இறைவி இறைவியா?

iraiviஒரு படம் பாத்த பிறகு அந்தப் படம் ஏன் தோத்ததுன்னு பட்டியல் போடுறது லேசு. ஆனா படத்தோட கருவை உருவாக்கி படத்தை முழுமையாக்கும் வரைக்கும் ஒரு இயக்குநருக்கு பிரசவ வேதனைதான். அதுனாலதான் இறைவி படத்துல என்னென்ன குறைகள்னு நான் இந்தப் பதிவில் பட்டியல் போடப் போறதில்லை.

ஆனா டிவிட்டர்ல இறைவி படம் பத்தி நண்பர் சுதர்ஷன் எழுதிய பதிவில் குறிப்பிட்டிருந்த சில விஷயங்களுக்குப் பதில் சொல்லனும்னு நினைச்சேன். அதுதான் இந்தப் பதிவு.

நண்பருடைய பதிவில் நான் குறித்து வைத்திருக்கும் கருத்துகளை முதலில் பார்ப்போம்.
* பாலச்சந்தர் படங்களிலும்  பெண்களின் கதாப்பாத்திரங்கள்  இயல்பிலேயே புத்திசாலித்தனமும் துடிப்பும் மிக்கவர்களாக இருப்பார்கள் . இந்தப் படத்தின் பாத்திரப் படைப்புகளில் எந்தவிதமான முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.
* காரணம், இதில் வருகிற ஆண்கள் அனைவரும் நல்லவர்கள் என்கிற உண்மையை யாராலும் மறுக்கமுடியாது.

டிவிட்டரில் சுதர்ஷனுடன் உரையாடும் போது நான் “இறைவி பெண்களை முற்போக்கானவர்கள் என்று சொல்வதல்ல. மாறாக ஆண்களைப் பிற்போக்கானவர்கள் என்று சொல்லும் படம்.” என்றேன்.
அதற்கு அவர் “அதற்குப் பெண்களையும் முற்போக்கானவர்களாக காட்டியிருக்கவேண்டும்” என்றார்.

சரி. நான் என்ன சொல்ல வர்ரேன்?

நண்பர் கருத்து : * பாலச்சந்தர் படங்களிலும்  பெண்களின் கதாப்பாத்திரங்கள்  இயல்பிலேயே புத்திசாலித்தனமும் துடிப்பும் மிக்கவர்களாக இருப்பார்கள் . இந்தப் படத்தின் பாத்திரப் படைப்புகளில் எந்தவிதமான முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

என் கருத்து : முற்போக்கான பெண்கள் என்பவர்கள் இயல்பிலேயே புத்திசாலித்தனமும் துடிப்பும் மிக்கவர்களா? ஒருவேளை இறைவி படத்தில் வரும் பெண் பாத்திரங்கள் புத்திசாலித்தனமும் துடிப்பும் மிக்கவர்களாக இருந்தால் என்ன ஆகியிருக்கும்? அவர்கள் தங்களது கணவர்களை சரியான நேரத்தில் திருத்தியோ மாற்றியோ அல்லது அவர்களை விட்டு உடனடியாக விலகியோ இருப்பார்கள். அப்படி இருந்திருந்தால் கண்டிப்பாக அவர்களைப் பாராட்ட வேண்டும். தன்னுடைய வாழ்க்கையைச் சரிப்படுத்திக் கொள்ளத் தெரிந்த புத்திசாலிகள் அவர்கள்.

ஆனால் படத்தில் வரும் பாத்திரங்கள் இயல்பானவை. நாட்டில் இருக்கும் பெரும்பாலான பெண்களைப் போன்றவை. காலம் முழுதும் மகன்களுக்காகவே துன்பத்தையெல்லாம் விழுங்கி வாழ்ந்தது வடிவுக்கரசி பாத்திரம். பிள்ளைகள்தான் குடும்பத்தைப் பிணைக்கும் சங்கிலிகள் என்று ஒரு கருத்து சொல்வார்கள். அந்தப் பிள்ளைகள் இல்லையென்றால் பல குடுங்கங்கள் எப்போதோ உடைந்திருக்குமாம்.

வடிவுக்கரசி பாத்திரம் நடந்த வழியில்தான் அஞ்சலி பாத்திரமும் கமலினி முகர்ஜி பாத்திரமும் நடக்கின்றன. சாதாரணப் பெண்கள் அவர்கள். மகன்களுக்காக ஒரு தாய் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டாள். மகளுக்காக மற்ற இரண்டு தாய்களும் ஒவ்வொரு முடிவு எடுக்கிறார்கள். குடும்பம் என்ற அமைப்பை விட்டு வெளியே வந்து தானும் பிழைத்து பிள்ளைகளையும் முன்னேற்றும் புத்திசாலித்தனம் இல்லாவிட்டாலும் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து விஷத்தைத் தொண்டைக்குள்ளேயே வைத்திருக்கும் நீலகண்டிகளை இறைவி அல்ல என்று எப்படிச் சொல்ல முடியும்?

நண்பர் கருத்து : * காரணம், இதில் வருகிற ஆண்கள் அனைவரும் நல்லவர்கள் என்கிற உண்மையை யாராலும் மறுக்கமுடியாது.

என் கருத்து : இந்தக் கருத்தை நான் முழுமையாக மறுக்கிறேன். கெட்டவர்கள் என்றால் யார்? குடித்துக் கும்மாளம் போடுகின்றவர்களா? கொலை கொள்ளை செய்கின்றவர்களா? ஊழல் செய்கின்றவர்களா? அப்படிப் பார்த்தால் இந்தப் படத்தில் வரும் ஆண் பாத்திரங்கள் அத்தனையையும் செய்கின்றன. பிறகு எப்படி நல்லவர்கள் என்று சொல்ல முடியும்? ஒவ்வொரு குடிகாரனும் கொலையாளியும் கொள்ளைக்காரனும் ஒவ்வொரு நியாயம் வைத்திருக்கத்தான் செய்வான். அதற்கெல்லாம் நியாயம் பார்த்தால் உலகத்தில் எல்லாரும் நல்லவர்களே.

சரி… குடி கொள்ளை கொலையை விட்டுவிடுவோம். அந்த ஆண்களின் அடிப்படைத் பதவியான கணவன் என்ற தகுதியில் செய்த காரியங்கள் எப்படி? பொறுப்போடு குடும்பத்தைப் பார்த்துக் கொண்டார்களா? பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு வழி செய்தார்களா? உருப்படியாக சம்பாதித்தார்களா? மனைவிக்குக் குழந்தையைக் கொடுத்ததைத் தவிர அவர்கள் ஆணாக என்ன செய்தார்கள்? குழந்தையைக் கொடுப்பது மட்டுமே ஆணின் கடமை என்றால் அதற்குக் கணவன் எதற்கு?

ஆக.. எந்த வகையில் பார்த்தாலும் கதையில் வரும் ஆண்கள் பொறுப்பவற்றவர்கள். நல்லவர்கள் அல்லர்.

இப்படிப் பட்ட நல்லவர்கள் அல்லாதவர்களோடு திருமணச் சொந்தம் கொண்டதால் துன்பப்படும் சாதாரணப் பெண்களும் இறைவிகள் தான் என்று கார்த்திக் சுப்புராஜ் சொல்ல வருவதாகவே நான் புரிந்து கொள்கிறேன்.

மேலே நான் சொன்ன காரணங்களால்… இறைவி திரைப்படம் மிக நல்ல திரைப்படம் என்று நான் சான்றளிக்கவில்லை. ஆனால் அந்த மூன்று பெண் பாத்திரங்களும் இறைவிதான் என்று நான் புரிந்துகொண்ட கருத்தை மட்டுமே இந்தப் பதிவில் முன் வைக்கிறேன்.

படம் போரடிக்குது. அதுனால பிடிக்கலைன்னு சொல்லிருந்தா நியாயம். ஆனா… இந்தப் படத்துல  ஆம்பளைங்களைக் கெட்டவங்களாக் காட்டுறதால படம் பிடிக்கலைன்னு ஒரு நண்பன் சொன்னப்போ எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. “எங்க சாதி ஆளைக் கெட்டவனாக் காட்டிட்டான்”னு சொல்றதுக்கும் இதுக்கும் வித்யாசம் இருக்குறதாத் தெரியல.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரைப்படம், விமர்சனம் and tagged , , , . Bookmark the permalink.

3 Responses to இறைவி இறைவியா?

 1. amas32 says:

  அருமை ஜிரா. சரியா சொல்லியிருக்கீங்க. இதில் பெண் ஆண் எடுக்கும் முடிவினால் பாதிக்கப்படுகிறாள். அதை பெண்ணின் புத்திசாலித்தனம் எந்தவிதத்திலும் சூழ்நிலையை மாற்றிவிடாது. மேலும் நல்லவர்/பொறுப்புள்ளவர் இதன் வித்தியாசம் பலருக்கும் தெரிவதில்லை. பொறுபற்ற ஆணினால் தான் அவனை சார்ந்த பெண் துன்பத்துக்கு ஆளாகிறாள்.

  amas32

  • GiRa ஜிரா says:

   மிகச் சரி. இது புரிந்து கொள்ளப்படவில்லை என்பதே வருத்தம்.

 2. அருமையான அலசல். நான் இன்னும் இந்தப் படம் பார்க்கலை. பார்க்காம ஒன்னும் சொல்ல முடியாதே……..

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s