திருச்செந்தூரின் கடலோரத்தில்

சென்ற பதிவை இந்தச் சுட்டியில் படிக்கவும்.

சனிக்கிழமை காலைல ஒன்பது மணிக்கெல்லாம் திருச்செந்தூர் கோயில்ல இருக்கனும். அங்க சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க.

Post6-Pic2திருச்செந்தூருக்கு எத்தனை வாட்டி போயிருக்கேன்னு கணக்கே தெரியாது. தூத்துக்குடி புதுக்கிராமத்துல திருச்செந்தூர் போற பஸ் எல்லாமே நிக்கும். அங்கயே பஸ் ஏறி பலநாள் கோயிலுக்குப் போயிருக்கோம். நான் நிறைய வாட்டி போன பெரிய கோயில் திருச்செந்தூரா இருந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல. நான் வளந்த காலத்துல தூத்துக்குடியும் வேகமா வளந்தப்ப, “இப்படியே போச்சுன்னா தூத்துக்குடி திருச்செந்தூர் வரைக்கும் வளந்துரும் போல”ன்னு பெரியவங்க பேசிக்கிட்டது இப்போ நினைவுக்கு வருது.

தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் போனா உப்பளங்களையெல்லாம் பாத்துட்டுப் போகலாம். ஆத்தூர் காயல்பட்டினம்னு ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு விதம். தூத்துக்குடி – திருச்செந்தூர் போற வழியில் இருக்குறதெல்லாம் வெச்சே ஒரு புத்தகம் எழுதிறலாம். அவ்வளவு இருக்கு. நாங்க திருநெல்வேலியில் இருந்து போனதால அழகழகான வயல்வெளிகள் வழியாகப் போனோம்.

திருச்செந்தூரும் ரொம்பவே மாறிப்போச்சு. ஆனா திருச்செந்தூர் இராஜகோபுரம் மட்டும் எப்பவும் திறக்காம இருக்கு. அதுக்கு என்ன காரணமோ தெரியல. கந்த சஷ்டியப்போ மட்டும் ஒரு நாள் திறப்பாங்க. ஆனா யாரும் அந்த வழியாப் போக முடியாது. அந்த இராஜகோபுரம் வழியா நேராக் கடலுக்குப் போய் கால நனைச்சிக்கிட்டோம். அப்படியே துலாபாரம் நடக்குற எடத்துக்குப் போனோம். அங்கிருந்து சிறப்பு தரிசன வழியில் உள்ள போனோம். வழக்கத்தை விட கூட்டம் குறைவா இருந்த மாதிரி தோணுச்சு. கூட்டீட்டுப் போனவர் முருகனுக்கு முன்னாடி உக்கார வெச்சிட்டாரு. பாத்தா உள்ள குளிச்சிக்கிட்டிருக்கான் முருகன். பால் குளியல். குளியலும் தீபாராதனையும் மாறி மாறி நடக்குது. எந்த உணர்ச்சியுமில்லாம தேமேன்னு பாத்துக்கிட்டிருந்தேன். சரி. நமக்குத்தான் பக்தி கொறஞ்சு போச்சுன்னு நெனச்சுக்கிட்டேன்.

Post6-Pic1திருநீறு வாங்கிப் பூசிக்கிட்டு பஞ்சலிங்கங்களைப் பாக்கப் போனோம். பஞ்சலிங்கங்கள் கருவறைக்குப் பின்னாடி இருக்கு. அதுக்கு குகை மாதிரி வழியில போகனும். எனக்குப் பொதுவா அந்த மாதிரி குறுகலான எடங்கள்ள போனா ஒரு படபடப்பும் பயமும் வரும். உள்ள லைட் வசதியெல்லாம் இருந்துச்சு. ஆனாலும் திடீர்னு லைட் போயிருச்சுன்னா? மக்களுக்கு ஒரு பயம் வந்து ஒருத்தர் மேல ஒருத்தர் இடிச்சிக்கிட்டாங்கன்னா? மூச்சு முட்டீருச்சுன்னா? திடீர்னு அதாயிருச்சுன்னா.. திடீர்னு இதாயிருச்சுன்னா.. இன்னும் என்னென்னவோ பயங்கள் மூளைல வரும். இதத்தான Claustrophobiaன்னு சொல்றாங்க. அதைக் கட்டுப்படுத்திக்கிட்டு உள்ள போனேன். பஞ்சலிங்கங்களைப் பாத்ததும் ஒரு கும்பிடு போட்டுட்டு சட்டுன்னு வெளிய வந்துட்டேன். மத்தவங்கள்ளாம் நின்னு கும்பிட்டுக்கிட்டு இருந்தாங்க.

வெளிய வந்து பெருமூச்சு விட்டு மத்தவங்க வர்ரதுக்காக காத்துக்கிட்டிருந்தேன். அங்க போய் நில்லுங்கன்னு தள்ளினாங்க. பாத்தா மறுபடியும் கருவறை முன்னாடி. இந்த முறை கருவறை வாசல்ல நிக்கிறேன். உள்ள முருகன் பால் குளிச்சிக்கிட்டிருக்கான். எனக்கும் முருகனுக்கும் நடுவில் யாருமே இல்ல. சட்டுன்னு முதுகுத்தண்டுல என்னவோ பண்ணுச்சு. முருகான்னு மனசு உருகிருச்சு. இந்த மாதிரி நேரத்துலதான் படிச்ச திருப்புகழோ திருமுருகாற்றுப்படை வரிகளோ எதுவுமே நினைவுக்கு வராது. “நீ நல்லாருக்கியா? நான் நல்லாருக்கேன்.” அவ்வளவுதான். அவனுக்குத் தெரியாதா என்ன பண்ணனும்னு.

மத்தவங்க வந்திருப்பாங்கன்னு பாக்க ஓரமா ஒதுங்கி வந்தேன். பஞ்சலிங்கம் பாத்தவங்கள்ளாம் வெளிய வந்துட்டாங்க. எங்களை தரிசனத்துக்குக் கூட்டீட்டுப் போனவரு மறுபடியும் எங்களை முருகன் முன்னாடி உக்கார வெச்சிட்டாரு. என்னடா இது… கூப்டுக் கூப்டு தரிசனம் குடுக்குறானான்னே மனசெல்லாம் நிறைஞ்சிருச்சு. இதுக்கு மேல என்னத்தக் கேக்குறது. திருப்தியா வள்ளி தெய்வானையோட நிற்கும் சண்முகருக்கும் ஒரு வணக்கம் சொல்லிட்டு உட்பிரகாரத்துக்கு வந்தோம். வள்ளி கோயில் தெய்வயானை கோயிலெல்லாம் பாத்துட்டு.. பள்ளி கொண்ட பெருமாளை வெளியிலிருந்தே வணக்கம் போட்டுட்டு வந்தோம். வெளிப்பிரகாரத்துச் சுவத்துல ஒரு ஓட்டை இருக்கும். அது வழியாப் பாத்தா கடல் தெரியும். அதுல காது வெச்சுக் கேட்டா ஓம்னு சத்தம் கேக்கும். அதையும் கேட்டோம். அதைக் கேக்க ஒரு வரிசை வேற நின்னுட்டு இருந்துச்சு.

அந்த ஓட்டை ஒரு காலத்துல தாழ்த்தப்பட்ட மக்கள் வெளியிலிருந்தே முருகனைப் பார்க்க வசதியா வெச்சிருந்தாங்க. நல்லவேளையா இப்ப அதெல்லாம் மாறியிருக்கு. இப்போ அந்த ஓட்டைக்கு மேல வடமொழி ஓம் எழுத்தை பெயிண்ட்டில் எழுதிவெச்சிருக்காங்க. இன்னும் பத்து வருஷம் போனா.. உள்ளே இருந்தே ஓம் என்று கேட்க வைக்கும் தமிழனின் கட்டடக்கலை அறிவுன்னு சொல்வாங்களோ என்னவோ!

முன்னாடியெல்லாம் திருச்செந்தூர்ல பன்னீர் எலைல வெச்சு திருநீறு கொடுப்பாங்க. இப்ப அந்த வழக்கமெல்லாம் மறைஞ்சு போச்சு. ஒருவேள விஐபிக்கள் வந்தாக் கொடுப்பாங்களோ என்னவோ!

Post6-Pic3அடுத்து போன எடம் வள்ளி குகை. இதுவும் ரொம்பக் குறுகலான குகை. குனிஞ்சு மடங்கி கூனி மாதிரிதான் உள்ள போகனும். முந்தியெல்லாம் வெளியிலிருந்து பாக்க ஒரு ஜன்னல் இருந்துச்சு. இப்போ அதை மூடிட்டாங்க. எந்தப் புண்ணியவான் கொடுத்த ஐடியாவோ! நல்லா இருங்கடே. நான் உள்ள போகல. வள்ளி குகைக்குள்ளயே இசக்கியம்மன் கோயில் ஒன்னு உண்டு. இப்போ அந்தக் கோயில்ல இருக்குறது இசக்கி இல்லையாம். வள்ளியாம். வள்ளியம்மையானவள் சிவா விஷ்ணு பிரம்மாவுக்கு பூஜை செய்த கோயில்னு புதுசா ஒரு கதை சொல்றாங்க. எனக்குத் தெரிஞ்சு அது இசக்கி கோயிலாத்தான் இருந்துச்சு. யார் மூளைல உதிச்ச திட்டமோ தெரியல.. இசக்கிய வள்ளியாக்கிட்டாங்க.

இந்த முறை திருச்செந்தூர்ல பாக்கம விட்ட எடம் நாழிக்கிணறு. கோயிலுக்கு வர்ரவங்க மொதல்ல கடல்ல உப்புத்தண்ணில குளிச்சிட்டு, பிறகு நாழிக்கிணத்துல நல்ல தண்ணீல குளிச்சிட்டு சாமி கும்பிடப் போவாங்க. காலை மட்டும் நனைச்சிட்டு நாங்கதான் நேரா கோயிலுக்குப் போயிட்டோமே. அதே மாதிரி திருச்செந்தூர்ல எப்பவும் வாங்குற பனங்கிழங்கு சில்லுக்கருப்பின்னு எதையுமே வாங்கல. அதுவுமில்லாம நயமான சில்லுக்கருப்பட்டி எந்தக் கடைல வாங்கனும்னும் தெரியல.

திருச்செந்தூர்க் கோயில் துலாபாரம் கொடுக்குற எடத்துக்குப் பக்கத்துல தேவஸ்தான பிரசாதக் கடை ஒன்னு இருக்கு. சின்ன வயசுல திருச்செந்தூர் போனா, அந்தக் கடைல புட்டமுது வாங்கிக் கொடுத்தாத்தான் ஆச்சுன்னு அடம் பிடிப்பேன். வாங்கிக் கொடுத்துட்டா அடுத்த ஒரு வாரத்துக்கு நல்ல பிள்ளையாச் சொன்ன பேச்சு கேப்பேன்.

புட்டமுதுன்னா வீட்ல அவிக்கிற பிட்டு இல்ல. தினைமாவும் வெல்லமும் நெய்யும் போட்டு இடிச்ச மாவுக்குதான் அந்தக் கடைல புட்டமுதுன்னு பேர். முருகனுக்கு வள்ளி தேனும் தினைமாவும் கலந்து கொடுத்ததாச் சொல்றாங்க. தேன் விலை கூட. அதுனால நமக்கு வெல்லம் கலந்து விக்கிறாங்க. ஆனா இந்தவாட்டி அதைக்கூட வாங்கல. இனிப்பெல்லாம் தின்ன வரைக்கும் போதும்.

ஆகையால… ஆகையால… எதுவும் வாங்காம… அப்படியே திருச்செந்தூர்ல இருந்து திருநெல்வேலிக்கு வண்டிய விட்டோம்.

தொடரும்…

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள், திருச்செந்தூர், பயணம் and tagged , , , , , . Bookmark the permalink.

8 Responses to திருச்செந்தூரின் கடலோரத்தில்

 1. amas32 says:

  முருகன் என்றாலே அழகு தான். அதுவும் பாலாபிஷேகத்தில் திருவுருவம் கொள்ளை அழகு 🙂

  amas32

  • GiRa ஜிரா says:

   அதப் பாக்குறதுக்கு ரெண்டே ரெண்டு கண்ண வெச்சானே முருகன்.. 🙂

 2. Pingback: நெல்லை Upper | மாணிக்க மாதுளை முத்துகள்

 3. ரெண்டு முறை போயிருக்கேன். ஆனாலும் இந்த பஞ்சலிங்கம், வள்ளிக்குகை, நாழிக்கிணறு எல்லாம் பார்த்ததே இல்லை 😦 போனோமா முருகனைப் பார்த்தோமா, கடலாண்டை எட்டிப் பார்த்தோமான்னே போயிருது.

  அடுத்தமுறை கிடைக்கணுமேன்னு இப்போ வேண்டுதல்!

  • GiRa ஜிரா says:

   கண்டிப்பாப் பாத்துருங்க டீச்சர். உங்க அனுபவம் அருமையா இருக்கும். அந்தப் பயணப் பதிவுகளையும் படிக்கக் காத்திருக்கிறேன். 🙂

 4. tcsprasan says:

  wherever i have gone to Chendur, i always think about you. Murugannnale Neegalum koodave vandhureenga. So no wonder he gave you darshan again and again.

 5. nparamasivam1951 says:

  முருகன் அப்படி கூப்பிட்டு கூப்பிட்டு தரிசனம் தந்தும், இப்படி பல இடங்களை விட்டு விட்டீர்களே! நல்ல உணவு மற்றும் தேவஸ்தான தங்குமிடம்/லாட்ஜ் கள் இருந்தும், இவ்வளவு அவசரமாக திரும்பி இருக்க கூடாது. கடல் குளியல் இல்லா செந்தூர் முருக தரிசனம்….ம்….என்ன சொல்ல!

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s