24. போற்றி போற்றி போற்றி

Keshav-24

Thanks to Keshav!

யாரைத் தேடிக்கொண்டு ஆய்க்குலத்துச் சிறுமிகள் கோதையோடு வந்தார்களோ, அவனே அவர்கள் முன் அமர்ந்திருக்கிறான். வராத ராஜனாக இருந்தவன் வரதராஜனாக முன்னால் வந்து அமர்ந்ததும் அவர்களுக்கு என்ன கேட்பதென்றே புரியாமல் கேட்க வந்ததையெல்லாம் மறந்தார்கள்.

அவனைப் பார்க்கும் கண்களில் கண்ணீர். தாளமிட்ட கைகளோ தலைக்கு மேல் உயர்ந்து வணங்கின. உடம்பு என்னும் மெய் மெய்ஞான உணர்வில் புளகாங்கிதம் அடைகிறது. பாடிய வாயும் பக்திப் பரவசத்தில் மூடிய நிலை. ஆனால் உள்ளம் மட்டும் அவனைப் போற்றிப் புகழ்ந்தது.

“வாமனா! அன்று குள்ளனாக இருந்தும் இந்த உலகத்தை ஈரடியால் அளந்தாய்! ஈரடியிலேயே மூவுலகமும் அடங்கி விட மூன்றாவது அடிக்கு இடம் கேட்டு மாபலியிடம் நின்றாய்! அப்படி மாபலி தனது தலையில் தாங்கிக் கொண்டு பெருமை கொண்ட உனது திருவடி போற்றி!

இரகுவரா! பொன்மான் விரும்பிய பெண்மானை இழந்து தவித்த பெருமான் நீ! அவளைச் சிறையிட்ட அவ்விலங்கை உடைத்து விடுவிக்க அவ்விலங்கை சென்று போர் செய்து அதன் புகழைக் குறைத்த உனது திறமை போற்றி!

கிருஷ்ணா! நற்சக்கரம் கையில் ஏந்திய உன்னை துர்ச்சக்கரமாக வந்து கொல்ல நினைத்தான் சகடாசுரன். அச்சக்கர அசுரனின் அச்சக் கரம் தோற்கும்படி எட்டி உதைத்து உடைத்துப் புடைத்த உனது புகழ் போற்றி!

கோபாலா! மாடுகளின் மேல் இருக்கும் உன் கருணையை பலவீனமாக எண்ணிக் கொண்டு கன்று வடிவில் வந்தான் ஒரு அசுரன். அவனையே கொம்பாகக் கொண்டு விளாமரமாக நின்ற இன்னொரு அரக்கன் மீது வீசி இருவரையும் கொன்ற உன் திருவடிகள் போற்றி!

கிரிதரா! உன் மேல் பொறாமை கொண்டு பெருமழை பொழிந்தான் இந்திரன். பாவம்! மாயவன் உன் தந்திரம் எதுவும் அறியாதவன். அப்பொழுது கோவர்த்தன மலையைக் குடையாய்த் தூக்கி கோகுலம் காத்த உனது கோ குணம் போற்றி!

மணிவண்ணா! உன் காவலில் இருக்கும் பசுக்களைத் துன்புறுத்த எந்தப் பகை வந்தாலும் வென்றெடுக்கும் உனது கைவேல் போற்றி!

எப்பொழுதும் உனது சேவகமே போற்றிப் பாடுவேன். அடியவர்களான எங்களுக்கெல்லாம் வீடுபேறு என்னும் உறுதிமொழியை வேண்டிக்கொண்டு இன்று உன்னை நாடி வந்துள்ளோம்! இரக்கம் காட்டுவாய் பத்மநாபா!”

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி – அன்றொருநாள் இந்த உலகத்தை இரண்டு அடிகளால் அளந்த திருவடி போற்றி!

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி – தென்னிலங்கை மாநகர் சென்று அதன் பெருமையை அழித்த திறமையே போற்றி!

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி – சக்கரமாக உருண்டு வந்த சகடாசுரன் அழியும் படி உதைத்த உன் புகழ் போற்றி!

கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி – கன்றாக வந்த அசுரனை மரமாக நின்ற அசுரன் மீது கொம்பாக எறிந்து இருவரையும் கொன்ற வீரக்கழல் போற்றி!

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி – கோவர்த்தன மலையைக் குடையாய்ச் சுமந்து பெருமழையிலிருந்து ஆயர்ப்பாடியைக் காப்பாற்றிய உன் குணம் போற்றி!

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி – எந்தப் பகையையும் வென்று அழிக்கின்ற உன் கை வேல் போற்றி!

என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் – என்றென்றும் உன்னுடைய சேவையே விரும்பிக்கொண்டு அதற்கு உன் உறுதிமொழியைப் பெற

இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய் – இன்று நாங்கள் வந்தோம்! எங்கள் மீது மனம் வைத்து இரங்குவாய்! எம் பாவாய்!

சென்ற பாசுரத்தில் ஆயர்குலச் சிறுமியரின் அழைப்பை ஏற்றுக் கொண்டு சிங்காதனத்தில் வந்தமர்ந்து கருணை செய்தான். அவனைப் பார்த்த கோதைக்கும் மற்ற சிறுமிக்கும் அவனைத் தவிர எல்லாம் மறந்து போனது. வந்த வேலையைக் கூட மறந்து அவனைப் போற்றிப் பாடத் தொடங்கிவிட்டார்களாம்.

இதேபோல் இராமாயணத்திலும் ஒரு காட்சி வருகிறது. இராமன் மனைவியோடும் தம்பியோடும் காட்டுக்குச் சென்ற போது, அங்கிருந்த முனிவர்கள் அசுரர்கள் தரும் துன்பத்தைப் பற்றி இராமனிடம் எடுத்துச்சொல்லி உதவி கேட்கப் போனார்களாம். போனவர்கள் இராமபிரானைப் பார்த்ததும் வந்த காரியத்தை மறந்து காகுந்தனுக்கு மங்களாசாசனம் செய்யத் தொடங்கிவிட்டார்களாம்.

ஆண்டாளும் அதே நிலையில்தான் இருந்தாள். அதனால்தான் கண்ணனைக் கண்டதும் ஆறுமுறை மங்களாசாசனம் செய்தாள்.

மங்களாசாசனம் என்றால் என்ன? ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திவ்யதேசங்கள் என்று நூற்றுஎட்டு திருக்கோயில்களைக் குறிப்பிடுகிறோமே. அதன் பொருள் என்ன?

மிக எளிமையாகச் சொல்வதென்றால் மங்களாசாசனம் என்பது பரம்பொருளாகிய பரவாசுதேவனை வாழ்த்தி வணங்குவது. ஆழ்வார்கள் திருமாலை பாசுரங்களால் வாழ்த்தி வணங்கிய நூற்றுஎட்டு திருக்கோயில்களும் திவ்யதேசங்கள் எனப்படும்.

இந்தப் பாடலில் ஆறுமுறை எப்படியெல்லாம் மங்களாசாசனம் செய்கிறாள்?
அளந்தாய் அடி போற்றி!
செற்றாய் திறல் போற்றி!
உதைத்தாய் புகழ் போற்றி!
ஆவெறிந்தாய் கழல் போற்றி!
எடுத்தாய் குணம் போற்றி!
நின் கையில் வேல் போற்றி!

அட! பரம்பொருளை வழிபடுவது இவ்வளவு எளிதா?

ஆம். எளிதுதான். ஆனால் அதற்குள் உட்பொருளும் இருக்கிறது. அதையும் உணர்ந்துகொண்டால் பரம் நம்மோடு நிரந்தரமாகும்.

வைணவ சம்பிரதாயம் சொல்லும் அந்த உட்பொருள் என்ன?

ஆறுமுறை மங்களாசாசனம் செய்யப்படுவது வைகுந்தனின் ஆறு கல்யாண குணங்களாகும். அவை ஞான பல ஐஸ்வர்ய வீரம் தேஜஸ் சக்தி எனப்படும். தமிழில்  ஞானம் வலிமை செல்வம் வீரம் பொலிவு செயல்திறன் என வரிசைப்படுத்தப்படும்.

அளந்தாய் அடி போற்றி – ஞானம்
செற்றாய் திறல் போற்றி – வலிமை
உதைத்தாய் புகழ் போற்றி – செல்வம்
ஆவெறிந்தாய் கழல் போற்றி – வீரம்
எடுத்தாய் குணம் போற்றி – பொலிவு
நின் கையில் வேல் போற்றி – செயல்திறன்

இந்த ஆறு மங்களாசாசனங்களில் எல்லா இடத்திலும் பொருத்தமாகச் சொன்ன ஆண்டாள் “ஆவெறிந்தாய்” என்று சொல்லும் போது “திருக்கை போற்றி” என்று சொல்லாமல் “கழல் போற்றி” என்று ஏன் சொன்னாள்?

கன்றுக்குட்டியாக வந்த அசுரனைக் கையால் பற்றித்தானே வீசி எறிந்தான். அப்படியானால் திருக்கையைத்தானே போற்றியிருக்க வேண்டும்?

ஆண்டாள் ஒவ்வொரு முறை போற்றி என்று சொல்லும் போதும் தன் மனக்கண்ணால் அந்தக் காட்சியைக் கண்டு இரசித்த பிறகே மங்களாசாசனம் செய்கிறாள். அதனால்தான் “இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி” என்று சொல்லியிருக்கிறாள். அவள் இவ்வுலகத்தில் இருந்து பார்த்தாள் அல்லவா. அப்படி கன்று எறிந்த காட்சியைப் பார்க்கும் போது கண்ணன் ஒரு காலைத் தரையில் அழுத்திக் கொண்டு மற்றொரு காலை லேசாக தூக்கிக் கொண்டு எறிந்தானாம். அப்போது ஆண்டாள் கண்ணில் பட்டதெல்லாம் மண்ணில் படாமல் நின்ற அந்தத் திருவடிதான். அதனால்தான் “கழல் போற்றி” என்று மங்களாசாசனம் செய்கிறாள்.

இவ்வுலகம் அளந்தாய் போற்றி” என்று ஆண்டாள் மங்களாசாசனம் செய்வதற்கு இன்னொரு பொருளும் உண்டு. கீழே ஏழு உலகங்கள் மேலே ஏழு உலகங்கள் என்று மொத்தம் பதினான்கு உலகங்கள். இந்தப் பதினான்கு உலகங்களிலும் சிறந்தது நாமெல்லாம் வாழும் மண்ணுலகம்.

வைகுந்தம் செல்வதற்கு ஒரு வாசல் இருக்க வேண்டுமல்லவா? அந்த வாசல் இந்த மண்ணுலகம்தான். வைகுந்தம் போவதற்கான நுழைவுச்சீட்டு இங்குதான் கிடைக்கும். அதை நம்மாழ்வார் ”வைகுந்தம் புகுதலும்” என்ற பாசுரத்தில் “வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே” என்று உறுதியாகச் சொல்கிறார்.

வேறு உலகத்து ஆட்களுக்கு வைகுந்தம் போகும் ஆசை வந்தாலும், அவர்கள் மண்ணுலகில் மனிதர்களாகப் பிறந்து திருமால் பெருமை போற்றிப் பாடித்தான் வைகுந்தம் செல்லவேண்டும். அப்படிப்பட்ட மண்ணுலகத்தைப் பெருமை செய்யத்தான் “இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி” என்று கோதை பாடியிருக்கிறாள்.

இப்படியெல்லாம் போற்றிப் பாடிவிட்டு “என்றென்றும் உனக்குச் சேவகம் செய்யும் பேறு அருள்வாய்” என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.

24-124-2************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
செற்றாய் – அழித்தாய்
சகடம் – சக்கரம்
குணில் – கவட்டை/உண்டிவில் (வளைந்த கொம்பு என்றும் பொருள் கொள்ளலாம்)
************************************************************************************************************************
அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

10 Responses to 24. போற்றி போற்றி போற்றி

 1. பாவை வணக்கம்!

  ஆண்டாள் தமிழை ஆண்டாள்
  அவள் திருப்பாவையின், ஒரே.. ***”மங்களாசாசனப் பாசுரம்”*** ஈது!

  போற்றி, போற்றி, போற்றி எனும் படிக்கு
  சாற்றி, ஆற்றி, போற்றி, நிறைந்து… பல்லாண்டு நீவிர் வாழ்க!

  சின்னக் குழந்தை சேவடி போற்றி
  மேவிய வடிவோன் வேலவா போற்றி
  குறமகள் மனமகிழ் கோவே போற்றி
  திறமிகு திவ்ய தேகா போற்றி
  கடம்பா போற்றி கந்தா போற்றி
  வெட்சி புனையும் வேளே போற்றி!

 2. சிற்சில குறிப்புக்கள்:

  1. “அடி” போற்றி

  ஈரடியோ, மூவடியோ, மாவலியோ, பொய்வலியோ.. ஏதோவொரு கதை!
  எனினும்.. “அடிகள்” என்று தானே வர வேண்டும்?
  “அடிகள் போற்றி” என்று பன்மையில் சொல்லாது
  “அடி போற்றி” என்று ஒருமையில் சொல்வது ஏனோ?

  இதே போல்.. ஓங்கி உலகளந்த உத்தமன் “பேர்கள் பாடி” என்று பாடாது,
  “பேர் பாடி” என்பாள்
  Bare Body என்பேன்:)

  *”செவ்வடி” செவ்வித் திருக்காப்பு – பல்லாண்டு!
  *உலகம் அளந்தாய் “அடி” போற்றி
  *துயரறு, “சுடரடி” தொழுதெழு – என் மனனே!
  *நாதன் “தாள்” வாழ்க!
  *இரு “காலும்” தோன்றும், முருகா என்று ஓதுவார் முன்!

  இறைவனின் திருவடிகளை..
  பலரும் ஒருமையில் விளிக்கும் சூழ்க்குமம் என்ன? அறியத் தாருங்கள்!
  ——

  2. கன்று குணில் ஆ

  இதை, அப்படியே கவிச் செல்வர், இளங்கோவின் வரியை எடுத்தாளும் ஆண்டாள்!!

  “கன்று குணில் ஆ”, கனி உதிர்த்த மாயவன்
  இன்று நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
  கொன்றை அம் தீங்குழல் கேளோமோ தோழீ
  – சிலப்பதிகாரம்: ஆய்ச்சியர் குரவை

  3. நின் கையில் “வேல்”, போற்றி!

  முருகனுக்கே உரிய ஆயுதம்= வேல்! என்பது மதம் வந்த பிறகு பரவலானது!
  சங்கத் தமிழ், முல்லை/குறிஞ்சி.. காடு/மலை, இரண்டு மக்களுக்குமே உரிய வேல்!
  வெட்சி x கரந்தை.. புறத்திணையில், ஆநிரை காக்கும் வேல்!

  வெல் என்பதே வேல் ஆனது! ஆதி நீடல்!
  நீத்தார் பெருமை / தொன்ம நடுகல்லில்.. வேல் நட்டுப் படையலே அன்று!
  இன்று வேல் வழிபாடு, மறைந்தே போய்விட்டது:(
  ஈழத்தில் மட்டும், ஆங்காங்கே, கொஞ்சமாத் தொற்றிக் கொண்டு இருக்கு!

  சங்கத் தமிழில் வேல் வழிபாடு… எனும் ஆய்வுக் கட்டுரை, முன்பு murugan dot org இல் பதிப்பித்தார்கள் = http://murugan.org/tamil/kannabiran.vel.htm

 3. 4. என்றென்றும் உன் சேவகமே

  அந்த “உம்” வராது-ன்னு நினைக்கிறேன்..
  எதற்கும் மூலப்பாடத்தை ஒருமுறை பார்த்து விடுங்கள்; நினைவிலிருந்து சொல்வதால் என் பிழையாகவும் இருக்கலாம்.. திருத்தி உதவுங்கள்!

  “என்றென்று” உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்!

  = விதியே-ன்னு வேலை செய்யாமல்
  = மகிழ்ச்சியாக, ஆசையாக..
  = அடி போற்றி, குணம் போற்றி, புகழ் போற்றி
  = இப்படி, போற்றி, போற்றி.. என்று என்று,
  = உன் சேவகம் ஏற்போம்!

  சில கோயில்களில், இறைவன் திருமேனிக்கு அத்துணை நெருக்கம் இருப்பினும், அந்தப் பூசகர், விதியே-ன்னு செய்வாரு:)
  ஒரு வாஞ்சையோ, ஆசையோ இருக்காது! பூவைச் சார்த்தும் போதும், ஒரு விசிறு தான் இருக்கும்; வாஞ்சை இருக்காது!

  என் சம்ஸ்கிருத ஆசிரியர், ஸ்ரீ. உ.வே. வேங்கட கிருஷ்ணமாச்சாரியாரோ, வேறு வகை!

  “அக” நேர்மை மிக்கவர்; தமிழின் தரவுகளைத் தயங்காது ஒப்புக் கொள்வார்;
  தமிழில், சம்ஸ்கிருதக் கலப்பு/ பண்பாட்டுச் சிதைப்பு தவறே என்பார்; சிலரைப் போல் சம்ஸ்கிருதம் அறியாமலேயே, வெத்துப் பெருமைக்கு, பாகவதங்கள் பேசுவதைச் செய்யவே செய்யார்.. Exceptional People are Exceptionally Beautiful!

  திருநின்றவூர் ஆலயத்தில், அவர் செய்வதைப் பார்த்தால், எனக்கே, ஆசை துளிர்க்கும்!:)
  கும்ப ஹாரத்தி காட்டும் போது, இறைவனுக்குக் கண்ணெச்சில் கழியச் சொல்வது வழக்கம்! இவரோ, சொல்ல மட்டும் செய்யாது…
  இறைவன் கன்னத்தில் துளி மை வைத்து.. தன் இரு கைகளால், இறைவனை அங்காந்து, நெட்டி முரிப்பார்:)))

  அப்படி.. “விதியே”-ன்னு செய்யாமல், ஆசையாய்ச் செய்தல்!
  போற்றி போற்றி.. “என்றென்று செய்தல்”!

  • GiRa ஜிரா says:

   பதிவில் பின்னூட்டாமிடும் உங்கள் ஞான ஆர்வத்துக்கு நன்றி. திருப்பாவை தொடர்பான கருத்துகளை மட்டும் இந்தப் பதிவுகளில் எடுத்துச் சொல்லி கோதையின் பாதைக்கு உயர்வு அளிக்க வேண்டிக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

 4. அளந்தாய்!
  செற்றாய்!
  உதைத்தாய்!
  எறிந்தாய்!
  எடுத்தாய்!
  என்று “இறந்தகால” வினைமுற்றாவே அடுக்கும் ஆண்டாள்..

  ஒரே ஒரு சொல்லு மட்டும்..
  “எதிர் காலமாய்” = வென்று, பகை “கெடுக்கும்”

  மாற்றிப் பாடி இருந்தாலும், கலிப்பா இலக்கணம் மாறி இருக்காது!
  குன்று குடையாய் எடுத்தாய்.. குணம் போற்றி!
  வென்று பகைகெடுத்தாய்.. நின்கையில் வேல்போற்றி

  It wud have followed the “Rhyme” of previous line also! But stupid girl, shez not doing it:)

  வென்று, பகை “கெடுக்கும்” நின்கையில் வேல்போற்றி! = எதிர் காலம் ஏன்?
  ——–

  நமக்குப் பகை யாரு?
  = நம் கருத்துக்கு மாற்றுக் கருத்தோ/தரவோ சொல்றவங்களா?
  = அல்ல!
  = நமக்குப் பகை= நாமே!
  தீதும் நன்றும் பிறர் தர வாரா.. எனும் பூங்குன்றன் சங்கத் தமிழ்!

  நம் “போலித்தனங்களே” நமக்குப் பகை!
  இறை பத்திப் பேசும் போது நல்லா எலக்கணமாப் பேசுவோம்; ஆனா பாட்டு எழுதும் போது மட்டும் கோட்டை விட்டுருவோம், நாகேஷ் சொல்வது போல:))

  ஆத்ம லக்ஷணம்!
  நடைமுறை வாழ்வில் காட்டாமல், வெறும் பேச்சு= இறைமையில் பயனில்லை:(

  இதை “அர்த்த பஞ்சகம்” என்று சொல்வார்கள், வைணவ சம்பிரதாயத்தில்!
  அதிலொன்று = விரோதி ஸ்வரூபம்!

  யாரு விரோதி? = நாமளே தான்:)
  “தடையாகித் தொக்கியலும் ஊழ்வினையும்” என்பான் 32 வயசு நாயகிப் பாவப் பையன், மாறன் நம்மாழ்வான்!
  நமக்கு, நாமே “தடை” செய்து கொளல் = சுயப் பிடித்தங்களால், மெய்ப் பிடித்தம் கொள்ள மாட்டாமை!

  அதான், அதை மட்டும், எதிர்காலமா வைக்குறா கோதை!
  நமக்கு நாமே பகையாவதை..
  தினமும் தடுத்துட்டே இருக்கணும்= அதான் நிகழ்காலமும் கடந்து+ எதிர்காலம்!
  ——-

  வென்று, பகை “கெடுக்கும்” நின்கையில் வேல்போற்றி!

  *முதலில் பகை கெடுத்தல்
  *அப்பறம் தானே வெற்றி?
  ஆனா, இங்கேயும் மாத்திப் பாடுறாளே? 1. வென்று 2. அப்பறமா, பகை கெடுக்கும்

  அவன் வேலைப் போற்றி.. அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே..
  அவன் அழகால், நாம் தோற்று விடுவோம்:)
  சண்டையே இல்லாமல் வெற்றி பெற்று விடுவான், கள்ளன்!
  அதான், முதலில் வென்று…
  அப்பறமா அவன் மயக்கத்தில், நம் சுயப்பிடித்தம் மறந்து போய்= நமக்கு நாமே பகை ஆவதைக் கெடுப்பான்!
  ——–

  டேய், ஆணழகா முருகா.. உன் காமம் காட்டி,
  *என்னை நீ வென்று விடு!
  *பின்பு, எனக்கே நான் பகையாகும், பகை கெடுத்து விடு!
  நின் கையில் வேல் போற்றி!
  நின் கையில் வேல் போற்றி!

 5. ஜிரா,
  நான் ஒரு காலத்தில் எழுதிய 24-ஆம் பாசுர இடுகையை வாசித்து விடுங்கள், வாசிக்கவில்லையென்றால்! நான் இந்த மார்கழி வாசிக்கவில்லை என் இடுகைகளை! அவற்றில் சொல்லாதவற்றை, இப்போது மனதில் உதிப்பதை பின்னூட்டமாகச் சொல்லவேண்டும் என்ற அவாவே அதற்குக் காரணம் 🙂

  ஒன்று அடுத்ததை மிஞ்சுகிறது என்று நான் சொன்னதை இவ்விடுகை உறுதி செய்கிறது. பிச்சு உதறி விட்டீர்கள். அந்த “கழல் போற்றி” விளக்கம் நன்று, ஏற்புடையதும் கூட.

  1. சென்ற பாசுர கடை அடியில் “ஆராய்ந்து அருள்” என்று கண்ணனை வேண்டிய நாச்சியார், இப்போது “சற்று இரு! உன் மங்களாசாசனத்தைச் சொல்லி விடுகிறோம். பிறகு நீ ஆராயலாம்” என்பதை குறிப்பில் உணர்த்துகிறாளோ! திருவடி நிழலை உறுதிப்படுத்தும் கோதையின் தந்திரம் இது 🙂

  2. ஆழ்வார்களுக்கு உகந்த அவதாரம், திரிவிக்கிரமன். அண்டம் வியாபித்த திருவடிகளே காரணம். திருவடி நிழலே பரமபதம். அதனால் தான், முதலடியில், வாமனனின் மங்களாசாசனம். அடுத்து “மனத்துக்கினியான்” (ஏகபத்தினிவிரதன்) ஆன இராமனைப் போற்றுகிறாள்.
  அப்புறம் தான் மாயக்கண்ணன் வருகிறான், ஆனால், அவனுக்கு 4 அடிகளில் போற்றல்! ஏன்?

  பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
  கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
  குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
  வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி

  கோபிகையாக தன்னை வரித்துக்கொண்ட கோதையின் காதலன் இல்லையா அவன் 🙂

  அன்புடன்
  பாலா

  • GiRa ஜிரா says:

   உங்களுடைய பதிவுகளையெல்லாம் படித்துவிட்டுத்தான் நான் எழுதத் தொடங்கினேன். இதுவும் கோதை சொல்லும் முன்னோர் காட்டிய வழி 🙂

   // ஆனால், அவனுக்கு 4 அடிகளில் போற்றல்! ஏன்? //

   அடடா! அழகான விளக்கம். இது எனக்குத் தோன்றவேயில்லை 🙂

 6. //இதுவும் கோதை சொல்லும் முன்னோர் காட்டிய வழி :)// ஆஹா, அடியார்க்கு அடியார் பாவம், தன்யனானே, ஜிரா 🙂

 7. அன்று இவ்வுலக வணக்கம்!
  சென்ற ஆண்டு எழுத விட்டுப் போன ஒன்று மட்டும், இன்று இவ்வுலகத்தில்..

  போற்றி!
  இச் சொல், தமிழக வரலாற்றிலேயே மிகவும் பொருள் மாறி விட்ட சொல்!
  *போற்றி= துதித்தல்/ வணக்கம்/ புகழ் பாடல் அல்ல!
  *போற்றி= காப்பாற்றல்
  அரசியலும் மதமும் சேர்ந்து, போற்றி எ. சொல்லின் பொருளே.. மாறிப் போச்சு!

  நாற்றம்= மணம், கிழவன்= உரியவன் எ. சொல்லெல்லாம் எப்படி மாறிப் போச்சோ
  காவடி= புதுடில்லிக்கு காவடி எடுக்கும் மாநில அரசு என்று எப்படி மாறிப் போச்சோ
  அப்படியே போற்றியும்= துதிபாடல் எ. ஆகிப் போச்சு:(

  “போற்று” எ. வினைச்சொல்லின் புறத்துப் பிறப்பது போற்றி, போற்றுதல் எ. சொற்கள்.
  ஆற்று & போற்று = செய்தல் & காப்பாற்றல்!

  ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் – அஞ்சிப்
  போற்று பவர்க்கும் பொருள்
  என்ற குறளில், பொருளைப் போற்றுதல்= காப்பாற்றல் எ. பொருளில் தான் ஐயன் பேசுகின்றார்!

  ஆற்றுவார் ஆற்றல் இகழாமை – போற்றுவார்
  போற்றலுள் எல்லாம் தலை!
  இந்தக் குறளிலும் போற்றுதல் = பேணுதல் என்ற பொருளில் தான்!

  இறைவனை, “போற்றி” எ. சொல்லால், ஐயன் வள்ளுவன் பாடவே இல்லை, கடவுள் வாழ்த்தில்!
  சேர்தல்-ன்னு இருக்கும்!
  வணங்குதல்-ன்னு இருக்கும்!
  தொழுதல்-ன்னு இருக்கும்!
  போற்றி -என்று குறளில் இருக்கவே இருக்காது:) ஏன்னா குறள் நெறி= துதி பாடும் நெறி அல்ல!

  “போற்றிப் பாதுகாக்கணும்” -ன்னு கிராமத்து எளிய வழக்கில் கூட, போற்றுதல்= துதிபாடல் பொருளில் வருவதில்லை:)

  சங்கத் தமிழிலும், போற்றல் = பேணுதல்/ காப்பு ஆற்றுதலே!
  அக400, மதுரைக் கணக்காயனார் பாட்டிலும்..
  ஒறுப்ப ஓவலை, நிறுப்ப நில்லலை
  புணர்ந்தார் போலப் போற்றுமதி!
  என்று, போற்று= காப்பாற்று/ பேணுதல் பொருளில் தான்!

  ஆண்டாளும், 9 போற்றி சொல்கிறாள் திருப்பாவையில்!
  *இநத 24ஆம், அருச்சனைப் பாடலில்= 6 போற்றி
  *போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள், 10ஆம் பாட்டில்= 1 போற்றி
  *போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய், 21ஆம் பாட்டில்= 1 போற்றி
  *பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய், 30 ஆம் பாட்டில்= 1 போற்றி

  ஆண்டாளின் போற்றியும்= இறைவா, எங்களைப் பேண்; எங்களுக்குக் காப்பு நல்கு! என்ற பொருளில் தான்!
  அடி போற்றி
  திறல் போற்றி
  புகழ் போற்றி
  கழல் போற்றி
  குணம் போற்றி
  வேல் போற்றி!
  இன்று யாம் வந்தோம், இரங்கிக் காப்பாற்று!

  இறைவன், காப்பு நல்குபவன்;
  அவனுக்கு, நம் மிகையான புகழ் மாலைகளோ/ துதி பாடல்களோ/ அதீத Praisingகளோ தேவையில்லை!
  அம்மாவைப் புகழ்ந்து பேசியா, சோறு உண்கிறோம்? ஆருயிர் நண்பனைப் புகழ்ந்து பேசியா நட்பு காக்கிறோம்?

  போலவே இறைவனும்!
  போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே! என்பார் மாணிக்கவாசக அண்ணல்!
  வாழ்க்கையின் முதல் செல்வமே, காப்பாற்று!

  போற்றி அருளுக, நின் ஆதியாம் பாதமலர்
  போற்றி அருளுக, நின் அந்தமாம் செந்தளிர்கள்
  போற்றி எல்லா உயிர்க்கும், தோற்றமாம் பொற்பாதம்
  போற்றி எல்லா உயிர்க்கும், போகமாம் பூங்கழல்கள்
  நின் சேவடி, செவ்வித் திருக் “காப்பு”!

  இப்படிக் காப்புப் பொருளில் அமைந்த “போற்றி”
  அதீத அரசியல்/ மதங்களால்,
  இன்று ஏனோ, துதிபாடல் பொருளுக்கு மாறி விட்டது..

  வெட்சி புனையும் வேளே “போற்றி”; என் காப்பு உன் பொறுப்பே!

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s