இருமலு ரோக முயகலன் – திருப்புகழ்

murugan10எல்லாம் நல்லாப் போயிட்டு இருக்குற மாதிரிதான் இருக்கும். திடீர்னு ஒரு பல்வலி வந்து எல்லாத்தையும் பொரட்டிப் போட்டுரும்.

பல் வலிக்கிறதால ஒழுங்காச் சாப்பிட முடியாது. ஒழுங்காச் சாப்பிடாததால அடிக்கடி வயிறு குர்குர்ருன்னு பசியை ஞாபகப்படுத்திக்கிட்டேயிருக்கும். சரியாப் பேசவும் முடியாது. நாம ஒன்னு சொன்னா அடுத்தவங்க ஒன்னு புரிஞ்சிக்குவாங்க. ஜெல் வேணும்னு கேட்டா ஜொள்ளான்னு கேப்பாங்க. அப்பப்பா.. அந்தப் பல்வலி சரியாகுற வரைக்கும் எதுவும் ஒழுங்கா ஓடாது.

ஒரு பல்லில் வரும் வலிக்கே இந்தப் பாடுன்னா.. ஒடம்பு முழுக்க எத்தனை உறுப்புகள் இருக்கு. இத்தனையும் நம்மைப் பாடுபடுத்தினா என்ன ஆகுறது? அப்பப்போய்!

நோயின் கொடுமைன்னா என்னன்னு அருணகிரிநாதருக்கும் தெரியும். தொழுநோய் வந்து துடியாய்த் துடிச்சாரே. உடல் நோயைக் கொடுத்து மன நோயையும் ஆன்ம நோயையும் முருகன் விரட்டியது உண்மைதான். இருந்தாலும் உடல் நோயோட வேதனைன்னா சும்மாவா! அவருக்கே அப்படின்னா.. நம்மள்ளாம்???

நமக்கு அந்தக் கவலை தேவையில்லை. டாக்டர்கள் பிரிஸ்கிரிப்ஷன் எழுதுற மாதிரி நமக்காக ஒரு திருப்புகழ் எழுதியிருக்காரு அருணகிரிநாதர்.

வழக்கம் போல முதல் பாதியில் நோய்கள் துன்புறத்தக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டு, அடுத்த பாதியில் முருகனைப் புகழ்ந்து பாடுறாரு அருணகிரிநாதர். ஒவ்வொன்னாப் பாக்கலாம்.

இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி …… விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை …… யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு …… முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் …… அருள்வாயே

இருமலு(ம்) ரோக(ம்) முயலகன் வாதம் எரிகுணநாசி விடமே
இருமல்(Cough), ரோகம் (Tuberculosis), முயலகன் என்னும் வலிப்பு நோய் (Epilepsy), வாதம் ( Rheumatoid arthritis & Paralysis), எரிக்கும் தன்மையுடைய நாசி (Burning Nose), பலவகைப்பட்ட நச்சுகள் உடம்பில் உண்டாக்குகின்ற நோய்கள்.

நீரிழிவு விடாத தலைவலி சோகை எழுகளமாலை இவையோடே
நீரிழிவு (Diabetes), விடாத தலைவலி (Acute Headache/Migraine), இரத்த சோகை (Anemia), எழுகளமாலை என்னும் கழுத்தைச் சுற்றி உண்டாகும் புண்கள் (Blisters around the neck), ஆகிய நோய்களோடு

பெருவயிறு ஈழை எரிகுலை சூலை பெருவலி வேறும் உள நோய்கள்
வயிற்றில் நீர் கோத்து வீங்கும் பெருவயிறு என்னும் நோய் (Edema in stomach), நுரையீரல்களில் கட்டிக் கொள்ளும் கோழை (Congestion in Lungs), நெஞ்சு எரிச்சல் (Heartburn), சூலை நோய் என்னும் கொடிய வயிற்றுவலி (Acute pain in stomach due to various reasons), பலவிதக் காரணங்களால் உடம்பில் உண்டாகும் வலிகள் (Extremely painful diseases), மற்றும் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் வேறுபல நோய்கள்.

பிறவிகள் தோறும் எனை நலியாதபடி உனதாள்கள் அருள்வாயே!
மேலே சொன்ன நோய்களும் சொல்லாமல் விடப்பட்ட நோய்களும் ஒவ்வொரு பிறவியிலும் வந்து நாங்கள் நலிந்து துன்பப்படாமல் இருக்க உன்னுடைய திருவடிகளை அடைக்கலமாக அருள்வாயே முருகா!

அருணகிரிநாதர் காலத்தில் மக்களைத் துன்புறுத்திய நோய்களையெல்லாம் சொல்லிவிட்டு… சொல்லாமல் விடப்பட்ட நோய்களையும்.. பின்னால் புதிதாக வரப்போகும் நோய்களையும் பட்டியலில் சேர்த்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே “வேறும் உள நோய்கள்” என்று etc போட்டிருக்கிறார். திடீரென்று எபோலா.. அதையடுத்து ஜிகா வைரஸ். இன்னும் எத்தனை வைரஸ்களை புதுசா விடப்போறாங்களோ. அதையெல்லாம் பட்டியலில் விட்டுறக்கூடாதேன்னு அருணகிரிக்கு ஒரு முன்னெச்சரிக்கை.

சரி.. நோய்களில் இருந்து காப்பாத்துன்னு கேட்டாச்சு. அடுத்து முருகனைப் புகழ வேண்டாமா? அதையும் இப்பப் பாக்கலாம்.

வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅனேக …… இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை …… விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் …… மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு …… பெருமாளே!

பொருள் புரியுறதுக்காக கொஞ்சம் வரிகளை மாத்திப் போட்டுப் படிக்கலாம்.

அனேக இசைபாடி வரும் காலவயிரவர் ஆட
நிறைய போர்ப்பாடல்களை வீரத்தோடு பாடிக் கொண்டு வந்து காலபயிரவர் போர்க்களத்தில் ஆடும் பொழுது

வரும் ஒரு கோடி அசுரர் பதாதி மடிய
படையெடுத்து வருகின்ற கோடிக்கணக்கான அசுரர்கள் மடியும்படி

வடிசுடர்வேலை விடுவோனே
அழகிய கூர்மையான சுடர் போன்ற வேலை விடுகின்றவனே முருகா!

தருநிழல் மீதில் உறை முகில் ஊர்தி தரு திருமாதின் மணவாளா
கற்பக மரத்தின்(தரு) நிழலில் அமர்ந்து அரசு புரியும் மேகங்களை ஊர்தியாகக் கொண்ட தேவர்களின் தலைவன் இந்திரனின் மகளாகிய தெய்வயானையின் மணவாளனே முருகா!

சலம் இடை பூவின் நடுவினில் வீறு தணிமலை மேவு(ம்) பெருமாளே!
நீரால் சூழப்பட்டா பூவுலகத்தின் நடுவில் சிறப்போடு விளங்கும் திருத்தணி மலையில் விளங்க நிற்கின்ற பெருமாளே முருகா!
சலம் இடைப் பூவில்னா.. நீரின் நடுவாக நிற்கின்ற மலரில்னும் பொருள் எடுத்துக்கலாம். ஆனா திருத்தணியில் இருக்குறது மலை. அதுனால பூவுலகில்னு பொருள் எடுத்தாப் பொருத்தமா இருக்கும்.

murugan11இதுதான் Dr.அருணகிரிநாதர் நமக்கெல்லாம் எழுதிய மருந்து prescription. இதை மட்டும் சொன்னாப் போதுமா, மருந்தெல்லாம் சாப்பிட வேண்டாமான்னு கேக்காதீங்க. மருந்துகளைச் சாப்பிடுங்க. கூடவே நம்பிக்கை தரும் இந்தத் திருப்புகழையும் அடிக்கடி சொல்லுங்க. இரண்டும் சேந்து நல்ல பலனைக் கொடுக்கட்டும்.

இந்தத் திருத்தணித் திருப்புகழை எழுதிய இந்த நேரத்தில் உலகத்தில் பலப்பல நோய்களால் துன்பப்படுகின்ற எல்லா மக்களுக்கும் மாக்களுக்கும் அந்தந்த நோய்களையும் அவை கொடுக்கும் துன்பங்களையும் தீர்க்குமாறு முருகனை நான் வேண்டிக்கொள்கிறேன். முருகா! நீயே துணை!

இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி …… விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை …… யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு …… முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் …… அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅனேக …… இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை …… விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் …… மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு …… பெருமாளே!

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in இறை, இலக்கியம், திருப்புகழ், முருகன் and tagged , , , , , , . Bookmark the permalink.

6 Responses to இருமலு ரோக முயகலன் – திருப்புகழ்

 1. amas32 says:

  இப்பாடலை தீரா நோய்கள் உடையவர் தினம் சொல்லி வந்தால் நோய் அகலும் என்று ஒரு நம்பிக்கை உண்டு. இதே மாதிரி முகுந்த மாலையிலும் நாராயணீயத்திலும் ஸ்லோகங்கள் உண்டு. பிறவி எடுத்தால் ரோகங்கள் அண்டாமல் வாழ முடியாது, அதற்கு அருமருந்து இறைவன் திருவடிகளை மறவாமல் நினைப்பதுவே!.

  அருமையான திருப்புகழ் பாடலுக்கு உங்கள் விளக்கம் படிப்பவருக்குத் தெளிவைத் தருகிறது. நன்றி ஜிரா.

  amas32

 2. nparamasivam1951 says:

  கந்த சஷ்டி கவசம் அறிந்து உள்ளேன். திருப்புகழில் இருப்பது உங்கள் மூலம் அறிந்தேன். இந்த பாடல் படிப்பதற்கு ராகத்துடன் கூடிய You Tube தேட ஆரம்பித்து உள்ளேன். அதனுடன் இணைந்து பாடுவது எளிமையானது.உங்களுக்கும் தெரிந்தால் தெரிவியுங்கள்.எனது FBல் நண்பர்களுடன் பகிர்ந்து உள்ளேன்.

 3. குமரன் says:

  என்ன அருமையான திருப்புகழ்! நன்றி இராகவன்!

 4. குமரன் says:

  இருமலும் ரோக முயலகன் வாதம் எரிகுணம் நாசி விடமே நீர்
  இழிவு விடாத தலைவலி சோகை எழுகள மாலை – இவையோடே
  பெருவயிறு ஈளை எரிகுலை சூலை பெருவலி வேறும் உள நோய்கள்
  பிறவிகள் தோறும் எனை நலியாத படி உனது தாள்கள் அருள்வாயே!
  வரும் ஒரு கோடி அசுரர் பதாதி மடிய அனேக இசை பாடி
  வரும் ஒரு கால வயிரவர் ஆட வடிசுடர்வேலை விடுவோனே!
  தரு நிழல் மீதில் உறை முகில் ஊர்தி தரு திருமாதின் மணவாளா!
  சலமிடை பூவின் நடுவினில் வீறு தணிமலை மேவும் பெருமாளே!

  சும்மா பிரித்துப் படித்துப் பார்த்தேன் 🙂

 5. ‘தலைவலி மருத்தீடு காமாலை சோகை சுரம்’ பாடலுக்கும் பதிவு எழுதுங்கள். இராமாயணம் வருகிறதே!

 6. அட்டகாச்மான ப்ரிஸ்கிரிப்ஷனா இருக்கே!!!!!

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s