கலகல லகலக கல்யாணம்

முன்குறிப்பு : இந்தப் பதிவில் குறிப்பிட்ட நிகழ்வுகளும் மனிதர்களும் உண்மையாகவோ அல்லது விற்பனைக்கு வந்த வீட்டு மனை போல உண்மைக்கு மிக அருகிலோ அல்லது தொலைக்காட்சிகளில் வரும் ரியாலிட்டி ஷோ போல முழுக்கவே பொய்யாகவோ இருந்தால் அதற்கு இந்தக் கட்டுரையும் அதை எழுதியவரும் எழுதியதைப் படித்தவரும் படிக்கச் சொல்லிக் கேட்டவரும் பொறுப்பாகமாட்டார்கள். கட்டுரையைப் படிப்பதனால் வரும் பின்/முன்/நடுவிளைவுகளுக்கும் மேற்கூறப்பட்டவர்களோ மேற்கூறப்படாதவர்களோ பொறுப்பாகமாட்டார்கள். அதற்கு மேல் உங்கள் தலையெழுத்து.

கலகல லகலக கல்யாணம்

கல்யாணம் பண்ணிப்பார்னு சொன்னதெல்லாம் அந்தக் காலம். கல்யாணத்துக்குப் போய்ப் பார்னு சொல்றது இந்தக் காலம்.

பின்ன… கல்யாண மண்டபத்துக்குள்ள நுழையும் போதே ஒரே கொழப்பமா இருக்குதே. வந்த கல்யாணம் சரியான கல்யாணம் தானான்னு நாலு வாட்டி யோசிக்க வெச்சிர்ராங்க.

இப்படித்தான் ஒருத்தர் சொந்தக்காரங்க கல்யாணத்துக்குப் போனாரு. அவர் இருந்ததோ சென்னைல பெருங்குடி. கல்யாண மண்டபமோ ராயபுரம். இதுவரைக்கும் ராயபுரம்னு ஒரு எடம் சென்னைல இருக்குங்குறது கூடத் தெரியாம வளந்து வயசானவரு அவரு. எப்படியோ கால் டாக்சி வெச்சு மண்டபத்தைக் கண்டுபிடிச்சு வந்து எறங்கீட்டாரு.

marriage-2மண்டபத்துக்குள்ள நொழையும் போது அவர் மேல பன்னீர் தொளிச்சு சந்தனம் கற்கண்டு ரோஜாப்பூவெல்லாம் கொடுத்தாங்க. அதுல பாருங்க.. அந்த ரோஜாப்பூ கொடுத்த பொண்ணு ரொம்பத் தெரிஞ்ச ஜாடை. சுருங்கிச் சிக்கலாகியிருந்த மூளை முழுக்கத் தேடி அந்தப் பொண்ணு யார்னு கண்டுபிடிச்சுட்டாரு. நீ கதிரேசன் பொண்ணுதானன்னு வாய் விட்டும் கேட்டுட்டாரு.

இல்ல சார்ன்னு சொல்றதைக் கூட சிரிச்சிக்கிட்டே சொன்னா அந்தப் பொண்ணு.

ரெவின்யூ இன்ஸ்பெக்டர் கதிரேசன் மகதான் அந்தப் பொண்ணுன்னு அவரோட மறக்காத மறதி அடிச்சுச் சொல்லுது. மாப்பிள்ளைக்கு அந்தப் பொண்ணு தங்கச்சி முறை. அதையும் சொல்லிக் கேட்டாரு. அதுக்கும் அந்தப் பொண்ணு இல்ல சார்னு ரெண்டே வார்த்தைல அதே மாதிரி சிரிச்சிக்கிட்டே பதில் சொன்னா.

திடீர்னு ஒரு சந்தேகம். ஒருவேளை மண்டபம் மாறி வந்துட்டோமோன்னு. படபடன்னு வெளிய போய் மண்டபம் பேரைப் பாக்குறாரு. பக்கத்துல பூக்களால் செஞ்சு வெச்சிருந்த இன்னார் weds இன்னார் தட்டியையும் பாக்குறாரு. எல்லாம் சரியாத்தான் இருக்கு. அப்ப அந்தப் பொண்ணு யாரு? அந்தப் பொண்ணு கிட்டயே யார்னு கேக்குற முடிவோட மறுபடியும் உள்ள வந்தாரு.

“அம்மா.. நீ பொண்ணு வீடா?”

“இல்ல சார். நான் நான் மேரேஜ் ஆர்கனைசிங் டீம் சார். கல்யாண வீட்டுக்காரங்களுக்கு நிறைய வேலை இருக்குறதால எங்க டீம் வரவேற்புல நிக்குது சார்.”

இதையும் அதே மாதிரி சிரிச்சுக்கிட்டே சொன்னா அந்தப் பொண்ணு. அப்பதான் பெரியவர் அந்த மூனு பொண்ணுங்களும் ஒரே மாதிரி சேலை கட்டி, ஒரே மாதிரி ஜாக்கெட் போட்டு,  ஒரே மாதிரி தலை சீவி, ஒரே மாதிரி வளையல் போட்டு, ஒரே மாதிரி பொட்டு வெச்சு, ஒரே மாதிரி சிரிச்சிட்டு நிக்கிறதக் கண்டுபிடிச்சாரு. ஒலகத்துல எந்தக் குடும்பத்துலயாவது ரெண்டு பொண்ணுங்க ஒரே மாதிரி சேலை எடுப்பாங்களான்னு அவர் கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்.  அந்தாள் கெடக்குறாரு பழைய மனுசன்.

பொண்ணு வீட்டுக்காரங்களுக்கும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கும் ஆயிரம் கல்யாண டென்ஷன். இதுக்கு நடுவுல வர்ரவங்கள வாங்கன்னு கூப்புடனும்னு எதிர்பாக்குறது ரொம்பத் தப்பில்லையா? அப்படியே அவங்க நின்னு வாங்கன்னு கூப்பிட்டாலும் அவங்களுக்கு இருக்குற யோசனைல எப்படி வரவேற்பாங்களோ? என்ன ஒழுங்கா வரவேற்கல, அவரை மட்டும் ரெண்டு வாட்டி சிரிச்சு வரவேத்துட்டு எனக்கு மட்டும் சிரிக்கவேயில்லைங்குற புதுப்புது பிரச்சனைகள் நல்லாயிருக்கும் ரோட்டுக்கு நடுவுல மொளைக்கிற டோல்கேட்கள் மாதிரிக் கிளம்பும். அதவிட சின்ன வயசுப் பொண்ணுங்க சிரிச்ச முகத்தோட வாங்க வாங்கன்னு பன்னீர் தெளிச்சு கற்கண்டும் ரோஜாப்பூவும் கொடுத்தா கசக்கவா செய்யும்?

marriage-1கல்யாணத்துக்குப் போறவங்களுக்கு மட்டுமில்ல.. கல்யாண வீட்டுல இருக்குறவங்களுக்கும் ஆயிரம் புதுமைகள். வசதியான ஒருத்தர் ரெண்டு லட்ச ரூபாய் கொடுத்து ஃபோட்டோகிராபர் ஏற்பாடு பண்ணாரு. வீடியோக்கு ரெண்டு பேர் போட்டோவுக்கு ரெண்டு பேர்னு நாலு பேரும் அவங்களை மேய்க்கிறதுக்கு ரெண்டு பேருமா ஆறு பேர் ஒலிம்பிக்ல தங்கப் பதக்கம் வாங்கப் போராடிய பேட்மிட்டன் சிந்து மாதிரி ஆக்ரோஷமா சுட்டுத் தள்ளிக்கிட்டிருக்காங்க. சொல்லிக் கொடுத்த மந்திரத்தை மாப்பிள்ளை வேற தப்பும் தவறுமா கரும்புசாறு மெஷின் சக்கையைத் துப்புற மாதிரி துப்பிட்டிருக்காரு. இதுக்கிடைல திடீர்னு யானை நாயனம் வாசிச்ச மாதிரி பர்ருன்னு சத்தம்.

பொண்ணோட அப்பாவுக்கு டென்ஷன். சத்தம் வந்த பக்கமாப் பாத்தா ஒரு குட்டி ஹெலிகாப்டர் பறக்குது. அதுவும் பொண்ணு மாப்பிள்ளையப் பாத்துப் போகுது. அப்புறம் பின்னாடி போகுது. மறுபடியும் முன்னாடி… மறுபடியும் பின்னாடி… கல்யாண வீட்ல ஹெலிகாப்டரான்னு ஜிவ்வுன்னு விலைவாசி மாதிரி கோவம் வந்துச்சு. ஒருவேளை மாப்பிள்ளை வீட்டுக்காரங்களோ இருக்குமோன்னு நெனச்சதுமே வந்த ஆத்திரம் நாட்டுக்கு நல்லது செய்ய அரசாங்கம் போட்ட திட்டம் மாதிரி அமுங்கீருச்சு.

“அந்த ஹெலிகாப்டரைக் கொஞ்சம் கீழ எறக்குங்க. மந்திரம் சொல்ல எடஞ்சலா இருக்கு. பொண்ணு மாப்ள மேல இடிச்சிறப் போகுது”ன்னு மரியாதைய ரெண்டு கரண்டி அதிகமாச் சேத்து வாய்ல கேசரி கிண்டுனாரு.

வீடியோகிராபர் வேகமா ஓடி வந்து.. சார் அதுக்குப் பேர் டிரோன். அதுல கேமரா இருக்குன்னு விளக்கிய பிறகுதான் அது கல்யாணத்தைப் பறந்துக்கிட்டே வீடியோ எடுக்குற மெஷின்னு புரிஞ்சது. “ஓ டிரோனா.. நான் பாத்தது வேற மாதிரி இருந்துச்சு. இது பழைய மாடல் போல. நீங்க ஏன் புது மாடல் வாங்கக்கூடாதுன்னு”ன்னு பொண்ணோட அப்பா சமாளிச்சதெல்லாம் தனிக்கதை.

சொல்ல வேண்டிய மந்திரமெல்லாம் சொல்லி மாப்பிள்ளை கையில் தாலியை எடுத்துக் கொடுக்குறப்போ வீடியோக் கேமரா மட்டும் ஓடுது. போட்டோகிராபர்கள் கேமராவை கங்காருகுட்டி மாதிரி வயித்துக்கிட்ட தொங்க விட்டுட்டு வேடிக்கை பாக்குறதைப் பாத்துப் பதறிட்டாரு மாப்பிள்ளையோட அப்பா. “போட்டோ போட்டோ”ன்னு வாய்க்குள்ளயே காத்து விட்டுட்டு கையால சைகை காட்டுறாரு. ஆனா போட்டோகிராபர் கண்டுக்கவே இல்ல. அவன் கிட்ட சண்டைக்குப் போனா மகன் தாலி கட்டுறதைப் பாக்க முடியாமப் போயிரும்னு பொறுமையா இருந்தாரு. தாலி கட்டி முடிச்சதும் “என்னப்பா… தாலி கட்டுறதைக் கூட போட்டோ எடுக்கலையே. என்ன பண்ணீட்டு இருக்கீங்க”ன்னு ஆற்றாமைல ஆற்று ஆமை மாதிரி தலையை நீட்டி நீட்டி கேள்வி கேட்டாரு.

“சார். கவலையே படாதீங்க. இப்ப எடுத்துர்ரோம்னு”ன்னு சொல்லிட்டு மாப்பிள்ளை கிட்ட போய், “சார் கழுத்துல கை வெச்சு தாலி கட்டுற மாதிரி கம்பீரமாச் சிரிச்சிக்கிட்டே போஸ் கொடுங்க”ன்னு சொல்லிட்டு, பொண்ணப் பாத்து, “நீங்க லேசாத் தலையைக் குனிஞ்சு வெக்கப் படுங்க”ன்னு சொல்லி நல்லதா நாலு போட்டா அழகா எடுத்துக் கொடுத்தாரு. மாப்பிள்ளையோட அப்பாவுக்கும் பரம திருப்தி. உண்மையிலேயே தாலி கட்டுறப்போ எடுத்திருந்தாக்கூட இவ்வளவு அழகா வந்திருக்காதுன்னு கற்பூரம் மாதிரி புரிஞ்சிக்கிட்டாரு.

இதெல்லாம் இப்பிடி இருக்க…. கல்யாணச் சாப்பாட்டு மெனுவை முடிவு பண்றதுங்குறது இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மாதிரி. முடியவே முடியாது இழுத்துக்கிட்டே போகும். ஒருத்தர் வேணும்னு சொல்றது இன்னொருத்தருக்குப் பிடிக்காது. கடைசில ஆளுக்கொரு சாய்ஸ் கொடுத்து மெனுவைத் தயாரிச்சு முடிக்குறதுக்குள்ள இந்தியாவோட நிதியமைச்சர் அஞ்சு பட்ஜெட் போட்டு அடுத்த தேர்தலே வந்துரும்.

ஊர்லயே பெரிய மேரேஜ் ஆர்கனைசர் அவர். வரவேற்பு, அலங்காரம், பூக்கள், தாம்பூலப்பை, சமையல் எல்லாத்துக்கும் அவர்தான் பொறுப்பு. கல்யாண வீட்ல கொடுத்த பட்ஜெட்டுக்கு ஒரு மெனுவை எழுதிக் கொடுத்தாரு. அதைப் பாத்ததுமே மொத்தக் குடும்பமும் பதறிட்டாங்க. “என்னங்க லாலிபாப்லாம் மெனுல இருக்கு. நாங்க வெஜிடேரியன்”ன்னு எதிர்க்கட்சி எம்பிகள் பாராளுமன்றத்துல ஒரே குரல்ல எதிர்க்குற மாதிரி எகிறுனாங்க.

“இல்ல சார்.. இல்ல மேடம்.. இது வெஜ் லாலிபாப். சிக்கன் லாலிபாப் கிடையாது. டேஸ்ட் அது மாதிரி இருக்கும். ஆனா வெஜ் லாலிபாப். கடலைமாவெல்லாம் கலந்து செய்றதுன்னு”ன்னு விளக்கம் கொடுத்த பிறகுதான் மொத்தக் குடும்பமும் அமைதியாச்சு. எல்லாரும் ஒரு மனதா லாலிபாப் இருக்கட்டும்னு முடிவெடுத்தது அடுத்த கதை.

“வெஜ் ஆம்லெட் உங்க மெனுல உண்டா?”ன்னு ஒரு வளந்தும் வளராத பதின்மன் கேட்டதும், நான்வெஜ் மாதிரி டேஸ்ட் இருக்கும் வெஜ் ஐட்டங்களை எல்லாம் பட்டியல் போட்டாரு ஆர்கனைசர்.

“சார்.. இது பலாக்காய் பிரியாணி. தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி டேஸ்ட் அப்படியே இருக்கும். ஆனா ஃப்யூர் வெஜ். இப்பல்லாம் வெஜிடேரியன்ஸ் ரொம்ப விரும்பிக் கேக்குறதே பலாக்காய் பிரியாணிதான். அதேமாதிரி பனீர் ஷவர்மா ரோல். அச்சு அசல் அரேபியன் சிக்கன் ஷவர்மா தோத்துரும். சோயா ரேஷ்மி கபாப் எங்களோட ஸ்பெஷாலிட்டி. டேஸ்ட் மட்டும் இல்ல.. பாக்கவும் சிக்கன் ரேஷ்மி கபாப் மாதிரி இருக்கும். இன்னும் நெறைய இருக்கு. நீங்க எது வேணும்னு சொல்றீங்களோ அதையே போட்டுறலாம். இப்பல்லாம் நான்வெஜ் சாப்பிடுறவங்களே இதத்தான் விரும்புறாங்க.”

marriage-2பனீர் ஷவர்மா ரோலையும் பலாக்காய் பிரியாணியையும் வெஜ்லாலிபாப்பையும் ஒருமனதாக ரிசப்ஷனுக்கு முடிவு செய்த குடும்பம், கல்யாணச் சாப்பாட்டில் சோயா ரேஷ்மி காபாப் வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. எதுலயும் முட்டை கூடச் சேக்கிறதில்லைங்குறதுதான் இந்தச் சமையல் ஐட்டங்களோட தனிச்சிறப்பு.

பரிமாறும் டெக்னிக்னு ஒன்னு இருக்கு. எடுக்கும் போதே அரைக்கரண்டிதான் வரும். நம்ம எலைல விழுந்து முடிக்கிறதுக்குள்ள அடுத்த எலைக்குப் போயிருவாங்க. இன்னும் கொஞ்சம் வேணும்னு நம்ம கேக்குறதுக்குள்ள நாலு எலை தள்ளி போயிருப்பாங்க. சரி. வெக்கத்த விட்டுக் கூப்பிடலாம்னு நெனைக்கிறதுக்குள்ள அடுத்த ஐட்டம் அரைக்கரண்டி நம்ம எலைல விழும். அதுவும் பத்தாதேன்னு நெனைக்கும் போது என்ன வேணும்னு கேக்க நினைச்சதே நமக்கு மறந்து போயிருக்கும். ஒரே மாதிரி பெண்கள் வந்து மொத ஆள்கிட்ட “இன்னும்”னு சொல்லி ரெண்டாவது ஆள்கிட்ட “எதாவது”ன்னு தொடர்ந்து மூனாவது ஆள்கிட்ட “வேணுமா”ன்னு கேட்டு நாலாவது ஆள்கிட்ட நிப்பாங்க. அதுக்குள்ள அடுத்த பந்திக்கு கூட்டம் வந்துரும். பிறகென்ன ஒரு வாய்த்தண்ணி மிச்சமிருக்கும் முன்னூறு மில்லி வாட்டர் பாட்டில எடுத்துக்கிட்டு நாம கைகழுவ எந்திரிக்க வேண்டியதுதான்.

இந்த மேரேஜ் ஆர்கனைசர்கள் கிட்ட ஒரு விஷயம் பாராட்டனும்னா அது டைமிங் தான். அதாங்க.. நேரம் தவறாமை. இருபத்துநாலு மணி நேரம் அவங்க கணக்கு. மொத நாள் மதியம் ரெண்டு மணிக்குச் சரியா வந்துருவாங்க. ஏன்னா ரிசப்ஷனுக்கு ஏற்பாடுகள் செய்யனுமே. எல்லாம் மளமளன்னு தானா நடக்கும். நமக்கு முன்னாடியே மண்டபத்துக்கு வந்து நம்மையே வரவேற்பாங்க. மண்டபத்துக்குள்ள வந்தாச்சுன்னா அடுத்த இருபத்துநாலு மணி நேரத்துக்கு காத்து வாங்குறதுக்குக் கூட வெளிய போக மாட்டாங்க. ”வாங்க வாங்க சாப்டீங்களா இன்னும் எதாவது வேணுமா”ன்னு சிரிச்சிக்கிட்டே கேக்குற பொண்ணுங்க கூட மண்டபத்திலேயே தூங்கி எந்திரிச்சு குளிச்சு முடிச்சு சீருடைச் சேலையெல்லாம் கட்டி தயாரா இருப்பாங்க. அதே மாதிரி கல்யாணம் முடிஞ்சதும் இன்னும் சாப்பிட வேண்டியவங்க இருக்காங்களோ இல்லையோ.. டான்னு நேரத்துக்குப் பந்தியை மூடிருவாங்க. நேரம்னா நேரம். காலம் அறிதல்னு வள்ளுவரே அதிகாரம் எழுதியிருக்காரே. அதை மீற முடியுமா?

சரியா ஒரு மணி அம்பத்தொன்பதவாது நிமிடத்துல மூட்டை கட்டத் தொடங்குனா, அடுத்த அறுபதே நொடிகள்ள எல்லாத்தையும் சரியா எடுத்துக்கட்டிட்டு மிச்சம் மீதம் இருக்கும் சாப்பாடு தண்ணி பாட்டில் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு, “வாங்க வாங்க”ன்னு வரவேற்றப்போ இருந்த அதே புன்னகையோட “போயிட்டு வர்ரோம்”ன்னு சொல்லிட்டுப் பொறப்பட்டுருவாங்க. முன் வந்து முன் செல்வார்னு இவங்களை வகைப்படுறது ரொம்பப் பொருத்தம்.

இதோட எல்லாம் முடிஞ்சிரல. மண்டபம் புக்கிங், மேடை அலங்காரம், பூமாலை கட்டுதல், பாட்டுக்கச்சேரி மாதிரியான பழைய சமாச்சாரங்களும் மெகந்தி, சங்கீத் மாதிரியான புதிய சமாச்சாரங்களும் நெறைய இருக்கு. அதையெல்லாம் இன்னொரு நாள் பொறுமையா 110ம் விதிகளின் படிப் பேசுவோம். அதுவரைக்கும் நீங்க பாத்த பங்கெடுத்த அனுபவங்களைக் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க.

Photo Courtesy – Thanks to Cartoonist Keshav

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in நகைச்சுவை and tagged , , , . Bookmark the permalink.

20 Responses to கலகல லகலக கல்யாணம்

 1. amas32 says:

  இவ்வளவு சொன்னீங்களே இந்த ஒரு நாள் கூத்துக்கான செலவு எவ்வளவு ஆகியிருக்கும்னு ஒரு வார்த்தை சொல்லலையே! இத்தனை ஆள் படைக்கும் ஹெலிகாப்டருக்கும் சேர்த்து பட்ஜெட் பல லகரங்களைத் தாண்டியிருக்கும். அது தான் இன்றைய நிலவரம் :-}

  amas32

  • GiRa ஜிரா says:

   சரியான பாயிண்ட். அந்தச் செலவுக் கணக்கைச் சொன்னா சினிமா பட்ஜெட் மாதிரி இருக்குமே 🙂

 2. tcsprasan says:

  Excellent Gira. Still laughing

 3. ஓஜஸ் says:

  It was like reading a sneak modern preview of Savi’s Washington Thirumanam.

  Wonderful write-up. After seeing the pictures I thought that it had come up in some magazine….

 4. AASIF NIYAZ KHAJA MOHIDEEN says:

  மெனு படிக்கும் போது ஊருக்கு வந்தா இப்பிடி ஒரு கல்யாணத்துல சாப்பிடனும்னு தோணிச்சு..பறிமாற ஆரம்பிச்சதும் கபாப் எங்கடானு ஒரு பயம்..

  • GiRa ஜிரா says:

   அடுத்த லீவுக்கு வர்ரப்போ ரெண்டு கல்யாண ரிசப்சனுக்குப் போயிட்டு வந்துருங்க. உங்க ஆசையெல்லாம் நிறைவேறும். 🙂

 5. ஹைய்யோ!!! இவ்ளவு விஸ்தாரமான கல்யாணத்தை இப்பத்தான் பார்க்கிறேன்.

  சக்கரைப்பொங்கலில் முந்திரி தாராளமாத் தூவினமாதிரி இருக்கு! பேஷ் பேஷ்..ஏஏஏஏஏஏ….வ்…….

  • GiRa ஜிரா says:

   விருந்தை இரசிச்சதுக்கு நன்றி டீச்சர்.

   இன்னும் விரிவா எழுதலாம்னுதான் நெனச்சேன். படிக்கிறவங்களுக்கு அலுப்பாயிறக்கூடாதேன்னு நிறுத்திட்டேன் 🙂

 6. Kamala says:

  அடேயப்பா! நல்லா நகைச்சுவையோடு எழுதியிருக்கிறீர்கள்! பெஸ்ட் பதிவு

 7. Siva says:

  Excellent one sir. Also need to know normal approximate costs they spend on these type of marriages.. to get an idea. After reading this, felt like attended a real marriage well written.

 8. nparamasivam1951 says:

  சார். உங்கள் சீரியஸ் பதிவுகளை விட நகைச்சுவை மிக அருமை. பத்து கல்யாணம் செய்தவர் கூட இவ்வளவு விவரமாக எழுத முடியாது. இன்னும் பாட்டு கச்சேரி, மெகந்தி ஆகியவற்றை 110 விதியின் கீழ் எதிர்நோக்குகிறேன்.

 9. “இன்னொரு நாள் பொறுமையா 110ம் விதிகளின் படிப் பேசுவோம்”

  சபைக்குறிப்புல இருந்து எதையும் நீக்காம இருந்தா சரி 😉

  • GiRa ஜிரா says:

   எதுத்துப் பேச யாரும் உள்ள இருக்க விட்டாதானே, சபைக்குறிப்புல இருந்து நீக்கனும்? 🙂

 10. chinnapiyan says:

  ஹஹ்ஹஹா. :)) தற்கால கல்யாண கூத்துகளை நகைச்சுவையா சொல்லி எல்லோரையும் சிரிக்க வச்சுட்டீங்க. அருமை அருமை ஜிரா.
  பெங்களூர் திருமணங்களில் அடுத்தநாள் காலை முகூர்த்தத்தை விட, முதல் நாள் மாலை நடக்கும் ரிஷப்சனுக்குத்தான் இம்பார்ட்டண்ட் கொடுப்பாங்க. கல்யாண வீட்டுப்பெண்கள் முதல்நாளே பியூட்டி பேர்ல ல் போய் ஆயிரம் ரெண்டாயிரம் கொடுத்து சிகை அலங்காரம் செய்து அதை இரண்டு நாட்கள் கலையாம பார்த்துக்கிருவாங்க. அதுவரை குளிக்காம வீட்டுக்கு போய்தான் குளிப்பாங்க. அதிலும் ரிஷப்சனில் பெண்கள் ஹேர ஸ்ட்ரெய்ட்டனிங் பண்ணி தலையை விரிச்சு போட்டு தலைவிரி கோலமா வரவேற்கிறத பார்த்து தமிழ்நாட்டு விருந்தினர்கள் கடுப்பாகாமல் இருக்க மாட்டார்கள் :)) தொடரும்….

 11. chinnapiyan says:

  இங்கு திருச்சி கேகே நகரில் நடந்த முதல்நாள் விசேசம். மணமக்கள் இருவரும் ஐடி. உள்ளூர் விருந்தினர்கள் 5 மணிக்கே வந்து விட்டார்கள். அதிலும் மாப்பிள்ளை வீட்டார்கள் ஸ்ரீஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து தனி பஸ் பிடித்து மத்தியானமே வந்து மண்டபத்தை கண்டுபிடிச்சு வந்துட்டாங்க. வரவேற்க ஒரு பெண்வீட்டாருமில்லை. உள்ளே மண்டபத்தில் நாதஸ்வர கோஷ்டி போட்டி போட்டுக்கொண்டு ஆளுக்கொரு மைக்வாங்கி முன்னால வச்சிக்கிட்டு மண்டபத்தை அலரவிட்டுக்கிட்டு இருந்த்தனால் மொத்த கூட்டமும் வெளியே வந்து சுற்றிக்கொண்டிருந்தார்கள். 6 1/2 மணி விசேசத்திற்கு 8 மணிக்கு சாவகாசமா மணப்பெண் ஜீன்ஸ் பேண்ட்டுடன் வந்து விருந்தினர்களிடம்பேசிவிட்டு ஹாயா ரூமுக்குல் போய் பியூட்டி பேர்ல்ல் பெண்ணிடம் மேக்கப் செய்ய ஆரம்பித்து விட்டது. தொடரும்…

 12. chinnapiyan says:

  இங்கே கீழ்த்தளத்தில் 5 மணிக்கே சாப்பாடு பரிமாரப்பட்டு ஆறிக்கொண்டிருந்த்து. வெளயே இருந்த விருந்தினர்களுக்கோ கொலை பசி. கேட்டரிங் ஏஜன்சி, அக்கம்பக்கத்து கிராமங்களிலிருந்து ஆடுமாடு மேய்க்கின்ற சின்ன பசங்களை ஒரு யூனிபார்ம் கொடுத்து கூட்டிட்டு வந்துட்டாங்கே. முதல்தடவையா இம்மாதிரி பட்டோபமா உடையைக்கண்டதும் விதவிதமான சாப்பாடு ஐட்டங்களை பார்த்தும் பயங்கர உற்சாகம். நேரம்ஆகாக போரடித்து ஓடிபிடிச்சு விளையாட ஆரம்பிச்சுட்டாங்கே. பரிமாரப்பட்ட டேபிளையும் தாண்டி குதித்து விளையாட்டு கொண்டு பாதி ஐஸ்கிரீம் கப்புகளையும் பீடாவையும் இவிங்களே காலி பண்ணிட்டாங்கே. தொடரும்….

 13. chinnapiyan says:

  பெண் வீட்டுக்காரங்க புக் செய்திருந்த ஹோட்டல் ரூம்களில் ஜங்சன் பக்கம் மாப்பிள்ளை, பெற்றோர்கள், நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் மணிக்கணக்கா காத்திருந்து வெக்ஸாயிட்டாங்க. யாரும் அழைக்கவரவில்லை. கல்யாணமண்டபத்தின் சத்தத்தில் யாரும் போன் அட்டண்ட பண்ணல. ஒரு வழியா மாப்பிள்ளை அழத்துக்கொண்டு வந்து மண்டபத்திலிருந்து ஒரு கிமீ தூரத்தில் நிற்க வச்சுட்டாங்க. ரொம்ப நேரம் கழித்து படகு மாதிரி அலங்கரிக்கப்பட்ட லைட் ஜோடனையோடு கார் வந்து சேர்ந்தது. அதை பார்த்த தும் மாப்பிள்ளை மேலும் கடுப்பாயிட்டார். என்னையா இது செத்துப்போனவங்களுக்கு பாடை கட்டின மாதிரி. நான் வரல் நடந்தே வந்து தொலைக்கிறேன்னு சொல்லிட்டார். இதை அவமானமா எண்ணிய பெண்வீட்டார், சமாதானப்படுத்தி, ஆட்களிடம் படகு போன்ற அந்த அலங்கார தட்டிகளை எடுக்க சொல்லிவிட்டார்கள். அதை பார்த்து கடுப்பின் உச்சத்திற்கே போயிட்டார்மாப்பிள்ளை. தட்டிகள் எடுத்தபின் அங்கே இருந்த்து ஒரு ஓட்டை உடசல் கார். பட்டி டிங்கரிங் பாதி பெயிண்டுடன். இதுமாதிரி இன்னும் நிறைய கல்யாண கூத்துகள் நான் கண்டுள்ளேன் நன்றி வாழ்த்துகள் :))

  • GiRa ஜிரா says:

   ஆகா. வாங்க. வாங்க.

   அழகான பின்னூட்டங்கள். நீங்க சொல்ற அனுபவங்களே பெரிய கதையா இருக்குதே. 🙂

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s