வே.ஜோ.பூ.ஸ்ரீஸ்ரீஸ்ரீ.அ.பிஇ.எம்டெக்

வேத ஜோதிட பூஷணம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ அஷோக் பிஇ எம்டெக் என்று எழுதியிருந்த பெயர்ப்பலகையை ஒரு முறை சரிபார்த்துக் கொண்டாள் சுதா.

“இதான் மீனா சொன்ன ஜோசியர் வீடு.” சுதா சொன்னது ரமணன் காதில் விழுந்தது. கீழ்ப்பாகத்தில் இருக்கும் ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட்டின் இரண்டாம் மாடியிலிருந்த மூன்றாவது வீட்டின் முன்னால் நான்கு மணிக்கு மேல் சுதா அந்தப் பெயர்ப்பலகையைப் பார்த்தாள். வாசலில் கிடந்த செருப்புக் குவியல்களை ஒரு முறை பார்த்தான் ரமணன். மனைவியின் முகத்தையும் பார்த்தான்.

astrology”கூட்டமா இருக்கும் போல” என்று அவன் பார்வை சொன்னதைப் புரிந்துகொண்டது போலச் சொன்னாள் சுதா. “இவ்வளவு கூட்டம் வருதுன்னா மீனா சொன்ன மாதிரி இவர் ரொம்ப நல்ல ஜோசியராத்தான் இருக்கனும். இப்பயாச்சும் வேள வந்து இங்க வந்தமே.”

காலிங் பெல் சுவிட்சை அழுத்தினாள்.

படக்கென்று கதவு திறந்தது. நீல நிற டாப்ஸ், மேட்சான லெக்கிங்ஸ், பிக்சி ஸ்டைல் சிகையலங்காரம், டெர்ரகோட்டா ஜ்வெல், ஸ்கொயர் பேங்கில், பிந்தி என்று நின்ற அந்த ஐம்பத்தைந்து கிலோ எடையுள்ள ஐந்தரையடி உயர இளம் பெண்ணை நான் வர்ணிக்கப்போவதில்லை. ஆனால் அப்படியொரு பெண்ணை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பது சுதாவின் முகத்தில் பளிச் பளிச்சென்று தெரிந்தது.

“எஸ்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவள் கேட்டது சுதாவுக்குக் கேட்காமல் அவளுக்குப் பின்னால் நின்ற ரமணனுக்குக் கேட்டதில் ஆண்மைப் பரிசோதனையில் அவன் தேர்ச்சி பெற்றான்.

“ஜோசியர் அஷோக் பாக்கனும். அஞ்சு மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட்.” என்று ரமணன் சொன்ன பிறகுதான் ஒரு நிலைக்கு வந்தாள் சுதா.

“ஓ! ஃபைவ் ஓ கிளாக் அப்பாயிண்ட்மெண்ட். எஸ். அப்போ மிஸ் சுதா நீங்கதானா?” என்று சுதாவைக் கேட்டாள்.

“ஆமாங்க” என்று சுதா தலையாட்டியதும் இருவரையும் உள்ளே அழைத்தாள். அதற்கு முன் “செப்பல் கழட்டீட்டு வாங்க” என்று மறக்காமல் சொன்னாள்.

ஹால் முழுவதும் குஷன் வைத்த நாற்காலிகள். கிட்டத்தட்ட இருபது பேர் காத்துக் கொண்டிருந்தார்கள். இருவரையும் உட்காரச் சொல்லி கையில் ஒரு படிவத்தைக் கொடுத்தாள். “இந்த ஃபார்ம் ஃபில்லப் பண்ணீட்டு ரிசப்ஷன்ல ரெஜிஸ்டர் பண்ணீருங்க” என்று மூலையில் கம்யூட்டருக்கு மேல் தலையை நீட்டிக் கொண்டிருந்த பெண்ணைக் காட்டினாள்.

“மூனு மணி அப்பாயிண்ட்மெண்ட் பாத்துட்டிருக்காரு. நீங்க கொஞ்சம் வெயிட் பண்ண வேண்டியிருக்கும்” என்று பிக்சி தலை பெண் சொன்ன போது மணி நான்கரை. ரமணன் அவள் கொடுத்த படிவத்தை நிரப்பி ரூ.250 கொடுத்து உறுப்பினராகப் பதிவு செய்து ஐடி கார்டும் வாங்கிக் கொண்டான். வெல்கம் டிரிங்காக இருவருக்கும் துளசி வில்வ வெற்றிவேர் பானகம் கொடுக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் பிக்சி பெண் மீண்டும் வந்து ஆளுக்கொரு பச்சை நிற கோலிக்குண்டுகளைக் கொடுத்தாள். “இதைக் கைல மூடி வெச்சுக்கோங்க. கண்ண மூடி உங்க பிரச்சனைகள் எல்லாம் தீரனும்னு நெனச்சுக்கோங்க. நெகட்டிவ்வா எதையும் நினைக்காதீங்க. எல்லாமே பாசிட்டிவாதான் யோசிக்கனும். நடுல முழிச்சிக்கலாம். எழுந்து நடக்கலாம். ரெஸ்ட் ரூம் கூடப் போகலாம். ஆனாலும் முடிஞ்ச வரைக்கும் கண் மூடி தியானம் பண்ணுங்க. ஒங்க டைம் வர்ரப்போ நான் கூப்புடுறேன்.”

அவள் கூப்பிட்ட போது மணி ஏழரை. அதுவரையில் சுதாவும் ரமணனும் தியானம் செய்த கதையை எழுத வேண்டுமென்றால் நாவலாக எழுதுவதை விட தொலைக்காட்சி நெடுந்தொடராக்கினால் எல்லா மொழியிலும் ஹிட்டடிப்பது உறுதி.

இருவரும் பிக்சியின் பின்னால் ஒரு அறைக்குள் போனார்கள். ஊட்டி குளிருக்குள் மாட்டிக் கொண்டது போல இருந்தது. இருபத்தாறு நாட்களில் இருபத்தேழைத் தொடப்போகும் ஒரு இளைஞன் அங்கு கோட் சூட்டில் உட்கார்ந்திருந்தான். தப்பு தப்பு வேத ஜோதிட பூஷண ஸ்ரீஸ்ரீஸ்ரீ அஷோக் பிஇ எம்டெக் உட்கார்ந்திருந்தார். இவர்களைப் பார்த்ததும் புன்னகைத்து சோபாவில் உட்காரச் சொன்னார். இருவருடைய பெயரையும் சொல்லி பிக்சி அறிமுகப்படுத்தினாள்.

பிக்சி வெளியே போனதும், “ஜாதகம் கொண்டு வந்திருக்கீங்களா?” என்ற அவரிடம் இரண்டு குட்டி புத்தகங்களை நீட்டினாள். மஞ்சளால் உ என்று எழுதியிருந்த இரண்டு புத்தகங்களையும் வாங்கிப் புரட்டிய பிறகு, “ஜாதகம் ரெண்டையும் பாத்துட்டேன். பிரச்சனைகள் நிறைய இருக்கே. இப்போ என்ன தெரியனும் ஒங்களுக்கு?” என்றார்.

”இவருக்கு ரெண்டு கிரவுண்டு எடம் மடிப்பாக்கத்துல இருக்குங்க. பொண்ணு ஸ்கூல்ல படிக்கும் போதே அதுல சின்னதா வீடு கட்டனும்னு ஆசை. எங்க மாமனாருக்கு திருவண்ணாமலைல பழைய வீடு இருக்கு. அத வித்து இங்க வீடு கட்டலாம்னு பாத்தோம். ஆனா அதுக்கு ஏற்பாடு பண்றப்பல்லாம் எதாச்சும் தடங்கல் வந்துக்கிட்டே இருக்கு. அதுக்கேத்த மாதிரி சொந்தக்காரங்க இப்ப என்ன அவசரம்னு சொல்றாங்க. கொஞ்ச நாள் போனா அப்பார்ட்மெண்ட் கட்டலாமேன்னு சொல்றாங்க. என்ன செய்றதுன்னு எங்களுக்குப் புரியல. அதான் எங்களுக்கு யோகம் இருக்கான்னு பாக்கனுங்க.”

“ம்ம்ம்ம்.. ஒங்க ஹஸ்பண்டுக்கு அஷ்லேஷா நக்‌ஷத்ரம்.” என்று சொல்லத் தொடங்கிய போது, “அவருக்கு அல்சேஷா நட்சத்திரம் இல்லைங்க. ஆயில்ய நட்சத்திரம்.” என்று சுதா குறுக்கு வெட்டினாள்.

ஹாஹாஹா என்று நடிகர் ரகுவரனைப் போல சிரித்துவிட்டு, “அது அல்சேஷா நக்‌ஷத்ரம் இல்லம்மா. அஷ்லேஷா நக்‌ஷத்ரம். தமிழ்ல ஆயில்யம்னு சொல்றீங்கள்ள, அதுக்கு அஷ்லேஷான்னும் பேர் சொல்றாங்க.”

இப்படி ஒன்றுமே தெரியாமல் வளர்ந்து நிற்கும் தன்னுடைய அறியாமையை நொந்து கொண்டு சுதா அவர் சொல்வதைக் கேட்டாள். ஒரு நொடியில் தன்னை நாயாக்கி விட்ட மனைவியின் அரசியல் தந்திரம் எதுவும் புரியாத நல்லவனாய் ரமணனும் அவர் சொல்வதைக் கேட்டான்.

“ரமணன், நீங்க ஹார்ட் ஒர்க்கர். எந்த வேலையும் கொடுத்தா சிறப்பா செஞ்சுடுவீங்க. அது உங்க மாத்ரு புண்யம். அம்மா அப்பா செஞ்ச புண்யம்னு சொல்றாங்கள்ள. அதுதான். உங்கள படிப்பு வேலைன்னு உயர்த்தி விட்டதே அந்த பலம் தான். ஆனாலும் உங்க ஜாதக விதிப்படி எதாவது தடங்கல் வந்துட்டே இருக்கும். ஒரு வேலை நல்லா முடிஞ்சதுன்னு நினைக்கிறப்போ இன்னொரு வேலைல முட்டுக்கட்டை வரும். ஆனாலும் வாழ்க்கை அது ஒரு வழியா அடிப்படைப் பிரச்சனை இல்லாமப் போகும். அதுக்குக் காரணம் உங்க மனைவியோட ஜாதக பலம்.”

இதைச் சொல்லும் போதுதான் சுதாவுக்கு வேத ஜோதிட ஸ்ரீஸ்ரீஸ்ரீ அஷோக் பிஇ எம்டெக்கின் ஜோதிட ஞானத்தின் மீது உண்மையிலேயே நம்பிக்கை வந்தது. அதுவரை ஐடி கம்பெனிக்கு வந்தோமா ஜோதிடம் பார்க்க வந்தோமா என்ற சந்தேகம் அவளது மனதைப் பிறாண்டிக்கொண்டே இருந்தது. இப்போது உண்டான பரிபூரண நம்பிக்கையில் அவர் சொல்வதைத் தொடர்ந்து கேட்டாள்.

சூரியன், சந்திரன், ஏழாமிடம், கேந்திராதிபதி, ஜீவனாதிபதி, சுக்ரதசை, குரு பார்ப்பது, ஜென்ம நக்‌ஷத்ரம், பாக்யஸ்தானம், எட்டாமிடம், பிதுரார்ஜியஸ்தானம் என்ற சொற்களைப் போட்டு அவர் பேசிய பேச்சு எதுவுமே ரமணனுக்குப் புரியவில்லை. ஆனாலும் அவனுடைய அப்பா செல்வகணேசனுக்கு ரமண மகரிஷி மேல் ஈடுபாடு உண்டு என்பதை வேத ஜோதிட ஸ்ரீஸ்ரீஸ்ரீ அஷோக் பிஇ எம்டெக் அவனுடைய ஜாதகத்திலிருந்தே கண்டுபிடித்துச் சொன்ன போது ரமணன் அசந்து போனான்.

”ஜாதகத்துல இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும்…. உங்களுக்கு வீடு கட்டும் யோகம் உண்டு. செய்ய வேண்டிய பரிகாரங்களை தோஷமில்லாம முடிச்சிட்டாப் போதும்” என்று இருவர் வயிற்றிலும் இபாக்கோ ஐஸ்கிரீமைக் கொட்டினார் வே.ஜோ.பூ.ஸ்ரீஸ்ரீஸ்ரீ.அ.பிஇ.எம்டெக்.

”நீங்க யோகம் இருக்குன்னு சொன்னதே ரொம்ப நிம்மதியா இருக்கு. என்ன பரிகாரமா இருந்தாலும் சொல்லுங்க. எந்தக் கோயிலுக்குப் போய்ப் பண்ணனுமோ அங்கயே போய்ப் பண்றோம்.” வீட்டுக்கு பிளான் அப்ரூவலை இப்போதே கையில் வாங்கிய திருப்தியில் சுபா சொன்னாள்.

“Very Good. நவகிரகங்கள் ஒவ்வொருத்தருக்கும் சாந்தி பண்றதுக்காக நவகிரக பலமுள்ள கோயில்களுக்குப் போய் பரிகாரம் பண்றது பழைய முறை. ரிசர்ச் பண்ணி வீட்லயே நவகிரக சாந்தி டெக்னிகலா பண்ற வழிய நான் கண்டுபிடிச்சிருக்கேன். நீங்க அத ரெகுலரா பண்ணீட்டு வந்தாலே போதும்.” சொல்லிக்கொண்டே பெல் அடித்தார் வே.ஜோ.பூ.ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ.அ.பிஇ.எம்டெக்.

உடனே கதவைத் திறந்து கையில் பிறந்தநாள் கேக் போல அட்டைப் பெட்டியோடு வந்தாள் பிக்சி. அந்தப் பெட்டியை வாங்கித் திறந்து வே.ஜோ.பூ.ஸ்ரீஸ்ரீஸ்ரீ.அ.பிஇ.எம்டெக்கின் கண்டுபிடிப்பான நவகிரக எல்.ஈ.டி விளக்கை எடுத்து அவரே டேபிள் மேல் வைத்தார்.

அது என்னவென்று புரியாமல் முழித்த சுதாவுக்கும் ரமணனுக்கும் அவரே விளக்கினார். “இதுதான் என்னோட ரிசர்ச்ல கண்டுபிடிச்ச நவகிரக எல்.ஈ.டி விளக்கு. இதுக்கான பேடண்ட் உரிமை எங்கிட்டதான் இருக்கு. இந்த விளக்குதான் உங்க தோஷங்களை விலக்கப் போகுது. கோவில்ல நீங்க நவகிரகங்களைப் பாத்திருப்பீங்க. அதே வரிசைல இதுல மொத்தம் ஒன்பது எல்.ஈ.டி இருக்கு. ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு நிறம் இருக்கு. சூரியன்னா சிவப்பு. சந்திரன்னா வெண்மை. புதன்னா பச்சை. அந்தந்த கிரகத்துக்கான எல்.ஈ.டி அந்தந்த கிரகத்தோட நிறத்துல எரியும். ஒங்க ஜாதகத்துல கிரகங்கள் இருக்கும் நிலையை வெச்சு இந்த விளக்கை புரோகிராம் செய்ய முடியும். இந்த விளக்கை உங்க வீட்ல தினமும் எரிய விடுங்க. அந்த கிரகங்களோட நிறத்து வெளிச்சம் உங்க மேல படும்போது தோஷங்கள் கொஞ்சம் கொஞ்சமாக் கொறஞ்சு நிவர்த்தியாகும். ரிசப்ஷன்ல பே பண்ணீட்டு உங்களுக்கு ஒரு விளக்கு வாங்கிக்கோங்க. பச்சை மஞ்சள்னு கிரகப்பிரீத்தி நிறங்கள்ள துணிகளை உடுத்திக்கிட்டு வெளிய போக வேண்டிய அவசியமில்ல. வீட்லயே சுலபமா கிரகதோஷ நிவர்த்தி செஞ்சிக்கலாம். வெளிய யார் என்ன சொல்வாங்கங்குற பயமே இனிமே தேவையில்லை.”

“சரி சார். வேற எதுவும் செய்யனுமா? அல்லது செய்யாம இருக்கனுமா?”

“ரொம்ப நல்ல கேள்வி. உங்க மனசுல நம்பிக்கைய வளத்துக்கனும். எதையும் ஜெயிக்க முடியுங்குற எண்ணம் உங்களுக்குள்ள வரனும். உங்க ஜாதகப்படி நீங்க ரெண்டு பேரும் எதையும் எடுத்தேன் கவுத்தேன்னு அவசரப்பட்டு பேசவோ செய்யவோக் கூடாது. ஒரு தடவைக்கு நாலு தடவை நல்லா ஆலோசனை பண்ணிப் பண்ணனும். வீட்ல பெரியவங்க கூட இருந்தா அவங்க கிட்ட ஆலோசனை கேட்டுப் பாருங்க. அவங்களுக்குத் தெரியலைன்னா நல்ல எக்ஸ்பர்ட் பாத்துப் பேசித் தெரிஞ்சிக்கோங்க. உங்களோட ஜன்ம பலம் வீட்டுப் பெரியவங்களும் கூடப்பிறந்தவங்களும் நல்ல நண்பர்களும் தான். உங்க இஷ்ட தெய்வத்தை வணங்குங்க. படிக்கிற ஏழைக் கொழந்தைகளுக்கு உதவி பண்றது உங்க புண்யபலத்தைக் கூட்டும். வாழ்க்கைல பாவகர்மாக்களால கஷ்டம் வரும் போது அந்நேரம் வருத்தப்படுங்க. அழுதுடுங்க. ஆனா அதையே நெனச்சிக்கிட்டிருக்காதீங்க. இதைத் தவிர வேற எந்தப் பரிகாரமும் தோஷநிவர்த்தி ஹோமமும் ஒங்களுக்குத் தேவையில்ல. டெக்னாலஜி வளந்துக்கிட்டிருக்கும் காலத்துல ஆன்மிகத்தை மக்கள் கிட்ட எளிமையாகக் கொண்டு போறதுக்கும் தவறான ஆட்கள் கிட்ட பரிகாரம்னு காசை இழக்குறதையும் தடுக்கத்தான் இந்த புரோகிராமபிள் நவகிரக விளக்கைக் கண்டுபிடிச்சேன். All the best.” என்று கையெடுத்துக் கும்பிட்டார் வே.ஜோ.பூ.ஸ்ரீஸ்ரீஸ்ரீ.அ.பிஇ.எம்டெக்.

“ரொம்ப நன்றி. ஆனா இதுல புரோகிராம் பண்றது எப்படி?”

எந்தச் சந்தேகமும் இல்லாதபடிக்கு அடுக்கடுக்காய்க் கேள்வி கேட்கும் தனது மனைவியை மனதுக்குள் மெச்சினான் ரமணன்.

“அதெல்லாம் உங்களுக்கு ரிசப்ஷன்ல சொல்வாங்க.” என்று சொல்லிவிட்டு பிக்சியைப் பார்த்து, “take them to reception and complete all the formalities” என்று சொன்னார்.

ரிசப்ஷனுக்குக் கூட்டிச் சென்று பிக்சி இருவருக்கும் விளக்கு பற்றி விளக்கினாள். “இந்த விளக்க புரோகிராம் பண்றது ரொம்ப ஈசி. இதுக்காகவே ஒரு மொபைல் ஆப் டெவலப் பண்ணீருக்கோம். உங்க மொபைல்ல அத டவுன்லோட் பண்ணிக்கோங்க. அத டவுன்லோடு பண்றதுக்கு ஜஸ்ட் ருபீஸ் 250தான். ரிசப்ஷன்ல ஒங்களுக்கு ஒரு ஐடி கிரியேட் பண்ணிக் கொடுப்பாங்க. அந்த ஐடி பாஸ்வேர்ட் வெச்சு அந்த ஆப்ல லாகின் பண்ணிக்கனும். உங்க ஜாதகப்படி எப்படி எல்.ஈ.டி எரியனும்னு இங்க இருக்குற செர்வர்ல புரோகிராம் பண்ணீருப்பாங்க. நீங்க ஒங்க மொபைல USB மூலமா நவகிரக விளக்குல கனெக்ட் பண்ணிக்கோங்க. ஆப்ல டவுன்லோடு ஆப்ஷன் செலக்ட் பண்ணா உங்க நவகிரக விளக்கு புரோகிராம் ஆயிரும். எதுவும் சந்தேகம் இருந்தா இந்த மேனுவல் படிங்க. அதுக்கப்புறமும் பிரச்சனை இருந்தா சர்வீஸ் லைன்ல கால் பண்ணா ஹெல்ப் பண்ணுவாங்க. நிமிஷத்துக்கு ஜஸ்ட் அஞ்சு ரூபாதான். இந்த புரோகிராம் ஒவ்வொரு மாசமும் மாறும். உங்க ஆப்ல அதுக்கு நோட்டிபிகேஷன் வரும். உடனே நீங்க புது நிவர்த்தி புரோகிராமை டவுன்லோடு பண்ணிக்கலாம். ஒவ்வொரு டவுன்லோடுக்கும் ஜஸ்ட் ருபீஸ் 250 தான். அடிக்கடி பரிகாரம் பண்றதுக்கு ஆயிரம் ஆயிரமா கொட்டிக் கொடுக்க வேண்டியதில்ல. உங்களுக்கும் அலைச்சல் மிச்சம். இப்போ கன்சல்டேஷன் பீஸ் டென் தவுசண்ட் கட்டி ரெசிப்ட் வாங்கிக்கோங்க. நவகிரக விளக்கு ஃபைவ் தவுசண்ட் தான். அதுக்கு பில்லும் கொடுத்துருவாங்க.”

கேட்கக் கேட்க பிரமித்துப் போனார்கள் சுதாவும் ரமணனும். டெக்னாலஜியின் வளர்ச்சியில் இன்னும் பத்து ஆண்டுகளில் கடவுளோடு பேசும் நிலை வரலாம் என்பதை அவர்கள் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள். ஆனாலும் ஒரு சந்தேகம் ரமணனுக்கு வந்தது. அந்தப் பிக்சியிடம் ஏதாவது கேட்கத் துடித்தவன் அந்தக் கேள்வியைக் கேட்டான். “மேடம், கரண்ட் கட் ஆச்சுன்னா என்ன பண்றது மேடம்? அதுனால எதும் தோஷம்?”

“அந்தக் கவலையே வேண்டாம். இதுல பேட்டரி பேக்கப் இருக்கு. ஒரு தடவ சார்ஜ் ஆயிருச்சுன்னா எட்டு மணி நேரம் எரியும். இதை USB வழியாவும் சார்ஜ் பண்ணிக்கலாம். சிலர் இந்த விளக்கை வீட்ல ஒன்னு கார்ல ஒன்னுன்னு பயன்படுத்துறாங்க. கார்லயே மொபைல் மாதிரி சார்ஜ் பண்ணிக்கலாம்.”

நவக்கிரக எல்.ஈ.டி விளக்கைப் பயன்படுத்தியும் வே.ஜோ.பூ.ஸ்ரீஸ்ரீஸ்ரீ.அ சொன்ன பரிகார அறிவுரைகளையும் பின்பற்றியும் ரமணன் தம்பதியினர் வீடு கட்டப்போவதையும் அதற்கு நாள் குறிக்க இவரிடமே வரப்போவதையும் நான் ஜோதிட மகிமையால் கண்டுபிடித்து உங்களுக்கு முன் கூட்டியே சொல்லிவிட்டேன்.

பின்குறிப்பு : இந்த நவகிரக எல்.ஈ.டி விளக்குக்கும் தோஷப் பரிகார டெக்னாலஜிக்கும் பேட்டண்ட் உரிமை இந்தக் கதையை எழுதிய எனக்கு மட்டுமே உரியது. இதை வேறு வகையிலோ வடிவிலோ முறையிலோ பெயரிலோ தமக்காகப் பயன்படுத்துவதும் மற்றவர்களுக்காகவும் பயன்படுத்துவதும் தர்மப்படி குற்றம். அது மட்டுமல்லாமல் இந்த டெக்னாலஜி சனீசுவர இராகு கேது மந்திர பந்தன முறைப்படி உருவாக்கப்பட்டுள்ளதால், சட்டவிரோதமாகப் பயன்படுத்துவது மிகத் தவறான விளைவுகளை உண்டாக்கும். என்னிடம் பணம் செலுத்தி முறையாக அனுமதி பெற்றால் crack code தரப்படும்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in கதை, சிறுகதை, நகைச்சுவை. Bookmark the permalink.

4 Responses to வே.ஜோ.பூ.ஸ்ரீஸ்ரீஸ்ரீ.அ.பிஇ.எம்டெக்

 1. கலர்கலரா ரீலு..
  அதுக்கு ஏசி ஹாலு..
  இந்த பதிவு நிச்சயமா பட்டதாரிகளுக்குள்ள பதுங்கியிருக்க போலிச் சாமியார்களை தட்டியெழுப்பியிருக்கும் ஒரு வழிகாட்டி. மிஷன் 2023 🙂

  • GiRa ஜிரா says:

   உலக மக்கள் எல்லாரும் மகிழ்ச்சியா நிம்மதியா தோஷமில்லாம இருக்கனுங்குறதுதான் நவக்கிரகநாயகி எனக்கு இட்ட கட்டளை. டெக்னாலஜி மூலமா அதைச் செய்ய வேண்டியது கம்பல்ஷன் ஆஃப் டைம்.

 2. amas32 says:

  விவிசி ஜிரா 😂😂😂
  எனக்கும் ஜோசியர்களிடம் பரிகார விஷயத்தில் நிறைய அனுபவம் உண்டு. இது மாதிரி நடக்க சாத்தியக் கூறுகள் நூறு சதவிகிதம் உண்டு 🙂
  In fact நீங்க ஒரு LED கம்பெனியிடம் டீல் போட்டிருக்கலாம், நவக்கிரக சாந்தி செட் ஐடியாவுக்கு நல்ல ராயல்டி கிடைத்திருக்கும். இப்படி ஓபனா சொல்லிட்டிங்களே 😜😜

  amas32

  • GiRa ஜிரா says:

   கரெக்ட் மா.. ஒரு நல்ல ஜோசியர் கிட்டயும் எல்.ஈ.டி கம்பெனி கிட்டயும் அப்படியே மொபைல் ஆப் டெவலப் பண்ற கம்பெனி கிட்டயும் காண்டிராக்ட் போட்டா ராயல்டி பேங்குல குமியும். என்ன.. பாவக் கணக்கும் குமியும். அதைப் போக்குறதுக்கு நானொரு நவகிரக எல்.ஈ.டி விளக்கு வாங்க வேண்டியிருக்கும் :))))))))))))))))))))))))))))

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s