28. இரை வாயோடு உன்னை இறைவா என்போம்

Keshav-28

Thanks to Keshav!

“கோதை, நீ சொல்வது கேட்க நன்றாக இருக்கிறது. நீங்கள் நகை அணிந்து கொண்டு.. நீங்கள் புதுப்பட்டாடை உடுத்திக் கொண்டு.. நீங்கள் அருஞ்சுவைப் பொங்கல் உண்டு கொண்டு இருந்தால், ஊராரும் உலகோரும் என்னைப் பாராட்டுவார்களோ! ஒருவேளை உங்கள் உள்ளம் நகை உடை உணவு என்று உலக இன்பங்களையே மீண்டும் நாடுகிறதோ? அதற்கான வரத்தைத்தான் பறை பறை என்று என்னைப் பறையச் சொன்னீர்களா?”

சோதிக்கும் சோதியே! ஒன்று இல்லாதவனே!

“இதென்ன புதுப்பட்டம்? ஒன்று இல்லாதவன்! என்னை விட்டுத் திருமகள் நீங்கிய போது ஒன்றும் இல்லாதவன் என்றார்கள். பாற்கடலில் இருந்து திருமகள் மீண்டும் வந்து சேர்ந்த போது என்னிடம் எல்லாம் திரும்ப வந்துவிட்டன என்று நினைத்தேன். ஆனால் நீ ஒன்று இல்லாதவன் என்கிறாய். அந்த ஒன்று எது?”

நீ அறியாதது என்று ஒன்று இல்லாதவனே!

“ஓ! அந்த ஒன்றா! சரி. மேலே சொல்.”

“அனைத்தும் அறிந்தும் என்னையும் புரிந்தும், என் இதயத்தில் இருப்பதை இதழ் மொழிந்து சொல்லக் கேட்க விரும்பும் உன் ஆசைக்காகச் சொல்கிறேன். நன்றாகச் செவிகளால் கேட்டுக்கொள்.

நாங்கள் ஆயர் சிறுமிகள்.  காலையில் மாடுகளை காட்டுக்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதுதான் வேலை. அந்த மாடுகள் போகும் இடமெல்லாம் பின் சென்று, மாடுகள் உண்ணும் அந்தக் காட்டுக்குள்ளேயே நாங்களும் உண்போம். மாலை கருக்கும் முன்னம் மீண்டும் மாடுகளை ஊருக்குள் தொழுவங்களுக்கு ஓட்டி வருவோம். பிறகு உறக்கம். அடுத்தது அடுத்தநாள்.

இதைத்தவிர எங்களுக்கு வேறு எந்த அறிவும் கிடையாது. கோ(பசு) திறம் அறிந்த எங்களுக்கு கோத்திரமும் சாத்திரமும் தெரியாது. பொழுது விடிந்து பொழுது போனால் இப்படித்தான் போகிறது எங்கள் வாழ்க்கை. இப்படிக் காலங்காலமாக உண்டு வாழ்ந்து மடிந்துகொண்டிருக்கும் ஆயர் குலத்தில் நீ வந்து பிறந்தாய் என்ற ஒரேயொரு புண்ணியம் மட்டுமே எங்களுக்கு உண்டு.”

“அதாவது நீங்கள் ஒன்று உடையவர்கள்.”

“ஆம். ஒன்று உடையவர்கள். உன்னோடு உறவு என்று ஒன்று உடையவர்கள். குறைகள் என்று ஒன்று இல்லாதவனே! கோவிந்தனே! உன்னாலும் ஒன்று முடியாது!

ஒன்று உடையவர்கள் ஒன்று இல்லாதவனிடம் ஒன்று முடியாது என்று சொன்னார்கள். ம்ம்ம். புதிர்க் கணக்குக்கு நீயே விடையைச் சொல்லிவிடு கோதை.”

“கோவிந்தா! ஒன்று ஒன்று என்று சொல்லும் போதெல்லாம் எங்களோடு ஒன்று என்று உன்னைக் கேட்பதாகத்தானே பொருள். அப்படி உன்னோடு நாங்கள் ஒன்றிய உறவை இல்லை என்று உன்னால் மறுக்கவோ அழிக்கவோ முடியாது. அந்த ஓன்று உன்னாலும் முடியாது.

அப்படியான அன்பு உறவின் அடிப்படையில் அறியாத பிள்ளைகளான நாங்கள் உலகத்தின் தாயான உன்னைத் திட்டியிருக்கிறோம். கோவித்திருக்கிறோம். மறுத்துப் பேசியிருக்கிறோம். இனி எங்களோடு பேசாதே என்றும் சொல்லியிருக்கிறோம். உன்னையே வேண்டாம் என்றும் வெறுத்திருக்கிறோம். நீயெல்லாம் தெய்வமா என்று சபித்திருக்கிறோம். அதற்காக நீ எங்களிடம் எதுவும் கோவித்துக் கொள்ளாதே! நாங்கள் தாங்கிக் கொள்ள மாட்டோம். கன்றுகள் முட்டினால் கொம்பை முறிப்பவன் நல்ல ஆயனாக மாட்டான். நீ நல்ல ஆயன்.

இறைவா! உன்னோடு என்றும் ஒன்றும் அந்தப் பேரின்பத்தை எங்களுக்கு அருளமாட்டாயா!”

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றுமில்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றுமில்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் – (பகலில்) மாடுகளைக் காட்டுக்கு ஓட்டிச் சென்று அங்கேயே உண்போம்
அறிவு ஒன்றுமில்லாத ஆய்க் குலத்து – (அப்படிப்பட்ட) அறிவில்லாத ஆயர் குலத்தில்
உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் – (ஆயர் குலத்தில்) நீ பிறந்த புண்ணியம் மட்டுமே எங்களிடம் உள்ளது

குறை ஒன்றுமில்லாத கோவிந்தா – எந்தக் குறையும் சொல்ல முடியாத கோவிந்தனே
உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது – உனக்கும் எங்களுக்கும் உள்ள உறவை உன்னால் அழிக்கவே முடியாது

அறியாத பிள்ளைகளோம் – நாங்கள் அறியாத சிறுபிள்ளைகள் போன்றவர்கள்
அன்பினால் உந்தன்னை சிறு பேர் அழைத்தனமும் – (நீ எங்கள் மேல் வைத்திருக்கும்) அன்பின் மிகுதியால் உன்னை திட்டியிருக்கிறோம் வைதிருக்கிறோம்
சீறி அருளாதே – அதற்காக நீ எங்கள் மீது கோவித்துக்கொள்ளாதே!

இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய் – இறைவா! உன்னுடைய திருவடியில் ஒன்றியிருக்கும் அந்தப் பேரின்பத்தை எங்களுக்குத் தருவாய்!

இரண்டாவது கோவிந்த நாம சங்கீர்த்தனமான இந்தப் பாடலில் ஆண்டாள் இரண்டு விஷயங்களை தெள்ளத்தெளிவாகப் புரிய வைத்திருக்கிறாள்.
1. கல்வியின் பெருமையை வைத்து இறைவனை அடைய முடியாது
2. இறைவனோடு நமக்கு இருக்கும் உறவை இறைவனாலும் அழிக்க முடியாது

முதலில் இறைவனை அடைவதற்கு அன்பு மட்டும் போதும் என்று தன்னுடைய வாழ்க்கையையே எடுத்துக்காட்டிப் புரியவைக்கிறாள். “அறிவு ஒன்றுமில்லாத ஆய்க்குலம்” என்று சொல்வது அதைத்தான் குறிக்கிறது.

அப்படியானால் ஆயர்கள் அறிவில்லாதவர்களா? மாடுகளைப் பேணிக்காப்பதிலும் பால் பொருட்களைச் சிறப்பாக உண்டாக்குவதிலும் அவர்களை விட யாருக்கு அறிவிருக்க முடியும்? ஆக.. ஆண்டாள் சொல்லும் இல்லாத “அறிவு” எது?

இந்த இடத்தில் அறிவு என்று குறிப்பிடப்படுவது இறைவனிடம் கொண்டு சேர்ப்பதாகக் கருதப்படும் வேதங்கள், ஆகமங்கள், சாத்திரங்கள் மற்றும் பல உரைநூல்களைக் கற்று வரும் தத்துவஞானம். அப்படி எதுவும் அந்தக் கோவலர்களுக்கும் இல்லை. ஆண்டாளுக்கும் இல்லை. அவர்களுக்கு இருந்ததெல்லாம் நம்மாழ்வார் சொல்லும் “பொய் நின்ற ஞானம்”. அதாவது காலை எழுவது, எழுந்து புறப்பட்டு மாடுகளை மேய்ப்பது, அங்கேயே காட்டில் உண்பது, மாலையில் வீட்டுக்கு வருவது, உண்டு உறங்குவது, மறுபடியும் மறுநாள் காலை எழுவது என்று வாழ்க்கையை ஓட்டுவதற்கு மட்டும் தேவையான அறிவு. அதனால்தான் “அறிவில்லாத ஆயர்குலம்” என்றாள்.

அறிவில்லாத ஆயர்குலம் என்று தன்னை அறிவில்லாதவளாகக் காட்டிக் கொள்வதே அபிமான பங்கம். மெய்ஞானத்தின் மேல் ஈடுபாடு வருகையில் அபிமான பங்கமும் வரவேண்டும். ”அம் கண் மாஞாலத்து அரசர்” என்ற பாடலிலேயே அபிமான பங்கத்தோடு தான் வந்திருப்பதைச் சொன்ன கோதை, இந்தப் பாடலில் அதைச் செயலில் காட்டுகிறாள். இறையன்பு வரும் போது பணிவு வர வேண்டும். பணிவு இல்லாத மெய்யன்பு பொய்யன்பே ஆகும்.

நான் ஒரு டாக்டர்” என்று பெருமையாகச் சொல்லும் போது தான் ஒரு பொறியாளரோ வழக்குரைஞரோ கணக்காயரோ இல்லை என்பது உறுதியாகிறது. ஆகையால் வீண்பெருமை பேசக்கூடாது. நமக்கு ஒன்றும் தெரியாது என்பது புரியும் போதுதான் மெய்யறிவு வரத்தொடங்கும்.

இந்தப் பணிவு என்னும் பெருமந்திரத்தை மற்ற ஆழ்வார்களுமே சொல்லியிருக்கிறார்கள். ”கற்றிலேன் கலைகள்! ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை” என்று பெரிய திருமொழியில் பாடியிருக்கிறார் திருமங்கையாழ்வார். சாத்திரங்கள் எனப்படும் கலைகள் எதையும் கற்கவில்லையாம். ஐம்புலன்களும் நுகரும் இன்பத்தில் மனத்தைச் செலுத்தியிருந்தாராம்.

தனக்கு அறிவில்லை என்று சொல்வது மட்டுமல்ல.. ஏதோவொரு வகையில் தன்னுடைய குறையை வெளிச்சொல்லியிருக்கிறார்கள். திருமங்கையாழ்வார் இன்னொரு பாசுரத்தில் “ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர்ப் பணைமுலை துணையா(ய்) பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்” என்று கதறுகிறார். ஒரு நாளா இரண்டு நாட்களா? சிற்றின்ப மோகத்தில் எத்தனையோ நாட்கள் தன் உள்ளம் பழுதுபட்டுப்போய் இருந்ததை எண்ணி வருந்துகிறார்.

வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனாகிய நம்மாழ்வார் சாம வேதத்தின் சாரமாக திருவாய்மொழி பாடும் பொழுது என்ன சொல்கிறார் தெரியுமா?

உண்ணிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலா பெருமாயனே! இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்று உடை
அண்ணலே! அமுதே! அப்பனே! என்னை ஆள்வானே!

நம்மாழ்வாரே சிற்றின்பத்தின் பால் செல்கின்ற தன்னுடைய சிறுமையைச் சொல்லித் தன்னை தாழ்த்திக் கொள்கிறார் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?

தொண்டரடிப்பொடியாழ்வாரும் தான் பாடிய திருமாலையில் ”மனத்திலோர் தூய்மையில்லை”, ”மெய்யெல்லாம் போகவிட்டு” என்று பணிவு பயில்கிறார்.

ஆக, இறைவனிடம் நம் கற்ற கல்வியின் பெருமையோ, பெற்ற செல்வத்தின் செழுமையோ, உற்ற வீரத்தின் திறமையோ செல்லாது. அன்பும் பணிவும் மட்டுமே செல்லும்.

ஆதிமூலமே என்று யானை ஒன்று அழைத்த போது வேதங்களைப் படித்துத் தெளிந்தா அழைத்தது? ஆனால் வைகுந்தன் ஓடி வந்தானே!

தேவகியும் அசோதையும் எந்த வேதம் ஓதினார்கள்? ஆனாலும் பாற்கடல் பத்மனாபன் அவர்களிடம்தான் பிள்ளையானான்!

ஆயர்ப்பாடியின் பசுக்கள் எந்த நூல் கற்றுச் சிறந்தன? ஆனால் அந்தப் பசுக்கள்தான் கோவிந்தன் குழல் கேட்டு உய்ந்தன!

அவை நடுவே மானம் போகும் போது திரவுபதி எந்தச் சாத்திரத்தின் அடிப்படையில் பூசித்து அழைத்தாள்? ஆனால் கிருஷ்ணன் வந்தானே!

ஆக.. இறைவனை அடைவதற்கு உண்மையான அன்பு மட்டும் போதும். அந்த அன்பு இல்லாவிட்டால் எந்தெந்த வழியில் முட்டி மோதினாலும் பரமபதம் கிடைக்காது.

இரண்டாவதாக இறைவனோடு நமக்கு இருக்கும் உறவை இறைவானாலும் அழிக்க முடியாது என்று புரிய வைக்கிறாள். “உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது” என்று சொல்வது அதைத்தான்.

பெற்ற தாய்தந்தையர் குழந்தையைப் பார்த்து “இனி நீ என் பிள்ளையே இல்லை” என்று விலக்கலாம். அல்லது பிள்ளைகள் பெற்ற தாய்தந்தையரை ஒதுக்கலாம். அப்படியெல்லாம் ஒதுக்கினாலும் இன்னாரின் பிள்ளைதான் இன்னார் என்பதை மாற்ற முடியாது. மனிதப்பிறபிவியிலேயே இப்படியிருக்க… எல்லா உலகத்துக்கும் தாயும் தந்தையுமான பரவாசுதேவனோடு நமக்கு உள்ள உறவை அழிக்க முடியுமா? அது அந்த கோவிந்தனாலும் முடியாது.

நமக்காக எப்போதும் இருக்கக் கூடிய ஒரே பொருள் அந்தப் பரம்பொருள் மட்டுமே!

இந்த இரண்டையும் புரிந்து தெளிந்து கொண்டால் நமக்கு இனிமேல் அச்சமே இருக்காது. புரிதல் எளிது. தெளிதல்?

தெளிய வைப்பது இறைவனால் மட்டுமே முடியும். அதனால்தான் இதுவரை சொன்ன அத்துணைப் பெயர்களையும் மறந்துவிட்டு ”இறைவா” என்றழைத்து “நீ தாராய் பறை” என்று கேட்கிறாள்.

இந்தப் பாடலில் இன்னொரு நயம் உள்ளது.

அறிவு ஒன்றுமில்லாத ஆய்க்குலம்” என்று தன்னை ஆண்டாள் அழைத்துக் கொள்ளும் போது கண்ணனுக்கு மெய்யறிவு இருக்கிறது என்று பொருள். “உன்னிடம் இருக்கும் மெய்யறிவைத் தருவாய்” என்று கேட்பதாக அமையும்.

நீ எங்களிடம் வந்ததால் “புண்ணியம் யாம் உடையோம்” என்று அவள் பெருமைப் பட்டுக்கொள்ளும் போது கிருஷ்ணனுக்குச் சிறுமை உண்டு என்று சொல்கிறாள். ”எங்கள் குலத்தில் வந்து சேர்ந்த நீ, உன்னோடு இன்னும் எங்களைச் சேர்த்துக்கொள்ளவில்லையே” என்று சிறுமை பேசுகிறாள்.

குறை ஒன்றுமில்லாத கோவிந்தா” என்று சொல்லும் போது “உன்னோடு இன்னும் கலந்து விடாமல் இருக்கும் தனியாக இருக்கும் குறை எங்களுக்கு உண்டு” என்கிறாள் கோதை.

உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது” என்று சொன்னாலும் “நீ அருளாவிட்டால் நாங்கள் ஒழிந்து போவோம்” என்று எதிர்மறையாகச் சொல்லி நாராயணனுக்குப் புரிய வைக்கிறாள் நாச்சியார்.

Paavai-28************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
கானம் – காடு, கான்
உறவேல் – உறவு
ஒழியாது – அழியாது
************************************************************************************************************************
தனக்கு ஒன்றும் தெரியாது என்று தங்களது அறிவின்மையை ஆழ்வார்கள் பாடியது போலவே மற்ற சமயங்களிலும் பாடியிருக்கிறார்கள். சைவம் சமணம் பௌத்தம் என்று எதை எடுத்துப் பார்த்தாலும் அப்படித்தான்.

இதே போன்ற ஒரு கருத்தை அருணகிரிநாதரும் திருப்புகழில் சொல்கிறார்.
வாசித்துக் காணொணாது பூசித்துக் கூடொணாதது (திருச்சீராப்பள்ளி திருப்புகழ்)
மெய்யருளை எந்த நூல்களில் படித்து அறிந்த அறிவால் அடைய முடியாது. நாள் தோறும் பூசனைகள் செய்து மட்டும் அடைய முடியாது.
நாலான வேத நூல் ஆகம் ஆதி நான் ஓதினேனும் இலை (விராலிமலை திருப்புகழ்)
நான்கு என்று வகைப்படுத்தப்பட்ட வேதங்களையும் ஆகமங்களையும் மற்ற பிற நூல்களையும் நான் கற்றவனில்லை. ஆனாலும் வீணாக நாட்களைக் கடத்திக்கொண்டிருக்காமல் உடனடியாக எனக்கு மெய்ஞான உபதேசம் அருள்வாயே!
ஆதாளியை ஒன்று அறியேனை அறத்தீதாளியை ஆண்டது செப்புமதோ (கந்தர் அனுபூதி)
வீண்பேச்சு பேசிக் கொண்டு திரிந்த என்னையும் ஒன்றும் அறியாத என்னையும் நன்மைகளை அறியாத என்னையும் ஆட்கொண்ட முருகப் பெருமானே! உன்னுடைய அன்பைச் சொல்ல முடியுமா!

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

3 Responses to 28. இரை வாயோடு உன்னை இறைவா என்போம்

 1. தூய்மையான இதயமே கோயில், அதில் பொங்கிப் பெருகும் அன்பே கடவுள். இதுவரையில் நான் படித்துள்ள திருப்பாவை விளக்கங்கள் அனைத்தையும்விட உங்கள் பதிவுகள் தரும் விளக்கங்கள் தெய்விக உணர்வை ஏற்படுத்துகிறது. கேசவ் அவர்களின் ஓவியங்களும் அதற்குத் துணை நிற்கிறது. வாழ்க, வளர்க.

  • GiRa ஜிரா says:

   மிக்க நன்றிமா. என் செயலாவது ஒன்றுமில்லை. யாம் ஓதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால் எழுதிய எழுத்து. என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை இந்த விளக்கங்களில் சேர்க்க விரும்பாத உள்ளத்தைக் கொடுத்த முருகனுக்கு நன்றி.

 2. amas32 says:

  இன்றைய பாசுரத்தில் ஒவ்வொரு வரியும் முத்தும், மாணிக்கமும் மரகதமுமாக உள்ளது.
  //குறை ஒன்றுமில்லாத கோவிந்தா – எந்தக் குறையும் சொல்ல முடியாத கோவிந்தனே
  உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது – உனக்கும் எங்களுக்கும் உள்ள உறவை உன்னால் அழிக்கவே முடியாது//

  இந்த வரிகள் முப்பது பாடல்களின் சாரத்தையும் சொல்லிவிடுகிறது என்று நினைக்கிறேன்.

  amas32

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s