25. பிறப்பில்லாதவன் பிறந்த கதை

கோதை செய்த மங்களாசாசனத்தில் மகிழ்ந்திருந்த கண்ணன் முகம் மலர்ந்தான். அவனுடைய புன்னகையே “என்ன வேண்டும் கோதை?” என்று கேட்டது.

Keshav-25

Thanks to Keshav!

கண்ணனைத் தவிர என்ன கேட்பாள் கோதைக் கண்மணி? ஆனால் அதற்கு முன் அவனைப் பிரிந்திருந்து அவள் பட்ட துன்பத்தை அவனுக்குப் புரியவைக்க விரும்பினாள். இரண்டு அடிகளால் உலகத்தை அளந்தவன் எத்தனை அடிகளால் அவள் வேதனையை அளக்கப்போகிறான் என்று பார்க்க விரும்பினாள்.

”மாயவா! மன்னவா! இரவு தரும் உறவால் வரவு என தேவகியின் மகனாய் ஓரிரவில் பிறந்தாய். பிறந்த இரவே தாயைப் பிரிந்த இரவானது. அன்றே கோகுலத்தில் அசோதையின் மகனாய் ஆனாய்.  அப்படி இன்னொரு இடத்தில் உன்னை ஒளித்து வளர்ப்பதற்காகவே உன்னைப் பிரிந்தாளே தேவகி. அதன் காரணத்தை நீ அறிவாய். அவள் வேதனையை நீ அறிவாயா?

கிருஷ்ணனின் மாறாத புன்னகை “நான் அனைத்தும் அறிவேன். மேலே சொல்” என்றது.

”உனக்குத் தெரியாமல் எதுவும் நடக்குமா? ஆனாலும் நான் சொல்கிறேன். தங்கையின் எட்டாவது மகனால் மரணம் என்று தெரிந்து கொண்ட உன் மாமன் கம்சன், உன் பெற்றோரைச் சிறையிலடைத்தான். ஒவ்வொன்றாகப் பிறந்த ஆறு குழந்தைகளை தேவகியின் கண் முன்னமே கொன்றான். அதைப் பார்த்த தேவகியின் உள்ளம் எப்படியெல்லாம் கதறியிருக்குமோ! ஒரு வாய்த் தாய்ப்பால் கூட தான் பெற்ற பிள்ளைக்குப் புகட்ட முடியாமல் அவள் நெஞ்சு எப்படியெல்லாம் நொந்ததோ! பெற்ற வயிறு எரிந்து கொதித்த போது  அந்த வயிற்றில் குளிர்நிலவாய் நீ தோன்றினாய். உனக்கும் அவள் ஒருவாய்ப் பாலூட்டவில்லை. நீ பிறந்ததும் பிரிந்தாள். நீயும் வசதியாக ஆயர்ப்பாடிக்கு வந்துவிட்டாய்.

என்ன தவம் செய்தாளோ அசோதை! உனக்குப் பாலூட்டிச் சீராட்டி நீராட்டிப் பட்டுடுத்திக் கொண்டாடினாள். பாலும் தயிரும் வெண்ணெய்யும் உண்டு நீயும் வளர்ந்தாய். உலகையே உண்ணும் உன் வாய் உண்டும் அசோதை வீட்டில் வெண்ணையும் தயிரும் குறையவில்லை. அந்த அசோதையின் அன்பு உன்னோடு இருந்ததால் பெற்ற தாயைப் பிரிந்த துன்பம் உனக்குப் புரிந்திருக்காது. ஆனால் ஒவ்வொரு நாளும்.. ஒவ்வொரு இரவும்.. ஒவ்வொரு நொடியும் உன் நினைவோடு காத்திருந்தாள் தேவகி.

அந்த தேவகியின் வேதனை எனக்குப் புரிகிறது. உன்னைப் பிரிந்து நான் படும் வேதனை உனக்குப் புரிகிறதா?”

புன்னகை தீராமல் கோதை சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் கோபாலன்.

“உனக்குப் புரிந்திருக்கும். இல்லையென்றால் உன் மனையில் உன் அறையில் உன் அருகில் உன்னுடன் நின்று என்னால் பேசிக்கொண்டிருக்க முடியுமா!!!

நீ பிழைத்திருப்பதை எப்படியோ தெரிந்து கொண்டான் உன் மாமன். உன்னைக் கொல்வதற்கு எத்தனையோ முயற்சி செய்தான். அத்தனை முயற்சியும் வென்று அயர்ச்சியை அவனுக்குத் தந்தாய். உன்னால் எப்போது எந்த வழியில் எப்படி எங்கு மரணம் வருமோ என்ற அச்சம் கம்சனை வாட்டியது. அந்த அச்சத்தைக் கொடுக்கும் நெருப்பாக அவன் வயிற்றில் நீ நின்றாய்! நன்னாள் ஒன்றில் அவனைக் கொன்றாய்!

அன்றுதான் உன்னை மீண்டும் கண்டு மீண்டாள் தேவகி. துன்பத்தின் உச்சியில் தவித்த அவள் ஒரு நொடியில் இன்பத்தின் உச்சியில் களித்தாள்.

நெடுமாலே! உன்னைச் சேர்ந்திருக்கும் அந்த இன்பத்தின் உச்சியில் எங்களையும் வைப்பாயா என்று கேட்டு உன்னைப் போற்றிப் புகழ்ந்து நாங்கள் வந்திருக்கிறோம்.

எங்களை உன்னோடு சேர்த்துக் கொள்வாயென்றால், திருமகளின் செல்வமாகிய உன்னையும் உன் சேவகத்தையும் நாங்கள் போற்றிப் பாராட்டி எங்கள் வருத்தங்கள் தீர்ந்து மகிழ்வோம்.”

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் – தேவகியின் மகனாக ஓரிரவில் பிறந்து
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் – (அதே இரவினிலேயே) யசோதையின் மகனாக நீ ஒளிந்து வளருவதை
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைத்த – (நீ வளர்ந்து வருவதைப்) பொறுத்துக்கொள்ள முடியாதவனாய், உனக்குத் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் – (தீங்கு நினைத்த) கம்சனின் கருத்தைத் தவறென நிரூபித்து
கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே – கம்சனுடைய வயிற்றிலே நெருப்பாக நின்று கொன்ற நெடுமாலே!

உன்னை அருத்தித்து வந்தோம் – உன்னைப் போற்றிப் புகழ்ந்து வந்திருக்கிறோம்

பறை தருதியாகில் – (உன் கருணையைத் தந்து) எங்களை ஏற்றுக் கொண்டால்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி – திருமகளுக்கு உரிய செல்வமான உன்னையும் உனக்குச் செய்யும் சேவகத்தையும் நாங்கள் பாடிப் புகழ்ந்து
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் – (எங்கள்) வருத்தம் தீர்ந்து மகிழ்வோம் என்பதைக் கேட்டு இதயத்தில் கொள்வாய்! எம்பாவாய்!

இந்தப் பாடலைப் படிக்கும் பொழுது பெரியாழ்வாரின் திருமொழிப் பாடலொன்று நினைவுக்கு வருகிறது. அதுவும் தேவகி பிள்ளையைப் பறிகொடுத்த கதைதான்.

சீதக் கடல்உள் ளமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர்வந்து காணீரே

தேவகி எப்படிப்பட்டவள் தெரியுமா? பால் நிறைந்த கடலிலே கோலிட்டுக் கடைய முடியாதென்று மலையிட்டுக் கடைந்தார்கள். அப்போது தோன்றிய அருமருந்து அமுதம். அருமருந்து தோன்றிய அதே கடலில் பெருமருந்து ஒன்றும் திருமகள் என்ற பெயரோடு தோன்றியது. அந்தத் திருமகளின் அருளைப் போன்றவள் தேவகி. குற்றம் என்ற சொல்லுக்குக் கூட அவளிடம் வேலையில்லை.

ஒரு நள்ளிரவிலே சிறையினிலே கண்ணனைப் பிள்ளையாய்ப் பெற்றாள். அவளுக்கு நன்றாகத் தெரியும்… கண்ணன் இங்கிருந்தால் அண்ணன் கொன்றுவிடுவான் என்று. எங்கோ சென்று பிழைத்தாலும் நன்று பிழைக்கட்டும் என்று ஆயர்ப்பாடியில் உள்ள யசோதையிடம் அனுப்பினாள்.

அறிவுள்ள யாராவது பிள்ளையை அப்படி பிறந்தநாளன்றே அனுப்புவார்களா? அந்தப் பேதை தேவகி அனுப்புவதற்கு முன்பு ஒன்று செய்தாள். கருமுகில் நிறத்துக் குழந்தையைக் கையிலெடுத்து ருசித்தாள். பொதுவாகக் குழந்தைகள் பசி தீர்த்துக் கொள்ள தாயை ருசிக்கும். ஆனால் மாயனைப் பிரிந்து பல ஆண்டுகள் தவிக்க வேண்டிய பாசப்பசிக்கு மருந்தாக அவனை முத்தமிட்டு ருசித்தாளாம் தேவகி. அப்படி தேவகி முத்தமிட்டு ருசித்த தாமரைத் திருவடிகளை வந்து பாரீர் பாரீர் என்று அழைக்கிறார் பெரியாழ்வார்.

பேதை தேவகி. வேறெந்தப் பெயர் அவளுக்குப் பொருந்தும்! காத்திருந்து பூத்திருந்த அவள் கண்களில் பேதமை போகும்படி கருணை செய்தக் கண்ணனை தனக்கும் கருணை செய்யுமாறு வேண்டுகிறாள் ஆண்டாள்.

இந்தப் பாடலில் கோதை சொல்லும் திருத்தக்க செல்வம் என்பதற்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம்.

திரு என்றாள் திருமகள். அலைமகள். செல்வத்தின் நிலைமகள். செல்வத்தை எல்லாம் ஆள்கின்றவளுக்குத் தக்க செல்வம் அந்தப் பரந்தாமனே. அந்தப் பரந்தாமனே வேண்டும் என்று வேண்டுகிறாள் கோதை.

இதையே சற்று மாற்றி இன்னொரு பொருளும் சொல்லலாம். தக்க செல்வம் தந்து தன்னையும் திருமகளாக்க வேண்டும் என்று கோதை வேண்டுவதாகவும் கொள்ளலாம். தக்க செல்வம் என்று மாலவனைத்தானே நாம் கருத முடியும்.

Paavai-25************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
தரிக்கிலான் – மனம் பொறுக்காதவன்
பிழைப்பித்து – பொய்யாக்கி, பிழையாக்கி
அருத்தித்து – போற்றிப் புகழ்ந்து, அர்ச்சித்து
************************************************************************************************************************
அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, திருப்பாவை and tagged , , , . Bookmark the permalink.

4 Responses to 25. பிறப்பில்லாதவன் பிறந்த கதை

 1. பாவை வணக்கம்!

  மொத்தமுள்ள திருப்பாவையிலும், இந்த ஒரு கவிதை மட்டுமே, சோகம் கலந்து வீசுமொரு கவிதை!
  அதான், முடிக்கும் போது, “வருத்தமும் தீர்ந்து” மகிழ்-ன்னு, அவ முடிச்சிட்டா போல!

  /கண்ணனைத் தவிர என்ன கேட்பாள் கோதைக் கண்மணி?
  ஆனால் அதற்கு முன்..
  அவனைப் பிரிந்திருந்து அவள் பட்ட துன்பத்தை அவனுக்குப் புரியவைக்க விரும்பினாள்/

  These 3 lines say it all!

  காதலில், பிரிவு கூட அத்துணைத் துன்பமில்லை!
  “புரிந்து கொள்ளாமை” என்பதே பெருந் துயரம்!
  கோதை = அவனுக்குப் “புரிய வைக்க” விரும்பியது சாலவும் நன்றே!
  —–

  பிரிந்தவர் கூடினால்..
  அங்கு அதிகம் பேச்சு எழுவதில்லை!
  உன்னால தான் இப்பிடியாச்சு, என்னால தான் இப்பிடியாச்சு ..
  போன்ற Blame Game அங்கில்லை!

  அவன் புரிஞ்சிக்கணுமே, மனசு முழுக்கமுழுக்கப் புரிஞ்சிக்கணுமே என்ற ஏக்கம் மட்டுமே இருக்கும்!
  அது கூட, வாய்ச்சொல்லாய் வராது! கண்ணீராய் உகுத்து உகுத்து..

  பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
  அழுதால் கொஞ்சம் நிம்மதி!
  பேச மறந்து சிலையாய் இருந்தால்
  அதுதான் தெய்வத்தின் சன்னிதி!

  MSV – Susheelamma – Kannadasan மூவரின் மூலமாய், அப்பட்டமான உண்மை!
  வாழி, மல்லி நாடாண்ட மடமயில்!

 2. சிற்சில குறிப்புக்கள்:

  1. ஒருத்தி மகனாய்ப் பிறந்து..

  மகனுக்கு முன், மகள் பிறந்தது!
  அதான் மகனாய் என்று இழுக்கிறாள் போலும்!

  2. ஒருத்தி மகனாய் ஒளித்து வளர

  “ஒளிந்து” வளர அல்ல! ஒளிந்து வாழ்வது, வீரம் அன்று!
  அதான் “ஒளித்து” என்று எழுதினாள் போலும்
  அவன் ஒளிந்து கொள்ளவில்லை! அவனை, பிறர் ஒளித்து வைத்தார்கள்!
  ——–

  3. தரிக்கிலான்

  இந்தவொரு சொல்லுக்கு நிறைவான பொருள் “உணர்ந்தால்”.. நாட்டில் வேற்றுமை இருப்பினும் வேற்றுமையே வராது!
  *தரித்தல்= Tolerant
  *தரிக்கில்லான்= Intolerant

  தரிக்கில்லான் தான், பிறர்க்குத் தீங்கு நினைப்பான்!
  தரிப்பவன், கருத்தோடு/தரவோடு அமைந்து கொள்வான்!

  கருத்து வேறு, மனிதம் வேறு என்று “உணரா”தவர்களின் கருத்தையே, இறைவன் பிழையாக்குகிறான்!
  கருத்தைப் பிழைப்பித்து.. வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே!

  தரிக்கில்லாதவன் வயிற்றில்/நெஞ்சில்..
  எப்பவும் நெருப்பு எரிந்து கொண்டே இருக்கும்! தீயுழி உய்த்து விடும் என்பார் ஐயன்!

  வண்டிச் சக்கரம், கொக்கு,
  பசுங் கன்று, குதிரை,
  விளா மரம், குருந்த மரம்,
  பூதனை எ. தாய் போலொரு பேய்,
  யானை, மல்லன்
  = இப்பிடி… விதம் விதமா, பிறரை அழிக்கத் துடிச்சிக்கிட்டே இருக்கும் அந்தத் தீ!
  = அழிக்கலீன்னாலும், பிறர் துன்புறும் போது சிரித்தல்
  = ஏளனம், எள்ளல் -ன்னும் துடிச்சிக்கிட்டே இருக்கும் அந்தத் தீ!

  அழுக்காறு எனஒரு பாவி – திருச்செற்றுத்
  தீயுழி உய்த்து விடும்!
  அத் தீ இன்றி, குளிர்ந்து இருக்க= தரித்தல்/ Tolerance பழகுவோம்! இறையருளால்..
  ——-

  4. பறை தருதியாகில், சேவகமும் யாம் பாடி

  பலரும் இறைவனிடம் பலதும் வேண்டுவார்கள்!
  அவனையே வேண்டுபவர்கள்= மிகச் சொற்பம்:)

  Exam Pass ஆகணும்
  நல்ல வேலை கிடைக்கணும்
  கல்யாணம் ஆகணும்
  புள்ள பொறக்கணும்
  Settle ஆகணும்
  Promotion கிடைக்கணும்
  இன்னும் பணம் வரணும்
  சமூக அந்தஸ்து, இன்னும் உசரம் ஆவணும்
  பொண்ணு/ புள்ளைக்குக் கல்யாணம் ஆகணும்
  ..
  ..
  முடிவே இல்ல:) தப்பும் இல்ல! அவனைக் கேட்காமல் யாரிடம் கேட்பது?
  “Matter” முடியணும் னு கூட அவனிடம் கேட்டவர்கள் உண்டு:))))

  ஆனா.. அத்துணைச் சுயநலமும் தாண்டி.. ஒரே ஒரு நாள், அம்மாவிடம், “நீ சாப்பிட்டியாம்மா”? என்று கேட்டுப் பாருங்கள்!

  அந்த இன்பம் அவளுக்கு மட்டும் அதிர்ச்சி அல்ல!
  கேட்ட நமக்கே அதிர்ச்சி குடுத்து, மனசு பூரா இன்பம் குடுக்க வல்லது!
  அதைத் தான் ஆண்டாள் வேண்டுகிறாள்! = நீ சாப்பிட்டியா டா?

  எங்களுக்கு எது தெரியுமா, நீ குடுக்கும் பறை?
  பறை தருதியாகில்
  உனக்கு, “காதல் தொண்டு” செய்து கிடப்பதே!
  சேவகமும் யாம் பாடி!
  உனக்குத் திருத்தக்க செல்வமாய் இருப்போம், எங்கள் திருத்தக்க செல்வமே!

 3. /சீதக் கடல் உள்-அமுது அன்ன தேவகி/

  பாசப் பசிக்கு மருந்தாக = அவனை முத்தமிட்டு ருசித்தாளாம் தேவகி
  மிக மிக நன்று!
  மிக மிக ரசித்தேன்!
  அம்மா எனும் அன்பு, உங்களுக்கு நனி நிறைந்து, நலமே நல்க வேண்டுகிறேன்!

  பேதைக்குழவி பிடித்துச் சுவைத்துண்ணும் பாதக் கமலங்கள்!
  தாய்ப் பால் குடுக்கக் கூட, அவளுக்கு நேரம் இருந்துச்சோ என்னவோ?:(
  *குழந்தை, அவள் மார்பில் வாய் வைப்பது போக
  *அவள், குழந்தையின் காலில் வாய் வைத்த சீர்மை!
  —–

  பெரியாழ்வார் மட்டுமல்ல..
  குலசேகரரும், “தேவகி புலம்பல்” என்றே, தனித்த கவிதையாய் யாத்திருப்பார்!

  ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ
  வேழப் போதகம் அன்னவன் தாலோ
  ஏல வார் குழல் என்மகன் தாலோ
  “என்று என்று” உன்னை,
  என் வாயிடை நிறையத் தால் ஒலித்திடும்
  திருவினை இல்லாமல்..
  தாய்களில் கடை ஆயினேன் தாயே!

  எல்லா அம்மாக்களையும் விட, கீழான அம்மாவாய் ஆகிப் போனேனே!
  உனக்குத் தால் ஒலிக்கும் தாலாட்டு..
  நீ இல்லாமல், உன் நினைவுக்கு ஒலிக்கிறேன், வெறுங் காற்றுக்கு ஒலிக்கிறேன்!

  தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்
  கொல்லி காவலன் மால்அடி முடிமேல்
  கோலமாம் குல சேகரன் சொன்ன
  நல்லிசைத் தமிழ் மாலைகள் வல்லார்
  நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே!
  ——-

  சம்ஸ்கிருத வேதங்களில்= வெறும் சடங்கு/ ஞான பரமான இறைவன் தான்!
  ஆனால், தமிழ் வேதங்களில் மட்டுமே..
  உணர்ச்சிக்கு உணர்ச்சியாய், உண்மை உணர்ச்சியாய்= “வாழும் இறைவன்”!

  தெளிவே இல்லாத சம்ஸ்கிருத மறை நிலங்கள்!
  செய்ய தமிழ் மாலைகள்… யாம் தெளிய ஓதி
  தெளியாத மறை நிலங்கள், தெளிகின்றோமே!

  நற்றமிழ் பத்தும் வல்லார்.. நண்ணார் நரகமே!
  வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

  • ஒன்று சொல்ல விட்டுப் போனது..

   இழந்த மனசுக்குத் தான் = இன்னொருவரின் இழப்பு வலி.. தெரியும்/புரியும்!
   நமக்கு இழப்பாயிருச்சே -ன்னு..
   அந்த இன்னொருவர் இழப்பில் களிக்காது!

   இது ஆத்ம குணம்!
   இதுல பெருமை ஒன்னுமில்லை; இயல்பாய் அமைஞ்சீறது!

   அப்படிப்பட்டவள் தேவகி!
   அத்துணைச் சோகத்திலும்.. புள்ள பாசத்திலும், தன் காதல் கணவனை மறக்கலை பாருங்க அவ!

   உந்தை யாவன்? என்று உரைப்ப
   நின் செங்கேழ் விரலினும் கடைக்கண்ணினும் காட்ட
   நந்தன் பெற்றனன் நல்வினை எல்லாம்
   நங்கள்கோன், வசுதேவன் பெற்றிலனே!

   தன் பிள்ளைச் சோகத்திலும், தன் கணவனின் சோகத்தையும் சேர்த்தே சொல்லும் “பெண்மை திகழ்” உள்ளம்!
   பொதுவா, பெண்கள்.. ஆண் பிள்ளை வளர வளர.. கணவன் மேல் மதிப்பு விட்டு, பிள்ளை மேல் கவனம் திரும்பிடும்ன்னு குற்றச்சாட்டு உண்டு சமூகத்தில்:))

   ஆனா, இவளோ.. தன் துயரிலும், தன் காதல் கணவன் துயரையும் மறவாத ஆத்ம குணம் மிக்கவள்!
   இத்தகைய உள்ளங்கள் அபூர்வம்!
   நாயகி பாவத்துக் குலசேகரருக்கு அப்பிடியோர் உள்ளம் போல!

   தன் துன்பத்திலும், அவன் நினைவு!
   வாழி, இந்தப் பெண்மை!
   ஆண்மையில் கலந்து விட்ட பெண்மை!

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s