21. வாராதிருப்பானோ வண்ண மலர்க்கண்ணன்

“கோதை”

நப்பின்னையின் அழைப்பு கோதையின் மனதில் கேட்டது. நெகிழ்ந்து உருகினாள். உள்ளத்துக்கு உள்ளேயே உரையாடல் தொடர்ந்தது.

“தாயவளே! தூயவளே! வழிகாட்டியே! வணக்கம்!”

“ஆண்டாள். நானும் உங்களில் ஒருத்தி. பரம் என்னும் தாமத்தால்(கயிற்றால்) நம்மைக்யெல்லாம் கட்டி ஆட்டுவிக்கிறான் பரந்தாமன். அவனிடம் உங்களுக்காக நானே கேட்பேன். உங்கள் குரலாய் நானும் இருப்பேன். மாயவனை எழுப்ப நீயும் அடுத்தடுத்து பாடு.”

தாய் வாய் சொன்ன வார்த்தை நோய்வாய்ப் பட்ட கோதையின் உள்ளத்தில்உய்வாய்” என்று வாழ்த்தியது போல இருந்தது. அவளை வணங்கி அவனைப் பாடினாள்.

Keshav-21

Thanks to Keshav!

”மணிவண்ணா! கோகுலத்தில் உன் வீடு எப்படிப்பட்டது தெரியுமா? பல் கறப்பதற்காக ஒரு கலம் வைத்து ஒரு பீய்ச்சு பீச்சினால் மறுகலனும் நிறைந்தொழுகும் அளவு பால் சொரிகின்ற வள்ளல் பெரும் பசுக்கூட்டம் நிறைந்தவன் வீடு. அந்தப் பசுக்கூட்டங்களைக் கொண்ட நந்தகோபனுடைய மகனே உறக்கம் தெளிவாய்!”

கோதை பாடும் பொழுது கண்ணனுக்குப் பொய்க்கோவம். கண்களைத் திறக்காமலே அவள் மனதோடு ஊடல் செய்தான்.

“ஓ! அப்படியா! இதே அளவு பசுக்கூட்டங்கள் இன்னொரு வீட்டில் இருந்தால், அந்த வீட்டிலும் ஒரு கண்ணன் இருப்பானோ? இவ்வளவுதான் கண்ணனின் பெருமையோ?”

ஒரு நொடி பதறி சிறிது உயிரும் சிதறி அரண்டாள் ஆண்டாள். மறுநொடியே தெளிந்தாள். படுக்கையில் கிடக்கும் கண்ணனை மறந்தாள். நெஞ்சில் நிறைந்தவனை நினைந்தாள். உள்ளத்தில் பெருஞ்சுடர் வடிவாக நின்றான் கண்ணன். அந்தச் சுடரிடம் வேண்டினாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி.

”அடியவரைக் காப்பதில் பெருமை உடையவனே! பெரியவனே! உலகில் காணும் காட்சியெல்லாமாக நின்று அகத்தில் சுடராக இருப்பவனே! துயில் எழுவாய்! தவறானவர்கள் தங்கள் தவறுகளை உன் அருளால் திருத்திக் கொண்டு உன்னையே வந்து பணிவது போல உன்னைப் போற்றி நாங்களும் வந்திருக்கிறோம். உன்னைப் புகழ்ந்து நாங்கள் பாடுவதைக் காதால் கேட்டு மனத்தால் அருளமாட்டாயா!”

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப – கறப்பதற்காக வைத்த பாத்திரங்கள் எல்லாம் நிறைந்து வழியும் வகையில்

மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் – எந்த எதிர்ப்புமின்றி பால் பொழிகின்ற வள்ளல் பெரும் பசுக்கள் (கூட்டத்தை)

ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் – எண்ண முடியாத அளவு கொண்ட நந்தகோபன் மகனே! உறக்கம் கலைந்து சிந்தை தெளிவுறுக!

ஊற்றம் உடையாய் – (அடியவர்களைக் காப்பதில் எப்போதும்) மனவெழுச்சியும் பெருமையும் கொண்டவனே!
பெரியாய் – பெரியவனே!
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் – உலகில் காணும் காட்சியெங்கும் நிறைந்து நின்று உள்ளத்திலும் ஒளி தரும் அருட் சுடரே! துயில் எழுவாய்!

மாற்றார் உனக்கு வலி தொலைந்து – தவறானவர்கள் தங்கள் தவறுகள் எல்லாம் தொலைந்து (நல்லவர்களாய்)

உன் வாசற்கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே – உன்னுடைய வாசல் வந்து நீயின்றி இருக்க ஆற்றாமையால் உன்னுடைய திருவடியைப் பணிவதைப் போலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் – (நாங்களும் உன்னைப்) போற்றிக்கொண்டு வந்திருக்கிறோம். (நாங்கள் கூறும்) புகழ்மொழிகளைக் கேட்டு மனம் திறந்து கருணை செய்வாய்!

இந்தப் பாடலில் பால் என்பது ஞானத்தைக் குறிக்கும். பாலின் வெண்மை ஞானத்தின் தூய்மையைக் குறிக்கும். அப்படிப்பட்ட தூய அறிவுக்கு தமிழில் வாலறிவு என்று பொருள். வால் நிறம் என்பது வெண்மை. சிறிதும் குற்றமில்லாத அறிவை உடையவர்களைத் தொழுது நல்வழி தேட வேண்டும். அதுவே கல்வியின் பெருமை. “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்” என்ற குறளில் வாலறிவன் என்பதற்கு ஆண்டவன் என்பதை விடவும் தூய அறிவுடையவன் என்பதே மிகப் பொருத்தம்.

சரி. பால் என்றால் ஞானம். அதைக் கொடுக்கின்ற பசுக்கள் யார்?

இந்த இடத்தில் பசு என்பது சீடனுக்கு அறிவு சொல்லும் ஆசிரியரைக் குறிக்கும். வைணவ சம்பிரதாயத்தில் இந்த வரிகள் இராமானுசருக்கும் அவருடைய உத்தம சீடர்களான கூரத்தாழ்வான் முதலியாண்டான் எம்பார் போன்றவர்களுக்கும் இடையே உள்ள குரு-சிஷ்ய உறவைப் போற்றுவதாகக் கருதப்படுகிறது.

இதுவும் புரிந்தது. அதென்ன ”மாற்றாதே பால் சொரியும்”? மாற்றமே இல்லாமல் ஒரே மாதிரியாக பாடம் சொல்லித் தருவதா?

இல்லை. மெய்ஞானக் கருத்துகளை சீடருக்கு உபதேசிக்கும் போது, அதன் மையக் கருத்தை மாற்றாமல் நல்லதை உள்ளபடி பாடம் சொல்லிக் கொடுப்பதுதான் “மாற்றாதே பால் சொரிதல்.” ஏற்கனவே உள்ள கருத்துகளை வேண்டுமென்றே திரித்து, சொல்ல வேண்டிய கருத்தை மாற்றக்கூடாது என்பதே இதன் பொருள்.

இதையெல்லாம் ஏன் செய்ய வேண்டும்? இன்றைய சீடனே நாளைய ஆசான். குரு பரம்பரை செழுமையாகத் தொடர வேண்டுமென்றால் மேலே குறிப்பிட்டபடிதான் நடக்க வேண்டும்.

மாற்றார் உனக்கு வலி தொலைந்து” என்பது மிகச் சிறப்பான கருத்து. மாற்றார் என்றால் ஏருக்கு மாறாக நடப்பவர். அப்படி நடந்துகொள்கின்றவரை அழிக்காமல் அவர்களை ஏருக்கு மாறாக எது நடந்துகொள்ள வைக்கிறதோ அதை அழிப்பதுதான் இறைவன் கருணை.

அப்படிப்பட்ட கருணையுள்ள இறைவன் எங்கே இருக்கிறான்? எப்படி இருக்கிறான்? இந்தக் கேள்விகளுக்கு திருக்குறளைப் போல ஒன்றே முக்காலடியில் விடை சொல்கிறாள் ஆண்டாள்.

ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே

ஊற்றம் உடையாய் பெரியாய் – இது வைகுண்டத்தில் இருக்கும் பரவாசுதேவனைக் குறிக்கும். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் பெரியவன் அவன்.
உலகினில் தோற்றமாய் – இந்த உலகில் காணும் காட்சியெங்கும் நிறைந்தவன் என்பது பொருள். வைணவ சம்பிரதாயத்தில் உலகில் திருமால் எடுத்த அவதாரத் தோற்றங்களையும் திருக்கோயில்களில் நாம் காணும் வடிவங்களையும் குறிக்கும்.

அதெல்லாம் சரி. நூற்றுஎட்டாவது திவ்யஷேத்திரமான வைகுண்டத்துக்குப் போனால்தானே பரவாசுதேவனைப் பார்க்க முடியும். உயிரோடு எப்படிப் போவது? இறைவன் அவதாரங்கள் எடுத்து காலங்களும் யுகங்களும் மாறிவிட்டன. இப்போது எப்படிப் பார்ப்பது? உலகத்தில் இருக்கும் அத்தனை கோயில்களுக்கும் எல்லோரும் போய்விடத்தான் முடிகிறதா? பிறகு எப்படித்தான் பார்ப்பது?

அதற்கான விடை “நின்ற சுடரே” என்பது. நம் உள்ளத்துக்குள் ஒளியாய் நின்ற சுடரே இறைவன். மாலவனைத் தேடி எங்கும் ஓட வேண்டாம். உள்ளம் என்னும் கோயிலில் சுடரொளியாய் உறைகின்றான் சுடராழி தாங்கும் திருமால்.

அதனால்தான் இந்த மூன்று இடங்களைப் பட்டியல் இடும்பொழுது “உள்ளத்தில் ஒளிரும் சுடரை” மிக உயர்வாக வைத்தாள் ஆண்டாள்.

அதைத்தான் வைணவம் இப்படி வரிசைப்படுத்துகிறது.

ஊற்றம் உடையாய் – பரம் (வைகுண்டம்)
பெரியாய் – வியூகம் (பாற்கடல்)
உலகில் தோற்றமாய் – விபவம் (திருமாலின் பத்து திருவவதாரங்கள்)
நின்ற – அர்ச்சை (திருக்கோயில்களில் சிலையாய் நிற்பது)
சுடரே – அந்தர்யாமி (உள்ளொளி)

21-a21-b
************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
ஊற்றம் – மன எழுச்சி, பெருமை, வலிமை
தோற்றம் – உருவம்
************************************************************************************************************************
அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

9 Responses to 21. வாராதிருப்பானோ வண்ண மலர்க்கண்ணன்

 1. பாவை இரவு வணக்கம்!
  தோற்றமாய் நின்ற சுடருக்கும் வணக்கம்!

  /பரம் என்னும் தாமத்தால் நம்மைக் கட்டி ஆட்டுவிக்கிறான் பரந்தாமன்/
  :)))))
  கண்ணதாசன், இப்பிடிச் சொல்லாடுவார்!
  திரைப்படப் பாடல்கள் எழுதத் தாங்கள், தாராளமாகச் செல்லலாம்:)

  /”பல்” கறப்பதற்காக ஒரு கலம் வைத்து/
  வன்முறை தவறு ராகவா:)

  /இதே அளவு பசுக்கூட்டங்கள் இன்னொரு வீட்டில் இருந்தால், அந்த வீட்டிலும் ஒரு கண்ணன் இருப்பானோ?/

  மிகவும் ரசித்தேன்!
  ஆண்கள், காதலில் பெண்களை வல்லடி செய்ய..
  இப்படிப் “போட்டுப் பார்ப்பதில்”, தனி மகிழ்ச்சி, காதலனுக்கு:)

  ஆனா காதலிக்குத் தான் இதைக் கேட்ட மாத்திரத்திலேயே நடுக்குறும்!
  இன்னொரு வீட்டில், இன்னோர் அழகன் இருக்கலாம்!
  அவனைக் கண்கள் பார்க்கலாம்!
  அவனைப் புகழ்வது போல், உன்னை வம்பிழுத்து விளையாடலாம்!
  ஆனால் அவன் = “கண்” ஆவானோ? மாட்டான்!

  உன் கண் மட்டுமே= நான், உண் கண்!
  *என் கண்= உன்கண்ணே உள!
  *என் மனம்= உன்கண்ணே உள!

 2. சிற்சில குறிப்புக்கள்:

  1. ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி

  பெருங்கலம், சிறுகலம்.. எதுவானாலும் “நிறைக்க” வல்ல வள்ளல்= இறைவன்!
  நாம் தான் ஏந்துவதில்லை!
  ஏற்ற கலம்.. கலத்தை ஏந்தினால் போதும்!
  ஆசையை, “அங்கு” வைத்தால் போதும்! = தானே நிறைந்து, எதிர் பொங்கும்!

  நாம் அவனை நாடா விட்டாலும், அவனே வலிந்து அருள் புரியக் கூடாதா? என்று சிலர் கேட்பார்கள்:)

  அவன் புரியாமல் இல்லை! புரிகிறான்.. பால் முட்டிக்கிட்டு Readyஆத் தான் இருக்கு!
  ஆனா, நீங்க கலத்தை ஏந்தா விட்டால்..
  பால்= மண்ணில் தான் வழிந்தோடும், உன்னில் வழிந்தோடாது!
  ——

  2. மாற்றாதே பால் சொரியும்

  மாற்றுதல்= எதிர்த்தல் என்ற பொருளில் சொல்லியுள்ளீர்கள் /எந்த எதிர்ப்புமின்றி பால் பொழிகின்ற/
  உண்மையே! மாற்றாரை, மாற்று அழிக்கும்..

  ஆயின், மாற்றுதல்= Change செய்தலும் கூட!
  குடத்தை Change செய்யக் கூட விடாமல், தொடர்ந்து பால் சுரக்கும்!
  நடுவில் மனசு மாறி, Change ஆகி, பாலை நிறுத்தி விடா வள்ளல்!

  மாறுதல் நல்லதே!
  ஆனால் எதில் மாறுதல்? என்பதே முக்கியம்!

  காதல், மனசு மாறாமை
  காதல், உறவு மாறாமை
  கடின, மனசு மாறுதல்!
  —–

  /மையக் கருத்தை மாற்றாமல்
  நல்லதை
  “உள்ளபடி” பாடம் சொல்லிக் கொடுப்பது/

  Fantastic! இதுவே தலையாய கல்வி! = கற்றலும் கற்பித்தலும்!
  உள்ளபடி = மெய்த் தரவுகளோடு!

  ‘நைசாக’ Adjust செய்து, தீய நூலின் தீமை மறைத்தலோ
  ‘நைசாக’ Adjust செய்து, நல்ல நூலின் நன்மை மறைத்தலோ
  இல்லாமல்..
  தரவுகளோடு! மூல நூல் தரவுகளோடு!

  இராமானுசர், இந்தப் பண்பைக் “குறிப்பிட்டுச்” சொல்வார்: /பூர்வாசார்ய சுரக்ஷிதாம், பஹூமதி வியாகாத தூரஸ்திதாம்/
  ஆனால், அவரையும், சாமி ஆக்கிவிட்டு, அவர் உள்ளத்தின் பேச்சை = கேட்டு நடப்பார் தான், அருகிவிட்டது:(

 3. சிற்சில குறிப்புக்கள்:

  3. வள்ளல் பெரும்பசுக்கள்

  ஆண்டாள் “வள்ளல்” என்று சில-பல முறை குறிக்கிறாள்:)
  *வாங்க குடம் நிறைக்கும் வள்ளல்
  *மாற்றாதே பால் சொரியும் வள்ளல்
  *வள்ளல் மாலிருஞ் சோலை மணாளன்

  “வள்மை/வண்மை” உடையவன்/உடையவள்= வள்ளல்/வள்ளி
  “வள்” = வளம்/ வளைந்து என்ற பொருள்!

  பிறர் உதவி கேட்கும் முன்,
  தானே “வளைந்து”, “வளம்” சேர்க்கும் குணம்= வள்ளல்/வள்ளி!

  ஆண்களையும், “வள்ளியோய்” என்று குறிக்கும் சங்கப் பாடல்கள் உள!
  *வள்ளியம்= தன்மை
  *வள்ளியோய்= முன்னிலை
  *வள்ளன், வள்ளி, வள்ளல், வள்ளர்= படர்க்கை
  —–

  வள்ளிக்கிழங்கு கொடியின், குழியில் கிடைத்ததால்= வள்ளி! அந்தக் குழியில், மான் பிரசவித்த குழந்தை.. என்றெல்லாம் புராணக் கதை கட்டி விட்டார்கள்:(
  அல்லவே அல்ல!
  தொல்குடித் தமிழச்சி.. அவள் பேரே= “வளம் சேர்க்கும்” வள்ளி!

  *வள்ளண்மை உடையதால் வள்ளி
  *வள்ளிக் கொடி போல் மெலிந்தவள் ஆதலால் வள்ளி
  *வளம் சேர்ப்பதால் வள்ளி

  அவளே, தன் முருகக் காதலால்.. நமக்கு வளம்/வள்ளண்மை செய்கிறாள்!
  வள்ளி = அவளே!
  வள்ளியை உடையவன் என்பதால்= அவனும் வள்ளல் ஆகிப் போனான்!

  நப்பின்னை & வள்ளி
  = மாறிலாத் தமிழ்ப் பெண்மை வாழ்க!

 4. நான் எதிர்பார்த்ததை விட நன்று, ஜிரா. அதுவும், நிறைய பசுக்கள் கொண்ட கோவலன் மட்டுமே தான் என்று கண்ணன் எண்ணிவிடுவானோ என்று அஞ்சி, ஆண்டாள் அடுத்தடுத்த பாசுர வரிகளில் அவனது குணநலன்களை சிலாகிப்பதாகச் சொன்ன விதம் அருமை. வளமான கற்பனை 🙂

  //மாலவனைத் தேடி எங்கும் ஓட வேண்டாம். உள்ளம் என்னும் கோயிலில் சுடரொளியாய் உறைகின்றான் சுடராழி தாங்கும் திருமால்.//
  அத்வைதமாய் தோன்றினாலும் அருங்கருத்தே :-)))

  //மையக் கருத்தை மாற்றாமல் நல்லதை உள்ளபடி பாடம் சொல்லிக் கொடுப்பதுதான் “மாற்றாதே பால் சொரிதல்// இதுவே இப்பாசுரத்தின் சாராம்சம், essence எனலாம்.
  “மாற்றாதே பால் சொரிதல்” பற்றி இன்னொரு கருத்து. வள்ளல் பெரும்பசுக்கள் என்று அவை பால் சுரக்கும் பெருமையைச் சொல்லியாயிற்று. அதோடு “மாற்றாதே” எனும்போது, ”எதிர்ப்பின்றி” என்பது மட்டுமல்ல, தனது மடியில் ”சிறிதும் தேக்கி வைத்துக்கொள்ளாமல்” என்று கொள்வது தகும். அப்ப கன்றுகளுக்குப் பால்? ஆயர்கள், கன்றுகள் தாய்ப்பசுக்களிடம் பால் குடித்து திருப்தியடைந்த பிறகே, கறத்தலைத் தொடங்குவர். ஆயர்பாடி பசுக்கள் ஒரு வேளைக்கு ஏராளமான பால் தருபவை என்று தெரிகிறது. அத்துடன், பசு என்பதை ஒரு குருவுடன் ஒப்பு நோக்குகையில், குருவானவர் தனது ஞானத்தைச் சிறிதும் தேக்கி வைக்காமல், நல்லவிதமாக தன் சீடர்களுக்கு உபதேசமாக வழங்கவேண்டும் என்பது பாசுரம் தரும் ஒரு செய்தி.

  ”பெரியாய்” என்கையில், “பெரும்வலிமையும், பெருங்கருணையும் ஒருசேரக் கொண்டவனே” என்று கொள்ள வேண்டும். அடியவரை ரட்சிக்க இரண்டுமே அவசியம்.

  //ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே// பரமன் மேல் பற்று, நம்பிக்கையற்று எதிர்ப்பவர் கூட, அகந்தையைத் துறந்து, குற்றங்களை உணர்ந்து, அவனிடம் சரணடைவதை ஆண்டாள் முன்னிறுத்துகிறாள், பரம அடியவர் சரணடைவதை அல்ல.

  இதில் ஒரு நயம் உள்ளது, அடியவர் பரமனே கதியென்று அவனைப் பற்றுவதில் பெரிய ஆச்சரியமில்லை தானே? அது இயல்பானது. அதோடு, அடியவர், அல்லாதவர் என்பதையும் விஞ்சி நிற்பது அவனது ரட்சித்தல். யாரை, எவ்வாறு, எப்பொழுது காத்தருள வேண்டும் என்பதை அம்மாயவனே அறிவான்!!!

  இங்கு “ஆற்றாது வந்து” என்பதற்கு, “பல பாவங்கள் செய்து, பலவகையாக துன்பப்பட்டு, பலவிடங்களில் தீர்வு, நிம்மதி தேடியலைந்து, இனிமேல் தாங்கமுடியாது என்ற நிலையில், நீ (மட்டுமே) கதியென்று முழுமையாக நம்பி வந்து” என்று விளக்கம் கொள்ளலாம் தானே?

  அன்புடன்
  பாலா

  • GiRa ஜிரா says:

   நன்றி பாலா 🙂

   // அத்துடன், பசு என்பதை ஒரு குருவுடன் ஒப்பு நோக்குகையில், குருவானவர் தனது ஞானத்தைச் சிறிதும் தேக்கி வைக்காமல், நல்லவிதமாக தன் சீடர்களுக்கு உபதேசமாக வழங்கவேண்டும் என்பது பாசுரம் தரும் ஒரு செய்தி. //
   மிகவும் இரசித்தேன். ஏற்புடைய கருத்து. சீடனுக்குக் கொடுப்பதற்காகத்தானே ஆசானுக்கு அறிவு.

   // இங்கு “ஆற்றாது வந்து” என்பதற்கு, “பல பாவங்கள் செய்து, பலவகையாக துன்பப்பட்டு, பலவிடங்களில் தீர்வு, நிம்மதி தேடியலைந்து, இனிமேல் தாங்கமுடியாது என்ற நிலையில், நீ (மட்டுமே) கதியென்று முழுமையாக நம்பி வந்து” என்று விளக்கம் கொள்ளலாம் தானே? //
   தாராளமாகக் கொள்ளலாம். ஒருவகையில் மனிதர்களைப் பொருத்தவரையில் இதுதானே நடக்கிறது.

 5. சிற்சில குறிப்புக்கள்:

  4. ஊற்றம் உடையாய்
  ஊற்றம்/ ஊக்கம்.. ஒரே பொருள் சொற்களா? இயன்றால், அறியத் தாருங்கள்!

  5. தோற்றமாய் நின்ற “சுடரே”

  அருட் பெருஞ் சோதி!
  ஜோதி எ. சம்ஸ்கிருதச் சொல்லை, அறியாத அந்தக் கால நிலைக்கு ஏற்றவாறு முதலில் புழங்கிய வள்ளலார்..
  பின்பு, நல்ல தமிழில் தம் பற்றை வைத்து, “அருட் பெருஞ் சுடரே” -ன்னு திருவருட்பா உரைநடையில் எழுதுவார்!

  /ஆரியம் போன்ற கடின மொழிகளில் என் மனத்தைப் பற்றவொட்டாது தடுத்து,
  தமிழ்போல் இனிய எளிய மொழியினில்
  என்னுடைய மனத்தைப் பற்றுவித்த தேவரீர் பெருங்கருணைக்கு வந்தனம்!/
  (அருட்பா உரைநடை)

  6. மாற்றார், உனக்கு வலி “தொலைந்து”

  வீரனிடம் எதிரிகள், வலிமையைத் “தொலைக்கத்” தானே முடியும்?
  ஏன் “தொலைந்து” என்று ஆளுகிறாள் ஆண்டாள்?

  *தொலைந்து= தன் வினை
  *தொலைத்து= பிற வினை அல்லவா?

  வருந்துவான் > வருத்துவான்
  திருந்துவான் > திருத்துவான்
  தொலைந்து > தொலைத்து

  *மாற்றார் வலி தொலைந்து= இறைவன், அவர்கள் வலிமையைத் “தொலைக்க”/அழிக்க வில்லை!
  *இறைவன் முன்.. அவர்கள் தாங்களே தொலைந்து போனார்கள்; தங்கள் சிறுமை “தொலைந்து” போனார்கள்! தன் வினையே!

  பிறவினை வைக்காது
  தன்வினை வைக்கும்
  தமிழ் இலக்கண வித்தைக்காரியான ஆண்டாள்!

 6. /ஊற்றம் உடையாய் – பரம் (வைகுண்டம்)
  பெரியாய் – வியூகம் (பாற்கடல்)
  உலகில் தோற்றமாய் – விபவம் (திருமாலின் பத்து திருவவதாரங்கள்)
  நின்ற – அர்ச்சை (திருக்கோயில்களில் சிலையாய் நிற்பது)
  சுடரே – அந்தர்யாமி (உள்ளொளி)/

  :))))))))
  இதைக் குறிப்பிட்டுச் சொன்னமைக்கு நனி நன்றி!

  *பெரியாய்= பரம் | அனைத்திலும் பெரிய.. பரப் பிரம்மம்
  *ஊற்றம் உடையாய்= வியூகம் (பாற்கடல்) | அமரர்களைக் காப்பதில் ஊற்றம்
  .. என்று இடம் மாறி இருக்கணுமோ?

  /நின்ற – அர்ச்சை (திருக்கோயில்களில் சிலையாய் நிற்பது)/

  நிற்பதோடு மட்டுமன்றி..
  நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான்

  ஆற்றுப்படை வீடுகளில்…
  ஒரே இடத்தில் மட்டுமே முருகன்= அமர்ந்தான் | திருப் பரங்குன்றம்
  பிற தலங்கள் அனைத்தும்= “நின்றான்” தான்!:)
  ——

  /நூற்று எட்டாவது திவ்ய ஷேத்திரமான வைகுண்டத்துக்குப் போனால் தானே பரவாசுதேவனைப் பார்க்க முடியும்/

  பலரும் 108, 108 பார்த்துட்டீங்களா? -ன்னு சிலாகிப்பார்கள்:)
  எண்ணிக்கையில் மயங்கும் உலகம், எண்ணிக் கைப்பிடித்தல் கொள்ளாது!

  As a matter of fact..
  ஒருவரும் 108 தலங்களும் பார்க்கவே முடியாது:)

  இறந்த பின், வைகுந்தம் வேண்டுமானால் போகலாமே ஒழிய..
  பாற்கடல்= எந்தச் சீவாத்மாவும் செல்ல முடியாது!
  அது, தேவர்கள்/ பிரம்மா/ இன்ன பிற லோகத்தினர் செல்வது மட்டுமே!

  ஆக எப்படிப் பார்த்தாலும்..
  *மண்ணுலகில்= 106
  *பின்னர் மேலுலகில்= 1 (வைகுந்தம்)
  107 தான் மொத்தமே!:)

  So, 108, 108 -ன்னு அடிச்சிக்காம.. மனம் = அதுவே ஆகச் சிறந்த “திவ்ய” தேசம்!
  உணர்வோம்!
  உரை பாவை உரைக்கு, நனி மிகு நன்றி!

 7. amas32 says:

  ஒவ்வொரு பாசுரத்தின் மகிமையும் உங்கள் விளக்கத்தால் அதிகமாக அனுபவிக்க முடிகிறது. நன்றி ஜிரா.

  //ஏற்கனவே உள்ள கருத்துகளை வேண்டுமென்றே திரித்து, சொல்ல வேண்டிய கருத்தை மாற்றக்கூடாது என்பதே இதன் பொருள்.
  இதையெல்லாம் ஏன் செய்ய வேண்டும்? இன்றைய சீடனே நாளைய ஆசான். குரு பரம்பரை செழுமையாகத் தொடர வேண்டுமென்றால் மேலே குறிப்பிட்டபடிதான் நடக்க வேண்டும்.// முக்கியமாக கவனிக்க வேண்டிய, அனைவரும் புரிந்து அனுசரிக்க வேண்டிய ஒரு கருத்தை அழகாக கோடிட்டு காட்டியுள்ளீர்கள்.

  amas32

  • GiRa ஜிரா says:

   நன்றிமா 🙂

   அந்தக் கருத்தைப் பின்பற்றுவது மிகமிக அவசியம். ஆனால் பலருக்கு அதுதான் முடியாததாக இருக்கிறது.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s