23. அரிமா என மா அரி வந்தான்

Keshav-23

Thanks to Keshav!

தன்னை மறந்து தான் என்பதை மறந்து உருகி வேண்டிக்கொண்டிருக்கும் கோதையை இதற்கு மேலும் காக்க வைக்க மாலவன் விரும்பவில்லை. எழுந்து வந்தான். மண்ணில் திருப்பாதம் அழுந்த வந்தான். இதற்குத்தானே பாடுபட்டாள் ஆண்டாள்.

கண்ணன் கண்ணைப் பார்த்தாளா? இல்லை வெட்கத்தில் மண்ணைப் பார்த்தாளா? தயக்கத்தில் விண்ணைப் பார்த்தாளா? இல்லை பக்கத்தில் பெண்ணைப் பார்த்தாளா?

எதையும் விடப் பெரியவனை தன் இரு சிறு கண் கொண்டு முழுவதும் பார்த்தாள். அவன் நடையைப் பார்த்தாள். உடையைப் பார்த்தாள். அந்த மகிழ்ச்சியில் உள்ளம் உடையப் பார்த்தாள். விழி இரசித்த அழகை மொழி இரசிக்கச் சொன்னாள்.

”கண்ணா.. நீயா நடந்து வருவது? சிங்கத்தின் கம்பீரத்தை உன் ஆண்மையில் காண்கிறேன்.  நீர் தெளித்துக் குளிர்விக்கும் மழைக்காலங்களில் மலைகளின் குகைகளில் துஞ்சியிருக்கும் ஆண் சிங்கமானது கடமையை உணர்ந்து வெளியே வரும். அப்பொழுது அதன் கண்கள் தனலெனச் சொலிக்கும். பொன்னிறத்துப் பிடரி மயிர்கள் பொங்கிப் பெருகும் வகையில் கழுத்தை உதறிக் கொள்ளும். சோம்பலைச் சாம்பலாக்க பலபக்கமும் நெளித்து வளைத்து சோம்பல் முறித்துக் கொண்டு புறப்பட்டு வெளியே வரும். தன் வரவைத் தெரியப்படுத்த கர்ச்சித்துக் கொண்டு நடந்து வருவதைப் போல நீயும் நடக்கிறாய். வருவது அரியா அரிமாவா என்று என் கண்கள் குழம்புகின்றன. ஆனால் இரண்டும் ஒன்றுதான் என்று உள்ளம் சொல்கிறது.

காயாம்பூவைப் போன்று கருநிறமுடைய அழகனே! உன்னுடைய கோயிலில் நீ எழுந்து நின்று, பெருமையுடைய அரியாசனத்தில் அமர்ந்துகொண்டு, நாங்கள் உன்னை வேண்டி வந்த காரியத்தை ஆராய்ந்து அதில் எமக்குப் பொருத்தமானதை அருள்க! எனக்குத் தக்கது எது என்று நான் அறியேன். ஆனால் நீ அறிவாய். அதையே எனக்கும் தருவாய்!”

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

மாரி மலை முழைஞ்சில் – மழைக்காலத்தில் மலைக்குகையில்
மன்னிக் கிடந்து உறங்கும் – (தன்னுடைய பெண்சிங்கத்தோடு ஒட்டிக்கொண்டு) அமைதியாக உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து – (உறங்கும்) சிங்கமானது உறக்கம் கலைந்து அறிவு தெளிந்து, நெருப்புப் பொறி பறக்க விழிகளைத் திறந்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி – பிடறி மயிர் பொங்கும்படி சிலிர்த்துக் கொண்டு நான்கு புறமும் நடந்து
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலே – சோம்பல் முறித்து, கர்ச்சித்துக் கொண்டு புறப்பட்டு வருவதைப் போல

நீ பூவைப் பூ வண்ணா – காயாம்பூவைப் போலக் கருத்தவனே, நீயும் நடந்து வந்து
உன் கோயில் நின்று – உன்னுடைய திருக்கோயிலில்(அரசவையில்) வந்து நின்று
இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து – அப்படியே பெருமையுடைய உன்னுடைய சீரிய அரியாசனத்தில் அமர்ந்து
யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய் – நாங்கள் நாடி வந்த நன்மைகளையெல்லாம் ஆராய்ந்து அருள்வாய்! எம்பாவையே!

திருப்பாவையில் இது இருபத்து மூன்றாம் பாடல். இருபத்திரண்டு பாடல்களுக்குப் பிறகுதான் கோதைக்குக் கண்ணன் துயிலெழுந்து காட்சியளித்திருக்கிறான். இதில் மிகப் பெரிய வைணவத் தத்துவம் உள்ளது.

இப்போது ஆண்டாள் அடைந்தது முக்தி நிலையின் முதற்படி எனக்கொண்டால், அது கிடைத்த வழியை ஆண்டாள் நமக்குப் பாதை போட்டுக் காட்டியிருக்கிறாள் திருப்பாவையில்.

*முதலில் இறைவனை நாட வேண்டும் என்ற தன்னளவில் தோன்றிய விருப்பம் – (மார்கழித் திங்கள் – ஒரு பாடல்)

*தன்னைப் போன்ற அடியவர்களோடு சேர்தல் (மற்ற தோழியரைத் துயிலெழுப்புதல்) (வையத்து வாழ்வீர் முதல் எல்லே இளங்கிளியே வரை 14 பாடல்கள்)

*ஆச்சாரியர்களைத் தேடிச் செல்லுதல் (வாயிற்காவலர்களிடம் உள்ளே விடுமாறு வேண்டுதல்) (நாயகனாய் நின்ற நந்தகோபன் – ஒரு பாடல்)

*குருவின் உபதேசங்களைக் குற்றமில்லாமல் பெறுதல் (நந்தகோபன் அசோதை பலதேவனை துயிலெழுப்புதல்) (அம்பரமே தண்ணீரே சோறே – ஒரு பாடல்)

*திருமகளின் புருஷகாரம்(பரிந்துரை) பெறுதல் (நப்பின்னையை துயிலெழுப்புதல்) (உந்துமதக் களிற்றன் முதல் முப்பத்து மூவர் வரை – 3 பாடல்கள்)

*கண்ணனைச் சரண் புகுதல் (உள்ளத்தில் நின்ற சுடராகக் கண்டுச் சரணடைதல்) (ஏற்றக் கலங்கள் முதல் அம்கண் மாஞாலத்து வரை – 2 பாடல்கள்)

*அடியாரோடு அடியாராக வீடுபேறு பெறுதல் (மாரி மலை முழஞ்சில் முதல் வங்கக் கடல் கடைந்த வரை – 8 பாடல்கள்)

23-aஎட்டெழுத்து கொண்டவன் பெயர் சொல்லி முக்தியடைந்ததைக் குறிக்கும் வகையில் எட்டு பாடல்களை இறுதியாகப் பாடினாளோ ஆண்டாள்!

இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பும் உள்ளது. பொதுவாகப் பெண்சிங்கம் தான் வேட்டையாடும். ஆனால் ஆண் சிங்கமும் வேட்டையாடும். எப்போது தெரியுமா? பெண் சிங்கத்தால் வேட்டையாட முடியாத பெரிய விலங்குகளாக இருந்தால் ஆண் சிங்கங்கள் வேட்டையாடும்.

வைணவ சம்பிரதாயத்தில் திருமகள் முக்தியளிக்க முடியாது. திருமாலவனிடம் பரிந்துரைதான் செய்ய முடியும். பரமபதம் அளிப்பது பரந்தாமன் அருள் மட்டுமே. அதனால்தான் பெண் சிங்கத்தால் முடியாத நிலையில் ஆண்சிங்கம் வேட்டைக்குப் புறப்பட்டு வந்தது. இங்கு வேட்டை என்று சொல்வது முக்தியளிப்பதை.

சென்ற பாடல் வரை திருமால் “கிடந்த” மட்டும் அழகை இரசித்தவள், இந்தப் பாடலில் கிடந்த நடந்த நின்ற அமர்ந்த அழகையெல்லாம் இரசிக்கிறாள்.

கிடந்த அழகு(மன்னிக் கிடந்து உறங்கும்) – பள்ளி கொண்ட திருத்தலங்கள்

நடந்த அழகு(புறப்பட்டுப் போதருமாப் போலே) – இராமனாகக் காட்டில் நடந்த அழகும் கண்ணனாகத் தூது நடந்த அழகும் நூல்வழிக் கற்றல்

நின்ற அழகு(உன் கோயில் நின்று) – திருமாலிருஞ்சோலை, திருப்பதி, தென்திருப்பேரை, காஞ்சி முதலிய திருக்கோயில்கள்

அமர்ந்த அழகு(சீரிய சிங்கானத்து இருந்து) – திருநீர்மலை, சோளிங்கர் போன்ற திருக்கோயில்கள்

இதில் இன்னொரு அழகும் உள்ளது. சீரிய சிங்காதனத்து இருந்து அமர்ந்த தலங்களான திருநீர்மலையும் சோளிங்கரும் மலைக்கோயில்கள். அதிலும் நரசிம்மர் கோயில்கள். இந்தப் பாடலும் “மலை முழஞ்சில்” இருக்கும் ”சிங்கத்தைப்” பாடியதுதானே. இதிலிருந்து இந்தப் பாடல் அழகிய சிங்கர் என்னும் நரசிம்மரைப் புகழ்ந்து பாடியதாகவே கொள்ளலாம்.

Paavai-23************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
முழைஞ்சு – குகை
மன்னி – அமைதியாக
வேரி – பிடறி
மூரி – சோம்பல்
பூவைப்பூ – காயாம்பூ
************************************************************************************************************************
அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

10 Responses to 23. அரிமா என மா அரி வந்தான்

 1. பாவை வணக்கம்!

  /வருவது அரியா அரிமாவா என்று என் கண்கள் குழம்புகின்றன/
  :)))
  அரிமா அரிமா என்று திரைப்பாடலை ஒலிக்க விடப் போகிறீர்களோ? என்ற ஆவலிலேயே, மீதப் பதிவையும் வாசித்து நிறைந்தேன்! நறுந் தேன்!

  /கர்ச்சித்துக் கொண்டு/
  தமிழ்ச் சிங்கம் கர்ஜிக்காது:) முழங்கும்!

  /கிடந்த நடந்த நின்ற அமர்ந்த அழகையெல்லாம்/
  கவிதையின் சொற்களை, இப்படி…. இருத்தி, நடத்தி, கிடத்தி, நிறுத்திச் சொன்னமை நனி நன்று:)
  ——–

  சிற்சில குறிப்புக்கள்:

  1. மாரி மலை முழைஞ்சில்

  முழை என்றாலே குகை தான்!
  கல்முழை அருவிப் பன்மலை நீந்தி.. என்று புற400!
  இங்கே, முழைஞ்சு என்று ஏற்றிச் சொல்கிறாள்!

  2. மாரி மலை

  “மலை”யில் மழை பெய்தாலே சற்றுக் கடினம் தான்!
  காட்டாறு, திடீரென்று பாயும்! மண் சரியும்!
  நடக்கக் கூட முடியாது; வீட்டுக்குள்ளேயே முடக்கம் தான்!
  சென்னை செயற்கைப் பேரிடரில் கண்டோமே?:(

  அப்படிச் சிங்கம் முடங்கினாலும், அதன் திறல் குறைவதில்லை!
  அதான் “மன்னிக்” கிடந்து என்கிறாள்!
  ——-

  3. “வேரி” மயிர் பொங்க

  வேரி என்பது.. விகாரம்!
  இதுக்கு “இசை நிறை” ன்னு பேரு!

  பிரிநிலை வினா எண் ஈற்றசை தேற்றம்
  “இசைநிறை” என ஆறு ஏகாரம்மே (தொல்காப்பியம்/ நன்னூல்)

  அதாச்சும் இசைக்கு ஏற்றவாறு ஏகாரம் வந்து ஒலிக்கும்!
  காவிரி > காவேரி
  இசைக்கு மட்டுமே இருந்த இது, பொதுமக்கள் நீட்டி நீட்டிப் பேசுற எசப்பாட்டுப் பேச்சுல, காவேரி-ன்னே மாறிப் போச்சு:))

  ஆண்டாளும் நீட்டி நீட்டிப் பேசுறா:)
  சிங்கத்துக்கு, சிலுப்பும் போது மயிர் விரியும்!
  ஆனா இந்த விரி->வேரி ஆக்கி,
  இசை நிறை ஏகாரம் போட்டுப் பாடுறா, இந்தத் தமிழிலக்கண வித்தகி:)

  மாரி, சீரி -ன்னு நெடிலுக்கு எதுகையா அளபெடுக்க
  விரி மயிர் -> வேரி மயிர் ஆகுதுல்ல?
  அது போலத் தான் கா-விரி -> கா-வேரி-யும்!:)

 2. சிற்சில குறிப்புக்கள்:

  4. “மூரி” நிமிர்ந்து

  மூரிக்கு= சோம்பல், முதுகின் திமில் என்ற பல பொருட்கள்.. காரணப் பெயராய் வழங்கினாலும்..
  அதன் வேர்ச் சொல்= “முரி” என்பதே! சோம்பல் முரித்தான்!

  விரியை > வேரி ஆக்கினது போல்
  முரியை > மூரி ஆக்குகிறாள்!

  *முரி= Break without Damage
  *முறி= Break with Damage

  சோம்பல் முரிப்பதால், உடம்பு Damage ஆகாது:)
  ஆனா, வில்லை முறித்தால், வில்லு Damage ஆயீரும்!
  ஆவணச் சீட்டை= முறி என்பார்கள்! மீறினால், It will result in Damages/ Fines!

  5. “முழங்கிப்” புறப்பட்டு..

  ஆண்டாளே, சிங்கம் “முழங்கும்” என்று சொல்லும் போது..
  நாம, கர்ஜித்தல் என்ற சம்ஸ்கிருதச் சொல் விட்டு விடுவோம்:)

  ஆண்டாளும், குறைவான வடசொல்லே, அதுவும் வெண்டளை/ எதுகை/ ஓசை கருதிப் புழங்குவாள்!
  அப்பவும், கிரந்தம் நீக்கியே பாடுவாள்; 5ஆம் நூற்றாண்டிலேயே பல்லவ கிரந்தம் வந்துவிட்டாலும், பயன்படுத்த மாட்டாள்!
  ————

  6. பூவைப் பூவண்ணா

  பூவைப்பூ= காயாம் பூ!
  இந்தப் பூவின் படம் கிடைச்சா, இடுங்களேன்!

  கிட்டத்தட்ட எருக்கம்பூ போலத் தான் இருக்கும்! ஆனா அடர் நீலமாய்!

  7. உன் கோயில்

  கோ+இல்= அரசன்/தலைவன் இல்லம் தான், பார்த்தீங்களா?:)
  மதம், சமூகச் சொல்லையெல்லாம், தனக்கான சொல்லா, ஸ்வீகரித்துக் கொண்டது!
  குத்து விளக்குன்னாலே, வீட்டு உபயோகப் பொருள் என்பது போய், மதம் என்பது போல், இன்னிக்கி ஆயிருச்சி!:)

 3. திருப்பாவையின் எளிய தமிழ்/ காதல்/ இயற்கை ரசனை தாண்டி, “மதம்” சம்பந்தமான விளக்கங்களும் தருகிறீர்கள் போல?:))
  —–

  பாவையின் பாடல்களைத் தொகுதிகள் ஆக்கிச் சொன்னமை நன்று! பலவும் பொருந்தும்! இந்த ஒன்றைத் தவிர..
  //மற்ற தோழியரைத் துயிலெழுப்புதல் (வையத்து வாழ்வீர் முதல் எல்லே இளங்கிளியே வரை 14 பாடல்கள்)//

  ஆழிமழைக் கண்ணா-வில், துயிலெழுப்பலே இராது! அடியாருடன் உறவாடலும் இராது!
  *புள்ளும் சிலம்பின காணில், 1st தோழி எழுப்பி
  *எல்லே இளங்கிளியே-வில், 10th தோழி எழுப்பல்:)

  அதற்கு முன்.. நீங்கள் சொன்னது போல்..
  1.இறைவனை நாடும் தன் விருப்பம் முகிழ்த்தல்= மார்கழித் திங்கள்!
  2. பின்பு.. நோன்பு நெறிமுறைகள்= வையத்து வாழ்வீர்காள்
  3,4 தன் காதலுக்கு முன், ஊர்ப் பொதுநலம்/மழைவளம் வேண்டல்= ஓங்கி உலகளந்த/ ஆழிமழை
  5. நூற் பயன், முன்னரே கோடிட்டுக் காட்டி விடல்= தீயினில் தூசாகும் (மாயனை மன்னு)
  —–

  /வைணவ சம்பிரதாயத்தில் திருமகள் முக்தியளிக்க முடியாது. திருமாலவனிடம் பரிந்துரைதான் செய்ய முடியும்/

  மத விளக்கம் பக்கம் செல்ல வேணாமே-ன்னு பார்த்தேன்:) இதைக் கண்டதால், முக்கியமான இதற்கு மட்டும் சொல்கிறேன்!
  தென்கலை-வடகலை = 18 வேறுபாடுகள்! அதில் இது, மிக முக்கியமான ஒன்று!

  நீங்கள் சொன்னது தென்கலை:)
  வடகலையில்= திருமகள்/இறைவன் வெவ்வேறு அல்ல!
  அவளால் 1. முத்தி அளிக்கவும் முடியும் 2. பரிந்துரைக்கவும் முடியும்!
  அவள்= விபு (Infinite), அவனைப் போலவே!

  *வடகலையில், அவள்= பரமாத்மா
  *தென்கலையில், அவள்= ஜீவாத்மா

  வடகலையின், பல சம்ஸ்கிருத உடன்பாடுகள்/ அன்பை விடச் சடங்கு சார்ந்த முறைமைகள், எனக்கு (தனிப்பட்ட அளவில்) விருப்பம் இல்லையாயினும்,
  இந்த “ஒன்றே ஒன்றுக்காக”, அவள் தனிப்பெரும் ஏற்றம் என்பதற்காக, அதை மதிப்பேன்! மற்றபடி, தமிழுக்கு “அதிக” நெருக்கம்= தென்கலையே!:)

  ——
  /பெண் சிங்கத்தால் வேட்டையாட முடியாத பெரிய விலங்குகளாக இருந்தால் ஆண் சிங்கங்கள் வேட்டையாடும்/

  இத் தகவல், மிக அருமை!
  ஆண் யானை= களிறு, பெண் யானை= பிடி போல்..
  ஆண் சிங்கம்/ பெண் சிங்கம்.. மரபுப் பெயர் உளதா? அறியத் தாருங்களேன்!

  மாரி மலையில் பெய்த நன் மாரி போல் வாழி! நனி மிகு நன்றி!

 4. //எட்டெழுத்து கொண்டவன் பெயர் சொல்லி முக்தியடைந்ததைக் குறிக்கும் வகையில் எட்டு பாடல்களை இறுதியாகப் பாடினாளோ ஆண்டாள்!// —- மிக மிக நன்று, ஜிரா, அவ்வளவு தான்!
  அப்புறம் அந்த கிடந்த, வீற்றிருந்த, நின்ற திருக்கோலங்களுடன், “நடந்த: திருக்கோலமாய் இராமபிரானைச் சொன்னதை ரசித்தேன், வாழ்க!

  இப்போது அடியேன் கருத்துக்கள்:
  1. முதல் 4 அடிகளில் ஒரு கம்பீரச் சிங்கத்தின் அருமையான வீரவர்ணனை வாயிலாக கிருஷ்ண சிம்மத்தை நம் மனக்கண் முன் நிறுத்துகிறாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி. அடுத்த வரியில் “பூவைப்பூவண்ணா” என்று மென்மை வர்ணனைக்குத் தாவுகிறாள். இதைக் கண்டுகொள்ளல் வேண்டும். அதாவது, ஆண்டாள் “ நீ நடையில், உடல்மொழியில் சிங்கம் போன்றவனே! ஆயினும், உன் திருவுள்ளம் பூநிகர் மென்மையானது, அடியவரிடம் வாத்சல்யம் மிக்கது” என்பதை கவித்துவமாக குறிப்பில் உணர்த்துகிறாள் 🙂

  2. கண்ணன் அமரப்போவது கோப்புடைய சீரிய சிங்காசனம். அவனது பெருமையை, சீர்தூக்கி முடிவெடுக்கும் உயர்குணத்தை இருக்கையின் மீது ஆண்டாள் ஏற்றுகிறாள்!

  அன்புடன் பாலா

  2.

  • GiRa ஜிரா says:

   // நீ நடையில், உடல்மொழியில் சிங்கம் போன்றவனே! ஆயினும், உன் திருவுள்ளம் பூநிகர் மென்மையானது, //

   உண்மை உண்மை. மிகவும் இரசித்தேன் இந்தக் கருத்தை.

 5. ஜிரா,

  //*தன்னைப் போன்ற அடியவர்களோடு சேர்தல் (மற்ற தோழியரைத் துயிலெழுப்புதல்) (வையத்து வாழ்வீர் முதல் எல்லே இளங்கிளியே வரை 14 பாடல்கள்)//

  இதை இப்படிச் சொல்லலாம் அல்லவா?

  பாகவதைகள் துயில் எழுப்பல், 10 பாசுரங்கள் (6 முதல் 15 வரை) தான். பாசுரங்கள் 2-5, பாவை நோன்பு (வழிமுறைகள், பெருமை,வேண்டுபவை) குறித்துப் பேசுபவை
  அன்புடன்
  பாலா

  • GiRa ஜிரா says:

   அழகாகச் சொல்லலாம். அது மிகப்பொருத்தம். நான் வழிபாட்டுப் பெருமைகளோடு துயிலெழுப்புதலையும் சேர்த்துவிட்டேன் 🙂

 6. மாரி மலை வணக்கம்!
  சென்ற ஆண்டே, இன்றைய பதிவுக்கு, பின்னூட்டு எழுதி விட்டாலும்.. மீள மீள வாசிக்கும் போது, சிற்சில தெவிட்டாமல் தோன்றுகிறது!

  இதன் அடுத்த பாசுரம், போற்றி எ. அர்ச்சனை!
  அதற்கு முன்பாக, இந்தப் பாசுரம்.. வேண்டுதல் எ. சங்கல்பம்!

  ஆலயங்களில், ஏனோ சம்ஸ்கிருத அர்ச்சனையே மிகுதியாகச் செய்விக்கிறார்கள்..
  ஆனால் தமிழ் அருச்சனை செய்விக்கும் ஆண்டாள்!

  அருச்சனை= இறைவனைக் குறித்தது அல்ல! அடியவர்கள் குறித்தது!
  அதான்.. நம் பேர், நட்சத்திரமெல்லாம் கேட்டு, ‘சங்கல்பம்’ எ. நம் வேண்டுதலைச் சொல்லி, நம் சார்பாக அருச்சனை செய்விக்கிறார்கள்!
  அர்ச்சனை= செய்வித்தல்; செய்தல் அல்ல!

  இப்படி நம் சார்பாகச் செய்விக்கப்படும் ஒன்று, நமக்குப் புரியும் மொழியில் இருத்தலே நலம்!
  நாம் இறைவனிடம் என்ன வேண்டுகிறோம் என்று அறியாமலேயே, யாரோ ஒருவர் நம் சார்பாகப் புரியாத மொழியில் சொல்வது, அத்துணை ருசிக்காது!

  இறைவனுக்கு, நம் பேரோ/ நட்சத்திரமோ சொல்லாமலேயே.. நாம் யார்? எ. தெரியும்!
  நாம் வந்து நிற்கும் போதே.. வாடா, இப்ப தான் வழி தெரிஞ்சுதா? எ. காதலன் செந்தூரில் கேட்பதில்லையா?:)
  ஆனாலும் இதுவொரு நாடகம்! என் பேரு ரவி; என் நட்சத்திரம் சுவாதி.. என் பேராச்சும் ஞாபகம் இருக்குல்ல? எ. காதல் ஊடல் சுவை!

  காதலை விடுத்து, அம்மா எ. இறைவனைப் பார்த்தாலும், இஃதொரு நாடகமே!
  அம்மாவுக்கு, நம் பேர் நட்சத்திரம் சொல்லித் தான், நம்மைத் தெரியுமா என்ன?
  ஆனாலும், செல்லமாக.. உன் பிள்ளையைப் பாத்துக்குற விதம் இதானா? எ. அம்மாவைச் சீண்டுவதில்லையா? போலவே:)

  23ஆம் பாசுரத்தில், தம் வேண்டுதலைச் சொல்லி (சங்கல்பம்)
  24ஆம் பாசுரத்தில், அவன் பேர்களைச் சொல்லி (அர்ச்சனை), தமிழ் அர்ச்சனை செய்யும் ஆண்டாள்!

  • சிவ கோத்ரம், ஆயில்ய நட்சத்திரே, ராகவன் நாம்யாஹா
   *தைர்ய ஸ்தைர்ய
   *வீர்ய விஜய
   *ஆயுர் ஆரோக்ய
   *ஐஸ்வர்யாதி அபிவிருத்தியர்த்தம்
   *இஷ்ட காம்யார்த்த சித்தயர்த்தம்
   *பாகவத ஜனானாம் ப்ரீதயர்த்தம்
   பக்த வத்சல ஸ்வாமி சரணார விந்தயோஹோ
   அஷ்டோத்திர சத நாம அர்ச்சனாம் கரிஷ்யே!

   நாம என்ன வேண்டுதல் செஞ்சிக்கறோம்? -ன்னு அறிந்து கொள்வது நம் உரிமை அல்லவா?
   நம் சார்பாக அல்லவா அர்ச்சனை நடக்கிறது!

   சிவ கோத்திரம், ஆயில்ய நட்சத்திரத்தில் வந்துதித்த,
   இராகவன் என்ற இன்னாரின் நலம் வேண்டி,
   *துணிவும் நல் உறுதியும் வேண்டி
   *உயிர்ப்பும் வெற்றியும் வேண்டி
   *உடல் நலமும், நீண்ட ஆயுளும் வேண்டி
   *நீங்காத செல்வம் நிறைய வேண்டி
   *எண்ணிய எண்ணியாங்கு எய்த வேண்டி
   *அடியார்கள் மனம் குளிர வேண்டி
   என்னைப் பெற்ற தாயார் உடனுறை பத்தர் ஆவிப் பெருமாள் திருவடிகளில்
   துழாய் மலர் கொண்டு, 108 போற்றிகள், அடியோங்கள் செய்கின்றோமே!

   இப்படிச் சங்கல்பம்/ அர்ச்சனை செய்தால், செய்து கொள்ளும் மக்களுக்குப் புரியும், மனசும் இனிக்கும்!

   இதையே ஆண்டாள், செய்து காட்டுகிறாள்!
   *யாம் வந்த காரியம், ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் = சங்கல்பம்
   *அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி = அர்ச்சனை

   நாம் என்ன வேண்டினோம் என்பதைப் பின் தள்ளி..
   அவன் பேர்களையே சொல்லிச் சொல்லி இன்புறுதல், மனம் நிறைதல்!

   வடபழனி முதலான சிற்சில ஆலயங்களில், தமிழ் அருச்சனை உள்ளது!
   ஆனால், கேட்டால் தான் செய்வார்கள்!
   கேட்கவில்லை எனின், Defaultஆக, சம்ஸ்கிருத அர்ச்சனையே!

   அடுத்த முறை ஆலயம் செல்லும் போது, நாமே பூசகரிடம் வேண்டிக் கேட்டு
   தமிழ் அர்ச்சனை செய்குவோம்!

   அடி போற்றி!
   திறல் போற்றி!
   புகழ் போற்றி!
   குணம் போற்றி!
   கழல் போற்றி!
   வேல் போற்றி!
   என்று இனிக்க இனிக்க, தமிழ் அருச்சனை!

 7. ஒரு திருத்தம்; சென்ற ஆண்டு ஏனோ கண்ணில் படலை! மன்னிக்க..
  /வேரி – பிடறி/
  அது பிடரி அல்லவா?

  பிடர்த்தலை, பிடர்மயிர், பிடர்கழுத்து
  “பிடர்” எ. வேர்ச்சொல்; “பின்னால்” எ. பொருள்படும்! பிடரி மயிர்= பின் மயிர்; பிடர் கழுத்து= பின்னங் கழுத்து..

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s