27. வெல்லம் கொண்ட உள்ளம் வெல்லும்

Keshav-27

Thanks to Keshav!

ஆறு பொருட்களைக் கேட்ட கோதையிடம் ஒரேயொரு கேள்வியைக் கேட்டான் கரியவன்.

“விஷ்ணுசித்தன் மகளே! நோன்புக்கு வேண்டிய பொருட்களை உங்களுக்குக் கொடுத்துவிட்டேன். நீங்களும் உங்கள் முன்னோர்கள் காட்டிய வழியில் நோன்பும் நோற்பீர்கள். அந்த நோன்பினால் உங்களுக்குக் கிடைக்கும் சன்மானம்தான் என்ன?

“அரவிந்தனே! அனைவர்க்கும் அருமருந்தனே! உன்னைக் கூடாதவரையும் வென்று சேர்த்துக் கொள்ளும் கோவிந்தனே! உன்னைப் போற்றிப் பாடித் துதித்து நாங்கள் நடத்தும் நோன்பின் பலனாக இந்தப் பாரே பாராட்ட வேண்டும்.”

“என்ன! பாராட்டுக்காகவா இப்படியொரு நோன்பு?”

“ஆம். கண்ணா! என் தந்தை விஷ்ணுசித்தன் யாருக்குப் பல்லாண்டு பாடினாரோ அவனை உலகம் பாராட்டுவதே நாங்கள் பெறும் சன்மானம்.”

“அடடே! பாராட்டு எனக்கா? எப்படி என்று எனக்கும் புரியும்படி விளக்கு.”

“கண்ணா! எல்லாம் தெரிந்தும், தெரியாதது போல் கேட்பதில் மன்னா! விளங்கச் சொல்கிறேன். நாங்கள் நோன்பைத் தொடங்கிய போது ஊர் சிரித்தது. கன்றுக்குட்டியைக் கூட கட்டிப் போட முடியாத சிறுமியர் கூடி கடவுளைக் கட்டிப் போடப் போகிறார்களாம் என்று நகைத்தது. இவர்கள் இப்படியென்றால் நல்லவர்கள் எண்ணமோ வேறுவிதம். உண்டு வளரும் பருவத்தில் நெய்யுண்ணாமல் பாலுண்ணாமல் தங்களையே வருத்திக் கொள்கிறார்களே என்று வருந்தினார்கள். மலர் சூடாமலும் மை தீட்டாமலும் நோன்பிருக்கும் எங்களைக் கண்டு உருகினார்கள். நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம் என்று இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் புரிந்துகொண்டால் எங்களை மகிழ்ச்சியோடு வைத்திருக்கும் உன்னைப் பாராட்டுவார்கள்.”

“நல்லது. மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று அவர்களுக்கு எப்படிப் புரியவைப்பீர்கள்?”

”அவர்களுக்கு அவர்கள் வழியிலேயே சென்று நோன்பை முடித்துவிட்டோம் என்று புரிய வைக்க வேண்டும். முதலில் இந்தப் பாவையர் ஆபரணங்கள் அணிந்த பொற்பாவையராக வேண்டும். கைவளை, தோள்வளை, காதில் தொங்கும் தோடு, சிறிய செவிப்பூக்களாகிய கம்மல், கால்களில் அணியும் பாடகம் முதலான அணிகலன்களைப் எங்கள் மேல் பூட்டிக்கொள்வோம். புத்தாடை உடுத்தி, அதுவும் பட்டாடை உடுத்தி மகிழ்வோம்.

வெண்ணெல் அரிசியைப் பாலில் வேகவைத்து, அதோடு வெல்லம் தட்டிப் போட்டுக் கிளறி, அது முழுக மணக்கும் புத்துருக்கு நெய் ஊற்றி, அந்த நெய்யும் வழிய வழிய எடுத்து நாங்கள் அனைவரும் கூடியிருந்து உண்டு மகிழ்வோம். இப்படி நாங்கள் வயிறும் மனமும் குளிர்ந்து இருப்பதைப் பார்த்தால் ஊரார் உன்னைப் பாராட்டாமல் இருப்பார்களா? சொல் கோவிந்தா! சொல்!”

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா – உன்னோடு கூடாமல் இருப்பவரையும் அன்பால் வெல்லும் சீர் மிகுந்த கோவிந்தனே

உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் – உன்னைப் பாடிப் புகழ்ந்து நோன்பிருந்து நாங்கள் பெறுகின்ற சன்மானம்

நாடு புகழும் பரிசினால் – இந்த நாடு புகழும்படியான பரிசாக

நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே – கைவளையும் தோள்வளையும் காது-மாட்டலும் செவிப்பூவும் கால் கொலுசும்

என்றனைய பல்கலனும் யாம் அணிவோம் – மற்றைய பலவித அணிகலன்களை நாங்கள் அணிவோம்

ஆடை உடுப்போம் – புத்தாடை உடுப்போம்

அதன் பின்னே பாற் சோறு மூட நெய் பெய்து – பால் வெல்லம் இட்டுச் செய்த சர்க்கரைப் பொங்கலில் முழுகும்படி நெய் ஊற்றி

முழங்கை வழி வாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் – முழங்கை வரை நெய் வழிய அனைவரும் கூடி அருந்தி உள்ளம் குளிர்வோம்!

இதுவரை ஒவ்வொரு பாடலிலும்ம் வைகுந்தனின் பல்வேறு திருநாமங்களைப் பாடிப் பரவசித்தாள் கோதை. அத்தனை பெயர்களையும் விட்டுவிட்டு கோதை இந்தப் பாடலில் இருந்து மூன்று பாடல்கள் கோவிந்த நாம சங்கீர்த்தனம் செய்கிறாள். ஏன் கோவிந்த நாமம்?

கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நலமுடை நாரணன் தம்அன்னை நரகம் புகாள் – பெரியாழ்வார்

கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தவர்கள் நரகம் போக மாட்டார்கள். அவர்களுக்குப் எம்பெருமானின் திருவடியாகிய பரமபதம் அருளாகும். நாராயணனைப் பெற்று எடுத்த தாய்(தேவகி/யசோதை) பக்தி இல்லாவிட்டாலும் கோவிந்தா கோவிந்தா என்று தன் மகனைக் கூப்பிட்டுக் கொண்டிருந்த காரணத்தால் மட்டுமே நரகம் போகாமல் பரமபதம் போவார்கள். அப்படியிருக்க அன்போடு அழைக்கின்றவர்கள் பரமபதம் போகாமல் இருப்பார்களா!

இதுவரை நோன்பின் ஒவ்வொரு நிலையாகக் கடந்து வந்த ஆண்டாள், நோன்பு முடியும் நேரத்தில் பெரியவீடாகிய பரமபதம் கிடைக்கப் போகும் தருணத்தில் கோவிந்த நாமசங்கீர்த்தனம் செய்வது மிகப் பொருத்தமாகும். அதோடு இந்த மூன்று பாடல்களிலும் கோதை எந்தவொரு அவதார நிகழ்வுகளையும் பாடவில்லை. இன்பம். பேரின்பம். பெரும் பேரின்பம் மட்டுமே.

கூடாரை வெல்லும் என்று கோவிந்தனைச் சொல்வதிலும் செழுமை இருக்கிறது. கூடாரையும் எத்தனை விதமாக வென்றிருக்கிறான் என்று எண்ணிப் பார்த்தால் அது விளங்கும். இரண்டு வெற்றிகளை மட்டும் இப்போது சுருக்கமாகப் பார்க்கலாம்.

சத்திரியர்களை வெல்வதற்கென்றே பிறந்தவன் என்று வீறு கொண்டு அத்துணைச் சத்திரியர்களையும் மழுவீசி வென்றெடுத்தவர் பரசுராமர். சிவதனுசை எவனோ ஒரு வீரன் உடைத்துவிட்டான் என ஆத்திரம் கொண்டு அவனை அழிக்கப் புறப்பட்டு வந்தார். வந்தவர் நிலை என்ன? சிவதனுசை உடைத்த வீரனை வணங்கி தன்னிடமிருந்த விஷ்ணுதனுசையும் கொடுத்துவிட்டுப் போனார். கூடாமல் இருந்த பரசுராமனை வென்றது இப்படித்தான்.

27-1இலங்கை நகரில் பெரும் போர். அந்தப் போரில் இராவணனை வென்றான் காகுந்தன். எப்போது வென்றான்? எப்படி வெல்ல வேண்டும் என்று வீடணன் சொல்லிக் கொடுத்தபடி அம்பெய்து இராவணனைக் கொன்றபோதா வென்றான்?

இல்லை. இல்லவேயில்லை. ஆயுதங்களையெல்லாம் இழந்து வெறுங்கையோடு நின்ற இராவணனிடம் “இன்று போய் நாளை வா” என்று சொன்னபோதே வென்றுவிட்டான். யாரும் தூக்க முடியாத விஷ்ணுதனுசைத் தாங்கி பரசுராமரை வென்றது மறக்கருணை என்றால், இராவணனை வென்றது அறக்கருணை.

வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்
தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங் கையே மீண்டு போனான் – (யுத்தகாண்டம்)கம்பராமாயணம்

நாளை வா என்று இராமன் சொன்னதும் தலையைக் குனிந்து கொண்டு இராவணன் அவமானத்தோடு சென்றானாம். ஒரு தலையா? இரு தலையா? பத்துத் தலைகளையும் குனிந்து கொண்டு செல்லும் போதே தோற்றுப் போனானே இலங்கை வேந்தன். குனிந்த தலைகளிலிருந்து மணிமுடிகள் பத்தும் போர்க்களத்தில் விழுந்ததாம். மணிமுடிகள் மட்டுமா? பெருமைகள் அனைத்தையும் போர்க்களத்தின் குருதி சிந்திய மண்ணில் போட்டுவிட்டுப் போனான்.

*ஒவ்வொரு திசையிலும் காவல் நின்ற யானைகளைத் முட்டித் தள்ளி வென்ற போது விழுப்புண் கொண்ட வெற்றி மார்பு அவனுக்கு! அந்த மார்பை நிமிர்த்திக் காட்ட முடியவில்லையே!
*நாரத முனிவர் நன்று நன்று என்று பாராட்டும்படி சாமகானம் பாடிய இசை நா உடையவன். அந்த நாவால் ஒரு சொல்லும் பேச முடியவில்லையே!
*உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரிய ஈசன் அமர்ந்த கயிலை மலையையே பெயர்த்தெடுத்துச் சுமந்த தோள்கள் கொண்டவன். அந்தத் தோள்களில் திணவில்லாமல் போனதே!
*சந்திரசூடியே இராவணனின் தவத்தை மெச்சிக் கொடுத்தார் சந்திரகாசம் என்னும் வாள். அந்த வாளை வீச முடியவில்லையே!
*இத்தனை பெருமைகளோடு பத்து மணிமுடிகளையும் வீரத்தையும் போர்க்களத்தில் போட்டுவிட்டு வெறுங்கையோடு போனானே இராவணன். அப்போதே அவன் தோற்றுவிட்டானே!

இப்படியாகத் தன்னைக் கூடாதவரை அறக்கருணையாலும் மறக்கருணையாலும் வென்றெடுப்பான் கோவிந்தன்.

சரி. அவனைக் கூடாதவரை வெல்வான். கூடியவருக்கு?

கூடியவரிடம் தோற்பதே கோவிந்தனின் கருணை. கூடியவர்களுக்காக ஒவ்வொரு வகையிலும் தோற்று, அதனால் பழியைச் சுமப்பதே அவன் பெருமை.

*சுக்ரீவன் வந்து கூடினான். அவனுக்காக மறைந்திருந்து வாலி மீது அம்பெய்து தோற்றான். இன்றும் அது சரியா தவறா என்று விவாதம் நடக்கிறது.
*அருச்சுனன் வந்து கூடினான். அவனுக்காக குருஷேத்திரப் போரில் செய்யாதன செய்து கெட்ட பேரையும் பெற்றுத் தோற்றான்.

கூடாரை வெல்கின்றவனும் கூடியவரிடம் தோற்கின்றவனுமான கோவிந்தனிடம் “உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சன்மானம்” என்று சொல்வது அந்தக் கோவிந்தனையே சன்மானமாகப் பெறுவது என்பதே.

வையத்து வாழ்வீர்காள்” என்ற இரண்டாவது பாடலில் நோன்புக்கான முறைகளைச் சொல்லும் போது மையிட்டு எழுதோம் மலரிட்டு முடியோம் என்று சொன்னவள் இந்தப் பாடலில் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்று நகைகளை அடுக்கிக் கொண்டே போகிறாள். முன்பு அம்பரமே தண்ணீரே சோறே என்று வரிசைப்படுத்தியது போல இந்தப் பாடலிலும் ஏகாரத்தோடு வரிசைப்படுத்துகிறாள். அதாவது இந்த அனைத்து அணிகலன்களையும் அணிவோம் என்று சொல்கிறாள். இப்படி ஏகார விகுதிகளோடு அடுக்குவதால் ஆண்டாளுக்கு ஏகாரச் செல்வி என்றும் சிறப்புப் பெயருண்டு.

*சூடகம் என்றால் முன் கையில் அணிவது. அதாவது கைக்கடிகாரம் கட்டுவது போல. இன்றைக்கு ஆங்கிலத்தில் Bracelet என்று சொல்கிறோமே. அதுதான் சூடகம்.
*தோள்வளை என்றால் வங்கி. தோளுக்கு அருகில் அணிந்து கொள்ளும் வளையல் என்பதால் அதற்குத் தோள்வளை என்றே பெயர்.
*தோடு என்பது காதிலிருந்து தொங்குவது. தொங்கட்டான் என்று இன்று சொல்வது. தோடுடைய செவியன் என்று ஞானசம்பந்தர் பாடியிருக்கிறாரல்லவா.
*செவிப்பூ என்பது கம்மல். செவிப்பூ என்பதுதான் எவ்வளவு அழகான பெயர். காளிதாசரின் மேகதூதகத்தில் செவித்துளையில் பூவைச் செருகிக் கொண்ட பெண் பற்றிக் குறிப்பு வருகிறது. ஒருவேளை செவிப்பூ என்னும் நகையும் அந்தக் காரணத்தாலேயே அப்பெயரைப் பெற்றிருக்கலாம்.
*பாடகம் என்பது பாதங்களில் அணிவது. கொலுசு மட்டும் அல்ல. கொலுசோடு கால் பெருவிரலையும் இணைக்கும். பாதகடகம் என்பதன் மருவு பாடகம் என்றும் கருத்து உண்டு.

27நகைகளையும் புத்தாடைகளையும் அணிந்துகொண்டு சுவையான உணவை உண்பார்களாம்? ஒவ்வொருநாளும் தண்ணீர் கொதிக்கும் உலையில் அரிசி இட்டால், இந்த நாளில் பால் கொதிக்கும் உலையில் அரிசி இடுவார்களாம். அதோடு வெல்லமும் நிறைய வழிந்தோடும் அளவுக்கு நெய்யும் கலந்து உண்பார்களாம். அதுவும் அனைவரோடும் கூடிக் களித்து உண்பார்களாம். அனைவரோடும் என்பதில் கோவிந்தனும் அடக்கம் என்று ஆண்டாள் சொல்லாமல் சொல்கிறாள்.

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று இத்தனை நாட்கள் வாயைக் கட்டி இருந்த நோன்பு முடிந்ததும் இனிய சர்க்கரைப் பொங்கலை உண்டு மகிழும் போது வயிறு மட்டுமல்ல மனமும் குளிரும். திருப்பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் “நெய்யெடை நல்ல சோறும்” என்ற பாசுரத்தில் இதே போன்றதொரு காட்சியை எடுத்துச் சொல்கிறார். பாசுரத்தின் விளக்கத்தை இந்தச் சுட்டியில் காணலாம்.

இன்றைய நாள் கூடாரைவல்லி என்று கொண்டாடப்படுகிறது. அக்காரவடிசில் சிறப்பாகப் பொங்கப்பட்டு அனைவரோடும் கூடி உண்ணவும்படுகிறது.

இந்த நாளில் அனைவரின் வாழ்விலும் இன்பம் பெருக ஆண்டாள் வழிகாட்டட்டும்.

Paavai-27அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

One Response to 27. வெல்லம் கொண்ட உள்ளம் வெல்லும்

  1. amas32 says:

    இன்று வேளுக்குடி உபன்யாசத்துக்குப் போயிருந்தேன். அங்கே அவர் ஆண்டாளைப் பற்றி சொல்லும் பொழுது நோன்பிருக்கும் போது ஆண்டாளுக்கு ஆறு வயது என்றார். முன்பே இது தெரிந்திருந்தாலும் எனக்கு மறந்து விட்டது. கேஷவ்வின் ஓவியங்களில் ஆண்டாள் அந்த ஆறு வயது சிறுமியாகத் தானே இருக்கிறாள் :-} அந்த இள வயதில் என்ன ஒரு ஞானம் அவளுக்கு!

    கூடிக் கொண்டாடுவோம் கூடாரவல்லியை :-}

    amas32

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s