நாடகம் நாடு(ம்) அகம்

TheatreFestதின்னே கெட்ட குடும்பம்னு எங்களுக்குப் பேர் உண்டுடா”ன்னு அன்பே வா படத்துல டி.ஆர்.இராமச்சந்திரன் சாப்பாட்டுக்காக நாகேஷ் கிட்ட கெஞ்சுவாரு. அவரு தின்னே கெட்டவர்னா.. நாங்கள்ளாம் சினிமா நாடகம் பாத்தே பொழுதைப் போக்குன கூட்டம். டிவி வந்த காலத்துல இருந்து எதாவது ஒரு நாடகத்தை விட்டு வெச்சிருப்போமா? பெங்களூர் போன பிறகு ”அலையன்ஸ் பிரான்சே” “ரங்க ஷங்கரா” எல்லாம் போய் பெசஞ்சு வெச்ச ரொட்டி மாவு மாதிரி நாடக இரசனையும் உப்பிருச்சு.

சீரியல் நாடகங்கள் எல்லாமே சீரியல் கொலைகளா மாறிப் போனதால இப்பல்லாம் டிவி நாடகங்கள் பாத்து நிம்மதியைக் கெடுத்துக்கிறதுல்ல. அந்த நேரத்துலதான் வந்தது The Hindu Theatre Fest 2016. மொத்தம் ஆறு நாடகங்கள். மூனு ஆங்கிலம். மூனு தமிழ். தமிழ் நாடகங்கள் மூனையும் எப்பாடு பட்டாவது பாத்துறனும்னு முடிவு பண்ணி டிக்கெட்டும் வாங்கியாச்சு. இப்ப அந்த நாடகங்களைப் பத்திப் பாப்போம்.

ஆயிரத்தியோரு இரவுகள்

ஆயிரம் சொல்லுங்க… விருந்தே போட்டாலும் அப்பப்போ மனசு நெல்லிக்கா மாங்கா கமர்கட் கல்கோனான்னு அல்பப் பண்டங்களுக்கு அலையுற மாதிரி மாயாஜாலக் கதைகள்னா மனசு இரசிக்கத்தானே செய்யுது. அந்தக் கதைகளில் இருக்கும் நம்ப முடியாத கண்கட்டு ஜாலங்களும் அசாத்திய வீரதீரச் செயல்களும் ஜிலுஜிலுக் காதலும் நம்மைக் கட்டிப் போட்டுருது. அந்தக் கதையை எடுத்துக்கிட்டு நகைச்சுவையா ஒரு நாடகம்னா வேண்டாம்னா சொல்லுவோம். எல்லாம் சின்னச் சின்னப் இளம் பசங்க. ஆனா அட்டகாசம். நாடகம் முழுக்கச் சிரிச்சிக்கிட்டே இருந்தேன்னு சொன்னாக் கூட பொய்தான். சிரிச்சேனா சிரிக்கலையாங்குறது கூட மறந்து போய் நாடகத்துக்குள்ள போயிட்டேன். அந்த அளவுக்கு அட்டகாசம்.

TheatreFest-1ஆர்.எஸ்.மனோகர் நாடகம் மாதிரி பிரம்மாண்டமான அரங்கங்கள் இல்ல. ரொம்ப எளிமை. ஆனாலும் புரிய வேண்டியதைச் சரியாப் புரிய வெச்சிர்ராங்க. குச்சில உக்காந்து குதிரை ஓட்டுறதும், நாலஞ்சு பேர் கை கோர்த்து சிந்துபாத்துக்குக் கப்பல் உருவாக்குறதும், கிடைச்ச தாளைக் கிழிச்சுப் போட்டு பூமாரி பொழியுறதும்… அடேங்கப்பா.. நல்லா யோசிச்சிருக்காங்கப்பா. அரேபியக் கதைல கிருஷ்ணதேவராயரையும் தெனாலிராமனையும் நொழைச்சு அவங்க பண்ண அழிச்சாட்டியத்தையும் இரசிக்க வெச்சிட்டாங்கப்பா.

கதை சொல்லும் இராணியா நடிச்ச லட்சுமிப் பிரியா வந்ததுமே நாடகம் பிரிஜ்ஜுல இருந்து எடுத்த ஐஸ்கிரீம் மாதிரி ஜில்லுன்னு ஆயிருது. அலெக்சாண்டர் தி கிரேட்டை விட முடியுமா? முப்பத்துமூன்று பாத்திரங்கள்ள வந்துட்டுப் போன அலெக்சாண்டர் ஒரு Stand Up Comedian. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி சாயல்ல நல்ல குரல் வளம். எளிமையா வர்ர நக்கல். மொத்தத்துல கலக்கல். ஷரவண்னு ஒரு சின்னப் பையன்.. அவனோட துறுதுறுப்பு செம. தெனாலிராமனா வந்த பார்கவின் உடல்மொழி நச். இன்னும் ரெண்டு மூனு பேரோட பேர் நினைவில்லை. கிருஷ்ண தேவராயரா வந்தவரு, கீச்சுக்குரல் மன்னரா வந்தவரு, ஷாரியரா வந்தவருன்னு எல்லாருமே நல்லா நடிச்சிருந்தாங்க. இதுல கீச்சுக்குரல் மன்னரா நடிச்சவரோட மைக் கீழ விழுந்துருச்சு. அதையும் சமாளிச்சிக்கிட்டு கதையைக் கொண்டு போனதும் அதுக்கு மத்தவங்க ஒத்துழைச்ச விதமெல்லாம் வேற… வேற… வேற லெவல்.

திரைப்படங்கள்ள நடிக்கும் வினோதினி வைத்தியநாதன் தான் நாடகத்தின் இயக்குனர்னு தெரிஞ்சு வியப்பு. மிக அருமையான இயக்கம். மொத்தத்தில் ஆயிரத்தோரு இரவுகள் அட்டகாசமான ஜாங்கிரி.

நாடகக் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

முந்திரிக்கொட்ட

அடுத்த நாள் நாடகம் எனக்குப் பழக்கமில்லாத புது கதைக்களம். மரக்காணம் பக்கத்துல இருக்கும் உப்பளத்துப் பின்புலத்துக் கதை. இரமலான் நோன்பு வந்துச்சுன்னா பள்ளிக்கூடத்துச் சத்துணவையே சாயந்திரத்துக்கு மாத்துற அளவுக்கு மரக்காயர் பசங்க படிக்கும் பள்ளிக்கூடம். இப்படி நடக்குதான்னு அந்தப் பக்கத்துக்காரங்கதான் சொல்லனும்.

TheatreFest-2உப்பளத்துக்கு வேலை செஞ்சு பொழைக்க வந்திருக்கும் முன்னேற வேண்டிய சாதி நிலைக் கைம்பெண்ணையும் அவளோட மகனையும் மையமா வெச்சுச் சொல்லப்பட்ட கதை. பள்ளிக்கூடத்துல மரக்காயர் பசங்களோட சேர்ந்து பழக முடியாமத் தவிக்கிற மகன். அவனுக்கு எப்படியாவது நண்பர்கள் பிடிக்கனும்னு ஆசை. ஆனா யாரும் சேரல. பள்ளிக்கூட வாத்தியார் ஒரு கிருத்துவர். அவரு அந்தப் பையனை நல்ல எடத்துல சேத்துவிட்டு நல்லாப் படிக்க வைக்கிறதாச் சொல்றாரு. அதுக்கு அவர் கேக்குற விலை மதமாற்றம். மொதல்ல அம்மாக்காரி மறுத்துக் கோவப்பட்டாலும் கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறுது. பிள்ளையாவது நல்லாருக்கட்டுமேன்னு ஒரு தாய் நெனைக்கிறதுல என்ன அதிசயம் இருக்கப் போகுது.

ஆனா நாடக இயக்குனர் அப்படி நெனைக்கல. அந்த வாத்தியாரைக் குடிகாரராக்கி அத வெச்சு ஒரு பிரச்சனையைக் கெளப்பிவிட்டு வாத்தியாரையே ஊர விட்டுக் கெளப்பிவிட்டு நாடகத்தை முடிக்கிறாங்க. நாடகத்தோட முடிவுல அந்தப் பயலுக்கு ஒரு மரக்காயர் பையன் நட்பாக் கெடைக்கிறான். அம்மாக்காரி மறுபடியும் உப்பளத்துல வேலை செய்றா.

இந்தக் கதைல அறமே இல்லைன்னு மனசுக்குப் பட்டது. அந்தப் பையன் சர்ச்சுக்குப் படிக்கப் போயிருந்தா நல்லாப் படிச்சு நல்ல வேலைக்குப் போயிருப்பான். மதமாத்தத்தைத் தடுக்குறேன்னு.. அந்தப் பையனோட படிப்பையும் வாழ்க்கையையும் தடுத்தாச்சு. மதமாத்தம் பண்ண வர்ராங்களேன்னு இயக்குனர் பதைபதைச்ச அளவுக்கு ஒரு பையனோட வாழ்க்கை வீணாப்போகுதேன்னு பதைபதைக்கலையே.

அந்தக் கைம்பெண் தாய் உப்பளத்துல கஷ்டப்படட்டும்.. அந்தப் பையனுக்கும் நல்ல படிப்பு கெடைக்காமப் போகட்டும்.. என்னதான் முடிவுல மரக்காயர் பையனோட நட்பு கெடைச்சாலும் அவன் எந்தக் காலத்துலயும் மரக்காயர் ஆக முடியாது. ஆனா எப்பாடு பட்டாவது மதமாத்தத்தைத் தடுத்தாச்சுன்னு நாடக இயக்குனர் சந்தோஷப்பட்ட மாதிரி என்னால சந்தோஷப்பட்டுக்க முடியல. அந்தப் பையனோட கஷ்டமும் அவனோட அம்மாவோட கஷ்டமும் தொடரத்தானே போகுதுன்னு வருத்தமா இருந்துச்சு. நாடகம் பாக்க வந்த ஒருத்தரோட பெற்றோர்கள் அந்த நாடகத்தோட மையக்கருத்தையும் முடிவையும் ரொம்ப ரசிச்சாங்கன்னு சொன்னப்போ…. சரி விடுங்க.

நாடகத்துல மரக்காணத்துப் பக்கத்துக்கான மொழி வழக்கு இல்ல. உப்பளத்துல வேலை செய்ற மாதிரி நாலு பேர் மேடைல எதையாவது உருட்டிக்கிட்டு இருந்தா மட்டும் மண்வாசனை வீசிறாது. அதைவிட முக்கியமா… சொல்ற கதைல திறம் இருக்குதோ இல்லையோ.. அறம் இருக்கனும். அது இல்லைன்னா என்னதான் திறம் இருந்தாலும் அது நாலாந்தரம் தான்.

குடுகுடுப்பைக்காரி குழுவினரின் முந்திரிக்கொட்ட நாடகம் ரசத்தில் விழுந்த குலாப்ஜாமூன்.

வண்டிச்சோடை

TheatreFest-3மூனாவது நாள் நாடகம் வண்டிச்சோடை. பத்மஸ்ரீ நா.முத்துசாமி எழுதிய நாடகம். இதை நாடகமாக இயக்கியது டிவிட்டரில் பிரபலமாக இயங்கிக் கொண்டிருக்கும் R.P.ராஜநாயஹம். நடிகர்களோ கூத்துப்பட்டறை நடிகர்கள். இதெல்லாம் சேந்து நாடகத்து மேல ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது.

இந்த நாடகம் வெகுஜன வடிவில் இல்லாததால எல்லாரும் இரசிச்சிருக்க மாட்டாங்க. மேடைல இருக்குறவங்கள்ளாம் யாரு என்னன்னு தெரியனும். அவங்க பேசுறவது எதைப் பத்தின்னு புரியனும். இது ரெண்டும் நடக்கலைன்னா மக்களுக்கு நாடகம் புரியாது. அது மக்களோட தப்பும் கெடையாது. அப்ப நாடகத்தோட தப்பா? இல்ல. நாடகத்தோட தப்பும் கெடையாது. சைனீஸ் சாப்பாடு ஒருத்தருக்குப் பிடிக்கலைன்னா அது யாரோட தப்பு? சைனீஸ் சாப்பாட்டு மேலயா? சாப்பிடப் பழகாதவங்க மேலையா? ரெண்டு பேர் மேலையும் கெடையாது. அது மாதிரிதான் இந்த நாடகத்துலயும். அந்த அளவுக்கு நாடகம் முழுக்க படிமங்களும் குறியீடுகளும்(metaphor).

மொதல்ல எனக்கும் கண்ணக் கட்டி ஐபோனைக் கையில கொடுத்த மாதிரிதான் இருந்தது. நேரம் ஆக ஆக நாடகம் புரியத் தொடங்குச்சு.

இறந்தகாலமும் நிகழ்காலமும் சேந்து எதிர்காலத்தில் அவங்க வசதிக்கு ஏத்த மாதிரியான அடிமைகளை உருவாக்குறதுதான் கதை. நாடகத்தோட கதையை முழுசும் சொல்றது ரொம்பக் கஷ்டம். முத்துசாமி ஐயா எழுதிய நாடகக்கதை படிச்சா இன்னும் நல்லாப் புரியலாம். ஆனாலும் நாடகத்துல வந்த ரெண்டு விஷயங்களை மட்டும் சொல்றேன்.

மிச்சம் வைக்ககூடாத விஷயங்கள் ரெண்டு. ஒன்னு நெருப்பு. இன்னொன்னு கடன். இதுல எதை மிச்சம் வெச்சாலும் அது நம்மள அழிச்சிரும். மூனு கல்லு வெச்சு அடுப்பாக்கிச் சமைச்சாலும் கோயில்ல பொங்கல் வெச்சாலும் சமைச்சு முடிச்ச பிறகு அடுப்பைத் தண்ணி ஊத்தி அணைச்சிருவாங்க. இல்லாட்டி எதுலயாவது பத்திக்கும் வாய்ப்பு இருக்கு. கடனும் அப்படித்தான். வட்டி.. வட்டிக்கு ஒரு குட்டி.. அந்தக் குட்டிக்கு ஒரு வட்டின்னு மொத்தமா முழுகிரும்.

இந்த ரெண்டு மட்டும் இல்ல. மிச்சம் வைக்கக் கூடாதது இன்னொன்னும் உண்டு. அதுதான் பாடம். ஒரு ஆசிரியர் தன்னோட மாணவனுக்குச் சொல்லித்தர்ர பாடத்துல எதுவும் மிச்சம் வெக்கக்கூடாது. அப்படி மிச்சம் வெச்சா தன்னோட ஆசிரியரை விட மாணவனுக்குக் கொஞ்சம் அறிவுக் குறைவு இருக்கும். அந்த மாணவன் ஆசிரியரா மாறும் போது அவனும் கொஞ்சம் மிச்சம் வெச்சா? கொஞ்சம் கொஞ்சமா அந்த அறிவே அழிஞ்சு போயிறாதா? அப்படித்தான் நம்ம நாட்டோட இயற்கை மருத்துவ அறிவு அழிஞ்சு போச்சு. அல்லது குத்துயிரும் கொலையுயிருமா இருக்குது.

இதைப்பத்தி நாடகத்தோட ஒரு பகுதி பேசுச்சு.

இன்னொரு பகுதி கொஞ்சம் வித்தியாசமானது. ஆடுகளுக்கு இறப்பே கெடையாது தெரியுமா? கசாப்புக் கடைல அதோட சிரம் சீவிக் கொல்லாட்டி எல்லா ஆடும் சிரஞ்சீவியாம். அப்படி ஒரு ஆடு வெட்டுப்படாமத் தப்பிச்சா என்னாகும்? அந்த ஆடு ஆண்டாண்டு காலம் உயிரோட இருந்து கொஞ்சங் கொஞ்சமா மனுசனா மாறிருமாம். என்ன? நம்ப முடியலையா?

ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் போது மந்தையிலிருந்து விலகிவிடுகின்றன – கலீல் ஜிப்ரான்.

அவ்வளவுதான் விஷயம்.

இந்த ஒலகத்துல எல்லாக் காலத்துலயும் உழைக்கிறதுக்கு ஆள் வேணும். எல்லா நாட்டுலயும் அதுக்கேத்த மாதிரி ஒரு கூட்டம் சிக்கியிருக்கும். சில பணக்கார நாடுகள் அந்தக் கூட்டத்தை வெளிநாட்டுல இருந்து வேலைக்கு அமர்த்தும். மொத்தத்துல எப்படியும் ஒவ்வொரு நாட்டிலும் உடலுழைப்புக்குன்னு ஆள் தேவையிருக்கும். அப்படி அந்த வேலைகள்ள சிக்கியிருக்கும் கூட்டம்/வர்க்கம் அதுலருந்து வெளியவர முடியாது. அது ஒரு சுழற்சி மாதிரி இருக்கும். அப்பன் செஞ்சிருப்பான். மகன் செஞ்சுக்கிட்டிருப்பான். பேரன் செய்யப் போறவனா இருப்பான். தான் அந்த மாதிரி சிக்கிக்கிட்டிருக்கோம்னு புரிஞ்சிருச்சுன்னா ஒருத்தன் அதுல இருந்து வெளிய வரனும்னுதான பாப்பான்.

இப்பப் படிங்க… ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் போது மந்தையிலிருந்து விலகிவிடுகின்றன – கலீல் ஜிப்ரான். புரிஞ்சிருச்சா?

தேர்த்திருவிழா கேள்விப்பட்டிருப்பீங்க? அது யாருக்கெல்லாம் திருவிழா? தேர் வலத்தை வேடிக்கை பாக்குறவங்களுக்குதான் அது திருவிழா. தேரை இழுக்குறவங்களுக்கு? வேடிக்கை பாக்குறவங்க இழுக்கும் தேரெல்லாம் பெரிய கோயில்கள்ள இருக்கும் சின்னச் சின்ன தங்கத் தேர்கள்.

இப்போ ஆடு பத்திய குறியீடு புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். இந்த மாதிரி நாடகம் முழுக்கவே குறியீடுகள். அதுனாலயே பலருக்குப் புரியாமலும் போயிருக்கும்.

இந்த நாடகம் சொன்ன விஷயத்தைத் தெளிவாப் புரிய வைக்கனும்னா.. வேறெப்படி இவ்வளவு சுருக்கமாச் சொல்ல முடியும்னு எனக்குத் தெரியல. ஒருவேளை நாளைக்கு எல்லாருக்கும் புரியுற மாதிரி இரசிக்கிற மாதிரி ஒரு நாடக வடிவம் வரலாம். அதுவரைக்கும் இந்த நாடகங்கள் எல்லாருக்கும் பிடிக்கும்னு சொல்ல முடியாது. ஆனா எனக்கு ஓரளவு புரிஞ்சது.

நாடகம் தொடங்குறதுக்கு முன்னாடி R.P.ராஜநாயஹம் சாரைப் பாத்து என்னோட வாழ்த்தைச் சொன்னேன். இந்த நாடகத்தோட எழுத்து வடிவத்தைப் படிக்க அவர் உதவி செய்றதாச் சொல்லிருக்காரு. மறுபடியும் இந்த நாடகம் மேடையேறப் போறதாச் சொன்னாங்க. வாழ்த்துகள் ராஜநாயகம் சார்.

இப்படியாக மூனு நாடகங்களோட இந்த ஆண்டுக்கான The Hindu Theatre Fest 2016 நல்லபடியா முடிஞ்சது.

அடுத்து… தெரியல. எதாச்சும் வரும். காலம் எதாவது ஆச்சரியத்தோட வரும். 🙂

அன்புடன்,
ஜிரா

Advertisements

About GiRa ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in அனுபவங்கள், நாடகம் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to நாடகம் நாடு(ம்) அகம்

 1. amas32 says:

  அருமை ஜிரா! நானும் இந்த நாடகங்களைப் பார்க்கணும் என்று ஆசைப்பட்டேன், உடல் நலம் சரியில்லாததால் போக முடியவில்லை. அந்தக் குறையினை உங்கள் பதிவு போக்கிவிட்டது. என் மகன் மூன்றாவது நாடகத்தைப் பார்த்தான். அவனும் மொழி புரியவில்லை என்றான். அவனுடன் வந்த அவன் வயதுடைய நண்பன் மிகவும் இரசித்துப் பார்த்ததாக சொன்னான். ஆனாலும் தனக்கு அந்த நாடகம் மிகவும் பிடித்தது என்றான்.

  amas32.

  • GiRa ஜிரா says:

   அது வெகுசன நாடகம் இல்லையம்மா. அதனால் எல்லாருக்கும் புரிந்திருக்க வாய்ப்பு மிகக் குறைவு.

 2. செய்தியில் படித்தேன் ஜிரா. உற்சாகமாக இருந்தது. சென்னையிலிருந்திருந்தால் தலையைக் காட்டியிருப்பேன். நாடகத்திற்கு உத்வேகம் வரும் (கமர்சியலாக) என்று நம்புவோமாக.

  • GiRa ஜிரா says:

   அடுத்து எதாவது வரும். அப்போது பாருங்கள். 🙂

 3. இந்த நாடகத்தை நான் பார்க்கல அனால் நான் பார்த்த சில நாடார்களின் நான்-லீனியர் நரேஷன் மட்டும் புரிஞ்சுக்கிட்டேன், நிகழ்த்துகலை இது மாதிரியான கதைசொல்லல் தான் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.. திரும்ப திரும்ப பார்த்து முழு புரிந்துகொண்டால் பார்வையாளனின் அடையும் இன்பம் அளப்பரியது

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s