ‘தண்ணிய போட்டுக்கிட்டு சிலம்புறான் பார்’ என்று சர்வசாதரணமாகக் கையாளப்படுவது. இந்தப் பாடலைக் கேட்ட பிறகுதான், அதன் பொருளை உணர்ந்தேன்.

  அதோடு ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்ற வரியும் மிக முக்கியமானது. வெள்ளி என்று அழைக்கப்படும் சுக்கிரன், சாதாரணமாக சூரியனுக்கு முன்னால் உள்ள ராசியிலோ அல்லது பின்னால் உள்ள ராசியிலோ காணப்படும். சூரியனுக்கு முன் ராசியில் அது இருக்கும் போது, சூரிய உதயத்திற்கு முன்னால் கிழக்கு வானில் அதை நாம் பார்க்கலாம். இந்த வருடம் கூட, இப்போது அது விருச்சிக ராசியில் இருப்பதால், அதிகாலையில் கீழ்வானில் நாம் வெள்ளியைப் பார்க்கமுடியும். எனவே ‘வெள்ளி எழுந்து’ என்பது அடிக்கடி ஏற்படும் ஒரு நிகழ்வு. ஆனால் ‘வியாழம் உறங்கிற்று’ எனப் பொருள்படும் என்ற நிகழ்வு அடிக்கடி ஏற்படுவதல்ல. வியாழன் சூரியனைச் சுற்ற சுமார் 12 ஆண்டுகள் பிடிக்கும். எனவே ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ராசியில், அதாவது வானில் ஒவ்வொரு இடத்தில் அதைக்காணலாம். கீழ்வானில் வெள்ளி முளைக்கும்போது வியாழன் மறைய வேண்டுமென்றால், அதற்கு நேரெதிரான ராசியில், அதாவது மிதுனம் அல்லது கடக ராசியில் வியாழன் இருக்கவேண்டும். இந்தக் குறிப்புகள் ஆண்டாளின் காலத்தை கணக்கிடுவதற்கும் உறுதி செய்வதற்கும் உறுதுணையாக இருக்கின்றது. தவிர, அக்காலத்தில் நம் முன்னோர் வானியல் அவதானிப்புகளில் வல்லவராக இருந்தனர் என்பதற்கும் இதும் ஒரு சான்று.

 2. 1. பொல்லாத்தன்மை மற்றும் போதரி விளக்கங்கள் அருமை. இன்னொன்றும் கவனிக்க வேண்டும், ”போதரிக் கண்ணினாய்” எனும்போது, கண்கள் முழுதும் மூடாமல், கருவிழிகள் தெரிய, மெல்லிய உறக்கத்தில் (பரமாத்மாவுக்கு யோக நித்திரை, ஜீவாத்மாக்களுக்கு இறையனுபவ மயக்கம்!) இருக்கிறாள் என்பது நீங்கள் சொல்லும் ”போது என்பது பாதி மூடியும் திறந்தும் இருப்பது.” என்பதோடு ஒத்துப் போகிறது அல்லவா? ஆகவே, அது கள்ளத் துயில் (கள்ளம் தவிர்த்து) தான், இங்கு கள்ளம் என்பது அந்த பாகவதை தான் மட்டும் கிருஷ்ணானுபவத்தில் திளைத்திருப்பதை கோதை கள்ளத்தனம் என்கிறாள், சொல்லலாம் தானே 🙂

  2. இன்னொரு விஷயம்: நோற்றுச்சுவர்க்கம் பாசுரத்தில், “புண்ணியன்” என்று ராமனை மட்டும் பாடி, அடுத்ததில் “முகில்வண்ணன்” என்று கண்ணனைப்போற்றி, 12வதில், “மனத்துக்கினியான்” என்று மீண்டும் ராமனைப் பாடி, இப்பாசுரத்தில் தான், இராமன், கிருஷ்ணன் என்று இருவரையும் ஒரு சேரப் போற்றுகிறாள் கோதை நாச்சியார். அதாவது “இராமகிருஷ்ண” துதிப்பாசுரம் என்று கூறலாம்! ஆக, துயில் எழுப்பப்படுகின்ற பரம பாகவதை தன் கள்ளத்தைத் தவிர்த்து, இவர்களோடு நோன்பில் கலந்து கொண்டே ஆக வேண்டும் 🙂

  அன்புடன்
  பாலா

  • GiRa ஜிரா says:

   கள்ளத்தனத்துக்கு அழகான விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள். உண்மைதான். தனியாகக் கிருஷ்ணானுபவத்தில் இருப்பதை விட கூடிக் களிக்க அழைக்கிறாள் கோதை என்பதும் மிகப் பொருத்தம்.

   அடடா! உண்மை. இது இராமகிருஷ்ணப் பாசுரமேதான். எனக்குத் தோன்றவேயில்லை. இனி மறக்க மாட்டேன் 🙂

 3. amas32 says:

  பாசுர விளக்கம் அருமை. கிருஷ்ணன் அவர்களின் வெள்ளி, வியாழன் பற்றிய குறிப்புகள் மிகவும் சுவாரசியம் :-}

  amas32

  • GiRa ஜிரா says:

   உண்மையம்மா. ரொம்ப அழகாகச் சொல்லியிருக்கிறார். இரண்டு மூன்று இடங்களில் இந்தக் கருத்தைப் பார்த்தேன். ஆனால் இவர் சொன்னது தான் தெளிவாகப் புரிந்தது 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s