எதெடுத்தாலும் பத்து ரூவா

திருச்செந்தூர்ல இருந்து பொறப்பட்டு திருநெல்வேலி போற வழியில இப்பப் புதுசா ஒரு ஊர் பிரபலமாயிருக்கு. ஓட்டல் சரவணபவன் அண்ணாச்சியோட சொந்த ஊரான வனத்திருப்பதிதான் அந்த ஊரு. சரவணபவன் நிர்வாகம் அந்த ஊர்ல இருந்த பழைய வெங்கடேசப் பெருமாள் கோயிலை எடுத்துக் கட்டி ISCON மாதிரி மாத்திப் பராமரிக்கிறாங்க. ஊர் பிரபலமாயிட்டதால புன்னைநகர்னு மார்டனா பேரும் வெச்சாச்சு. திருச்செந்தூர் போற கூட்டமெல்லாம் அங்க போய்ட்டுப் போறதும் ஒரு வழக்கமா மாறி சிலபல வருடங்கள் ஆச்சு.

கோயிலுக்குப் போன மாதிரியும் ஆச்சு. சரவணபவன்ல மதியச் சாப்பாட்டை முடிச்ச மாதிரியும் ஆச்சுன்னு நாங்களும் நேரா வனத்திருப்பதிக்குப் போனோம். பாத்தா எங்க முன்னாடி போன வண்டியெல்லாம் அங்கதான் போகுது.

Post7-Pic3கார்பரேட் கோயில்தான். பளிச்சுன்னு இருக்கு. குப்பைகள் இல்ல. கழிப்பறையெல்லாம் துப்புரவா இருக்கு. வண்டிகள் நிறுத்தத் தனி எடம். எல்லாக் கோயில்கள்ளயும் இருக்குற மாதிரி இங்கயும் கடைகள். அனேகமா சரவணபவன் நிர்வாகம் (அல்லது) கோயில் அறக்கட்டளை அந்தக் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டிருக்கும்னு நெனைக்கிறேன். கடைன்னு இருந்தா வியாபாரம் நடக்காம இருக்குமா?

Post7-Pic1நாங்க நேராக் கோயிலுக்குப் போனோம். திரை போட்டு மூடியிருந்தாங்க. வெங்கடேசருக்கு லஞ்ச் டைம். அதுவரைக்கும் பக்கத்துல என்ன இருக்குன்னு வேடிக்கை பாத்தோம். கோயிலுக்கு நேர் எதுக்க சரவணபவன் சுயசேவைப் பிரிவு. மெனுவைப் பாத்தா.. எதையெடுத்தாலும் பத்து ரூபான்னு போட்டிருக்கு. நீங்களே மெனுவைப் பாருங்க. ஒருவேளை அளவு கொறைவா இருக்குமோ?

சிறப்பு தரிசனம்னு கோயில்ல டிக்கெட் எதுவும் இல்ல. ஆனா தானியங்களா வாங்கித் தானம் பண்ணா (கோயில் அன்னதானத்துக்கு) சிறப்பு தரிசன வழில போகலாம்.  அந்த தானியங்களை விக்க ஒரு கவுண்ட்டர் இருக்கு. அங்கதான் வாங்கனும். அந்த வழிலதான் நாங்கள்ளாம் போனோம். மொதல்ல சக்கரத்தாழ்வாரையும் நரசிம்மரையும் பாத்தோம். பாத்துட்டு நகரும் போது பின்னாடி இருந்த சிலர் வரிசைல குறுக்க நுழைஞ்சாங்க. “வரிசைல வரத் தெரியாதா”ன்னு நானும் கேட்டுட்டேன். ஒடனே வரிசைக்குள்ள பம்மிட்டாங்க. ரெண்டு நிமிசத்துல என்ன சாதிக்கப் போறாங்கன்னு தெரியல.

வரிசையா ஒவ்வொரு சாமியா பாத்துட்டு வந்தோம். ஏற்கனவே திருச்செந்தூர்ல பூசிவிட்ட சந்தனப் பட்டையும் குங்குமமும் நெத்தி நிறைய மடச்சாமியர் மாதிரி இருக்கு. அதுக்கு மேலயே நாமத்தை வேற போட்டு விட்டுட்டாங்க. காவி வேட்டியைக் கட்டி காவித் துண்டைப் போத்திக்கிட்டு உக்காந்திருந்தா ஊரே சாமீ சாமீன்னு கால்ல விழுந்திருக்கும். நானும் ஒரு மடத்தைத் தொடங்கி பதஞ்சலி மாதிரி கீதாஞ்சலின்னு நாடு முழுக்கக் கடை போட்டிருப்பேன். இந்தி சினிமா நடிகைகள் கூடல்லாம் போட்டோ எடுத்துப் போட்டிருப்பேன். ப்ச்ச்ச். அந்நேரம் தோணாமப் போச்சு. இந்த நாடும் நாட்டு மக்களும் கொடுத்து வெச்சது அவ்வளவுதான்.

Post7-Pic4வனத்திருப்பதி கோயில்ல உண்டியலே இல்ல. ஆனா பூஜாரிகள் தட்டைக் காட்டி தட்சணை தட்சணைன்னு சொல்றாங்க. நல்லவங்க காசு போடுவாங்கன்னு நான் சும்மா வந்துட்டேன்.

வெளிய வர்ர எடத்துல பிரசாதம் கொடுத்துட்டிருந்தாங்க. தெர்மோகோல் தொன்னைல தயிர்சாதம். தெர்மோகோலுக்குப் பதிலா வாழையிலைத் தொன்னையோ தையலிலையோ கொடுக்கலாம். சுற்றுப்புறச் சீர்கேடு ஆகாது. நம்ம சொல்லியா கேக்கப் போறாங்க? மனசுக்குள்ள வருத்தம் இருந்தாலும் தயிர்சாதம் வயித்துக்குள்ள வருத்தப்படாமப் போயிருச்சு.

அப்படியே வெளிய வந்தோம். பாத்தா… இங்கு பதனி கிடைக்கும்னு போர்டு. சரவணபவன்லதான். எத்தன வருசம் ஆச்சு. அடேங்கப்பா. நேரா கால் பதனி டோக்கன் கவுண்ட்டருக்குத்தான் போச்சு. ஆசை தீர பதனி வாங்கிக் குடிச்ச பிறகுதான் மனசு நிம்மதியாச்சு. அங்கயே நல்ல கருப்பட்டியெல்லாம் விக்கிறாங்க. நாங்க வாங்கல. சின்ன வயசுல தூத்துக்குடில இலஞ்சின்னு ஒன்னு விக்க வரும். அதெல்லாம் இப்ப விக்கிறாங்களான்னு தெரியல. சாப்பிடனும் போல ஆசையா இருக்கு. ஆனா எங்கன்னு போய்த் தேடுறது?

அத விடுங்க. நம்ம வனத்திருப்பதிக்கு வருவோம். சரவணபவன் வாசல்ல பூ விக்கிற பெரியம்மா ஓலைக் கொழுக்கட்டையும் வித்துக்கிட்டிருந்தாங்க. பனையோலை நறுக்குக்கு நடுவுல மாவு வெச்சு ஆவியில அவிச்சு எடுக்குறது. ஓலைச் சுவடி பிரிக்கிற மாதிரி நம்ம பக்குவமாப் பிரிச்சுச் சாப்பிடனும். நல்லா இருந்ததா எல்லாருமே சொன்னாங்க. கையில ஓலைக்கொழுக்கடையோட திருவள்ளுவர் மாதிரி நின்னுக்கிட்டிருந்த மக்களைப் படம் பிடிச்சிருக்கலாம்னு இப்பத் தோணுது. மூளை அவ்வளவு ஸ்பீடு.

திடீர்னு மக்கள் மனசுல ஒரு மாற்றம். லஞ்சுக்கு திருநெல்வேலியே போயிறலாம்னு எல்லாருக்குமே தோணுச்சு. பதனியும் ஓலைக்கொழுக்கட்டையும் செஞ்ச வேலை. சரின்னு வண்டியைத் திருநெல்வேலிக்கு விட்டோம். போய்த் தூங்கி எந்திரிச்சா சாயந்திரம் ரெயிலைப் பிடிக்க வசதியா இருக்கும்ல.

நேரா ஓட்டல் பரணி. அதே மீல்ஸ். அதே ஆனையடி அப்பளம். அவங்க கிட்டயே இராத்திரிச் சாப்பாட்டுக்கும் பார்சல் கட்டச் சொல்லிட்டோம். வேற எங்கயும் வாங்குறதுக்கு இதுவே நல்லதுன்னு எல்லாருமே அபிப்பிராயப்பட்டதால இந்த முடிவு.

கோயில்பட்டில வியாழக்கிழமை காலை எறங்குனதுல இருந்து வனத்திருப்பதி வரைக்கும் இதுவரைக்கும் பதினாலு கோயில்கள் பாத்தாச்சு. திருநெல்வேலி மாவட்டத்துல ஒன்னு, விருதுநகர் மாவட்டத்துல ஒன்னு, தூத்துக்குடி மாவட்டத்துல பன்னிரண்டுன்னு மொத்தம் பதினாலு.

திருநெல்வேலியில் இன்னொரு கோயிலுக்கும் போகனும்னு என் மனசுல இருந்தது. சாலைக் குமரன் கோயில்தான் அது. ஆனா எல்லாரும் நல்லா களைப்பா இருந்தாங்க. சரி. நாமளாச்சும் போகலாம்னு முடிவு பண்ணேன். கூட ரெண்டு நண்பர்களும் வர ஆசைப்பட்டாங்க. நாலு மணிக்குப் போகலாம்னு முடிவு பண்ணு ரூமுக்குப் போனா… மழை கொட்டத் தொடங்கீருச்சு.

திருநெல்வேலியை அப்படியே கழுவி எடுத்து தண்ணி சொட்டச் சொட்ட பிரிஜ்ஜுல வெச்ச மாதிரி இருந்துச்சு. மழையைப் பாத்தா எனக்கு எதோவொரு சந்தோஷம் வந்துரும். கொஞ்ச நேரம் மழையை வேடிக்கை பாத்துட்டிருந்தேன். நீர்நிலைகளையோ அருவியையோ மழையையோ ஆறுகளையோ பாத்தா நமக்கு ஏன் சந்தோஷமா இருக்கு தெரியுமா?

முதன்முதல்ல உயிர் தோன்றியது தண்ணீலதான். அதுமட்டுமில்லாம…. நம்ம ஒடம்புல நிறைய இருப்பதும் தண்ணிதான். நம்மள மாதிரியே ரசனையுள்ள ஆட்களைப் பாத்தா ஒரு சந்தோஷம் வருதுல்ல. அந்த மாதிரி நம்ம உடம்பிலிருக்கும் செல்லுக்கும் தண்ணியைப் பாத்ததும் ஒரு பாசம் வருது. பெரிய கடலையோ அருவியையோ பாத்தா லேசா பயம் வந்தாலும் நம்ம ஒடம்பு தானா மகிழ்ச்சில சிலுத்துக்கும். அதுதான் உடம்புக்கும் நீருக்கும் உள்ள பொறந்த வீட்டுப் பாசப்பிணைப்பு.

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்! (சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்)
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு (திருக்குறள் – திருவள்ளுவர்)

கோயிலுக்குப் போகனும்னு திட்டப் போட்டிருந்த நேரம் வரவும் மழை நின்னுருச்சு. மூனு பேருமாச் சேந்து சாலைக் குமரன் கோயிலுக்குப் போனோம். சின்ன கோயில்தான். ஆனாலும் அங்க போய் முருகனைப் பாத்ததுல ஒரு திருப்தி. சாலைக்குமரனைப் பாத்தாச்சு. அப்படியே குறுக்குத்துறை முருகனையும் பாத்துட்டா என்னன்னு ஒரு சின்ன சபலம். மணி என்னாச்சுன்னு பாத்தேன். லேட்டாயிரும்னு தெரிஞ்சது. இன்னொரு வாட்டி பாத்துக்கலாம்னு வந்துட்டேன்.

Post7-Pic2சென்னைல இருந்து சில நண்பர்கள் அல்வா வேணும்னு கடைசி நேரத்துல கேட்டதால சாந்தி சுவீட்ஸ்ல வாங்க முடிவு பண்ணோம். பாத்தா.. அந்த வரிசைல பத்து சாந்தி சுவீட்ஸ் கடை இருக்கு. சபரி சாந்தி சுவீட்ஸ், ஒரிஜினல் சாந்தி சுவீட்ஸ், எம்.கே.என்.சாந்தி சுவீட்ஸ், இடிச்சபுளி சாந்தி சுவீட்ஸ், கல்லாப்பெட்டி சாந்தி சுவீட்ஸ், பக்கோடா சாந்தி சுவீட்ஸ். எத்தனை எத்தனை சாந்திகள் திருநெல்வேலியில்.

சாந்தி சுவீட்ஸ்னு பெருசாவும்.. ஒரு ஓரமா சபரி, ஒரிஜினல்னு கண்ணுக்குத் தெரியாத மாதிரி எழுதியிருப்பாங்க. இதுல எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லைன்னு பெருமை வேற.

உண்மையான சாந்தி சுவீட்ஸ்ல இப்படி எதுவுமே இருக்காது. சாந்தி சுவீட்ஸ்னு சாதாரணமா இருக்கும். கடையே சாதாரணமாத்தான் இருக்கும். ஆனா வாசல்ல கூட்டம் இருக்கும். இதெல்லாம் சாந்தி சுவீட்ஸ் கண்டுபிடிக்கிற அடையாளங்கள்.

அல்வா வாங்குன பிறகு, கூட வந்த நண்பன் பழரசம் குடிக்கனும்னான். திருநெல்வேலி பஸ்டாண்டுல பல கடைகள்ள (பழக் கடைகள்ள) பழரசம் கெடைக்கும். பழம் பழங்கள ஒன்னாப் போட்டுக் கலக்கி செவப்பா ஒரு கலர் சேத்து கிண்டி வெச்சிருவாங்க. கிளாஸ் அஞ்சு ரூபா இருந்துச்சு. “அத அப்ப வாங்கிக் குடிச்சோம். இப்பயுமாடா?”ன்னு கேட்டத நண்பன் வீரு ஒத்துக்கல. சரின்னு பக்கத்துல இருந்த பழக்கடைல பழரசம் வாங்கிக் கொடுத்து சாந்தி செஞ்சாச்சு. தூத்துக்குடியிலும் இந்தப் பழரசம் ரொம்பப் பிரபலம். மார்க்கெட்டுக்குள்ள ஒரு கடைல பழரசத்தை பல தடவை வாங்கிக் குடிச்ச நினைவிருக்கு. இப்ப அந்தக் கடையெல்லாம் இருக்கான்னு தெரியல.

அப்படியே பரணிக்கு வந்து ஒரு லெமன் டீ அடிச்சிட்டு… பையெல்லாம் எடுத்துக்கிட்டு ஜங்சனுக்கு வந்தோம்.

எங்களுக்குக் கெடைச்ச வேனும் நல்லவிதம். வேன் டிரைவரும் நல்ல விதம். அவருக்கும் ஒரு நன்றி சொல்லி அனுப்பி வெச்சோம்.

திருநெல்வேலி ஜங்சன்ல இதுவரைக்கும் இரயில்ல வந்து எறங்குனதோ ஏறுனதோ இல்ல. இதுதான் எனக்கு முதல் தடவ.

இரயில் வண்டி கிளம்புறதுக்கு முன்னாடியே எங்க கதையடிக்கிற வண்டி கெளம்பீருச்சு. என்னென்ன பேசுனோம்னு சொல்ல முடியாது. எல்லாம் விஞ்ஞான அதிசய இரகசியங்கள். அப்படியே சாப்ட்டு கட்டையைச் சாய்ச்சோம். விழுப்புரத்துலயே முழிப்பு வந்துருச்சு. சென்னை வரப்போற ஆர்வம். என்ன இருந்தாலும் Home Sweet Home!

இவ்வளவு நாள் இந்தப் பதிவுகள் வழியா என் கூட பயணம் வந்த அனைவருக்கும் நன்றி! மறுபடியும் இன்னொரு பயணத்தில் சந்திப்போம். 🙂

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள், திருநெல்வேலி, பயணம் and tagged , , , . Bookmark the permalink.

4 Responses to எதெடுத்தாலும் பத்து ரூவா

  1. amas32 says:

    பயணக் களைப்பு தீர இப்போ ரெஸ்ட் எடுக்கணும் 😀😀😀

  2. tcsprasan says:

    Awesome Gira. Sad that I had to miss this beautiful trip. By reading your posts I have now traveled with you all virtually. Hope next time I’ll make it

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s