30. மால் ஐ சூடும் தமிழ் மாலை

Keshav-30

Thanks to Keshav!

“கோதை, நீங்கள் கேட்டதெல்லாம் நான் கொடுத்தேன்!” கண்ணன் அருள் கோதையர்க்குப் பூரணமானது.

”மணிவண்ணா! எங்கள் எண்ணப்படி நடக்கும்படி நீ பறைந்தபடியால் எங்கள் உள்ளப்படி பேரின்பத்தால் நிறையும்படி ஆனது.

வேட்கை என்னும் கடலில் மனம் என்ற தோணியேறி இன்பம் துன்பம் என்னும் அலைகள் மோதும் போது விதி என்ற காற்று திசைதிருப்பித் தவிப்பதே எங்கள் மானிட வாழ்க்கை. அப்படித் தத்தளிக்கும் போது துடுப்பாக வந்த நீ கடுப்பான துயர்களுக்கெல்லாம் தடுப்பாக நின்றாய்.

ஒவ்வொரு பிறவியிலும் இருவிழி காணும் காட்சிகளால் முக்காலமும் இழுக்கப்பட்டு, நாற்குணமும் சிதைந்து ஐம்புலன்களால் சிற்றின்பங்களை அள்ளிப்பருகும் போது ஆறுதலாக வந்தவனே ஏழுமலையானே வேங்கடவா! உன்னால் நாங்கள் உன்னை நினைத்து உன்னையே அடைந்தோம்! யான் பெற்ற கருணையை உலகம் தான் பெற்று உய்ய பெம்மான் சற்று அருள் செய்ய வேண்டும்!”

“கோதை! நீ பாடிய இந்த முப்பது பாடல்களையும் உள்ளன்போடு பாடுகின்றவர்களுக்கு என் கருணை முழுதாகும்!”

வைகுந்தவாசன் பாசம் மிகுந்து சொன்னதும் நேசம் நிறைந்த கோதை அவனை வணங்கிவிட்டு திரும்பினாள். மற்ற தோழியரும் கோதையோடு புறப்பட்டார்கள்.

”பாவையரே! என்ன திடீரென்று?”

“மாயனே! இந்தப் பாவைப் பாடல்களை உள்ளன்போடு யார் பாடினாலும் கருணை செய்வதாகச் சொன்னாயே! அதை எல்லோருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டாமா? அதற்காகத்தான் புறப்பட்டோம். நீ எங்களுக்குக் கொடுத்த வரத்தின்படி நாங்கள் எங்கிருந்தாலும் எப்படியிருந்தாலும் உனக்கே ஆளாவோம். நீ எமக்கே நீங்காத உறவாவாய்! ஆகையால் நாங்கள் உன்னோடுதான் புறப்படுகிறோம். புறப்படலாமா?”

மறுப்பானா பொறுப்பான கண்ணன்!

ஆயர்ப்பாடியிலிருந்து மாயவனோடு திரும்பிய கோதை வில்லிபுத்தூர் மக்களையெல்லாம் அழைத்து கண்ணன் கருணையை எடுத்துச் சொன்னாள்.

“வடமலையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி அன்றொருநாள் பாற்கடல் கலங்கக் கடைந்தான் பரந்தாமன். அந்த மாதவனைக் கேசவனை, முழுநிலவினைப் போன்ற ஒளி வீசும் திருமுகம் கொண்ட ஆயர் குலப் பெண்களாகிய நாங்கள் தேடிச் சென்று இறைஞ்சித் துதித்து பேரருள் கொண்டோம்.

அழகு மிகுந்த வில்லிபுத்தூரில் குளிர்ந்த தாமரை மலர்களை மாலையாகக் கட்டி இறைத்தொண்டு செய்யும் விஷ்ணுசித்தர் மகளாகிய இந்தக் கோதை, வாசுதேவனின் அருள் என்னும் பெரும்பொருளை அங்கு அப்போது பெற்றுக் கொண்ட வழிமுறையை இங்கு இப்போது உங்களுக்குப் பரிசாகத் தருகிறேன். நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். சங்கம் செழித்த தமிழ் மொழியில் பாடிக் கொடுத்த பாமாலை முப்பதும் உள்ளன்போடும் உறுதியோடும் நல்லெண்ணத்தோடும் பாடுகின்றவர்கள் அனைவரும் மலை போன்று உயர்ந்த தோள்களையும் மலர் போன்று சிவந்த விழிகளையும் கொண்ட திருமுகத்துச் செல்வத் திருமாலின் கருணையால் எப்போதும் திருவருள் பெற்று இன்புறுவர்! வாழி வாழி எம்பாவாய்!

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் – தோணி செல்லும் பாற்கடலைக் கடைந்த மாதவனைக் கேசவனை

திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நிலவு போலப் பொலியும் திருமுகம் கொண்ட ஆபரணங்கள் அணிந்த சிறுமியர்கள் சென்று வேண்டித் துதித்து

அங்கு அப்பறை கொண்ட ஆற்றை – அங்கு அப்பறை(திருவருள்) கொண்ட வழிமுறையை

அணி புதுவைப் பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன – அழகான திருவில்லிபுத்தூரில் குளிர்தாமரை மலர்மாலைத் தொண்டு செய்த விஷ்ணுசித்தன் மகளாகிய கோதை சொன்ன

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே – சங்கத் தமிழ்மாலையாகிய திருப்பாவையின் முப்பது பாடல்களையும் குறைவின்றிப் பாடுகின்றவர்களுக்கு

இங்கு இப்பரிசு உரைப்பார் – இங்கு இப்போது பரிசு கிடைக்கும்

ஈரிரண்டு மால் வரை தோள் – நான்கு மலைகளைப் போன்று உயர்ந்த தோளை உடையவனும்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் – (செந்தாமரை மலர் போல) சிவந்த கண்களைக் கொண்ட திருமுகத்தானாகிய செல்வத் திருமாலின் கருணையால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் – எங்கும் எப்போதும் திருவருள் பெற்று இன்புறுவர்! எம் பாவையரே!

பாற்கடலைக் கடையக் காரணமாகித் திருமகளை அடைந்த மாதவா! கேசவா! வைகுந்தா! வாசுதேவா! பரந்தாமா! முழுநிலவினைப் போன்ற ஒளி வீசும் திருமுகம் கொண்ட ஆயர் குலப் பெண்களாய் நாங்கள் கூடி உன்னைத் தேடிப் புகழ்ந்து வந்தோம்!

வங்கக் கடல் என்றதும் வங்காள விரிகுடாவை நினைத்துக் கொள்ளக் கூடாது. வங்கம் என்றால் தோணி என்று பொருள். தோணிகள் ஓடும் பாற்கடல் என்பதே வங்கக் கடல்.

அட… பாற்கடலில் கப்பல் ஓடுகிறதா என்ன? அந்தக் கப்பல் எந்தக் கப்பல் என்று இன்னொரு பாசுரத்தில் ஆண்டாள் விளக்கியிருக்கிறாள்.

என்பு உருகி இன வேல்நெடுங்கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல்புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்

”எலும்புகள் உருகிக் கொண்டிருக்கின்றன. சிறந்த வேல் போன்ற நெடுங்கண்கள் இமை மூடாமல் பல நாட்கள் துன்பக் கடலில் புகுந்தேன். துன்பக் கடலில் இருந்து என்னைக் கரையேற்ற வைகுந்தன் என்னும் தோணி கிடைக்காமல் உழல்கின்றேன்” என்கிறாள் கோதை.

துன்பக் கடலில் சிக்கித் தவிக்கும் நமக்காகக் கப்பலோட்டிய கடவுள் வைகுந்தன். துன்பத்தில் உழல்கின்ற அடியவர்களைக் காப்பதற்காக கப்பலாக வரக் கொண்ட அந்த மாதவனைக் கேசனவை இந்தப் பாசுரத்தின் முதல் வரியில் பாராட்டுகிறாள். “பிறவிப் பெருங்கடல் நீத்துவர் நீத்தார் இறைவனடி சேராதவர்” என்று வள்ளுவர் சொல்லும் கருத்தையே கோதையும் சொல்கிறாள்.

30தெரியல் என்பது முடி போடாத மாலை. தாமரை மலர்களை முடி போடாதத் தெரியலாகக் கோத்து வில்லிபுத்தூரிலுள்ள வடபத்ரசாயிக்கு மலர்த்தொண்டு செய்து வந்தார் விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வார். அந்தப் பெரிய ஆழ்வாரின் மகள் கோதை என்று திருப்பாவையில் கையொப்பம் இட்டுக்கொள்கிறாள் கோதை. வேறு எந்த ஆழ்வாரும் செய்யாதது இது. உறவுகளை எல்லாம் விட்டுவிட்டு இறைவனையே விரும்பி நாடிய ஆழ்வார்கள் உறவுமுறைகளைக் குறிப்பிடாமல் இருந்ததில் வியப்பில்லை. அப்படியிருக்க கோதை மட்டும் அதைச் சொல்லிக் கொண்ட காரணம் என்னவாக இருக்க முடியும்? உறவு என்று பெற்றவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் உறவே இல்லாத அவர் வந்து ஒட்டிக்கொண்டவர் அல்லவா அவர். தந்தையாக மட்டும் இல்லாமல் தனக்கு ஆச்சாரியனாகவும் இருந்த அவருடைய அன்பை அவள் போற்றாமல் இருந்தால்தான் வியக்க வேண்டும்.

திருமாலின் தோளைக் குறிப்பிடுகையில் ஈரிரண்டு மால் வரைதோள் என்றாள். அதாவது நான்கு மலைகளைப் போன்ற தோள்கள். அடியவர்கள் அபயம் என்று கோரும் போது நான்கு கைகளாலும் தூக்கி எடுத்துக் காப்பாற்ற வருவானாம் அந்தக் கோவிந்தராஜன்.

சங்கத் தமிழ் மாலை என்று திருப்பாவையை கோதை சொன்னதிலும் சிறப்புள்ளது. பரவாசுதேவனின் கருணையைப் பெறுவதற்கு தெரிந்த தாய்மொழியே போதும் என்பது மட்டுமல்ல காரணம். மாரி கழிந்து நீராடும் பண்டைத் தமிழ் தைந்நீராடல் வழக்கத்தை ஒட்டியே நோன்பை அமைத்திருப்பதும் காரணம். அதோடு இன்னொரு காரணமும் இருப்பதாகத் தோன்றுகிறது. அந்தக் காரணத்தைப் பார்ப்பதற்கு முன்பு திருப்பாவையில் கோதை வைகுந்தனை அழைத்த பெயர்களையெல்லாம் ஒருமுறை பார்க்கலாம்.

01. மார்கழித் திங்கள் – நாராயணனே நமக்கே பறை தருவான்
02. வையத்து வாழ்வீர்காள் – பையத் துயின்ற பரமனடி பாடி
03. ஓங்கி உலகளந்த – உலகளந்த உத்தமன் பேர் பாடி
04. ஆழிமழைக் கண்ணா – பாழி அம் தோளுடைய பற்பநாபன்
05. மாயனை மன்னு – மாயனை, குடல் விளக்கம் செய்த தாமோதரனை
06. புள்ளும் சிலம்பின – புள்ளரையன் கோயிலில்(புள்ளரையன் என்பது கருடனைக் குறிக்கும்)
07. கீசு கீசென்று – நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்
08. கீழ்வானம் வெள்ளென்று – மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதிதேவனை
09. தூமணி மாடத்துச் சுற்றும் – மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
10. நோற்றுச் சுவர்க்கம் – நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
11. கற்றுக் கறவைக் கணங்கள் – முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட
12. கனைத்து இளம் கற்றெருமை – மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ
13. புள்ளின் வாய் கீண்டானை – புள்ளின் வாய் கீண்டானைப்
14. உங்கள் புழைக்கடைத் – பங்கயக் கண்ணானைப் பாடேலோர்
15. எல்லே இளம் கிளியே – மாயனைப் பாடேலோர் எம்பாவாய்
16. நாயகனாய் நின்ற – மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
17. அம்பரமே தண்ணீரே சோறே – ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே
18. உந்து மதக் களிற்றன் – நப்பின்னையைச் சுட்டும் பாடல்
19. குத்துவிளக்கெரிய – நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா
20. முப்பத்து மூவர் – கப்பம் தவிர்க்கும் கலியே, வெப்பம் கொடுக்கும் விமலா
21. ஏற்ற கலங்கள் – உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே
22. அம் கண் மா ஞாலத்து – நேரடிச் சுட்டு. எந்தப் பெயரும் குறிப்பிடவில்லை.
23. மாரி மலை முழைஞ்சில் – பூவைப்பூவண்ணா உன் கோயில் நின்று
24. அன்று இவ்வுலகம் – கல்யாண குணங்களுக்கே மங்களாசாசனம்
25. ஒருத்தி மகனாய்ப் – நெருப்பென்ன நின்ற நெடுமாலே
26. மாலே மணிவண்ணா – மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
27. கூடாரை வெல்லும் – சீர் கோவிந்தா உன் தன்னைப்
28. கறவைகள் பின் சென்று – குறையொன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
29. சிற்றம் சிறுகாலே – இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
30. வங்கக் கடல் – மாதவனை கேசவனை, செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

இப்படி ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு திருப்பெயர்களையும் அவதார நிகழ்வுகளையும் கல்யாண குணங்களையும் குறிப்பிட்டவள், பரமபதம் அடையும் போது திருமால் என்னும் தமிழ்ப் பெயரில் திருவைகுந்தனை அழைப்பதால் திருப்பாவைப் பாடல்களை சங்கத்தமிழ்மாலை என்று குறிப்பிட்டதாகவும் கொள்ளலாம்.

இதில் இன்னொரு நயமும் இருக்கிறது. சங்கத் தமிழ் மாலை என்பதை சங்கம் + தமிழ் + மால் + ஐ என்றும் பிரிக்க முடியும். ஐ என்றால் தலைவன். இந்த நயப்படி பார்த்தால் கடைசிப் பாடலில் மால் என்ற பெயரை இரண்டு முறை பயன்படுத்தியிருக்கிறாள் என்றும் சொல்லலாம்.

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலாலால் எல்லோரும் எல்லா வளமும் நலமும் அருளும் பெற்று வாழ்வாங்கு வாழ்வீர்களாக!

Paavai-30************************************************************************************************************************
அருஞ்சொற்பொருள்
வங்கம் – தோணி
சேயிழையார் – சே + இழையார் = அழகிய அணிகலன்களைப் பூட்டிக் கொண்ட பெண்கள்
இறைஞ்சி – கெஞ்சி/வேண்டி
பைங்கமலம் – பை + கமலம் = மலர்ந்த தாமரை
தண் – குளிர்ந்த
தெரியல் – முடி போடாத மாலை
மால் – மலை
************************************************************************************************************************
முடிவாய் என்னுரை

வில்லிபுத்தூர் விஷ்ணுசித்தன் கோதையின் சங்கத்தமிழ்மாலையான திருப்பாவை பாடல்களுக்கு விளக்கம் எழுதக் கிடைத்த பெரும் பேற்றுக்கு கோதைக்கும் திருமாலுக்கும் நன்றி. எழுதத் தமிழ் தந்த என்னப்பனுக்கும் நன்றி.

தூண்டுதலாக இருந்தும், வேண்டிய போது வேண்டிய விளக்கங்களைத் தந்துதவியும், வலைப்பதிவில் பின்னூட்டங்கள் இட்டும் என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கு நன்றி!

ஒவ்வொரு நாளும் திருப்பாவைப் பாடல்களைப் படித்து இரசித்த தமிழ் ஆர்வலர்களுக்கும் ஆன்மிக ஆர்வலர்களுக்கும் மிக்க நன்றி!

தன்னுடைய ஓவியங்களை மிகுந்த பெருந்தன்மையோடு இந்தப் பதிவுகளில் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்த ஓவியர் கேசவ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி! திருப்பாவையைத் தெரிந்து தெளிந்து அவர் வரைந்த ஓவியங்கள் பதிவைச் செழுமைப் படுத்தின என்பது மறுக்க முடியாத உண்மை.

திருப்பாவைப் பாடல்களுக்கு விளக்கம் சொல்லும் போது ஏதேனும் குற்றம் குறைகள் இருந்தால் அதற்காக மனமார மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என் செயலாவது ஒன்றும் இல்லை. கோதை அழைத்துச் சென்ற வழியில் போனேன். அன்புடன் ஜிரா என்று நான் போட்டுக் கொள்வது கூட ஒருவகையில் தவறுதான்.

பலவிதமான விளக்கங்களைப் படித்தே எழுதினாலும், திருப்பாவை விளக்கங்களில் என்னுடைய கருத்துகளைத் திணிக்க விரும்பவில்லை. சில இடங்களில் இரண்டு மூன்று விளக்கங்களைக் கூற முடியும் என்ற நிலையிலும், அந்த இரண்டு மூன்று விளக்கங்களையும் கொடுத்துவிட்டு முடிவைப் படிப்பவர்கள் போக்குக்கு விட்டுவிட்டேன். இதுதான் இதற்குப் பொருள் என்று அடித்துச் சொல்ல விரும்பவில்லை. அப்படிச் சொல்வது மற்றவர்களுக்கு உண்டாகும் புதிய சிந்தனைகளைத் தடுப்பதாக அமையும். இராமனுசர் திருப்பாவை மேல் தீராக் காதல் கொண்டவர். அவரே திருப்பாவைக்கு விளக்கம் எழுதவில்லை. அப்படி எழுதினால் அதையே அச்சுப் பிசகாமல் வைத்துக் கொண்டு, புதுச் சிந்தனையோடு யாரும் வந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அறிந்தே விளக்கம் எழுதாமல் தவிர்த்திருக்கிறார். அப்படியிருக்கும் போது “இதுதான் சரியான விளக்கம்” என்று உறுதியிட்டுச் சொன்னால் நான் மடையனாவேன்.

முடிந்தவரை பதிவில் வைணவ சமய இலக்கியங்களில் இருந்தே மேற்கோள் காட்ட விரும்பினேன்.  அதற்காக பிற சமய ஒப்புநோக்கல் மேற்கோள்களைத் தவிர்க்கவில்லை. பொருத்தமான பதிவுகளில் பின்னிணைப்பாகக் கொடுத்திருக்கிறேன்.

ஆழ்வார்களைப் பற்றியும் ஆழ்வார் பாசுரங்களையும் தெரிந்து கொள்வதற்கு இந்த வாய்ப்பு மிகச் சிறப்பாக அமைந்தது. இன்னும் நிறையவே படிக்க வேண்டும்.

மொத்தத்தில் இந்தத் திருப்பாவைப் பயணம் ஒரு இனிய பயணம்!

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே!
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே!
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்பாவை, விஷ்ணு and tagged , , , . Bookmark the permalink.

9 Responses to 30. மால் ஐ சூடும் தமிழ் மாலை

 1. நோற்ற நோன்புக்கும், அதை 30 நாளும்..
  ஏற்ற தங்களுக்கும், நிறைவு எனும் வரம்பெற்று
  மனமும் மகிழ்வும் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
  ——

  திருஆடிப் பூரத்தாள் தமிழ்-பகர்ந்தான் வாழியே!
  திருப்பாவை முப்பதும் பொருள்-உரைத்தான் வாழியே!

  பெரியாழ்வார் தம்மகளின் பேர்-உரைத்தான் வாழியே!
  பெரும்பூதூர் மாமுனியின் பேறு-உரைத்தான் வாழியே!

  ஒருநூற்று எழுபத்து மூன்றுபோல் வாழியே!
  உயர்முருகு உயிருக்குள் வைத்து-நிதம் வாழியே!

  மரு-ஆரும் பாண்டிப்புதுக் கிராமத்தான் வாழியே!
  வண்புதுவைக் கிராமத்து இராகவன்சீர் வாழியே!

  ஆண்டாள்,
  தமிழை ஆண்டாள்
  திருவடிகளே சரணம்!

 2. சிற்சில குறிப்புக்கள்:

  1. “வங்கக்” கடல்

  வங்கம் எனும் பாய்மரக் கப்பல் = இது ஆற்றிலும் போகும்/ கடலிலும் போகும்!
  *தோணி= சற்று சிறியது
  *வங்கம்= மிகப் பெரியது

  ஓரிருவரை மற்றும் ஏற்றிச் செல்லாது,
  “அனைவரையும்” ஏற்றிச் செல்ல வல்லது, இறைவனின் கருணை!

  *மதித்தாரையும், மதியாதாரையும்
  *நண்பரையும், எதிரியையும்
  *மதம் இல்லாரையும், மதம் உள்ளாரையும்
  “அனைவரையும்” கரைசேர்க்க வல்ல “பெருங்”கப்பல்!
  ஆதலாலே.. தோணி என்று சொல்லாது, வங்கம் என்றாள்!

  வங்கத்துக் கூம்பில் மருங்கூர்ப் பட்டினம் என்பது சங்கத் தமிழ்!
  பிற ஆழ்வார்களும் வங்கக் கடல் என்றே பாடுவார்கள்!
  வங்கக் கடல் வையம் உய்ய – திருமங்கை ஆழ்வார்
  வங்கத்துக் கூம்பேறும் மாபறவை போன்றேனே – குலசேகரன் சொன்ன சொல்!
  ——–

  2. மாதவனைக் கேசவனைத்

  க் எனும் வலி மிகாது:)
  மாதவனை(யும்) கேசவனை(யும்) .. உம் தொக்கி வரும் உம்மைத் தொகை!
  உம்மைத் தொகையில் வலி மிகாது. ex: வெற்றிலை பாக்கு

  மாதவனை கேசவனைத்..
  திங்கள் திருமுகத்துச் சேய் இழையார்

  3. சே இழையார்

  சேய் இழையார் என்னாமல்
  சே இழையார் என்று ஆளுகின்றீர்கள்! அதன் நுட்பம் என்னவோ? அறியத் தாருங்களேன்!

 3. 3. திங்கள் திருமுகம் = என்ன அழகான உருவகம்!
  மஞ்சள் திருமுகம் போல், அழகு மனக் கண்ணில் வந்து போகிறது!

  திருவரங்கத்தின் தாயாருக்கு..
  நோயில் பணிவிடை செய்யும் அந்த அம்மாவுக்கு
  திங்கள் திருமுகத் தீபாராதனைக் காப்பு நிகழ்த்துவார்கள்!

  4. சென்று இறைஞ்சி..

  இறைவன் நம்மை நோக்கி, 10 அடி முன் எடுத்து வைக்கிறான்!
  நாம் தான், 1 அடி கூட முன் வைப்பதில்லை!
  நேயத்துக்கு நேயம் காட்டலே= மனிதம்! ஆத்ம குணம்!
  நாய் கூடச் செய்யும் இதை, மனிதன் ஏனோ தவறுகிறான்:(

  இறைவன் ஏற்கனவே வந்து விட்டான்!
  நம் Acceptance க்குக் காத்திருக்கான்! ஏலோ ஏலோ ரெம்பாவாய்!
  அதான் அவன் வந்தான் எ. சொல்லாது.. நாம் “சென்று” இறைஞ்சி என்கிறாள்!
  எங்கு சென்று?
  கோயிலுக்கா? 108 க்கா? உற்சவத்துக்கா? சடங்குக்கா?
  இல்லை! “அவனே”.. என்று மனத்தால் அவனிடம் சென்று!

  *சென்ற பாட்டில், “வந்து” உன்னைச் சேவித்து என்பாள்
  *இந்தப் பாட்டில், “சென்று” இறைஞ்சி என்பாள்

  • திருப்பாவை முழுக்கவே.. இந்தச் “சென்று/வந்து” உண்டு!
   அதான் போல, திருப்பாவை என்றாலே, ஏகப்பட்ட Traffic:)

   சென்று:
   1. தீக்குறளை “சென்று” ஓதோம்
   2. தேவாதி தேவனைச் “சென்று” நாம் சேவித்தால்
   3. “சென்று” செருச் செய்யும்
   4. முப்பத்து மூவர் அமரர்க்கு முன்”சென்று”
   5. “சென்று” அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
   6. கறவைகள் பின்”சென்று” கானம் சேர்ந்து உண்போம்
   7. சேயிழையார் “சென்று” இறைஞ்சி

   வந்து:
   1. தூயோமாய் “வந்து” நாம் தூமலர் தூவி
   2. கூவுவான் “வந்து” நின்றோம் கோதுகலம் உடைய
   3. தேற்றமாய் “வந்து” திற-ஏலோர் எம்பாவாய்
   4. சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் “வந்து” நின் முற்றம் புகுந்து
   5. “வந்து” எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல் மேல்
   6. “வந்து” திறவாய் மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய் (அதே பாசுரத்தில் 2 வந்து)
   7. ஆற்றாது “வந்து” உன் அடிபணியுமா போலே
   8. அபிமான பங்கமாய் “வந்து” நின் பள்ளிக்கட்டிற் கீழே
   9. சங்கம் இருப்பார் போல் “வந்து” தலைப்பெய்தோம்
   10. சிற்றஞ் சிறுகாலே “வந்து” உன்னைச் சேவித்து

   வந்து is greater than சென்று:)
   10 > 7

   இறைவன் தானே “வந்து” நிற்கிறான்! அடியாரை நமக்காகவே அனுப்புகிறான்
   *வந்து நிற்கும் அவனை
   *சென்று, வரவு-ஏற்போம்.. மனத்தால்!

   வருவாய் குகனே!

 4. 5. அங்கு அப்பறை கொண்ட “ஆற்றை”

  ஆறும், பேறும் என்பார்கள்!
  செல்லும் வழியும், சென்ற பின் கிடைக்கும் இன்பமும்!

  உபாயம்/ உபேயம் என்பது.. வைணவப் பரிபாஷை! நாம் சமய விளக்கத்துக்குள் செல்ல வேண்டாம்!
  ஆண்டாளின் எளிய தமிழே போதுமானது! ஆற்றை= வழியைக் காட்டி, ஆற்றுப்படை செய்யும் ஆண்டாள்!

  திருப்பாவையை = “ஆண்டாள் ஆற்றுப்படை” என்றும் சொல்லலாம்!:)

  தலைவன் பேரில், திருமுருகாற்றுப்படை இருக்கே!
  தொண்டன் பேரிலும் ஒன்னு இருக்கட்டும்:) ஆண்டாள் ஆற்றுப்படை!
  ——-

  6. பட்டர் பிரான் கோதை

  அப்பாவின் Initialஐத் தட்டாமல் போட்டுக் கொள்ளும் கோதை!
  எல்லாக் கவிதைகளிலும்!
  திருப்பாவையாச்சும் கடைசிப் பாட்டு! நாச்சியார் திருமொழியில் பாட்டுக்குப் பாட்டு, அப்பா ‘இனிஷியல்’ தான்:)

  பெக்கலை! கண்டெடுத்த பொண்ணு-ன்னு எவனும் சொல்லீறக் கூடாதே!
  பெரியாழ்வார் “பெற்றெ”டுத்த என்னும் அழுத்தம்!

  பொதுவாவே, வளர்ப்புப் பிள்ளைகள்.. கொஞ்சம் “தயங்கியே” வளரும்.. தாங்கள் வளர்ப்புப் பிள்ளை -ன்னு தெரிந்து விட்டால்:(
  அதிலும், பெண் குழந்தைகள் நிலை தான், இன்னும் அழுத்தமானது!:(

  நாளை, இன்னொருவன் வீட்டுக்குப் போய் வாழ்ந்தாலும்..
  வளர்ந்த வீடே = வீடு! (பெண்களுக்கு)
  அதான், வேறெந்த ஆழ்வாரும் செய்யாத ஒன்றை, ஆண்டாள் செய்கிறாள்! = “இனிஷியல்” போட்டுக் கொள்கிறாள்!
  பட்டர் பிரான் கோதை, பட்டர் பிரான் கோதை!

  பட்டர் பிரான் எனும் பெரியாழ்வாரின்..
  *இயற் பெயர்= ஸ்ரீ ராம ஆண்டார்
  *புனை பெயர்= விட்டு சித்தன்
  *வழங்கு பெயர்= பெரிய ஆழ்வார்

  இப்படிப் பட்ட பொண்ணை வளர்த்தீரே.. நீர் பெரியாழ்வார் தான்!

  • திரு-அரங்கம் தொடர்பான எல்லாமே “பெரிய” அடைமொழி தான்!:)

   1 இறைவன்: பெரிய பெருமாள்
   2 இறைவி: பெரிய பிராட்டியார்
   3 கண்கள்: பெரிய வாய கண்கள்
   4 தொண்டன்: பெரிய திருவடி

   5 கோயில்: பெரிய கோயில்
   6 தளிகை: பெரிய அவசரம்
   7 நம்பி: பெரிய நம்பி
   8 ஜீயர்: பெரிய ஜீயர்
   9 விழா: பெரிய திருநாள்

   அப்படிப் பெரிய பெருமாளுக்கே, “மாமனார்” ஆனதாலோ..
   ஆழ்வாரும்= பெரிய ஆழ்வார்:)

   ஆனா, அதை விட..
   பெரிய பெருமாளுக்கே, நீ நல்லா இருடா -ன்னு வாழ்த்திய வாய் அல்லவா!
   *வரம் “கேட்காமல்”
   *வரம் “கொடுத்த” உள்ளம்
   அவனுக்கே, “பல்லாண்டு வரம்” கொடுத்த, ஆழ்வார்= பெரிய-ஆழ்வார்!

  • சொல்ல விட்டுப் போனது..

   திருப்பாவையில் மட்டுமேயான சொல்லாட்சி = “பறை தருதல்”!
   இதற்கு அடுத்த நாச்சியார் திருமொழியில் கூட வராது!
   வேறெந்த ஆழ்வாரிடத்தும் வராது!
   வெறுமனே பறை= இசைக் கருவியா வரலாம்; ஆனா பறை தருதல் என்னும் பறைக் கூலி! “கூலி”யாய் வருதல், திருப்பாவை மட்டுமே!

   அதென்ன பறைக் கூலி?
   பறை என்றால் என்ன? = http://goo.gl/WSHqjB

   ——-

   மொத்தம் 11 இடங்களில் “பறை”

   1. நமக்கே “பறை” தருவான் (1 – மார்கழித் திங்கள்)
   2. பாவாய் எழுந்திராய், பாடிப் “பறை” கொண்டு (8 – கீழ்வானம் வெள்ளென்று)

   3. போற்றப் “பறை” தரும் புண்ணியனால் (10 – நோற்றுச் சுவர்க்கம்)
   4. அறை “பறை” மாயன் மணிவண்ணன் (16 – நாயகனாய் நின்று)

   5. வேல் போற்றி! உன் சேவகமே ஏத்திப் “பறை” கொள்வாம் (24 – அன்று இவ்வுலகம்)
   6. உன்னை அருத்தித்து வந்தோம் “பறை” தருதியாகில் (25 – ஒருத்தி மகனாய்)

   7. சாலப்பெரும் “பறை”யே பல்லாண்டு இசைப்பாரே (26 – மாலே மணிவண்ணா)
   8. பாடிப் “பறை”கொண்டு யாம்பெறும் சம்மானம் (27 – கூடாரை வெல்லும்சீர்)

   9. இறைவா நீ தாராய் “பறை”யேலோ ரெம்பாவாய் (28 – கறவைகள் பின்சென்று)
   10. இற்றைப் “பறை” கொள்வாம், அன்று காண்!
   எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு (29 – சிற்றஞ் சிறுகாலே)

   11. அங்கு அப்”பறை” கொண்ட ஆற்றை,
   பட்டர்பிரான் கோதை சொன்ன =(30 – வங்கக் கடல்கடைந்த)

 5. 7. சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

  சங்கத் தமிழ் மால் ஐ -ன்னு தங்கள் 2ஆம் வேற்றுமையுருபு விளையாட்டு நன்று:)
  ஆனா வேண்டாம்!
  ஆண்டாள் காலத்தில், சங்கத் தமிழ் மால் = ரொம்பவே “கலந்த” மால் ஆயீட்டான்:)

  8. மால் வரை தோள்

  அது, வரைத் தோள் -ன்னு இருக்கணும் நினைக்கிறேன்!
  எதற்கும் மூலப்பாடம் பார்த்து விடுங்கள்!

  உவமைத் தொகையில், வல்லினம் மிகும்!
  வரைத் தோள்
  தாமரைக் கண்
  etc etc..

  9. செங்கண் திருமுகத்து

  அவனுக்கு முகமே= அவள் தான்!
  அவள் இல்லீன்னா, அவனுக்கு மதிப்பேது? கருணையேது?
  அதான் “திரு” முகம் என்று சொல்கிறாள்! திரு= பெரிய பிராட்டி!

  வெறுமனே திரு= மரியாதை/மங்கலம் ன்னு நினைச்சிடப் போறாங்களோ?-ன்னு.. முன்னும் பின்னும் அவளையே வைக்கிறாள்! = திரு- முகத்து- செல்வம்!

  *பெருமாள்= பின் வந்த சொல்!
  *திருமால்= இந்தத் தொல் சொல்லே மிக நன்று!
  அவளே முதல்! அவளை முன்னொட்டியே அவன்!

  அவள் அன்பாலும், அருளாலும்
  ராகவா
  திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!

 6. துடுப்பு, கடுப்பு, தடுப்பு —– இந்த திருப்பாவை இடுகைகள் எல்லாவற்றிலுமே உங்க சொல் சித்து விளையாட்டை மிக ரசித்தேன், அது இயல்பாக தங்களுக்கு வருகிறது, ஜிரா 🙂

  கடைசிப்பாசுரம் என்பதாலோ என்னவோ இடுகை விளக்கத்தில் அழகுணர்ச்சி விஞ்சி நிற்கிறது. அருமை!

  //சங்கம் + தமிழ் + மால் + ஐ என்றும் பிரிக்க முடியும். // நயமே தான் ஐயா 🙂 மொத்தத்தில் இப்பாசுர விளக்கம் மாஸ்டர் கிளாஸ்!

  இனி என் கருத்துகள்:
  1. இந்த கடைப்பாசுரத்தில் மட்டும் தான் கூர்ம அவதாரம் சுட்டப்படுகிறது. முதல் வரியில் பாற்கடல் கடைதலைச் சுட்டும்போது, மாதவனே என்று விளிப்பதே தகும், நீங்களும் சொன்னது போல. அப்பாற்கடலில் இருந்தே திருமகள் அவதரித்தாள். பரமனும் திருவாழ்மார்பன் ஆனான். கேசவன் என்றும் ஆண்டாள் உடனே விளிக்கிறாளே? கேசவன் நீண்ட கேசம் கொண்ட நீலமணி நிறத்தழகன். அந்தத் திருமகளின் மணாளனாக இருக்க ஏற்றவன் 🙂

  //அதாவது நான்கு மலைகளைப் போன்ற தோள்கள். அடியவர்கள் அபயம் என்று கோரும் போது நான்கு கைகளாலும் தூக்கி எடுத்துக் காப்பாற்ற வருவானாம் அந்தக் கோவிந்தராஜன்.// இதை பின்னூட்டத்தில் சொல்லணும்னு யோசித்து வைத்திருந்தேன்… எனக்கு அந்த வாய்ப்பையே நீங்க வழங்கலை, பரவாயில்லை 😉

  //”செங்கல்” திருமுகத்துச் செல்வத் திருமாலாலால்// எழுத்துப்பிழையை திருத்தி விடவும்.

  //அங்கு அப்பறை கொண்ட ஆற்றை//…. ஆண்டாள் கடைசியாக “பறை”யைப் (பரமபதத்தை) பெற்று விட்டாள், அதாவது திருவடி நிழல்… அடியவர் சரணாகதி எனும்போது அது திருவடிப் பற்றலே.

  //செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலாலால்// அடுத்து திருக்கண்களையும் சுட்டுகிறாள். எல்லா ஆழ்வார்களுக்கும் பிடித்த அவயங்கள் திருமாலின் திருவடியும், திருக்கண்களும் தான். ரெண்டுமே தாமரை போல சிவந்த, மென்மையான! அக்கண்களில் இருந்தே திருவருள் சுரக்கிறது. நம்மை ஆட்கொள்கிறது! பேரின்பத்திற்கு வழி வகுக்கிறது!

  “என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
  மின்னும் சுடர்மலைக்குக் கண், பாதம், கை கமலம்” என்று திருக்குருகைப்பிரானை உருக வைத்தவன் அவ்வண்ணல்!

  அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ ….. சடகோபன் தண்டமிழ் நூல் வாழ…. கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ, இராகவனாரே இன்னுமோர் நூற்றாண்டு இரும் 🙂

  ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்…

  அன்புடன்
  பாலா

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s