26. ஆள் பார்த்துக் கொடுக்கும் பெரும் ஆள்

”பேசினாலும் ஏசினாலும் ஒன்றும் பேசாமல் இருந்தாலும் இவனுடைய புன்னகை மட்டும் மாறுவதில்லையே” என்று கண்ணனின் புன்னகையில் கோதை மயங்கியிருந்தாள்.

கன்னி எண்ணி வந்ததைக் கொடுக்காமல் கேள்விக் கண்ணி எய்தான் பத்துதலை கொய்தான்.

“கோதை, சின்னஞ்சிறு பெண்கள் நீங்கள். நீங்களாகக் கூடி நோன்பு என்ற பெயரில் எதையோ செய்து என்னிடம் வேண்டி வந்திருக்கின்றீர்களே! இந்த நோன்பு வேதத்தில் வருகிறதா? உபநிடதம் சொல்லிக் கொடுத்ததா? புராணங்களில் யாரும் செய்திருக்கிறார்களா? இதிகாசங்களில் எதுவும் படித்தீர்களா? இல்லை சாத்திரங்களையும் சூத்திரங்களையும் முனிவர்கள் கற்றுக் கொடுத்தார்களா?

“இல்லை. இல்லை. இல்லை.”

“என்ன அதிசயம்! இவற்றிலெல்லாம் இல்லையென்றால் வேறெங்கு கற்றீர்கள்? யார் கொண்டு வந்த நடைமுறை இது?”

“திருமாலே! நீலமணி நிறத்தவனே! மாரி கழிந்து நீராடுவது என்பது எங்கள் முன்னோர் வழக்கம். பழந்தமிழர் வாழ்விலிருந்து இந்த நோன்பைக் கற்றோம். கற்றதனால் ஆய பயனாக இன்று உன் முன் நிற்கின்றோம். நூல் பல கற்று அறிவு கொள்வதிலும் முன்னோர் அனுபவத்தைக் கற்றுத் தெளிவு கொள்வது இன்னும் உயர்ந்தது. அப்படித் தெளிந்து செய்யும் நோன்புதான் இந்த மார்கழி நீராடுதல்.”

“நல்லது கோதை. வேண்டி வந்தவர்களைத் தாண்டிப் போவது எனக்கு அழகல்ல. வேண்டுவன கேள். தருகிறேன்.”

தந்தேன் எனக் கண்ணன் சொன்னது தீந்தேனாக இனித்தது அவளுக்கு. துயரெல்லாம் தீர்ந்தேன் என உயிரெல்லாம் சிலிர்த்தாள்.

Keshav-26

Thanks to Keshav!

“கண்ணா! வேண்டுவன கேள் என்று சொன்னாய். வேண்டுவதற்கு ஆறு பொருட்கள் கேட்கிறேன். தருவாயா? முதலில் ஒரு சங்கு வேண்டும்.”

“சங்கா? விட்டால் என்னுடைய கைச்சங்கையே கேட்பீர்களோ?”

“மதுசூதனா! உன்னுடைய கைச்சங்காகிய பாஞ்சசன்னியம் ஒலிக்கும் போது உலகமே நடுங்கும். படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே என்று என் தந்தை உனக்குப் பல்லாண்டு பாடியபடி ஒலிக்கின்ற சங்கங்கள் வேண்டும். பாஞ்சசன்னியத்தையே கொடுத்தாலும் எங்களுக்கு உவப்பே!”

”சரி. தருகிறேன். வேறென்ன வேண்டும்.”

“இரண்டாவதாக பறை ஒன்று வேண்டும். அதுவும் ஏறுகோட்பறை போன்ற பெரிய கொட்டுப்பறை வேண்டும்.”

“தந்தேன். மூன்றாவதாக?”

“பல்லாண்டு பாடுகின்ற அடியவர்கள் வேண்டும். உன்னையே எண்ணிப் பாடும் நல்ல சுற்றம் வேண்டும்.”

“அடியவர்கள்தானே. நிறைய இருக்கிறார்கள். நான் சொல்லி அனுப்பிவைக்க வேண்டாம். நீ கூப்பிட்டாலே வந்துவிடுவார்கள். அவர்கள் என்னோடு இருப்பதை விட என் பெயரைச் சொல்கின்றவர்களோடு இருக்கும் நேரமே அதிகம். ஆகட்டும். அடுத்ததைச் சொல்.”

”அணையாச் சுடர் விளக்குகளும், உன்னுடைய கொடியும், தலைக்கு மேல் பந்தலும் வேண்டும்.”

“சங்கு, கொட்டு, பாட்டு, விளக்கு, கொடி, பந்தல்… இவை போதுமா? இந்த ஆறையும் கேட்பதற்காகவா என்னை நாடி வந்தாய்?”

”கேசவனே! கேட்டு நீ கொடுத்தால் உனக்குப் பெருமையோ? கேட்டதையெல்லாம் கொடுப்பதற்கு மூவருண்டு. கற்பகம் என்னும் மரம். காமதேனு என்னும் பசு. சியமந்தகம் என்னும் மணி. நான் கேட்டுத்தான் நீ கொடுப்பாய் என்றால் அந்த மூவரின் மதிப்புதானா உனக்கும்? நான் கேட்கின்ற ஆறு பொருட்களும் உன்னைப் போற்றும் நோன்புக்காகவே! நோற்பது வரைதான் என் செயல். அதற்கு மேல் உன் பாடு. பேசிக்கொண்டேயிருக்காதே. ஊழிக்காலத்தில் ஒன்றுமறியாத குழந்தையாய் ஆலிலை மேல் படுத்துக் கொண்டு நாடகம் ஆடுகின்றவனே! எங்களுக்கு நேரமாகிறது. முதலில் கேட்டவற்றைக் கொடு.”

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

மாலே மணிவண்ணா – திருமாலே! நீலமணியின் நிறம் ஒத்த கரியவனே!

மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் – மாரி கழிந்து தைநீராடுவது என்பது எங்கள் முன்னோர்கள் வழக்கம்

வேண்டுவன கேட்டியேல் – அந்த நீராடும் நோன்புக்கு வேண்டியவை எவையென்று (நீ) கேட்டால்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன – உலகமெல்லாம் அதிர்ந்து நடுங்கும் படி மெல்லியதாய் (வண்டுகளைப் போல் விடாது) ஒலிக்கும்
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் – பால் வெண்ணிறத்தில் இருக்கும் உன்னுடைய பாஞ்சசன்னியம் போன்ற சங்குகள்

போய்ப் பாடுடையனவே சாலப் பெரும் பறையே – நிறைய இடம் பிடிக்கின்ற மிகப் பெரிய கொட்டுகள்

பல்லாண்டு இசைப்பாரே – உனக்குப் பல்லாண்டு பாடுகின்றவர்கள்

கோல விளக்கே கொடியே விதானமே – கோல விளக்கும், கொடியும், தலைக்கு மேல் (செல்லும் இடமெல்லாம்) பந்தலும்

ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய் – அருள்வாய் ஆலிலைக் கண்ணனே! எம்பாவாய்!

என்ன வேண்டும் என்று இறைவன் நம்மைக் கேட்டால் என்ன கேட்போம்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாமெல்லாம் எவ்வளவு சுயநலமிகள் என்றும் இந்த வாழ்க்கையின் மீது எவ்வளவு ஆசை கொண்டவர்கள் என்பதும் விளங்கும்.

ஆண்டவனே ”என்ன வேண்டும்?” என்று கேட்கும் போது “ஆண்டவனே! நீயே வேண்டும்!” என்று அவள் கேட்டிருக்கலாம். ஆனால் கேட்கவில்லை. ஏன்? கேட்காமலே கொடுப்பவனிடம் கேட்டுப் பெறுவதா சிறப்பு? அப்படியானால் என்ன கேட்பது? அவனையே நினைத்துப் போற்றிப் பாடுவதற்கு என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் கேட்டாள் கோதை.

கோதை இப்படிக் கேட்டதற்குப் பொருத்தமான விளக்கத்தை திருமழிசையாழ்வார் ஒரு பாசுரத்தில் சொல்லியிருக்கிறார்.

ஆட்பார்த் துழிதருவாய் கண்டுகொள் என்று,நின்
தாட்பார்த் துழிதருவேன் தன்மைய – கேட்பார்க்
கரும்பொருளாய் நின்ற அரங்கனே, உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்

இந்தப் பாடலில் அரங்கனின் வேலை எதுவென்றும் அடியவர்கள் வேலை எதுவென்றும் விளக்குகிறார் ஆழ்வார்.
அரங்கன் வேலை – கண்டுகொள் என்று ஆள் பார்த்து உழி தருவாய்
அடியவர் வேலை – தாள் பார்த்து உழி தருவேன் தன்மை(யோடு) அரங்கனை விரும்புவதே விள்ளேன் மனம்

அதாவது தேடிச் சென்று சரியான ஆள் பார்த்து ”என்னைக் கண்டுகொள்” என்று இடம் கொடுப்பது அரங்கனின் வேலை. நாம் அரங்கனைத் தேடிச் சென்று அலைய வேண்டாம். அவனே ”என்னைப் பார்! என் அழகைப் பார்! என் அருளைப் பார்!” என்று தேடி வந்து தருவான்.

நன்றாகத் தரட்டும். அதென்ன ஆள் பார்த்துத் தருவது? எப்படிப் பட்ட ஆட்களைப் பார்த்துத் தருவாராம் அரங்கன்?

இந்த உலகத்தின் கருப்பொருளாய் நின்ற அரங்கனை எப்போதும் விரும்புகின்ற உள்ளத்தோடு அவன் தாள் பார்த்து இடம் கேட்கும் ஆள் பார்த்துத் தருவானாம்.

அப்படியானால் அடியவர்களின் வேலை என்ன? அவனை விரும்பினால் போதுமாம். (இந்தப் பாடலில் உழி என்ற சொல் மிகவும் அழகானது. இடம் என்று பொருள் சொன்னாலும் சென்று சேர வேண்டிய இடம் என்று பொருள் சொல்வதே பொருத்தம். அதாவது destination.)

திருமழிசையாழ்வார் சொன்னதைத்தான் கோதையும் செய்கிறாள். ஆண்டாளுடைய வேலை கண்ணனை எப்போதும் விரும்பி நினைப்பது. அவள் வேலையை அவள் செய்வாள். தேடி வந்து அருள் செய்ய வேண்டியது கண்ணன் வேலை. ஆகவே கண்ணனை விரும்பிப் பாட ஆறு பொருட்களை மட்டும் கேட்கிறாள்.

வெண்சங்கம் – வெண்சங்கின் ஒலி மிகப்பெரிய வண்டு முரல்வது போல இருக்கும். அது உறக்கத்தில் இருக்கும் அடியவர்களை எழுப்பும்.
சாலப் பெரும்பறை – எழுந்தவர்கள் எல்லாம் நோன்புக்குப் புறப்படுவதை எல்லோருக்கும் முரசு அறிவிக்க பெரிய பறை வேண்டும்.
பல்லாண்டு – இறைவனைப் பாடிச் செய்யப் போகும் நோன்பு சிறப்பதற்காக பல்லாண்டு வாழ்த்திப் பாட நல்ல அடியவர்கள் வேண்டும்.
கோலவிளக்கு – விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் ஒருவரையொருவர் திருமுகம் பார்க்கவும் செல்லும் வழிபார்க்கவும் விளக்கு வேண்டும்.
கொடி – நோன்பில் கலந்துகொள்ள விரும்பும் மற்ற அடியவர்களும் ஊர்வலம் வருவதைத் தொலைவிலேயே தெரிந்து கொள்ள ஏதுவாகக் கொடி வேண்டும்.
விதானம்(பந்தல்) – பரமனைப் பாடும் அடியவர்களுக்கு தலையில் பனி விழுந்தாலும் வெயில் அடித்தாலும் தெரியாது. விடியற்காலையில் தலையில் பனி இறங்காமல் இருக்க பந்தலும் வேண்டும்.

இந்த ஆறு பொருட்களுக்கும் இன்னொரு பொருளும் உண்டு.
வெண்சங்கம் – பாஞ்சசன்னியம்
சாலப் பெரும்பறை – ஓங்கி உலகளந்த போது கொட்டப்பட்ட வெற்றி முரசு
பல்லாண்டு – பெரியாழ்வார் நம்மாழ்வார் போன்ற ஆழ்வார்கள்
கோலவிளக்கு – நப்பின்னைப்பிராட்டி
கொடி – பெரிய திருவடியாகிய கருடன்
விதானம்(பந்தல்) – அனந்தனாகிய ஆதிசேடன்

இந்த ஆறுபொருட்களும் வேண்டுமென்று கேட்டால் அதற்கு என்ன பொருள்? இவை ஆறும் வைகுந்தன் இருக்கும் இடத்தில் இருக்கும். அப்பேர்ப்பட்ட வைகுந்தத்தில் இடம் வேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம்.

இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பும் உள்ளது. மேற்கொள்ளும் பாவை நோன்பை எதன் அடிப்படையில் நடத்துகிறாள் என்பதை ஆண்டாள் விளக்கமாகச் சொல்கிறாள். முன்னோர்களின் பழக்கத்தை வைத்து இந்த நோன்பைச் செய்கிறாளாம். பாவை நோன்பு என்பது மாரி கழியும் காலத்தில் நீராடும் நோன்பு என்று சங்க இலக்கியங்கள் சொல்வதை அறிமுகக் கட்டுரையில் பார்த்தோம். அந்த முன்னோர்கள் நோன்பு நோற்றதை அடைப்படையாக் கொண்டு திருப்பாவை நோன்பைத் துவக்குகிறாள் கோதை. அதைத்தான் “மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள்” என்கிறாள்.

Paavai-26************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
மேலையார் – முன்னோர்கள்
ஞாலம் – உலகம்
முரல்வன – ஒலிக்கின்ற (பொதுவாக வண்டுகள் ம்ம்ம்ம்ம்ம் என்று ஒலிப்பது போல)
சாலப் பெரும் பறை – மிகப் பெரிய கொட்டு/முரசு
விதானம் – பந்தல்
************************************************************************************************************************
அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

One Response to 26. ஆள் பார்த்துக் கொடுக்கும் பெரும் ஆள்

  1. amas32 says:

    கோதையைப் போல இந்த மனநிலையை அடைந்து விட்டால் வேறு என்ன வேண்டும்? இறைவனிடம் என்ன கேட்கவேண்டும் என்று நமக்காகத் தெரியாவிட்டாலும் அவள் வழியை பின் பற்றி இறை அருள் பெறுவோம். விசிஷ்டாத்வைதமே திருமாலை அருகில் இருந்து அனுபவிக்கும் பேற்றினை போற்றும் வழிமுறை. அதைத் தான் ஆண்டாளும் இந்தப் பாடலில் இறைவனிடம் கேட்கிறாள்.
    ஆண்டாள் திருவடிகளே சராணம்.

    amas32

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s