20. இத்தனை மாந்தருக்கு ஒரு கோயில் போதாது

“இப்படி உயிரைக் கொடுத்து அழைத்தும் கண்ணன் எழவில்லையே. அவன் வாய்ச்சொல் ஒன்றும் எனக்காக விழவில்லையே. அபலை மீதா ஆத்திரம்! அந்த ஆத்திரம் உண்டாக சாத்திரத்துக்கு மாறுபட்டு என்ன தவறு செய்தேன்? பாத் திறத்தால் எம்பெருமான் கருணைக்குப் பாத்திரம் கொள்ள நினைத்ததும் பிழையா!

கலங்கி நின்றாள் கோதை. அப்போது அம்மங்கை கேட்டாள். “கோதை, எனக்கு ஒரு ஐயம். நப்பின்னை நாயகியைத் துயிலெழுப்பும் போது தத்துவமன்று தகவு என்று கடுமையாகப் பாடினோம். அவர் தகவைப் பற்றிப் பேசியதால் கோ வித்தான கோவிந்தன் நம்மீது கோவித்துக்கொண்டானோ!

Keshav-20

Thanks to Keshav!

”இருக்குமடி அம்மங்கை. அவனைக் கடிந்து நாம் என்ன சொன்னாலும் சிரித்து மயக்குவான். நப்பின்னையை கடிந்து சொன்னதும் முறுக்கிக் கொள்கிறான். இதிலிருந்து உனக்கு என்ன தெரிகிறது?”

“என்ன தெரிகிறது… முதலில் நப்பின்னையைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று தெரிகிறது.”

“உண்மைதான். அதோடு நாளை நம்மை யாராவது கடிந்து கொண்டாலும் அவர்களிடம் இப்படித்தான் நமக்காக முறுக்கிக் கொள்வான் என்பது உனக்குப் புரியவில்லையா? ”

“நன்றாகப் புரிந்ததடி கோதை. இப்போது நீயே கண்ணனையும் நப்பின்னை பிராட்டியையும் சமாதானப்படுத்து.”

”அமரர்கள் முப்பத்து முக்கோடியர். அவர்களுக்கெல்லாம் தலைவனே! அமரர்க்கு அச்சம் அண்டினால் அதை அருகிருந்து அழிப்பவனே! அரங்கனே! அச்சுதனே! அமலனே! துயில் எழுவாய்! இப்படி அடியார் படும் துயரமெல்லாம் நிலத்தோடு நிலம் செய்யும் நீ நேர்மையும் திறமையும் உடையவன்! தீயோரின் ஆணவத்தை அழிக்கின்ற விமலனே துயில் எழுவாய்!”

இளவெயினி மனதில் ஒரு எண்ணம். “கோதை, முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த வீட்டின் முற்றத்துக்கு வந்துதானே கண்ணனிடம் உதவி கேட்டிருக்க முடியும். அத்தனை தேவருக்கு இந்த ஒரு முற்றம் போதாது அல்லவா.”

“அழகாகக் சொன்னாய் வெயினி. முற்றும் வினை நீக்கும் முற்றம் இதில் முற்றுமாய்த் தேவர் நிற்க இடமில்லாமல் போகலாம். ஆனால் காக்கும் மாலவன் நெஞ்சில் எல்லோருக்கும் இடம் உண்டு. இருந்த இடத்திலிருந்தே அவன் பெயர் சொன்னால் போதுமே. துயரெல்லாம் தீருமே.”

மாலவன் இல்லம் என்பது தத்தமது உள்ளம் என்று இளவெயினியோடு மற்றவர்களுக்கும் தெளிந்தது. அடுத்து நப்பின்னையை எழுப்பினாள் கோதை.

“உன்னைப் போல் அழகியும் உண்டோ! பொற்கலச மென்முலைகள். கோவைக்கனிச் செவ்வாய். குறுகும் சிற்றிடை. இப்படி கண்ணனே கிறங்கிக் கிடக்கும் எழிலே! நப்பின்னை நங்கையே! செல்வமே! துயில் எழுவாய்!

நீயும் எழுந்து உன் மணாளனையும் துயிலெழுப்புவாய். அவனுக்கு விசிறி வீசி கண்ணாடி காட்டி அழகூட்டி எங்களுக்கும் காட்டுவாய்! அவன் அருளில் எங்களையும் நீராடா வைப்பாய்!”

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

முப்பத்து மூவர் அமரர்க்கு – முப்பத்து முக்கோடி அமரர்களுக்கு
முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய் – துன்பம் வருமுன் காக்கும் நாராயணனே துயில் எழுவாய்!

செப்பம் உடையாய் திறல் உடையாய் – நேர்மை உடையவனே! திறமை உடையவனே!
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய் – தீயவர்களின் ஆணவத்தை அழிக்கின்ற விமலனே துயில் எழுவாய்!

செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் – பொற்குட முலைகள். செவ்விதழ்கள். குறுகிய சிற்றிடை (கொண்ட)
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய் – நப்பின்னை நங்கையே! திருமகளே! துயில் எழுவாய்!

உக்கமும் தட்டொளியும் தந்து – ஆலவட்டமும் கண்ணாடியும் கொடுத்து
உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய் – உன்னுடைய மணாளனை இப்போதே துயிலெழுப்பி எங்களுக்கு அவன் அருள் மழையில் நாங்களும் நனைய நெஞ்சு நேர்வாய்!

எட்டு வசுக்கள், பதினோரு உருத்திரர்கள், பன்னிரண்டு ஆதித்தியர்கள், இரண்டு அசுவினி தேவர்கள் என்று அமரர் தலைவர்கள் மொத்தம் முப்பத்துமூன்று பேர். அவர்கள் கூட்டமெல்லாம் சேர்த்து மொத்தம் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்பது எண்ணிக்கை. நன்றாகக் கவனிக்கவும். இவர்கள் தேவர்கள் அல்லது அமரர்கள். கடவுள் அல்லர்.

கலி என்ற சொல்லுக்கு உண்டாக்குதல் தளிர்விடுதல் ஒலித்தல் என்று மூன்றுவிதமாகப் பொருள் கொள்ளலாம். மூன்றுமே இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும். எப்படித் தெரியுமா?

கலி என்பதற்கு உலகத்தை உண்டாக்கியவனே என்று பொருள் கொள்ளலாம்.
கலி என்பது நன்மைகளைத் தளிர்க்கச் செய்கின்றவனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
நாராயணா என்ற பெயரைச் சொல்லி அழைக்கும் ஒலியே துயர் நீக்கும் என்றும் பொருள் கொள்ளலாம்.

ஆதிமூலமே என்று யானை இருந்த இடத்திலிருந்தே அழைக்கவும் வந்தான்.
கோவிந்தா என்று பாஞ்சாலி அவை நடுவே கதறியபோதும் வந்தான்.
இந்தத் தூணில் இருந்தால் வாடா” என்று இரணியன் உறுமிய போதும் வந்தான்.

அதனால்தான் இறைவனை விட இறைவன் திருநாமங்களுக்குப் பெருமை அதிகம்.

இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பும் உள்ளது. செப்பம் உடையாய் என்று சொல்லிவிட்டு உடனே திறல் உடையாய் என்று சொல்வது. அதைச் சொன்னதும் விமலனே என்று அழைப்பது. செப்பம் என்றால் நேர்மை. திறல் என்றால் திறமை. விமலன் என்றால் தூய்மையானவன்.

இறைவன் அனைத்தையும் நடத்த வேண்டியவன். அப்படி அனைத்தையும் நடத்த வேண்டியவன் எப்படி இருக்க வேண்டும்? முதலில் நேர்மையானவனாக இருக்க வேண்டும்(செப்பம் உடையாய்). நேர்மை மட்டும் போதாது. நேர்வழியில் செல்லும் போது அனைத்தையும் சமாளிக்கும் திறமையானவனாகவும் இருக்க வேண்டும்(திறல் உடையாய்). அத்தோடு தூய்மையான உளத்தவனாக இருக்க வேண்டும்(விமலனே). திறமையுள்ளவன் தீயவனாக இருந்து விட்டால் தீமைகளே விளையும். அதனால்தான் பரவாசுதேவனை நேர்மையே திறமையே தூய்மையே என்று அடுக்கடுக்காகப் பாராட்டுகிறாள் கோதை.

இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பும் உள்ளது. இந்தப் பாடலோடு நப்பின்னை துயிலெழுப்புதல் முடிகிறது. ஏனென்றால் நப்பின்னை உறங்கிக் கொண்டிருக்கவில்லை என்பதை ஆண்டாளும் அறிவாள். “குத்துவிளக்கெரிய” என்ற சென்ற பாசுரத்தில் “மைத்தடம் கண்ணினாய்” என்று சொல்லி கண்ணன் இருக்கும் இடத்துக்குத் தடம் காட்டியவள் என்பதைப் பாராட்டுகிறாள். அப்போதே நப்பின்னை தூங்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டாள் ஆண்டாள். அதனால்தான் அவள் இன்னும் கண்ணனை எழுப்பாமல் இருக்கிறாள் என்பதை “தத்துவம் அன்று தகவு” என்று சுட்டிக்காட்டினாள்.

சரி. அது போன பாடல். இந்தப் பாடலில் என்ன? ”திருவே துயில் எழாய்” என்று எழுப்பினாலும், தான் சொல்வது அனைத்தையும் நப்பின்னை கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டுதான் “எழுந்திரு” என்று மட்டும் சொல்லாமல் “உக்கமும் தட்டொளியும் தந்து” கண்ணனைக் கிளப்பு என்று வேண்டுகிறாள். இதில் திருமகளின் கடமையாகக் கருதப்படும் புருஷகாரமும் அடங்கியிருக்கிறது. புருஷகாரம் என்பது பரிந்துரை. அடிவர்களுக்காக இறைவனிடம் பரிந்துரைக்க வேண்டியது திருமகளின் கடமை. அதைத்தான் நப்பின்னையிடம் வேண்டுகிறாள் ஆண்டாள்.

உக்கமும் தட்டொளியும் என்பதை திருக்கோயிலில் செய்யப்படும் ஆலவட்ட(விசிறி) தட்டொளி(கண்ணாடி) சேவை என்று கொள்ளலாம். அதற்கும் ஒரு உட்பொருள் உள்ளது. நம்முடைய ஆணவத்தையும் மாயையையும் நீக்கி மெய்யறிவு தர வேண்டும் என்பதே அது. மெய்யறிவு இருந்தால் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி போல் மனம் எதையும் சரியான கோணத்தில் பார்க்கும். மெய்யறிவு இருக்குமிடத்தில் வெம்மை இருக்காது. குளுமை மட்டுமே. மெய்யறிவு இருந்ததால் தான் சுண்ணாம்புக் காளவாயிலில் தள்ளிய போதும் “வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசுவண்டரை பொய்கையும் போன்றதே” என்று திருநாவுக்கரசர் பாடினார்.
20-b20-a
************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
கப்பம் – துன்பம்
கலி – ஒலி, உண்டாக்குதல், தளிர்த்தல்
செப்பம் – நேர்மை
திறல் – திறமை
செப்பு(சொப்பு) – கலன்
மருங்கல் – இடை
உக்கம் – விசிறி
தட்டொளி – கண்ணாடி
************************************************************************************************************************
அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

தன்னைத் தான் சுழலும் பூமியிலே என்னை நானறியா வாழ்வினிலே நேற்றை நினைவாக்கி இன்றை நடப்பாக்கி நாளை நோக்கி நிற்பவன். ஓடும் வரை ஓடும் கால்கள் வேண்டி நிற்பவன்.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

11 Responses to 20. இத்தனை மாந்தருக்கு ஒரு கோயில் போதாது

 1. “மெய்யறிவு இருந்தால் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடிபோல் மனம் எதையும் சரியான கோணத்தில் பார்க்கும்” சத்தியமான வார்த்தைகள்.

 2. amas32 says:

  //இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பும் உள்ளது. செப்பம் உடையாய் என்று சொல்லிவிட்டு உடனே திறல் உடையாய் என்று சொல்வது. அதைச் சொன்னதும் விமலனே என்று அழைப்பது. செப்பம் என்றால் நேர்மை. திறல் என்றால் திறமை. விமலன் என்றால் தூய்மையானவன்.// இந்தப் பகுதி எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த sequenceல் ஆண்டாள் கண்ணனைப் பாராட்டுவதை பாசுரத்தில் படிக்கும்போதே மனத்துக்குத் தெளிவும் தைரியமும் வருகிறது.

  ஆண்டாள் திருவடிகளே சரணம்.

  amas32

 3. //கோ வித்தான கோவிந்தன் நம்மீது கோவித்துக்கொண்டானோ!”//
  திருப்பாவை இடுகைகள் 20 கிட்ட வந்தவுடன், தமிழ் அப்டியே நின்னு விளையாடுது, நடத்துங்க ஜிரா :-))) இனிமேல், வருபவை மிகச் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது

  • GiRa ஜிரா says:

   நன்றி. அப்படி எழுதனும்னு எழுதுறதில்ல. அது அப்பப்போ வந்துருது. என் செயலாவதொன்றும் இல்லை 🙂

 4. //ஆத்திரம் உண்டாக சாத்திரத்துக்கு மாறுபட்டு என்ன தவறு செய்தேன்? பாத் திறத்தால் எம்பெருமான் கருணைக்குப் பாத்திரம் கொள்ள நினைத்ததும் பிழையா!”// இது மேல் சொன்னதை விட அருமை!

  இப்பாசுர விளக்கம் மிக மிக நன்று. தினம், ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் உள்ளது. வாழ்க! குறிப்பிட்டுச் சொல்லப்போனால், “உக்கமும் தட்டொளியும்” பற்றிச் சொன்ன விதம் அழகு.

  பேசுபொருள் கண்ணன் என்பதால் “செப்பம்” என்பதற்கு நேர்மை என்று எளிமைப்படுத்துவதை விட, நடுநிலையாக, சார்பற்றுச் செயல்படும், சீர்தூக்கி முடிவெடுக்கும் குணம் என்று சொல்வது தகும். அந்தப் பரமனுக்கு நாம் அனைவரும் சமம். மேலும், அவன் ”நேர்மை”யை அலச நாம் யார் 🙂
  “திறல்” என்றால் திறமை தான், பூவுலக அவதாரக் காலங்களில், திருமால் ஆனவன், உடல், மன வலிமையோடும், மேலே கூறிய செப்பத்தோடும் ஒரு தூயவனாக (விமலனாக) அடியவர்களை ரட்சித்தான். தீயவர்களின் அகந்தையையும், சில சமயங்களில் அவர்களையே அழித்தான்.
  அவற்றை எல்லாம் மிக அழகாகச் சுட்டி, ஆண்டாள் நாச்சியார் கண்ணபிரானை துயிலெழுப்புகிறாள்!

  திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரானின் முதல் பாசுரத்தில், ஆழ்வார் முன்னிறுத்துவது பரந்தாமனின் தூய்மையைத் (மாசின்மை) தான். அவனது கல்யாண குணங்களில் முக்கியமானது.

  அமலன் ஆதிபிரான் * அடியார்க்கு என்னை ஆட்படுத்த-
  விமலன், *விண்ணவர் கோன் *விரையார் பொழில் வேங்கடவன்,*
  நிமலன் நின்மலன் நீதி வானவன், *நீள்மதிள் அரங்கத்து அம்மான், *திருக்-
  கமல பாதம் வந்து* என்கண்ணினுள்ளன ஒக்கின்றதே

  அமலன் என்கிறார், விமலன் என்கிறார், நிமலன் என்கிறார், நிர்மலன் என்கிறார் — அப்பரம்பொருளை தூய்மையின் வடிவாக ஆழ்வார் காண்கிறார். PURE என்பதைக் காட்டிலும், IMMACULATE என்று கூறலாம்

  அன்புடன்
  பாலா

  • GiRa ஜிரா says:

   செப்பம் என்பதற்கு நேர்மை என்பதை விட நீங்கள் சொல்லும் சீர்தூக்கிப் பார்க்கும் பண்பு பொருத்தமாக இருக்கிறது.

   திருப்பாணாழ்வாரின் பாசுரம் மிகப் பொருத்தம். நிமலன் நின்மலன் நீதிவானவன்.. ஆகா.. தமிழ்ல அடுக்கிக்கிட்டே போறாரே. எல்லாம் தானா வர்ரதுதான்.

 5. பாவை வணக்கம்!

  ஆண்டாளின் “திருப்பாவைத் திருமொழி”யில்..
  இராண்டாம் திருமொழி = 11 to 20 பாடல்கள்
  அந்த இரண்டாம் திருமொழி, தங்கள் விளக்கத்தால், இனிதே “நிறைவு” கொள்கிறது!

  *பாத் திறத்தால் பாத்திரம்!
  *கோத்திரத்தால் அல்ல கோத் திறம்!
  *கோ வித்தான கோவிந்தன்
  என்று செழுமை நடைபோடும் வரிகள்! நனி நன்று & நனி நன்றி!

  ****/மாலவன் இல்லம் என்பது தத்தமது உள்ளம்/*****

  மெத்த மிகு உண்மை!
  108 திவ்ய தேசம் (திருத்தலம்) என்பார்கள்!
  ஆனா, 109 வது திவ்ய தேசம் ஒன்னும் இருக்கு! = நம் மனசு!
  —–

  *ஆழ்வார்கள் பாடியவை மட்டுமே= “திவ்ய” தேசம்!
  *பிற பெருமாள் கோயில்கள்= தேசம் மட்டுமே!

  காசி.. எத்துணைப் புனிதம் என்று மதமே கொண்டாடினாலும்.. அங்கு பல விஷ்ணு கோயில்கள் இருப்பினும்..
  (ஆழ்வார்கள் மரபிலே) காசி= வெறும் தேசமே! திவ்ய தேசம் அல்ல:)

  *பல பேர் சென்று, மத வியாபாரம், மாசுக் கட்டுப்பாடு இல்லாமை.. என்று சகலமும் கன ஜோராக நடக்கும் காசி= வெறும் தேசம் ஆகி விட்டது!
  *ஒருத்தனும் வாராத, பல பேருக்கு எங்க இருக்கு? -ன்னே தெரியாத திருவட்டாறு= “திவ்ய” தேசம் ஆகி விட்டது:)

  ஏன் இப்படி?
  ——

  மனசு தான் காரணம்!

  *ஆழ்வார்கள், ஊருக்கு உபதேசிப்பதில்லை!
  *தங்கள் மனசுக்கே சொல்லிக் கொள்வார்கள்!

  துயரறு சுடரடி தொழுதெழு “என் மனனே” = என் மனசே…
  என்று தான் (நம்மாழ்வார்)..
  மாறன் எ 32 வயசு நாயகி பாவப் பையன் ஆரம்பிக்கவே ஆரம்பிக்கிறான்!

  இன்னும் பல பாசுரங்கள், “உள்ளம்/ மனம்/ நெஞ்சே” -ன்னு தான் திரும்பத் திரும்பச் சொல்லும்!
  ஆன்மீகம்/ கோன்மீகம் என்று ஆயிரம் பேசுகிறார்கள் இன்றைய TV மேடைகளில்! ஆனால், தனிப்பட்ட அளவில்?:)

  *பேச மட்டுமே தத்துவம்/இறைமை
  *வாழ அல்ல!
  என்ற போலித்தனம், தமக்குள்ளும் புகுந்தறக் கூடாது என்பதற்காகத் தான்..
  ஆழ்வார்கள், திரும்பத் திரும்ப.. தங்க மனசுக்கே சொல்லிக் கொள்வார்கள்!

  அந்த மனசில் தான் இறைவன் “உவந்து” வசிக்கிறான்!
  எல்லார் மனசின் ஆழத்திலும், அவன் இருந்தாலும் (மனச்சாட்சி)
  “இல்லமாய்”, இன்புற்று வாழ்வது.. இது போன்ற மனசுகளில் தான்!

  ******/மாலவன் இல்லம் என்பது தத்தமது உள்ளம்/******
  மனம் = 109 வது திவ்ய தேசம்!

 6. சிற்சில குறிப்புக்கள்:

  1. /முப்பத்து மூவர் அமரர்க்கு,
  முன்சென்று கப்பம் தவிர்க்கும்/

  என்று சிலர் கொள்வதுண்டு! தேவர்களுக்கு ஓடோடிச் சென்று உதவி செய்பவன் என்ற பொருளில்! அல்ல!
  சினிமாவில் கூட, தேவாள் தானே ஓடி வருவாங்க, இவரைத் தேடி? இவர் ஓட மாட்டாரே அவுங்களைத் தேடி?:)

  ***முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று,
  கப்பம் தவிர்க்கும்***
  Comma மாற்றிப் போட வேண்டும்!

  யாகம்/ ஹோமம்/ யக்ஞங்கள் செய்தால், தேவர்கள் தீயில் வந்து, நமக்கு உதவி செய்வார்கள் என்பது வேத வழக்கு!
  தேவர்கள்= இறைவன் அல்ல! அசுரர்களைப் போல், அவர்களும் ஒரு குழுவினரே! அவர்களிலும் மோசமானவர்கள் பலர் உண்டு!

  இருப்பினும், அவர்களை= “யக்ஞ அதிகாரி”யாக வைத்து விட்டதால், எவரும் எதிர்ப்பதில்லை!
  தேவர்கள்= நல்லவாள், அசுரர்கள்= கெட்டவாள்! தீமையை எதிர்த்து நன்மை வெற்றி என்றெல்லாம் எழுதிப் பரப்பல்:)

  ஆனா, “வேதம்” என்ற கர்மத்தை விட
  “வேதாந்தம்” என்ற இறைத்தேடலே உன்னதம்!

  *வேதம்= அதாதோ கர்ம ஜிக்ஞாச = Homas & Yagas
  *வேதாந்தம் (உபநிஷதம்)= அதாதோ பிரம்ம ஜிக்ஞாச = Seeking/ தேடல்!
  —–

  இதை அண்டாள் அறிவாள்!
  ஏன்னா, அவ வளர்ப்பு அப்பாவே அப்படித் தான்!

  தன் வருணத்துக்குரிய= ஹோம சடங்கெல்லாம் செய்யாது (வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ)
  மனசால் இறைத் தேடல் வளர்த்துக் கொண்டு..
  மாலை கட்டும் கைங்கர்யமே செய்து வந்த.. சான்றோர் அந்தணர்= பெரியாழ்வார்!
  (இயற்பெயர்: ஸ்ரீ ராம ஆண்டார் | வழங்கு பெயர்: விஷ்ணு சித்தர்)

  யாக/ஹோமங்கள் = தேவாள் வந்து பலன் கொடுப்பாங்களா?
  இருக்கட்டும்!
  ஆனா, சடங்கு செய்து அவிங்க வருவதற்கு முன்னமேயே..
  இறைவன் ஓடிவருவான்.. அன்பால்!

  அதான் /முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று/ அவிங்க வருவதற்கு முன்னமேயே சென்று..
  நம் கப்பம்/துன்பம் தவிர்ப்பான்!
  தவிர்ப்பான் கூட இல்லை; தவிர்க்கும்! எது?
  அவன் திருப்பெயர்! “முருகா” என்று ஓதுவார் “முன்”!

 7. சிற்சில குறிப்புக்கள்:

  2. “அமரர்” என்ற பெயர்க் காரணம் என்ன?
  இயன்றால் அறியத் தாருங்கள்; நன்றி
  33 -> 33 கோடி ஆனதைச் சொன்னமை மிக நன்று!

  3. “கப்பம்” என்ற சொல்லின் பொருள்/ வேர் என்ன?

  கப்பம் தவிர்க்கும்= துன்பம் தவிர்க்கும்-ன்னு எடுத்துக்கறோம்!
  ஆனா கப்பம் கட்டும் சிற்றரசர்கள்= துன்பத்தையா கட்டுகிறார்கள்?
  வேணும்னா, கட்டுவதையே துன்பமா நினைப்பாங்க:)

  4. “கலி”

  நீங்கள் சொன்ன “ஒலி” என்ற பொருளே இயல்பாய்ப் பொருந்தி வருது!
  இறைவனின் பேரு.. திருநாம ஒலி!
  அதான், இவளும்.. அவனை ரொம்பப் பாடாது, “அவன் பேர்” பாடுகிறாள்! உத்தமன் பேர் பாடி!

  ஆனா கலி= வலிமை/மிடுக்கு என்றும் பொருள்!
  கலியன் என்று திருமங்கை மன்னன்!
  கப்பம் தவிர்க்கும் வலிமையும் உள்ள இறைத் திருநாமம்!
  ——-

  5. “செப்பம்”

  நேர்மை என்று கொள்ளலாம்! ஆனால் சற்றுத் தட்டையான பொருள்!
  செப்பம் = சீர்மை!

  திருக்குறளியே செப்பம் வருமே?
  நடுவு நிலைமை எ. அதிகாரத்தில்!

  சொற்கோட்டம் இல்லது “செப்பம்” – ஒருதலையா
  உட்கோட்டம் இன்மை பெறின்
  “செப்பம்” உடையவன் ஆக்கம் – சிதைவின்றி
  எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து

  எப்படிச் செந்தில், சேந்தன்+இல்.. செம்மையான் இல்லோ.
  அதே போல் செப்பம்!
  சுய விருப்பு/வெறுப்புச் சாய்தல் இன்றி.. “சீரா” இருக்கும் சீர்மை= செப்பம்!
  சீரா/ ஜீரா/ ஜிரா என்பதும் செப்பமே!:)

 8. சிற்சில குறிப்புக்கள்:

  6. செப்பம், திறல், வெப்பம், விமலா.. என்று ஒன்றோடொன்று கோத்துச் சொன்னது மிக நன்று!
  செப்பமும் வேணும், ஆற்றும் திறலும் வேணும், வெப்பம் எனும் லேசான ஒறுத்தலும் வேணும், விமலம் எனும் தூய்மையும் வேணும்!

  /திறமையுள்ளவன் தீயவனாக இருந்து விட்டால் தீமைகளே விளையும்/ = ஒரு வாசகமானாலும் திரு வாசகம்!

  7. செப்பு அன்ன மென்முலை
  செம்பு -> செப்பு எனும் வலித்தல் விகாரம்:)
  செம்புக் குடம், பொற் குடம் என்று சொல்லி உள்ளீர்களே?
  செம்பு/சொம்பு என்ற பெயர்க்காரணம் என்னவோ? செம்பால் செய்வதாலா?
  ——

  8. உக்கம்/தட்டொளி

  ஏன் குறிப்பா விசிறி/ கண்ணாடி?
  *கண்ணாடி= காமத்து இரவில் துயின்று, காலையில் எழுந்தவன், தன் முகம்/தலை.. சரி செய்து கொள்ள:) புரியுது!
  *விசிறி= எதுக்கு? அதுவும் மார்கழிக் குளிரில்?

  தட்டொளி= தட்டு+ஒளி
  தமிழகத்தில், வட்ட வடிவக் கண்ணாடி:)
  பிற வடிவக் (கண்)ஆடிகளுக்குப் பெயர் உண்டா?

  9. மூசு வண்டரை

  வண்டறை???
  அரை = பாதி, இடுப்பு
  அறை= சொல்/ஒலி, இடம்
  ——–

  10. நப்பின்னை நங்காய், திருவே!

  இது பல இடங்களில் கேட்டுவிட்டேன்.. சரியான விளக்கம் இதுவரை அமையலை!
  நப்பின்னையை = திருமகளே -என்ற விளி ஏன்? இருவரும் வேறு வேறு அல்லவா?

  பலரும், திரு= பொதுவான சொல் என்று சொல்லி விட்டார்கள்:)
  சிலர்= நீளாதேவி/ இலக்குமி/ பூமிதேவி.. ஒரே சக்தியே என்று “நயந்து” விட்டனர்:)

  நப்பின்னையை..
  ஸ்ரீதேவி/ பூதேவியின் வேறானவள் என்று காட்டும் சமய நூல்கள்!
  ஆண்டாள், திருப்பாவையில்.. இலக்குமி/திருமகளைப் பாடாதவள்..
  நப்பின்னையை மட்டுமே பாடுபவள்..
  இறுதியில் முடிக்கும் போது..
  “நப்பின்னை திருவே” எ முடித்து விட்டதின் சூழ்க்குமம் என்னவோ?

  தமிழ் மரபின் நப்பின்னை.. காணாமல் போய் விட்டாள்!
  என்பதைச் சொல்லாமல் சொல்கிறாளா, கோதை?:(

 9. ஜிரா,
  சொல்ல விட்டது இப்போது!
  //நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்// ”திருவே” என்று ஆண்டாள் நீளாதேவியான நப்பின்னையை அலைமகளாம் திருமகளுடன் (உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை —- இராஜாஜி) ஒப்பிடுகையில், பெரிய பிராட்டியின் புருஷகாரத் தன்மையை …. பெருங்கருணையை இப்பிராட்டியிடமும் வேண்டுகிறாள் என்று ஒரு பொருள் கொள்ளலாம்.
  “(என்) செல்வமே” என்று போற்றுவதாகக் கொள்வது நேரடிப்பொருள்…
  அன்புடன்
  பாலா

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s