நெல்லை Upper

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.

நாங்க ஒன்பது கோயில்களையும் முடிக்கிறப்போ மணி ஒன்னே முக்கால். எல்லாருக்கும் பசி. நேரா வண்டியைத் திருநெல்வேலிக்கு விட்டோம். பாளையங்கோட்டைக்குள்ள நுழைஞ்சதும் டிராபிக். அப்போ வேடிக்கை பாக்குறப்போதான் வேடிக்கையா ஒரு விஷயம் கண்ணுல பட்டது. பாளையங்கோட்டைல நிறைய முறுக்குக் கடைகள் இருக்கு. விதவிதமா முறுக்குகளைச் சுட்டு வெச்சிருக்காங்க. சொல்லி வெச்சாப்புல என் கண்ல பட்ட அத்தனை கடைகள்ளயும் “முருக்கு கடை”ன்னு எழுதியிருந்தாங்க. பொதுவா மாப்பிள்ளை முருக்குன்னு சொல்வாங்க. முருக்குன்னா இளமை. ஆனா இப்பல்லாம் மாப்பிள்ளை முறுக்குன்னு சொல்லி பல மாப்பிள்ளைகள் முறுக்கிட்டுப் போறாங்க. முறுக்கிட்டுப் போக வேண்டிய முறுக்கு முருக்கிட்டுப் போகுது. பாளையங்கோட்டை மக்களே, கொஞ்சம் தமிழைக் கவனிங்க. 🙂

அதே மாதிரி… என் கண்ல மட்டும் எப்படித்தான் படுமோ… பாளையங்கோட்டைல “அருணகிரி” தெருன்னு ஒரு சின்ன சந்து இருக்கு. அருணகிரிநாதருடைய திருப்புகழ் என்னோட உயிருக்கு நெருக்கம். திருநெல்வேலில அருணகிரின்னு ஒரு தியேட்டர் கூட இருக்கு. தோழர்களோட படத்துக்குப் போனத நெனச்சிக்கிட்டேன்.

பசி மயக்கத்துல வேற என்னென்ன இருக்குன்னு சரியாப் பாக்க முடியல. சுலோச்சனா முதலியார் பாலத்தத் தாண்டும் போது ஆத்துல தண்ணிக்குப் பதிலா ரசம் ஓடுற மாதிரி தோணுச்சு. சொன்னாலும் சொல்லாட்டியும் திருநெல்வேலி மக்கள் ரசமான மக்கள் தான்.

நேரா ஹோட்டல் பரணிக்கே வந்து ஒரு மீல்ஸ். தட்டுல பாதி அளவுக்கு அப்பளம். ஆனையடி அப்பளம் போல. பிரமாதமான சாப்பாடு. அந்த மயக்கத்துல லேசா ஒரு தூக்கம். சாயந்திரம் எல்லாரும் கீழ இருந்த டைனிங் ஹாலுக்கு டிபன் சாப்பிடப் போனோம். காபி டீ குடிக்கிற பழக்கம் எனக்கு இல்ல. ஜீனி போடாம லெமன் டீ போட்டுத் தரமுடியுமான்னு கேட்டேன். ஒரு நொடி யோசிச்சாரு சர்வர். “சார் எல்லாத்தையும் தனித்தனியா கொண்டு வந்து தர்ரேன். உங்களுக்கு வேணுங்குறதக் கலந்துக்கோங்க”ன்னு சொன்னாரு. அது போதாதா நமக்கு. டபரா செட்டுல பிளாக் டீ. ஒரு கப்புல ஜீனி. அரைமூடி எலுமிச்சை. சிறப்போ சிறப்பு.

நெல்லையப்பர் கோயிலுக்குப் போற வழியெல்லாம் பழைய சினிமாக்கள்ள கொசுவத்தி சுத்துற மாதிரி போற பலப்பல இனிமையான நினைவலைகள். வீட்டு மொட்டைமாடில நின்னு தேர் இழுக்கிறப் பாத்ததெல்லாம் ஞாபகம் வந்தது. அதுவொரு காலம். நம்மால எதைச் சேமிக்க முடியுதோ இல்லையோ… நல்ல நினைவுகளை சேமிச்சு வெச்சுக்கனும். நினைத்தாலே இனிக்கும்.

அங்க போனதும் நேரா கோயிலுக்குப் போனோம்னா நெனைக்கிறீங்க? ஆண்டவன் காத்திருப்பாரு. அல்வா காத்திருக்குமா? இருட்டுக்கடை அல்வா தீந்து போற வரைக்கும் தான் தொறந்திருக்குமாம். அதுனால மொதல்ல போய் ஆளாளாக்கு ஊருக்குக் கொண்டு வர்ரதுக்கு அல்வா வாங்குனோம். அப்படியே அம்பது அம்பது கிராமா வாழையிலைல வாங்கி எல்லாரும் சாப்டாங்க.

Post5-Pic2இருட்டுக்கடை எங்க இருக்குன்னு தேட வேண்டாம். கோயிலுக்கு எதுக்க எங்க மக்கள் கூட்டமா இருக்காங்களோ அதுதான் இருட்டுக்கடை. பேர் இருக்காது. விளம்பரம் இருக்காது. கூட்டம் தான் விளம்பரம். இன்னும் பழைய மாதிரி மரப்பலகைகளை அடுக்கித்தான் கடையைப் பூட்டுறாங்க. கடைல பாடகி பி.சுசீலா கையால விருது வாங்கிய படத்தைப் பெருசா மாட்டி வெச்சிருக்காங்க. கடைக்குப் பகல்ல போனா பூட்டித்தான் இருக்கும். பொழுது சாய நாலரை மணிக்குதான் கடை தொறப்பாங்களாம்.

அப்படியே உள்ள எட்டிப் பாத்தேன். செவசெவன்னு மினுமினுக்குற அல்வாவைக் கத்தியால நசுக்நசுக்குன்னு வெட்டி ஒருத்தர் பாக்கெட் போட்டுக்கிட்டிருந்தாரு. இந்த வேலைய எத்தனை வருஷமா செஞ்சிக்கிட்டிருக்காரோ! அவருக்கு அல்வான்னாலே சலிச்சுப் போயிருக்கும்னு நெனைக்கிறேன். அவரு யார் வீட்டுக்காவது போய் அவருக்கு தட்டுல அல்வா வெச்சு சாப்பிடக்கொடுத்தா என்ன நெனப்பாருன்னு யோசிச்சுப் பாத்தேன். நீங்க என்ன நெனைக்கிறீங்க?

Post5-Pic1செருப்பு விடுற எடத்துலயே அல்வாப் பைகளையும் வெச்சு அதுக்கும் தனியா டோக்கன் வாங்கிக் கிட்டோம். கோயில்ல நல்ல கூட்டம். வெள்ளிக்கிழமை வேற. சொல்லனுமா கூட்டத்துக்கு! வெள்ளை நந்தி சங்கீதத் தூண்களையெல்லாம் பாத்துட்டு கோயிலுக்குள்ள போனோம். நல்ல தரிசனம். நெல்லையப்பரைப் பாத்துட்டு வரும்போது பக்கத்துலயே இன்னொரு அறையில் பள்ளிகொண்ட அரங்கன். கை தொடுற அளவுக்குப் பக்கத்துல நின்னு பாக்கலாம். வெச்ச கண்ணு எடுக்க முடியாது. எவ்வளவு நேரம் நின்னாலும் யாரும் எதுவும் ஒன்னும் சொல்லலை.

கிட்டத்தட்ட பதினைஞ்சாம் நூற்றாண்டுல நெல்லைக்கு வந்திருக்காரு இந்த அரங்கன். நாளாக நாளாக .. சரியா எப்பன்னு தெரியல.. ஒரு காலகட்டத்துல அந்த அறை வாசலை கல்லும் சுண்ணாம்பும் வெச்சுப் பூசிட்டாங்க. பூசி மூடியதுக்கு என்ன காரணமோ தெரியல. இருபதாம் நூற்றாண்டுல மறுபடியும் வெளிய வந்துட்டாரு அரங்கன்.

அப்படியே வரிசையா தாமிர அம்பலம், முருகன், காந்திமதி அம்மனையெல்லாம் பாத்தாச்சு. இதுக்கு நடுவுல எங்க கூட்டம் ரெண்டாப் பிரிஞ்சுருச்சு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பக்கமாப் போய் சாமி கும்பிட்டுட்டு காந்திமதி அம்மன் சன்னதிக்கு முன்னாடி ஒன்னு சேந்துட்டோம். தானாப் பிரிஞ்ச கூட்டம் தானாச் சேந்துருச்சு.

Post5-Pic3நெல்லையப்பர் கோயில்ல ஒரு பிள்ளையார் இருக்காரு. அவருக்குப் பேரு பொல்லாப் பிள்ளையார்னு எழுதி வெச்சிருக்காங்க. ரொம்பப் பொல்லாதவரா இருப்பாரோன்னு நெனைக்கிறீங்களா? அவரோட பேரு பொள்ளாப் பிள்ளையார். பொள்ளுதல்னா உளியால செதுக்குதல். உளி பட்டுப் பொள்ளாமல் தானே வந்த பிள்ளையார். அதுனால பொள்ளாப் பிள்ளையார்னு பேர். நம்ம மக்கள் பேரை மாத்தீட்டீங்க. பேரை கெசட்ல மாத்தனும்னா.. நோட்டரிக்குப் போகனும்.. பேப்பர்ல விளம்பரம் கொடுக்கனும்.. யாருக்கும் அதுல பிரச்சனை இல்லைன்னா பேர மாத்த அனுமதி கிடைக்கும்.. மாத்துன பேரை மறுபடியும் பேப்பர்ல விளம்பரம் கொடுக்கனும். இது எதுவுமே தேவைப்படாம பிள்ளையார் பேரை எவ்வளவு லேசா மாத்தீட்டாங்க.

இதே மாதிரி வெள்ளைப் பிள்ளையார்னு ஒருத்தரை வெல்லப்பிள்ளையார்னு மாத்தீட்டாங்கன்னு படிச்ச நினைவு வருது. யாரும் பிள்ளையாரைத் தொட்டு வாயில வெச்சு இனிக்கிறாரான்னு பாக்காம இருந்தாச் சரி.

கோயிலைச் சுத்தி வர்ரப்போ கோயில் யானையைப் ஃபோட்டோ பிடிக்கலாம்னு நெனச்சா.. பாகன் ரொம்ப அதட்டுனாரு. சரிதான் போய்யான்னு ஒரு ஃபோட்டோ எடுத்துட்டுதான் கெளம்புனோம். மரியாதையாச் சொல்லிருந்தா காசு குடுத்து போட்டோ எடுத்திருப்போம். அலட்டலுக்கு அலட்டல் தான் பதில்.

நெல்லையப்பர் கோயிலுக்கு வெளிய சுத்தி நிறைய பாத்திரக்கடைகள். இப்படி பாத்திரக்கடைகளை கோயில் வாசல்ல வைக்கிறதுக்கு என்ன உளவியல் காரணம் இருக்கும்? ஒருவேளை பெண்கள் கோயிலுக்கு நிறைய வருவாங்கன்னு நெனச்சு வெச்சிருப்பாங்களோ? திருநெல்வேலி பாத்திரக்கடை மட்டுமில்ல.. அல்வாக்கடை… ஆரெம்கேவி போத்தீஸ் துணிக்கடைகள். கோயில்பட்டில இருந்தப்போ துணியெடுக்கனும்னா திருநெல்வேலிக்கு வந்து எடுத்துட்டு ஜானகிராம்ல சாப்டுட்டு அரசன்ல ஐஸ்கிரீம் சாப்டுட்டுப் போறதுன்னு இருந்ததெல்லாம் ஃபிளாஷ்பேக்கா கண்ணு முன்னாடி வந்தது. டக்குன்னு ரப்பர் எடுத்து வரைஞ்ச படத்த அழிக்கிற மாதிரி அழிச்சிட்டு ஹோட்டலுக்குப் போனோம்.

டின்னரும் ஹோட்டல் பரணிலதான். சும்மாச் சொல்லக்கூடாது. அந்த ஃபுல்காவும் தால் ஃபிரையும் சூப்பர். திருநெல்வேலிக்குப் போறவங்க ஹோட்டல் பரணிய நினைவு வெச்சுக்கோங்க. ஜங்சன்ல இருக்குறதால ரொம்பவே வசதி. நல்ல இண்டீரியர். ஹால்ல இருக்கும் டிவிக்கு பாத்ரூம்ல எக்ஸ்டிரா ஸ்பீக்கர். நீங்க பாட்டுப் போட்டு விட்டுட்டு பொறுமையா குளிக்கலாம்.

காலைல செக்கின் பண்றப்போ ஒரு கூத்து நடந்தது. அத அப்போ சொல்ல மறந்துட்டேன். அதுனால இப்போ சொல்றேன். செக்கின் பண்ணதும் ரூம்ல பையெல்லாம் வெச்சுட்டு டீ காபி குடிக்க கீழ வந்துர்ரதா முடிவு. நானும் ரூம்ல பைய வெச்சுட்டு கதவ வெளியருந்து மூடுறேன்… மூடமாட்டேங்குது. எதோ தடுக்குது. ரெண்டு மூனு வாட்டி பலமா இழுத்து மூடினேன். மூனாவது வாட்டி மூடிருச்சு. எதுக்கும் ஒரு வாட்டி தொறந்து பாக்கலாம்னு சாவியைப் போட்டா கதவைத் தெறக்க முடியல. ஆகா… எதோ தப்பு செஞ்சிட்டோம்னு மட்டும் புரிஞ்சது. (காலைல திருநெல்வேலிக்கு வர்ரப்போ லேசா வயித்துவலின்னு சொன்னதையும் இப்போ நீங்க ஞாபகம் வெச்சுக்கனும்).

ஹோட்டல் ரிசப்ஷனுக்குச் சொல்லி அனுப்பினோம். அவங்களும் வந்து என்னென்னவோ பண்றாங்க. முடியல. கடைசியா எப்படியோ கதவைத் தொறந்துட்டாங்க. பாத்தா… கதவுல ஒரு கொண்டித் தாழ்ப்பாள் வேற உள்ள இருந்திருக்கு. அந்தக் கொண்டித் தாழ்ப்பாள் வெளிய நீட்டீட்டு இருந்திருக்கு. நானும் கவனிக்காம வெளிய இருந்து இழுத்து அடிச்சு மூடியிருக்கேன். அது எதுலயோ சிக்கிக்கிட்டதால கதவைத் தொறக்க முடியல. ஆகையால மக்களே… எந்த ஹோட்டல்ல தங்கினாலும் கதவைப் பூட்டுறதுக்கு முன்னாடி கதவோட ரெண்டு பக்கமும் ஒரு வாட்டி பாத்துட்டு மூடுங்க. ஆனா எந்த முகச்சுளிப்பும் இல்லாம கதவைச் சரி செய்து குடுத்த ஹோட்டல் பரணியின் நிர்வாகத்துக்கு நன்றி.

சரி… இப்போ வெள்ளிக்கிழமை இராத்திரிக்கு வருவோம். நல்ல அலைச்சலுக்குப் பிறகு நல்ல சாப்பாடு.. அடுத்து என்ன? நல்ல தூக்கம் தான். அடுத்த நாள் மறுபடியும் தூத்துக்குடி மாவட்டத்துக்குப் போகனுமே.

தொடரும்…

அடுத்த பதிவை இந்தச் சுட்டியில் படிக்கவும்

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள், திருநெல்வேலி, பயணம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

16 Responses to நெல்லை Upper

 1. நாங்க தங்குன இடமும் நல்லாத்தான் இருந்துச்சு. ஆட்டோ லாக் இருக்குமிடங்களில் பழகிப்போன நம்மவர் அறைக் கதவை இழுத்து சாத்தியவர் திரும்பத் தள்ளிப் பார்த்திருக்கலாம். செய்யலை. நாங்க ஊரெல்லாம் சுத்திட்டுத் திரும்ப அறைக்குப்போனால் கதவில் கை வச்சதும் தானாய் திறந்துக்கிச்சு. திடுக்னு ஆகிப்போச்சு எனக்கு. உள்ளே போனால் எல்லாம் வச்சது வச்சபடியே! தின்னேலி மக்கள் கையில்தான் வீச்சரிவா. மனசு தங்கம்னு புரிஞ்சது அன்றைக்கு:-)

  • GiRa ஜிரா says:

   ஆகா… ஆகா.. நம்ம மக்கள் நல்ல மக்கள். அவங்கள்ளாம் நல்லாருக்கட்டும் 🙂

 2. வடுவூர் குமார் says:

  அல்வா சாப்பிடர வயசு! என் ஜாய்.

  • வாழ்க்கையில் எப்போதோ ஒருமுறை ஒரு அம்பது கிராம் அல்வா, அதுவும் ஒரிஜினல் இருட்டுக்கடையில் வாங்கி முழுங்குனா, தப்பா யுவர் ஆனர்?

   • GiRa ஜிரா says:

    அம்பது கிராம் வாங்கி அதோட திருப்திப் பட்டுக்கிற மனசா நமக்கெல்லாம்? தொட்டால் தொடரும்னு தெரியுமே 🙂

 3. Pugazhenthi says:

  ஜிரா, குறும்பும் நகைச்சுவையும் ததும்ப எழுதும் உங்கள் எழுத்து நடையழகு வாசிக்க வாசிக்க, அம்மாவின் கை பால்ச் சோறாக சுவைக்கிறது. – புரா .

 4. pvramaswamy says:

  அட்டகாசம்!

 5. Pingback: திருச்செந்தூரின் கடலோரத்தில் | மாணிக்க மாதுளை முத்துகள்

 6. Pingback: மகர நெடுங்குழைக் காதன் | மாணிக்க மாதுளை முத்துகள்

 7. nparamasivam1951 says:

  ஆமாம் சார், சிதம்பரம், திருநெல்வேலி, திருச்செந்தூர் ஆகிய கோவில்களில் சைவம் வைணவம் இணைந்து, ரங்கநாதரையும் தரிசிக்கிறோம். நவதிருப்பதி பதிவுகளில் இதுபோல் இல்லை. நெல்லை அருகே ஒரு வைணவக் கோவிலில் சிவலிங்கம் அல்லது நடராஜரோ இருந்து, அதனை எடுத்து அதனால் சில கோர்ட் வழக்குகள் நடந்தது என அறிகிறேன். மேலதிக தகவல்கள் ஏதும்?

  • GiRa ஜிரா says:

   விவரங்கள் நிறைய உங்களுக்குத் தெரிஞ்சிருக்கே. நீங்களே சொல்லலாமே. நாங்களும் அதுனால தெரிஞ்சுக்குவோம்.

 8. அருமையான பதிவு. நானும் திருநெல்வேலி தான். உங்க பதிவு ஊரை ஒரு முறை வலம் வந்தது போல் இருந்தது.

 9. எட்கர் says:

  அன்பு நண்பர் ராகவனுக்கு தங்களின் திருநெல்வேலி கட்டுரை பாளையம்கோட்டை சென்று வந்த உணர்வை தந்தது. நாங்கள் கொஞ்சம் இயற்கையாகவே முருக்கு மிகுந்தவர்கள் என்பதால் முருக்கு கடை என்று எழுதி வைத்து இருக்கலாம் . நான் படிக்கிற காலத்தில் பருப்பாக இருந்தது இப்போது தால் ஆக மாறி விட்டது என்று நினைக்கிறேன் 🙂 .

  உங்களின் தமிழ் படித்தால் “ஜீரா” போல் இனிக்கிறது.

  -எட்கர்

  • GiRa ஜிரா says:

   வணக்கம் அன்பு எட்கர். படிச்சு ரசிச்சதுக்கு நன்றி + மகிழ்ச்சி 🙂

   பருப்பு தாலாச்சு
   சோறு ரைஸ் ஆச்சு
   தயிர் கர்ட் ஆச்சு
   மீன் ஃபிஷ் ஆச்சு
   இது முறுக்கு முருக்காகுறதெல்லாம் நாம பொங்கக் கூடாது 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s