16. வாயில் நின்று வாயால் பாடி

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த ஆண்டில் இன்பமே உடல்நலமே செல்வமே அருளே பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

வாருங்கள். கோதை என்ன செய்கிறாள் என்று பார்க்கலாம்.

எல்லாத் தோழியரையும் கூட்டிக் கொண்டு திருவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயில் வாசலுக்கு வந்தாள் ஆண்டாள். கோயில் கதவம் திறந்திருந்தது.

Keshav-16

Thanks to Keshav!

“தோழியரே, நாம் எல்லாம் யார்?”

“நாம் அனைவரும் ஆயர்குலச் சிறுமிகள்.”

“நன்று. நாம் எங்கு இருக்கிறோம்?”

“ஆயர்ப்பாடியில் இருக்கிறோம்.”

“ஆயர்ப்பாடியில் இப்போது எங்கு இருக்கிறோம்?”

“ஆயர்களின் தலைவனான நந்தகோபனின் அரண்மனை வாயிலில் நிற்கின்றோம்.”

“நன்று. நன்று. நாம் அரண்மனைக்குள் போக முடியுமா?”

குரலில் ஏக்கமும் வருத்தமுமாய் தோழியர் சொன்னார்கள். “இப்போது எப்படிப் போக முடியும்? இதோ இந்தக் காவலர்கள் பெரிய கதவுகளை மூடிவைத்திருக்கிறார்களே!”

“வருந்தாதீர்கள் தோழியரே. நாம் அந்தக் காவலர்களை வேண்டிக் கேட்டுக் கொள்வோம். கண்ணன் நந்தகோபாலன் நமக்குக் கொடுத்த வாக்கு இவர்களுக்குத் தெரியாது. அதைச் சொல்லிப் புரியவைப்போம். வாருங்கள்.”

கோதையோடு சேர்ந்து மற்ற பாவையரும் வாயிற்காவலனை வேண்டினார்கள்.

“காவலர்களே! இந்த யமுனைக்கரை ஆயர்ப்பாடியின் மக்களான நமக்கெல்லாம் தலைவன் நந்தகோபன். அவருடைய கோட்டையைக் காக்கின்ற வீரர்களே! அழகிய கொடிகள் பறக்கும் கோட்டை வாயிலைக் காத்து நிற்கின்ற வீரர்களே! மணிக்கதவைத் திறந்து எங்களை உள்ளே செல்லவிடுங்கள்.”

“சிறுமியரே! நீங்கள் எல்லாம் யார்? யாரைப் பார்க்க வேண்டும்? அதுவும் இந்த விடியலில்?”

”நாங்களெல்லாம் ஆயர் சிறுமிகள். நாங்கள் மணிவண்ணனான கிருஷ்ணனைக் காண வந்திருக்கிறோம்.”

“அப்படியா! நல்லது. சற்றுப் பொருத்திருங்கள். கண்ணப் பெருமான் பள்ளியெழுந்ததும் அவரிடம் பேசிவிட்டு உங்களை உள்ளே அனுப்புகிறேன்.

”ஐயா, நீங்கள் கண்ணனின் கருணையைப் புரிந்துகொள்ளவில்லை. எங்களுடைய நல்வாழ்க்கைக்கு உறுதி சொல்வதாக அந்த மாயக் கண்ணனான மாதவன் நேற்றே வாக்கு கொடுத்திருக்கிறான். அவனுடைய பேச்சை நம்பி நாங்களெல்லாம் விடியலில் எழுந்து நீராடி உடல் தூய்மையோடும் உள்ளத் தூய்மையோடும் எங்கள் உயிரைத் தூய்மையாக்கிக் கொள்ள அவனைத் துயிலெழுப்ப வந்திருக்கிறோம்.”

“புரிகிறது சிறுமிகளே. ஆனாலும் அவரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு….”

”எதுவும் சொல்லாதீர்கள். மீண்டும் மீண்டும் கதவைத் திறவோம் என உங்கள் வாயால் கூறாதீர்கள். தாயைப் போல கருணை செய்து இந்த நிலைக்கதவைத் திறவுங்கள் என்று நாங்கள் வேண்டுவதைக் காதால் கேட்டு நெஞ்சத்தால் உதவுங்கள்.”

சிறுமியர் இப்படிக் கெஞ்சும் போது வாயிற்காவலர்கள் கதவைத் திறக்காமல் இருந்திருப்பார்களா!

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே – ஆயர்ப்பாடியின் தலைவனாக விளங்கும் நந்தகோபனின் பெரிய வீட்டைக் காப்பவனே

கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே – அழகிய கொடிகள் கண்கவரப் பறக்கும் தோரண வாயிலைக் காப்பவனே

மணிக்கதவம் தாள் திறவாய் – மணிக்கதவினைத் தாள் திறவாய்

ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை – ஆயர்குலச் சிறுமியரான எங்களுக்கு நல்வாழ்க்கைக்கு உறுதி சொல்லிக் கையறைந்து(சத்தியம் செய்து)

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் – மாயன் மணிவண்ணன் நேற்றே வாக்குறுதி கொடுத்தான்

தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான் – உள்ளத்தாலும் உடலாலும் தூய்மையாக வந்திருக்கிறோம். அந்த மாதவனைத் துயிலெழுப்பப் பாட வேண்டும்.

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே – உங்கள் வாயிலான் முடியாது என்று மீண்டும் மீண்டும் சொல்லாதீர்கள்.

அம்மா நீ நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய் – தாயின் உள்ளத்தோடு நேசம் பொருந்திய நிலைக்கதவம் திறவுங்களேன்!

இந்தப் பாடலில் நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். தான் ஆண்டாள் என்பதைக் கூட அந்த ஆண்டாள் மறந்துவிட்டாள். நடிகர்கள் பாத்திரத்தோடு ஒன்றிவிடுவதைப் போல ஆயர் சிறுமி என்னும் பாத்திரமாகவே மாறிவிட்டாள். அவள் மட்டுமல்ல, அவளோடு சேர்ந்த தோழியரையும் அப்படியே மாற்றிவிட்டாள். அவர்கள் மனதிலிருப்பதெல்லாம் கண்ணன். கண்ணன் விளையாடும் இடம் கோகுலம். அந்த கோகுலத்தில்தான் இப்போது இருக்கிறோம் என்ற நம்பிக்கை. திறந்திருக்கும் கோயில் கூட நந்தகோபன் அரண்மனையாகத் தெரிகிறது. அரண்மனை என்றால் வாயில் காப்போரும் இருக்க வேண்டும் அல்லவா. அதனால்தான் கதவு திறக்க அவர்களிடம் வேண்டுகிறார்கள்.

இப்படிப்பட்ட நம்பிக்கை இன்று வேறுவிதமாகத்தான் பொருள் கொள்ளப்படும். அன்றுமே வேறுவிதமாகப் பார்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஆண்டாள் அப்படிப்பட்ட நம்பிக்கை மனிதர்களின் மீது வைக்கவில்லை. பரவாசுதேவனான மாயக்கண்ணன் மேல் வைத்தாள். அதனால்தான் அந்த நம்பிக்கை இன்றும் நம்மால் கொண்டாடப்படுகிறது. நம்மைப் போன்றோர் தவறான மனிதர்களின் மேல் வைக்கும் நம்பிக்கை நம் கண் முன்னமே பொய்த்துப் போகிறது.

மணிக்கதவம் தாள் திறவாய்” என்பது சீடன் ஆச்சாரியரிடம் உபதேசம் வேண்டுதைக் குறிப்பிடுகிறது. கீழ்ப்படியில் இருப்பவரை நல்ல ஆச்சாரியரின் உபதேசம் பல படிகள் மேலேற்றிவிடும். இந்தப் பாடலின் நேரடிப் பொருளில் பார்த்தால் கூட, வெளியில் இருக்கும் ஆண்டாள் வீட்டுக்குள் செல்ல வாயில்காப்போரின் உதவி தேவைப்படுகிறதல்லவா. அதுபோல் மெய்ஞானம் பெறச் செல்லும் வழிக்கான கதவை ஆச்சாரிய உபதேசம் திறந்துவிடும்.

தூயோமாய் வந்தோம்” என்பது திரிகரணசுத்தியைக் குறிக்கும். அதாவது மனம் வாக்கு காயம் ஆகியன. உடம்பால் மட்டுமல்லாமல் நன்மையொன்றையே நினைக்கும் உள்ளத்தாலும் நல்லதையே சொல்லும் சொற்களாலும் தூய்மையாக இருப்பது அவசியம்.

Paavai-16************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
நென்னல் – நேற்று – இந்தச் சொல் சற்றுச் சிதைந்து நென்னே என்று கன்னடத்திலும் நின்னே என்று தெலுங்கிலும் இன்றும் வழங்கப்படுகிறது.
நேய – நேச
நிலை – வீட்டு வாயிலில் இருக்கும் நிலை

************************************************************************************************************************
அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

4 Responses to 16. வாயில் நின்று வாயால் பாடி

 1. yarlpavanan says:

  இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
  இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

  • GiRa ஜிரா says:

   நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். 🙂

 2. எப்போது போல உங்கள் எளிமையான விளக்கம் மிக நன்று. ஒரு கருத்து தான், மற்றவை என் இடுகையில் பார்க்கலாம், பார்த்திருப்பீர்கள்

  //“தூயோமாய் வந்தோம்” என்பது திரிகரணசுத்தியைக் குறிக்கும். அதாவது மனம் வாக்கு காயம் ஆகியன. //
  நம்மாழ்வார் சொல்லும் “அருமா மாயத்து எனதுயிரே மனமே வாக்கே கருமமே ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே” என்பதோடு ஒப்பு நோக்கலாம் இல்லையா? ஆழ்வார், உயிரையும் (ஆன்மாவையும்) நான்காவதாகச் சேர்க்கிறார். ஆக, அந்த நான்குமே தூய்மையடைந்தவுடன், அவை பரந்தாமனின் இருப்பிடங்கள் ஆகின்றன என்று கொள்ளலாம்.

  • GiRa ஜிரா says:

   உண்மை. திரிகரணசுத்தி பக்தியின் முதல்நிலை. பக்தி முத்தி முக்தி வரும் போதும் நான்கும் தூய்மையாகும். நீங்கள் எடுத்துச் சொன்ன நம்மாழ்வார் பாசுரம் மிகப் பொருத்தம்.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s