பைலட் பிரேம்நாத்

Pilot Premnath - 1இது ஒரு இந்தியா-ஸ்ரீலங்கா கூட்டுத் தயாரிப்பு என்ற விளம்பரத்தோடு 1978ல் வெளிவந்த வெற்றிப்படம் பைலட் பிரேம்நாத்.

இளமை ஊஞ்சலாடுகிறது, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், முள்ளும் மலரும் என்று தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை பதினாறடி பாய்ந்து கொண்டிருந்த போது நடிகர் திலகம் நடித்து மெல்லிசை மன்னர் இசையில் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கி வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் இது.

தமிழில் முதன்முதலில் கதாநாயகன் ஒரு பைலட்டாக வந்தது இந்தப் படத்தில்தான். நடிகர் திலகத்துக்கு ஜோடியாக பிரபல இலங்கை நடிகை மாலினி ஃபொன்சேகா. படத்தில் எழுத்து போடும் போது சிங்களக் குயில் என்று அடைமொழியோடு பெயர். இவர் இப்போது இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறாராம். நடிகர்கள் நாடாளுவது இலங்கையிலும் நடக்கத்தான் செய்கிறது. இவர் பின்னாளில் மாதுரி தீக்‌ஷித்தின் ஏக் தோ தீன் பாட்டின் சிங்கள வடிவத்துக்கு மாதுரி தீக்‌ஷித் போல ஆடையைக் குறைத்துக் குத்தாட்டம் போட்டது பலரை முகத்தைச் சுளிக்க வைத்ததாம்.

Pilot Premnath - 4புரட்சிக்கலைஞர் என்றால் விஜயகாந்த் என்று சொல்வீர்கள். ஆனால் இந்தப் படத்தில் விஜயகுமாருக்கு அந்தப் பட்டம். இந்தப் படம் வந்த போது ஸ்ரீதேவி தமிழில் மிகப் பெரிய கதாநாயகி. ஆனால் அவர் சிவாஜியின் மகளாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடி பிரேம் ஆனந்த் என்ற சின்ன நடிகர். அதுமட்டுமல்ல… விஜயகுமார், ஜெய்கணேஷ், ஜெயசித்ரா பெயர்களுக்குப் பிறகுதான் ஸ்ரீதேவி பெயர் வரும். சீனியாரிட்டி பார்த்து வரிசையை முடிவு செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இவர்கள் போதாது என்று தேங்காய் சீனிவாசன் (இவரும் பைலட்) மனோரமா ஜோடி வேறு. தேங்காய் பஞ்சாபி சிங். மனோரமா யாழ்ப்பாணத் தமிழ். தப்பும் தவறுமாக தேங்காய் தமிழ் பேசுவதும் மனோரமா யாழ்ப்பாணத் தமிழ் பேசுவதுமாக இவர்கள் காமெடி டிராக் ஒரு பக்கம். இவர்கள் மகள் சத்தியப்பிரியா ஜெய்கணேஷுக்கு ஜோடி. ஐயோ.. இன்னொருவரைச் சொல்லவில்லையே. அவர்தான் மேஜர் சுந்தர்ராஜன். பிரேம்நாத்துக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் நாடக நடிகர்.

இவ்வளவு பெரிய கூட்டத்தை இலங்கைக்குக் கூட்டிக் கொண்டு போய் முழுப்படத்தையும் அங்கேயே எடுத்திருக்கிறார்கள். போஸ்ட் புரடொக்‌ஷன் வேலைகள் மட்டும் சென்னையில். உள்ளரங்குக் காட்சிகள் கூட கொழும்புவில் உள்ள விஜயா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டிருக்கின்றன. கொழும்பு நகர வீதிகள், கதிர்காமம் முருகன் கோயில், பிரபலமான சுற்றுலாத்தலங்கள் என்று அந்தக்கால இலங்கையின் அழகான இடங்களை இந்தப் படத்தில் கண்டு இரசிக்கலாம். அதோடு கண்டி புத்தர் கோயிலும், மிகப்பிரபலாமான கண்டி ரந்தோலி பெரஹரவின் ஊர்வலமும் படத்தில் காட்டப்படும்.

Pilot Premnath - 3படம் தொடங்கும் போதே நடிகர் திலகம் பைலட்டாக வந்து விமானத்தில் ஏற்பட்ட பிரச்சனையைச் சமாளித்து பாதுகாப்பாக பயணிகளைக் கொண்டு வந்து சேர்ப்பார். அதற்குப் பிறகுதான் எழுத்தே போடுவார்கள். பைலட் உடையில் சிவாஜி கம்பீரமாக இருப்பார்.

படத்தின் கதை உறவுக்குள் இருக்கும் சிக்கல்களைப் பற்றியது. மனைவியைத் தீவிபத்தில் பறிகொடுத்தவர் பைலட் பிரேம்நாத். அவருக்கு இரண்டு மகன்கள்(விஜயகுமார், ஜெய்கணேஷ்). கடைக்குட்டியாக ஒரு கண் பார்வையற்ற மகள் (ஸ்ரீதேவி). ஒரு நாள் தற்செயலாக மனைவியின் பழைய கடிதம் கிடைக்கிறது. அதில் மூன்று குழந்தைகளில் ஒன்று அவருடைய குழந்தை இல்லையென்று தெரியவருகிறது. மூன்று பிள்ளைகள் மேல் பாசம், மனைவி மேல் இருந்த அன்பு, மனைவி செய்ததாகக் கருதும் துரோகம் என்று பலப்பல உணர்ச்சிகளுக்குள் தள்ளப்படும் பிரேம்நாத், அதிலிருந்து எப்படி வெளிவருகிறார் என்பதுதான் கதை.

இந்தக் கதைக்கு நடுவே விஜயகுமாருக்கும் தோட்டத் தொழிலாளியாக இருக்கும் ஜெயச்சித்ராவுக்கும் நடக்கும் காதல், பைக் ரேஸ் ஜெய்கணேஷுக்கும் தேங்காய்-மனோரமா மகள் சத்தியப்பிரியாவுக்கும் காதல், பார்வையற்ற ஸ்ரீதேவி – ஏழை பிரேம் ஆனந்த் காதல் என்று கதம்பாக இருக்கும் படம்.

படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் அருமையான பாடல்கள். டி.எம்.எஸ்சும் வாணி ஜெயராமும் பாடிய “இலங்கையில் இளம் குயில்” பாட்டு அப்போது சூப்பர் டூப்பர் ஹிட். இலங்கை வானொலியில் தொடர்ந்து பலகாலம் ஒலிபரப்பட்டப் பாடல் இது. “Who is the blacksheep? அது யார் யார் யார்?” என்று டி.எம்.எஸ் பாடிய பாட்டைத்தான் இசைரசிகர்கள் மறக்க முடியுமா? “முருகனெனும் திருநாமம் முழங்குமிடம் கதிர்காமம்” பாட்டு டி.எம்.எஸ் குரலில் அச்சு அசல் கதிர்காம கந்தபக்தி இரசம்.

இந்தப் படத்தில் ஜெயச்சந்திரனும் எல்.ஆர்.ஈசுவரியும் பாடிய “அழகி ஒருத்தி எழனி விக்கிற கொழும்பு வீதியிலே” பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்.  சிங்கள வரிகளோடு எல்.ஆர்.ஈசுவரியும் சிலோன் மனோகரும் பாடிய “கோப்பி தோட்ட முதலாளி” பாட்டும் அந்தக்காலத்தில் இரசிக்கப்பட்டது. படத்தின் பாடல்களை எல்லாம் வாலி எழுதினார்.

Pilot Premnath - 2படத்தின் தொடக்கத்தில் வீட்டுக்குள் நுழைந்த சிவாஜி இறந்த மனைவி உயிரோடு இருப்பதாக நினைத்துக் கொண்டு அவரோடு பேசுவார். அன்று விமானத்தில் நடந்த பிரச்சனை அது இது என்று நடந்த நிகழ்ச்சிகளை அவருடைய கண்ணுக்கு மட்டுமே தெரியும் மனைவியோடு பகிர்ந்து கொள்வார். அந்த மனைவியின் பிம்பமும் அவரை வீட்டுக்குள் வரவேற்றுப் பேசும். அதற்குப் பிறகுதான் படம் பார்ப்பவர்களுக்கு மாலினி ஃபொன்சேகா பாத்திரம் ஏற்கனவே இறந்திருப்பது தெரியவரும்.

மூன்று பிள்ளைகளில் யார் தன்னுடைய பிள்ளை இல்லை என்பதைத் தெரிந்து கொள்வதற்காக கதிர்காம முருகன் முன்னால் மூன்று பேர் பெயர்களையும் எழுதிப் போட்டு திருவுளச்சீட்டு எடுக்க நினைப்பார் பைலட் பிரேம்நாத். சீட்டு எடுக்கப் போகும் நேரத்தில் காற்று வந்து சீட்டுகளைத் தூக்கிச் சென்று விடும். மூன்று குழந்தைகளும் உன்னுடைய குழந்தைகள்தான் என்று முருகனே பிரேம்நாத்திடம் சொல்வது போன்ற உணர்ச்சிமயமான காட்சி அது.

தந்தையின் மனக்குழப்பம் தெரிந்து மூன்று பிள்ளைகளும் தன்னை அவர் பிள்ளையில்லை என்று நிரூபித்து குழப்பத்தைத் தீர்க்க நாடகம் போடும் காட்சிகளும் அதை பிரேம்நாத் உடைக்கும் காட்சிகளும் அருமையாக இருக்கும். மொத்தத்தில் படத்தின் எல்லாப் பாத்திரங்களுக்கும் ஓரளவு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பார் ஏ.சி.திருலோகச்சந்தர்.

படத்தின் இன்னொரு பலம் அரூர்தாசின் வசனங்கள். மிக இயல்பான வசனங்கள் படம் முழுவதும் இருக்கும்.

கபாலி மலாய் மொழியில் மொழிமாற்றம் செய்யப்படுவது போல, இந்தப் படம் சிங்கள மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

பழைய பட இரசிகர்களும் இசைவிரும்பிகளும் கண்டிப்பாகப் பார்த்து இரசிக்க வேண்டிய படம் பைலட் பிரேம்நாத் என்பதில் ஐயமே இல்லை.

இந்தப் படம் வெளிவந்த 1978ல் நடிகர் திலகம் நடித்து வெளிவந்த மற்ற படங்கள்.
அந்தமான் காதலி
தியாகம்
என்னைப் போல் ஒருவன்
ஜஸ்டிஸ் கோபிநாத்
புண்ணிய பூமி
இவற்றில் புண்ணியபூமி தோல்விப்படம். அந்தமான் காதலி, தியாகம், பைலட் பிரேம்நாத் ஆகிய மூன்றும் பெருவெற்றிப்படங்கள். என்னைப் போல் ஒருவன் வெற்றிப்படம். ஜஸ்டிஸ் கோபிநாத் சுமாரான வெற்றி. ஆனாலும் ஒரே ஆண்டில் மூன்று மாபெரும் வெற்றிப்படங்கள் கொடுத்திருக்கிறார் சிவாஜி.

இதே ஆண்டில் ஸ்ரீதேவி பல படங்களில் நடித்திருக்கிறார். சூப்பர் ஹிட் படங்கள் முதல் சூப்பர் தோல்விப் படங்கள் வரை நடித்திருக்கிறார். குறிப்பிடத்தக்கப் படங்களைப் பார்த்தால்… இவை போக தெலுங்குப் படங்கள் வேறு. தென்னிந்தியாவில் மிகவும் விரும்பப்பட்ட நடிகையாக ஸ்ரீதேவிய மாறிய வருடம் இது.
கங்கா யமுனா காவேரி (இதில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடி)
இது எப்படி இருக்கு (இதில் ஜெய்சங்கர் ஜோடி)
மனிதரில் இத்தனை நிறங்களா (ஸ்ரீதேவி படத்தின் முக்கியப் பாத்திரம். கமல் துணைப் பாத்திரம்)
முடிசூடா மன்னன் (ஜெய்சங்கர் ஜோடி)
பிரியா (டைட்டில் ரோல். ரஜினி ஹீரோ. ஆனால் ஜோடி கன்னட நடிகர் அம்பரீஷ்)
சிவப்பு ரோஜாக்கள் (கமலுடன்)
டாக்சி டிரைவர் (ஜெய்சங்கருடன் ஜோடி)
வணக்கத்துக்குரிய காதலியே (மிக வித்தியாசமான படம். வெற்றிப்படம். இரண்டு வேடங்கள். ரஜினியும் விஜயகுமாரும் ஜோடிகள்)

பி.கு. பைலட் பிரேம்நாத் தயாரிப்பாளர்களில் ஒருவரான எம்.எம்.சலீம் என்பரின் தந்தையான முகமது மீரான் என்பவர்தான் சென்னை ஜெமினி மேம்பாலத்தை வடிவமைத்துக் கட்டிய பொறியாளர்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in திரைப்படம், பழைய படங்கள், விமர்சனம் and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to பைலட் பிரேம்நாத்

 1. amas32 says:

  உங்கள் விமர்சனத்தைப் படித்த பின் படம் பார்க்க ஆவலாக உள்ளது 🙂

  amas32

 2. Suseela says:

  படம் பார்த்த ஞாபகம் இருக்கு ஆனால் மறந்துட்டது..மீண்டும் பார்க்க ஆவலாக்கியது உங்கள் விமர்சனம்,,

 3. nparamasivam1951 says:

  பதிவை படித்த பின் இந்த படம் பார்க்கும் ஆவல் கிளம்பி உள்ளது.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s