செந்தில்நாதனும் மாடித்தோட்டமும்

சென்னையில் வெள்ளம் வந்து வடிந்து அதையெல்லாம் மறந்த பிறகு செந்தில்நாதனின் வீட்டில் ஒரு நாள் காலை.

“என்னங்க இன்னைக்குப் பேப்பர்ல ஒரு முக்கியமான நியூஸ் வந்திருக்கு. பாத்தீங்களா?”

திமுக-தேமுதிக-பாஜக கூட்டணிச் செய்தியாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டான். வந்தாளே மகராசி கண்ணில் அப்பார்ட்மெண்ட் அரசியல் தவிர வேறெந்த அரசியல் செய்தியும் தென்படாதே என்றொரு ஐயம். இந்த மாதிரியான கேள்விகள் வரும் நேரத்தில் பாதுகாப்புக் கவசம் அவசியம் என்று செந்தில்நாதனுக்குத் தெரியாதா.

“நீயே சொல்லும்மா. நான் இன்னும் பேப்பர் முழுக்கப் பொரட்டல.”

terrace“ஒரு மணி நேரமா கைல பேப்பர வெச்சிட்டு என்னதான் படிக்கிறீங்களோ? அரசாங்கம் மாடித் தோட்டம் போட சலுகை விலைல பொருட்கள் தர்ராங்களாம். கோட்டூர்புரம் மாநகராட்சிப் பூங்கால காலைல பத்து மணிக்குக் கொடுக்குறாங்க. மறக்காம ஆபிஸ் போறப்போ வாங்கிருங்க.”

மாடித் தோட்டத்தின் வடிவத்தில் கிணற்றிலிருந்து அடுத்த பூதம் கிளம்புகிறதே என்று ஒரு நொடி மலைத்தான். ஆனால் “சரிம்மா” என்று மறுபேச்சுப் பேசாமல் சொன்னான் சம்சார சாகரச் செம்மலான செந்தில்நாதன்.

காலை பத்துமணிக்கு மாநகராட்சிப் பூங்காவின் கதவு கூடத் திறக்கப்படவில்லை. மாடித்தோட்டப் பொருட்கள் கொடுப்பதற்கான ஒரு அறியையும் குறியையும் காணவில்லை. பூங்காவின் வாசலிலிருந்தே வந்தாளே மகராசிக்கு ஃபோன் போட்டுச் சொன்னான்.

“ஒரு நாள் ஆபிசுக்கு லேட்டாப் போனாதான் என்ன? பத்து மணின்னா.. கரெக்ட்டா பத்து மணிக்கு போவீங்களா? கவர்மெண்ட் ஆபிஸ்ல எப்பவும் எதுவும் லேட்டாத்தான் நடக்கும். போனாப் போகுது விடுங்க. அடுத்தவாட்டி கொடுக்குறப்போ வாங்கிக்கலாம்.”

மனைவியின் மனதை மாற்றியதற்காகக் கடவுளுக்கு ஆயிரமாயிரம் நன்றி சொன்னான். பாவம். கடவுள் அவனுக்கு ஆப்பு வைக்கப் போவது தெரியாதவன்.

மாலை நாலு மணி இருக்கும் போது செந்தில்நாதனை ஃபோனில் அழைத்தார் வந்தாளே மகராசி.

“எத்தன மணிக்குக் கெளம்புவீங்க இன்னைக்கு?”

“ஒரு கிளையண்ட் கால் இருக்கு. முடிச்சிட்டுக் கெளம்ப ஏழு ஏழரை ஆயிரும். சீக்கிரமா வீட்டுக்கு வரனுமா?”

“அதெல்லாம் வேண்டாம். ஏழரைக்கே கெளம்பி வாங்க. அப்பதான் சுஜா அவ வீட்ல இருப்பா.”

“சுஜா அவ வீட்ல இருக்குறதுக்கும்… நான் ஏழரைக்குப் பொறப்படுறதுக்கும் என்னம்மா சம்பந்தம்?”

இதில் சுஜா என்று அழைக்கப்படுவது வந்தாளே மகராசியின் உயிர்த்தோழி. மனம் குணம் திடத்தில் அப்படியே வந்தாளே மகராசிதான்.

“ஒங்களால முடியாத வேலைய நான் முடிச்சிருக்கேன். சுஜா வீட்டுக்கு முன்னாடி இருக்குற பார்க்ல மாடித்தோட்டப் பொருட்களைக் கொடுத்திருக்காங்க. அவளை நமக்கும் நாலு செட் வாங்கச் சொல்லிட்டேன். ஒரு செட் ஐநூறு ரூபாதான். நீங்க அவ வீட்டுக்குப் போய் வாங்கிட்டு வந்திருங்க.”

“சுஜா இப்போ இருக்கும் வீடு எனக்குத் தெரியாதேம்மா. கொஞ்ச நாள் முன்னாடிதானே அவ வீடு மாறுனா.”

“அட்ரச வாட்சப்ல அனுப்புறேன். பதினைஞ்சு வருஷமா சென்னைல இருக்கீங்க. சென்னைல ஒங்களுக்குத் தெரியாத எடமும் இருக்கா?”

வந்தாளே மகராசியின் வார்த்தைப் பனிப்பொழிவில் செந்தில்நாதன் வாய் மூடிக்கொண்டது.

“நீங்க ஆபிஸ்லருந்து வர்ர வழிலதான். ஓ.எம்.ஆர்ல தொரப்பாக்கம் பக்கத்துலதான் எங்கயோ இருக்கு. எனக்குதான் சரியாத் தெரியல. நீங்க மேப்ல பாத்துக்கோங்க. மறக்காம ஏழரைக்குப் போய் வாங்கிக்கோங்க.”

அதற்கு மேல் வந்தாளே மகராசி ஒன்றும் பேசவில்லை. ஏழரைக்குப் போய் வாங்குமாறு சொன்னதை என்ன பொருளில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைச் செந்தில்நாதன் தெளிவாக அறிவான்.

”தொரப்பாக்கம் பக்கத்துலதான்” என்று சொல்லப் பட்ட முகவரி ஏழு நெரிசலான தெருக்கள், ஏழு குண்டுங்குழியுமான தெருக்கள், ஏழு முட்டுச் சந்துகள், ஏழு கார்ப்பரேஷன் குப்பைத் தொட்டிகள்(நிரம்பி வழிகின்ற), ஏழு தெருநாய்களையும் தாண்டி இருந்தது. ஒருவழியாக எட்டு மணிக்கு சுஜாவின் வீட்டைக் கண்டுபிடித்துவிட்டான் செந்தில்நாதன்.

“நாலு செட் போதுமா ஒங்களுக்கு? இது பத்தாதே. நாங்கூட கூட நாலு வாங்கலாமான்னு யோசிச்சேன். அவ நாலு போதும்னு அடிச்சுச் சொல்லிட்டா. இதோ எல்லாத்தையும் இங்க எடுத்து வெச்சிருக்கேன்.”

சுஜா கை காட்டிய இடத்தில் நான்கு கார் பேட்டரிகளை ஒன்றாகக் கட்டியது போல நான்கு பெரிய பொட்டலங்கள். பக்கத்திலேயே பெரிய கோணிப்பை. இவற்றையெல்லாம் சுமக்கப் போகும் தன் கார் மீது செந்தில்நாதனுக்குப் பரிதாபம் வந்தது. அதையெல்லாம் பார்த்தால் இந்தியாவில் குடும்பம் நடத்த முடியுமா!

ஒவ்வொரு பொட்டலமும் அரை சிலிண்டர் கனம். எல்லாப் பொட்டலங்களையும் கார் டிக்கியில் தூக்கி வைப்பதற்குள் அந்த ஏரியா ஆக்சிஜனை எல்லாம் கார்பன் டை ஆக்சைடாக மாற்றினான் செந்தில்நாதன். அந்தப் பொட்டலத்தில் என்ன இருக்கிறது என்று கேட்கக் கூட பயம். ஒன்றும் பேசாமல் மூட்டையையும் தூக்கி வைத்தான்.

“நான் எனக்கு ஆறு செட் வாங்கினேன். அதுல ஒன்னு தர்ரேன். அதையும் கொண்டு போறீங்களா?” என்று அன்போடு கேட்ட சுஜாவிடம், “இது போதும் இப்போதைக்கு. வேணும்னா நானே வந்து வாங்கிக்கிறேன்” என்று நெஞ்சில் கொப்புளித்த குருதியைத் துடைத்துக் கொண்டு சொன்னான்.

மறுபடியும் ஏழு தெருநாய்கள், ஏழு கார்ப்பரேஷன் குப்பைத் தொட்டிகள்(நிரம்பி வழிகின்ற), ஏழு முட்டுச் சந்துகள், ஏழு குண்டுங்குழியுமான தெருக்கள், ஏழு நெரிசலான தெருக்களைத் தாண்டி வீடு வந்து சேர்ந்தான். மூட்டைகளையெல்லாம் லிப்டில் ஏற்றி வீட்டு முன்னால் இறக்கி வைக்கும் போது அவன் உடம்பில் குண்டலினி யோகம் சொன்ன சக்கரங்கள் எல்லாம் கிறுகிறுவென்று டாப் கியரில் சுற்றின.

வந்தாளே மகராசியின் முகம் அப்படியே டிவி சீரியலில் கதாநாயகி ஜெயிப்பதைப் பார்க்கும் குடும்பப் பெண் போல மலர்ந்தது.

மூட்டைக்குள் இருப்பதை என்னவென்று பார்க்கப் போன கணவனைத் தடுத்து, “இப்ப நீங்க எதையும் தொட வேண்டாம். ரொம்ப டயர்டா இருக்கீங்க. மொதல்ல கைகால் கழுவீட்டு சாப்பிட வாங்க. நீங்க நேரத்துக்குச் சாப்பிடலைன்னா அத்தை வருத்தப்படுவாங்க.”

“நீ வருத்தப்பட மாட்டியா” என்றெல்லாம் கேணைத்தனமான கேள்வி கேட்பதை செந்தில்நாதன் நிறுத்தி ஆண்டு பலவாயின.

அடுத்தநாள் காலையிலும் அவனை மூட்டையைத் தொடவிடவில்லை வந்தாளே மகராசி. “அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். மொதல்ல நமக்கு மண்ணும் ஆர்கானிக் உரமும் வேணும். இன்னைக்கு ஒங்களுக்கு லீவுதான. போய் வாங்கீட்டு வந்துருங்க.”

“அது எங்க கெடைக்கும்னு தெரியலையே. யார் கிட்டயாவது கேக்குறேன் மொதல்ல.”

“நான் சுஜா கிட்டயே கேட்டுட்டேன். செம்மொழிப் பூங்காவுக்கு எதுத்தாப்புல ஹார்ட்டிகல்சர் ஆபிஸ் இருக்கு. அங்கயே கெடைக்குதாம். பசங்களையும் கூட்டீட்டுப் போங்க. அவங்களுக்கும் பொழுது போகும்.”

பந்தை வீசியதும் கவ்வ வேண்டும் என்று நாய்க்கும் சொல்லிக் கொடுத்த கடவுள் செந்தில்நாதனுக்கும் அறிவைக் கொடுத்திருந்தார். சொல்லிய வண்ணம் செய்த பெரும் ஆள் என்று நல்ல பெயர் வாங்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தான். மண் ஒரு மூட்டை. உரம் ஒரு மூட்டை என்று இரண்டு மூட்டைகள்.

முதலில் அவ்வளவு ஆர்வமில்லாமல் இருந்த நமது கதாநாயகனுக்கு, வந்தாளே மகராசி ஒவ்வொரு வேலையாகச் சொல்லச் சொல்ல மாடித் தோட்டத்தின் மீது புது ஆர்வம் வந்தது. வீட்டுக்குப் போனதும் மண்ணையும் மக்கிய உரத்தையும் தேங்காய் நாரோடு கலந்து அரசு கொடுத்திருக்கும் பிளாஸ்டிக் பைத் தொட்டிகளில் நிரப்பி விதைகளை நட்டு தண்ணீர் விடவேண்டும் என்று உற்சாகத்தோடு புறப்பட்டான். இன்னும் ஒரு மாதத்தில் ஆள் வைத்து பசுமைக் குடில் அமைத்து வெயில் காலம் வந்தாலும் செடிகள்  காய்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும் திட்டம் போட்டான். எப்படியாவது தனது பிள்ளைகளுக்கு ஆர்கானிக் காய்கறிகளைச் சாப்பிடக் கொடுக்க முடிவு செய்தான். அதே ஆர்வம் கொஞ்சமும் குறையாமல் மண் மூட்டையையும் உர மூட்டையையும் வீட்டுக் கொண்டு சேர்த்தான்.

”வாங்கீட்டு வந்துட்டீங்களா. சரி. டெர்ரேஸ்ல ஓரமா வெச்சுருங்க. அப்புறம் பாத்துக்கலாம்.” கணவன் செய்திகள் பார்க்கும் போது எரிச்சலில் இருக்கும் மனைவியின் குரலில் சொன்னார்.

ஏதோ பிரச்சனை என்பது புரிந்தாலும் என்ன பிரச்சனை என்று புரியாமல் மூட்டைகளை மாடியில் கொண்டு போய் ஓரமாக வைத்தான். அன்றைய பொழுது வழக்கம் போல எந்தப் புதிய சுவாரசியமும் இல்லாமல் நிம்மதியாகப் போனது. மாடித் தோட்டம் குறித்து வந்தாளே மகராசி எதுவும் சொல்லவில்லையே என்று இரண்டு மூன்று முறை வந்த யோசனைகளை டிவியில் விவாதமேடை நிகழ்ச்சிகளைப் போட்டு அமுக்கினான்.

அடுத்த நாள் வாரத்தின் சோம்பல் நாளான ஞாயிறு. கையில் காபி கொடுத்த மனைவியிடம், “என்னம்மா இன்னைக்கு தோட்டம் போட்டுறலாமா?” என்று நூடுல்ஸ் விட்டுப் பார்த்தான். (எத்தனை நாளைக்குத்தான் நூல் விட்டுப் பார்த்தான் என்று எழுதுவது.)

”அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். இன்னும் ரெண்டு மூனு மாசத்துல வெயில் வந்துரும்னு அத்தை சொன்னாங்க. அதுனால வெயில்காலம் முடிஞ்ச பிறகு தோட்டம் போட்டுக்கலாம். மண்ணும் ஒரமும் ஒன்னும் கெட்டுப் போயிறாது.”

“வெயிலுக்குப் பாதுகாப்பா கிரீன் ஹவுஸ் போட்டுக்கலாம். அதுக்கு ஒரு ஆள் இருக்கானாம். ரெண்டே நாள்ல வேலை முடிஞ்சிரும். இன்னைக்குச் சொல்லீட்டா, செவ்வாக்கெழமை ரெடி ஆயிரும்.”

“ஏன் இவ்வளவு அவசரம்? கொஞ்சம் பொறுமையாவே பண்ணலாம். திடீர்னு எங்கருந்து இவ்வளவு ஆர்வம்? மொதல்ல சொன்னப்போ சுதாரிப்பு இல்லாமத்தானே இருந்தீங்க.”

“ஆர்கானிக் காய்கறிகள் பத்தி நீ சொன்ன பிறகு அது ரொம்ப நல்ல ஐடியான்னு தோணுச்சு. நீ சொன்னாச் சரியாத்தானே இருக்கும். அதான் மடமடன்னு செஞ்சிறலாம்னு நெனச்சேன்.”

“எதையும் எடுத்தேன் கவுத்தேன்னு அவசரப்பட்டுச் செய்யக்கூடாது. நீங்க வாங்கிட்டு வந்த விதைகள் கலப்பின விதைகள். அதுகூட அரசாங்கம் கொடுத்த உரங்கள் பூச்சிக்கொல்லிகள் எல்லாமே கெமிக்கல்ஸ். அந்தக் கெமிக்கல்ஸ் போட்டு நம்ம வீட்ல காய்கறி போடுறதுக்குப் பதிலா கடைலயே வாங்கிக்கலாம். நீங்க வாங்கீட்டு வந்த மூட்டையை ஒருவாட்டியாவது தொறந்து பாத்திருக்கனும். வாங்கீட்டு வந்து வெச்சதோட கடமை முடிஞ்சதுன்னு ஜம்முன்னு சாப்டுப் படுத்துட்டீங்க. மண்ணும் ஒரமும் வாங்கப் போறதுக்கு முன்னாடியாச்சும் பாத்திருக்கலாம். வெளிய எங்கயாவது போறதுன்னா ஒடனே கெளம்பீருவீங்க. ஆனா வீட்ல என்ன இருக்கு ஏது இருக்குன்னு யோசிக்கிறதேயில்ல. ஏதோ.. நான் தொறந்து பாத்ததால கண்டுபிடிச்சேன். அதுல வேற.. ஒரு யூரியா பாக்கெட் ஒடஞ்சு கொட்டி எல்லா விதைகளும் அதுல நனஞ்சுருச்சு. இனிமே அந்த விதைகளையும் தூக்கிப் போட வேண்டியதுதான். நல்லவேளை சுஜாவுக்கு நான் ஃபோன் பண்ணிச் சொல்லீட்டேன். இல்லாட்டி அவளும் ஒங்கள மாதிரி அவசரப்பட்டு தோட்டம் போட்டிருப்பா. எல்லாருக்கும் அவ்வளவு அவசரம். பதறாத காரியம் சிதறாதுன்னு….”

வந்தாளே மகராசி சொல்லிக் கொண்டே போக செந்தில்நாதன் உச்சந்தலை மாடித் தோட்டம் சூட்டில் பொசுங்கியிருந்தது.

அன்புடன்,
ஜிரா

இதற்கு முந்தைய செந்தில்நாதன் வாழ்வியல் அனுபவப் பாடங்கள்.
செந்தில்நாதனும் செம்பருத்தி ஷாம்புவும்
செந்தில்நாதனும் கார்காலமும்
செந்தில்நாதனும் மாமியார் வருகையும்

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in கதை, சிறுகதை, செந்தில்நாதன் கதைகள் and tagged . Bookmark the permalink.

4 Responses to செந்தில்நாதனும் மாடித்தோட்டமும்

 1. எங்கேயோ கேட்ட ‘சொந்த அனுபவம்’ இது 🙂 😛

 2. stavirs says:

  hahaha loved it!

  2016-02-06 15:55 GMT+08:00 “மாணிக்க மாதுளை முத்துகள்” :

  > GiRa ஜிரா posted: “சென்னையில் வெள்ளம் வந்து வடிந்து அதையெல்லாம் மறந்த
  > பிறகு செந்தில்நாதனின் வீட்டில் ஒரு நாள் காலை. “என்னங்க இன்னைக்குப் பேப்பர்ல
  > ஒரு முக்கியமான நியூஸ் வந்திருக்கு. பாத்தீங்களா?” டிவிஎஸ் பக்கத்துல
  > குடிச்சிட்டு வண்டியோட்டி ஆக்சிடெண்ட் ஆனா செய்தியாக இருக்கும”
  >

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s