மகர நெடுங்குழைக் காதன்

சென்ற பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

தொடக்க கால வலைப்பதிவர்களுக்கு டோண்டு இராகவனை நன்றாக நினைவிருக்கும். அவருடைய பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் மகரநெடுங்குழைக் காதனைப் பற்றிச் சொல்லிச் சொல்லி பதிவர்கள் மனதில் அந்தப் பெயரைப் பதித்துவிட்டார். இப்போ டோண்டு இராகவன் அந்த மகரநெடுங்குழைக்காதரோடு சேர்ந்துவிட்டார். அவரோடு பேசிப் பழகியதில்லைன்னாலும் அவரோடு சிறுசிறு கருத்து விவாதங்களை வலைப்பூக்களில் செய்திருந்தாலும் தென் திருப்பேரைக் கோயிலுக்குப் போகும் போது அவர் நினைவைத் தவிர்க்க முடியவில்லை.

டோண்டுவையும் அவரப் பத்திய விமர்சனங்களையும் விட்டுட்டு.. நம்ம பயணத்துக்கு வருவோம்.

Post4-Pic3தென் திருப்பேரையில் பெருமானுக்கு மகர நெடுங்குழைக் காதன்னு பேரு. மீன் வடிவிலான பெரிய குழை(கம்மல்) அணிந்து அமர்ந்த கோலம். காது நல்லா வளந்திருக்கு. கனமான குழைதான் போல. இது வெள்ளி கிரகத்துக்கான கோயில். ஆம்பளையே பெரிய குழைய மாட்டிக்கிட்டா பெண்கள் விட்டுருவாங்களா? இந்தக் கோயில்ல தாயாரும் குழைக்காத நாச்சியார் தான்.

Post4-Pic2அங்கிருந்து பொறப்பட்டு அடுத்து போனது பெருங்குளம். இது சனிக்கோளுக்கான கோயில். இங்க நின்ற கோலம். வேங்கடவாணன்னு பேரு. உற்சவருக்கு மாயக்கூத்தன்னு பேரு.  கூட்டமில்லாம இருந்ததால மடமடன்னு தரிசனம் பண்ணீட்டு அடுத்த கோயிலுக்கு ஓடினோம். ஏன்னா அடுத்த ரெண்டு கோயில்களை ஒரு மணிக்குள்ள மூடிருவாங்க. நேரத்துக்குப் போகலைன்னா அப்புறம் பாக்க முடியாமப் போயிரும். இதுக்காம சாயந்திரம் மறுபடியும் வர முடியாது.

இரட்டைத் திருப்பதிகள் பக்கத்துல பக்கத்துல இருக்கு. இது இராகு-கேதுவுக்கான கோயில்கள். ஊருக்குப் பேர் தொலைவில்லைமங்கலம் அல்லது துலைவில்லிமங்கலம். துலைன்னா தராசு. துலாபாரம்னு சொல்றோமே. அந்தத் துலாபாரத்தைப் போல சரியாக அளந்து நடுநிலையோடு அருள் செய்யும் வில்லை உடையவனின் ஊர். அதான் அந்தப் பேர். ஆனா இரட்டைத் திருப்பதின்னாதான் எல்லாருக்கும் தெரியுது.

இரட்டைத் திருப்பதிகள்ள நாங்க மொதல்ல பாத்தது தேவர்பிரானை. கோயிலுக்குள்ள போகும் போதே சில கிழவிகள் “மோர் குடிங்க. மோர் குடிங்க.”ன்னு டம்ளர்ல எடுத்துக் கொடுக்குறாங்க. நேரமாயிறப் போகுதேன்னு எனக்குப் பதட்டம். கூட வந்தவங்களுக்குக் களைப்பு. அவங்கள்ளாம் குடிச்சிட்டு வந்தாங்க. டம்ளருக்கு அஞ்சு ரூபா. நல்லா இருந்துச்சுன்னு சொன்னாங்க. நான் மடமடன்னு உள்ள போயிட்டேன்.  நின்ற திருக்கோலம். எல்லாரும் வந்து தரிசனம் முடிக்க முடிக்க கோயில் கதவெல்லாம் ஒவ்வொன்னா மூடச் சரியா இருந்தது.

டக்கன்னு பக்கத்துல இருக்கும் செந்தாமரைக் கண்ணனைப் பாக்கப் போனோம். பேருக்கேத்த மாதிரி அழகான பெரிய கண்கள். அமர்ந்த திருக்கோலம். திருப்தியா பாத்து நின்னுட்டிருந்தோம். கூட வந்தவங்கள்ளாம் பிரகாரம் சுத்தப் போயிட்டாங்க. அந்நேரம் பாத்து சிவப்பு அவுலையும் கற்கண்டையும் கலந்து எல்லாருக்கும் பிரசாதமாக் கொடுத்தாங்க. கற்கண்டுகளைப் பெறக்கீட்டு அவுலை மட்டும் சாப்பிடனும்னு நெனச்சேன். பாத்தா… என் கைக்கு அவுல் மட்டுந்தான் வந்திருந்தது. ஒரு கற்கண்டு இணுக்கு கூட வரல. சாப்பிடுறதுக்கு எதுக்கு இடம் பொருள் ஏவல்? அதுவும் பிரசாதத்துக்கு. அங்கயே வாய்ல போட்டுக்கிட்டு வெளிய வந்தேன்.

Post4-Pic1வெளிமண்டபத்துல யானையைப் பாத்தோம். பேர் லட்சுமி. பதினஞ்சே வயசான சின்னஞ் சிறுமி. முகத்துல அப்படியொரு கனிவு. பாத்ததும் தலையை ஆட்டுது. காசை பாகனுக்குக் கொடுத்து லட்சுமி கிட்ட ஆசி வாங்குனோம். பக்கத்துல நின்னு போட்டோல்லாம் எடுத்தோம். வேண்டிய ஆள் பக்கத்துல நிக்குற மாதிரியான ஒரு உணர்வு. போயிட்டு வர்ரோம்னு சொன்னா அதுக்கும் தலையாட்டல். புரிஞ்சு தலையாட்டுச்சோ.. பாகன் சொல்லித் தலையாட்டுச்சோ. ஆனாலும் நமக்குச் சந்தோஷமா இருக்குல்ல.

திடீர்னு கழுத்து மணிச்சங்கிலியை தும்பிக்கையால பிடிச்சிக்கிட்டு பின்னாடியே போச்சு. என்னன்னு கேட்டா.. சிறுநீர் கழிக்கப் போகுதாம். பின்னாடியே நடந்து போய்.. அதுக்கான எடத்துல ஒழுங்கா இருந்துட்டு சமத்தாத் திரும்பி வந்துருச்சு. விட்டுட்டுக் கிளம்ப மனசே இல்ல. ஆனா.. இன்னும் ரெண்டு கோயில்கள் மிச்சமிருக்கே.

அடுத்து நேராப் போனது புளியங்குடி. காய்சின வேந்தப் பெருமான். ஆனா பட்டர் காய்சினி வேந்தன்னு சொன்னார். காய் சின வேந்தன்னா… காய்கின்ற சினத்தை உடைய கருடனை வாகனமாகக் கொண்டவர்னு பொருள். ஆழ்வார் பாடியது அந்தப் பொருளில்தான். காய்சின வேந்தன் காய்சினி வேந்தனாகி.. காசினி(உலகின்) வேந்தனாகி… பூமிபாலகர்னு இப்போ பேர் வந்திருக்கு. தலையைச் சுத்தி மூக்கைத் தொட்ட மாதிரி இருக்கா? மகாவிஷ்ணுவுக்கே பேரையே மாத்தியாச்சு. 🙂

நவதிருப்பதிகள்ள புதனுக்கான ஊர் புளியங்குடி. கிடந்த கோலம். வழக்கமா காலடியில் திருமகள் மட்டும் இருப்பாங்க. இந்தக் கோயில்ல காலடியில் திருமகளும் மண்மகளும் ரெண்டு பக்கமும் இருக்காங்க. அதுனால கருவறை வாசல்ல இருந்து பாத்தா திருவடி தரிசனம் கிடைக்காது. சரணடையுறதே திருவடிகள்ளதான். அந்தத் திருவடிகளே தெரியலைன்னா எப்படின்னு கோயில் பிரகாரத்தைச் சுத்தி வந்தோம். வழக்கமா கோமுகி இருக்கும் எடத்துல (அதாங்க.. அபிஷேகம் பண்ண தண்ணி வெளியே வரும் வழி) ஒரு மேடை இருந்தது. அதுல இந்தப் பக்கம் ஏறி அந்தப்பக்கம் எறங்க வசதியா படிக்கட்டு. என்னன்னு ஏறிப் பாத்தா.. அங்கவொரு ஜன்னல். அந்த ஜன்னல் வழியா காய்சின வேந்தனோட திருவடிகள் தரிசிக்கக் கிடைக்குது. அதுவும் எப்பிடி? திருவடியும் திருமுகமும் திருமகளும் மண்கமளும் ஒரே பார்வைல பாக்க முடிஞ்சது. மத்த கோயில்ல எல்லாம், திருவடியப் பாத்தா திருமுகம் தெரியாது. திருமுகத்தப் பாத்தா திருவடி தெரியாது. இங்கதான் ரெண்டையும் ஒன்னாப் பாக்க முடிஞ்சது. எனக்கு இந்தத் திருப்பதியில் ரொம்பத் திருப்தி.

புளியங்குடி முடிஞ்சதும் அடுத்து நத்தம். வரகுணமங்கைன்னு இன்னொரு பேரும் இருக்கு. இங்க இருப்பது வெற்றி இருக்கைப் பெருமான். விஜயாசனப் பெருமாள்னு இப்போ வழங்கப்படுது. பேருக்கேத்த மாதிரி அமர்ந்த திருக்கோலம். இது சந்திரனுக்குரிய கோயில். இங்க வரகுணமங்கை வரகுணவல்லின்னு தாயார்களுக்குப் பெயர். அதுல வரகுணமங்கை ஊர்ப் பேராகவும் அமைஞ்சிருக்கு.

தூத்துக்குடி மாவட்டத்தை ஒரு குட்டித் தமிழ்நாடுன்னே சொல்லலாம். அஞ்சு வகையான நிலங்களையும் இந்த ஒரு மாவட்டத்துல பாக்கலாம். வியாழக்கிழமை கோயில்பட்டி சுத்துவட்டாரத்து வானம் பார்த்த கரிசல் காடுகள். வெள்ளிக்கிழமை பொருனைன்னு சங்கத் தமிழ் போற்றும் தாமிரபரணி ஓடும் இடங்கள். நவதிருப்பதிக் கோயில்கள் எல்லாமே பொருணையோட ரெண்டு கரைகள்ளயும் அமைஞ்சிருக்கு. இரட்டைத் திருப்பதி மட்டும் ஆத்துக்கு நடுவுல தீவு மாதிரி அமைஞ்சிருக்கு. பக்கத்துல வீடே கெடையாது.

இந்தக் கோயில்கள்ள எல்லாம் பெருசாக் கூட்டமோ வருமானமோ இருக்குற மாதிரித் தெரியல. டிவிஎஸ் நிறுவனம் பராமரிக்கிறதால நல்லா இருக்கு. சில கோயில்கள்ள முந்திரிப்பருப்பெல்லாம் பிரசாதமாக் கெடச்சதுன்னா பாத்துக்கோங்களேன்.

இந்தக் கோயில்களுக்கு வர்ர மக்கள் நாங்க போன மாதிரி கூட்டம் கூட்டமா கார்லயோ வேன்லயோ பஸ்லயோ வர்ராங்க. மடமடன்னு பாத்துட்டு அப்படியே படபடன்னு அடுத்த கோயிலுக்கு ஓடுறாங்க. அதுக்கு மேல கோயில்ல என்ன வேலைன்னு நம்ம மக்கள் முடிவு பண்ணீட்டாங்கன்னு தோணுது.

நவதிருப்பதிகள்ள திருவைகுண்டம்/ஸ்ரீவைகுண்டத்துக்கு மட்டும் ஒரு சிறப்பு உண்டு. அது வைகுண்டமா இருந்தாலும் அது நவகைலாசத்துலயும் அடங்கும். நவதிருப்பதியிலும் நவகைலாசத்திலும் இருக்கும் ஒரேயொரு ஊர் திருவைகுண்டம் தான்.

சரி. நவதிருப்பதிகள் அத்தனையையும் பாத்தாச்சு. அடுத்து என்ன? மதியம் ஆச்சு. பசி. திருநெல்வேலிதான். சாப்பாடுதான்.

தொடரும்…

அடுத்த பதிவை இந்தச் சுட்டியில் படிக்கவும்

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள், நவதிருப்பதி, பயணம் and tagged , . Bookmark the permalink.

13 Responses to மகர நெடுங்குழைக் காதன்

 1. இப்படித்தான் ஓடி ஓடி ஒரே நாளிலே தரிசிக்க வேண்டி இருக்கு. இவையெல்லாம் அந்த 108 இல் இருக்குன்றதால் கணக்குலே கூட்டிக்கிறதுதான்:-)

  • GiRa ஜிரா says:

   நூத்தி எட்டுல நான் எத்தனை பாத்தேன்னு கணக்குப் போட்டுப் பாக்கனும்.
   நவதிருப்பதிகள், திருமாலிருஞ்சோலை, திருவில்லிபுத்தூர், திருப்பதி, திருவரங்கம், திருநீர்மலை, திருவல்லிக்கேணி. மொத்தம் பதினஞ்சுதான் வருது. அதுல ஒன்பது இந்தப் பயணத்துல பாத்தது. 🙂

   • Tulsi Gopal says:

    எங்களுக்கு பூவுலகில் ஒன்பது பாக்கி.

    • GiRa ஜிரா says:

     மிச்சமிருக்கும் பூவுல ஒன்பதுகள் எவைன்னு நான் தெரிஞ்சிக்கலாமா? 😊

 2. amas32 says:

  செமை நடை ஜிரா 🙂 உங்க எழுத்தையும் சொன்னேன் நம்ம ஓட்டத்தையும் சொன்னேன் 🙂

  amas32

 3. இன்னும் இந்த பக்கம் எல்லாம் போகமுடியலை.

  • GiRa ஜிரா says:

   ஒரு எட்டு போயிட்டு வந்துருங்க. அருமையான இடங்கள்.

 4. Pingback: திருநெல்வேலி | மாணிக்க மாதுளை முத்துகள்

 5. tcsprasan says:

  Sema

 6. Pingback: நெல்லை Upper | மாணிக்க மாதுளை முத்துகள்

 7. தமிழ்நாட்டுலே ஒரு 4 (எப்படியோ விட்டுப்போச்சு) , வடநாட்டுலே பத்ரிநாத், அதுக்குப் பக்கத்திலேன்னு ஒரு 4 . அப்புறம் நேபாள்.

 8. nparamasivam1951 says:

  நல்ல ரயில்/பஸ் வசதிகளும், பாதுகாப்பான தங்கும்/உணவு விடுதிகளும் இல்லாத காரணத்தால் தான், மக்களின் வேன்/கார் விசிட், மற்றும் அவசர விடை பெறுதல். ரயில் வசதி வேண்டுமானால் தமிழக அரசால் முடியாது போகலாம். மற்ற வசதிகள் செய்யலாமே. அரசுக்கும் உண்டியல் வருமானம் பெருகும்

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s