17. மாயக் கண்ணன் தூங்குகிறான்

வாயிற்காவலர்கள் கதவைத் திறந்து வழிவிட்டதும் நந்தகோபரின் பெரிய வீட்டுக்குள் மற்ற ஆயர்சிறுமியரோடு நுழைந்தாள் கோதை.

Keshav-17

Thanks to Keshav!

வீடோ பெரிய வீடு. ஒவ்வொரு பக்கமும் அறைகள். திக்குத் திசை தெரியாமல் எந்த அறைக்கதவைத் தட்டுவது என்று குழப்பம். முற்றத்தில் இருந்தே ஒவ்வொருவரையாக எழுப்பலாம் என்று முடிவுக்கு வருகிறாள் ஆண்டாள்.

எடுத்தவுடன் அவர்கள் கண்ணனை எழுப்பவில்லை. நந்தகோபனையும் யசோதையையும் உறக்கத்திலிருந்து எழுப்புகிறார்கள்.

”உடை நீர் உணவு தந்து எங்களைக் காப்பாற்றுகின்ற எம்பெருமானே நந்தகோபனே எழுந்திராய். இளங்கொம்பு போன்ற ஆயர்குலத்துப் பெண்களில் எல்லாம் முதன்மையானவளே! குலவிளக்கே! எம்பெருமாட்டியே அசோதையே எழுந்திராய்”

நந்தகோபனோ அசோதையோ எழுந்து வருவதாகத் தெரியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் அடுத்து கண்ணனைத் துயிலெழுப்புகிறாள். மனக்கண்ணில் கார்மேனியன் தூங்கும் அழகை நினைத்துப் பார்க்கிறாள். ஒரு காலை மடக்கிப் படுத்திருந்த நிலை அவன் உலகு அளந்ததை நினைவு படுத்துகிறது.

“வானத்தை ஊடுருவிச் செல்லுமாறு காலை ஓங்கி உலகு அளந்த பெரியவனே! இன்னும் உறக்கமா? எழுந்திரு.”

அப்போதுதான் கண்ணனுக்கும் மூத்தவனான பலதேவனின் நினைப்பு வருகிறது. அவரும் உறங்கிக்கொண்டுதானே இருப்பார். அவரையும் துயிலெழுப்ப வேண்டுமே. வரிசை மாறிவிட்டதே என்று வருந்திக்கொண்டே பலதேவனைப் பள்ளியெழுப்பினாள் கோதை.

“மின்னும் செம்பொன்னால் செய்த வீரக்கழல்களைக் காலில் அணிந்துள்ள பலதேவா, நீயும் உன் தம்பியும் இன்னும் உறங்குவதா? நாங்கள் எழுப்புவதைக் கேட்டு மனமிரங்கி எழுந்திருங்கள்.”

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் – எங்களுக்கு உடை நீர் சோறு தந்து தருமம் செய்கின்ற

எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் – எம்பெருமானாகிய நந்தகோபனே எழுந்திராய்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே – இளங்கொம்பைப் போன்று மென்மையான பெண்களில் எல்லாம் சிறந்தவளே, குலவிளக்கே

எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் – எம்பெருமாட்டியாகிய யசோதையே உணர்வு தெளிந்து உறக்கம் நீங்குவாய்

அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த – உலகுக்கு ஆடையாக விளங்கும் வானத்தை ஊடாக அறுத்து காலோங்கி உலகை அளந்தவனே

உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் – மேலுலகத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் தலைவனே! உறக்கத்தை விட்டு எழுந்திருப்பாய்!

செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா – செம்பொன்னாலான வீரக்கழல்களை அணிந்திருக்கின்ற செல்வனே! பலதேவா!

உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய் – நீயும் உன் தம்பியும் இன்னும் உறங்கலாமா! எங்கள் அழைப்பைக் கேட்டு இதயத்திலிருந்து கருணை காட்டுங்கள்.

சென்ற பாடலில் கோதை யாரையும் துயிலெழுப்ப வேண்டியிருக்கவில்லை. ஏனென்றால் காவலர்கள் உறங்காமல் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உறங்காமல் இருந்ததால்தான் வீட்டுக்குள் மற்றவர்கள் உறங்க முடிந்தது. அப்படித் தூங்குபவர்களையெல்லாம் இந்தப் பாடலில் எழுப்புகிறாள் கோதை.

கண்ணனை வேண்டிச் செய்யும் நோன்பில், கண்ணனைத் துயிலெழுப்புவதற்கு முன்னம் நந்தகோபனையும் அசோதையையும் துயிலெழுப்புகிறாள் கோதை.

ஏன்?

நந்தகோபன் ஆயர்களின் தலைவன். அதாவது கண்ணனுக்கும் சேர்த்தே தலைவன். அதனால் அவன் எம்பெருமானாகிறான். அது மட்டுமல்ல, ஆயர்களின் வாழ்வாதாரத்துக்கு அவனே முழுப்பொறுப்பு. அவர்களுக்கு உணவு உடை உறைவிடமெல்லாம் கிடைக்க வழி செய்வதால்தான் அவன் தலைவன். அந்தப் பொறுப்பைச் சிறப்பாகச் செய்வதால் அவன் எம்பெருமான்.

அதுமட்டுமல்ல.. அவன் வள்ளலாகவும் இருக்கிறான்.

எப்படி?

நாடி வருகின்றவர்களுக்கு உணவு நீர் துணி கொடுக்கிறான் என்று சொன்னாளல்லவா ஆண்டாள். அதை உன்னிப்பாகக் கவனியுங்கள். அம்பரமும் தண்ணீரும் சோறும் என்று சொல்லவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கொடுப்பவன் என்று பொருள் கொள்ளவும் முடியும். மூன்றையும் ஒன்றாகக் கொடுப்பவன் என்று பொருள் வரும் வகையில் அம்பரமே தண்ணீரே சோறே என்று கூறுகிறாள். ஒன்று கேட்டால் மூன்றும் கிடைக்கும்.

சரி. இதில் ஆடையை ஏன் முதலில் வைத்தாள் கோதை? ஆடையிருந்தால் தான் மானத்தோடு வெளியே வந்து கொடுக்கும் சோற்றையும் தண்ணீரையும் வாங்க முடியும். அதனால் அதை முதலில் வைத்தாள்.

அம்பரம் என்ற சொல்லுக்கு மானத்தை மறைக்கும் துணி என்று பொருள். அதனால் வெறும் ஆடை என்று மட்டும் பொருள் எடுத்துக் கொள்ளாமல் மானத்தைக் காக்கும் கடவுள் என்றும் பொருள் கொள்ளலாம். பலர் கூடிய அவையில் திரவுபதைக்கு அம்பரம் தந்து மானம் காத்ததும் அந்தக் கார்மேகவண்ணன் தானே. அந்தக் கார்மேகவண்ணனைத் தந்த நந்தகோபனைப் பாராட்டி முதலில் எழுப்புவதும் முறையே.

நந்தகோபன் எம்பெருமான் என்றால் அசோதை எம்பெருமாட்டிதானே! உலகுக்கே படியளக்கும் கிருஷ்ணனுக்கே பாலூட்டியவளாயிற்றே!

தன்னுடைய கடமையைச் செவ்வனே செய்து வையத்துள் வாழ்வாங்கு வாழும் தலைவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவதும் சரிதான்.

சரி. எம்பெருமானாகிய நந்தகோபனையும் எம்பெருமாட்டியாகிய அசோதையையும் துயிலெழுப்பப் பாடியாகிவிட்டது. அடுத்து கண்ணனின் எழுப்பப் பாடுகிறாள்.

நந்தகோபன், அசோதை என்ற வரிசைப்படி எழுப்பும் போது அடுத்து பலராமனை எழுப்பிவிட்டுத்தானே கண்ணனை எழுப்பியிருக்க வேண்டும்? பிறகு ஏன் ஆண்டாள் கண்ணனை எழுப்பிவிட்டு பலராமனை எழுப்புகிறாள்?

இதற்கு மூன்று விளக்கங்கள் சொல்லலாம். கண்ணன் மீது அவர்களுக்கு இயற்கையாக உள்ள ஆர்வத்தில் எல்லாம் மறந்து போய் முதலில் கண்ணனை எழுப்புகிறாள். ”என்னடா, வரிசைப்படி எழுப்பாமல் முறை மாறி என்னை முதலில் எழுப்புகிறார்களே” என்று எண்ணிய கண்ணன் எழுந்திருக்காமல் இருந்தானாம். அதனால் ஆயர் சிறுமியர் தவறை உணர்ந்து பலராமனைத் துயிலெழுப்பினார்களாம்.

இன்னொரு விளக்கம் சுவையானது. பலதேவன் ஆதிசேஷனின் அம்சமாக வந்தவன். பாம்பணை மேல்தானே பரந்தாமன் பள்ளிகொண்டிருக்கிறார். அதனால் பரந்தாமன் முதலிலும் பரந்தாமனின் படுக்கை இரண்டாவதாகவும் ஆண்டாளின் கண்ணில் பட்டதாம்.

இராமாவதாரத்தில் இராமனுக்குத் தம்பியாக வந்தான் ஆதிசேஷன். கோதை இருப்பது கோகுலம் என்று கொண்டால் கிருஷ்ணவதாரம் இன்னும் முடியவில்லை. ஆக முடிந்த அவதாரத்தின்படி அண்ணனை முதலிலும் தம்பியை இரண்டாவதாகவும் எழுப்பியதாகவும் கொள்ளலாம்.

Paavai-17************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
அம்பரம் – ஆடை, வானம்
உம்பர் – மேலே இருப்பவர்கள் (மேலுலகத்தில் இருக்கும் தேவர்கள்)
உம்பி – தம்பி
************************************************************************************************************************
அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to 17. மாயக் கண்ணன் தூங்குகிறான்

 1. அம்பரமே தண்ணீரே சோறே – நல்ல விளக்கம், இன்னொன்றும் உள்ளது. இந்த “ஏ” விகாரம், நந்தகோபரின் தலைமைச்சிறப்பை சொல்கிறது எனலாம். அதாவது தலைவன் என்பவன், தானே, தன் மக்கள் அனைவர்க்கும் வேண்டிய எல்லாவற்றையும் வழங்கி அவர்கள் திருப்தியுடன் வாழ வழிவகை செய்பவனாக இருத்தல் வேண்டும், பகைவரிடமிருந்து காத்தல் மட்டுமே போதாது. அப்பணியை நந்தகோபர் செவ்வனே செய்தார். கண்ணனின் தந்தையல்லவா!
  ராம,கிருஷ்ண அவதாரங்கள் போல, திரிவிக்கிரம் அவதாரமும் கோதைக்கு உகந்த ஒன்றே. திருப்பாவையில் முறை சுட்டப்படுகிறது.
  இங்கும், 3வதிலும்(ஓங்கி உலகளந்த), 24வதிலும்(அன்று இவ்வுலகம் அளந்தாய்)

  //அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த// திருமங்கை மன்னன் பாடிய, “அந்தரம் ஏழின் ஊடு செலவுய்த்த பாதம் அது நம்மை ஆளும் அரசே” என்பது உடனே நினைவுக்கு வந்தது. ஆக, அம்பரமும் அந்தரமும் ஒன்றே …. வானம் என்பதை அண்டவெளி (Ether) என்று பொருள் கொள்வது இன்னும் பொருந்தமான ஒன்று என்பது என் கருத்து.

  //உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்// இறுதி வரியில் தான் பஞ்ச் உள்ளது. முதலில், நந்தகோபர், யசோதா பிராட்டி, கண்ணன் என்று ஒவ்வொருவராக எழுப்ப முயன்று, கடைசியில் பலராமனைப் புகழ்ந்து விட்டு ‘பலராமா, உன்னை எழுப்புவதே, உன் தம்பியை எப்பாடு பட்டாவது நீ எழுப்பிக் கூட்டி வரவேண்டும் என்பதற்காகத் தான்’ என்பதைக் குறிப்பில் உறுதியாக உணர்த்துகிறார் சூடிக்கொடுத்த சுடர்கொடி! பாம்பணையே துயிலெழுந்தால், அதில் பள்ளி கொண்ட பரமாத்மா யோக நித்திரை கலைந்து எழுந்து ஆக வேண்டும் தானே :-)))
  அன்புடன்
  பாலா

  • GiRa ஜிரா says:

   அழகான கருத்துகள்.

   // பலராமா, உன்னை எழுப்புவதே, உன் தம்பியை எப்பாடு பட்டாவது நீ எழுப்பிக் கூட்டி வரவேண்டும் என்பதற்காகத் தான்’ //

   ஆமாம். அவனை எழுப்பத்தானே இத்தனை பாடு பட்டு பாட்டு போட்டு நமக்கும் கொடுத்திருக்கிறாள் கோதை. 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s