சூரியகாந்தி

sooriyakanthi-2ஏற்கனவே பலமுறை பார்த்த படம் தான். பிடித்த படம் தான். புத்தம் புதிய பிரிண்ட் என்ற விளம்பரத்தோடு திரையரங்கில் பார்க்கக் கிடைக்கும்போது போகாமல் இருக்க முடியுமா? திரையரங்கில் மொத்தம் ஆறே பேர்தான்.

படத்தின் விமர்சனத்துக்குப் போகும் முன்… இணையத்தில் இதை விட அருமையான பிரிண்ட்டில் படம் கிடைக்கிறது. அதை விட மோசமான பிரிண்ட்டை திரையரங்கத்தில் வெளியிடுவதற்கு முன் சற்று யோசித்திருக்கலாம். சரி. போகட்டும்.

1973ல் வெளிவந்த குடும்பத் திரைப்படம் சூரியகாந்தி. முக்தா சீனிவாசன் இயக்கத்தில் கணவன் மனைவிக்குள் உண்டாகும் “யார் பெரியவர்” என்ற உளவியல் குழப்பத்தை வைத்து வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம்.

அப்போதெல்லாம் நடுத்தரவர்க்கத்தின் சம்பளமே மாதம் முந்நூறு ரூபாய்தான் என்று படத்தில் பேசிக்கொள்ளும் போது கொஞ்சம் தலையைச் சுற்றுகிறது நமக்கு. எட்டணாவுக்கு டாக்சி மவுண்ட்ரோட்டுக்கு வருகிறது. இப்படி நிறைய அதிர்ச்சிகள் நமக்குப் படத்தில் உண்டு. உண்மையிலேயே அந்தக்கால நிலவரங்கள் அப்படித்தான் இருந்ததா என்று விவரம் தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.

கணவன் தான் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறது முத்துராமன் பாத்திரம். ஆனால் ஜெயலலிதாவின் பாத்திரம் கணவனை விட நிறைய சம்பாதிக்கும் நிலை வருகிறது. வேலையை விடச் சொல்லிக் கணவன் வற்புறுத்தும் போதும் மறுத்துவிடுகிறாள் மனைவி. அதற்குக்காரணத்தை அலசிக் காயப்போட்டு கடைசியில் கணவன் திருந்துவதுதான் கதை.

sooriyakanthi-1சாவித்திரியா அது என்று ஒரு நொடி நமக்கு நெஞ்சடைக்கிறது. முத்துராமன் துணைப்பாத்திரத்தில் நடித்த திருவிளையாடலில் நடிகர் திலகத்துக்கு நாயகியாக நடித்த சாவித்திரி, இந்தப் படத்தில் முத்துராமனின் அம்மா. முகத்திலும் வயதான களை தெரிகிறது. ஆனால் நடிப்பு ஒரு மாற்றும் குறைவில்லாத தங்கம். அதிலும் முத்துராமன் பார்க்கும் போது ஜெயலலிதாவைத் திட்டிவிட்டு, முத்துராமன் போனதும் ஜெயலலிதாவிடம் நெகிழ்ந்துருகும் கட்டம்.

மேஜர் சுந்தர்ராஜன் வந்தாலே “ஏன்னா நாமெல்லாம் நடுத்தரவர்க்கம்”னு சொல்லப் போகிறார் என்று நமக்குத் தெரிந்துவிடுகிறது. வாடிக்கையாளர்களுக்கு டைப் அடித்துத் தருவது ஒரு பெரிய வேலையாக இருந்திருக்கிறது. இப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு லேப்டாப் + பிரிண்டர். தேவைப்பட்டால் ஃபோட்டோகாப்பி. காலம் சிலவற்றை எவ்வளவு எளிமைப்படுத்தியிருக்கிறது. பத்தாம் வகுப்பு விடுமுறையில் தட்டச்சு படிக்க வீட்டில் வற்புறுத்தியதும் போக மறுத்து அடம் பிடித்ததும் இன்னும் எனக்கு நன்றாக இருக்கிறது.

sooriyakanthi-5மனோரமா… என்ன சொல்வது? செம பாத்திரப்படைப்பு. செம நடிப்பு. செம பாட்டு. தெரியாதோ நோக்கு தெரியாதோ என்று சொந்தக் குரலில் பாடுவதாகட்டும், எப்போதும் பொரணி பேசும் பாத்திரமாக வந்து கற்பகம் காலனியையே கலங்கடித்துவிடுகிறார். இப்படித்தான் நடக்கும் என்று நடக்கும் முன்னாடியே கற்பனை செய்து அதை எல்லோரிடமும் சொல்லிப் பரப்பி மகிழும் பாத்திரப் படைப்பு. அதிலும் கணவனைப் பிரிந்து வாழும் பாத்திரம். படத்தின் தொடக்கத்திலிருந்து கடைசி வரை ஒவ்வொரு காட்சியிலும் அவர் ஆயிரம் ஆஸ்காருக்குப் பொருத்தமாக இருக்கிறார்.

எம்.ஆர்.ஆர்.வாசு. அடேங்கப்பா. கஞ்சனாக இருந்தாலும் நேர்மை தவறாத பாத்திரம். வசன உச்சரிப்பு, உடல் மொழி, நடிப்பு என்று நூற்றுக்கு நூறு நயம் நடிப்பு. கடைசியில் கதையின் முடிச்சை இவர்தான் அவிழ்த்து பிரச்சனையை தீர்த்து வைக்கிறார். இவருடைய அப்பா என்று நடிகவேள் எம்.ஆர்.இராதா பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

முத்துராமனுக்கு இந்தப் படத்தில் தாழ்வு மனப்பான்மை கொண்ட கணவன் பாத்திரம். தான் செய்ய முடியாததையெல்லாம் மனைவி செய்து முடிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமலும் ஏழ்மையால் துன்பப்பட்ட தனது குடும்பம் மனைவியால் வசதியாக இருப்பதைத் தடுக்க விரும்பாமலும் இரண்டு பக்கமும் சீஸ் வழியும் பர்கரின் நிலை அவருக்கு. படத்துக்கு என்ன தேவையோ அதைப் பொருத்தமாகச் செய்திருக்கிறார். கடைசியில் நல்லவராகவும் திருந்திவிடுகிறார்.

சூரியகாந்தி என்ற படத்தின் பெயருக்கேற்ற முதன்மைப் பாத்திரம் ஜெயலலிதாவுக்கு. அடக்கமும் அன்பும் குடும்பத்தை முன்னெடுத்துச் செல்லும் முனைப்பும் கொண்ட பெண்ணாக வருகிறார். குடும்பத்துக்காக உழைத்தும் கணவனிடம் கெட்ட பெயர் வாங்கும் பாத்திரம். பலவித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டி நடிக்கவேண்டிய வாய்ப்பு. கொடுத்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய குரலிலேயே இரண்டு பாடல்களையும் பாடியிருக்கிறார். ஒரு பெண் பொறுமையாக இருந்து அனைத்திலும் வெற்றி பெறுவாள் என்ற கருத்தை முன்னிறுத்தும் இந்தப் படம் இந்தப் பொழுதில் மறுவெளியீடு செய்வது பொருத்தமே.

சோ, மௌலி, சசிகுமார், சி.ஐ.டி சகுந்தலா, காந்திமதி என்று பலதரப்பட்ட நடிகைகள். ஒவ்வொருவரும் தன் பங்கை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் கண்ணதாசனும் நடித்திருக்கிறார். பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது என்ற பாடலை அவர் மேடையில் பாடுவது போல நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் இயற்றியவர் அவரே.

மெல்லிசை மன்னரின் இசையில் அருமையான நான்கு பாடல்கள்.
1. பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது – டி.எம்.சௌந்தரராஜன்
2. தெரியாதோ நோக்கு தெரியாதோ – மனோரமா (மெல்லிசை மன்னர் இசையில் மனோரமாவின் பாடல்கள் பற்றியே பெரிய பதிவு போடலாம். அத்தனை பாடல்கள். அத்தனை வகை.)
3. ஓ மேரி தில்ரூபா – டி.எம்.சௌந்தரராஜன், ஜெயலலிதா
4. நானென்றால் அது அவளும் நானும் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜெயலலிதா
திரையரங்கத்தில் இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் என்று பார்க்கும் போது நானடைந்த மகிழ்ச்சியை யாரும் அடைந்திருக்க மாட்டார்கள்.

sooriyakanthi-4இயக்குனர் முக்தா சீனிவாசனுக்கு இது வெற்றிப் படம். சிறிய முதலீட்டில் வெற்றிப் படமாக சூரியகாந்தியை அவர் இயக்கியிருக்கிறார். பாத்திரப் படைப்புகளும் அதற்குப் பொருத்தமான நடிகர்களும் கொண்டு நாடகபாணித் திரைப்படத்தை வெள்ளித்திரைக்குக் கொடுத்து இன்றும் நினைக்கும்படி செய்திருக்கிறார் என்றால் மிகையாகாது.

கூடுதல் தகவல்கள்

இந்தப் படத்தில் ஜெயலலிதாவுக்கு வீட்டைக் காக்கும் வேடமென்றால், இதே ஆண்டில் வெளியான பாக்தாத் பேரழகி படத்தில் நாட்டைக் காக்கும் வேடம். அது வண்ணத் திரைப்படம் வேறு. கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் வந்தாளே மகராசி படத்தில் அப்பாவிப் பெண்ணாகும் துணிச்சலான பெண்ணாகவும் இரட்டை வேடம். எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த பட்டிக்காட்டு பொன்னையா வெளிவந்ததும் இதே ஆண்டில்தான்.

msviswanathan1973ம் ஆண்டில் மெல்லிசை மன்னர் இசையில் தமிழில் மட்டும் இருபது படங்கள். அன்றைய நிலையில் அது அகில இந்தியச் சாதனை. அதிலும் மிகப் பெரும் வெற்றி பெற்ற உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவந்ததும் இந்த ஆண்டில்தான். அலைகள், பாரதவிலாஸ், கௌரவம், பொன்னூஞ்சல், பூக்காரி, இராஜபார்ட் இரங்கதுரை, சொல்லத்தான் நினைக்கிறேன், கங்கா கௌரி போன்ற அருமையான இசைச்சித்திரங்கள். இதே ஆண்டில் தமிழிலிருந்து தெலுங்குக்குச் சென்ற மொழிமாற்றுப் படங்கள் தவிர லோகம் மாறாலி மற்றும் மேமு மனுஷ்யலுமே ஆகிய படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். மலையாளத்தில் மிகப் பெரிய இசைச் சித்திரமான பனி தீராத வீடு வெளிவந்ததும் இந்த ஆண்டுதான். திவ்யதர்ஷனம், ஜீசஸ் ஆகிய படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.

இந்த ஆண்டில் மெல்லிசை மன்னர் மணிப்பயல் திரைப்படத்தில் ஜெயச்சந்திரனையும் பாரதவிலாஸ் திரைப்படத்தில் மலேசியா வாசுதேவனையும் அறிமுகப்படுத்தினார்.

இந்த ஆண்டில் வெளிவந்த மற்ற குறிப்பிடத்தக்க படங்கள் அரங்கேற்றம், இராஜராஜ சோழன்(முதல் தமிழ் சினிமாஸ்கோப்), அன்புச் சகோதரர்கள், மறுபிறவி(மஞ்சுளா புகழ்), எங்கள் தங்க ராஜா, காரைக்கால் அம்மையார் ஆகியவை.

கே.ஆர்.விஜயாவின் நூறாவது படமாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் நத்தையில் முத்து வெளிவந்து வெற்றி பெற்றதும் இந்த ஆண்டே.

இராஜாஜியின் கதையான திக்கற்ற பார்வதி வெளியாகி நடிகை லட்சுமிக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்ததும் இந்த ஆண்டில்தான்.

கவிஞர் வாலியை அறிமுகப் படுத்திய முக்தா சீனிவாசன், பிறகு கவியரசர் கண்ணதாசனையே பல படங்களில் பாடல் எழுத வைத்திருக்கிறார். சூரியகாந்தியிலும் அப்படியே. கவிஞர் வாலி எம்.ஜி.ஆர் படங்களுக்குப் பாடல் எழுதப் போய்விட்டதால் கூட இருக்கலாம். கவியரசர் மறைவுக்குப் பிறகுதான் (எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகு) மறுபடியும் வாலியை முக்தாவின் படங்களில் காணலாம்.

அன்புடன்,
ஜிரா

Advertisements

About G.Ra ஜிரா

சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
This entry was posted in எம்.எஸ்.விசுவநாதன், எஸ்.பி.பாலசுப்ரமணியன், ஜெயச்சந்திரன், ஜெயலலிதா, டி.எம்.சௌந்தரராஜன், திரைப்படம், பழைய படங்கள், மெல்லிசைமன்னர், விமர்சனம் and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to சூரியகாந்தி

 1. 1973ல் வெளிவந்த சூரியகாந்தி படத்தின் விமர்சனம் 2016ல்! உலக ரெகார்ட் இதுவாகத்தான் இருக்கும்!

  நீங்கள் குறிப்பிட்ட விலைவாசி பற்றிய விஷயத்திற்கு விளக்கம் அளிக்க நான் தகுதியாவன் என்று நினைக்கிறேன்.

  1973 என் வாழ்வின் ஒரு முக்கிய வருடம்.
  நான் பட்டப்படிப்பு முடித்த வருடம்.

  நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ASC Centreல் வேலை செய்து என் தந்தை ஒய்வு பெற்ற வருடம். அப்போது அவரது மாதச் சம்பளம் 550 ரூபாய்.
  பெங்களூர் டிக்கன்சன் ரோடில் இருக்கும் பிராவிடண்ட் பண்ட் ஆபீசில் இருந்து டெர்மினல் பெனிபிட்டாக சுமார் இருபதாயிரம் ரூபாயை ரொக்கமாக நானும் என் தந்தையும் வாங்கிக்கொண்டு அலசூரில் இருக்கும் வீட்டிற்கு பயந்து கொண்டும் பத்திரமாகவும் எடுத்துச் சென்று, சாமி படத்தின் முன் வைத்து நமஸ்காரம் செய்து, பார்த்து மகிழ்ந்தோம். வாழ்வில் முதல் முறையாக அத்தனை பணத்தை பார்ப்பது!

  ஆறு மாதங்கள் வேலை தேடி அலைந்து விட்டு, இந்தியா புக் ஹவுஸ் என்ற புத்தக மொத்த வியாபார நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த வருடம்.
  நூற்றி எழுபத்தைந்து ரூபாய் மாதச் சம்பளம். செப்டம்பர் இருபத்தொன்றாம் தேதி வேலைக்கு சேர்ந்ததால், முப்பதாம் தேதி pro rataவாக கிடைத்த முதல் சம்பளமான எழுபது ரூபாயை தாயிடம் கொடுத்து நமஸ்காரம் செய்தபோது தாயின் கண்களில் ஜலம். எனக்கு எதையோ சாதித்த ஒரு உணர்வு.

  என் நினைவுப்படி, வங்கியில் (high wage island என்று வங்கிகள் அழைக்கப்பட்ட காலம்) சேரும்போது சம்பளம் முன்னூற்றி எழுபது ரூபாய். (நூற்றி எழுபது ரூபாய் பேசிக், மீதி பஞ்சப்படி இத்யாதி) வருடாந்திர இன்க்ரிமென்ட் பத்து ரூபாய். வங்கிகளில் வேலை செய்பவர்களுக்கு கல்யாண மார்க்கெட்டில் ஏகப்பட்ட டிமான்ட்! வங்கியில் உத்தியோகம் பெறுவதே பெரும்பாலோரின் குறியாக இருந்தது.

  இனி விலைவாசிக்கு வருவோம்.

  ஒரு வரவேற்பறை, படுக்கை அறை, ஹால், சமயலறை, குளியலறை அடங்கிய பெரிய வீட்டில் இருந்தோம் (எட்டு பேர் அடங்கிய பெரிய குடும்பம்). மாத வாடகை எழுபது ரூபாய்.
  நான் வேலை செய்துகொண்டே தட்டெழுத்து சுருக்கெழுத்து வகுப்புக்களுக்கு சென்று கொண்டிருந்தேன். மாதக்கட்டணம் முன்னதுக்கு மூன்று ரூபாய், பின்னதுக்கு இரண்டரை ரூபாய். பஸ்ஸில் குறைந்தபட்ச கட்டணம் பத்து காசு. இருபது காசுக்கு அலசூரில் இருந்து மெஜெஸ்டிக் போய் விடலாம். ஆட்டோ கட்டணம் குறைந்தபட்சம் ஐம்பது காசு. கிலோமீட்டருக்கு இருபத்தைந்து காசு என்று நினைவு.

  இந்த சூரியகாந்தி படத்தை நான் ஒரு கூரை வேய்ந்த டூரிங் டாக்கீஸில் 1974ல் பார்த்தேன். நாற்பது காசு தரை கட்டணம், எழுபத்தி ஐந்து காசு பெஞ்ச். ஏனோ, இந்தப்படம் மட்டும் என் மனதை விட்டு இன்றும் அகலவில்லை.

  என் நினைவுகளை பின் நோக்கி எடுத்துச் சென்ற உங்களுக்கு ஒரு டாங்க்ஸ்!

 2. Murugan says:

  என் நினைவுகளையும் பின்னோக்கி எடுத்துச்சென்ற ஜிரா அவர்களுக்கு நன்றி. நானும் சூரியகாந்தி படத்தை அது வெளி வந்தபோதே பார்த்து ரசித்திருக்கிறேன். நான் 1977ல் வங்கியில் சேர்ந்தபோது வாங்கிய சம்பளம் 535 ருபாய் (கள் வேண்டாம்) என்று ஞாபகம் இருக்கிறது. சினிமா பார்க்க பால்கனி சீட் 2.50 ஆசையாய் இருந்தாலும் அதிகம் என்பதால் நான் சென்றது 1.66 டிக்கட்டில்தான் கீழே பின் வகுப்பு. டீ, காபி 25 பைசா கூல் டிரிங்க் 1.50 என்று ஞாபகம்.

I am eager to hear what you want to say. Please say it. here. :)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s