22. பெருமை என்பதே சிறுமை

Keshav-22

Thanks to Keshav!

கண்ணன் தான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்ற நம்பிக்கை வந்ததும் ஆண்டாள் தொடர்ந்து பேசுகிறாள். அவளுடைய மனதில் இருப்பதையெல்லாம் சுருக்கமாகவும் தெளிவாகவும் கொட்டிவிடுகிறாள்.

“கண்ணா! மணிவண்ணா! எமக்கென்று தனிப் பெருமை ஒன்றுமில்லை. எம் பெருமையே எம்பெருமான் நீதானென்று உன்னை நாடி வந்திருக்கிறோம். நீயாளும் இந்த உலகம் மிகவும் பெரியது. மிகவும் அழகானது. இந்த உலகத்து அரசர்கள் எல்லாம் தங்கள் பெருமைகள் குறைந்து விடும் வகையில் உனது பள்ளியறைக் கட்டிலருகே வந்து கூட்டமாகப் பணிந்து நிற்பர். அப்படித்தான் இன்று நாங்களும் வந்து நிற்கின்றோம்.

மாடுகளின் கழுத்தில் ஒலிக்கும் மணிச்சலங்கையின் வாயின் அழகிய உருவத்தை ஒத்த சிவந்த தாமரை மலர் போன்ற செவ்வரியோடும் உன் கண்களின் பார்வை எங்கள் மேல் படதோ!

புவிக்கு ஒளி கொடுக்கும் நிலவும் கதிரும் உன்னிரு விழிகள். எப்படித் தெரியுமா? தீயவைகளைச் சுடும் நெருப்பாகவும் இருந்து, எங்களைக் காக்கும் கருணைக்குளிர் மதியமாகவும் இருப்பதால் அப்படி. அப்பேர்ப்பட்ட விழிகளால் நீ எங்களை நோக்கும் பொழுது எங்கள் குறைகள் அனைத்தும் பொசுங்கி மறையும். உன் பேர் பாடும் பேரின்பமே நிறையும். அதற்கு உன் விழிகாட்டி வழிகாட்டு!”

அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

அம் கண் மா ஞாலத்து அரசர் – அழகியதாகவும் விரிந்து பரந்ததாகவும் உள்ள இந்த உலகத்தின் அரசர்கள் எல்லாம்
அபிமான பங்கமாய் வந்து – தமக்கென ஒரு பெருமையும் பீற்றலும் இல்லாமல் வந்து
நின் பள்ளிக் கட்டிற் கீழே – உன்னுடைய கட்டிலின் காலருகே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் – கூட்டமாய் வந்து நிற்பது போல நாங்களும் இங்கு தலைகூடியிருக்கிறோம்.

கிங்கிணி வாய் செய்த தாமரைப் பூப்போலே – மணிச்சலங்கையின் வாயின் உருவம் போன்று திறந்தும் திறக்காமலும் இருக்கும் அழகிய தாமரை மலரைப் போன்ற
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ – சிவந்த விழிகள் மெல்லத் திறந்து எம்மைப் பார்க்காதோ!

திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல் – சந்திரனும் சூரியனும் முழுதாய் வானத்தில் எழுந்து நின்றது போன்ற
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் – உன்னுடைய அழகிய கண்கள் இரண்டால் எங்களையெல்லாம் நோக்கினால்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் – எங்களுடைய குறைகள் எல்லாம் கரைந்து பேரின்பம் பெறுவோம்! எம்பாவாய்!

இந்தப் பாடலில் அபிமான பங்கம் என்று சொல்லப்படுவது மிகச் சிறப்பானது. அபிமானம்(பெருமை) பங்கப்படத்தான் வேண்டுமா? இங்கு பங்கப் படுத்துதல் இல்லை. பங்கப்படுதல். அதாவது தானகவே பெருமைகள் மறைந்து போகும்.

நீங்கள் யார்?

ஒரு மன்னன். என் நாடு இவ்வளவு பெரியது. இத்தனைக் கோடி மக்கள் வாழ்கிறார்கள். நிறைய காடுகள் விலங்குகளும் பறவைகளும் நிறைந்து விளங்குகின்றன. தங்கச் சுரங்கங்களும் வைரச்சுரங்கங்களும் எக்கச்சக்கம். அத்தனைக்கும் நானே மன்னன். என் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு கிடையாது.

சரி. எத்தனை ஆண்டுகளாக மன்னராக இருக்கின்றீர்?

கடந்த பத்து ஆண்டுகளாக நானே அரசன்.

அதற்கு முன்?

என் தந்தை அரசராக இருந்தார்.

அப்போது இந்தப் பெருமையெல்லாம் உம்மிடம் இல்லை. சரி. வேறு ஏதாவது பெருமை இருந்ததா?

அப்போது இளவரசன் என்ற பெருமை இருந்தது.

அது இப்போது இல்லையா?

இல்லை. நான் அரசன் ஆனதும் இளவரசன் என்னும் பெருமையை விடப் பெரியதான மன்னன் எனும் பெருமை வந்தது.

அதாவது இளவரசன் என்ற பெருமை பங்கப்பட்டதால் மன்னர் ஆனீர்கள். இந்த மன்னன் என்னும் பெருமையும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இன்னொருவருடையது. உங்களுடைய காலத்துக்குப் பிறகு இன்னொருவர் சொந்தம் கொண்டாடப் போகிறார். சரியா?

சரி.

நல்லது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் யார்?

நான் யாருமேயில்லை. என்னுடைய பெருமையென்று எதுவுமே கிடையாது. இறைவனுடைய கருணை என்னை இங்கே நிறுத்தியிருக்கிறது. இதை விடவும் இறைவன் திருவடியில் படியாக இருப்பதே பெருமை.

அபிமானம்(பெருமை) பங்கமாவது இப்படித்தான். அப்படியில்லாமல் மனம் நிறைய சுயப்பெருமைகளை சுமந்துகொண்டு எந்தக் கோயிலுக்குப் போனாலும் இறைவன் கண்டுகொள்ள மாட்டான். பரம்பொருளிடம் வெறும் பொருள் எதுவும் செல்லாது. நம்மிடம் பெறும் பொருள் அன்பு மட்டுமே.

பங்கப்படவேண்டிய அபிமானங்கள் ஐந்து என்றும் எட்டு என்றும் கணக்குகள் உள்ளன. எண்ணிக்கை வேறுவேறானாலும் அவை சொல்லும் அபிமானங்கள் ஒன்றுதான்.

உடையவரான இராமானுசர் வாழ்க்கையில் ஒரு நிகழ்வு. ஆளவந்தாரின் சீடரான திருக்கோட்டியூர் நம்பியிடம் பாடம் கற்பதற்காகச் சென்றார் இராமானுசர். ஆனால் திருக்கோட்டியூர் நம்பியோ இராமானுசரை திருப்பியனுப்பிவிட்டார். மறுபடியும் இராமனுசர் போன போது மீண்டும் திருப்பியனுப்பிவிட்டார். இப்படி பதினெட்டு முறை சென்று திரும்பிய பிறகுதான் இராமானுசரைச் சீடராக ஏற்றுக் கொண்டார்.

ஒவ்வொரு முறை திருப்பியனுப்பும் போதும் வெறுங்கையோடு இராமானுசரைத் திருப்பியனுப்பவில்லை. எட்டு முறை “அபிமான பங்க” உபதேசங்களும் பத்து முறை “பகவத் கார்யம்” என்னும் இறைத்தொண்டு உபதேசங்களையும் செய்தே அனுப்பினார். அவற்றையெல்லாம் முறையாகக் கடைப்பிடித்து பதினொன்பதாம் முறை வரும் பொழுது இராமானுசருக்கு ஆச்சார்ய உபதேசம் கிடைத்தது. ஸ்ரீவைஷ்ணவத் தத்துவத்தை திருக்கோட்டியூர் நம்பி உபதேசித்தார்.

சரி. அந்த எட்டு பெருமைகள் என்னென்ன?

1. அகங்காரமும் மமகாரமும் – நான் என்ற அகங்காரம். இந்தச் செல்வம் என்னுடையது என்ற மமகாரம்.
2. தேகாத்மான அபிமானம் – உடல் மீதும் உடலால் பெறும் இன்பங்கள் மீதும் பற்றுக் கொள்வது.
3. ஆத்மஞானமின்மை – உடல் வேறு ஆன்மா வேறு என்ற புரிதல் இல்லாமல் தான் முழுதும் சுதந்திரமானவன் என்று நினைப்பது.
4. ஐசுவரிய போகம் – தேவைக்கு மீறி செல்வம் சேர்ப்பதிலும் சேர்த்த செல்வத்தை வீண் செலவு செய்வதும்
5. அர்த்த-காம-ராக தோஷம் – இந்த உலகத்தின் இன்பங்களில் மகிழ்வதும் துன்பங்களில் வருந்துவதும்.
6. சம்சார பீஜம் – குடும்ப வாழ்க்கையின் மீதுள்ள பற்று. நம் குடும்பமே நம்மை எப்போதும் காக்கும் என்ற எண்ணம்.
7. சாத்வீகமின்மை – காமம் கோபம் லோபம் ஆகியவற்றின் பிடியில் இருந்து அளவுக்கு மீறி எதிலும் உணர்ச்சிவசப்படுதல்
8. விஷயாந்திர அபிமானம் – இறைவனை வணங்கும் போது “இதைக் கொடு அதைக் கொடு” என்று கேட்பது.

இந்தப் பட்டியலின் படி பார்த்தால் நாமெல்லாம் இறைவனை விட்டு எவ்வளவு தள்ளியிருக்கிறோம் என்பது விளங்கும். மேலே சொன்ன அத்தனை அபிமானங்களும் சொல்லாமல்  விடப்பட்ட அபிமானங்களும் பங்கப்பட்டு இந்தப் பாடலில் கண்ணனை வேண்டி நிற்கிறாள் ஆண்டாள்.

கண்ணன் கண் திறந்தானா? அவனை இத்தனை காலம் பிரிந்திருந்த கோதையின் சாபம் நீங்கியதா?
22-a22-b
************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
அம் – அழகிய
மா – பெரிய (இந்த இடத்தில் பரந்து விரிந்த)
பங்கம் – அழிவு, இழிவு, துண்டித்தல், நீக்குதல்
************************************************************************************************************************
அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

8 Responses to 22. பெருமை என்பதே சிறுமை

 1. வெகு அருமையான விளக்க உரை. குறிப்பாக அபிமான பங்கம் பற்றியது. அபிமானத்தைப் பற்றியிருப்பதாலேதான் இறைவனிடமிருந்து விலகியே இருக்கிறோம்.

  தவிர தமிழ் பெரிதா வடமொழி பெரிதா என்று சர்ச்சையில் ஈடுபடுவோர்களுக்கும் ஒரு குட்டு வைத்திருக்கிறாள் கோதை. ‘திங்களும் (தமிழ்) ஆதித்தியனும்(வடமொழி) போன்ற இரு கண்கள் என்று சொல்லி மொழிகளில் பேதமில்லை என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறாள் ஆண்டாள்

  • GiRa ஜிரா says:

   நமக்கு இருக்குற அபிமானங்களை வெச்சுப் பாத்தா கடவுள் ரொம்ப ரொம்பத் தள்ளியிருப்பாரு. :))))))))

   மொழிகளில் சிறுசு பெருசுன்னு சொல்ல முடியாதே. அவங்கவங்களுக்கு அவங்கவங்க மொழி. அவ்வளவுதான். 🙂

  • திங்களும் ஆதித்யனும் = தமிழும் சம்ஸ்கிருதமும் என் 2 கண்கள் என்றெல்லாம் கோதை சொல்லவில்லை;
   இது போன்று உரை செய்தல்களுக்குப் பெயரே “ஒட்ட வைப்பு”:)

   அப்படிப் பார்த்தால், அபிமான பங்கம் என்கிறாள் கோதை!
   *தமிழில், செருக்கழிதல் எனாது,
   *சம்ஸ்கிருத, अभिमान/ அபிமான பங்கம் என்கிறாள்!
   தமிழுக்குச் செருக்கில்லை; சம்ஸ்கிருதம் தான் செருக்கு! அச் சம்ஸ்கிருத அபிமானத்தை, ஒரே போடுபோட்டு, பங்கம் செய்கிறாள்:)) என்றெலாம் ஸ்வய பிடித்தப் பொருளுரைக்க முடியும்!

   இப்படிச் செய்யாதீர்கள்; வேண்டுகோள்!

   திங்களும் ஆதித்யனும்.. செய்யுள் ஓசைக்கு, திங்= நேரசைக்குப் பின் தொடரும் ஆதித்= நிரையசை! அவ்வளவே!
   திங்களும் சூரியனும், திங்களும் கதிரவனும், திங்களும் கதிரவனும் என்று போட்டால் நிரையசை வந்தாலும், கொச்சகக் கலிப்பா இடிக்கும்! அதனால், திங்களும் ஆதித்யனும் என்று போடல்; அவ்வளவே!

   திருப்பாவை= தரவிணைக் கொச்சகக் கலிப்பா

   ரெம்பாவாய் என்ற இறுதிச் சொல் நீக்கினால்.. திருப்பாவை முழுதுமே, எட்டு அடி வெண்பா (பற்றொடை வெண்பா)

   /நாராயணனே நமக்கே பறை தருவான்
   பாரோர் புகழப் படிந்து/
   என்று குறள் வெண்பாக்களாகவே முடியும்!

   திருப்பாவை வெண்பா ஈற்றடி அழகு:
   *நீங்காத செல்வம் நிறைந்து
   *இன்றுயாம் வந்தோம் இரங்கு
   *உய்யுமாறு என்றெண்ணி உகந்து
   *பாரோர் புகழப் படிந்து

   இப்படி, செய்யுள் நலம் கருதியே,
   அக் காலத்தில் தமிழில் புகுத்தப்பட்டுவிட்ட சம்ஸ்கிருதச் சொற்களை, கிரந்தம் நீக்கிப் புழக்கம்; அவ்வளவே!
   “சம்ஸ்கிருதமும் என் 1 கண்” எ. கோதை சொல்லவேயில்லை!

   தெளிவே இல்லாத சம்ஸ்கிருதம்; தெளிவுள்ள தமிழ்! என்று ஆசார்ய புருஷரே அருளிச் செய்கிறார், இதோ:
   செய்ய “தமிழ் மாலைகள்” யாம் தெளிய ஓதி
   தெளியாத (சம்ஸ்கிருத) மறை நிலங்கள் தெளிகின்றோமே!
   – வேதாந்த தேசிகர்!

   பூர்வாசார்ய சுரக்ஷிதாம்
   பஹூ மதி, வியாகாத தூரஸ்திதாம்! நனி நன்றி..

  • சம்ஸ்கிருதமும் செம் மொழியே! (இன்று வழக்கொழிந்து விட்டாலும்)
   சம்ஸ்கிருதமும் க்ஷேமமாக இருக்கட்டும்..
   … ஆனால் அதன் எல்லைக்குள்; தமிழுக்குள் அல்ல!

   தமிழுக்குள் தமிழே!
   அந்தந்த மொழிக்குள், அந்தந்த மொழியே/ பண்பாடே!
   இது மிக எளிய உண்மை; சத்யஸ்ய சத்யம்!

   ஆனா, இந்த எளிய அறத்தைப் புரிந்து கொள்ளாமல் தான்.. நமக்கு இத்துணை ‘அபிமான’ங்கள்:(
   இனியாச்சும்.. இந்த அறமிலா ‘அபிமான’ங்கள் பங்கம் ஆகட்டும், பாவை விளக்கொளியில்!

   *ஸ்வ-பிரவிருத்தியே = அபிமானங்கள்
   *அவை, பகவத் பிரவிருத்திக்கு= விரோதி;
   பகவத் பிரவிருத்திக்கு விரோதியான, ஸ்வ பிரவிருத்தி நாஸ்தியே= சரணாகதி!
   ‘அபிமான’ பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே.. வாயால் மட்டுமன்றி வாழ்க்கையாலும், இந்த அறம் முயல்வோம்!

   தமிழுக்கு இரண்டு கண்களும்= தமிழே! வெவ்வேறு அல்ல!
   அஃதே பார்வை நலம்! பாவை அறம்!

 2. amas32 says:

  Each day you outdo yourself!

  //அபிமான பங்கமாய் வந்து – தமக்கென ஒரு பெருமையும் பீற்றலும் இல்லாமல் வந்து
  நின் பள்ளிக் கட்டிற் கீழே – உன்னுடைய கட்டிலின் காலருகே
  சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் – கூட்டமாய் வந்து நிற்பது போல நாங்களும் இங்கு தலைகூடியிருக்கிறோம்.// இந்தக் காட்சியை மனக் கண்ணில் பார்க்கும்போது கோகுலத்தில் பசுக்கள் கோபாலனைச் சுற்றி நின்று அவன் ஆணைக்குக் காத்திருப்பது போல் இங்கே ஆண்டாளின் தோழிமார் எல்லோரும் கண்ணனின் எண்ண மயக்கத்தில் சிந்திக்கும் திறன் அற்று மெய் மறந்து ஐந்தறிவு ஜீவன்களாக அவன் பார்வைக்கு ஏங்கித் தான் குழுமி நிற்கிறார்களோ என்று தோன்றுகிறது.

  நின்னை சரணடைந்தேன் என்று அவன் திருவடிகளில் சரணாகதி செய்து விட்டால் எல்லா அபிமானத்துக்கும் எளிதாய் பங்கம் வந்துவிடும்!

  amas32

 3. ஜிரா,
  அந்த மன்னன், இளவல் எ.கா மிக நன்று. அத்துடன், அந்த 8 அபிமானங்களை அறியத் தந்தமைக்கு நன்றி. ஆனால், என்னால் எதுவும் பங்கப்படவில்லை :-)))) ஆனால் முயற்சி செய்கிறேன்.

  இந்த 22வதில் “அபிமான பங்கம்” பற்றிப் பேசுவது போல, ஆண்டாள், சென்ற (21வது) பாசுரத்தில் ”மாற்றார் வலி தொலைந்து” என்று சொன்னதை நினைவு கூர்தல் அவசியம். ஏன்? இவை இரண்டும் கோபியர் பூரண சரணாகதியின் கடை வாயிலில் இருப்பதை உணர்த்துகின்றன. கண்ணன் அருளைப் பெறுவதற்கு தயார் நிலையில் உள்ளனர்…. அடுத்த “மாரி மலை முழைஞ்சில்” பாசுரத்தில், கிருஷ்ண சிம்மம், தனது சீரிய சிங்காசனத்தில் அமர்ந்து, கோபியரின் குற்றம் குறைகளை ஆராயப்போகிறான். 14 வயது கவிதாயினி கோதை எவ்வளவு அழகாக, 30 பாடல்களில், ”நோன்பு to திருவடி நிழல்” அடைவதை ஒரு தொடர்கதை போல சொல்லிச் சென்று விட்டாள்!

  இன்னொரு விஷயம்: திங்களும், கதிரவனும் ஒரே நேரத்தில் நமக்குத் தெரிவதில்லை. ஏதாவது ஒன்று தான். அடியவரின் (சிற்றின்ப ஆசைக்கும், அதனால் குற்றங்களுக்கும் vs பக்தி உணர்வு & நற்குணங்களுக்கும் இடையே ஆன) அல்லாட்டத்தை குறிப்பில் உணர்த்துவதாகக் கொள்ளலாம் தானே? அந்தப் பரந்தாமன் கண் திறந்தவுடன், நிலவும், சூரியனும் ஒரு சேரத் தெரிகிறது…. அதாவது அவனருளால், சாபமும் ஒழிந்து, சீர்தூக்கிப் பார்க்கும் அறிவு மிகுந்து, தெளிவு பிறக்கிறது!

  அன்புடன்
  பாலா

  • GiRa ஜிரா says:

   நீங்க மட்டுமா… நானுந்தான். எல்லாருந்தான். சிலர் போலி அபிமான பங்கம் காட்டுறாங்க. அவ்வளவுதான்.

   // திங்களும், கதிரவனும் ஒரே நேரத்தில் நமக்குத் தெரிவதில்லை. ஏதாவது ஒன்று தான். //
   திங்கள் கதிரவன் ஒரே நேரத்தில் வந்தா அமாவாசை. அதாவது இருட்டு. திங்களும் கதிரும் சேர்ந்த கண் கொண்டவன் இருட்டு நிறத்தவன் தானே! 🙂

 4. அங்கண் மா ஞால வணக்கம்!
  கோதைக்கு, நாட்டியம் நன்கு தெரியும் என்பதற்கு அகச் சான்று, இந்தப் பாடல்!

  /கிங்கிணி வாய் செய்த தாமரைப் பூப்போலே/ என்னவோர் அழகிய உவமை
  கால் சலங்கை மணிகளின் அழகில், ஆடி ஆடியே, அழகு கூடினாள் போலும்!
  சதங்கை மணிகள், பாதி விரிந்து பாதி மூடியே இருக்கும்;

  அந்த மணிகளுக்குள்ளும் ஒரு குண்டு மணி;
  முழுக்க மூடி விட்டால் வரும் ஒலி வேறு மாதிரி இருக்கும்; Surface Pressure on a Fully Closed Area will cause more sound & echo; Frequency of a Tuning Fork
  அந்த மிகு ஒலி, நாட்டியத்தின் இசைக்கும் பாடலுக்கும் தடை செய்யும் என்பதால், மிகு ஒலி எழுப்பாது, மெல்லிய சல் சல் ஒலிக்காகவே, பாதி விரித்து பாதி மூடியே வைத்தார்கள் போலும்;

  நாட்டியப் பேரொளி, கோதை!
  இதை நுணுக்கமாகப் பார்த்ததாலோ என்னவோ, /கிங்கிணி வாய் செய்த தாமரைப் பூப்போலே/ என்கிறாள், பாதி விரிந்து பாதி மூடிய அவன் கண்ணுக்கு;
  ஆணுக்கும், மெல்லியல் பெண்மை ஏற்றிடும் நாட்டியத்தின் ஒயில் அழகு:)
  —–

  சில ஐயங்கள்:
  1. /தாமரைப் பூப்போலே/

  பூப்போலே – இங்கு ஒற்று மிகல் ஏன்?
  *பூவைப் போல = 2ஆம் வேற்றுமை விரியால், மிகும்
  *பூ(ஐ) போலே = 2ஆம் வேற்றுமைத் தொகையில், மிகாது அல்லவா?
  இருந்தும் மிகுவது ஏன்?
  போலவே, கைப் பிடித்தான் என்றே எழுதுகிறோம்; கையைப் பிடித்தான் சரி; கை பிடித்தான் தான் தொகை? தொகையில் மிகக் காரணம் என்ன?

  2. अभिमान/ அபிமானம் எ. சம்ஸ்கிருதச் சொல்!

  அதற்குப் பொருள், பெருமையும் பீற்றலுமா?
  சம்ஸ்கிருத அபிமானம்; தேசாபிமானம்; பாஷாபிமானம் என்றெல்லாம் சொல்லுவார்களே? அதற்கு அபிமானம்= விழைவு/ மதிப்பு/ soft corner/ regard என்றல்லவா பொருள்?
  அஹங்காரம் எ. பொருள்படுமா? சம்ஸ்கிருத அஹங்காரம், பாஷாஹங்காரம் என்று ஆகி விடுமே?:)

  ஐயம் களைந்து, பொருள் அறியத் தாருங்கள்!

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s