18. கண்ணன் எனும் காதலன்

Keshav-18

Thanks to Keshav!

”இவ்வளவு அழைத்தும் கண்ணன் எழுந்து வரவில்லையே. நந்தகோபரையும் யசோதையையும் பலதேவனையும் கூட எழுப்பினோம். அவர்கள் எழுந்தது போலவும் தெரியவில்லை. கண்ணனை எழுப்பியது போலவும் தெரியவில்லை. என்ன செய்வது? திக்கு திசை தெரியாத வீட்டில் எந்த அறையைத்தான் திறந்து பார்ப்பது? அது நல்ல செயலாகுமா? யாராவது கண்ணன் இருக்கும் அறையை அடையாளம் காட்ட மாட்டார்களா?”

கோதையின் காதல் உள்ளம் தத்தளித்தது.

“சேச்சே! காதலித்தவர்களுக்குத்தான் காதலின் வேதனை தெரியும். அப்படி யாராவது இந்த வீட்டில் இருந்தால் அவர்களுக்கு என் வேதனை புரிந்திருக்கும். என்னை இந்த அளவுக்குத் தவிக்கவிட்டிருக்க மாட்டார்கள். உதவி செய்ய யாருமே இல்லையா? இருக்கிறாள். ஒருத்தி இருக்கிறாள். அவள் நினைத்தால் உதவலாம். அவளையே கேட்டுப் பார்க்கிறேன்.”

கதவு தாள் நீக்க உதவுவாள் என்று கோதை நினைத்தது நப்பின்னையை. அவள்தான் கண்ணனின் காதல் மனைவி.

“கண்ணன் காதலியே நப்பின்னை! நீ யார் தெரியுமா? உனது புகுந்த வீட்டுப் புகழ் தெரியுமா? மதங் கொண்டு நிலை மறந்து ஓடிவரும் ஆனையின் வேகத்தோடு எதிரிகளைக் கண்டு ஓடாமல் நின்று வென்று திரும்பும் தோள்வலியை உடைய நந்தகோபன் உனது மாமன். அப்பேர்ப்பட்ட பேராயனின் மருமகளே! நறுமணம் கமழும் அழகுமிகும் நீண்ட கருங்கூந்தலைக் கொண்டவளே! உன் மாமனிடமும் மாமியிடமும் கேட்டுப்பார்த்தோம். ஆனால் அவர்கள் வந்து உனது படுக்கையறையைத் தட்டித் திறந்து தொந்தரவு செய்யத் தயங்குகின்றார்கள். ஆகையால் உன்னையே நேரடியாகக் கேட்கிறோம். நீயாவது வந்து கதவைத் திறப்பாயா?

பள்ளியறையை விட்டு வெளியே வந்து பார்! கோழியினங்கள் கூவிப் பொழுது விடிந்து பலகாலமாயிற்று. அந்தக் கோழிக் கூட்டங்கள் தத்தமது குஞ்சுகளோடு கூடிக் கொத்தித் தின்ன இரை மேய்கின்றன. மாதவிக் கொடி என்று அழைக்கப்படும் குருக்கத்திக் கொடிகளுக்காக நட்டப்பட்ட பந்ததிலில் அமர்ந்து குயிலினங்கள் இன்னிசை கூவுகின்றன. அதையும் வந்து பார்!

இப்படியெல்லாம் உலகம் மகிழ்வுற்று தனது இயக்கத்தைத் துவங்கிய இந்தக் காலைவேளையில் நீ மட்டும் கண்ணனை உன்னுடைய பள்ளியறையிலேயே அடைத்து வைக்கலாமா? அழகிய விரல்களில் பந்து பயிலும் அழகியே, நாங்கள் உன் கணவனாகிய கோபாலன் மீது அன்பு கொண்டு பாட்டுப் பாடி மகிழ்ந்திட விரும்புகிறோம். நீ விரைந்து வந்து உனது செந்தாமரைக் கையில் அணிந்துள்ள வளையல்கள் அசைந்து இசைந்து ஒலியெழுப்பும் வண்ணம் கதவினைத் திறவாய் எம்பாவாய்!”

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் – முந்திச் செல்லும் மதயானையின் வேகம் உடையவன், குறையாத தோள்வலிமை கொண்டவன்

நந்தகோபன் மருமகளே நப்பின்னாய் – (அப்படிப்பட்ட) நந்தகோபனின் மருமகளே நப்பின்னையே!

கந்தம் கமழும் குழலி கடை திறவாய் – நறுமணம் கமழும் கூந்தலை உடையவளே கதவைத் திறவாய்!

வந்து எங்கும் கோழி அழைத்தன காண் – கோழிகள் எல்லாம் விடியலை மும்முறை அழைத்துவிட்டதைக் கேள்!

மாதவிப்பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண் – குருக்கத்திக்கொடியின் பந்ததில் குலியினங்கள் இசை கூவுவதையும் கேள்!

பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச் – பந்து விளையாடும் அழகிய விரல்களைக் கொண்டவளே, உன் கணவனின் பெயரைப் புகழ்ந்து பாட (வந்திருக்கிறோம்)

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப – உன்னுடைய செந்தாமரைக் கையால், நீ அணிந்திருக்கும் வளையல்கள் சீராக ஒலிக்கும் வகையில்

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய் – வந்து கதவைத் திறந்தால் நாங்களும் மகிழ்ந்து நெஞ்சம் நிறைவோம் எம் பாவையே!

இந்தப் பாடலில் கண்ணனின் மனைவியே நப்பின்னை என்று கோதை அழைக்கவில்லை. நந்தகோபனின் மருமகளே என்று அழைக்கிறாள். சென்ற பாடலில் பார்த்தது போல நந்தகோபனே ஆயர்ப்பாடியின் மன்னன். கண்ணன் இன்னும் நன்னன்(சிறியவன்). அதனால்தான் அரசனின் மருமகளே என்று அழைப்பதே மிகவும் மரியாதையானது. அதோடு கண்ணனை மணந்ததால் அவள் பிறந்தவீட்டை விடவும் புகுந்தவீட்டில் இன்பமாக இருப்பதாலும் புகுந்தவீட்டுப் பெருமையோடு அடையாளப்படுத்தப்படுகிறாள். ஆனால் அடுத்த முறை “உன் மைத்துனன்” என்று சொல்லி கண்ணனின் மனைவி அவள் என்ற உறவை வெளிப்படையாக்கிவிடுகிறாள்.

அதெல்லாம் சரி..  யார் இந்த நப்பின்னை?

கிருஷ்ணன் என்றால் இராதை பாமா ருக்மணி என்றுதானே முதலில் நினைவுக்கு வருகிறது. அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இதென்ன ஆண்டாள் நப்பின்னை என்றொருத்தியை அழைக்கிறாளே!

கண்ணன் எவ்வழி சென்றாலும் அவ்வழியே நல்வழியாக பின் செல்லும் பெண்ணை நப்பின்னை என்று சொல்வதே பொருத்தம்.

பெயர் விளக்கத்தை யார் கேட்டார்கள்? யாரவள்? அதைச் சொல்லுங்கள் முதலில்.

கலித்தொகை, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற இலக்கியங்களிலும் கண்ணனின் மனைவியாகக் குறிப்பிடப்படுகின்றவள் நப்பின்னை. ஆழ்வார்கள் அருளிச் செய்த பாசுரங்களில் மட்டுமன்றி சைவத் திருமுறைகளிலும் மாணிக்கவாசகராலும் சுந்தரராலும் குறிப்பிடப்படுகிறாள்.

கண்ணன் ஏறு தழுவி அவளை மணந்தான் என்பதே தமிழிலக்கியம் காட்டும் பின்புலம். ஏறுதழுவதல் என்றால் இன்றைய ஜல்லிக்கட்டு. மாட்டை அடக்கி நப்பின்னையை மணமுடித்தானாம் கண்ணன்.

மாணிக்கவாசகரே திருமாலைக் குறிப்பிடும் போது “ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன்” என்று அடையாளப்படுத்துகிறார் என்றால் தமிழ் இலக்கியத்தில் நப்பின்னைக்கு  இருந்த சிறப்பான இடம் நமக்கு விளங்கும். ஆழ்வார்களுக்குப் பிறகு வைணவ இலக்கியங்களில் கூட நப்பின்னை எப்படியோ காணாமல் போய்விட்டாள். வடமொழி இலக்கியங்களில் எப்படி வள்ளி இருப்பதில்லையோ அப்படியே நப்பின்னையும் இருப்பதில்லை. வள்ளியின் தமிழ் அடையாளம் பிழைத்துக்கொண்டது. என்ன காரணத்தினாலோ நப்பின்னை தொலைந்து போய்விட்டாள்.

Nappinnaiநப்பின்னையை வடமொழி இலக்கியங்களில் தேடுகின்றவர்கள் நான்கு விதமான முடிவுக்கு வருகிறார்கள். நப்பின்னையை சுபத்திரையோடும் நீளாதேவியோடும் இராதையோடும் நக்னஜித்தியோடும் இணைத்துப் பார்க்கின்றார்கள்.

ஆண்டாள் நப்பின்னையை கண்ணன் மனைவி என்று தெளிவுபடுத்தும் போது சுபத்திரையை பட்டியலில் இருந்து விலக்கவேண்டியுள்ளது. ஏனென்றால் சுபத்திரை கண்ணனின் தங்கை. ஆனாலும் கண்ணனுக்குப் பின்னால் பிறந்தவள் என்பதால் பின்னை என்பது சுபத்திரைக்குப் பொருந்தும் என்பது ஒரு வாதம்.

இராதை என்று எடுத்துக் கொண்டால் அவளும் ஆயர் பெண் என்ற வகையில் ஒத்துவருகிறது. ஆனால் இராதையோடு கண்ணனுக்கு களவொழுக்கம் இருந்ததாக மட்டுமே தெரிகிறது. ஆனால் தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் சொல்லி வைத்தது போல் நப்பின்னையை கண்ணனின் மனைவி என்றே தெளிவுபடுத்துகின்றன. ஒருவேளை தென்னகத்து நப்பின்னை வடக்கே போகும் போது இராதையாக மாறியிருக்கலாம். ஆனால் அதற்கும் போதிய சான்றுகள் இல்லை.

பொதுவாக வைணவ சம்பிரதாயத்தில் திருமாலின் மனைவியராக நிலமகளையும் அலைமகளையும் நீள்மகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதுண்டு. இரண்டு பாசுரங்களில் நம்மாழ்வார் மூன்று தேவியரையும் சேர்த்துக் குறிக்கும் போது நீள்மகளுக்குப் பதிலாக நப்பின்னையைச் சொல்கிறார்.

பின்னைகொல் நிலமாமகள்கொல் திருமகள்கொல்
கூந்தல்மலர் மங்கைக்கும் மண்மடந்தைக்கும் குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன்

நம்மாழ்வார்வார் நீளாதேவியின் பெயரைச் சொல்லாமல் நப்பின்னையின் பெயரைக் குறிப்பிட்டிருப்பதால் நீளாதேவிதான் நப்பின்னை என்று ஒரு கருத்தும் உண்டு. ஆனால் இந்தக் கருத்தை உறுதி சொல்ல வேறு எந்தப் பாடலும் கிடையாது. நீளாதேவியை திருமால் ஏறுதழுவி மணந்ததாகவும் புராணமும் கிடையாது. நீளாதேவியின் அவதாரம் தான் நப்பின்னை என்பதை ஆழ்வார்களுக்குப் பின் வந்த வைணவ ஆச்சாரியார்கள் ஏற்றுக்கொண்டு சம்பிரதாய விளக்கங்களிலும் சொல்லியிருக்கிறார்கள்.

நக்னஜித்தி(சத்யவதி).. பெயரே வடமொழிப் பெயர். கண்ணனின் மனைவியர்களில் ஒருவராக பாகவதம் சொல்லும் நக்னஜித்திக்கும் நப்பின்னைக்கு ஒரேயொரு ஒற்றுமை உண்டு. நக்னஜித்தியை ஏறுதழுவித்தான் கிருஷ்ணன் மணந்தான் என்கிறது பாகவதம். ஆனால் நக்னஜித்தி யாதவர் குலத்தவள் அல்ல. அவள் அயோத்தி அரசனான நக்னஜித்தின் மகள். ஆனால் தமிழ் இலக்கியங்கள் நப்பின்னையை ஆயர்மகள் என்றே தெளிவுறச் சொல்கின்றன.

இப்படியெல்லாம் நாம் ஒப்பிட்டு ஆராய்வதற்குக் காரணமே நாம் நப்பின்னையின் அடையாளத்தை முழுமையாக இழந்துவிட்டோம் என்பதே. சமண சைவ இலக்கியங்களில் கூட பெருமையோடு குறிப்பிடப்பட்ட நப்பின்னை பின்னாளைய வைணவ இலக்கியங்களிலும் மறைந்து போன மாயம் என்னவென்று தெரியவில்லை.

மதுரகவி ஸ்ரீனிவாச ஐயங்கார் என்பவர் நப்பின்னை பிராட்டியார் திருமணம் என்றொரு நூலை எழுதியிருக்கிறார். அதைப் படிக்க விரும்புகிறவர்கள் இந்தச் சுட்டியிலுள்ள மின்னூலை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

************************************************************************************************************************
நப்பின்னை பற்றி நண்பர் ”அன்புடன் பாலா” கூறும் கருத்துகளையும் இங்கு கொடுத்துள்ளேன்.

ஆழ்வார்களது பாசுரங்களை வைத்துப் பார்க்கையில், நப்பின்னை, திருமாலின் 3வது துணைவியான நீளாதேவியே என்று ஓரளவு உறுதியாகவேச் சொல்லலாம். இரண்டு எடுத்துக்காட்டுகள் தருகிறேன்.

நம்மாழ்வார் ஒரு பாசுரத்தில், திருமாலின் 3 தேவியரையும் சுட்டுவதோடு, ஏறு தழுவி கண்ணன் நப்பின்னையை மணந்தான் என்ற செய்தியையும் தருகிறார்.

என் திருமகள் சேர் மார்வனே! என்னும் என்னுடை ஆவியே என்னும்,
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே! என்னும்,
அன்று உருவேழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே! என்னும்,….

ஆய்மகள் = நப்பின்னை (நீளாதேவியில் அவதாரமானவள். நீளாதேவி நீருக்கு ஆதாரமானவள் என்பதால், பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணனே இவள் மடியில் தலை வைத்து சயனித்திருப்பதாகச் சொல்வது ஐதீகம்!)

திருமங்கையாழ்வார் ஒரு பாசுரத்தில்,
இரு நில மங்கை மன்னர் மலர் மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ்சேர்…” என்று 3 தேவியரையும் ஒரி சேரச் சுட்டுகிறார். நிலமங்கை – பூதேவி, மலர்மங்கை – ஸ்ரீதேவி(திருமகள்) & புலமங்கை – நீளாதேவி (நப்பின்னையாக அவதரித்தவள்)

குறிப்பு: ”புலம்” இங்கு இந்திரியத்தைக் (ஐம்புலன்கள் சார்ந்த உணர்ச்சி) குறிக்கிறது. அதனால் புலமங்கை எனும்போது, அது திருமாலின் தெய்வீகப்புலன் உணர்வில் நிறைந்த நீளாதேவியைக் (கண்ணனின் நப்பின்னை) குறிக்கிறது.

Paavai-18************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
உந்து – தள்ளு
கந்தம் – நறுமணம்

************************************************************************************************************************
நப்பின்னை பற்றிய பிற இலக்கியக் குறிப்புகள்

1. மாணிக்கவாசகர் – திருக்கோவையார் – சைவத் திருமுறை
ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன் ஏத்த

2. சுந்தரர் – திருப்பதிகம் – சைவத் திருமுறை
பின்னை நம்பும் புயத்தான் நெடுமாலும்

3. திருத்தக்கதேவர் – சீவக சிந்தாமணி – சமணக் காப்பியம்
நீள்நிரைநப் பின்னை இலவலர்வாய் இன்னமிர்தம் எய்தினா னன்றே

************************************************************************************************************************

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, திருப்பாவை, விஷ்ணு and tagged , , , , , . Bookmark the permalink.

11 Responses to 18. கண்ணன் எனும் காதலன்

 1. amas32 says:

  நப்பின்னை பற்றி நிறைய ஆய்வு செய்திருக்கிறீர்கள். நான் முதலில் திருப்பாவையை புரிந்து படித்த போது இந்த நப்பின்னை யார் என்ற சந்தேகம் எனக்கும் வந்தது. அவள் கண்ணனின் இன்னொரு மனைவி என்பது புரிந்தாலும் அவள் யாராக இருக்கும் என்று சரியாக place பண்ண முடியவில்லை. உங்கள் விளக்கம் சற்று வெளிச்சம் தருகிறது :-}

  amas32

  • GiRa ஜிரா says:

   நன்றிம்மா. தேடிப் பார்த்த தகவல்களைக் கொடுத்துள்ளேன். இன்னார் என்று நான் முடிவு சொல்லாமல் படிப்பவர்களின் முடிவுக்கே விட்டுள்ளேன். நண்பர் பாலா நப்பின்னையை நீர்மகள்(நீளாதேவி) என்று குறிப்பிட்டுச் சொன்ன தகவல்களையும் பதிவில் சேர்த்துள்ளேன்.

 2. Bharathi says:

  wonderful work… thank you so much for sharing with us.

 3. நப்பின்னை பற்றி (நான் அறியாத) தகவல்கள் அறியத் தந்தமைக்கு என் நன்றி. ஆழ்வார்களது பாசுரங்களை வைத்துப் பார்க்கையில், நப்பின்னை, திருமாலின் 3வது துணைவியான நீளாதேவியே என்று ஓரளவு உறுதியாகவேச் சொல்லலாம். 2 எடுத்துக்காட்டுகள் தருகிறேன். உங்கள் இடுகையில் இதைச் சேர்த்து விடவும்.

  நம்மாழ்வார் ஒரு பாசுரத்தில், திருமாலின் 3 தேவியரையும் சுட்டுவதோடு, ஏறு தழுவி கண்ணன் நப்பின்னையை மணந்தான் என்ற செய்தியையும் தருகிறார்.

  என் திருமகள் சேர் மார்வனே! என்னும் என்னுடை ஆவியே என்னும்,

  நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே! என்னும்,

  அன்று உருவேழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே! என்னும்,….

  ஆய்மகள் = நப்பின்னை (நீளாதேவியில் அவதாரமானவள். நீளாதேவி நீருக்கு ஆதாரமானவள் என்பதால், பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணனே இவள் மடியில் தலை வைத்து சயனித்திருப்பதாகச் சொல்வது ஐதீகம்!)

  திருமங்கையாழ்வார் ஒரு பாசுரத்தில்,
  “இரு நில மங்கை மன்னர் மலர் மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ்சேர்…” என்று 3 தேவியரையும் ஒரி சேரச் சுட்டுகிறார். நிலமங்கை – பூதேவி, மலர்மங்கை – ஸ்ரீதேவி(திருமகள்) & புலமங்கை – நீளாதேவி (நப்பின்னையாக அவதரித்தவள்)

  குறிப்பு: ”புலம்” இங்கு இந்திரியத்தைக் (ஐம்புலன்கள் சார்ந்த உணர்ச்சி) குறிக்கிறது. அதனால் புலமங்கை எனும்போது, அது திருமாலின் தெய்வீகப்புலன் உணர்வில் நிறைந்த நீளாதேவியைக் (கண்ணனின் நப்பின்னை) குறிக்கிறது

  • GiRa ஜிரா says:

   ஆகா. நன்றி பாலா. பாடல்களோடு கருத்து விளக்கம் கொடுத்தமை மிகச்சிறப்பு. உடனே பதிவில் சேர்த்துவிட்டேன் 🙂

 4. நலம் கேழ் வணக்கம்; நலம் கேள் வணக்கம்.
  புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  “நப்பின்னை” என்பதால், மீண்டு வந்தேன்!

  சென்ற ஆண்டே.. ஆழ்ந்து வாசித்த பதிவுகள் தான் எனினும், அனைத்திலும் பின்னூட்டாது, சிலவற்றில் மட்டுமே இட்டு, பலவற்றில் எழுதியும் இடாததோர் ஒடுக்கம்!

  இவ்வாண்டும் தினமும் ஒவ்வொன்றாக மீள் வாசித்து, ஒடுக்கத்துள் உறைந்தாலும்,
  “நப்பின்னை” என்று வரும் போது மட்டும்..
  ஒடுக்கத்தின் விம்முதலால், ஒடுங்கி விட்ட அவளைப் பற்றிச் சிற்சில மெய்ம்மைகளைப் பகிர.. விழைவு! இறைவரோ தொண்டர் தம் உள்ளத்து ஓடுக்கம்!

  தங்கள் புரிதலையும் இசைவையும் வேண்டிக்கொண்டு, இதோ..

  “வள்ளி & நப்பின்னை” = இஃதொரு தனித்த முனைவர் ஆய்வுக் களம்!
  “வள்ளி & நப்பின்னை” = இருவரும் தமிழ்க் குல விளக்குகள்!

  “மதமாய் அணுகாது, தமிழாய் அணுகினால்”.. வள்ளி + நப்பின்னை.. பல வியப்பூட்டும் உண்மைகள் பளிச்சிடும்!

  வைணவப் பாசுரமும் சைவப் பதிகமும், நப்பின்னை பற்றிச் சொல்வதை உரைத்த தாங்கள், இன்னும் மேற்சென்று..
  சிலப்பதிகாரம், மணிமேகலையெல்லாம் தொடுவீர்கள் எ. ஆசை! ஆனால் ஏனோ, தாங்கள் அவ் வழிச்செலவு செல்லவில்லை போலும்! பரவாயில்லை; சிறிது மட்டும், இங்கு செப்புகிறேன்!

  சிலப்பதிகார நப்பின்னை:

  வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத்
  தண்டாக் குரவைதான் உள்படுவாள்-கொண்டசீர்
  வையம் அளந்தான் தன் மார்பின் திருநோக்காப்
  பெய்வளைக் கையாள் நம்”பின்னை” தானாம் என்றே..

  மணிமேகலை நப்பின்னை:

  மாமணி வண்ணனும் தம்முனும் “பிஞ்ஞை”யும்
  ஆடிய குரவைஇஃது ஆம்என நோக்கியும்!

  • வள்ளி & நப்பின்னை
   *வள்ளி வாழ்ந்து விட்டாள்
   *பின்னை தாழ்ந்து விட்டாள்:(

   மதம் எனும் பெரு மாயை.. ஒரு மொழியையும், இனத்தையும், பண்பாட்டையும்.. மொத்தமாய்ச் சூழும் போது,
   அந்த இனக்குடித் தொன்மங்கள் சிதைந்தோ/ அழிந்தோ போய்விடுகின்றன!:(

   சிதைவு= சூழ்ந்து விட்ட மதத்தோடு, தன்னை ஒரு மாதிரி இணைத்துக் கொள்வது!
   அழிவு= சூழ்ந்து விட்ட மதத்தோடு, தன்னை இணைத்துக் கொள்ளாதது!

   *வள்ளி= சிதைந்து வாழ்கிறாள்!
   *நப்பின்னை= அழிந்து, மறைகிறாள்!

   வள்ளி = தொல்காப்பிய மகள்; கொடிநிலை கந்தழி வள்ளி;
   நடுகல் தலைவனின் நாயகி!
   அவனைப் பிரியவே பிரியாது, அந் நடுகல்லில், கொடியாய்ப் படர்ந்தவள்!

   ஆனாலும்.. முனிவன் பார்வை பட்டு, காட்டு மானின் கர்ப்பத்திலே மனிதப் பெண்ணாய்ச் சூல் கொண்ட “கதை”யில் விழுந்து.. வள்ளிக் கிழங்குக் கொடியிலே பிறந்து,
   முருகன் -> சுப்ரமண்யன் ஆனாலும், அவனே வாழ்வு! என்று காதலால் தன்னைத் தாழ்த்திக் கொண்டவள்!:(
   முன்னவள்! ஆனாலும், பின்னவள் ஆகிப் போனாள்:(

   இப்படி, மதம் சூழ்ந்த புராணக் கதைகளில், சிதைவு பட்டாலும், வாழவாச்சும் முடிகிறது வள்ளியால்!
   சிதைவு படாததால், வாழ முடியாது போகிறது நப்பின்னையால்!
   சிதைவுக்குக் கூடத் தேவையில்லாமல் போய் விட்டாள்:(
   அவள் இல்லா விட்டாலும், புராணக் கதைக்கு 1000 பேர் இருக்கும் போது, அவள் எதற்கு?

   என்ன ஒரே இடக்கர் எனின், சங்கத் தமிழிலும் காப்பியத் தமிழிலும் ஆங்காங்கே அவள் தலை தென்படுகிறது!
   பரவாயில்லை; தலையைத் தட்டி அடக்கி விடலாம்; பின்னாளில் நீளாதேவி/ நக்னஜித்தி என்றெலாம் ஜித்து வேலை செய்து ஒட்ட வைத்து விடலாம் என்ற பள்ளத்துக்குள் விழுந்து விட்டாள் பெண்!

   *வள்ளி= சிதைந்ததால், வாழ்ந்தாள்!
   *நப்பின்னை= சிதையாததால், மறைந்தாள்!

   மாறிலா வள்ளி வாழ்க!
   மறைந்த பின்னை வாழ்க!
   வாழ்க சீர் அடியாரெல்லாம்!

  • சிலப்பதிகார நப்பின்னை:

   இளங்கோவடிகள் காலத்தே, தமிழ்ச் சமூகத்தில் பிற மதக் கலப்புகள்/ வட மொழி-வட நெறி புகுத்தல்.. அரசன்/ அரசியல் மூலமாக மெல்லத் தலையெடுக்கத் துவங்கி விட்டாலும்
   ஆங்காங்கே மறுப்பும் எழுவதை, இளங்கோ தட்டாமல் படம் பிடித்தே காட்டுவார்! ஓரு சமூகத்தின், “கல் உருளும் நிலை”!

   கண்ணகி.. அர்சியல்/ வணிகச் செல்வாக்குள்ள தன் பெற்றோர் விருப்பின் படியே, தீவலத் திருமணம் செய்து கொண்டாலும்
   தான் இல்லக் கிழத்தி ஆன பின்பு, வட மதத்தின் மரபுகளைப் பின்பற்றாமல் ஒதுக்கும் தமிழ்த் திறத்தையும் சேர்த்தே காட்டும் இளங்கோ!

   “பிரிஞ்ச அன்பனை/ கணவனை, மீண்டும் சேரணுமா? ஸோம குண்டம் ஸூர்ய குண்டம் பரிகாரம் பண்ணு, வாடீ” என்று அழைக்க..
   “அது எமக்குப் பீடு அன்று”.. என்று ஹோம பரிகாரங்கள் செய்ய மறுக்கும் கண்ணகி!

   அவன் மேல் எத்துணை அன்பு அவளுக்கு!
   ‘பரிகாரம் செஞ்சித் தான் பாத்துருவமே’ என்று சிதையாது, மனம் பிறழாது..
   அன்பால் அவன் வரட்டும்! பரிகாரத்தால் வேண்டாம் எ. ஆயுசுக்கும் காத்துக் கிடக்கும்.. தமிழ்த் துணிபு!

   தாயே கண்ணகி – மாதவிப் பந்தல் நப்பின்னையால், உன்னை வணங்குகிறேன்!

   போலவே, இளங்கோவடிகள் காட்டும் பல “மறுப்புக்” காட்சிகளில், ஒன்று.. “நப்பின்னை”யை உயர்த்தி, திருமாலின் இலக்குமியைத் தாழ்த்துவது!

   வையம் அளந்தான் தன் மார்பின் திரு நோக்காப்
   பெய்வளைக் கையாள் நம் “பின்னை” தானாம் என்றே
   “ஐ” என்றாள் ஆயர் மகள்!

   திருமால், தன் மார்பில் உள்ள இலக்குமியைக் கூட நோக்காமல்.. நம்ம பின்னை, நப்பின்னை! அவளையே வைச்ச கண் வாங்காமல், காதல் கொண்டு பார்க்கும் சிலப்பதிகாரக் காட்சி!

   போலவே, தமிழிசை கொண்டும், நப்பின்னையே முதல்வி! எ. உயர்த்திக் காட்டும் இளங்கோ!

   1. குரல்
   2. துத்தம்
   3. கைக்கிளை
   4. உழை
   5. இளி
   6. விளரி
   7. தாரம்
   என்று ஏழிசை வாய்ப்பாட்டில், குரலே முதல்! அதற்குப் பின் துத்தம்!

   குரல்= தமிழ் மாயோன் ஆகிய திருமால் (விஷ்ணு அல்ல)
   துத்தம்= நப்பின்னை
   என்று இருவரையும், முதல்வன் – முதல்வி! எ. ஒரு சேர வைக்கும் இளங்கோ!

   மாயவன் என்றாள் குரலை!
   ஆய்மகள் “பின்னை”யாம் என்றாளோர் துத்தத்தை!
   முன்னையாம் என்றாள் முறை!

   மாயவன் சீருளார் “பிஞ்ஞை”யும் தாரமும்
   வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும்
   கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்துளாள்
   முத்தைக்கு நல்விளரி தான்!
   (மதுரைக் காண்டம், ஆய்ச்சியர் குரவை)
   —–

   இன்னும் பல நப்பின்னை, சேதிகளை.. இசையோடு நுணுக்கமாகத் தருவார் இளங்கோவடிகள்!

   கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன்
   எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
   முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ;
   தொழுனைத் துறைவனோடு ஆடிய “பின்னை”
   அணிநிறம் பாடுகேம் யாம்!

   நப்பின்னை பெருமையே, தமிழ்ப் பெருமை/ தமிழிசைப் பெருமை என்னல்:

   கயிலெருத்தம் கோட்டியநம் “பின்னை”சீர் புறங்காப்பார்
   ஆடுநர்ப் புகழ்தல்:
   மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் “பின்னை”யொடும்
   கோவலர்தம் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர!
   —–

   சிலப்பதிகாரம்/ மணிமேகலைக்கு, வெகு பின்னாளில் வந்த சீவக சிந்தாமணி..
   “வள்ளி & நப்பின்னை” = இருவரையும் ஒரே மாடத்தில் வைத்து அழகு பார்க்கும் அழகு!

   குலநினைய நம்பி கொழுங்கயற்கண் “வள்ளி”
   நலநுகர்ந்தான் அன்றே நறுந்தார் முருகன்!
   நிலமகட்குக் கேள்வனு நீணிரை “நப்பின்னை”
   இலவலர்வாய் இன்னமிர்தம் எய்தினான் அன்றே!
   ——

   *நக்கீரர்
   *நச்செள்ளையார்
   *நப்பாலத்தனார்
   *நந்நாகனார்
   *நப்பின்னையார்

   ந வரிசை, நல் முன்னொட்டு சூழும் தமிழ்!
   அதுவே நல்+பின்னைத் தமிழ்! நப்பின்னைத் தமிழ்!

   மாறிலா வள்ளி + நப்பின்னை
   மாதவிப் பந்தல் மேல்,
   தமிழ்த் திருமகள் இருவரையும், பல் கால் குயிலினங்கள் கூவின காண்!

   வள்ளி + நப்பின்னைத் தமிழ்த் தாய்களே..
   உங்கள் மாறிலாக் காதலை, அடிக் கீழ் வீழ்ந்து வணங்குகிறேன்!

 5. ஆழ்வார்களின் ஈரத்தமிழில் மட்டும் நப்பின்னை, ஏனோ சாக மறுக்கிறாள்!
  இதோ, பல்வேறு ஆழ்வார்களின் வாக்கிலே “நப்பின்னை”
  வெறும் ஆய்மகள் (நீளா தேவி) என்றெலாம் சொலாது, அவள் பேரைச் சொல்லியே, நப்பின்னை!

  1. பெரியாழ்வார்:

  பூணித் தொழுவினில் புக்குப்
  புழுதி அளைந்த பொன் மேனி,

  “நப்பின்னை” காணில் சிரிக்கும்,
  மாணிக்கமே! என் மணியே! மஞ்சனம் ஆட நீ வாராய்!

  2. ஆண்டாள்:

  உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
  நந்தகோபன் மருமகளே “நப்பின்னாய்”

  கொத்தலர் பூங்குழல் “நப்பின்னை” கொங்கை மேல்
  வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்

  செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
  “நப்பின்னை” நங்காய் திருவே துயில் எழாய்!!

  3. திருமழிசையாழ்வார்:

  பின்னும் ஆயர் “பின்னை தோள்
  மணம் புணர்ந்தது” அன்றியும்,
  உன்ன பாதம் என்ன சிந்தை
  மன்ன வைத்து நல்கினாய்!

  4. திருமங்கை மன்னன்:

  இந்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும்,
  இன்பன் நற்புவி தனக்கு இறைவன்,
  தந்துணை ஆயர் பாவை “நப்பின்னை” தனக்கு இறை
  மற்றையோர்க்கு எல்லாம் எந்துணை
  எந்தை தந்தை தம் மானைத், திருவல்லிக் கேணிக் கண்டேனே!

  5. பேயாழ்வார்:

  “பின்னைக்காய்” – முற்றல்
  முரி ஏற்றின் முன் நின்று மொய்ம்பு ஒழித்தாய்,
  மூரிச் சுரி ஏறு சங்கினாய் சூழ்ந்து!

  6. நம்மாழ்வார்:

  கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் – கெண்டை ஒண்கண்
  வாசப் பூங்குழல் “பின்னை” தோள்கள்
  மணந்ததும் – மற்றும் பல,
  மாயக் கோலப் பிரான் தன் செய்கை!

  7. மாணிக்கவாசகர்: ஏர்ப் “பின்னை” தோள்முன் மணந்தவன் ஏத்த
  8. சுந்தரமூர்த்தி நாயனார்: “பின்னை” நம்பும் புயத்தான் நெடுமாலும்!
  (இவ்விரண்டும், தாங்களே பதிவில் கொடுத்து விட்டீர்கள்)

  ஆழ்வார்கள்.. மாறிய காலத்துக்கேற்ப, மதத்துக்கு ஈடுகொடுத்தாலும்.. ஏனோ, பாமா/ ருக்மிணி/ ஜாம்பவதி/ நக்னஜித்தி என்றெல்லாம் பாடாது
  “நப்பின்னை, நப்பின்னை” என்றே உள்ளம் குழைகிறார்கள்! ஏன்?

  தமிழும் காதலும் பிரிக்க முடியாதவை!
  நப்பின்னை சாகலாம்!
  ஆனால் நப்பின்னை காதல் சாகாது! அதை, தமிழ் காக்கும்!

  • மேலே அன்புடன் பாலா பின்னூட்டில்,
   “நப்பின்னை” எ. பேர் சொலாது,
   “ஆய்மகள்” என்று குடுத்த பாசுரத்திலும்.. ஒன்றை மட்டும் உற்று நோக்குக!

   நப்பின்னையை, ஆழ்வார்கள்.. பாமா/ ருக்மிணி/ ஜாம்பவதி/ நக்னஜித்திகளுக்கு இணையாக வைக்கவே இல்லை!
   திருமகள், மண்மகள், ஆய்மகள் என்று.. “ஆதி இறைவனுக்கு” இணையாகத் தான் வைக்கிறார்கள்! புராணப் பெண்களுக்கு இணையாக அல்ல!

   இதை, ஆழ்வார்களுக்கும் முன்பே, செந்தமிழ்ச் செல்வரான இளங்கோவடிகளே, வைத்துச் செல்வார்!

   /3வது துணைவியான நீளாதேவியே நப்பின்னை என்று ஓரளவு உறுதியாகவேச் சொல்லலாம்/ என்று சொல்லிவிட்டு, பின்பு “ஐதிஹ்யம்/ ஐதீகம்” என்று மழுப்பலே இயலும், தரவுகள் இல்லாததால்!
   ஒரு கால், ஐதிஹ்யமே உறுதி ஆகி விடுகிறது போலும்!:) மதம் என்பதால் செல்லுபடியும் ஆகும்!

   /”புலம்” இங்கு இந்திரியத்தைக் குறிக்கிறது/

   அல்ல!
   இந்திரியம் சுந்திரியம்லாம் ஒன்னுமில்லை;
   புலம் = ஆயர்ப் புலம்
   குறவர் புலம், கருமார் புலம், எயினர் புலம் போல்.. ஆயர் புலம்!

   அந்த ஆயர்ப் புலத்தின் மங்கை= நப்பின்னை;
   புலமங்கை!
   இளங்கோ காட்டிச் செல்லும் தமிழ்! புலமங்கை!

   /புலமங்கை எனும்போது, அது திருமாலின் தெய்வீகப்புலன் உணர்வில் நிறைந்த நீளாதேவியைக் (கண்ணனின் நப்பின்னை)/

   இப்படியெல்லாம் ஐதிஹ்யம்/ “ஐதீகம்” மட்டுமே!:)
   செத்துப் போனவளை/ மறைக்கப்பட்டவளை, என்ன சொல்லிக் காரணம் காட்டுவது? விஷ்ணு ஐம்புலன்களில் ஒன்றாய்க் கரைந்து விட்டாள்; கண்ணுக்குத் தெரிய மாட்டாள்! என்றெல்லாம் நாமே இட்டுக் கட்டிச் சொல்லிக் கொள்வது தான்!:( நீளா தேவி என்றும் சொல்லி, Bracketஇல் நாமளாக அவளே நப்பின்னை என்று போட்டுக் கொள்வது தான்!

   ஆனால், ஆழ்வார் அருளிச் செயலான ஈரத் தமிழ், ஆங்காங்கே “மதம் கடந்த உண்மைகளும்” பேசும்! அவை தமிழ் உண்மைகள்!
   “நப்பின்னை” என்ற பேர் சொல்லியே பாடுவார்கள்!
   நப்பின்னை = ஆதி இறைவன் துணையாக வைப்பார்களே அன்றி, பாமா/ ருக்மிணி/ ஜாம்பவதி/ நக்னஜித்திகளுக்கு இணையாக வைக்கவே மாட்டார்கள்!

   அஃதே தமிழ் உறுதி!

 6. நப்பின்னை = தமிழ்க் குலமகள்!
  குறிஞ்சிக்கு ஒரு வள்ளி போல், முல்லைக்கு ஒரு நப்பின்னை!

  இவளை, மாயோன் காதல் கொண்டு, ஏறு தழுவி மணம் புரிந்தான்!
  = இஃதே பண்டைத் தமிழ் இலக்கியம் இயம்புவது!
  = சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை மட்டுமல்லாது, வேறு பல்வேறு இடங்களில் காட்டும் நப்பின்னை! (இளங்கோ வென்ற தமிழ்; கம்பன் கொன்ற தமிழ் – UCAL Berkeley முனைவுத் தாளிலே, இதன் விரிவும் தரவும் காணலாம்)

  வட-தமிழ் பண்பாட்டுக் கலப்புகள் ஏற்பட்ட பின், முருகன் -> ஸ்கந்தன் ஆனது போல், மாயோன் -> விஷ்ணு ஆனது போல்..
  நப்பின்னை, ஏதும் ஆகாமலே மறைந்து போனாள்!

  ஏன்னா, முன்னவள் வள்ளிக்கும் முன்னவளாய்த் தெய்வயானை புகுத்தியது போல், நப்பின்னைக்குப் புகுத்தத் தேவை இல்லாமலே போனது;
  1000 மனைவிமார்கள் உள்ள கதையில், நப்பின்னை ஒருத்தி குறைந்தால் என்ன குடியா மூழ்கி விடப் போகிறது?
  வள்ளி= சிதைந்ததால் வாழ்கிறாள்; நப்பின்னை= சிதையாமலே சாகிறாள்!

  ஆனால், பண்டைத் தமிழ் இலக்கியங்களில் வாழ்கிறாளே? அதை மாத்த முடியலையே? எப்படிச் சமன் செய்வது? Reconciliation?
  நப்பின்னை= நீளா தேவி, நக்னஜித்தி, கண்ணுக்குத் தெரிய மாட்டாள், விஷ்ணு இந்திரியம் ஆகிப் போனவள் என்றெல்லாம் “ஒட்ட” வைத்துக் கொள்கிறோம்:)

  ஆனால் நப்பின்னை நப்பின்னையே!
  நற்+பின்னை = நப்பின்னை!
  செல்ல+இளையவள் என்று பொருள்!
  பிஞ்ஞை என்பதும் தமிழ் மரபே!

  கோதையின் திருப்பாவையில் மும்முறை கோலோச்சுகிறாள்!

  1. உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன், நந்தகோபன் மருமகளே “நப்பின்னாய்”
  2. கொத்தலர் பூங்குழல் “நப்பின்னை” கொங்கை மேல்
  3. செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல், “நப்பின்னை” நங்காய் திருவே துயில் எழாய்!!

  நப்பின்னையே, நீ துயில் எழ மாட்டாய்!
  ஆனால், உன் வாயிலாக.. தமிழே துயில் எழாய்! தமிழினமே துயில் எழாய்!

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s