சரண கமலாலயத்தை – திருப்புகழ்

நம்ம கிட்ட என்னென்ன இருக்குன்னு பட்டியல் போடச் சொன்னா ரொம்பக் கஷ்டம். ஆனா நம்ம கிட்ட என்னென்ன இல்லைன்னு பட்டியல் போட்டுப் பாருங்க. மடமடன்னு பெரிய பட்டியல் போடுவீங்க. இல்லை இல்லைன்னு எப்பவும் கதறிக்கிட்டிருக்கோம். எதுவுமே இல்லாம இருக்குறதுப் பேர் வறுமையில்ல. அது இல்லை இது இல்லைன்னு இல்லாததை நினைச்சிக்கிட்டே இருக்குறதுக்குப் பேர்தான் வறுமை.

murugan1வறுமைன்னா செல்வம் இல்லாமை மட்டுமல்ல.
நிம்மதி இல்லாமை
மகிழ்ச்சி இல்லாமை
உடல்நலம் இல்லாமை
நினைச்சபடி எதுவும் நடப்பது இல்லாமை
சொன்ன பேச்சை யாரும் கேட்பது இல்லாமை
ஆசைக்குச் சாப்பிடும் சுதந்திரம் இல்லாமை
இப்படி எத்தனையோ இல்லாமைகள். வரிசையா எழுதுனா பட்டியல் பாகிஸ்தானைத் தாண்டிப் போகும்.

இருப்பதை நினைத்தால் இல்லாதது தெரியாது. நம்ம எப்போ இருப்பதை நினைச்சுப் பாத்திருக்கோம்? அப்படி நினைச்சுப் பாத்திருந்தா நிம்மதியா இருந்திருப்போமே.

ஒரு மாறுதலுக்கு எல்லாரும் அவங்கவங்க கிட்ட என்னென்ன இருக்குன்னு பட்டியல் போட்டுப் பாருங்க. நீங்க எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவர்னு உங்களுக்கே தெரிய வரும்.

அப்படி நம்ம கிட்ட இருக்குற பொருட்கள்ளாம் இப்ப மட்டும் இருக்குற பொருட்கள். எப்பவும் நம்ம கூடயே இருக்கும்னு சொல்ல முடியாது. நம்மளே அதைத் தூக்கிப் போட்டுட்டு வேற வாங்குனாலும் வாங்குவோம்.

அப்ப எது எப்பவும் நம்ம கூடயே இருக்கும்?

இறைவனின் கருணை மட்டும் தான் எப்பவும் இருக்கும். நாம விரும்பினாலும் விரும்பாட்டியும் அது இருக்கும். அப்படிப்பட்ட அந்தக் கருணையான கடவுளோட திருவடிச் சரணத்தை நினைக்கனும்.

ஏன் நினைக்கனும்? கடவுளோட திருவடியை நினைக்கலைன்னா தப்பா?

தப்பெல்லாம் ஒன்னுமில்லை. நினைக்கனும்னு அவசியமும் இல்லை. ஆனா நம்ம மனசுக்குள்ள ஆயிரம் எண்ணங்கள் அச்சங்கள் தவிப்புகள் வருத்தங்கள் தவறுகள் வருது. கடவுளை நினைக்கிற அந்த அரை நிமிஷத்தில் இதெல்லாம் வராம இருக்கும். அதுக்காகத்தான் கடவுளை நினைக்கனும்னு சொல்றது. கடவுளை நினைக்காமலே மனசுல தீய எண்ணங்கள் அச்சங்கள் வருத்தங்கள் வர்ரதில்லைன்னு நெனைக்கிறவங்க கடவுளை நினைக்க வேண்டியதில்லை. அவங்கவங்க எந்தெந்த நெலமைல இருக்கோம்னு அவங்கவங்களுக்குத் தெரியும்.

அருணகிரிநாதரும் ஒரு காலத்துல நம்மளைப் போலத்தான். மனசு முழுக்க நிரம்பி வழிஞ்சது காமம். அப்புறம் எப்படி கடவுளை நினைக்க அவர் மனத்தில் எடம் இருந்திருக்கும்?

அப்படிக் கொஞ்சமும் நினைக்காம இருந்ததைக் குறிப்பிட்டு சுவாமிமலையில் பாடிய திருப்புகழ்தான் இந்தத் திருப்புகழ்.

சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேர(ம்) மட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத

முருகா! எப்போதும் தஞ்சம் கொடுக்கின்ற உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை அரை நிமிடம் கூட நான் நினைத்ததில்லை. நினைத்ததேயில்லை என்னும் போது உன் திருவடிகளை எண்ணித் தவமும் தியானமும் செய்ய அறிந்திருப்பேனோ நான்!

சட கசட மூட(ன்) மட்டி பவவினையிலே சனித்த
தமியன் மிடியால் மயக்கம் உறுவேனோ

பொய்யும் தவறுகளும் நிறைந்த மூடனும் முட்டாளுமான நான், பிறவி என்னும் பாவப் பெருங்கடலில் பிறந்திருக்கிறேன். நான் தனியாளாகத் தவித்து, உன்னருள் என்னும் பெருஞ்செல்வம் சேராமல் வறுமையினால் மயங்கித் தவிப்பேனோ!

கருணை புரியாது இருப்பதென்ன? குறை இவ்வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே!

கயிலை ஈசனின் மகனான குமரக் கடவுளே! இன்னும் எனக்குக் கருணை புரியாமல் இருப்பது ஏனோ? இப்போது என்னிடம் இருக்கும் குறைகளைக் கூறு. திருத்திக் கொள்கிறேன்.

கடக புய(ம்) மீதி(ல்) ரத்ன மணியணி பொன்மாலை செச்சை
கமழும் மணமார் கடப்பம் அணிவோனே

வீரத்தின் அடையாளமாக கடகம் அணிந்த தோள்களில்(புஜத்தில்) இரத்தினமாலை, பொன்மாலை, வெட்சிப்பூமாலை, வாசனை மிகுந்த கடம்பமாலை அணிந்தவனே!

தருணம் இதையா! மிகுத்த கனம் அது உறு நீள் சவுக்கிய
சகல செல்வ யோக(ம்) மிக்க பெருவாழ்வு

இதுதானய்யா மிக நல்ல தருணம்! சிறப்புடைய பெருமையைத் தருகின்ற நீண்ட சுகமும் சகல செல்வங்களும் நல்ல யோகங்களும் மிக்க பெருவாழ்வைத் தருவாயே!

தகைமை சிவஞான(ம்) முத்தி பரகதியு(ம்) நீ கொடுத்து
உதவி புரிய வேணு(ம்) நெய்த்த வடிவேலா

நெய் பூசிய ஒளி பொருந்திய வடிவேலைக் கொண்டவனே! நல்ல மதிப்பும் சிவஞானமும் முக்தி என்னும் வீடுபேறும் கொடுத்து நீ உதவி புரிய வேண்டும்!
(நெய்த்த என்ற சொல்லுக்கு கூர்மையான என்னும் பொருளும் உண்டு. கூர்வடிவேலனே என்று பொருள் கொள்வதும் இங்கு மிகப் பொருத்தம். நெய் பூசிய பளபளப்பான வேல் என்று பொருள் கொள்வதும் சரியே.)

அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க
அரிய தமிழ் தான் அளித்த மயில்வீரா

சிவந்த இதழ்களைக் கொண்ட தாமரை மலர் போன்ற திருவடிகளை நித்தமும் துதிக்க, எனக்கு அரிய தமிழைக் கொடுத்த மயில்வீரனே!
(”யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்” என்று கந்தரனுபூதியிலும் சொல்லியிருக்கிறார் அருணகிரி. கல்வியையும் அறிவையும் அருணகிரிக்கு ஏன் கொடுத்தாராம் முருகன்? திரும்பவும் தானே பாடல் வடிவில் பெற்றுக்கொள்வதற்காகக் கொடுத்தானம். இந்தத் திருப்புகழிலும் அதே கருத்தைச் சொல்கிறார்.)

அதிசயம் அனேகம் உற்ற பழனிமலை மீது உதித்த
அழக திருவேரகத்தின் முருகோனே!

எண்ணிலடங்கா அதிசயங்கள் நடக்கின்ற பழனிமலை மீது விளக்கும்படி நிற்கின்ற அழகனே! திருவேரகம் என்று இன்று அழைக்கப்படும் சுவாமிமலை முருகனே!

ஓரளவுக்குப் பொருள் எளிமையாப் புரியக்கூடியதுதான் இந்தத் திருப்புகழ். பாடலோட பொருள் உங்களுக்கும் புரிஞ்சிருக்கும்னு நம்புறேன். இப்ப முழுத் திருப்புகழையும் படிங்க. ரொம்ப லேசா மனத்தில் பதியும்.

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க …… அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க …… முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற …… குமரோனே
கடகபுய மீதி ரத்ன மணியணிபொன் மாலை செச்சை
கமழுமண மார்க டப்ப …… மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க …… பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த …… வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த …… மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழனிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் …… முருகோனே

இந்தப் பாடலை முருகன் இசை மாமணி கே.பி.சுந்தராம்பாள் குரலில் கேட்க..

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்புகழ், முருகன் and tagged , , , , , . Bookmark the permalink.

4 Responses to சரண கமலாலயத்தை – திருப்புகழ்

 1. எனக்கு மிகவும் பிடித்த திருப்புகழ் பாடல்களில் இதுவும் ஒன்று.முருகனருள் முன்னிற்க.

  • GiRa ஜிரா says:

   எனக்கும் மிகவும் பிடித்த திருப்புகழ் இது 🙂

 2. amas32 says:

  ரொம்ப எளிமையான இனிமையான திருப்புகழ். திருப்தியா இருக்கிறவன் தான் செல்வந்தன். ஆனா இறை தேடலில் மட்டும் அவனை அடையும் வரை திருப்தியே வரக் கூடாது.

  amas32

  • GiRa ஜிரா says:

   நன்றிம்மா. நீங்க சொல்வது மிகப் பொருத்தம் 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s