வில்லிபுத்தூர்

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கவும்.

”கோதை பிறந்த ஊர்.. கோவிந்தன் வாழும் ஊர்”ன்னு பாடுனதெல்லாம் அந்தக் காலம். ”(பால்)கோவா பிறந்த ஊர்”ன்னு பாடுறது இந்தக் காலம்.

அப்படிப்பட்ட திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குப் போறதாத்தான் மாலைத் திட்டம். தூங்கி எந்திரிச்ச புதுத் தெம்போட பைபாஸ் ரோட்டு வழியாப் போனோம். வழியில் சாத்தூர்ல சண்முகநாடார் கடைல கருப்பட்டி மிட்டாயும் காராச்சேவும் வாங்க ஊருக்குள்ள போனோம். நாங்க போன நேரம் கருப்பட்டி மிட்டாய் தீந்து போச்சு. அடுத்தநாள்தான் வருமாம். அதுனால காராச்சேவும் கருப்பட்டிச்சேவும் மட்டும் வாங்கினோம். ஏன் சீவல் வாங்கலைன்னு இப்ப வரைக்கும் எனக்குப் புரியல. சரி. மறந்துட்டேன். அடுத்த வாட்டி பாத்துக்கலாம்.

நடிகை ஸ்ரீதேவியோட ஊரான மீனம்பட்டி வழியா சிவகாசி போய்… அங்கிருந்து வில்லிபுத்தூர் போய்ச் சேந்தோம்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது காமராசர் வில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தைத் தமிழக அரசுச்சின்னமாக வைத்தார். ஏன்? சொந்த ஊருக்குப் பக்கத்து ஊர்ல இருப்பதாலா? இல்லையாம். தமிழ்நாட்டுக் கட்டடக்கலையின் சிறப்புக்காக மட்டுமில்லாம கோபுரங்களில் எந்தச் சிற்பங்களும் மதச் சின்னங்களும் இல்லாத காரணத்துனால வில்லிபுத்தூர்க் கோபுரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. வேறு எந்தக் கோயிலுக்கும் மதத்தலங்களுக்கும் இது பொருந்தாம இருப்பது அதிசயம் தான். திருச்செந்தூர் திருப்பரங்குன்றத்துக் கோயில்கள்ள சிற்பங்கள் தெரியுது. சர்ச்சுல சிலுவை தெரியுது. மசூதில பிறை தெரியுது. எதுக்கு வீண் வம்புன்னு காமராஜர் நெனைச்சிருப்பார்னு தோணுது. நேரமிருந்தா “திருவில்லிபுத்தூர்க் கோபுரம் மதச்சின்னமல்ல”ங்குற பிபிசி கட்டுரையையும் படிச்சிருங்க.

Post2-Pic1திருவில்லிபுத்தூர் கோபுரத்தை நேரில் பாத்தப்போ வைணவச் சின்னங்களான நாமங்களும் சங்கு சக்கரமும் பாத்த நினைவு இருந்தது. கோபுரத்தோட பழைய புதிய புகைப்படங்களை ஒப்பிட்டுப் பாத்தப்போ, பழைய கோபுரத்தில் நாமச் சின்னங்களும் சங்கு சக்கரமும் இல்லாம இருந்தது புரிஞ்சது.

சீனிவாசன் இருக்கும் ஊர் முழுக்க ஒரே சீனி வாசம். எல்லாம் பால்க்கோவாக் கடைகள்ள இருந்து வர்ரதுதான். அஞ்சு நிமிசம் அந்தக் காத்தைச் சுவாசிச்சா ஐநூறு காலரி தன்னால ஏறும் போல. அப்படியே மூக்கு வழியா காலரி ஏத்திக்கிட்டு நேரா கோயிலுக்குள்ள போனோம். பன்னிரண்டு ஆண்டுக்குப் பிறகு போனதால கோயில் நிறைய மாறிட்ட மாதிரி இருந்தது. ஆண்டாள் மாலை போட்டு தன்னுடைய உருவத்தைப் பாத்த கண்ணாடிக் கிணற்றைப் பாக்க முடியல. கண்ணாடி அறை வேற மூடியிருந்தது.

கோயில் சிற்பங்கள் எல்லாம் அழகோ அழகு. பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுச் சிற்பங்கள்னு சொல்றாங்க. அவ்வளவு அழகு. நாங்க நேராப் போய் ஆண்டாளையும் மன்னாரையும் பாத்துட்டு கோயில் நந்தவனம் வழியா வடபத்ரசயனர் கோயிலுக்குப் போனோம். இந்த நந்தவனத்துல தான் ஆண்டாளைக் கண்டெடுடுத்திருப்பாரோ பெரியாழ்வார்னு ஒரு ஐயம். ஆமா இல்லைன்னு கேட்டுத் தெரிஞ்சிக்க பெரியாழ்வாரை எங்க போய்த் தேடுறது.

வடபத்ரசயனர் கோயிலும் ரொம்பவே மாறிட்ட மாதிரி இருந்துச்சு. கே.எஸ்.கோபாலகிருஷ்னன் எடுத்த நாயக்கரின் மகள் படத்துல இந்தக் கோயிலும் மேல்மாடங்களும் வரும். ஏற்கனவே பாத்த படம் தான். மறுபடியும் பாத்து கோயில்ல என்னென்ன மாறியிருக்குன்னு கண்டுபிடிக்கனும்.

ஆண்டாளும் சரி.. வடபத்ரசாயியும் சரி… ஏகாந்த சேவை. கூட்டமே இல்லை. ஜருகண்டி ஜருகண்டி பிரச்சனை இல்லாம திருப்தியா கும்பிட்டாச்சு. வடபத்ரசாயி மாடிவீட்டு மாப்பிள்ளை போல. நரசிம்மரைக் கீழ காவலுக்கு வெச்சுட்டு.. மாடில ஜம்முன்னு படுத்துத் தூக்கம்.

வெளிய வந்ததும் நேரா லாலா கடைக்குப் போய் பால்க்கோவா வாங்கிட்டோம். வில்லிபூத்தூர்ல ஆண்டாள் ஸ்னானப் பவுடரும் விறலி மஞ்சளும் கஸ்தூரி மஞ்சளும் கலந்த மஞ்சள் பொடியும் பிரபலம். பெண்கள் குழந்தைகள் குளிக்கப் பயன்படுத்தலாம். பரமபதம், பல்லாங்குழி, வெத்தலை இடிக்கிற உரல், இடியாப்பப் பிழிநர், லொட்டு, லொசுக்கு எல்லாம் பாத்துக்கிட்டே இருந்தா பொழுது தானாப் போயிரும். பர்சும் மெலிஞ்சு போயிரும்.

Post2-Pic2அப்படியே வெளிய வந்தா தள்ளுவண்டில பெரியவர் ஒருத்தர் பால்பன் வித்துட்டுப் போனாரு. கூட வந்தவங்க அதெல்லாம் சாப்டிருக்க மாட்டாங்களேன்னு மூனு வாங்கினேன். இருபது ரூபாய்தான். அதோட ஒரு டிப்ஸ்… ஸ்ரீவில்லிபுத்தூர் லாலாக்கடை பால்கோவா மாதிரி.. அந்தக் கடை மசாலாக்கடலையும் சூப்பர். சென்னைல இருக்கும் பிரபல கடைகளோட மசாலாக் கடலைய விட அட்டகாசமா இருந்தது. அந்தப் பக்கமாப் போறவங்க மனசுல குறிச்சு வெச்சுக்கோங்க.

திரும்பி வர்ர வழியில் எங்க சாப்டுறதுன்னு ஒரு யோசனை. கோயில்பட்டி போற வரைக்கும் பசி தாங்காது. சாத்தூர் உடுப்பி வெங்கடேச விலாஸ்ல சாப்பிடலாம்னு டிரைவர் சொன்னாரு. சரின்னு நேரா அங்க போனோம். அங்க பரிமாறியவர் நல்லாப் பேசிச் சிரிச்சு பரிமாறினாரு. அவர் கிட்ட பேச்சுக் குடுத்து அவரைப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டோம். அவருக்கு வயசு அறுபத்தஞ்சு. கிட்டத்தட்ட இருபத்தஞ்சு வருஷமா அங்க வேலை செய்றாராம். அதாவது நாப்பது வயசுல இருந்து. நாப்பது வயசுல செய்ற வேலையை மாத்திக்கிறதுக்கு பெரிய துணிவு வேணும். அது அவருக்கு இருந்திருக்கு. சாப்பிடாத குழந்தைகளைக் கூடச் சாப்பிட வெச்சிருவாராம். அவர் பேசுனதுல இருந்து…அவர் அந்த வேலைய எவ்வளவு விரும்பிச் செய்றார்னு புரிஞ்சது. மனைவி அமைவதெல்லாம் மட்டுமல்ல… மனசுக்குப் பிடிச்ச வேலை அமையுறதும் இறைவன் கொடுத்த வரம்.

சாப்டுட்டு நேரா லாட்ஜுக்குப் போய்த் தூக்கம். விடியல்ல எழுந்து பக்கத்து மாவட்டத்துக்குப் போறதாத் திட்டம்.

தொடரும்…

அடுத்த பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள், சாத்தூர், திருவில்லிபுத்தூர், பயணம் and tagged , , , , , . Bookmark the permalink.

16 Responses to வில்லிபுத்தூர்

 1. amas32 says:

  சூப்பர் :-}}

 2. குமாரசாமி ராஜா, தமிழ்நாட்டுக்கு முதல்மந்திரியாக இருந்த சமயம் 1950- 1952 தான் அரசுச்சின்னமா ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை தேர்வு செஞ்சதுன்னு நினைக்கிறேன்.

  அந்த நந்தவனத்தில்தான் ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டாள். போன பயணத்தில் விசாரிச்சுட்டேன். நம்ம துளசிதளத்தில் எழுதியாச்சே 🙂

  கன்யாகுமரியா அடுத்தது?

  • GiRa ஜிரா says:

   காமராஜர்னு நினைவு. குமாரசாமிராஜாவான்னு சரி பாக்குறேன் டீச்சர்.

   நீங்க பதிவுல எழுதாம இருந்தாதான் டீச்சர் ஆச்சரியப்படனும் 🙂

 3. tcsprasan says:

  arumai arumaiyo arumai Gira

 4. Lenin says:

  Your writing is Great & interesting. Keep it up.

 5. Pingback: பசுமையான திணை பசுவந்தனை | மாணிக்க மாதுளை முத்துகள்

 6. nparamasivam1951 says:

  இவ்வளவு ஐட்டங்கள் இருப்பது இப்போது தான் தெரிகிறது. குறித்துக் கொண்டேன். அடுத்து செல்லும் சமயம், நிச்சயம் உதவும். ஆமாம் ஏன் நம் மக்கள் திருப்பதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, திருவரங்கம்/திருமுட்டம்/திருவல்லிக்கேணி/திருவில்லிப்புத்தூர் கோவில்களுக்கு கொடுக்கவில்லை? கூட்டமே இருப்பதில்லையே!

  • GiRa ஜிரா says:

   தமிழ்நாட்டுல தமிழ்க்கடவுள் முருகனுக்கு கோயில்ல கூட்டம் அள்ளுதே. அதப் பத்தி என்ன நினைக்கிறீங்க?

   • nparamasivam1951 says:

    அருணகிரி நாதர் தொடங்கி அண்மையில் காலமான TMS வரை முருகனை மக்களிடம் கொண்டு சென்றது, தமிழ் இலக்கியங்கள் முருகனை கொண்டாடி தமிழ் கடவுள் ஆக்கியது, சாதாரண மனிதனும் வழிபடும் வகையில் எளிமையான காவடி எடுப்பது, குறிஞ்சித் தலைவன் ஆகவும், அந்த குறிஞ்சி மகளை மணந்து அவர்களில் ஒருவராக மாறியது…..என பல பல காரணங்கள் சங்கத்தமிழ் கண்ட நக்கீரன் காலம் முதல்–என எண்ணுகிறேன். நீங்கள் எண்ணுவது?

    • GiRa ஜிரா says:

     பெரிய பெரிய விஷயங்களாச் சொல்றீங்க. இந்த அளவுக்கெல்லாம் எனக்கு விவரம் தெரியாதுங்க.

 7. Pingback: திருநெல்வேலி | மாணிக்க மாதுளை முத்துகள்

 8. மதச்சின்னைங்கள் இப்போ இருக்கிறதாலதான், இப்போலாம் தமிழக அரசு விளம்பரைங்கள்ல, திருவில்லிப்புத்தூர் கோபுரத்துக்குபதில் ஸ்டிக்கர் ஒட்டுறாங்ளா 😉 அட அப்போ காமராஜர் ஆட்சி மலர்ந்துவிட்டதா!

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s