திருநெல்வேலி

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கவும்.

ரெண்டாம் நாள் விடியல்ல எழுந்து திருநெல்வேலிக்குப் பொறப்பட்டோம். அன்னைக்குக் காலைல முடிஞ்ச வரை நவதிருப்பதிகளையும் சாயங்காலமா நெல்லையப்பர் கோயிலையும் பாக்கலாம்னு திட்டம்.

கோயில்பட்டி <-> திருநெல்வேலி ரோடு எப்பவுமே நல்லாயிருக்கும். முக்கா மணி நேரம் தான். முந்தியெல்லாம் திருநெல்வேலிப் பசங்க காலைல பஸ் பிடிச்சு கோயில்பட்டி நேஷனல் இஞ்சினிரிங் காலேஜ்ல எறங்கி… படிச்சிட்டோ… பொழுதப் போக்கீட்டோ… சாய்ந்தரமா காலேஜ் முன்னாடியே பஸ் ஏறி திருநெல்வேலிக்குப் போயிருவாங்க. அப்போ அவ்வளவு தூரம் வந்துட்டுப் போறது ரொம்பப் பெரிய விஷயம். இப்பல்லாம் சென்னை பெங்களூர்ல ஆபிசுக்குப் போயிட்டு வர்ரதுக்கு ஆகுற நேரத்தைப் பாக்குறப்போ, அதெல்லாம் ஒன்னுமே இல்ல.

திருநெல்வேலி போற வழில கயத்தாறு காற்றாலைகள், கட்டபொம்மனைத் தூக்கில் போட்ட இடம், தாழையுத்து, சங்கர்நகர் சிமிண்ட் பேக்டரியெல்லாம் பாத்துட்டே போனா… தச்சநல்லூர் வழியா திருநெல்வேலிக்குள்ள நொழையலாம். இரயில்வே கேட் போடாம இருந்தா நல்லது. ஆனா இப்பல்லாம் டோல் ரோடு. சாப்பிட வர ஆள் இல்லாம நேஷனல் இஞ்சினியரிங் காலேஜ் பக்கத்துல இருந்த மோட்டல் மூடியிருக்கு. கயத்தாறுல புதுசா கட்டபொம்மன் நினைவிடம் கட்டியிருக்காங்க போல. தாழையுத்துங்குற பேரே எங்கயும் கண்ல படல. சங்கர்நகர்ங்குற பேர் நிலைச்சிருச்சு. தச்சநல்லூர் வழியாப் போகாம வேற வழியா ஊருக்குள்ள போக முடியுது. அப்படிப் போறதுக்குப் பாலம் கட்டி பதினஞ்சு வருஷம் இருக்கும்னு நெனைக்கிறேன். திருநெல்வேலிக்குள்ளயே போகாம இப்பல்லாம் நாகர்கோயில் போயிறலாம்.

Post3-Pic2மொதநாள் சரியாத் தூக்கம் இல்லாமை.. நல்லா அலைஞ்சது… எல்லாம் சேந்து லேசா வயிறு வலிச்சது. வலியோட வேன் ஏறியாச்சு. தூங்குனா சரியாப் போகும்னு தெரியும். மக்கள் எல்லாரும் போய் நவதிருப்பதிகளைப் பாத்துட்டு வரட்டும். நான் மட்டும் திருநெல்வேலில காலைல தூங்கி ஓய்வெடுக்கலாம்னு முடிவு பண்ணேன்.

அதுக்கேத்த மாதிரி ஹோட்டல் பரணியும் நல்லா வசதியா இருந்தது. வசதியான படுக்கை. போனதும் படுத்துட்டேன். தூக்கம் வரலை. எல்லாரும் எட்டரைக்கு டிபன் சாப்டுட்டுக் கிளம்புறதாத் திட்டம். எட்டேகாலுக்கு என்னைக் கேட்டப்பவும் நவதிருப்பதிக்கு வரலைன்னே சொன்னேன். எட்டு இருபத்தஞ்சுக்கு என்னவோ சரியான மாதிரி இருந்தது. அஞ்சு நிமிஷத்துல மடமடன்னு குளிச்சுக் கெளம்பியாச்சு. பிரச்சனை வராம இருக்க வெண்பொங்கலுக்கு சாம்பார் சட்னி வேண்டாம்னு தயிர் வாங்கிக்கிட்டேன். வெண்பொங்கல் தயிர் கூட்டணி அட்டகாசம். நானும் பொறப்பட்டதுல எல்லாருக்கும் ஒரு மகிழ்ச்சி.

தூத்துக்குடி மாவட்டத்துல இருக்கும் ஒன்பது வணைவ திவ்யதேசங்களுக்கு நவதிருப்பதிகள்னு பேர். அதே மாதிரி நவகைலாசமும் பக்கத்துலயே இருக்கு. இந்த முறை நவதிருப்பதிகளைப் பாக்கலாம்னு முடிவு. தூத்துக்குடி மாவட்டத்துக் கோயில்களா இருந்தாலும் நாங்க நெல்லைல இருந்து தொடங்கினோம். தூத்துக்குடில இருந்தும் தொடங்கலாம். பொதுவா வைணவக் கோயில்கள்ள நவகிரகங்கள் இருக்கிறதில்ல. ஆனா நவதிருப்பதிகள்ள ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு கிரகத்துக்கு உரியதாச் சொல்றாங்க.

அதுல நாங்க மொதல்ல போனது திருவைகுண்டம். கோயில் வாசல்ல எறங்கி கோயிலுக்குள்ள போகுறதுக்குன்னே தனியா ரெண்டு இட்லி சாப்பிட்டிருக்கனும். அவ்வளவு தூரம் மண்டபங்களா இருக்கு.

Post3-Pic3திருவைகுண்டம் கோயில் சூரியனுக்குரிய கோயில். இந்தக் கோயில்ல இருக்கும் பெருமானுக்கு வைகுண்டநாதர் என்று பெயர். ஆதிசேடனின் விரிந்த படத்துக்குக் கீழ் மார்பில் வைகுண்டநாச்சியாரோடு நின்ற கோலம். கூட்டம் இல்லாம நல்ல தரிசனம். சடாரி வெக்கலையோன்னு இன்னும் சந்தேகமா இருக்கு. ஒருவேளை சடாரி வைக்கிற பழக்கம் இந்தக் கோயில்ல இல்லாம இருக்கலாம்.

இங்க இருக்கும் உற்சவருக்கு கள்ளபிரான் என்று பெயர். அதை வடமொழியில் சோரநாதன்னு மாத்தியிருக்காங்க. Chorனா வடமொழியில் திருடன். “நந்தகுமாரா நவநீத சோரா”ன்னு எஸ்.ஜானகி பாடுன பாட்டு நினைவுக்கு வருதா?

சாமி கும்பிட்டதும் ரொம்பவும் நேரம் கடத்தாம அடுத்த கோயிலுக்குக் கிளம்பிட்டோம். ஒன்பது கோயில்களையும் எந்த வரிசைல பாத்தா ஒரே நாள்ள பாத்துறலாம்னு ஒரு கணக்கு இருக்கு. அத அப்படியே ஓரமா வெச்சுட்டு நாங்களா ஒரு வரிசைல போனோம். திருவைகுண்டம் முடிச்சிட்டு ரெண்டாம் திருப்பதியான வரகுணமங்கைக்குப் போகாம ஆழ்வார் திருநகரிக்குப் போனோம்.

ஆழ்வார் திருநகரியோட இயற்பெயர் குருகூர். நம்மாழ்வார் பிறந்த ஊர். அவருக்கு மதிப்புக் கொடுக்க ஆழ்வார் திருநகரி என்று அழைக்கப்படுகிறது. இது வியாழனுக்கான கோயில்.

கோயில் வாசல்ல இறங்கியதும் முன்மண்டபத்துல ஆட்டுப்புழுக்கைகள் வைக்கோல் துணுக்குகள்னு இருந்தது. சுத்தம் பாக்காம நடந்து போனோம். உள்மண்டபங்கள் எல்லாம் நல்லாத் துப்புரவா இருந்தது.

இந்தக் கோயில்லயும் நின்ற கோலம். அதனாலதானோ என்னவோ பொலிந்து நின்ற பெருமான்னு பேரு. ஆதிநாதன்னும் இன்னொரு பேர். தாயாரோட பேர்கள் ஆதிநாதவல்லி குருகூர்வல்லி. இந்தக் கோயிலுக்குள்ள இருக்கும் புளியமரப் பொந்துலதான் நம்மாழ்வார் தவம் செஞ்சிருக்காரு. இந்தப் புளிமரத்துக்கு உறங்காப்புளின்னு பேரு. ஏன்னா.. புளியமரத்து இலைகள் இரவுல மூடவே மூடாதாம். இருட்டுற வரைக்கும் இருந்து பாக்கலாமான்னு நெனச்சாலும்.. புளிய மரம் இருக்கும் இடத்துக்கு இரும்புக் கதவு போட்டு மூடியிருக்காங்க.

அடுத்து போன கோயில் திருக்கோளூர். மொட்டைக் கோபுரமா இருக்கு. ஆனா உள்ள இருக்குறவர் ரொம்பப் பணக்காரர். அவருக்குப் பேரே வைத்தமாநிதிப் பெருமான். மா நிதி வெச்சிருக்காரு. கிடந்த கோலம். பழைய சினிமால வர்ர பணக்கார மாமியார்கள் இடுப்புல வெள்ளிச்சாவிக் கொத்தை செருகிக்கிட்டே தூங்குற மாதிரி, இவரும் கக்கத்தில் மரக்கால்(அளக்கும் படி) வெச்சுக்கிட்டுதான் தூங்குறார். படியில நெல் அளப்பாங்க. உப்பு பருப்பு அளப்பாங்க. இவரு காசு அளக்குறவர். அதுனாலதானோ என்னவோ மத்த கோயில்களை விடவும் கூட்டம். நாலு காசு இருந்தா சுத்தி நானூறு பேர் நிப்பாங்கன்னு சொல்றது சரியாத்தான் இருக்கு. அதோட செவ்வாய் கிரகத்துக்கான கோயில். கேக்கனுமா கூட்டத்துக்கு. கோளூர்வல்லி குமதவல்லின்னு தாயார்கள்.

Post3-Pic1இந்த ஊர்லயும் ஒரு ஆழ்வார் பொறந்திருக்காரு. அவர் பேர்தான் மதுரகவியாழ்வார். இவரும் வைணவர்தான். ஆனா பாருங்க.. திருமாலைப் பாடாம நம்மாழ்வாரையே முன்னிலைப்படுத்திப் பாடியிருக்காரு. நம்மாழ்வாருடைய சீடர்தான் மதுரகவியாழ்வார். தன்னோட ஆசிரியரான ஆச்சாரியாருக்கு அவ்வளவு மரியாதை.

நம்மாழ்வார் மதுரகவியாழ்வாரோட புளியமரத்து உரையாடல் ரொம்பப் பிரபலம். குருகூர்ல மாறன்னு யாரோ ஒருத்தர் புளியமரப் பொந்துக்குள்ளயே இருக்கார்னு கேள்விப்பட்டுப் போய்ப் பாத்திருக்காரு மதுரகவி. வந்து பாத்தா புளியமரப் பொந்துக்குள்ள ஒரு ஆள். மூச்சில்ல. பேச்சில்ல. ஒடம்பும் அசையல. கண்ணு வேற மூடியிருந்திருக்கு. பக்கத்துல கேட்டா பலகாலமா சோறு தண்ணி கெடையாதுன்னு சொல்றாங்க. ஆள் இருக்காரா போய்ட்டாரான்னு தெரியல. சின்னதா ஒரு கல்ல விட்டுப் பாப்போம்னு மதுரகவியும் எடுத்து எறிஞ்சிருக்காரு. கல் பட்டதும் யார்ரான்னு கண்ணத் தொறந்து பாத்திருக்காரு நம்மாழ்வார்.

சரி. ஆள் உயிரோடதான் இருக்கார்னு தெரிஞ்சு போச்சு. பேச்சு வருமான்னு அடுத்த சந்தேகம். கல்ல விட்டு எறிஞ்சதுக்கே ஒன்னும் பேசலையேன்னு சொல்ல விட்டு எறியுறாரு.

“செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?”

“அத்தைத் தின்று அங்கே கிடக்கும்”னு மாறன் கிட்ட இருந்து பதில் வருது.

இறந்து போகக்கூடிய உடம்பில் ஜீவாத்மா பிறந்தால் என்ன செய்யுங்குறது கேள்வி. அததுக்கான தலையெழுத்துப்படிதான் வாழ்ந்து முடிக்குங்குறது விடை. இதுக்கு இன்னும் பெரிய உட்பொருள் இருக்காம். அதெல்லாம் நமக்குப் புரியுறப்போ புரியட்டும். ஆனா மதுரகவிக்கு அப்பவே புரிஞ்சிருச்சு. அதுலருந்து மாறன் சடகோபன் என்னும் நம்மாழ்வாரை ஆசிரியரா ஏத்துக்கிட்டாரு.  குருவே தெய்வம்னு சொல்றோமே. அந்த மாதிரி.

ஆழ்வார்களோட பழைய பட்டியல்ல மதுரகவியாழ்வாரைச் சேர்க்காம இருந்திருக்காங்க. ஆண்டாளையும் தான். பிறகு எப்படியோ ரெண்டு பேரையும் சேத்துக்கிட்டு பன்னிரண்டு ஆழ்வார்கள்னு கணக்கு வந்திருக்கு.

இந்தக் கதைகள் எல்லாம் ஏற்கனவே கேள்விப்பட்டதுதான். ஆனா இதுல சொல்லப்படுற கோயில்கள் எங்கயோ இருக்குன்னு இதுவரைக்கும் நெனச்சுக்கிட்டிருந்தேன். பாத்தா… சொந்த மாவட்டத்துல.. பொறந்த ஊருக்கு ரொம்பப் பக்கத்துல இருக்குது. கண்ணுக்கு இமை தெரியாதுன்னு சும்மாவாச் சொன்னாங்க.

திருக்கோளூர்ல இருந்து அடுத்து எந்த ஊருக்குப் போனோம்னு சொன்னா… பிளாக்/வலைப்பூ வெச்சிருக்குறவங்களுக்கு… குறிப்பா தொடக்ககால பிளாகர்களுக்கு ஒரு பதிவர் கட்டாயமா நினைவுக்கு வருவாரு.

தொடரும்…

அடுத்த பதிவை இந்தச் சுட்டியில் படிக்கவும்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள், திருநெல்வேலி, நவதிருப்பதி, பயணம் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to திருநெல்வேலி

 1. எனக்கும் அவரைநினைச்சால் மனம் கலங்கித்தான் போகுது. ப்ச்….. மகர நெடுங்குழை……

  இந்த நவ திருப்பதிகளை ஒரே நாளில் தரிசனம் செஞ்சுக்கலாம். உள்ளூர் வண்டி ஓட்டுனர்கள் கரெக்ட்டாக் கொண்டு போயிருவாங்க.

  மற்ற கோவில்கள் போல இல்லாம பகல் பொழுதுதான் கோவில் திறந்து வைக்கிறாங்க. இருட்டு முன்போயிட்டு வந்துடலாம். நாங்க அப்படித்தான் போய் வந்தோம். லஞ்சு டைமுக்கு திருச்செந்தூர் போனஸ் கிடைச்சது:-)

  • GiRa ஜிரா says:

   அந்தப் பதிவெல்லாம் தேடி மறுபடியும் படிச்சேன் டீச்சர். மறக்க முடியிற பதிவுகளா? திருச்செந்தூர் போனப்போ என்னோட நினைவு வந்ததுன்னு எழுதியிருந்தீங்களே. 😊

   • Tulsi Gopal says:

    அது என்னமோப்பா… முருகனைப் பார்த்தவுடன் ராகவனும், உண்மைத்தமிழன் சரவணனும் டான்னு மனசுக்குள் வந்துடறாங்க. இப்படி ஒவ்வொரு சாமிக்கு ஒருத்தர்!

 2. amas32 says:

  ஆகா அருமை ஜிரா!

 3. Very Informative 🙂

  கண்ணுக்கு இமை தெரியாதுன்னு சும்மாவாச் சொன்னாங்க. – ஆகா 🙂

 4. Pingback: வில்லிபுத்தூர் | மாணிக்க மாதுளை முத்துகள்

 5. Pingback: மகர நெடுங்குழைக் காதன் | மாணிக்க மாதுளை முத்துகள்

 6. tcsprasan says:

  As usual kalakkal Gira

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s